சூடும்-ருசியும்: மட்டக்களப்பில் ‘போனஸ் ‘ மும்முனைப் போட்டி….?

சூடும்-ருசியும்: மட்டக்களப்பில் ‘போனஸ் ‘ மும்முனைப் போட்டி….?

— அழகு குணசீலன் —

இலங்கை பாராளுமன்ற தேர்தல் களம்,  சமூக வேறுபாடுகளைக்கடந்து பாரம்பரிய கட்சிகள், புதிய கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள், கடந்த தேர்தலில் வென்றவர்கள், தோற்றவர்கள், போடுகாய்கள், வாக்கு சேகரிப்போர், வாக்குப்பிரிப்போர், பழையவர்கள், புதியவர்கள் என பல்வேறுபட்ட 8888 வேட்பாளர்களால் நிரம்பி வழிகின்றது. இதற்கு மட்டக்களப்பு மாவட்டம் மட்டும் எப்படி விலக்காக இருக்கமுடியும்? 

இங்கும் அதே நிலைதான்.

 பல தடவைகள் தோல்வி அடைந்த, அடுப்பங்கரையில்  சூடுகண்ட பூனைகளும், அடுப்பங்கரையில் சட்டி, பானைகளில் கிடந்த எச்சசொச்சத்தில் ருசி கண்ட பூனைகளும் களத்தில் நிற்கின்றன. இவற்றில் சில யாரும் பார்க்கவில்லை என நினைத்து கண்களை மூடிக்கொண்டு பாலைக்குடித்தவை. நாங்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருந்தோம் என்று இதுவரை பார்வையாளராக இருந்த மக்களுக்கு புள்ளடியினால் ‘குறிசுடும்’ வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்புக்கள் எந்த வேட்பாளருக்கு, எந்தக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பை வழங்கப்போகிறது… ? யாரையெல்லாம் தோற்கடிக்கப்போகிறது….? 

மட்டக்களப்பு  தேர்தல் கள நிலைமைகளின் படி ‘போனஸ் ‘ ஆசனத்திற்கு மும்முனைப்போட்டி நிலவுவதாக கொள்ள வேண்டி உள்ளது.  இது தமக்கு தான் மூன்று  அல்லது  குறைந்தது இரண்டு கிடைக்கும் என்ற வீடு, படகு, சங்கு கட்சிகளின்  கருத்துக்களை அடிப்படையாகக்கொண்டது.  போனஸ் என்பது  மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகளில் அதி கூடிய வாக்குகளை பெறும் கட்சிக்கு/சுயேட்சை குழுவுக்கு உரிய  மேலதிக ஆசனத்தை குறிக்கிறது. அதாவது ஐந்து ஆசனங்களில் முதல் இரண்டு ஆசனங்களையும் பெறும் கட்சி எந்தக் கட்சி என்பதாகும். இம்முறை கள நிலவரங்களின் படி போனஸ் ஆசனத்துடன் மூன்று ஆசனங்களை பெறும் வாய்ப்பு எந்தக் கட்சிக்கும் கிடைக்க வாய்ப்பில்லை.  அதற்கு கட்சி ஒன்று குறைந்தது ஒரு இலட்சம் வாக்குகளையாவது பெறவேண்டும். 

 1989 தேர்தலில் வெறும் 55, 131 வாக்குகளை பெற்று தமிழர் விடுதலைக்கைட்டணி மூன்று ஆசனங்களை பெற்ற அசாதாரண சூழ்நிலையோ அல்லது 46,413 வாக்குகளை பெற்ற ஈரோஸ் வெறும் ஒன்பதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஒரே ஒரு ஆசனத்தை மட்டும் பெற்ற நிலையோ இன்று இல்லை. கடந்த 2020 தேர்தலில் வாக்களிப்பு மட்டம் உயர்வாகவும், தேர்தல் ஜனநாயக வழிமுறைகளை பின்பற்றியும் இடம்பெற்றது. இதனால் வாக்களிப்பு வீதம்  ஒப்பீட்டளவில்  இம்முறையும் அதிகமாக இருக்க வாய்ப்புண்டு. அதிகளவான கட்சிகளும், சுயேட்சைகளும் களத்தில் நிற்பது இதற்கு ஒரு காரணம். வழக்கம் போல் சோனக பிரதேசங்களில் ஒப்பீட்டளவில் தமிழ்ப் பிரதேசங்களை விடவும் வாக்களிப்பு வீதம் அதிகமாக இருக்கும் போது மாவட்டத்தின் மொத்த வாக்களிப்பு வீதத்தை இது அதிகரிக்கச் செய்யும் . 

எல்லாத்தரப்பிலும் வாக்காளர் மத்தியில் கட்சிகள், அவற்றின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த அதிருப்தி நிலவுகிறது. மட்டக்களப்பு  தமிழ் மக்கள் தேர்தலில் அதிக ஆர்வமாக இல்லை.  சமூகம் சார்ந்த நோக்கில் இது அவ்வளவு ஆரோக்கியமானதாக இல்லை. ஒரு பகுதியினர்  எந்தக்கட்சியை, யாரை ஆதரிப்பது என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை. இருந்தும் முஸ்லீம் பிரதேசங்களில் வாக்களிப்பு வீதம் எண்பதைத்தொடும் என்றும், தமிழ்ப்பிரதேசங்களில் இது மட்டுமட்டாக வெறும் எழுபது வீதத்தையே  எட்டிப்பிடிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வாக்களிப்பு வீதத்தில் ஏற்படும் அதிகரிப்பு ஒரு உறுப்பினர் தெரிவு செய்யப்படுவதற்கு  தேவையான வாக்கு தொகையையும் அதிகரிக்கும். குறைந்தது கட்சி ஒன்று பிரதிநிதித்துவத்தைப்பெற குறைந்தது 35,000 – 40,000 ஆயிரம் வாக்குகளையாவது பெற வேண்டியிருக்கும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2020 பாராளுமன்ற தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு  (தமிழரசு,ரெலோ,புளட் +)  ஒன்றாக இணைந்து 79,460 வாக்குகளை பெற்றும் இரண்டு ஆசனங்களையே பெறமுடிந்தது. தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் தனித்தும், அதன் தலைவர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) சிறையில் இருந்தும், வாக்காளர் ஒருவரைக் கூட சந்தித்து ஆதரவு கோரமுடியாத நிலையிலும் ரி.எம்.வி.பி 67, 692 வாக்குகளை பெற்றது. மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்கும் பிள்ளையானுக்கு கிடைத்தது. வேட்பாளர்களை  விடவும் தலைமை வேட்பாளருக்கும், கட்சிக்கும் வாக்களிக்கின்ற தேர்தல் தந்திரோபாயத்தின் பெறுபேறு இது. இதன்மூலம் செல்லுபடியற்றதாக கழிக்கப்படுகின்ற வாக்குகள் ரி.எம்.வி.பி. வாக்குகளில் குறைவாக இருக்கும்.

இந்த நடைமுறையை தமிழ்த்தேசிய கட்சிகளிடம் எதிர்பார்க்க முடியாது அவர்கள்  எட்டு பேரும் தங்கள் தங்களை  முதன்மைப்படுத்தி ஓடுகிறார்கள்.    இன்றைய நிலையில் பிள்ளையான் கடந்த முறை பெற்றளவு வாக்குகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. முக்கியமாக மேய்ச்சல் தரை, நிலப்பிரச்சினைகள் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் அதிருப்தியில் உள்ளனர். பிள்ளையானின் போக்குவரத்து வீதி, பாலங்கள் உட்கட்டமைப்பு, கிராமிய பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள்,  நிர்ப்பாசனம், கல்வி, விளையாட்டு அபிவிருத்திகளுக்கு அப்பால்  இந்த பிரச்சினைகள் அதிக கவன ஈர்ப்பை பெற்றுள்ளன. அதேவேளை பட்டிருப்பில் இம்முறை பெறவுள்ள புதிய வாக்குகளின் மூலமும், கல்குடாவில் வியாழேந்திரனின் ஒரு பகுதி வாக்குகளையும் , தமிழ்த்தேசிய சிதறல் வாக்குகளையும்  பெற்று இந்த வீழ்ச்சியை பிள்ளையானால் சரி செய்யமுடியுமா? இழந்த வாக்குகளை ஈடு செய்ய பெறப்படுகின்ற புதிய வாக்குகள்  போதுமானவையா? என்ற கேள்விக்கு  களத்தில் ஆம் என்றும், இல்லை என்றும் இரு பதில்கள் நோக்கர்களால் கூறப்படுகின்றன. நவம்பர் 15இல்  இந்த கேள்விக்கான சரியான விடை தெரிந்துவிடும்.

கடந்த முறை ரி.எம்.வி.பி .சுமார் 12, 000 வாக்குகளால்  ஒரு ஆசனத்தையும் ,  மேலும்  சுமார் 70 வாக்குகளால் தேசிய பட்டியல் பிரதிநிதித்துவத்தையும் வாக்கு பிரிப்பாளர்கள், வாக்கு பொறுக்குபவர்களிடம் இழக்க வேண்டி ஏற்பட்டது.  இந்த சைக்கிள் காரர்கள் தான் ருசிகண்ட பூனையாக  கிழக்கில் அலைகிறார்கள். அதை அறிந்து மற்றைய பூனைகளும் சட்டி,பானைகளை உருட்டுகின்றன. எனினும் இன்று கடந்த தேர்தலில் நிலவிய அரசியல் சூழல் நிலவுகிறதா?  என்றால் இல்லை. 

ரி.என்.ஏ  வீடாகவும், சங்காகவும், மாம்பழமாகவும், மானாகவும் பிரிந்து நிற்கிறது. உதயசூரியனும்  இன்னோரு பக்கம். வீட்டுக்குள்ளும், சங்கிலும் உட்கட்சி நிலவரங்கள் ஆரோக்கியமாக இல்லை. மட்டக்களப்பிலும் ‘சிறி ‘ எதிர்ப்பு பிரச்சாரம் யாழ்ப்பாணம் போன்று  மேற்கொள்ளப்படுகிறது. ஆனால்  இது சிங்கள ‘சிறி’ க்கு தார்பூசிய கதையல்ல. தமிழ் ‘சிறி’க்கு’ முகத்தில் கரிபூசும் கதை.  ஒரு வகையில் பொதுவேட்பாளரை சுமந்திரன், சாணக்கியனுக்கு எதிராக ஆதரித்தமைக்கான பழிவாங்கல் கணக்குத்தீர்ப்பு.   இதற்காகவே செஞ்சோற்று கடன் தீர்க்க அரியநேந்திரன் சிறிநேசனை ஆதரிக்கிறார். கடந்த தேர்தலில் தனது வேட்பாளர் நியமனத்தை சாணக்கியன் காகமும், நரியும் வடைக்கதை போன்று தட்டிப்பறித்தார் என்று  ஜனாவை ஆதரித்தார். ஜனாதிபதி தேர்தலில் ஜனாவும் இவரை ஆதரித்தபோதும் அந்த நன்றியை மறந்துவிட்டார். இவர்களில் கணக்கை  மக்கள் யாருக்கு தீர்க்கப்போகிறார்கள் ?

கடந்த பாராளுமன்ற காலத்தில் தமிழ்த்தேசிய அரசியலை சிதைத்தவர்கள் என்ற குற்றச்சாட்டு தமிழ்த்தேசிய ஆதரவாளர்களால் சுமந்திரன், சாணக்கியன் ஆகியோர் மீது முழு வடக்கு கிழக்கிலும்  மட்டும் அல்ல தென்னிலங்கை தமிழர்களாலும், புலம்பெயர்ந்த தமிழர்களாலும் முன் வைக்கப்படுகிறது.  இவர்களில் யாழில் சுமந்திரனும், மட்டக்களப்பில் சாணக்கியனும் ‘சிறி’ க்கு கரிபூசுகிறார்கள். ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் 38 கோடியை அபிவிருத்தி நிதியாக பெற்று, குருசாமிக்கு  8 கோடியை கொடுத்து விட்டு மற்றைய மாவட்டங்களுக்கு ஒரு சதமும் பங்கிட்டு ஒதுக்கவில்லை. வடக்கில் பூகம்பம் கக்குகிறது. விவகாரத்தை ஜனா சாம்பல் போட்டு மூடி மௌனம் சாதிக்கிறார். வடக்கு கட்சிகளில்  போடுகாய் பதவி வகிக்கும் கிழக்காரின் பொதுநிலை இதுதான். கடந்த பாராளுமன்ற தேர்தலின் பின்னர் கி.துரைராசசிங்கம் பதவிதுறக்க வைக்கப்பட்டதும் இந்த பொதுநிலைதான். 

கடந்த ஜனாதிபதி தேர்தலில் சுமந்திரன், சாணக்கியன் அணி சார்ந்து,  அரியநேத்திரன், சிறிநேசனுக்கு எதிராகவும், சஜீத்பிரேமதாசவை ஆதரித்தும்  தம்பிமாரே …! என்று விழித்து,தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைகின்ற இறுதி நாளில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார் துரைராசசிங்கம். இதன் மூலம் மற்றவர்கள் அல்லது சம்பந்தப்பட்டவர்கள் பதிலளிக்கின்ற  வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஜனநாயக ஊடகதர்மத்தை கிடப்பில் போட்டார். இப்போது ‘சிறி’ க்கு கரி பூசும்  வகையில்  கல்குடாவில் இருந்து தனது உறவினர் ஒருவரை சுமந்திரனின், சாணக்கியன் ஆதரவுடன் வேட்பாளர் பட்டியலில் இணைத்து பிரச்சாரம் செய்கிறார்.

நல்லாட்சியில் மட்டும் அல்ல, தமிழரசுக்கட்சியில் சுமந்திரனின் தீர்மானம் எடுக்கும் திறன் கடந்த பாராளுமன்ற காலத்திலும் தொடர்ச்சியாக தோல்வி அடைந்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமாரவின் புதிய அரசாங்கத்திலும் தமிழ் மக்கள் அதிகாரப்பகிர்வு கோரவில்லை, தமிழர் பிரச்சினை பொருளாதாரப்பிரச்சினை, பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படமாட்டாது,  பாதுகாப்பு வலையங்கள், காணிகள் விடுவிக்கப்படமாட்டாது , புதிய அரசியலமைப்பில் சமஷ்டிக்கு இடமே இல்லை, தமிழரசை அரசாங்கத்தில் இணைக்கமாட்டோம், வேறு கட்சியினருக்கு- சுமந்திரனுக்கு அமைச்சர் பதவி இல்லை என்ற  என்.பி.பி.யின் தொடர்ச்சியான அறிவிப்புகள் பொதுவாக ஒட்டுமொத்த தமிழ்த்தேசிய கட்சிகளுக்கும், சிறப்பாக தமிழரசுக்கட்சிக்கும், அதன் தேர்தல் விஞ்ஞாபன முழக்கத்திற்கும்  என்.பி.பி. ஆட்சியின் சாட்டையடி. 

 இவை சுமந்திரனின் அரசியல் தந்திரோபாயம் மீதான கடும் தாக்குதலாக அமைகிறது. இந்த தோல்வியின் இடைவெளியில் மற்றைய தமிழ்த்தேசிய கட்சிகள், பிராந்திய கட்சிகள், தேசிய கட்சிகள்  வாக்கு இலாபம் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. என்.பி.பி.யின் இந்த நிலைப்பாடு தமிழ்த்தேசிய பாராளுமன்ற போலி அரசியலில் தமிழ்மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையை சிதைத்து மூளைச்சலவை செய்வதுடன், தென்னிலங்கையில் அவர்களின் வாக்கு வங்கியை அதிகரிப்பதற்கு வசதியாக உள்ளது. 

இது எதிர்காலத்தில் தமிழ்த்தேசிய அரசியலுக்கான சிவப்பு சிக்னல், அபாயச் சங்கூதல்.  சிக்னல் சிவப்பு என்றாலும், விசில் அடித்தாலும் சைக்கிளை நிறுத்தமாட்டோம் என்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கதையாடல்வேறு.இவை அனைத்தையும் நிறுத்துப்பார்க்க வேண்டிய நிலையில் மட்டக்களப்பு மக்கள் இருக்கிறார்கள். தமிழ் மக்களை அடைய முடியாத  கோஷங்களை  இலக்காகக் கூறி  இன்று வரை ஏமாற்றி வரும் தமிழ்த்தேசிய அரசியலுக்கு  என்.பி.பி. சுடச்சுட வழங்கும் பதில் ஒருவகையில் தமிழ்மக்கள் போலித்தமிழ்த்தேசியத்தில் இருந்து விழிப்படைய உதவியாக அமைகிறது. 

அதை வேளை சுயத்துவம், அபிவிருத்தி என்பன குறித்த எதிர்கால அரசியல் பயணத்திற்கான பாதையை தெரிவு செய்யவேண்டிய நிலையில் மட்டக்களப்பு மக்கள் இருக்கிறார்கள்.அதற்காக திசைகாட்டி சரியான திசையை காட்டுகிறது என்று கொள்ள முடியாது. அது அபிவிருத்தி திசையை கூட சரியாக காட்டவில்லை. சீனவினால் வழங்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான வீட்டுத்திட்ட  உதவியில்  ஒரு வீடு கூட  அநுரவின் ஆதரவுடன் இடம்பெற்ற யுத்தத்தினால்  அழிக்கப்பட்ட வடக்கு கிழக்கிற்கு ஒதுக்கப்படவில்லை.  சிங்கள மக்களுக்கு சமமான தனித்துவமான சுயத்துவத்தை தமிழ், முஸ்லீம் மக்களுக்கு இன்னும் அங்கீகரிக்கவில்லை. அதனால் இந்த தேர்தலில் மட்டக்களப்பு மக்கள் அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வரக்கூடாது. அநுரகுமார திசாநாயக்கவின் ஜனாதிபதி தேர்தல் கால உரையில்  – அவரது பாஷையில் சொன்னால்  “வெற்றுக் காசோலைக்ககு”  வாக்களிக்க வேண்டாம் என்று சஜீத் பிரேமதாசவுக்கு எதிராக அவர் சொன்னதையே தமிழ்மக்கள்  அவருக்கு பதிலாக  திருப்பிக்கொடுக்க முடியும்.

மும்முனைப் போட்டியாளராகவுள்ள மூன்று முக்கிய கட்சிகளில் மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளை பெறும் கட்சி இரண்டு ஆசனங்களை பெறும் நிலையில் மற்றைய இரண்டும் ஒவ்வொரு ஆசனங்களையே பெறமுடியும்.  அப்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களுக்கான நான்கு ஆசனங்களும் பங்கிடப்பட்டுவிடும். ஐந்து ஆசனங்களில் எஞ்சியுள்ள ஆசனம் சோனகர்களுக்கு உரியது இதை முஸ்லீம் காங்கிரஸ் – ஹிஸ்புல்லா (?)  வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சோனக வாக்குகளும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பிரிக்கப்படும் நிலைமை காணப்படுகிறது.  இது அதிக வாக்காளர்களை கொண்ட காத்தான்குடிக்கே சாதகமாக அமைய வாய்ப்புண்டு.

தேர்தல் முடிவுகள் குறித்த இந்த எதிர்வு கூறல் காட்சியை விடவும் வேறு பட்ட வகையில் வாக்களிப்பு மாதிரி அமையுமாயின் அதிகூடிய வாக்கை பெறும் கட்சி மூன்று ஆசனங்களை பெற்றால் ( சாத்தியம் மிக மிக குறைவு) எஞ்சிய ஒரு ஆசனம் மும்முனைப்போட்டியில் உள்ள மற்றைய இரண்டு கட்சிகளில் எதற்கு? என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகிறது. இந்த நிலையில் மூன்றில்  ஏதாவது ஒரு கட்சி ஆசனமின்றி  வெறும் கையோடு கச்சேரியை விட்டு வெளியேற வேண்டியிருக்கும்.

மறுபக்கத்தில் வடக்கில் இருந்து  வந்து தேர்தல் காலமழைக்கு வளர்ந்த காளான் விற்கும் கடைகளுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை. சைக்கிள், வீணை, சூரியன் இவை மட்டக்களப்பாரின் வாக்குகளால் தேசிய பட்டியலுக்கு வாக்கு சேர்க்க வந்தவை. கடந்த தேர்தலில் தேசிய பட்டியலில் தேர்வு செய்யப்பட்ட சைக்கிள் கஜேந்திரன் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் ஒரு சதத்தைத்தானும் ஒதுக்கீடு செய்யவில்லை. தேசிய பட்டியல் எம்.பி. ஒருவருக்குதான் விரும்பிய மாவட்டத்திற்கு முழுமையாக அல்லது பகுதியாக பன்முகப்படுத்தப்பட்ட நிதியை ஒதுக்கும் உரிமை உண்டு. மற்றைய எம்.பி.க்கள் ஜனாதிபதியிடம் விசேட அனுமதி பெற்றே இதைச் செய்யமுடியும்.  இப்படி இருந்தும்   இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் எவரும் கிழக்கு மாகாணத்திற்கு எந்த நிதியையும் ஒதுக்கீடு செய்யவில்லை. செய்ததெல்லாம் இன பன்மைத்துவத்தை கொண்ட கிழக்கில் இன உறவை பாதிக்கும் வகையில் படையினரை வம்புக்கு இழுத்து படம்காட்டியதுதான். எனவே தேசிய பட்டியலுக்கு வாக்கு சேர்ப்போர் குறித்து மட்டக்களப்பு மக்கள் கவனமாய் இருத்தல் அவசியம்.

இந்த விழிப்புணர்வு இன்மையால் கடந்த 2020 தேர்தலில் மட்டக்களப்பில் தமிழ்மக்கள் தேசிய கூட்டணிக்கு 4,960, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1,203, ஜே.வி.பி. 348, தமிழர் விடுதலைக் கூட்டணி 8,113, யூ.என்பி 833, ஈரோஸ் 331  போன்று வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த சுமார் 15,000 வாக்குகள் மட்டக்களப்பு தமிழர்கள் வாக்குப்பெட்டிக்குள் போடுகிறோம் என்று நினைத்து குப்பைத்தொட்டிக்குள் போட்டவை என்பதையும் , தமிழர் பிரதிநிதித்துவத்தை காப்பாற்றுவதற்கு, அதிகரிப்பதற்கு எதிராக நமக்கு நாமே அளித்த வாக்குகள் என்பதையும் மட்டக்களப்பு தமிழர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

மற்றொரு கோணத்தில் நோக்கினால் தென்னிலங்கை கட்சிகள் என்ற அடிப்படையில் மணிக்கூடு, காஸ் சிலிண்டர், திசைகாட்டி என்பவை குறித்தும் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. சோனகர்கள் தங்களுக்கான ஒரு பிரதிநிதித்துவத்திற்கு உரிமையுள்ளவர்கள். தமிழர்களுக்கு நான்கு பிரதிநிதித்துவம். இதில் தமிழ் வாக்காளர்கள், சோனகர் வாக்காளர்கள் விடுகின்ற தவறானது அவர்கள் சமூகம் சார்ந்த பிரதிநிதித்துவத்தை குறைக்கவும், இல்லாமல் செய்யவும் வாய்ப்பு இல்லாமல் இல்லை. தென்னிலங்கை கட்சிகளின் வேட்பாளர்கள் தெரிவு இரு சமூகங்களின் வாக்குகளாலும் நிர்ணயிக்கப்படுகிறது. இதன் போது ஒரு சமூகத்தின் வாக்கு இன்னொரு சமூகத்தின் பிரதிநிதித்துவத்திற்கு சாதகமாக அமைவது கடந்த கால அனுபவம். அப்படியான நிலையில் திசைகாட்டி, மணிக்கூடு, காஸ் சிலிண்டர் வாக்குகள் இந்த முரண்பாட்டு நிலையை ஏற்படுத்துவதுடன் தமிழர் வாக்குகளால்  சோனகசமூகத்தவர் தெரிவுசெய்யப்படும் வாய்ப்பை அதிகம் கொண்டுள்ளன. தமிழ் பிரதிநிதித்துவம் திசைகாட்டியில்  தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்பு மட்டக்களப்பில் மிக மிக அரிது.

சுயேட்சை குழு என்ற அடிப்படையில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒரு குழுவாக பசு சின்னம் உள்ளது. கல்குடா தொகுதியின் வியாழேந்திரனின் வாக்குகள்,யோகேஸ்வரனின் வாக்குகள் இந்த சுயேட்சை குழுவுக்கு அளிக்கப்படலாம் என்ற கருத்து காணப்படுகிறது. அதேபோல் பட்டிருப்பில் திசைகாட்டி, மணிக்கூடு , சங்கு , உதயசூரியன், சைக்கிள், பசு என்பன சாணக்கியனுக்கு சேதாரத்தை ஏற்படுத்தக்கூடியவை.

படகு, சங்கு, வீடு இவற்றில்  ஏதாவது ஒன்றில் இருந்து இருவர் தெரிவு செய்யப்பட்டால் ஒருவர் புதியவராக இருப்பதற்கு வாய்ப்புள்ளது. ஒருவர்தான் என்றால் வீட்டில் கல்குடாவில்  இருந்து புதியவர்  ஒருவர் தெரிவு செய்ரப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அப்படி நடந்தால் கரிபூசியவரும், பூசப்பட்டவரும்  அரசியலில் இருந்து அகற்றப்படுவார்கள். மற்றைய இரண்டிலும் பழையவரே புதியவர்.

நான்கு பிரதிநிதித்துவங்கள் வாக்கு விகிதாசாரத்தில் ஒதுக்கப்பட்ட பின்னர் இறுதியான ஐந்தாவது இடம் கிடைப்பது லொத்தர் விழுந்த மாதிரியான ஒரு அதிஷ்டம். நான்கு பிரநிதித்துவ பங்கீட்டுக்குப் பின்னர் குறைந்த தொகையான வாக்காலும் ஐந்தாமவர் தெரிவு செய்யப்படலாம்.

 அப்படியான ஒரு நிலையில் என்.பி.பி. எஸ்.ஜே.பி, சுயேட்சைக்குழு ஒன்றுக்கும் இடையே  ஒரு போட்டி ஏற்படலாம். இந்த நிலை ஏற்பட்டால்  இரண்டு  சோனகபிரதிநிதித்துவம் (என்.பி.பி/ எஸ்.ஜே.பி)  தெரிவாதற்கும் தமிழ் தரப்பில் ஒரு பிரதிநிதித்துவம் குறைவதற்கும் வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் மும்முனைப் போட்டியில் பாராளுமன்ற பிரதிநிதித்துவ வாய்பை இழக்கப்போகின்ற கட்சி எது ?  

இது  மாத்து நொடி……!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *