— ராகவன் —
இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு அரசியல் மாற்றத்தை வேண்டி நிற்கும் ஜனாதிபதித் தேர்தலாக இத்தேர்தல் அமைந்திருக்கிறது. 2022 மக்கள் போராட்டத்தின் விளைவாக ராஜபக்ச அரசு துரத்தப்பட்டபின் மக்கள் அரசியல் மாற்றமொன்றை வேண்டிநின்றனர். இனவாத அரசியலும், ஊழல் நிறைந்த அரசியல் அதிகாரமும், ஏற்றத் தாழ்வை அதிகரிக்கும் அரசியல் பொருளாதார கொள்கைகளும் இந்த நாட்டின் சீரழிவுக்கான முக்கிய புள்ளிகள் என மக்கள் சார் சமூக அரசியல் அமைப்புகளும் புத்திஜீவிகளும் எடுத்துரைத்தனர்.
இவ்வகையில் இந்த தேர்தலின் முன்னணி வேட்பாளர்களில் குறிப்பிட்ட சிலர் மக்கள் போராட்டத்தில் முகிழ்த்த மக்களின் அபிலாசைகளை ஓரளவு பிரதி பலிக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தையும் பரப்புரைகளையும் மேற்கொள்கின்றனர்.
அனுர தலைமை தாங்கும் தேசிய மக்கள் சக்தி சமூக நீதி அரசியலை முன்னெடுப்பது மட்டுமல்லாமல் இனவாத அரசியலை நிராகரிக்கிறது. சஜித்தின் கட்சியானது 13 ம் திருத்தச்சட்ட த்தை முழுமையாக அமல்படுத்தும் என சொல்கிறது. ரனிலும் 13 திருத்த சட்டத்தை முழுமையாக அமல் படுத்தத் தயார் என்கிறார்.
இவ்வகையில் இத்தேர்தலில் தமிழ் மக்களின் பங்களிப்பானது தமிழர்களின் அரசியல் வாழ்வையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் என்பதை தமிழ்மக்கள் உணர்வர்.. பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது அரசியல் தற்கொலை என்பதையும் மக்கள் அறிவர்.
ஆனால் தமிழர் தரப்பினரில் ஒரு பகுதியினர் தமிழ்தேசிய பொதுக் கட்டமைப்பென்ற அமைப்பை உருவாக்கி ஜனாதிபதி வேட்பாளராக அரியநேத்திரனை நிறுத்தியுள்ளனர். தமிழர்கள் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழர்கள் மேலான இன அழிப்பை சர்வதேச கவனத்துக்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொள்ள சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்திற்கு அழுத்தம் கொடுத்தல். சர்வதேச விசாரணை கோரி சர்வதேசத்திற்கு அழைப்பு விடுத்தல். மற்றும் தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்க இந்தியா உட்பட சர்வதேசத்தை நோக்கி தமிழரது ஏகோபித்த குரலை வெளிப்படுத்தல் என்பவை இந்த முடிவின் அடிப்படையாக சொல்லப்படுகிறது.
ஐ நா மனித உரிமை ஆணைக்குழு இலங்கையில் இராணுவம் யுத்தக்குற்றம் புரிந்தது என ஏற்றுக்கொண்ட து . சர்வதேச மனி த உரிமைச்சங்கங்கள் தமிழ் மக்களுக்கு மேலானஅடக்கு முறைகளை தொடர்ந்து பதிவு செய்துவருகின்றன.
அத்துடன் 2009 காலகட்டத்திலிருந்து தொடர்ந்தும் ஐ நா மனித உரிமைக் கூட்ட தொடர்களுக்கு விஜயம் செய்வது, தீர்மானங்கள் நிறைவேற்றுவது, கோரிக்கைகள் விடுவது, கடிதங்கள் அனுப்புவது, வெளி நாட்டு தூதுவர்களை சந்திப்பது, மனுக் கொடுப்பது என பல நடவடிக்கைகள் இந்த பொது வேட்பாளரை நிறுத்திய கட்சிகளும், தமிழரசுக்கட்சியும் தனி நபர்களும் மேற்கொண்டனர்.
விக்னேஸ்வரன் தலைமையிலான வட மாகாண சபை தமிழருக்கு நிகழ்ந்தது இனப்படு கொலை என தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு மேலாக பொது வேட்பாளரை நிறுத்தி உலகுக்கு உணர்த்துவது என்ன என்பது சிதம்பர ரகசியம் போல் உள்ளது.
இவ்வகையில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி இன அழிப்பை உலகுக்கு அறிவிப்போம்; தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை முன்னெடுப்போம் என்பது வெறும் கேலிக்கூத்து மட்டுமல்ல, தமிழ் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையுமாகும்.
சரி தவறுகளுக்கப்பால் தமிழரசுக்கட்சி ஆரம்ப காலங்களிலிருந்து மக்களை திரட்டி அகிம்சைப் போராட்டங்களில் ஈடுபட்டது. அதன்பின் ஆயுத அமைப்புகளும் பல்வேறு தவறுகள் மத்தியிலும் ஒரு குறிக்கோளுடன் அரசியல் ராணுவ கட்டமைப்புகளை நிறுவினர். ஆனால் பொது வேட்பாளருக்கு வாக்களிக்கச் சொல்லும் கட்சிகளும் தலைவர்களும் வெறும் ஊடகப் பேச்சாளர்களாகவும் வெளி நாட்டுதூதர்களை சந்திப்பதில் மகிழ்பவர்களுமாக இருக்கின்றனர். அத்துடன் அதேகட்சிகள் அரசுடனும் எதிர்க்கட்சிகளுடனும் மறைமுக, நேரடி தொடர்புகளையும் பேணுகின்றனர். ஆனால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கான மக்கள் சார்ந்த அமைப்புகளை கட்டுவதற்கோ தொடர்ந்த அரசியல் போராட்ட முன்னெடுப்புகளை மேற்கொள்வதற்கோ இவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. தமிழ் தேசியத்தை வெற்றுக்கோசமாக முழங்கும் அரசியல் வேடதாரிகள் இவர்கள்.
தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் அங்கத்தவர்களான டெலோவில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் புளட்டில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் உள்ளனர். உண்மையில் இவர்கள், இலங்கை அரசுடன் பேசுவதில் பயனில்லை. சர்வதேச தலையீட்டால் தான் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு வரும் என உளப்பூர்வமாக நம்பினால், தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்து உலகுக்கு உணர்த்தலாம். தோற்றுப்போவார் எனத் தெரிந்தும் ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கி தோல்வியை உலகுக்கு காட்டுவதை விட வென்ற பதவிகளை தூக்கி எறிவதன் மூலம் தமிழர்களின் ஆதங்கத்தை உலகுக்கு உணர்த்துவதே சிறப்பு.. ஆனால் பாராளுமன்ற சொகுசுகளையும் அதனால் கிடைக்கும் பலன்களையும் விட்டுக்கொடுக்க இவர்கள் தயாரில்லை. மாறாக மக்களை ஏமாற்றி மண்குதிரையில் ஆற்றைக்கடக்க சொல்கின்றனர்.
இதேபோல் தமது இருப்பை மேற்குலகில் திடமாக்கி தமது பிள்ளைகளை மேல் நிலைக்கு கொண்டு சென்று விட்டு பொழுது போக்கு அரசியல் பேசும் வெளி நாட்டு தமிழர்களில் ஒரு பிரிவினர் பொது வேட்பாளரை கொண்டாடுகின்றனர். அதற்கான நிதியையும் நல்குகின்றனர். இவர்கள் தமது குடும்பம், உறவினர் அனைவரையும் வெளி நாடு அழைத்து நல் வாழ்க்கை வாழ்பவர்கள். விடுமுறைக்கு இலங்கை வந்து செல்பவர்கள். இவர்களுக்கு இலங்கையில் வாழும் தமிழர்களின் அரசியல் எதிர்காலம் பற்றி அக்கறை இல்லை. ஏனெனில் அவர்கள் இலங்கையின் அன்றாட வாழ்க்கை சிக்கல்களாலோ, இன ரீதியான அடக்குமுறைகளாலோ நேரடியாக பாதிக்கப்படுபவர்கள் அல்ல. இலங்கையில் வந்து இருக்கப்போவதும் இல்லை. தேசியம், சுயநிர்ணயம், தாயகம் என அர்த்தம் தெரியாமல் மந்திரம் உச்சரிப்பவர்கள். அதற்காக எல்லா வெளிநாடு வாழ் தமிழர்களையும் குற்றம் சாட்ட முடியாது. இலங்கையின் எதிர்காலம் பற்றிய அக்கறைகொண்ட பலரும் இருக்கின்றனர்.
இந்த ஊடக பேச்சு அரசியல் பிரமுகர்கள் புலம்பெயர் தமிழரில் ஒரு பகுதியுடன் சேர்ந்து ஆடும் அரசியல் நாடகமே பொது வேட்பாளர் தேர்வு.
தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது மிகஆபத்தான அரசியல் மட்டுமல்ல தமிழ் மக்களைஓரம் கட்டும் அரசியல். 2022 ஏப்பிரலில் எழுந்த மக்கள் போராட்ட த்தின் பின் இன வாத த்தை முன்வைத்து வாக்கு கேட்கும் தெற்கு அரசியலில் ஒருசிறிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. முதன்மை வேட்பாளர் எவரும் இனவாத அரசியலை முன்னெடுக்கவில்லை. ஏனெனில் மக்கள் போராட்டத் தில் ஒரு அம்சமாக இன ஐக்கியம் பேசப்பட்டது. முள்ளிவாய்க்கால் நினைவு அனுஸ்டிக்கப்பட்டது. இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இவ்வாறான மக்கள் எழுச்சியை கண்ட தில்லை, இவ்வாறான இன ஐக்கிய கோசங்களையும் கண்டதில்லை. இந்த மாற்றம் சிங்கள இனவாதிகளின் மத்தியில் விசனத்தையும் கவலையையும் ஏற்படுத்திவருகிறது. தமது அரசியல் இருப்புக்கு இந்தமாற்றம் ஆபத்தானது என அவர்கள் முனகுகின்றனர்.
இவ்வகையில் பொது வேட்பாளரின் தெரிவு சிங்களஇனவாதிகளுக்கு மகிழ்ச்சி தரும் விடயம். அவர்களுக்கு மெல்லுவதற்கு அவல் கிடைத்துவிட்டது . நாட்டை பிளவுபடுத்த சர்வதேச சதியுடன் பொது வேட்பாளர் இறங்கியுள்ளார் என பீதியை கிளப்ப இது வழி வகுத்துள்ளது. சர்வதேசம் ஒன்றும் செய்யாது என்பது சிங்கள இனவாதிகளுக்கும் தெரியும், பொது வேட்பாளரை நிறுத்திய கட்சிகளுக்கும் தெரியும். ஆனால் பிளவுவாத, இன வாத அரசியலை முன்னெடுக்க பொதுவேட்பாளர் உதவுவார்.
அத்துடன் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்து, அவர்களது தனித்துவமான பிரச்சனைகளை முன்வைத்து எந்தக்கட்சியும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை. எனவே தமிழ் பொது வேட்பாளரை தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கும் அடையாள வேட்பாளராக நிறுத்துகிறோம் என்று சொல்வதில் எந்த உண்மையும் கிடையாது.
ஐக்கிய சோசலிசக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சிறிதுங்க ஜயசூரிய தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிப்பவர்.
அதேபோன்று மக்கள் போராட்ட முன்னணி தனது அரசியல் விஞ்ஞாபனத்தில் தமிழர்களை தேசிய இனமாக அங்கீகரித்து சுயாட்சி முறையை பரித்துரைத்தது. அவர்களின் ஜனாதிபதி வேட்பாளராக நுவன் போபகே களமிறங்கியுள்ளார்.
தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதாக கூச்சலிடும் தமிழ் தேசியப்பொதுக் கட்டமைப்பு இந்த இரு வேட்பாளர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து தமிழ் மக்களை அவர்களுக்கு வாக்களிக்க சொல்லியிருக்க முடியும். அவர்கள் வெல்வதற்கான சாத்தியம் இல்லை எனினும் தமிழ்மக்களுக்கு ஆதரவான குரல்கள் தெற்கிலும் எதிரொலித்திருக்கும்.
ஆனால் இவர்களது உள் நோக்கம் தமது அரசியல் இருப்புக்காக சிங்கள பெரும்பான்மை வாதத்திற்கு பதிலாக தமிழ் குறும் தேசியவாதத்தை வளர்ப்பதும் எந்தவித திட்டமுமின்றி மக்களை உணர்ச்சி அரசியலில் சிக்கவைப்பதுமாகும்.
எனவே தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களித்து இந்த நாட்டை சீரழித்த இனவாதத்தை மேலும் வளர்க்க ஒத்தாசையாக இருப்பது தமிழரின்அரசியல் இருப்புக்கு ஆபத்தானது. மக்கள் போராட்டத்தால் உருவான மாற்றத்தில் பங்குகொள்வது தமிழ் மக்களுக்கான அவசியத் தேவை.
அத்துடன் இலங்கை வாழ் தமிழர்களின் அரசியல், பொருளாதார கலாசார வாழ்வு இலங்கையில் தான் தொடரப்போகிறது. வேற்றுக்கிரகத்தில் இல்லை. எனவே தமிழர்களின் அரசியல் உரிமைகளும் ஐக்கிய இலங்கைக்குள் தான் பெற முடியும். சர்வதேசம் வந்து விடுதலை செய்யும் என்பது பகற்கனவு. பாலஸ்தீன மக்கள் மேல் குண்டு மழைபொழியும் இஸ்ரேலை தமிழர் தரப்பு குறிப்பிடும் அமெரிக்கா, ஐரோப்பிய சர்வதேசம் பார்த்துக்கொண்டு அவர்களின் நடவடிக்கைளுக்கு ஆதரவு கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறது. இஸ்ரேலுக்கெதிரான ஐ நா பாதுகாப்பு சபை தீர்மானம், சர்வதேச குற்றவியல் நீதிமன்ற தீர்ப்பு, உலக நாடுகள் முழுவதும் பாலஸ்தீன மக்களுக்காதரவான மக்களின் பேரெழுச்சி இவை எதுவும் பாலஸ்தீனிய மக்கள் மேலானஇனப்படுகொலையை நிறுத்தவில்லை. அவ்வாறிருக்க தமிழர் பிரச்சனையை உலகுக்கு எடுத்து இயம்பவே பொது வேட்பாளர் நியமனம் என்பது வெற்று வேட்டு அரசியலும் மக்களை முட்டாளாக்கும் செயலுமாகும். அத்துடன் அரசியல் தற்கொலைக்கு மக்களை அழைக்கும் செயலுமாகும்.
மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என்பதைஇத்தேர்தலில் பொது வேட்பாளரை நிராகரிப்பதன் மூலம் மக்கள் உறுதி செய்வர்.