— அழகு குணசீலன் —
ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த்தேசிய பொதுக்கூட்டமைப்பால் தமிழ் வேட்பாளராக பாக்கியசெல்வம் அரியநேந்திரன் களமிறக்கப்பட்டுள்ளார். சிறிதரன் பொதுவேட்பாளரை ஆதரிக்கிறார். தமிழரசுக்கட்சியின் சுமந்திரன் அணி அதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் வேட்பாளர் சஜீத் பிரேமதாசவை ஆதரிக்க தீர்மானித்திருக்கிறது. மாவை சேனாதிராஜா ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கிறார். கோப்பிசம் இல்லாத வீட்டுக்குள் நடக்கின்ற இந்த குத்துச்சண்டை தமிழ் பரப்பில் ரணில் விக்கிரமசிங்கவிற்கான ஆதரவு தளத்தை அதிகரித்திருக்கிறது.
தமிழரசுக்கட்சி இப்போது தமிழர் அழிப்புக்கட்சியாகி இன்னும் மூன்று வருடங்களில். 40 ஆண்டுகளை தொடுகிறது. இந்திய -இலங்கை சமாதான உடன்பாட்டை புலிகளுக்கு பயந்து சாக்கு போக்கு சொல்லி நிராகரித்தது இதன் ஆரம்பம். தமிழரசுக்கட்சியின் தலைமைகளை வேட்டையாடிய புலி பின்னர் சில ‘ஆமாசாமிகளை ‘ விட்டு வைத்ததிருந்தது. இதனூடாக தமிழரசுக்கட்சி முள்ளிவாய்க்கால் அழிவுகளுக்கு- தவறான தலைமைத்துவம், தவறான முடிவுகளினூடாக அரசியல் பங்களிப்பு செய்ததால் அதுவும் பொறுப்புக்கூற வேண்டும். பொறுப்பை மற்றவர்களிடம் கோருவதை விடவும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளல் நேர்மையான அரசியல் நியதி. சம்பந்தர் காலத்திலே கோப்பிசம் இருந்தும், இல்லாமல் இருந்த வீட்டுக்கட்சியின் வீடு இப்போது விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. அதுவும் முழு வீடாக இல்லை. மூன்று, நான்காகப் பிரித்து விற்கப்போகிறார்கள்.
விற்பனையாளர்கள் யாரும் வெளி ஆட்கள் இல்லை. எல்லோரும் ஒன்றுக்குள் ஒன்றுதான். பழைய தலைவர், புதிய தலைவர்,தோற்ற தலைவர், பொதுவேட்பாளர் இவர்கள் தான் ஆட்கள். சிறிதரன் பொதுவேட்பாளருக்கு விற்கிறார் காசு டயஸ்போரா கொடுக்கிறது. சுமந்திரன் சஜீத்துக்கும், மாவை ரணிலுக்கும் விற்கிறார்கள். எல்லாப் பேச்சுக்களும் கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம் என்று அலைந்து பேசி முடிவாகி விட்டது. கட்சியை விற்றாச்சி – வீட்டை விற்றாச்சி இவற்றின் வழி மக்களும் விலை பேசப்படுகிறார்கள்.
தமிழரசுக்கட்சி, தமிழ்த்தேசிய பொதுக்கூட்டமைப்பின் முடிவுக்கு உடன்பாடாக பொதுவேட்பாளரை ஆதரிக்க முடிவு செய்திருந்தால் அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் தவிர்ந்த மற்றைய தமிழ்த்தேசிய கட்சிகளின் ஆதரவுடன் வடக்கு, கிழக்கில் கணிசமான வாக்குகளை பொது வேட்பாளர் பெறுவதற்கு வாய்ப்பு இருந்திருக்கும். இப்போது அந்தச் சூழல் முற்றாக மாறிவிட்டது. ஒரு வகையில் இவர்கள் அனைவரும் மறைமுகமாக ரணிலுக்கே விற்கிறார்கள். இவர்களின் நிலைப்பாட்டில் சஜீத்திற்கு அளிக்கப்படும் வாக்குகள் உண்மையில் பொது வேட்பாளருக்கு அளிக்கப்படவேண்டியவை. அல்லது பொது வேட்பாளருக்கு அளிக்கப்படுபவை சஜீத்துக்கு அளிக்கப்படவேண்டியவை. இந்த வாக்குபிரிப்பு இவர்கள் இருவரும் பெறும் வாக்குகளை பிரித்து/ குறைத்து ரணிலின் வாக்குகளை அதிகரிக்க வாய்ப்புள்ளது. யாழ்ப்பாணத்தவர் வழமையான வர்க்க நலன், ஏற்கனவே உள்ள யூ.என்.பி. ஆதரவு, மாவையின் ஆதரவு, விக்கினேஸ்வரனின் மறைமுக ஆதரவு, டக்ளஸ், அங்கயன், விஜயகலா தரப்பு ஆதரவுகள் கூட்டாக ரணிலின் வாக்குகளை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இன்னும் சொன்னால் தமிழரசுக்கட்சியின் சஜீத் ஆதரவு முடிவினால் ஏற்கனவே சுமந்திரன், சாணக்கியன் போன்றோர் மீது தமிழ்மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த அதிருப்தி மேலும் அதிகரித்துள்ளது. இது பொதுவேட்பாளர் பக்கம் தமிழ் மக்களை நகர்த்துவதாக அமைகிறது. பொது வேட்பாளருக்கான வாக்குகளை அதிகரிப்பதானது மறுபக்கத்தில் சஜீத்பிரேமதாசவின் வாக்குகளை குறைப்பதாக அமையும். எதிர் வேட்பாளரான சஜீத் பிரேமதாசாவின் வாக்குகளில் ஏற்படுகின்ற வீழ்ச்சி ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குகளை உயர்த்துவதாக அமையும். இதன் அர்த்தம் ரணில் அதிக வாக்குகளை பெறுவார் என்பதை விடவும் தனது நேரடி எதிர்தரப்பு வேட்பாளரின் வாக்குகள் வடக்கு கிழக்கில் சிதைக்கப்படுவதன்- பிரிக்கப்படுவதன் மூலம் அவர் நன்மையடைகிறார்.
மற்றைய இரண்டு வேட்பாளர்களான அநுரகுமார திசாநாயக்க, மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளை சிறு கையளவே பெறமுடியும். இதில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் நோக்கோடு போட்டியிடாத நாமல் ராஜபக்சவுக்கு ராஜபக்சே குடும்பத்தின் யுத்தக்கறை இன்னும் களையப்படவில்லை. அநுரகுமாரவைப் பொறுத்த மட்டில் ஜே.வி.பி.யின் ஆயுத, பாராளுமன்ற அரசியல் வரலாறு எப்போதும் சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிரான வரலாறாகவே இன்னும் இருக்கிறது. இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளில் ஜே.வி.பி.யின் எதிர்நிலை அதன் மீதான நம்பிக்கையை தமிழ்மக்கள் மத்தியில் இழக்கச் செய்துள்ளது.
இந்த ஆத்திரத்தின் வெளிப்பாடே அண்மையில் அநுரகுமார யாழ்ப்பாணத்தில் தமிழ்மக்களுக்கு விடுத்த அச்சுறுத்தல். அவரின் வார்த்தைகளை இலகுவான தமிழ் நடையில் மொழிபெயர்ப்பு செய்தால்
” நீங்கள் எனக்கு வாக்களிக்கவில்லை என்றால் தென்பகுதி சிங்கள மக்கள் உங்கள் மீது கோபம் அடைவார்கள்”. இந்த கோபத்தின் அர்த்தம் என்ன? தென்னிலங்கையில் ஒன்றுக்கு பலமுறை தமிழர்கள் மீதான வன்முறைக்கு ஜே.வி.பி. பின்னணியில் இருந்திருக்கிறது. இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு குறுக்கே நின்றிருக்கிறது. இப்போது தமிழர் வீட்டு வாசலில் வந்து நின்று எச்சரிக்கை செய்கிறது.
சக வேட்பாளர்கள் “வெற்று காசோலையை தருகிறார்கள் ” என்று சொல்லும் அநுரகுமார திசாநாயக்க அவர் எழுதப்பட்ட காசோலை ஒன்றை ஏன் இன்னும் தமிழ்மக்களுக்கு தரவில்லை. அதற்கும் மேலாக அவரின் எச்சரிக்கை வார்த்தைகள் சிங்கள பௌத்த மேலாதிக்க இனவாதத்தின் உச்சமாக உள்ளது. அவரின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் தொலைக்காட்சி கலந்துரையாடலில் இனப்பிரச்சினையை விடவும் நாட்டின் வேறு பிரச்சினைகள் முக்கியமானவை என்கிறார். இவ்வாறான நிலைப்பாடுகள் அநுரகுமார மீதான நம்பிக்கையை தமிழ் மக்கள் மத்தியில் மேலும் இழக்கச்செய்கின்றன.
சுமந்திரனின் சஜீத் பிரேமதாசாவை ஆதரிக்கும் முடிவு, அநுரகுமார கூறுகின்ற அந்த “வெற்று காசோலைக்கான” ஆதரவு தான். சுமந்திரனின் மாகாணசபைகள் தொடர்பான தனிநபர் பிரேரணை சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் அவசரப்பட்டு , தமிழரசுக்கட்சி சஜீத் ஆதரவு முடிவை எடுக்க வேண்டிய தேவை என்ன? கோப்பிசம் இல்லாத வீட்டில் இவை போன்ற விடயங்களையே எதிர்பார்க்க முடியும்.
இதில் பல விடயங்களை பேசவேண்டி உள்ளது. பாராளுமன்றத்தில் சுமந்திரன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏமாற்றி விட்டார் என்று கர்ச்சிக்கிறார். ஆனால் அடுத்த நாள் ஜனாதிபதியின் விசேட நிதி ஒதுக்கீட்டில் 10 கோடி சுமந்திரன் எம்.பி.யின் அபிவிருத்தி திட்டங்களுக்காக யாழ்.கச்சேரிக்கு வழங்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே சாணக்கியனுக்கு வழங்கப்பட்டபோது சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட 5 கோடிக்கும் மேலதிகமாக வழங்கப்பட்டது.
என்ன பிரச்சினை என்றால் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் முடிவை எடுத்தால் முதலில் இந்தியாவை பகைக்க வேண்டிவரும். அதே வேளை கடந்த இரண்டு வருடங்களாக ரணில் ராஜபக்ச என்று தானும், சகாவும் பேசிய விடயங்கள் வெறும் பொய்யாகிவிடும். மற்றும் வடக்கில் டக்ளஸ் தேவானந்தா, அங்கயன், விஜயகலா மகேஸ்வரன் கிழக்கில் சிவநேசதுரை சந்திரகாந்தன், வியாளேந்திரன், மற்றும் முஸ்லீம் காங்கிரஸில் இருந்து பிரிந்த அரசியல்வாதிகளின் நிலைப்பாடு தான் தமிழரசுக்கட்சியின் நிலைப்பாடும் என்றாகிவிடும். அப்படி ஒரு நிலையில் தாங்கள் இவர்கள் மீது வைத்த விமர்சனங்களை நியாயப்படுத்த முடியாது. இதற்காகவே இந்த சுத்துமாத்து.
அடுத்தது அவசரப்பட்டு முடிவு எடுக்கப்பட்டதற்கான இன்னொரு காரணமும் உண்டு. மாகாணசபைகள் சட்டம் பாராளுமன்றத்தில் தற்போதைய நிலையில் விவாதிக்கப்பட்டால் ஜனாதிபதி வேட்பாளர்களை நிறுத்தியுள்ள முக்கிய கட்சிகள் எதுவும் அதனை எதிர்க்க வாய்ப்பில்லை. அது நடந்தால் தன்னிச்சையாக சஜீத்தை மட்டும் ஆதரிக்கும் முடிவை எடுப்பது கஷ்டம் அல்லது எடுக்க முடியாது. அப்போது இருக்கின்ற ஒரே வழி தமிழ்மக்களை சுயவிருப்பில் சுதந்திரமாக வாக்களிக்க கோருவது தான். ஏனெனில் எல்லாக்கட்சிகளுமே மாகாணசபை சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்கியவையாக இருக்கும் நிலையில் ஒரு கட்சியை எப்படி ஆதரிப்பது? இதற்காகத்தான் அவசரப்பட்டு சட்டம் கொண்டு வரப்படுவதற்கு முன்னர் சஜீத் ஆதரவு நிலைப்பாட்டை சுமந்திரன் அறிவித்தார்.
உண்மையில் மாவை சேனாதிராஜா, விநோதகரலிங்கம், குகதாசன், சாணக்கியன், கலையரசன் எல்லோரும் ரணில் விக்கிரமசிங்கவையே ஆதரிக்கிறார்கள். இவர்களின் ஆதரவாளர்கள் அமைதியாக ரணிலுக்கு வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளே செய்யப்படுகின்றன. இல்லை என்றால் இவர்கள் வடக்கு கிழக்கில் சஜீத் பிரேமதாசாவின் மேடைகளில் ஏறி பகிரங்கமாக தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டும். இது சுமந்திரன் சவால் விட்டது போல் பொதுவேட்பாளரை தோற்கடித்து காட்டுவதற்கும் ஒரு அருமையான வாய்ப்பு. இதற்கு சுமந்திரனும், சாணக்கியனும் தயாரா? இல்லையென்றால் மேடையில்லாத ஆதரவை இவர்கள் இருவரும் ரணிலுக்கு “உள்ளாள்” வழங்குகிறார்கள்.
இன்னும் ஒரு வேடிக்கையான விடயம் சஜீத்தை ஆதரிக்க முடிவு எடுத்து ஒரு வாரம் கடந்து விட்டது. இப்போது வவுனியாவில் ஜீ.எல்.பீரிஸை சந்தித்து தீர்வுக்கான பேச்சு வார்த்தை நடந்திருக்கிறது. இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியலில் இதுவும் ஒரு கேலிக்கூத்து. கோப்பிசம் கழன்றதன் உண்மே நிலை. அவர்களின் வார்த்தைகளில் பலம் கொண்ட ஒரு பழம்பெரும் கட்சி முதலில் முடிவை எடுத்து விட்டு பின்னர் பேச்சு வார்த்தை செய்கிறது என்றால் இது என்ன அரசியல் பம்மாத்து? யாரை ஆதரிப்பது என்பதை அவசரப்பட்டு அறிவிக்கக் தேவையில்லை என்று இதுவரை சுமந்திரன் கூறிவந்த வேத வாக்கின் உண்மை என்ன ? யாரோடு பேசுகிறார்கள் ? கடந்த காலங்களில் சந்திரிக்கா குமாரதுங்க முதல் கோத்தபாய ராஜபக்ச வரை ஜி.எல்.பீரிஸின் அரசியல் நேர்மை என்ன? இனப்பிரச்சினைக்கான தீர்வு நிலைப்பாட்டு உறுதி என்ன?
இவ்வாறு ஒட்டு மொத்தமாக தமிழ்தேசிய பொதுக் கூட்டமைப்பின் அமைப்புக்கள் பொது வேட்பாளரை ஒரு நோக்கிலும், கூட்டமைப்பிலும், அதற்கு வெளியிலும் உள்ள தமிழ்த்தேசிய கட்சிகளும், அவர்களின் எம்.பிக்களும் இன்னொரு நோக்கத்திலும் இந்த தேர்தல் சூழலை பயன்படுத்துகின்றனர்.
ஒட்டு மொத்தத்தில் தமிழ் பொதுவேட்பாளர் அதன் அரசியல் பெறுமதியை அர்த்தத்தை இழந்து வருகிறார். இது அவர் பெறப்போகும் வாக்குகளின் எண்ணிக்கையினால் தீர்மானிக்கப்படுவதல்ல. ஒட்டு மொத்த தமிழர்களின் ஐக்கியத்தின் வெளிப்பாட்டால் நிர்ணயிக்கப்படுவது. தமிழ் பொது வேட்பாளர் இங்கு தமிழ்ச் சமூகத்தையே கூறுபோட்டு நிற்கிறார். தமிழ்த்தேசிய ஊடகவியலாளர்கள் வசனத்திற்கு வசனம் பேசியும், எழுதியும் வரும் “திரட்சி” இங்கு திரைந்து போகிறது.
சிவசேனா மறவன்புலவு சச்சுதானந்தன் சைவத்தமிழர்கள் சங்குக்கு வாக்களிக்க கோருகிறார். அவரைப் பொறுத்தமட்டில் கிறிஸ்தவ தமிழர்கள் தமிழர்களே அல்ல.
பொது வேட்பாளரை கொழும்பு கொண்டு வரவேண்டாம் என்று மன்றாடுகிறார் மனோ கணேசன். அவரின் கவலை எல்லாம் கொழும்பில் உள்ள யாழ்ப்பாணதமிழர்களின் வாக்குகள் சஜீத்பிரேமதாசவுக்கு கிடைக்காமல் போய்விடும் என்பதும். அடுத்த பாராளுமன்ற தேர்தலில் அது தன்னையும் பாதிக்கும் என்பதுதான்.
மலையக தமிழ் வேட்பாளர் திலகராஜ் அரியநேந்திரன் தமிழ்பொது வேட்பாளர் அல்ல. வேண்டுமானால் தமிழ்த்தேசிய வேட்பாளர் என பெயரை மாற்றுங்கள் என்று கோருகிறார்.
இப்போது சொல்லுங்கள் ……!
தமிழரசுக்கட்சியா…? தமிழர் அழிப்புக்கட்சியா…?
கோப்பிசம் இல்லாத வீடா? இல்லையா…..?