ஜனாதிபதி தேர்வும் ஜனநாயக ஓட்டையும்….!(வெளிச்சம்:009)

ஜனாதிபதி தேர்வும் ஜனநாயக ஓட்டையும்….!(வெளிச்சம்:009)

— அழகு குணசீலன் —

மக்கள் வாக்களிப்பின் ஆகக்குறைந்தபட்ச ஜனநாயகம் அரைவாசிக்கும் அதிகமாக ஒருவாக்கையாவது பெறுவது. எதிர்தரப்பு அரைவாசிக்கும் எள்ளளவு குறைவாக 49.999 வீதம் வாக்குகளைப்பெறுவதாக இது இருக்கலாம். இலங்கையின் 1982 முதலான கடந்த 2019 தேர்தல் வரை இந்த நிலையே இருந்துள்ளது. வெற்றி பெற்ற ஜனாதிபதிகள் அளிக்கப்பட்ட மொத்தவாக்குகளில் அரைவாசிக்கும் அதிகமான அல்லது ஐம்பது வீரத்திற்கும் அதிகமான வாக்குகளைப்பெற்று ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது. ஆகக்குறைந்தது புள்ளிவிபர ரீதியான ஜனநாயகம் என்றாவது ஒப்புக்கொள்ளலாம்.

ஆனால் செப்டம்பர் 21 ம்திகதி தேர்தலில் இந்த ஜனநாயகம் தப்பிப்பிழைக்க வழியிருப்பதாகத் தெரியவில்லை. காரணம் கடந்த காலங்களைப்போன்று அன்றி பிரதான ஐந்து, அதிலும் தென்னிலங்கையின் மூன்று வேட்பாளர்களுக்கு இடையிலான கடும்போட்டியாக -ஒவ்வொரு தலையையும் கணக்கெடுக்கவேண்டிய போட்டியாக  இத்தேர்தல் இருப்பதுதான். பொதுவாக அனைத்து ஆய்வாளர்களும் ஜனாதிபதி வேட்பாளர்களில் எவரும் முதற்கணக்கெடுப்பில் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறுவதற்கு வாய்ப்பில்லை என்றே பதிவு செய்து வருகின்றனர்.

அப்படியானால் ஜனநாயக சோஷலிச குடியரசான இலங்கையின் ஜனநாயகத்தை எப்படி காப்பாற்றுவது? பிரதான வேட்பாளர்கள் மூவரில் எவரும் இரண்டாம், மூன்றாம் தெரிவாக தமக்கு வாக்களிக்குமாறு பகிரங்கமாக இதுவரை கோரவில்லை.  ஒரு வேட்பாளர் இன்னொரு வேட்பாளருக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்ய முடியாது. இந்த நிலையில்…………!

யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு ஊடகச் சந்திப்பில் சஜீத் அணியின் முக்கியஸ்தர் உமாச்சந்திரா  தமிழ்ப்பொதுவேட்பாளருக்கு வார்த்தைகளால் மாலையும் போட்டு,காதில் பூவும் வைத்து, சந்தணமும் குங்குமமும் கலந்து பொட்டும் வைத்து விட்டு  தமிழ்மக்கள் இரண்டாவது தேர்வாகவாவது சஜீத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வாஸ்தவம் தான். ஏனெனில் இரண்டாம், மூன்றாம் தேர்வுகளை கோருவது வேட்பாளர்களின் பலவீனமாக கருதப்படும் என்பதால் பலரும் அதை பொதுவெளியில் பேச தயங்குகின்றனர். விக்கினேஸ்வரனும் மலையக மற்றும் முஸ்லீம் மக்கள் இரண்டாம் தேர்வை பொது வேட்பாளருக்கு அளிக்குமாறு கேட்டிருக்கிறார்.

இன்னொரு பக்கத்தில் வாக்காளர் ஒருவர் கட்சியின் கொள்கை, அதற்குரிய வேட்பாளர் என்ற அரசியல் நிலைப்பாட்டில் கொள்கை அடிப்படையில் முதல்தேர்வை மேற்கொள்கையில், பின்னர்  இரண்டாம், மூன்றாம் தேர்வுகளை செய்வது சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டாலும் அதன் பின்னால் உள்ள அரசியல் ஜதார்த்தம் குழப்பகரமானது. இதற்கு சிறந்த உதாரணம் உமாச்சந்திராவின் கோரிக்கை. தமிழ்த்தேசியத்தை அங்கீகரித்து, தமிழர் பாரம்பரிய பிரதேசத்தையும், சுயநிர்ணய உரிமை அதன் அடிப்படையிலான முழுமையான சமஷ்டியையும் அங்கீகரிக்க கோரிநிற்கின்ற தமிழ்பொதுவேட்பாளரையும், அதன் மறுமுனையில் சிங்கள தேசியத்தின் பிரதிநிதியாக போட்டியிடுகின்ற சஜீத்தையும் எந்த அடிப்படையில்  ஒரே வாக்குச்சீட்டில் ஆதரிக்க முடியும்?. தமிழ்மக்களை பொதுவேட்பாளர் மட்டும் அல்ல உமாச்சந்திராவும் சேர்ந்து முட்டாள்கள் ஆக்குகிறார். அதேபோல் இடதுசாரி கொள்கைகளை வலியுறுத்துகின்ற அநுரகுமாரவையும், வலதுசாரி திறந்த பொருளாதார கொள்கையை வலியுறுத்தும் ரணிலையும், சஜீத்தையும் எவ்வாறு இலக்கத் தேர்வுகளின் மூலம் வரிசைப்படுத்த முடியும்?

ஜனாதிபதி வேட்பாளர்களையும் அவர்களின் அரசியல் பூச்சியங்களான கண்மூடித்தனமாக விக்கினேஸ்வரன் போன்ற ஆதரவாளர்களையும் விடவும் மக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். பெரும்பாலான மக்கள் தங்கள் வாக்குகளை ஒரு கொள்கைக்கு -ஒரு வேட்பாளருக்கே அளிப்பார்கள். மேலும் விருப்ப தேர்வு ஒழுங்கை கோருவது வாக்காளர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி -வாக்களிப்பில் தவறுகளை அதிகரித்து செல்லுபடியற்றவாக்குகளின் வீதத்தை அதிகரிப்பதாக அமையும். இந்த நிலை ஐம்பது வீத வாக்குகளை பெறல் என்ற வேட்பாளர் இலக்கில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

முதற்கட்டமாக வேட்பாளர்களின் வாக்குகள் அவர்களுக்கான புள்ளடி/ அடையாளம்  அல்லது இலக்கம் அடிப்படையில் கணக்கிடப்படும். அதில் ஏ,பி,சி,டி என்ற வேட்பாளர்கள் முறையே 40, 35, 15, 10 என்ற வீதத்தில் முதற்கணக்கெடுப்பில் வாக்குகளை பெற்று இருக்கிறார்கள் என்றால் , இங்கு மொத்தமாக நால்வருக்கும் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகள் 100 வீதம். ஒரு வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு அளிக்கப்பட்ட வாக்குகளில் 50 வீதத்தை பெற்றிருக்க வேண்டும் . மேற்படி உதாரணத்தில் நால்வரில் எவரும் 50 வீதத்தை பெறவில்லை. இந்த நிலையில் இரண்டாம், மூன்றாம் தேர்வுகள் முக்கியம் பெறுகின்றன.

இனி இந்த வேட்பாளர்களில்  முன்னணியில் உள்ள ஏ,பி வேட்பாளர்களுக்கான இரண்டாம் , மூன்றாம் தேர்வுகள் எண்ணப்படும். அப்போது ஏ 45 வீதமான வாக்குகளையும்,பி 38 வீதமான வாக்குகளையும் பெற்றால்  45 வீதமான வாக்குகளை பெற்ற ஏ வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். இங்கு இரண்டாம் கணிப்பையும் சேர்த்து இருவருக்கும் அளிக்கப்பட்ட வாக்குகள் மொத்தம் 83 வீதம். இதில் ஐம்பது வீதம் 42.5 . இரண்டாம் கணிப்பில் ஐம்பது வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றவராக கருதப்பட்டு ஏ வெற்றி பெற்றவராகிறார்.

இங்குள்ள ஜனநாயக முரண்பாடு என்னவெனில் பி,சி, டி ஆகிய மூன்று வேட்பாளர்களும் பெற்ற வாக்குகள் இரண்டாம் கணிப்பு இன்றியே 60 வீதம். இது கருத்தில் கொள்ளப்படாது முதலில் 40 வீதமும், இரண்டாம் கணிப்பில் 5 வீதம்  அதிகமாக பெற்று 45 வீதம் வாக்குகளை பெற்றவரே வெற்றி பெற்றவராகிறார். ஆகவே, இந்த ஜனாதிபதி பெரும்பாலான மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி அல்ல. அவரை இரு கணிப்பிலும் சேர்த்து 50 வீரத்திற்கும் குறைவான மக்களே ஆதரித்துள்ளனர். இது ஜனாதிபதி தேர்வில் உள்ள மிகப்பெரிய ஜனநாயக ஓட்டை.

 இதுவரையான  ஜனாதிபதி தேர்தல்களில் ஏறக்குறைய சமபலத்தை கொண்ட வேட்பாளர்கள் இருந்த நிலையில் பாரிய ஜனநாயக மறுப்பாக இது அமையவில்லை. ஆனால் எதிர்காலத்தில் இரண்டுக்கு மேற்பட்டதும் ஏறக்குறைய சமபலத்தை கொண்டதுமான வேட்பாளர்கள் களத்தில் குதிக்கும் போது ஜனநாயகத் தேர்வு குறித்த ஒரு கேள்வியை எழுப்புவதாக இது இருக்கும்.

இதைத் தவிர்ப்பதற்காகவே உலகநாடுகள் பலவற்றிலும் இரண்டாவது வாக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. முதலாவது தேர்தல் முடிவடைந்து எந்த வேட்பாளரும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறாத நிலையில் அடுத்த வாரத்தில் இரண்டாவது தேர்தல் நடாத்தப்படுகிறது. இதில் குறிபிட்டளவு வாக்குகளை முதல்தடவையில் பெற்ற இருவரே பெரும்பாலும் போட்டியிடுவர். போட்டியில் இருந்து விலக்கப்பட்ட, அல்லது விலகிக்கொண்ட வேட்பாளர் இறுதிப்போட்டியில் உள்ள ஒரு வேட்பாளரை சுயவிருப்பில் ஆதரிப்பதற்கும் எந்த தடையும் இல்லை. பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் இந்த முறையே பின்பற்றப்படுகிறது. இதன் மூலம் ஒரு ஜனாதிபதி பெரும்பாலான மக்களால் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பை ஜனநாயக தேர்தல் நடைமுறை வழங்குகிறது.

பாராளுமன்றம் ஜனாதிபதியை தேர்வு செய்யும் முறை சுவிட்சர்லாந்தின் சமஷ்டி அரசில் உள்ளது. இங்கு சமஷ்டி அவை என்று சொல்லப்படுகின்ற அமைச்சரவையும்,அதன் தலைமையான ஜனாதிபதியும் பாராளுமன்றத்தினால் தேர்வு செய்யப்படுவர்.  தேசிய சபை, மாகாணங்கள் சபை (200+46) என்ற 246 உறுப்பினர்களும் சேர்ந்து ஜனாதிபதியையும், அமைச்சர்களையும் தேர்வு செய்வர். பாராளுமன்ற உறுப்பினர்களில்  அளிக்கப்படும் வாக்குகளில் 50 வீதமான 123 க்கும் அதிகமான வாக்குகளை பெறுபவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.  வேட்பாளர் ஒருவர் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறும்வரை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு ஒரே நாளில் பல தடவைகள் மீண்டும் , மீண்டும் நடைபெறும்.இது நிறைவேற்று அதிகாரம் அற்ற அமைச்சரவை கூட்டுப்பொறுப்புள்ள , ஒரு தலைமைத்துவத்தை கொண்ட  , தலைவர் உட்பட ஏழுபேர் உள்ள அமைச்சரவையுடன் கூடிய ,நிரந்தர எதிர்க்கட்சி அற்ற ஒரு ஆட்சிமுறை.

பிரான்ஸ்சின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி முறையுடனும், பாராளுமன்றத்தினால் ஜனாதிபதி தெரிவு செய்யப்படும் சுவிஸ் சமஷ்டி முறையுடனும் ஒப்பிடுகையில் இரண்டாவது தேர்தலுக்கு வழியில்லாத இலங்கையின் ஒருவழிப்பாதை(ONEWAY) ஜனநாயகம் முழுமையான ஜனநாயகமா? என்ற கேள்விக்கு செப்டம்பர் 21 ம் திகதி இலங்கை மக்களுக்கு தரப்போகின்ற பதில் என்ன……..?!.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *