— சின்னத்தம்பி குருபரன் —
நிறுவனமயப்படுத்தப்பட்ட இலங்கைத் தமிழர் அரசியல் வரலாறு பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் 1878 இல் படித்த இலங்கையருக்கான பிரதிநிதித்துவம் சேர்.பொன்னம்பலம் இராமநாதனுக்கு வழங்கப்பட்டதில் இருந்து ஆரம்பமாகிறது. படித்த இலங்கையர் ஒருவரைத் தமிழர் சார்பாகத் தெரிவு செய்வதற்கான தெரிவுப் போட்டி 1878 இல் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் சைவப் பிரகாச வித்தியாசாலை மண்டபத்தில் வை.விசுவநாதபிள்ளை தலைமையில் நடைபெற்றது. அதில் இராமநாதனும் பிரபல சட்டத்தரணி பிறிட்டோவும் போட்டியிட்டனர். தெரிவுக்கான விவாதம் நீடித்துக் கொண்டு போகவே ஆறுமுக நாவலர் தலையிட்டுச் சுமுகமாகத் தீர்த்து வைத்ததனால் பொன்னம்பலம் இராமநாதன் தெரிவு செய்யப்பட்டார்.
பெரும்பான்மைச் சிங்கள மக்கள் சார்பில் செல்வாக்குமிக்க மாக்கஸ் பெர்னாண்டோ தெரிவு செய்யப்பட்டிருந்தும் கரையோரச் சிங்களவர் என்ற காரணத்தினால் கண்டியச் சிங்களவர்களால் நிராகரிக்கப்பட்டு இராமநாதன் தெரிவானார். சட்ட சபைக்குச் சென்ற இராமநாதன் சிறுபான்மை மக்கள் பிரதிநிதியாகச் செய்ததையும்விட பெரும்பான்மைச் சிங்களவரின் பிரதிநிதயாகவே செயற்பட்டார். இலங்கை அரசியல் வரலாற்றில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழர் பிரதிநிதிகள் யாவரும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பௌத்த, சிங்கள வலதுசாரி அரசியல்வாதிகளுடன் சேர்ந்து செயற்பட்டமையே வரலாறாகும்.
சிறுபான்மைத் தமிழ், முஸ்லிம், மலையக அரசியல்வாதிகளில் பெரும்பாலானோர் மக்களால் தெரிவுசெய்யப்பட்டு முன்கதவால் பாராளுமன்றத்துக்குச் சென்று, காரசாரமாகப் பேசி, பின் கதவால் வெளியேறி அரசிடம் தமக்குத் தேவையானதைப் பெற்றுக் கொண்டு சுகபோகங்களை அனுபவித்து வந்தனர். சிறுபான்மையினர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பல சந்தர்ப்பங்கள் இருந்தும் அவற்றைப் பயன்படுத்தித் தீர்வு காண்பதற்கு நாதியற்றவர்களாக அறிக்கை விட்டுக் கொண்டு காலத்தைக் கடத்தி வந்தார்கள். தமக்கு வாக்களித்த மக்களை ஏமாற்றி, ஊர்வலங்கள், போராட்டங்கள், பேரணிகள், உண்ணாவிரதங்கள் ஆகியவற்றை நடத்தி், தமிழ் தேசியம், தனிநாடு, உரிமை, சமத்துவம், சமஷ்டி என்பறெல்லாம் வீரவசனம் பேசி, மக்களை உசுப்பிவிட்டுக் குளிர்காய்ந்த வரலாறு இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. விக்கிரமாதித்தன் கதையில் வரும் வேதாளம் போல் மீண்டும் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி ஏமாந்து, ‘இனிமேலும் இவர்கள் சரிப்பட்டு வரமாட்டார்கள்’ என்று மாற்றத்தை விரும்பி நிற்கின்றனர்.
இலங்கையில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான முதலாவது கலவரம் 1915 இல் கம்பளையில் நடைபெற்றது. 1918 இல் இரண்டாவது கலவரமும் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றது. பௌத்த சிங்கள மேலாதிக்கவாதிகளால் தமிழருக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட முதலாவது இனப் படுபொலை 1939 இல் கல்லோயாத் திட்டத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் தமிழர், முஸ்லிங்களுக்கு எதிராகப் பல இனக் கலவரங்களும் படுகொலைகளும் ஆட்சியளர்களால் திட்டமிட்டு மேற்கெள்ளப்பட்டன. நடந்து முடிந்த இனக் கலவரங்கள், படுகொலைகளைக் கண்டித்துப் பாராளுமன்றத்திலும் பொது வெளியிலும் கண்டித்து அறிக்கை விட்டார்களே தவிர நியாயமான தீர்வினை அவர்களால் பெற்றுத்தர முடியவில்லை. அன்றிலிருந்து இன்றுவரை பிரச்சினைகள் தீர்க்கப்படாது நீண்டுகொண்டு செல்கின்றனவே தவிர ஆக்கபூர்வமான எந்தவொரு முன்னேற்றமும் எட்டப்படவில்லை என்பதே நிதர்சனமாகும். இத்தனை காலமும் தீர்க்கப்படாத பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இன்னொரு சந்தர்ப்பம் தாருங்கள் எனத் தமிழரசுக் கட்சியினர் வாக்காளர்களிடம் கோருவது வேடிக்கையாக இருக்கிறது.
இலங்கையில் கட்சி அரசியல் தோன்றிய காலத்தில் இருந்து ஓரிரு அரசியல்வாதிகளைத் தவிர ஏனையோரிடையே வெட்டுக் கொத்துக்கள், குழி பறிப்புக்கள், துரோகம், ஒற்றுமையின்மை, பிரிந்து செல்லல், இலஞ்சம், ஊழல், மோசடி, அதிகார துஸ்பிரயோகம், பொய், புரட்டு, கொலை, கொள்ளை, களவு, கடத்தல் ஆகியன சர்வசாதாரணமாகிவிட்டன. வாக்குக் கேட்டுத் தாம் பாராளுமன்றத்துக்குத் தெரிவாகும் வரை மக்கள் தேவைப்படுகின்றனர். அவர்கள் பாராளுமன்றம் சென்றுவிட்டால் மக்களை மறந்து சுகபோக வாழ்க்கை வாழ ஆரம்பித்து விடுகின்றனர்.. இது வாழையடி வாழையாக நடந்து கொண்டிருக்கிறது. அதிலும் தமிழ், முஸ்லிம், மலையக அரசியல்வாதிகள் கொள்கையைத் தூக்கிச் சாக்கடையில் போட்டுவிட்டு வீரம் பேசி, அறிக்கைவிட்டு, மக்களை உசுப்பேத்தி, கட்சிதாவி, அரசாங்க சுகபோகங்களில் தொங்கிக் கொண்டு கொழும்பில் உல்லாச வாங்க்கை வாழ்ந்து வருகின்றனர். இடைக்கிடையே தமது தொகுதிக்கும் மாவட்டத்துக்கும் சென்று நிகழ்வுகளில் பங்குபற்றி, காட்டாப்புக் காட்டி, எந்த மேடையில் எது பேசவேண்டுமோ அதைப் பேசாது, அரைத்த மாவை அரைத்து மேடை அதிர முழங்கோ முழங்கென்று முழங்கி, உப்புச் சப்பற்ற வாக்குறுதிகளை வாரி வழங்கி மக்களை உசுப்பேத்திவிட்டுக் களிப்புடன் கொழும்பு செல்வர். இதுவே வெட்கம்கெட்ட நாறிப்போன அரசியலாகிவிட்டது.
இந்த நாறிப்போன அரசியலுக்கு மக்கள் 2022 அரகலயவுக்குப் பின்னர் முற்றுப்புள்ளி வைக்க ஆரம்பித்துவிட்டனர். இந்த மாற்றம் மரபுசார்நத வலதுசாரி அரசியல்வாதிகளை வயிற்றில் புளியைக்கரைத்து கதிகலங்க வைத்துவிட்டது. அதனால் பல அரசியலில்வாதிகள் விழுந்தும் உடம்பில் மண் ஒட்டாததுபோல் அரசியலில் இருந்து கௌரமாக ஒதுங்கிவிட்டார்கள். இந்த மாற்றத்தினால் பல தசாப்தங்கள் கோலோச்சிய அரசியல் வாழ்க்கையும் குடும்ப அரசியலும் சிதறிச் சின்னாபின்னமாகிக் கிடக்கின்றன. அரகலயப் போராட்டத்தில் மக்கள் கோரிய மாற்றத்தின் வெற்றி என்பது இலஞ்சம், ஊழல், மோசடி, அதிகார துஸ்பிரயோகம் செய்த கேவலம் கெட்ட அரசியல்வாதிகளை இந்தப் பொதுத் தேர்தலின்மூலம் ஓரங்கட்டி வீட்டுக்கு அனுப்புவதில் தங்கி இருக்கிறது. உண்மையில் வாக்காளர்கள் வேடம் போட்டு அரசியலில் சித்து விழையாட்டுக்கள் செய்து நாடகமாடும் அரசியல் கோமாளிகள் எவரும் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகக் கூடாது. அதில் வாக்காளர்கள் உறுதியாக இருத்தல் வேண்டும். இந்த மாற்றத்தை நன்கு உணர்ந்து செயற்படுபவர்களாக வாக்காளர்கள் மாற வேண்டும். இதுவே நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் செய்யும் நன்மையாக அமையும்.
மக்கள் வாக்களிக்கும்போது நாட்டில் முறைமை மாற்றத்தை விரும்பி அவற்றை நடைமுறைப்படுத்த எத்தனிக்கின்ற எந்தக் கட்சிக்கும் வாக்களிக்கலாம். அது அறுதிப் பெரும்பான்மையை உறுதிப்படுத்துவதாக இருத்தல் வேண்டும். எக்காரணம் கொண்டும் குறித்த கட்சி ஒன்று பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெருப்பான்மை பெறுவதற்கு வாக்களிக்கக் கூடாது. அவ்வாறு செய்வது நாட்டில் மீண்டுமொரு வரலாற்றுத் தவறு செய்வதாக அமைந்துவிடும்.
1970, 1977, 2020 களில் நடந்த பொதுத் தேர்தல்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் அதற்கு மேலும் ஆசனங்களைப் பெறுவதற்கு மக்கள் வாக்களித்தமையினால் ஆட்சியாளர்கள் தலைகால் புரியாமல் ஆட்டம் போட்டனர். 2010 இல் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறாவிட்டாலும் மகிந்த ராஜபக்ச ஆசைகாட்டி, அச்சுறுத்தி, கட்சிகளைப் பிரித்து, பல பாராளுமன்ற உறுப்பினர்களைத் தம்பக்கம் சேர்த்துக் கொண்டு பாராளுமன்றத்தில் பல காரியங்களைச் சாதித்து விரும்பிய சட்டமூலங்களை நிறவேற்றிக் கொள்வதற்குப் பயன்படுத்திவந்தார். இக்காலத்திலேயே நாட்டில் கேடுகெட்ட மசோதாக்கள் பல பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.
உள்நாட்டு யுத்தத்தின் விளைவுகளில் ஒன்றாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போராட்டக் குழுக்கள் ஒவ்வொன்றும் தனித் தனிக் கட்சிகளைத் தோன்றுவித்தனர்.
2002 இல் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அக்கட்சிகளை ஒன்றிணைத்துத் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினார். 2005 இல் ஆனந்தசங்கரி தமிழர் விடுதலைக் கூட்டணியைப் பிரித்துச் சென்றார். 2005 இன் பின்னர் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சுமந்திரனைக் கூட்டமைப்பில் இணைத்துக் கொண்டதில் இருந்து கூட்டமைப்பு ‘கழுதை தேய்ங்து கட்டெறும்பான’ கதை போல் கூட்டமைப்பு சிதைத்துச் சின்னாபின்னமாகிவிட்டது.
அதற்குப் பல ஊது குழல்களும் சுமந்திரனுக்குப் பக்கபலமாகச் செயற்பட்டனர். தற்போது அன்டனி ஜெகநாதன் பீற்றர்(முல்லைத்தீவு), கேசவன் சயந்தன்(சாவகச்சேரி) சாணக்கியன் போன்றோர் தீவிர ஊதுகுழல்களாகவும், ஏனையோர் பக்கப்பாட்டுப் பாடுபவர்களாகவும் உள்ளனர். அதிலும் சுமந்திரன், சாணக்கியன் போன்றோர் தமிழ் தேசியம், தமிழர் போராட்டம், யுத்தம், யுத்த இழப்புக்கள் பற்றிய தெளிவும் அக்கறையும் இல்லாதவர்களாகக் காணப்பட்டதோடு அவற்றில் ஒதுங்கியே இருந்தனர். இவர்கள் இருவரும் மறைமுகமாகச் சிங்கள, பௌத்த பேரினவாதத்தின் கைக்கூலிகளாகச் செயற்படுகிறார்களோ எனச் சில விமர்சனங்களும் எழுகின்றன.
சுமந்திரனும் சாணக்கியனும் தமது விசுவாசிகளை பொதுத் தேர்தல் களத்தில் நிறுத்திக் குறைந்தபட்சம் தாங்கள் இருவரும் வென்றால் போதும் எனப் பரப்புரைகளை மறைமுகமாக முடுக்கி விட்டிருக்கின்றனர். 12 ஆசனங்களைக் கைப்பற்றும் கதை மறைந்து போய் யாழ், மட்டக்களப்பு மாவட்டங்களில் இருந்து இரு ஆசனங்களைப் பெற்றுக் கொண்டாலே போதும் என நினைக்கின்றனர்.
இதுவும் விசுவாசத்திற்கு ஏமாந்து போகும் கேடுகெட்ட அரசியல் என யாழ் மக்கள் பேசிக் கொள்கின்றனர். இதேநிலை பெரும்பாலான தமிழ்க்கட்சிகளில் காணப்படுகின்றது.
23 ஆசனங்களைப் பெற்ற தமிழரசுக் கட்சி இப்போது இரண்டு ஆசனங்களுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கட்சிகளுக்கிடையே ஒற்றுமையில்லை, வேட்பாளர்களுக்கிடையேயும் ஓற்றுமையில்லை, ஒவ்வொருவரும் நான் முந்தி, நீ முந்தியெனப் போட்டி போட்டுக் கொண்டு றேஸ் ஓடுகின்றனர். இறுதிக் கட்டத் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. தமக்குள் ஒற்றுமையில்லை வாக்காளர்களை ஒற்றுமையாகச் சென்று தமது சின்னத்துக்கும் இலக்கத்துக்கும் புள்ளடி இடுமாறு கோருகின்றனர். “இதனைக் கூறுவதற்கு இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. இனிமேலும் பாராளுமன்றக் கதிரையும் சுகபோக வாழ்க்கையும் தேவைப்படுகிறதோ” என வாக்காளர்கள் பலர் விசனம் தெரிவிக்கின்றனர்.
தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் தாங்கள் பாராளுமன்றம் செல்வதற்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் தாருங்கள், எமது பலத்தை நிரூபித்துப் புரையோடிப் போயிருக்கும் தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முயற்சிப்போம் என வெட்கமின்றிவாக்குக் கேட்கின்றனர். ‘23, 18, 14, 10 ஆசனங்கள் தம்வசம் இருந்தபோது தீர்க்கமுடியாத பிரச்சினையை இனிமேலா தீர்க்கப் போகின்றனர். நல்லாட்சி அரசாங்கத்தில் கிடைத்த வாய்ப்பினையும் பயன்படுத்தத் தவறியவர்கள் இனிமேல் எப்படித் தீர்க்கப் போகின்றனர்’ எனவும் வாக்காளர்கள் கூறுவதைக் கேட்க முடிகிறது.
இதே கருத்தையே ஏனைய தமிழ், முஸ்லிம், மலையக வேட்பாளர்களில் பலர் தொடர்பாக வாக்காளர்கள் பேசிக் கொள்வதையும் அறியக்கூடியதாக உள்ளது. இன்று பல வேட்பாளர்கள் ‘பிச்சை வேண்டாம் நாயைப்பிடி’ என்ற தெளிவுக்கு வந்திருப்பதையும் அறிய முடிகிறது. அதனால் பல வாக்காளர்கள் வாக்களிப்பில் நம்பிக்கை இழந்திருக்கின்றனர்.
சிங்கள வாக்காளர்கள் மத்தியில் வாக்களிப்பது தொடர்பாக ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வு தமிழ், முஸ்லிம் மலையக வாக்காளர்களிடமும் ஏற்பட வேண்டும். பாராளுமன்ற ஆசனங்களைச் சுத்திகரிக்கும் வகையில் முறைமை மாற்றத்தை விரும்பி, இலஞ்சம், ஊழல், மோசடிகள், அதிகார துஸ்பிரயோகமற்ற, தாமாகவே முன்வந்து மக்களுக்குச் சேவை செய்த, சேவை செய்ய விரும்புகின்ற வேட்பாளர்களை இனங்கண்டு, கட்சி பேதம் பாராது வாக்களித்து அவர்களைத் தெரிவு செய்வதே சிறந்த முன்மாதிரியான மாற்றமுமாகும்.
முகம் தெரியாத, மக்களுக்குச் சேவை செய்யாத பிரபல்யமற்றவர்களையும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களையும், தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட வேட்பாளர்களையும் தவிர்த்து புதிய முகங்களைத் தெரிவு செய்வதற்கு வாக்களிப்பதே புத்திசாலித்தனமாகும். அதுவே சிறந்த தேர்வாகவும் அமையும்.
இலங்கை சுதந்திரமடைந்ததில் இருந்து ஆட்சியாளர்களை எதிர்த்து நின்று எதனையும் சாதிக்க முடியவில்லை. இப்போது வடக்கு, கிழக்கு மக்களிடையே காணப்படும் பிரச்சினைகளைப் பேசித் தீர்ப்பதற்கு அரச சார்பு அரசியல் சாணக்கியமே பொருத்தமானதாகும். தற்போது இருக்கும் சாதகமான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்குச் சிறுபான்மையினர் யாவரும் முன்வர வேண்டும்.
அண்மையில் சமூக வலைத்தளங்களில் “ஐயோ சாமி நீ எனக்கு வேண்டாம். பொய் பொய்யாச் சொல்லி ஏமாற்றினது போதும்…” என்ற பாடல் முன்னாள் கேடுகெட்ட அரசியல்வாதிகளின் புகைப்படங்களுடன் பதிவிடப்பட்டுவைரலாகிப் பிரபல்யம் பெற்றிருந்தது. அத்தகைய அரசியல்வாதிகளுக்கு வடக்கு, கிழக்கில் வாக்களிப்பதைத் தவிர்த்து மக்களுக்குச் சேவை சேய்யக்கூடிய அப்பழுக்கற்ற,அறிந்த, தெரிந்த புதியவர்களைத் தெரிவு செய்வோம். இந்தப் பொதுத் தேர்தலைச் சிறந்த முன்னுதாரணமாகப் பயன்படுத்திக் கொள்வோம்.