— அழகு குணசீலன் —
“நான் பிறந்த கிராமத்தின் பெயர் இலுப்பங்கேணி. இலங்கை வரைபடத்தில் இப்போது அது மடுப்பகம எனக் குறிப்பிடப்படுகிறது. என் அழகிய கிராமம் பட்டிப்பளை ஆற்றின் கரையிலிருக்கிறது. எங்கள் கிராமத்து தமிழ்மக்கள் அதை “களியோடை ஆறு” என்பார்கள். ஆறும் தனது பெயரை மறந்து விட்டது. இந்த ஆற்றின் பெயர் இப்போது கல்லோயா எனச் சிங்களத்தில் ஆகிவிட்டது. எனக்கு ஒன்றரை வயதாயிருக்கும்போது 400 தமிழ்மக்கள் ஊர்காவல்படையால் வெட்டிக்கொல்லப்பட்ட வீரமுனை பிள்ளையார் கோயில் என்னுடைய கிராமத்தில் இருந்து 15 கிமீ தூரத்தில் தான் உள்ளது. அந்த ஊர்காவல்படையின் தலைவன் முகம்மது ரியால் பின்னொரு நாளில் விடுதலைப்புலிகளின் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டான். அப்போது எனக்கு ஏழு வயதிருக்கும்………”
அன்றைய மட்டக்களப்பின் -நாடுகாட்டின் மண்வளத்தின் இயற்கையை ‘இச்சா’ நாவல் இப்படி பேசுகிறது. நாவலாசிரியர் கதைசொல்லி சோபா சக்தியின் அருமையான வார்த்தைகள் இவை. இதுதான் வீரமுனையின் இன்றைய துயரின் தொடர்ச்சி. இந்த துயரத்தின், துன்பத்தின் கசப்பான நினைவுகளோடு வீரமுனை இன்னும் வாழ்வதற்கு போராடிக் கொண்டிருக்கிறது. அதன் எதிர்காலம் என்னவாகும் என்பதையும் சோபாசக்தியின் வார்த்தைகள் எமக்கு ஓரளவுக்கு உள்ளூர உணர்த்துகின்றன.
1990 யூன்.20 ம் திகதிக்கும் ஆகஸ்ட் 15ம் தித்திக்கும் இடைப்பட்ட இரண்டு மாத காலத்திற்கு வீரமுனையிலும், சுற்றுச் சூழலிலும் மனிதப் படுகொலைகள் நடந்த வரலாறு இது. இது குறித்த அரங்கத்தின் வீடியோ ஆவணப்படம் ஒன்றும் யூடியூப்பில் இருக்கிறது. வீரமுனையில் மட்டுமா ….? சம்மாந்துறை, மல்லிகைத்தீவு, வளத்தாப்பிட்டி, கணபதிபுரம், மல்வத்தை……. இப்படி எத்தனை ஊர்கள்? எவ்வளவு இழப்புக்கள்…?
கொண்டைவெட்டுவான், காரைதீவு,சவளக்கடை , சென்ரல்காம் இராணுவ முகாம்களில் இருந்து வந்த முஸ்லீம், சிங்கள ஊர்காவல் படையினர் இந்த படுகொலைகளை செய்தார்கள். இருமாதத்திற்கும் மேலாக தொடர்ந்த இந்த அனர்த்தத்தில் இருந்து தப்பிப் பிழைத்தவர்களை பாதுகாக்க வேறுவழியின்றி உள்ளூர் அரச அதிகாரிகள் பல கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள திருக்கோவில் தமிழ்க் கிராமத்தில் அகதிகளாக ஏற்றி இறக்கினார்கள். அங்கும் அகதிவாழ்வு இரண்டு ஆண்டுகளையும் தாண்டியிருந்தது. அப்போது தான் அது நடந்தது.
இலங்கை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா ஒரு அரசியல் சூறாவளியில் சிக்கியிருந்தார். இவர் இன்றைய ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவின் தகப்பனார். அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்பட்டது 1989 பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழர் பிரதிநிதியாக தேர்வுசெய்யப்பட்டவர் திவ்வியநாதன். தமிழர் விடுதலைக்கூட்டணி பட்டியலில் ரெலோ சார்பில் போட்டியிட்டவர். திவ்வியநாதன் ஒரு பட்டதாரி ஆசிரியர். மட்டக்களப்பில் ரெலோ சார்பில் தமிழர் விடுதலைக் கூட்டணி பட்டியலில் தெரிவு செய்யப்பட்டவர் (ஜனா) கோவிந்தன் கருணாகரன். இவர் மட்டக்களப்பின் அன்றைய ரெலோ பொறுப்பாளர்.
ஜனாதிபதி பிரேமதாச மீதான பிரதான குற்றச்சாட்டு விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கினார் என்பதும், அந்த ஆயுதங்களை கொண்டு புலிகள் இலங்கை படைமுகாம்கள், பொலிஸ் நிலையங்களை தாக்கியழித்தார்கள் என்பதுமாகும். இந்த நிலையில் தங்களையும் இது அம்பலப்படுத்தும் என்று கருதிய புலிகள் அப்போது பதவியை இராஜினாமா செய்திருந்த 13 ஈரோஸ் பாராளுமன்ற உறுப்பினர்களின் இடங்களுக்கு எம்.பி.க்களை மீண்டும் நியமித்து ஜனாதிபதி பிரேமதாசவை காப்பாற்ற நினைத்தனர். இதற்கான பேச்சு வார்த்தைகளுக்காகவும் , தேவையானவற்றை செய்வதற்காகவும் யாழ் மாவட்ட முன்னாள் ஈரோஸ் பாராளுமன்ற உறுப்பினர் எட்வர்ட் செபஸ்தியான் பிள்ளை செஞ்சிலுவைச்சங்க கப்பலில் கொழும்புக்கு அனுப்பப்பட்டார். அப்போது பிரேமதாசவும், பிரபாகரனும் ‘லொக்கு அய்யா – பொடி மல்லி ‘ உறவு கொண்டாடிய காலம்.
புலிகளின் உதவியுடன் பிரேமதாச நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பது பல உண்மைகளை வெளிக்கொணரும் என்பதாலும், சிங்கள மக்கள் மத்தியில் பிரேமதாசவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்பதாலும் அந்த முயற்சியை அரசாங்கம் தவிர்த்து கொண்டது. மாற்று வழியில் கொழும்பு அரசியல் சூழல் மாற்றத்தை பயன்படுத்தியது. இந்த ஆயுத விநியோகம், நிதிக்கொடுப்பனவு போன்ற பிரேமதாசவுடனான டீல்களை, தடயங்களை அழிப்பதற்காகவே புலிகள் பிரேமதாசவை கொலை செய்தனர் என்று கூறப்படுகிறது.
1990களின் ஆரம்பத்தில் ஜனாதிபதி பிரேமதாசவின் அமைச்சரவையில் வர்த்தக கப்பல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் கல்முனை ஏ.ஆர்.எம்.மன்சூர். முஸ்லீம் காங்கிரஸ் அரசியலை நிராகரித்தவர். தமிழ் -முஸ்லீம் சமூக உறவில் அக்கறை கொண்டவர். அமைச்சர் மன்சூர் ஊடாக ஏற்கனவே திவ்வியநாதன் எம்.பி.க்கு அரசதரப்புடன் நல்ல தொடர்பு இருந்தது. அவர் புலிகளின் குறியில் இருந்து தப்புவதற்காக அரசாங்க -புலி உறவை ஆதரித்தார். ஒருவகையில் இந்திய எதிர்ப்பு பிரேமதாச அரச நிலைப்பாட்டை கொண்டிருந்தார். இதனால் நம்பிக்கை இல்லாப்பிரேரணைக்கு ஜனாவின் ஆதரவும் அமைசர் மன்சூர் ஊடாக கோரப்பட்டது. அதற்கு கைமாறாக வீரமுனை அகதிகளை மீள்குடியேற்றம் செய்வதற்கு பிரேமதாச இணங்கினார். இந்த நிலைப்பாடு புலிகளின் குறியில் இருந்து ஜனா தப்புவதற்கும் ஒரு காரணமாக அமைந்தது.
ஜனாவின் வீரமுனை மீள் குடியேற்றம் அரசியலில் இலாபங்களுக்காக மீண்டும் மீண்டும் பேசப்படுவது போன்று ஒரு சாமானிய மனிதன் வீரமுனை மக்களை மீள்குடியேற்றம் செய்த விட்டம் பேசப்படவில்லை. ஏனெனில் அது அரசியல் அன்றி மனிதநேயத்துடன் செய்யப்பட்ட ஒன்று. அதுதான் மட்டக்களப்பு நகரிலும், புறநகர்ப்பகுதியிலும் அங்கும், இங்கும் சிதறிக்கிடந்த ஆதரவற்ற வீரமுனை அகதிகளை மட்டக்களப்பு திருப்பெருந்துறையில் குடியேற்றிய வரலாறு. அந்த வரலாற்றின் சொந்தக்காரன் யார்?
ஆனந்தன்….!
மட்டக்களப்பின் கலை, இலக்கிய முயற்சிகளில் தவிர்த்து செல்லமுடியாத ஒரு கவிஞர். கலை இலக்கிய படைப்பாளி. அழகியலுக்கு அப்பால் கலை இலக்கியங்களை மக்கள் கலை இலக்கியங்களாக பார்த்தவர். மட்டக்களப்பு வாசகர் வட்டத்தின் முன்னோடிகளுள் ஒருவர். தலைசிறந்த விமர்சகன், தமிழ் இலக்கிய திறனாய்வாளன். ஆனந்தனுக்கு கேரள, மேற்குவங்க மாற்று சினிமா தண்ணி பட்டபாடு. விமர்சனம் என்றுவந்தால் அவற்றை புரட்டிப்போடும் விமர்சன ஆளுமையாளன். யாருக்கும் சால்வைபோடாத, தனிநபர் துதி பாடாத ஈவிரக்கமற்ற கறாரான விமர்சகன்.
மட்டக்களப்பு பிரதேசத்தின் பல்வேறு கலை, இலக்கிய வெளியீடுகளுக்கும், படைப்புக்களுக்கும் ஊக்கமும், ஆக்கமும் கொடுத்தவர். கல்முனையில் ‘வியூகம் ‘ சஞ்சிகை குழுவின் ஆரம்பகர்த்தாக்களுள் ஒருவர். தமிழ் -முஸ்லீம் இனமத இணக்க நல்லுறவில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்ட சமூகவியலாளன். இன்றைய மட்டக்களப்பிற்கும் பண்டைய மட்டக்களப்பிற்கும் ( சம்மான் துறை) பாலமாக இருந்து , எந்த வன்முறைகளைப்பற்றி பேசுகின்றோமோ அந்த வன்முறையினால் காவு கொள்ளப்பட்டவன்.
அன்றொருநாள் ஆனந்தனுக்கு ஒரு கடிதம் வந்தது. சம்மாந்துறை தபால் நிலையத்தில் வேலை செய்தவனுக்கு வந்த தபால் அது. கடிதத்தை பிரித்து படிப்பதற்கு முன்னரே அந்த உறை அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப்பிடம் இருந்து வந்து இருக்கிறேன் என்று சொன்னது. கவிஞரும், கலை இலக்கிய ஆர்வலருமான அமைச்சர் அஷ்ரப் ஆனந்தனை நன்கு அறிந்திருந்தார். இதனால் குசேலம் விசாரிக்கும் வழமையான பாணியில் எழுதியிருந்தாலும், “நீங்கள் இது வரை என்னிடம் எந்த உதவியும் கேட்கவில்லை. என்ன உதவியென்றாலும் கேளுங்கள் …… தொடர்பில் இருப்போம்” என்று முடிந்தது அந்தக்கடிதம்.
ஆனந்தனுக்கு அரசியல் என்றால் அது வர்க்க அரசியல்தான். அமைச்சரின் கடிதத்தை படித்து விட்டு , அப்படியே தூக்கி கிடப்பில் போட்டுவிட்டார். இனி நடந்தது என்ன……..?
இன்னும் வரும்….!