தமிழ் மக்கள் தேசிய அரசியலின் பங்குதாரர்களாக வேண்டும்(சொல்லித்தான் ஆகவேண்டும்!-சொல்-21)

தமிழ் மக்கள் தேசிய அரசியலின் பங்குதாரர்களாக வேண்டும்(சொல்லித்தான் ஆகவேண்டும்!-சொல்-21)

  (‘அரங்கம்’ அரசியல் பத்தித்தொடர்.)

  — தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்—

 எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி நடைபெறப் போகிற இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலைப் பொறுத்தவரை தென்னிலங்கைச் சிங்கள சமூகம் இந்நாட்டு அரசியலில் இனவாதமற்ற-ஊழல், மோசடிகள், விரயங்களற்ற- வெளிப்படைத் தன்மைமிக்க -வாக்களிக்கும் மக்களுக்குப் பொறுப்புக் கூறக்கூடியதொரு சூழலை வேண்டி நிற்கிறார்கள் என்பதை அப்பகுதிக் களநிலைகள் காட்டுகின்றன.

 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார மேடைகளில் கடந்த காலப் பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தகளுடன் ஒப்பிடும்போது இனவாதம் பேசப்படவில்லையென்பது அவதானத்திற்குரியதொன்று. வழமையாக இனவாதம் கக்கும் விமல் வீரவன்ச, உதயகமன்வில, சரத்வீரசேகர போன்றவர்கள் பெட்டிப் பாம்பாக அடங்கிவிட்டனர் அல்லது அடக்கி வாசிக்கின்றனர்.

 இனவாதம் இந்நாட்டைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிவிட்டது என்பதைத் தென்னிலங்கை இன்று உணரத் தலைப்பட்டுள்ளதன் அடையாளமே இது. இந்தச் சமிக்ஞையைத் தமிழர்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

   எது எப்படியிருப்பினும் கடந்த கால அனுபவங்களின் அடிப்படையிலும் சிங்கள அரசியல் தலைவர்களின் உளவியல் அடிப்படையிலும் பார்த்தால் இலங்கைத் தமிழ் மக்களைத் திருப்திப்படுத்தக்கூடியதோர் அரசியல் தீர்வை – அதிகாரப் பகிர்வை தாமாகவே முன்வந்து விரும்பித் தரப்போவதில்லையென்பதும் யதார்த்தமே.

 அழுதும் பிள்ளை அவளே பெறவேண்டும். அதற்கான அரசியல் அழுத்தங்கள் தமிழர் தரப்பினரிடமிருந்தே வரவேண்டும். ஆனால் தமிழர் தரப்பு அதில் அரசியல் மதிநுட்பத்துடன் நடந்து கொள்ளவில்லை. அதில் அக்கறையின்றியும் அசிரத்தையாகவுமே இதுவரையும் இருந்துள்ளது. 

 ஏனெனில் 1987 இல் கைச்சாத்திடப்பெற்ற இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் விளைவான 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் ஆரம்பத்தில் நிறுவப்பெற்ற வடக்கு கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாண அரசை வலுப்படுத்துவதற்குத் தமிழர் தரப்பு முன்வராமல் அதனைப் பலவீனமாக்கி இல்லாமற் செய்வதற்கே தமிழ் மக்களிடையே இராணுவ மேலாண்மையுடன் பலம் பெற்று விளங்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் செயற்பட்டனர். அதன் எதிர்மறையான விளைவுதான் இன்று இலங்கை தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள கையறு நிலை.

 வெறுமனே மடிச்சுக் கட்டிக்கொண்டு வாய் வீரம் பேசுவதால் எதுவுமே நடக்காது.

 இந்த நிலையிலிருந்து ஓரளவுக்காவது விடுபட்டுத் தமிழ் மக்களின் அதிகாரப் பகிர்வு நோக்கிய அடுத்த கட்ட நகர்வுக்குச் செல்வதாயின் இலங்கையின் தேசிய அரசியல் நீரோட்டத்தோடு பயணித்தும் அதேவேளை சமகாலத்தில் அதற்குச் சமாந்தரமாக இந்தியாவை அனுசரித்துப் போவதுமானதோர் அரசியல் வழிவரைபடத்தை இக்கட்டத்திலாவது தமிழர் தரப்பு வகுத்துக் கொள்ள வேண்டும்.

 ஆனால் இத்தகைய அறிவார்ந்த அரசியல் நகர்வுக்குத் ‘தமிழ்ப் பொது வேட்பாளர்’ விடயம் இடையூறானது.

 காரணம் தமிழ்த் தேசியம் வேறு ‘புலி’த் தேசியம் வேறு. தமிழ் தேசியம் அறம் சார்ந்தது; ‘புலி’த் தேசியம் வன்முறை சார்ந்தது.

  தமிழ்த் தேசியம் அரசியல் சிந்தனைகளால் வழிநடத்தப்படுவது; ‘புலி’த் தேசியம் ஆயுதத்தால் மட்டுமே வழிநடத்தப்பட்டது.

 தமிழ்த் தேசியம் சகோதரப் படுகொலைகளை நிகழ்த்தியிருக்க மாட்டாது.

  தமிழ்த் தேசியம் அப்பாவிச் சிங்கள – தமிழ் – முஸ்லிம் மக்களைப் படுகொலை செய்திருக்கமாட்டாது.

 தமிழ்த் தேசியம் இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தை எதிர்த்திருக்கமாட்டாது.

 தமிழ்த் தேசியம் இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அமுல் செய்வதற்காக இலங்கை வந்த இந்திய அமைதிகாக்கும் படையினருடன் போர் தொடுத்திருக்கமாட்டாது.

 தமிழ்த் தேசியம் இந்திய – இலங்கைச் சமாதான ஒப்பந்தத்தின் விளைவான வடக்கு கிழக்கு இணைந்த மாகாண அரசை-அலகைக் குழப்பியிருக்கமாட்டாது.

 தமிழ்த் தேசியம் அமிர்தலிங்கத்தைக் கொலை செய்திருக்கமாட்டாது.

 தமிழ்த் தேசியம் சக-மாற்றுப் போராளி இயக்கத் தலைவர்களைப் போட்டுத் தள்ளியிருக்காது.

தமிழ்த் தேசியம் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியிருக்காது.

 தமிழ்த் தேசியம் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைத் தற்கொலைக் கொண்டுத் தாக்குதல் மூலம் படுகொலை செய்திருக்காது.

தமிழ்த் தேசியம் யாழ்குடா நாட்டு மக்களை வன்னிப் பெரு நிலப்பரப்பிற்குள் மனிதக் கேடயங்களாக இடம்பெயர்த்திருக்க மாட்டாது.

 தமிழ்த் தேசியம் ‘இலங்கை பிராந்தியங்களின் ஒன்றியம்’ என்ற மகுடத்துடன் சமஸ்டிக் குணாம்சம் கொண்ட அரசியல் தீர்வுப் பொதியைக் கொணர்ந்த முன்னாள் இலங்கை ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா விஜயகுமாரணதுங்க மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருக்க மாட்டாது.

 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து கருணா அம்மான் விலகிய பின்பு வன்னிப் புலிகள் (வடபகுதிப் புலிகள்) கிழக்கு மாகாணப் புலிகள் மீது தாக்குதல் நடத்த அனுமதித்திருக்க மாட்டாது.

 தமிழ்த் தேசியம் சந்திரிக்கா கொணர்ந்த சமஸ்டிக் குணாம்சம் கொண்ட அரசியல் தீர்வுப்பொதியைத் தயாரிப்பதில் பெரும் பங்களித்த நீலன் திருச்செல்வத்தை உயிர்ப்பலி எடுத்திருக்கமாட்டாது.

 தமிழ்த் தேசியம் 2005 ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிக்கும்படி தமிழ் மக்களை வலியுறுத்தியிருக்காது.

 தமிழ்த் தேசியம் தமிழ் மக்களை அழிவை நோக்கி முள்ளிவாய்க்கால் வரை அழைத்துச் சென்ற யுத்தத்தைத் திருகோணமலை மாவட்டம் மாவிலாறில் தொடங்கியிருக்கமாட்டாது.

     தமிழ்த் தேசியம் முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் போது அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட போது மௌனம் சாதித்திருக்க மாட்டாது; ஓடி ஒளிந்திருக்க மாட்டாது.

 தமிழ்த் தேசியம் 2010 ஜனாதிபதித் தேர்தலில் முள்ளிவாய்க்கால் யுத்தத்திற்கு இராணுவத் தலைமையேற்ற இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை ஆதரித்திருக்கமாட்டாது.

 தமிழ்த் தேசியம் தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமே தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்ற ஜனநாயகத்திற்கு முரணான நிலைப்பாட்டை எடுத்திருக்கமாட்டாது.

 தமிழ்த் தேசியம் இந்த 2024 ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தியிருக்கவும்மாட்டாது.

 இப்படி இன்னும் பல விடயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். விரிவஞ்சி அவை கூறப்படவில்லை.

     ஆனால், தமிழ்ப் பொது வேட்பாளரை போட்டிக்கு நிறுத்தியுள்ள தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு புலிகளின் முகவர்களாக – புலிகளின் பதிலிகளாக – ‘புலி’த் தேசியத்தின் பிரதிநிதிகளாகவே வெளிக்காட்டியும் அடையாளப்படுத்தியும் உள்ளது. அது முன் வைத்திருக்கும் தேர்தல் விஞ்ஞாபனமும் (அறிக்கையும்) ‘புலி’த் தேசியத்தையே மீண்டும் வலியுறுத்தியிருக்கிறது.

 தமிழ்த் தேசியமே மக்களுக்கானது; மக்கள் நலன் சார்ந்தது. ‘புலி’த் தேசியம் புலிகளுக்கும் புலிகளின் முகவர்களுக்கு மட்டுமேயானது; அவர்களின் நலன்களை மட்டுமே சார்ந்தவை. மக்கள் நலன் சார்ந்தவை அல்ல. அதனால் தமிழ்த் தேசியத்தை ஏற்றுக்கொள்ளும் சக்திகள் கூட ‘புலி’த் தேசியத்தை விரும்பவில்லை.

 தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு முன் வைத்திருப்பது தமிழ் தேசியம் அல்ல; அது ‘புலி’த் தேசியமேயாகும்.

 இதனைத் தென்னிலங்கைச் சிங்கள சமூகமோ இந்து சமுத்திரப் பிராந்திய வல்லரசான இந்தியாவோ சர்வதேச சமூகமோ ஏற்றுக்கொள்ளவோ அங்கீகரிக்கவோ போவதில்லை.

 தென்னிலங்கைச் சிங்கள சமூகத்தின் நல்லெண்ணப் புரிதல்-இந்தியாவின் உறுதியான அனுசரணை-சர்வதேச சமூகத்தின் தார்மீக ஆதரவு, இந்த மூன்று காரணிகளின்-சக்திகளின் இணைவின் மூலம்தான் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் சமூக பொருளாதார அரசியல் பிரச்சினைகளுக்கான திருப்தியான தீர்வு சாத்தியம்.

 இந்தப் பின்னணியில் இந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது தென் இலங்கைக்கும்-இந்தியாவுக்கும்- சர்வதேசத்திற்கும் எதிர்மறையான செய்திகளையே வழங்கும். இது தமிழ் மக்களுக்கு மென்மேலும் ஆபத்துக்களைக் கொண்டுவரும்.

 எனவே இலங்கைத் தமிழர்கள் புலிசார் உளவியலிலிருந்தும் ஆயுதக் கலாச்சாரத்திற்கு ஆதரவளிக்கும் மனோநிலையிலிருந்தும் மீண்டுவிட்டார்கள் என்பதையும்; தமிழ் மக்கள் தற்போது அவாவி நிற்பது தமிழ்த் தேசியமே தவிர தமிழ்த் தேசியம் எனும் பெயர்ப் பலகையுடன் முன்னெடுக்கப்படும் ‘புலி’த் தேசியத்தை அல்ல என்பதையும் தென்னிலங்கைச் சிங்கள சமூகம்-இந்தியா-சர்வதேச சமூகம் உள்ளடங்கிய முழு உலகுக்கும் வெளிப்படுத்துவதற்காகத் தமிழ்ப் பொது வேட்பாளரை முற்றாக நிராகரிக்கும் நிலைப்பாட்டை எடுப்பதன் மூலம் இந்த ஜனாதிபதித் தேர்தலை அரசியல் தந்திரோபாயரீதியாகப் பயன்படுத்தி இலங்கையின் தேசிய அரசியல் நீரோட்டத்தோடு பயணித்து அரசியல் மாற்றத்தின் பங்குதாரர்களாக மாறிக்கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *