— கருணாகரன் —
தமிழ்த்தேசியம் என்பதை தமிழ் இனவாதமாகச் சுருக்கி, அதைக் கறுப்பு – வெள்ளையாக்கி, துருவ நிலைப்படுத்துவதற்கே தமிழ்த்தேசியத் தரப்பினால் தொடர்ந்தும் முயற்சிக்கப்படுகிறது.
அதாவது கதாநாயகன் – வில்லன் என்ற மிகப் பழைய Formula வில். இதற்குச் சற்றுச் சூடேற்றுவதற்கு இடையில் துரோகி என்ற பாத்திரத்தையும் உருவாக்கி விடுகின்றனர்.
இந்தப் பழைய – உக்கிப்போன Formula வினுடைய புதிய வெளிப்பாடே (New version) தமிழ்ப்பொது வேட்பாளராகும்.
இதனை உறுதிப்படுத்தி மகிழ்ந்து கொண்டாடும் விதமாக தமிழ்ப்பொது வேட்பாளரை நியமித்த பொதுச்சபையைச் சேர்ந்தவர்களே தமது பத்தியில் எழுதியிருக்கிறார்கள்.
ஆக இவர்களுடைய நோக்கமெல்லாம் இலங்கை அரசியல் அரங்கை துருவமயப்படுத்தி வைத்திருப்பதே நோக்கமாகும்.
இப்படித் துருவமயப்படுத்தித் தமிழரசியலை வைத்திருக்க வேண்டும் என்றால் அதற்கு இனவாதம் தேவை.
இனவாதமின்றி அதைச் செய்ய முடியாது.
அந்த இனவாதத்தை வெளிப்படையாக – வெறித்தனமாக கையாள வேண்டுமென்றில்லை. பிரித்தாளும் தந்திரோபாயத்தோடு தமிழ்சமூகத்தைத் தனிமைப்படுத்தி வைத்திருக்கு முயற்சிப்பதே இனவாதம்தான்.
ஆனால் இலங்கையின் யதார்த்தம் இனி இனவாதத்துக்குரியதல்ல. இனவாதத்தை யாரெல்லாம் ஆதரிக்கிறார்களோ, யாரெல்லாம் அதைத் தூக்குகிறார்களோ அவர்களை காலமும் சூழலும் நிராகரித்துவிடும். முழு இனவாதத்தை தூக்கிய கோட்டபாய ராஜபக்ஸ விரட்டப்பட்டமை ஒரு உதாரணம்.
பலருக்கும் இதை நம்பக்கடினமாக இருக்கும். ஆனால் இதுதான் யதார்த்தம். இதுதான் உண்மை.
அண்மைய இன்னொரு உதாரணம், இந்தத் தடவை யாரும் இனவாதத்தை வெளிப்படையாக பேசவில்லை. இது 1994 லேயே வந்துவிட்டது. சந்திரிகா குமாரதுங்க இனவாதம் தவறு எனப் பகிரங்கமாகச் சொல்லி, தமிழ்மக்களுக்குத் தீர்வு வழங்க வேண்டும் எனக் கூறியே தேர்தலில் நின்று வெற்றியீட்டினார்.
அறகலய இதை மேலும் வலுவூட்டியது. மாற்றம் இப்படித்தான் படிப்படியாக நடக்கும். சினிமாவில் காட்டப்படுவதைப்போல ஒரே நாளில் மாற்றத்தை நிகழ்த்துவதல்ல. ஏன் சினிமாவில் அதிரடிகளை நிகழ்த்திய எம்.ஜி.ஆர் கூட தன்னுடைய அரசியலில் அதிரடி மாற்றங்களை நிகழ்த்த முடியவில்லை.
ஆனால் தமிழ்த் தரப்போ உடனடியாக மாற்றம் நிகழவேண்டுமென எண்ணுகிறது. இவ்வளவு காலமும் நம்பினோம், விட்டுக்கொடுத்தோம் என்கிறது.
அரசியலென்பது தொடர்ச்சியான, இடையறாத முயற்சியின் விளைவு. இடையறாத போராட்டத்தின் மூலம் எட்டும் வெற்றி. அது மிக கடினமான பாதையும் பயணமும். அதில் ஏற்ற இறக்கம் நிகழும்.
இதைப் புரிந்து கொண்டு நிதானமாக செயற்பட வேண்டும்.
ஆகவே இன அடைப்படையில் தனித்தமிழ் எனத் தன்னைத் தனிமைப்படுத்தி நிற்கும் தமிழ்ப்பொது வேட்பாளரையும் அதனுடைய இனவாதத்தையும் வரலாறும் சூழலும் ஏற்கப்போவதில்லை.
ஏனெனில் இதற்கு எந்தப் பெறுமானமும் உள்நாட்டு அரசியலிலும் பிராந்திய அரசியலிலும் சர்வதேச அரசியலிலும் கிடையாது. (வேண்டுமானால் ஆரோக்கியமான முறையில் இதை விவாதிப்பதற்கு யாரும் எங்கும் வரலாம்).
இன்று இதொரு எழுச்சியைப்போலச் சிலருக்கோ பலருக்கோ தோன்றக் கூடும்.
ஆனால், வரலாறு இதை நகையாடும். நிராகரிக்கும். மட்டுமல்ல, மோசமான தண்டனையைத் தமிழ்ச்சமூகத்துக்குக் கொடுக்கும்.
ஏனெனில் அரசியற் தவறுகள் எளிதாகக் கடந்து போகக் கூடியனவல்ல. இலகுவாக முடிந்து விடுவனவுமல்ல. அவை மிகப் பெரிய தண்டனையையே அளிக்கும்.
ஆகவே இன்றைய தவறுக்கு நாளை நிச்சயமாகப் பெரிய தண்டனை கிடைக்கும். முள்ளிவாய்க்காலையும் விட. அது மேலும் தமிழ்ச்சமூகத்தைப் பலவீனப்படுத்தும்.
1960 களில் சிங்களவரல்லாத தமிழ்பேசும் சமூகங்களில் ஓரளவுக்குப் பலமாகவும் பெரியதாகவும் இருந்த தமிழ்ச்சமூகம் இன்று மூன்றாவது நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதனுடைய வளர்ச்சி மிகக் கீழிறக்க நிலையிலேயே இருக்கிறது.
இது எப்படி நிகழ்ந்தது?
தமிழ்த்தலைமைகள், தமிழ் ஊடகங்கள், தமிழ்ப்புத்திஜீவிகள், தமிழ்ச் செயற்பாட்டு அமைப்புகள், தமிழ்ப்பல்கலைக்கழகங்களின் கூட்டுத்தவறினாற்தானே!
இவை சரியாகச் செயற்பட்டிருந்தால் தமிழ்ச்சமூகம் இந்தளவுக்குப் பலவீனப் பட்டிருக்காது.
அன்று தமிழரையும் விடப் பொருளாதாரத்திலும் அரசியலிலும் கல்வியிலும் பின்னிலையில் இருந்த சமூகங்கள் தங்களுடைய இடர்களையும் நெருக்கடிகளையும் எப்படிக் கடந்து செல்கின்றன? அதற்குள் எப்படிப் பலமாகி, வளர்ச்சியடைகின்றன? என்பதை ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.
என்பதால்தான் அவை தமிழ்ப்பொது வேட்பாளரை ஒத்த தெரிவுக்குச் செல்லவில்லை. அதற்காக அந்தச் சமூகங்களுக்கு நெருக்கடி இல்லை என்றோ, அரச ஒடுக்குமுறையிலிருந்து அவை விடுபட்டு விட்டன என்றோ இல்லை. அல்லது அந்தச் சமூகங்கள் சிந்திக்கத் தெரியாதனவாகவும் இல்லை. அல்லது அவற்றுக்கு அரசியல் ஞானமோ சமூக உணர்வோ இனமானமோ இல்லை என்றும் சொல்ல முடியாது.
இலங்கைத்தீவின் யதார்த்தம், சர்வதேசத்தின் வரையறை, தங்களுடைய மக்களின் நிலை என்பவற்றை அவை அரசியல் ரீதியாகச் சரியாக உணர்ந்துள்ளன. மதிப்பிட்டுள்ளன. அதற்கமையவே தங்களுடைய தீர்மானங்களை எடுக்கின்றன – செயற்படுகின்றன.
இதுவே அவற்றின் வெற்றியாகும்.
இதைப்பற்றித் தமிழ்ச் சூழலில் பேசினால், அதைப்பற்றிச் சிந்திப்பதற்குப் பதிலாக, அதொரு மாற்றுக் கருத்து, ஜனநாயக விழுமியம் என ஏற்றுக் கொள்வதில்லை.
பதிலாகத் துரோகி, எட்டப்பன், காக்கை வன்னியின் என்றெல்லாம் அடையாளப்படுத்துவதே நிகழ்கிறது.
இதைக்குறித்து பொதுவெளியிலோ பொது அரங்கிலோ யாரும் உரையாடவும் விவாதிக்கவும் முன்வருவதில்லை. பதிலாக தங்கள் ஏஜென்டுகளை ஏவி விட்டு வசைபாடவும் குற்றம் சாட்டிப் பழித்துரைக்கவுமே முற்படுகின்றனர்.
தமிழர்களின் மூளை மட்டும்தான் தங்கக்கட்டி என்ற அதீதமான சிந்தனை, கற்பனை இந்த உலகத்திலிருந்து அவர்களைத் தனிமைப்படுத்தப் போகிறது.
கடந்த காலத்தில் சிங்களத் தலைமைகள் தம்மை ஏமாற்றி விட்டன, நம்பி ஏமாந்து விட்டோம் என்று இப்போது சொல்கிறார்கள.
அப்போதும் இப்போதும் இவர்களுடைய அரசியற் தெரிவு தவறானது. இதை தொடர்ந்து செய்து தமிழ்மக்களை, தியாகம் பல செய்த மக்களை, இழப்புகள் பலதைச் சந்தித்த மக்களை மேலும் தோற்கடிக்கின்றனர்
எனவே இவர்கள்தான் சிங்கள இனவாதத்தின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றும் ஏஜெண்டுகளாக உள்ளனர்.
இதை மேலும் தொடர அனுமதிப்பதா என்பதைத் தமிழ் மக்கள் தீர்மானிக்க வேண்டும். அதாவது தம்மைத் தாமே தோற்கடிப்பதையும் தம்மை ஏமாற்றும் தலைமைகளை அனுமதிப்பதையும் நிறுத்த வேண்டும். இல்லையெனில் அழிவே.