— வி. சிவலிங்கம் —
கேள்வி:
நாட்டின் தற்போதைய அரசியல், பொருளாதார, சமூக நிலமைகளை அவதானிக்கும்போது இத் தேர்தல் என்பது பல சிக்கலான நிலமைகளைத் தோற்றுவிக்கும் அறிகுறிகள் தென்படுகின்றன. உங்கள் அவதானிப்பு என்ன?
பதில்:
மிகவும் அச்சமான சூழல் உண்டு என்பதை அவதானிக்க முடிகிறது. உதாரணமாக இலங்கை கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக இரண்டு கட்சி ஆட்சிமுறைக்குள் வளர்ந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் மிகவும் பலம்வாய்ந்த சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் தன்னை இராணுவத்துடன் இணைத்துள்ளது. அதாவது பலமான பரஸ்பர நலன்களைப் பாதுகாக்கும் ஒரு தரப்பு வளர்ந்துள்ளது. இத் தரப்பினர் நாட்டின் பொருளாதாரத்தின் கணிசமான பிரிவை தமது ஆதிக்கத்திற்குள் வைத்துள்ளனர். இவர்களே நாட்டின் அரசியல் அமைப்பினை அதிகாரக் குவிப்பை நோக்கி எடுத்துச் சென்றுள்ளதோடு, ஊழல், விரயம், குடும்ப ஆதிக்கம் என்ற ஜனநாயக விரோத நிலமைகளையும் ஏற்படுத்தியுள்ளனர். இதன் காரணமாகவே அவர்களால் குடும்ப ஆதிக்கத்தையும், தனிநபர் ஆதிக்கத்தையும் பலப்படுத்தும் விதத்தில் அரசியல் யாப்பு விதிகளை ஏற்ற விதத்தில் மாற்ற முடிந்துள்ளது. அத்துடன் ஒரே தரப்பினரே அதிகாரத்தைக் குவிக்கவும், சாத்தியப்படாத போது அதிகாரத்தைத் தளர்த்தவும் முடிந்துள்ளது.
தற்போதுள்ள நிலமைகள் இந்த அதிகார சக்திகளின் நீண்டகால நலன்களுக்கு அச்சுறுத்தலாகவே உள்ளது. தேர்தலை ஒத்திவைக்க இறுதி வரை முயற்சிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த பின்னரும் அம் முடிவுகள் வாய்ப்பான நிலமைகளைத் தோற்றுவிக்காவிடில் தேர்தல் முடிவுகள் ஒத்திவைக்கப்படுவதற்கான பல அடையாளங்கள், சமிக்ஞைகள் தென்படுகின்றன. இதற்கு உதாரணமாக பாகிஸ்தானில் தேர்தலின் பின்னர் இடம்பெற்ற சம்பவங்கள் உதாரணமாக அமைகின்றன. குறிப்பாக முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தேர்தலுக்கு முன்னரே சிறையிலடைக்கப்படுவதும், தேர்தல் முடிவடைந்ததும் முடிவுகளில் ராணுவம் தலையிட்டு மாற்றங்களை ஏற்படுத்தியதும் எம் முன்னுள்ள வரலாறுகள்.
கேள்வி:
இப் பதில் மிகவும் பாரதூரமான எச்சரிக்கைகளைத் தருவதாக உள்ளது. மேலும் விளக்க முடியுமா?
பதில்:
தற்போதைய தேர்தல் என்பது இரண்டு பிரதான அம்சங்களைச் சுற்றியதாக உள்ளது. அதாவது நாட்டின் பொருளாதாரம் என்பது சந்தை சார்ந்ததாகவும், சந்தை நடவடிக்கைகளில் அரசின் தலையீடு இருக்க முடியாது எனவும் கூறுகிறது. அதாவது அரசு என்பது வர்த்தகத்தில் ஈடுபட முடியாது. அதன் தலையீடு சுமுகமான சந்தைச் செயற்பாடுகளைப் பாதிக்கும் என்ற வாதமாகும். மறு சாரார் சந்தைச் செயற்பாடுகள் இலாபம் நோக்கியதாக இருக்கையில் அது மக்களின் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, குடும்ப மற்றும் உணவுப் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு என்பவற்றில் அக்கறை கொள்வதில்லை. ஆனால் ஆரோக்கியமான, கல்வித் தரமிக்க சமூகம் இல்லாவிடில் தனியார்துறை தமக்கான வேலையாட்களை எங்கிருந்து பெறுவது? தனது உற்பத்திகளை எங்கு சந்தைப்படுத்துவது? இச் சமூகம் பொருட்களை கொள்வனவு செய்யும் ஆற்றல் இல்லாதிருப்பின் சந்தைச் செயற்பாடு எவ்வாறு இலாபத்தில் இயங்கும்?
இவ்வாறான பல கேள்விகள் எழுகின்றன. கடந்த 75 ஆண்டுகளில் குறிப்பாக 1977ம் ஆண்டின் பின்னர் நாட்டின் அரசியல் சிங்கள பௌத்த ஆதிக்கத்தை நோக்கியும், பொருளாதாரம் என்பது பல விதங்களில் மிகவும் பாரதூரமான சமூக ஏற்றத்தாழ்வுகளையும் தந்துள்ளது. குறிப்பாக நாட்டின் செல்வத் திரட்சி சில குறிப்பிட்ட பிரிவினரின் ஆதிக்கத்திற்குள் சென்றுள்ளது. இதனால் நாட்டில் ஸ்திரமற்ற அரசுத் தோற்றம், சமூக முரண்பாடுகள் என பல பிரச்சனைகளுக்குக் களமாக அமைகின்றன.
கடந்த 40 வருடங்களுக்கு மேற்பட்ட திறந்த பொருளாதாரம் என்பது பொருளாதார ஆதிக்க நலன்களையுடைய பிரிவினரை அதிகாரத்திலும், முதலீட்டிலும் பலமாக வைத்துள்ளதால் தற்போது அவர்களுக்கு எதிரான சமூக இயக்கம் மறு பக்கத்தில் தோற்றம் பெற்றிருக்கிறது. ‘அறகலய’ என்ற பெயரில் மக்கள் இயக்கம் ஜனாதிபதியையே பதவியிலிருந்து துரத்தியிருக்கிறது. எனவே தற்போதைய தேர்தல் என்பது அதிகார வர்க்கத்திற்கும், சாமான்ய மக்களின் நலன்களுக்குமிடையேயான போட்டியாகவே உள்ளது.
இப் போட்டியில் அதிகார வர்க்கம் தோற்கடிக்கப்படுமானால் அவர்கள் இலகுவாக பதவிகளை கையளித்துச் செல்வார்கள் என்பதை நம்ப முடியவில்லை. எப்போதுமே எதிர்ப்புரட்சிக்கான நிலமைகள் தொடர்ந்து காணப்படுகின்றன. இந்த ஆபத்தை சில முக்கிய கட்சிகள் உணர்ந்த காரணத்தினால்தான் தமக்கு ஆதரவாக சில முன்னாள் ராணுவப் பிரிவுகளின் முக்கியஸ்தர்களையும் இணைத்தே செல்கின்றனர்.
எனவே தேர்தல் முடிவுகள் மிகவும் அச்சம் தரும் நிலமைகளைத் தோற்றுவிக்கும் ஆபத்துகளைக் கொண்டிருக்கின்றன.
கேள்வி:
எமது நாட்டின் பொதுவான அரசியல் நிலமைகளைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் எதிர்வரும் தேர்தலில் ஒரு வேட்பாளர் 50 சதவீதத்தை எட்டவில்லையெனில் அவருக்கான இரண்டாம், மூன்றாம் தெரிவுகளையும் கணக்கிட வேண்டி ஏற்படும் என தேர்தல் விதி கூறுகிறது. இது எவ் விதத்தில் ஜனநாயகமானது?
பதில்:
அவ்வாறான ஒரு நிலை ஏற்படின் இரண்டாம், மூன்றாம் தெரிவுகளையும் கணக்கிலெடுப்பது தெரிவு செய்யும் ஜனாதிபதியின் நியாயாதிக்கத்தைக் கேள்விக்குட்படுத்துகிறது. உதாரணமாக அவருக்கு எதிராக 50 சதவீதத்திற்கு அதிகமானோர் வாக்களித்திருப்பதாகவே கொள்ள வேண்டும். எனவே அவர் நாட்டின் பெரும்பான்மை மக்களின் முதன்மைத் தெரிவாக இருக்க முடியாது. எனவே அவர் தனது செயற்திட்டங்களை மேற்கொள்ளும்போது எதிர்க் கட்சிகளின் சம்மதத்தைக் கோரிச் செல்வதே ஜனநாயக அணுகுமுறையாக அமையும்.
கேள்வி:
தற்போது தமிழரசுக் கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான சஜீத் பிரேமதாஸவை ஆதரிக்க முடிவு செய்திருக்கிறது. இதன் சாதக, பாதக அம்சங்கள் எவ்வாறு அமையலாம்?
பதில்:
இம் முடிவை நோக்கிச் சென்றிருப்பது ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. ஆனால் இம் முடிவை மிக விரைவாகவே வெளிப்படுத்தியதற்குப் பல காரணங்கள் தெரிகிறது.
முதலில் உட்கட்சிக்குள்ளிருந்த முரண்பாடுகளின் காரணமாகவே இம் முடிவு தவிர்க்க முடியாமல் விரைவாக எடுக்கப்பட்டிருக்கிறது. வவுனியாவில் இடம்பெற்ற கூட்டம் தொடர்பான அறிவித்தல்கள், நிகழ்ச்சி நிரல் எற்கெனவே மத்திய குழு உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. இந் நிலையில்தான் மாவை தமக்கு சுகமில்லை. ஒன்றுமே தெரியாது எனக் கூறுவதும், சார்ள்ஸ் நிர்மலநாதன், சிறீதரன் ஆகியோர் லண்டன் சென்றிருப்பதும் தற்செயல் நிகழ்வுகளல்ல. கட்சிக்குள் மிகவும் காத்திரமான ஆதரவு சஜீத் இற்கு இருப்பது இவர்களுக்கு நன்கு தெரியும். ஒரு புறத்தில் தமிழ் பொது வேட்பாளர் என்ற கோரிக்கையை ஆதரித்து புலிகள் ஆதரவு சக்திகளைத் திருப்திப்படுத்துவதும், மறு பக்கத்தில் கட்சிக்குள் காணப்படும் முடிவுகளை ஆதரிப்பதும் பெரும் வில்லங்கமாகவே இவர்களுக்கு இருந்திருக்கும்.
சஜீத் பிரேமதாஸவை ஆதரிக்கும் முடிவு என்பது பல அம்சங்களில் தீர்க்கதரிசனமானது. உதாரணமாக, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பெருமளவில் சஜீத்திற்கு வாக்களித்திருந்தார்கள். இம் முறையும் அதற்கான ஆதரவு தற்போதும் உள்ளுர இருப்பது கண்கூடு.
நாடு தளுவிய அடிப்படையிலும் அவருக்கு ஆதரவு இருப்பதாகவே கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. அத்துடன் இந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலின் முடிவுகளைக் கணித்தே இம் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
பொதுத் தேர்தல் நடத்தப்படுமாயின் எக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாத நிலை ஏற்படும். இந் நிலையில் கூட்டு அரசாங்கம் ஒன்றினை அமைப்பதே மக்களின் தெரிவாக இருந்திருக்கிறது. அவ்வாறாயின் தற்போது ஊழல், விரயம், குடும்ப ஆதிக்கம் என்பவற்றிற்கு எதிரான சக்திகளாக ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி என்பனவே உள்ளன. இவர்கள் மத்தியில் கூட்டு ஒன்று உருவாவதற்கான சாத்தியங்களே அதிகம் உண்டு.
கேள்வி:
தற்போது எதிரும், புதிருமாக விமர்ச்சிப்பவர்கள் எந்த அடிப்படையில் இணைவதற்கான வாய்ப்புகள் உண்டு?
பதில்:
இந்த இரு தரப்பினரும் தத்தமது கட்சியின் ஆதரவுத் தளத்தை விஸ்தரிப்பதற்கான ஒரு போட்டியாகவே ஜனாதிபதித் தேர்தலை அவதானிக்க வேண்டும். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுபவரின் அரசியல் கட்சி பாராளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற வாய்ப்பு உண்டு. ஆனால் அறுதிப் பெரும்பான்மையை எட்டுவது மிகவும் கடினமானது. அது மட்டுமல்ல, யார் ஜனாதிபதியாக தெரிவானாலும், பொருளாதார நிலமைகள் இருப்பதை விட மிக மோசமான நிலமைகளை நோக்கிச் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டு. உதாரணமாக, 2027ம் ஆண்டு வரை கடன்களை மீளச் செலுத்துவது இடைநிறுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே ரணில் நாட்டில் பிரச்சனைகள் குறைந்திருப்பதாக கூறுகிறார். அடுத்த மூன்று வருட காலத்திற்குள் நாட்டின் பொருளாதார செயற்பாடுகளில் காத்திரமான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.
ரணிலின் கொள்கைப்படி முக்கியமான பொருளாதாரத் துறைகளைத் தனியாரின் கட்டுப்பாட்டிற்குள் விடவும், அதனடிப்படையில் வெளிநாட்டு மூலதனத்திற்கு மீண்டும் வாய்ப்பு ஏற்படுத்த அவர் முனைகிறார். ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி என்பன கட்டுப்பாடற்ற அந்நிய மூலதன ஊடுருவலே நாடு வங்குறோத்து நிலைக்குச் சென்றமைக்கான பிரதான காரணம் என்பதால் தேசிய மூலவளங்களைப் பாதுகாத்து திட்டமிட்ட அடிப்படையில் அரசு, தனியார் இணைந்து பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்தல் அவசியம் எனவும், இதில் அரசு மக்களின் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் பொதுச் சேவைகளைக் கண்காணித்தல் அவசியம் எனவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த அடிப்படையில் அவதானிக்கும்போது ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் ஒன்றினை உருவாக்குவதற்கான சாத்தியங்களே அதிகம் உண்டு. இவ்வாறான ஓர் அரசியல் பார்வையின் பின்னணியிலேயே தமிழரசுக் கட்சி இம் முடிவை மேற்கொண்டிருப்பதாக தெரிகிறது.
கேள்வி:
அவ்வாறாயின் தென்னிலங்கையில் தேசிய மக்கள் சக்திக்கு அதிக ஆதரவு இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கும் நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரிக்கும் முடிவு விவேகமானதா?
பதில்:
இம் முடிவு தமிழ் மக்களின் கடந்த கால அரசியல் முடிவுகள் அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தியை விட சஜீத் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி மேல் தமது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளதால் அந்த நம்பிக்கையை வலுப்படுத்துவது மேலும் நம்பிக்கையை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் என்ற தீர்மானமே அம் முடிவை நோக்கித் தள்ளியிருக்கலாம்.
இம் முடிவு என்பது கடந்த காலங்களில் வெறுமனே அரசாங்கத்தை ஆதரிப்பது, மந்திரிப் பொறுப்புகளைத் தவிர்த்தல், எதிர்க் கட்சியிலிருந்து ஆதரித்தல் என்ற நிலமைகள் எதிர்காலத்தில் இல்லை. ஓர் குறிப்பிட்ட அரசியல் கட்சியை அல்லது கூட்டணியை ஆதரிப்பது, மந்திரிப் பதவிகளைப் பெற்று நாட்டின் அபிவிருத்திகளில் பங்களிப்பது முக்கிய மாற்றங்களாக அமையலாம்.
கேள்வி:
தமிழரசுக் கட்சியின் இம் முடிவுகளுடன் தமிழ் பொதுவேட்பாளர் என்ற பெயரில் போட்டியிடும் அரியநேந்திரன் தொடர்பாகவும் மிகவும் கடுமையான முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கிறதே! இம் முடிவு எவ்வாறான செய்தியைத் தருகிறது?
பதில்:
சமீப காலமாக கட்சி தாவுதல். கட்சியின் முடிவுகளுக்கு மாறாக கருத்துக்களைப் பரிமாறுதல் எனப் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இவை ஜனநாயகம் என்று வேறு விளக்கங்களும் தரப்பட்டன. இவை கட்சித் தலைமையின் பலவீனத்தை அம்பலப்படுத்தியுள்ளதோடு, கட்சிகள் மேல் பலமான அவநம்பிக்கையை பொதுமக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.
குறிப்பாக, முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர்கள் பலர் கட்சி முடிவுகளுக்கு மாறாக செயற்பட்டனர். அதனால் அக் கட்சி பாரிய அளவில் பாதிக்கப்பட்டது. உதாரணமாக, முஸ்லீம்களின் ஜனாசாக்களை எரிக்கும்படி கோதபய அரசு உத்தரவிட்ட வேளையில் அக் கட்சியின் பலர் மௌனமாக இருந்து அம் முடிவுகளை ஆதரித்தனர். இது முஸ்லிம் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இவ்வாறான ஒர் பின்னணியில் கட்சியின் முடிவுகளுக்கு மாறாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நசீர் செயற்பட்ட வேளையில் அவரைக் கட்சியிலிருந்து நீக்கினர். இம் முடிவை உயர் நீதிமன்றம் உறுதி செய்ததோடு அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். ஜனநாயக அரசியல் விழுமியங்களுக்குச் சவாலாக உள்ள இம் மாதிரிக் கட்சிக்குக் கட்டுப்படாத நிலை ஜனநாயக அரசியலுக்குப் பெரும் ஆபத்தாகவே அமைந்தது.
உயர் நீதிமன்றத்தின் இத் தீர்ப்பு ஏனைய அரசியல் கட்சிகளிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த ஹரின் பெர்னான்டோ, மனுஷ நாணயக்கார என்போர் கட்சி முடிவுகளை மறுதலித்து ரணிலை ஆதரித்து மந்திரிப் பதவிகளைப் பெற்றனர். இந்த முடிவுகளுக்கு எதிராக கட்சி நீதிமன்றம் சென்று இன்று அவர்கள் பதவிகளை இழந்து போக்கிடமில்லாமல் உள்ளனர்.
இதே நிலமைகளே தமிழரசுக் கட்சிக்குள்ளும் மிக அதிகளவில் காணப்பட்டது. கட்சிக் கட்டுப்பாடுகள் மீறப்பட்டதால் ok உட் கட்சித் தேர்தல் முறைகள் செயலிழந்தன. இப் பின்னணியில்தான் கட்சியின் முடிவுகளுக்கு எதிராக கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதன் காரணமாகவே தமிழரசுக் கட்சி பொது வேட்பாளர் என்ற பெயரில் நிறுத்தப்பட்டுள்ள அரியநேந்திரனை ஆதரிப்பதில்லை எனவும், அவர் இத் தேர்தலிலிருந்து உடனடியாக விலக வேண்டும் எனவும் தீர்மானித்துள்ளது.
இத் தீர்மானம் பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. கட்சியின் முடிவுகளுக்கு எதிராக செயற்படுவோர் கட்சியிலிருந்து அகற்றப்படும் சூழல் மிக அதிகமாகவே உள்ளது. கட்சிக் கட்டுப்பாட்டை மீறினார்கள் என்ற அடிப்படையில் கட்சியிலிருந்த பல வேண்டப்படாத அல்லது கட்டுப்படாத பலர் அகற்றப்படலாம்.
இன்றைய அரசியற் சூழலில் கட்சி மட்டத்தில் ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டால் அக் கட்சிகளால் நாட்டில் ஜனநாயகத்தைப் பேண முடியாது என்ற முடிவுக்கே நாம் செல்ல முடியும்.
கேள்வி:
தேசிய அரசாங்கம் என்ற இந்த அணுகுமுறை ரணில் மேற்கொண்ட அல்லது அடிக்கடி உச்சரிக்கின்ற தேசிய அரசாங்கத்தை விட எவ் வகையில் வேறுபட்டது?
பதில்:
இத் தேசிய அரசாங்கம் என்ற கோட்பாடு நாடு எதிர் நோக்கியுள்ள புதிய நிலமைகளிலிருந்தே எழுகிறது. நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலையிலுள்ளது. தேசிய நல்லிணக்கம் சீர்குலைந்துள்ளது. 2027ம் ஆண்டின் பின்னர் கடன் கொடுப்பனவுகளும் அதிகரிக்கும்போது தேசிய அபிவிருத்திக்கான பணம் மிகவும் குறைவாகவே அமையும். அதன் காரணமாக மக்கள் மிக மோசமான நெருக்கடிக்குள் தள்ளப்படுவார்கள். உதாரணமாக. வறுமையில் சிக்கியுள்ள மக்களுக்கான கொடுப்பனவுகள், நாட்டின் கல்வி, சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு, ராணுவச் செலவினங்கள் எனப் பல செலவினங்கள் பாதிக்கப்படலாம்.
இவ்வாறான இக்கட்டான சூழலில் சந்தர்ப்பவாத நோக்கம் அல்லது குறுகிய நலன்களுடன் செயற்படும் கட்சிகள் குறுக்கு வழிகளில் இன, மத பேதங்களை முன்னிறுத்தி அல்லது இந்திய, சீன விரோதங்களை முன் வைத்து மக்களை ஏமாற்றி அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிக்கலாம். எனவே தேசிய பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதாயின் தேசிய அளவிலான நல்லிணக்கம் அவசியமாகிறது.
இவ்வாறான ஒரு சூழலில் மக்களால் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட சகல அல்லது பெரும்பான்மை கட்சிகள் ஒன்றிணைந்த தேசத்தின் நலன் கருதி ஒரு பொது வேலைத் திட்டத்தின் அடிப்படையில் புதிய தற்காலிக அரசியல் யாப்பினை ஒரு குறிப்பிட்ட காலத் தேவைக்கென வரைந்து அதனடிப்படையில் உருவாக்கும் அரசையே தேசிய அரசு என வர்ணிக்கிறோம்.
இவ்வாறான ஒரு அரசின் தோற்றத்திற்கான வாய்ப்புகள் பற்றிய கலந்துரையாடல்கள் ஏற்கெனவே ஐக்கிய மக்கள் சக்தி. தேசிய மக்கள் சக்தி என்பவற்றின் மத்தியில் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகிறது. இவ் உரையாடல்களில் சுமந்திரன் போன்றோரின் பங்களிப்பும் இருப்பதால்தான் மிக விரைவாகவே தமிழரசுக் கட்சி ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரிக்கும் முடிவை நோக்கிச் சென்றிருக்கலாம்.
கேள்வி:
ஒரு புறத்தில் தேசிய அரசாங்கம் என்கிறீர்கள். மறு பறத்தில் தேர்தல் முடிவுகள் வெளிவருவதில் சந்தேகங்களை எழுப்புகிறீர்கள். இவை முரண்பாடாக உள்ளனவே?
பதில்:
உள்ளுராட்சித் தேர்தல்களை அரசியல் யாப்பிற்கு விரோதமாக ஒத்தி வைத்தார்கள். பின்னர் அத் தேர்தல்களை நடத்தப் பணம் இல்லை என்றார்கள். மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதாகக் கூறினார்கள். பின்னர் எல்லை நிர்ணயம் என்றார்கள். உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்களை அதிகரித்தார்கள். அது அதிகாரம் மக்களைச் சென்றடைவதற்கான ஜனநாயக வழிமுறை என்றார்கள். பின்னர் எண்ணிக்கை அதிகரிப்பு பெரும் பண விரயம் எனக் கூறி எண்ணிக்கையைக் குறைப்பது என்றார்கள். பெண்களுக்கு 25 சதவீதம் ஒதுக்கீடு என்றார்கள். இளைஞர், யுவதிகளுக்கு தேர்தலில் 40 சதவீத ஒதுக்கீடு என்றார்கள். பின்னர் பேச்சையே காணோம்.
இவற்றை ஒட்டு மொத்தமாக நோக்கும்போது நாட்டின் ஜனநாயக வாழ்வைத் தீர்மானிக்கும் தேர்தல் என்பது அதிகார வர்க்கத்தினரின் கைகளில் சிக்கிச் சீரழியும் நிலையில் ரணில் அரசு பல்வேறு சட்டங்களை நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் நிறைவேற்றுகிறது. பல சட்டமூலங்கள் அரசியல் யாப்பிற்கு முரணானது என அரசியல் யாப்பு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் கமிட்டி நிலையில் சில மாற்றங்களை மேற்கொண்டு சட்டமாக்கியுள்ளனர்.
நீதிமன்றம் தற்போது ஜனாதிபதியின் பயமுறுத்தல்களுக்குள் சென்றுள்ளது. அரசியல் அமைப்பு சபையின் முடிவுகளுக்கு மாறாக பொலீஸ் மா அதிபரை ஜனாதிபதி நியமனம் செய்கிறார். அதனை உயர் நீதிமன்றம் சட்ட விரோதம் என நிராகரித்தபோது பதில் மா அதிபரை நியமிக்க ஜனாதிபதி மறுக்கிறார்.
இவை யாவும் நாட்டின் எதிர்காலம் எவ்வாறு அமையும்? என்பதற்கான சமிக்ஞைகளைத் தருவதால்தான் எனது பதில்களும் ஒரு நிச்சயமற்றதாகவே உள்ளன.
மேலும் தொடரும் …….