தேசிய மக்கள் சக்தியின் தலைவருக்கு எதிராக ஜனாதிபதி கிளப்பிய இனவாதச் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தியின் தலைவருக்கு எதிராக ஜனாதிபதி கிளப்பிய இனவாதச் சர்ச்சை

  — வீரகத்தி தனபாலசிங்கம் — 

தென்னிலங்கையில் இனவாதப் பிரசாரங்கள் இல்லாத ஒரு சூழ்நிலை இந்த தடவை ஜனாதிபதி தேர்தலில் முக்கியமாக அவதானிக்கக்கூடியதாக இருக்கும் ஒரு அம்சமாகும். பிரதான வேட்பாளர்கள் சகலரும் சிறுபான்மைச் சமூகங்களின் ஆதரவை நாடி நேசக்கரம்  நீட்டுவதே அதற்கு முக்கிய காரணமாகும்.

எந்தவொரு பிரதான வேட்பாளருமே ஐம்பது சதவீதமான வாக்குகளை பெறுவது சாத்தியமில்லை என்று நம்பப்படுவதால், அவர்கள்  வெற்றி பெறுவதற்கு சிறுபான்மைச் சமூகங்களின் வாக்குகள் இன்றியமையாதவையாக இருக்கின்றன. முன்னைய ஜனாதிபதி தேர்தல்களைப் போலன்றி இந்த தடவை பிரதான வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக அடிக்கடி வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு செல்கிறார்கள்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் பிரதான வேட்பாளர்கள் தங்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் அளித்திருக்கும் வாக்குறுதிகளை சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த மக்கள் நம்புகிறார்களோ இல்லையோ அது வேறு விடயம். ஆனால், அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது உட்பட அதிகாரப் பரவலாக்கம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தேசிய  மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரின் வாக்குறுதிகளில் ஒப்பீட்டளவில் ஒரு சங்கமம் காணப்படுகிறது. 

வடக்கு, கிழக்கின் எதிர்கால அபிவிருத்தி குறித்து அவர்கள்  உறுதிமொழிகளை அள்ளி வீசுகிறார்கள். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச யாழ்ப்பாணத்தை சிலிக்கன் பள்ளத்தாக்கின் இலங்கை வடிவமாக மாற்றப்போவதாகவும் கூட கூறுகிறார். 

தங்களது அரசியல் வாய்ப்புக்களுக்காக இனவாதத்தையே முற்றுமுழுதாக நம்பியிருக்கும் சில தென்னிலங்கை அரசியல்வாதிகளின் குரல்களை தற்போதைய பிரசாரங்களில் பெரிதாக கேட்கக்கூடியதாக இல்லை.

இதனிடையே, விசித்திரமான ஒரு திருப்பமாக, அநுரா குமார இனவாதத்தை தூண்டிவிட முயற்சிக்கிறார் என்ற ஒரு குற்றச்சாட்டை கடந்தவாரம் ஜனாதிபதி விக்கிரமசிங்க முன்வைத்ததை காணக்கூடியதாக இருந்தது.

யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரசாரக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய விக்கிரமசிங்க வடபகுதி மக்களை பயமுறுத்தி அவர்கள் மீது அநாவசியமாக நெருக்குதலை பிரயோகிப்பதற்காக அநுரா குமார அந்த மக்களிடம்  மாத்திரமல்ல சிங்கள மக்களுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியதற்காக அவர்களிடமும் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

 தென்னிலங்கையில் மக்கள் ஒரு மாற்றத்துக்காக அணிதிரளும்போது வடபகுதி மக்கள் அதை எதிர்த்தால் தெற்கில் உள்ள மக்களின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதை கற்பனை செய்து பார்க்குமாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் வடக்கில் பிரசாரக்கூட்டம் ஒன்றில் தமிழ் மக்களை நோக்கி கேட்டதையடுத்தே ஜனாதிபதியிடம் இருந்து இந்த குற்றச்சாட்டு வந்தது. 

தென்னிலங்கை மக்களின் விருப்பத்துக்கு மாறாக வடபகுதி மக்கள் தேர்தலில் வாக்களிக்கக்கூடாது  என்று அநுரா குமார தமிழர்களை  அச்சுறுத்துகிறார் என்று அவரின் கருத்தை ஜனாதிபதி அர்த்தப்படுத்துகிறார் என்பது தெளிவானது. வடபகுதி மக்கள் தங்களது வாக்களிக்கும் முறையை மாற்றக்கூடாது என்றும் ஜனாதிபதி அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

“2010 ஜனாதிபதி தேர்தலில் தென்னிலங்கை மக்கள் மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களித்தபோது நீங்கள் சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்தீர்கள். ஆனால், உங்களுக்கு எதுவும் நடக்கவில்லை. 2015 தேர்தலில் நீங்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்த அதேவேளை  தெற்கு மக்கள் மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களித்தார்கள். உங்களுக்கு எதுவும் நடக்கவில்லை. 

“2019 தேர்தலில் நீங்கள் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்தீர்கள். ஆனால் தெற்கில் மக்கள் கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களித்தார்கள். கோட்டாபய உங்களை துன்புறுத்தவில்லை. அதனால் நீங்கள் வாக்களித்துவருகின்ற முறையை மாற்றாதீர்கள். உங்களுக்கு எந்த ஆபத்தும் வராமல் இருப்பதை நான் உத்தரவாதப்படுத்துவேன் . அநுரா குமாரவுக்கோ அல்லது சஜித்துக்கோ வாக்களித்து உங்கள் வாக்குரிமையை வீணாக்காதீர்கள்” என்று விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில்  மக்களை நோக்கி கூறினார்.

ஜனாதிபதியின் இந்த கருத்துக்களை எவ்வாறு விளங்கிக்கொள்வது என்று புரியவில்லை. தென்னிலங்கை மக்கள் வாக்களித்து வந்திருக்கும்  முறைக்கு மாறாக  வழமை போன்று வடபகுதி மக்கள் வாக்களிக்க வேண்டுமென்றால்,  அநுரா குமாரவை அல்லது சஜித்தை தென்னிலங்கை மக்கள் ஆதரிக்கவிருப்பதால் தமிழ் மக்கள் அதற்கு எதிராக தனக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்கிறாரா? தன்னை தென்பகுதி மக்கள் இந்த தடவை ஆதரிக்கப்போவதால் தமிழ் மக்களும் அவர்களைப் பின்பற்றி தன்னை ஆதரிக்கவேண்டும்  என்று ஏன் ஜனாதிபதியினால் கூறமுடியவில்லை? அதனால் இதுவரை ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த முறையை மாற்றக்கூடாது என்ற விக்கிரமசிங்கவின் வேண்டுகோள் ஒரு புதிராக இருக்கிறது.

ஜனாதிபதியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அநுரா குமார வடபகுதி மக்களிடம் தன்னை மன்னிப்புக் கேட்குமாறு சவால் விடுப்பதை விடுத்து  யாழ்ப்பாணத்தில்  பிரசாரக்கூட்டத்தில் இனவாதத்தை தூண்டியதற்காக ஜனாதிபதியே வடபகுதி மக்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று கூறினார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஏற்கெனவே சிறந்த பதிலை வழங்கி விட்டதால் ஜனாதிபதிக்கு பதிலளிக்கவேண்டிய தேவை தனக்கு இல்லை என்று குறிப்பிட்ட அநுரா குமார “இனவாதத்தை தூண்டுகின்ற அரசியல் இந்த நாட்டை விட்டு இப்போது போய்விட்டது.  அந்த அரசியல் இனிமேல் இலங்கையில் வெற்றி பெறப்போவதில்லை” என்று தெரிவித்தார்.

சிறுபான்மைச் சமூகங்களும் தனது வெற்றியில் பங்காளிகளாக வேண்டும் என்று விரும்பியதாகவும் ஆனால் அவர்கள் தன்னுடன்  இணைந்து கொள்ளவில்லை என்று கோட்டாபய ராஜபக்ச  2019 நவம்பரில் அநுராதபுரத்தில் வைத்து  பதவியேற்றபோது கூறிய கருத்தின் தொனியில் அநுரா குமாரவின் கருத்து அமைந்திருப்பதாகவும் கூட வியாக்கியானம் செய்யப்படுகிறது. 

அதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் தலைவரை நியாயப்படுத்த  அவரது தோழர்களே ஓடிவருவதற்கு முன்னதாக  பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்  அநுரா குமாரவின் கருத்துக்கள்  இனவாதத்தை தூண்டும் நோக்குடனானவை அல்ல என்று உடனடியாகவே  செய்தியாளர்களிடம் கூறினார். 

“தோழர் அநுரா குமார எந்தவிதமான இனவாத உணர்வுடனும் அந்த கருத்துக்களை யாழ்ப்பாணத்தில் கூறவில்லை என்று நான் நினைக்கிறேன். நான் அவரை நன்றாக அறிவேன். அவர் அத்தகைய மனிதர் அல்ல. உண்மையில் அவர் இந்த நாட்டில் இருந்து இனவாதத்தை ஒழிப்பதில் பெரும் அக்கறை கொண்டவராக இருக்கிறார். அதனால் எமக்கு இந்த சர்ச்சையில் வேறுபட்ட எந்த உணர்வும் இல்லை” என்று சுமந்திரன் கூறினார்.

ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கும் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய சுமந்திரன்,  பிரேமதாசவுக்கு தாங்கள் ஆதரவை வழங்குவதற்கு தீர்மானித்த போதிலும், பொதுவான குறிக்கோள்களில் குறிப்பாக தவறான ஆட்சிமுறையையும் ஊழலையும் ஒழித்துக் கட்டுவதில் அநுரா குமாரவுடன் இணைந்து செயற்படத் தயாராயிருப்பாகவும் குறிப்பிட்டார்.

ஆனால், ஜனாதிபதி விக்கிரமசிங்க தேசிய மக்கள் சக்தி தலைவர் வடபகுதி மக்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் தொடர்ந்தும் பேசியதை காணக்கூடியதாக இருந்தது. தனக்கு வாக்களிப்பதற்கு தமிழர்கள் தவறினால் இனமோதலுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என்பதே அநுரா குமாரவின் பேச்சின் மறைமுகமான செய்தி என்று ஜனாதிபதியை ஆதரிக்கும் ஒரு கட்சியின் தலைவரும் கடந்த வாரம் கூறினார்.

ஜனாதிபதி கிளப்பிய சர்ச்சையை வடபகுதி மக்களோ அல்லது தமிழ் அரசியல் கட்சிகளோ அல்லது சிங்கள மக்களோ பொருட்படுத்தியதாக தெரியவில்லை. விக்கிரமசிங்கவை போன்ற அனுபவமிக்க ஒரு அரசியல் தலைவர் அதுவும் இனவாதக் கருத்துக்களை சிங்கள மக்கள் மத்தியில் பேசாத  ஒருவர், தேர்தலில் தனது போட்டியாளர்களில் ஒருவருக்கு எதிராகப் பயன்படுத்துவதற்கு இன்றைய சூழ்நிலையில் எந்தவிதத்திலும்  பொருத்தமில்லாத ஒரு  விவகாரத்தை பெரிதுபடுத்தி தன்னை ஒருவிதமான பொருந்தாத்தன்மைக்கு ஆளாக்கிக்கொண்டார் என்றுதான் கூறவேண்டும். 

தேசிய மக்கள் கட்சியின் பிரதான அங்கத்துவக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி. ) இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இதுகாலவரையில் முன்னெடுக்கப்பட்ட சகல முயற்சிகளையும் கடுமையாக எதிர்த்த ஒரு எதிர்மறையான வரலாற்றைக் கொண்டிருக்கிறது. ஆனால், இலங்கை அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடிய முக்கியமான அரசியல் சக்தியாக வளர்ந்துவிட்ட  அந்த கட்சியை தொடர்ந்தும் அதன் கடந்த காலத்தின் பணயக் கைதியாக வைத்திருக்க முயற்சிப்பது பொருத்தமானதல்ல. அவர்களிடம் காணப்படக் கூடியதாக இருக்கின்ற ஒப்பீட்டளவிலான மாற்றங்களை  ஊக்குவிப்பதே ஆரோக்கியமான  அணுகுமுறையாக இருக்கும்.

ஆனால், சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளையும் மனக்குறைகளையும் பெரும்பான்மையின மக்கள் மத்தியில் எடுத்துக்கூறுவதன் மூலமாக  அரசியல் தீர்வுக்கும் அதிகாரப் பரவலாக்கலுக்கும் எதிராக தென்னிலங்கையில் வேரூன்றியிருக்கும் அரசியல் உணர்வுகளை  தணிப்பதற்கு தங்களை அர்ப்பணிக்க தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள்  தயாராயில்லை என்பது கசப்பான உண்மை. அதை அவர்கள் மறுக்கமுடியாது.

இரு வாரங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனங்களில் ஜனாதிபதி விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சி தலைவர் பிரேமதாசவும் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக வாக்குறுதி அளித்திருக்கும் அதேவேளை அநுரா குமார அதைப் பற்றி எதுவும் கூறவில்லை. 

13 வது திருத்தம் பற்றி எதையும் குறிப்பிடுவதை  தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே அநுரா குமார தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் 2015 — 2019 காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையை துரிதமாக நிறைவுசெய்து மாவட்டங்களுக்கும்  மாகாணங்களுக்கும் அரசியல் மற்றும் நிருவாக அதிகாரங்களை வழங்குவதாக உறுதியளித்திருப்பதாக தமிழர் தரப்பில் விமர்சனங்கள் உண்டு.

என்னதான் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் சகல சமூகங்களையும் சமத்துவமான வாய்ப்புக்களைக் கொடுக்கப்போவதாக  பேசினாலும், சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளையும் மனக்குறைகளையும் ஏற்றுக்கொள் மறுத்துநிற்கும் தென்னிலங்கை தேசியவாத சக்திகளை பகைத்துக்கொள்ளாமல் இருக்கும் அணுகுமுறைகளை கடைப்பிடிப்பதில் மிகுந்த அக்கறையுடன் செயற்படுகிறார்கள். அநுரா குமார போன்றவர்களை இனவாதிகள் என்று வர்ணிப்பதை விடவும் இனவாதத்தின் கைதிகள் என்று கூறுவதே பொருத்தமானதாகும். 

இது இவ்வாறிருக்க, அறகலய மக்கள் கிளர்ச்சிக்கு பின்னரான காலப்பகுதியில் தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் மத்தியில் அதிகரித்து வந்திருக்கும் ஆதரவை 1953 ஹர்த்தாலுக்கு பிறகு எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு வளர்ந்த ஆதரவுடன் சில அவதானிகள் ஒப்பிடுகிறார்கள்.

மானியங்களில் குறைப்புச் செய்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக முக்கியமாக  லங்கா சமசமாஜ கட்சியும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் அவற்றின் தொழிற்சங்கங்களும் முன்னெடுத்த ஹர்த்தால் போராட்டத்துக்கு நாடுபூராவும் மக்களின் ஆதரவு கிடைத்தது. அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட  கொழும்பு துறைமுகத்தில் தரித்து நின்ற பிரிட்டிஷ் கப்பலில் நடத்தவேண்டிய அளவுக்கு நாட்டில் கொந்தளிப்பான நிலைவரம். 

அந்த போராட்ட இயக்கத்தை தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சி மலவீனமடைந்தது. உடனடியாக இல்லாவிட்டாலும், இரு மாதங்களுக்கு பிறகு பிரதமர் டட்லி சேனநாயக்க பதவியைத் துறந்து தற்காலிகமாக அரசியலில் இருந்தும் ஒதுங்கியிருந்தார்.

அரசாங்கத்தின் மீது மக்களுக்கு இருந்த வெறுப்புணர்வை  ஹர்த்தாலை முன்னின்று நடத்திய இடதுசாரி கட்சிகள் அல்ல பண்டாரநாயக்கவே தனக்கு அனுகூலமாக  பயன்படுத்தி மூன்று வருடங்களுக்கு பிறகு ஆட்சிக்கு வந்தார். அதே போன்றே இன்று அறகலய கிளர்ச்சிக்கு பின்னர் இலங்கையின் அரசியல் நிலைவரத்தில் மாற்றத்தின் விளைவாக பயனடைந்த  தேசிய மக்கள் சக்தி பாரம்பரிய அரசியல் அதிகார வர்க்கத்தின் கட்டமைப்பின் இருப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிலை தோன்றியிருக்கிறது. 

பண்டாரநாயக்க செய்து காட்டியதை அநுரா குமாரவும் செய்வாரா என்பதை அறிய நீண்ட காலம் அல்ல ஒரு வாரம் மாத்திரமே பொறுத்திருக்க வேண்டும்.

(ஈழநாடு )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *