(‘அரங்கம்’ அரசியல் பத்தித்தொடர்)
— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —
கடந்த நல்லாட்சிக் காலத்தில் 2015 முதல் 2018/2019 வரை முன்னெடுக்கப்பட்ட-பாராளுமன்றத்தில் பெயர் குறிப்பிட்டு நியமிக்கப்பட்ட வழிகாட்டல் குழுவினால் (Steering Committee) இனப் பிரச்சனைக்கான தீர்வையும் உள்ளடக்கியதாகக் கூறப்பட்டுச் சமர்ப்பிக்கப்பட்ட ‘இடைக்கால அறிக்கை’ யுடன் தடைப்பட்டுப்போன புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகளைத் தொடர்வதற்குத் தமிழ் மக்கள், 14.11.2024 அன்று நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் கொழும்பு-கம்பஹா-இரத்தினபுரி-கேகாலை-கண்டி-நுவரெலியா-பதுளை மாவட்டங்களில் போட்டியிடும் தமிழ் முற்போக்குக் கூட்டணியையும், யாழ்ப்பாணம்-வன்னி-திருகோணமலை-மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களில் போட்டியிடும் தமிழரசுக் கட்சியையும் வெற்றியீட்டச் செய்ய வேண்டுமென்று தமிழ் மக்கள் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோகணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எழுந்தமானமாக நோக்கும்போது ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கா கடந்த நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட ‘புதிய அரசியலமைப்பு’ உருவாக்க முயற்சியைத் தொடர்வார் என்ற நம்பிக்கையை மனோகணேசன் கொண்டிருக்கிறார் எனத் தெரிகிறது.
புதிய அரசியலமைப்பு இனப்பிரச்சினைக்கான திருப்தியான தீர்வைத் தரும் என்ற அவரது எதிர்பார்ப்பு வெறுமனே ஓர் எடுகோள் ஆகும்.
கொழும்பில் வதிகின்ற வடக்கு கிழக்கு மாகாணத் தமிழ் மக்களின் வாக்குகளைக் குறி வைத்து மனோகணேசன் விடுத்துள்ள ஒரு தேர்தல் தந்திரோபாய அறிவிப்புதான் இது என்றே கொள்ளவேண்டியுள்ளது.
தமிழரசுக் கட்சியும் தமிழர் முற்போக்குக் கூட்டணியும் பரஸ்பரம் தமக்குள் நிறைவேற்றிக் கொள்ளும் தேர்தல் தேவைப்பாடுகள்தான் இந்த வேண்டுகோளின் பின்னணியென்றே கூறவேண்டியுள்ளது.
மனோகணேசன் தனது தேர்தல் தேவைகளுக்காகத் தமிழரசுக் கட்சியின் பெயரையும் சேர்த்துக் கொண்டு புதிய அரசியலமைப்பு மீதான நம்பிக்கையைத் தமிழ் மக்களுக்கு ஊட்ட முனைகிறார். இது உண்மையிலேயே ஆபத்தானது.
ஏனெனில், வரலாற்றில் இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பும் சரி சுதந்திர இலங்கையிலும் சரி அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட வேளைகளிலெல்லாம் அவை சிறுபான்மைத் தமிழ் மக்களுக்குச் சாதகமாக இருந்ததே இல்லை.
இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட டொனமூர் அரசியலமைப்பும் பின்னர் வந்த சோல்பரி அரசியலமைப்பும் சிறுபான்மைத் தமிழர்களுக்கு எந்த நன்மைகளையும் விளைவிக்கவில்லை.
டொனமூர் அரசியலமைப்பு அன்றிருந்த தமிழ் அரசியல் தலைவர்களால் ‘Donoughmore means Tamil no more’ என வர்ணிக்கப்பட்டது.
சோல்பரி அரசியலமைப்பில் இலங்கையின் சிறுபான்மைத் தமிழர்களுக்கான பாதுகாப்பாக அதன் 29 வது சரத்து விளங்கியபோதிலும், அதனை வைத்துக்கொண்டுதான் மலையகத்தமிழர்களின் வாக்குரிமையையும் குடியுரிமையையும் பறிக்கும் சட்டங்களும் (1948/49) சிங்களத்தை அரசகரும மொழியாக்கும் அரசகரும மொழிச் சட்டமும் (1956) நிறைவேற்றப்பட்டன. நடைமுறையில் இந்த 29ஆவது சரத்து சிறுபான்மைத் தமிழர்களுக்கு எந்த விதமான பாதுகாப்பையும் வழங்கவில்லையென்பது இச்சட்டங்களின்போது நிதர்சனமாகியது.
சுதந்திர இலங்கையில் இரு தடவைகள் அரசியலமைப்பு மாற்றங்கள் ஏற்பட்டன.
சிறிமாவோ பண்டாரநாயக்க ( ஸ்ரீ.ல.சு.க.) தலைமையிலான அரசாங்கம் 1972 இல் புதிய குடியரசு அரசியலமைப்பை நிறைவேற்றியது. அப்போது அதற்குப் பொறுப்பாக அரசியலமைப்பு விவகார அமைச்சராகவிருந்த இடதுசாரி அரசியல் தலைவரான கொல்வின் ஆர் டி சில்வாவே விளங்கினார். அப்போது தமிழர் தம் அரசியல் தரப்பாக விளங்கிய தமிழரசுக் கட்சி அரசியலமைப்பு நிர்ணய சபையில் சமர்ப்பித்த அதி குறைந்தபட்ச கோரிக்கைகளும் உதாசீனம் செய்யப்பட்டன. அவ் அரசியலமைப்பைத் தமிழர்தம் அரசியல் தரப்பு நிராகரித்திருந்தது.
பின்னர் பிரதமர் ஜே ஆர் ஜெயவர்த்தனா தலைமையிலான அரசாங்கம் 1978 இல் புதிய ‘நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை’ அரசியலமைப்பை நிறைவேற்றியது. அப்போதும் கூட தமிழர்களின் கோரிக்கைகள் அனைத்துமே அலட்சியம் செய்யப்பட்டன. அப்போதைய தமிழர்தம் அரசியல்தரப்பான தமிழர் விடுதலைக் கூட்டணி அது நிறைவேற்றப்பட்ட தினத்தன்று அரசியலமைப்பை நிராகரித்துப் பாராளுமன்றத்திலிருந்து வெளிநடப்புச் செய்திருந்தது.
இந்த வரலாற்றுப் பின்னணியில் பார்க்கும்போது மனோகணேசனால் எதிர்வு கூரப்படும் – நம்பிக்கையூட்டப்பெறும் (தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ள) உத்தேச புதிய அரசியலமைப்பு தற்போதுள்ள 13 ஆவது திருத்தத்தைக் காட்டிலும் மேலதிகமான அதிகாரப் பகிர்வை ஒருபோதும் வழங்கப்போவதில்லை.
உத்தேச புதிய அரசியலமைப்பு யோசனையின் பின்னாலுள்ள மறைமுகமான நிகழ்ச்சி நிரல் யாதெனில் தற்போது அரசியலமைப்பின் அங்கமாக விளங்கும் 13 ஆவது திருத்தத்தையும் அதன் விளைவான மாகாண சபை முறைமையையும் நீக்குவதும் அவ்வாறு செய்வதன் மூலம் இலங்கைத் தமிழர்களின் இனப்பிரச்சனையில் இந்தியாவின் தலையீட்டைத் தவிர்ப்பதுமாகும். நீண்ட கால நோக்கில் இது தமிழர்களுக்குப் பாதிப்பையே ஏற்படுத்தும். தற்போதுள்ள 13 ஆவது திருத்தத்தை இழப்பதற்குத் தமிழர்கள் சம்மதிப்பது அல்லது அதுகுறித்து அமைதியாக இருப்பது அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்டது போல மட்டுமல்லாமல் ‘அரசியல் தற்கொலை’ யுமாகும்.
எனவே, தமிழ் மக்களுக்கு இன்று அவசியமானது இருக்கின்ற 13 ஆவது திருத்தத்தின் முழுமையான அமுலாக்கலே தவிர வரப்போகின்ற புதிய அரசியலமைப்பு அல்ல. வரப்போகிற பட்டுவேட்டிக் கனவில் மிதப்பதை விடுத்து கட்டியிருக்கும் இன்றைய கோவணத்தையாவது காப்பாற்றவேண்டியதே தமிழர்களுக்குப் பாதுகாப்பானது.