தமிழரசுக் கட்சியை பலவீனப்படுத்தும் தமிழ்ப் பொது வேட்பாளர்

தமிழரசுக் கட்சியை பலவீனப்படுத்தும் தமிழ்ப் பொது வேட்பாளர்

— எழுவான் வேலன் —

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தென்னிலங்கை அரசியல் பெரும் மாற்றங்களையும் திருப்பங்களையும் சந்தித்து வருவதை சாதாரண பத்திரிகை வாசகனால் விளங்கிக் கொள்ள முடியும். பழம் பெரும் அரசியல் கட்சிகள் இரண்டுமே தங்கள் கட்சியின் சார்பாக வலுவான ஒரு தலைவரை முன்னிறுத்த முடியாதளவுக்கு அரசியல் சூழல் மாற்றமுற்றிருக்கின்றது. இந்த மாற்றத்துக்கேற்ப ஒவ்வொருத்தரும் தங்கள் தங்கள் அரசியல் வியூகங்களை வகுத்துச் செயற்படுகின்றனர். அரசியல் வியூகம் எனும் போது கொள்கை சார்ந்த விடயங்கள் முக்கியம் பெறுகின்றன. இந்தக் கொள்கை சார்ந்தே வாக்குறுதிகள் நடைமுறைகள் என்பன அமைகின்றன.

பசுத்தோல் போர்த்திய சிங்கமாக இருந்த ஜே.வி.பி கூட இன்று தன்னை மாற்றிக் கொண்டு பயணிக்க முன்வந்திருக்கின்றது. சமூக, பொருளாதார, உலகப் போக்குக்கேற்ப மாறித்தான் ஆக வேண்டும் என்பதுதான் அரசியலாகும். இந்த மாற்றம் இலங்கையில் மட்டுமல்ல உலகம் முழுவதும் 1980களில் ஆரம்பித்து விட்டது என்பதை இந்தியா, சீனா, ரசியா போன்ற நாடுகளின் அரசியலை அறிந்தவர்களால் விளங்கிக் கொள்ள முடியும்.  

ஆனால் துரதிஸ்ட்டவசமாக தமிழர்களின் பாராளுமன்ற அரசியல் தடம் 47ம் ஆண்டிலிருந்து எவ்வித மாற்றமும் இன்றி அதே பாதையில் செல்வதை வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும்.

இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்தக்கான முதலாவது தேர்தல் 1947ம் ஆண்டே இடம்பெற்றது. பாராளுமன்றத்துக்கான 100 ஆசனங்களில் டி.எஸ்.சேனநாயக்கா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி 46 ஆசனங்களை வென்றது. 54 ஆசனங்கள் டி.எஸ்.சேனநாயக்காவுக்கு எதிராகவே இருந்தன.

டி.எஸ்.சேனநாயக்காவின் சமயோசித நடவடிக்கையினால் சுயேட்சை வேட்பாளர்களை தம்பக்கம் இழுத்து அரசாங்கத்தினை அமைத்துக்கொண்ட போதும் ஒரு நிட்சயமற்ற அரசாங்கமாகவே டி.எஸ்.சேனநாயக்காவின் அரசாங்கம் காணப்பட்டது.

டி.எஸ்.சேனநாயக்கா பிரதமரான பின்பு அவருடைய அரசாங்கத்தை தோற்கடித்து இடதுசாரிகளும் சிறுபான்மையினரும் சேர்ந்த அரசாங்கமொன்றை அமைக்கும் பொருட்டு ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களின் தலைமையில் கூடிய இடது சாரிக் கட்சிகளும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும், சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் சிலரும் பொதுக் கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் அரசாங்கத்தை அமைப்பது என்று முடிவு எடுத்திருந்த போதிலும் பொதுக் கொள்கைக்கான வேலைத்திட்டத்தை தயாரிப்பதில் எழுந்த முரண்பாடுகளை அடுத்து இம்முயற்சி பலனற்றுப் போய்விட்டது.  

சிறுபான்மையினரின் நலனுக்காக 50:50 கோரிக்கையில் விடாப்பிடியாக நின்ற ஜி.ஜி.பொன்னம்பலம் இடது சாரிகளால் முன்வைக்கப்பட்ட 60:40 என்ற முன்மொழிவையேனும் விட்டுக் கொடுப்போடு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அரசாங்கத்தை அமைத்திருக்கலாம் ஆனால் அச் சந்தர்ப்பத்தினைத் தவறவிட்டார்.  

திரு.அ.மகாதேவா ஜி.ஜி.யின் 50:50 கொள்கையுடன் முரண்பட்டு டி.எஸ்.சேனநாயக்காவுடன் சேர்ந்து உள்விவகார அமைச்சராக பதவி வகித்திருந்தார். மேற்படி 1947ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் டி.எஸ்சின் சகபாடியாக யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டபோது, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜி.ஜி. பின்வருமாறு உரையாற்றியிருந்தார். ‘மகாதேவா தமிழ் இனத்துக்குத் துரோகம் செய்து விட்டார். சோல்பரி அரசியல் திட்டம் தமிழ் மக்களுக்கு தீமையையே விளைவிக்கும். அத்தகைய அரசியல் அமைப்பை ஆதரித்து மகாதேவா வாக்களித்தார். அவரின் முடிவை தமிழ் மக்கள் நிராகரிக்கின்றனர் என்பதை பிரிட்டிஷ் அரசுக்கும் உலகுக்கும் காட்ட வேண்டும். எனவே நீங்கள் திரண்டு வந்து எனக்கு வாக்களித்து மகாதேவாவின் துரோகத்தை அம்பலப்படுத்த வேண்டும்.’ (மேற்கோள், த.சபாரெத்தினம்) அத்துடன் அவருடைய சகபாடிகள் ‘தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா’ எனும் இன உணர்ச்சியூட்டும் சுலோக அட்டைகளையும் விநியோகித்ததாக திரு.த.சபாரெத்தினம் குறிப்பிடுகின்றார்.

ஜி.ஜி.பொன்னம்பலத்துக்குக் கிடைத்த சந்தர்ப்பம் போன்றதொரு சந்தர்ப்பத்தை வரலாறு இம்முறையும் தழிழர்களுக்கு வழங்கியுள்ளது. மும்முனைப் போட்டி மிக வலுவாக இருக்கின்றது. எந்தவொரு வேட்பாளருமே அறுதிப் பெரும்பான்மையினைப் பெற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது அரசியல் ஆய்வாளர்கள் கூற வேண்டிய அவசியமில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் சில விட்டுக் கொடுப்புக்களைச் செய்து சிங்கள மக்களின் நம்பிக்கையினைப் பெற்று அவர்களின் ஆதரவோடு தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு நோக்கி நகர வேண்டுமேயொழிய தமிழர்களின் திரட்சி, உலகுக்குக் காட்டுவது என்பதும் அதையொட்டி பேசப்படுகின்ற தமிழ் இன உணர்ச்சியூட்டும் பேச்சுக்களும் ஜி.ஜி.பொன்னம்பலம்த்தின் தொடர்ச்சியாகத்தான் இருக்கிறது.

இந்த உலகுக்குக் காட்டுகின்ற சுத்துமாத்து அரசிலையும் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கின்ற அவர்களின் முன்மொழிவுகளையும் ஒவ்வொரு தேர்தல்களிலும் தமிழரசுக் கட்சியும் ஏனைய தமிழ்க் கட்சிகளும் செய்து வந்துள்ளதை அவர்களுடைய தேர்தல் விஞ்ஞாபனங்கள் எடுத்துக் காட்டும். ஆனால் அத்தேர்தல் விஞ்ஞாபனங்களில் கூறப்பட்டவற்றை நோக்கிய எந்த நகவர்வையும் அர்த்தமுள்ளவகையிலும் நடைமுறைச் சாத்தியமான வழியிலும் முன்னெடுத்தார்கள் இல்லை. ஆயினும் அனைத்துத் தேர்தல்களிலும் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் எல்லாச் சலுகைகளையும் அனுபவித்தவர்கள்தான்.

மிகச் சிறந்த எடுத்துக் காட்டு 2004ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட தமிழ்க் கூட்டமைப்பின் 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருக்கும் போதுதான் முள்ளிவாய்க்கால் யுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்தது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 22 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து ஒரு போராட்டத்தை நடாத்த முடியாமல் எப்படியாவது புலிகள் அழியட்டும் என்று வேடிக்கை பார்த்திருந்தார்கள். அன்று அந்த 22 பேரும் சேர்ந்து ஏன் உலகுக்கு ஒரு செய்தியைத் தெரிவித்து முள்ளிவாய்க்காலுக்கு அப்பால் ஒரு மக்கள் போராட்டத்தை (இன்று கதிரைகளுக்காகச் செய்கின்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை போன்றவை) செய்திருந்தால் அந்த யுத்தத்தில் அவ்வளவு பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்க வாய்பிருந்திருக்காது. இந்த 22 பேரில் ஒருவர்தான் இன்றைய பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் ஆகும்.

எனவே அந்த முள்ளிவாய்கால் யுத்தத்தில் மௌனமாயிருந்த அரியநேத்திரன்தான் இன்று உலகுக்குச் செய்தி சொல்ல வாக்குக் கேட்கின்றார். தமிழ் மக்களை ஒன்று திரட்ட முற்பட்ட ‘தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு’ தமிழரசுக்கட்சியையே சின்னாபின்னமாக்கியுள்ளது. மாவை ஒரு புறம், சிறிதரன் ஒரு புறம், சுமந்திரன் ஒரு புறம் என சிதறுண்டு கிடக்கின்றார்கள். இதற்கு அடிப்படைக் காரணம் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான பா. அரியநேத்திரன்.

பா. அரியநேத்திரன் இந்தப் பொதுவேட்பாளராக களம் இறங்குவதற்கான அவரின் தனிப்பட்ட அரசியல் தேவையை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சியில் சிறிநேசன், சாணக்கியன் போன்றவர்களுக்கு இருக்கும் செல்வாக்கு தனக்கு இல்லை என்பதும் கட்சிக்குள்ளும் அவர் ஒரு ஆளுமைமிக்கவராக இல்லாமல் அங்கும் ஒரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராகவும் சிறிநேசன் போன்றவர்களின் கருத்துகளுக்கு கை உயர்த்துபவராகவுமே இருந்து வந்திருக்கிறார். இது அவருக்கு தாழ்வுநிலை உளவியல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தன்னை மற்றவர்களை விட உயர்ந்த இடத்தில் வைத்துக் காட்டவும் மற்றவர்களின் பார்வை தன்னை நோக்கித் திரும்பவும் இந்தப் பொது வேட்பாளர் என்ற சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தியுள்ளார்.

எனவே ‘தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு’ என்ற ஒன்றை உருவாக்கியவர்களுக்கும் அதில் வேட்பாளராக நிற்பவருக்கும் ஒரு வலுவான அரசியல் அடையாளம் தேவைப்படுகிறது. அந்த அடையாளத்தை நோக்கிய பணயத்தின் முதற்படிதான் இந்தப் பொதுவேட்பாளரும் ஆகும். அடுத்த பொதுத் தேர்தலில் தமிழரசுக் கட்சிக்குப் போட்டியாக இந்த தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பே போட்டியிடலாம். அதற்கான வலுவான விளம்பரமே தமிழ்ப் பொது வேட்பாளராகும்.  

உலகில் தனது மக்களை இவ்வளவு தூரம் முட்டாளாக்கி அரசியல் செய்யும் தமிழ்க்; கட்சிகளை (தமிழரசுக் கட்சி உட்பட) எவரும் பார்த்திருக்க முடியாது. அது போல் தலைமைத்துவ ஒழுக்கம் இல்லாதவரை ஒரு ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியிருப்பதையும் பார்த்திருக்க முடியாது. இந்தச் சீர்கேடுகள் எல்லாம் தமிழ்த் தேசியத்தின் பெயரால் அரங்கேற்றப்படுகிறது.  

எனவே இந்த அரங்கேற்றத்தின் முட்டாள் பங்காளர்களாக தமிழ் மக்கள் இருக்க வேண்டும் என்றால் தயங்காமல் பொதுவேட்பாளருக்கு உங்கள் வாக்கையளித்து தமிழ் மக்கள் வரலாற்றில் இருந்து எதுவும் கற்றுக் கொள்ளாத முட்டாள்கள் என்பதை நிரூபியுங்கள்.