— கருணாகரன் —
பல அணிகளாகச் சிதறிக் கிடக்கும் தமிழ்த்தேசியக் கட்சிகளையும் எந்தப் பக்கம் செல்வது என்று தெரியாமல் தத்ததளிக்கும் மக்களையும் பலவீனப்பட்டிருக்கும் தமிழ்த்தேசியத்தையும் பலப்படுத்துவதற்கே தமிழ்ப்பொது வேட்பாளர் என்று சொல்லப்பட்டது.
இதற்காக உருவாக்கப்பட்டதே தமிழ் மக்கள் பொதுச்சபையும் தமிழ்த்தேசியப் பொதுக் கட்டமைப்புமாகும்.
இந்த நோக்கத்தின் அடிப்படையில்தான் தமிழ்ப்பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டு, அதற்கான பரப்புரைகளும் அங்கங்கே நடக்கின்றன.
பொதுவேட்பாளருக்காக இன்னும் பெரிய அளவிலான பொதுக்கூட்டங்கள் நடக்கவில்லை. என்றாலும் பரப்புரைகள் தொடர்கின்றன.
பொதுவேட்பாளரை ஆதரிக்கும் கட்சிகளின் தலைவர்கள், பத்தி எழுத்தாளர்கள் எல்லாம் கலந்து கொண்டாலும் பரப்புரைகளில் ஆழமான, புதிய சேதிகள் எதையும் பொதுக்கட்டமைப்போ, பொதுவேட்பாளரோ சொல்லவில்லை. நடைமுறைச் சாத்தியமான விடயங்கள் கூடப் பேசப்படவில்லை.
ஆனால், சொல்லப்பட்டதற்கு மாறாகத் தமிழ்ப்பொது வேட்பாளர், தமிழ்ச்சமூகத்தை ஆழமாகவே பிளவு படுத்திக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. தமிழ்ச்சமூகத்தை மட்டுமல்ல, தமிழ்க்கட்சிகளையும்தான். (பொதுவேட்பாளரை நிறுத்தினால் இதெல்லாம் நடக்கும் என ஏற்கனவே எச்சரிக்கப்பட்டிருந்தது).
பல இழுபறிகள், தடுமாற்றங்களுக்குப் பிறகு, பொது வேட்பாளரைக் கட்சி ரீதியாக ரெலோ ஆதரிக்கிறது. ஆனால், கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரும் அந்தக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினருமான வினோநோகராதலிங்கம் பகிரங்கமாகவே அதை எதிர்க்கிறார். வினோநோகராதலிங்கத்தோடு ஒரு அணியும் இதை எதிர்க்கிறது.
ஆக, ரெலோவுக்குள் இரண்டு நிலைப்பாடுகள்.
இதைப்பற்றிக் கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனிடம் கேட்ட போது சொன்னார், “ரெலோ ஒரு ஜனநாயகக் கட்சி என்ற அடிப்படையில், எவரும் எந்த முடிவையும் எடுக்கலாம். ஆகவே தன்னுடைய நிலைப்பாட்டைச் சொல்வதற்கு வினோவுக்கு உரித்துண்டு” என.
இது அவருடைய தலைமைத்துவத் தோல்வியின் வெளிப்பாடாகும். மட்டுமல்ல, ஒப்பீட்டளவில் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்த கட்சிகளில் ஓரளவுக்கு மக்கள் செல்வாக்கைக் கொண்டிருக்கும் ரெலோவின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கும் நிலை உருவாகியுள்ளது என்று அனைவருக்கும் தெரியும்.
அதாவது, தன்னுடைய கட்சியையே பொதுவேட்பாளருக்கான முழுமையான ஆதரவு நிலைப்பாட்டுடன் நிறுத்த முடியவில்லை – செல்வம் அடைக்கலநாதனால்.
இந்தச் சீரில் எப்படிப்பொது வேட்பாளருக்கான ஆதரவை வெளியே மக்களிடத்திலும் பிற அரசியற் சக்திகளிடத்திலும் ஒன்று திரட்டுவது?
அதற்கான தகுதியையை இழந்து நிற்கிறது ரெலோ.
ஆனால், இதை ஒத்த நிலைமைகள் வேறு கட்சிகளுக்குள் நடந்தால், அதைப் பெரும் பிளவாகக் காட்டுவதற்குப் பலர் உள்ளனர். குறிப்பாக இந்த மாதிரிப் பிரச்சினை தமிழரசுக் கட்சிக்குள் நடக்கிறது என்றால், அதை மேடை போட்டுச் சொல்வதற்கும் அதற்கு எண்ணெய் ஊற்றி தீயைப் பற்ற வைப்பதற்கும் ஆர்வமாக இருக்கிறார்கள்.
என்பதால்தான், தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை மீறி அந்தக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளை எடுத்த பொதுவேட்பாளருக்கான ஆதரவைப் பாராட்டிக் கொண்டாடுவதற்காக ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அங்கே ஓடோடிச் சென்றார்.
தன்னுடைய கட்சியின் உறுப்பினர். அதுவும் பாராளுமன்றப் பிரதிநிதி ஒருவர் கட்சியின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ளாமல், மறுதலித்து வெளியே நிற்கிறார். அதைப் பேசித்தீர்த்து ஒரு ஒழுங்குக்கொண்டு வராமல், அடுத்த வீட்டுப் பிரச்சினையைப் பார்க்கப்போயிருக்கிறார் செல்வம்.
இதைத்தான் சந்தி சிரிக்கும் சங்கதி என்பது.
கடைசியில் செல்வத்தினால் (தலைவரினால்) வினோநோகராதலிங்கத்தைக் கட்டுப்படுத்தவும் முடியவில்லை. தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் முடிவை முழுமையாகக் கொண்டாடவும் முடியவில்லை.
காரணம், தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மற்றும் கிளிநொச்சி மாவட்டக்கிளைகள் தன்னிச்சையாக எடுத்த – கட்சியின் தீர்மானத்துக்கு மாறான முடிவுகள் செல்லுபடியற்றனவாகி விட்டன. இப்பொழுது தமிழரசுக் கட்சி பகிரங்கமாகவே சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது. அத்துடன், அதே பகிரங்கத் தன்மையோடு பொதுவேட்பாளரை மறுதலித்துள்ளது. போதாக்குறைக்கு பொதுவேட்பாளராக நிற்கும் அரியநேத்திரன் அதிலிருந்து விலக வேண்டும். அல்லது கட்சிக்கு விளக்கமளிக்க வேண்டும் என்று காலக் கெடுவையும் விதித்துள்ளது.
இதை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா சஜித் பிரேமதாசாவுக்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என்று யாழ்ப்பாணத்தில் நடந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கத்தின் நினைவு நிகழ்வில் உரையாற்றும்போது மேலும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
இதனால் ஓடோடிச் சென்று வாழ்த்துச் சொன்ன செல்வம், மூக்குடைபட்டுப் போயிருக்கிறார்.
இதுதான் பொது வேட்பாளரை ஆதரித்து நிற்கும் தலைமைத்துவங்களின் நிலையாக உள்ளது.
ஆனால் தமிழரசுக் கட்சியையும் பொது வேட்பாளர் விடயம் இரண்டாகப் பிளந்துள்ளது. ஏற்கனவே அந்தக் கட்சி உள்முரண்பாடுகளால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அதன் விளைவாக நீதிமன்றப்படியேறி வழக்காடிக் கொண்டிருக்கிறது.
அதை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையிலேயே தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் இப்போதுள்ளது.
பொதுவேட்பாளரை அந்தக் கட்சியைச் சேர்ந்த சிறிதரனின் அணியினர் ஆதரிக்கின்றனர். அவருக்கு வெளியே உள்ளவர்கள் அதை எதிர்க்கின்றனர். இது கட்சியை மேலும் ஆழமாகப் பிளவு படுத்துகிறது.
இதேவேளை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் இந்தப் பிளவுகள் மேலும் வலுப்பெறும் என்றே தெரிகிறது. ரெலோ, தமிழரசுக் கட்சிக்குள் மட்டுமல்ல, புளொட்டுக்குள்ளும் மோதல்கள் உருவாகக் கூடிய சூழலே உள்ளது.
பொதுவேட்பாளர் தொடர்பாக புளொட்டுக்குள் ஏற்கனவே இருவேறு நிலைப்பாடுகளுண்டு. புளொட்டின் தலைவர் சித்தார்த்தனுக்கு இதில் உடன்பாடில்லை. இதை அவர் பல தடவை நேர்ப்பேச்சுகளில் சொல்லியிருக்கிறார். கட்சியின் அடுத்த நிலையில் உள்ள சிலரின் விருப்பத்துக்கு இடமளிக்கும் வகையிலும், தாம் இணைந்து நிற்கும் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமைக்காகவுமே பொதுவேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டியுள்ளது என.
எனவே ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு இந்தக் கட்சிகளுக்குள் ஏகப்பட்ட பிரச்சினைகள் உருவெடுக்கக் கூடிய சூழலே காணப்படுகிறது.
இதற்கொரு சிறிய எடுத்துக் காட்டு, பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பவர், தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினராகும். ஆனால், பொது வேட்பாளருக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே தமிழரசுக் கட்சி உள்ளது. வேட்பாளராகப் போட்டியிடும் அரியநேத்திரனிடம் அது விளக்கம் கோரியிருப்பதுடன், போட்டியிலிருந்து விலகுமாறும் அது பணித்துள்ளது.
ஆக பொதுவேட்பாளரை நிராகரிக்கின்ற கட்சியிலிருந்து கொண்டே, அதனுடைய மத்திய குழு உறுப்பினராக இருந்து கொண்டே, கட்சியின் நிலைப்பாட்டுக்கும் விதிமுறைகளுக்கும் மாறான முறையில் வேட்பாளராகக் களமிறங்கியிருக்கிறார் அரியநேத்திரன் என்றால், அவருடைய கண்ணியம், ஒழுங்கு, மதிப்புப் பற்றியெல்லாம் என்னவென்று சொல்வது? குறைந்த பட்சம் தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து அவர் விலகிக் கொண்டு தமிழ்ப்பொது வேட்பாளராக நின்றிருக்க வேண்டும். அல்லது இப்பொழுது விலக வேண்டும்.
மட்டுமல்ல, “மட்டக்களப்பு ரகசியங்கள்” என்ற அநாமதேய முகப்புத்தகத்தை இயக்கியோரில் ஒருவராகவும் அரியநேத்திரன் இருந்துள்ளார். அதற்குள்ளிருந்து கொண்டே தமக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர்களை அந்த அநாமதேய முகப்புத்தகத்தில் அவர் வசைகளைப் பாடிப் பழிதீர்த்திருக்கிறார்.
பொதுவேட்பாளராக அரியநேத்திரன் களமிறங்கியபோதுதான் இந்த விடயங்கள் எல்லாம் வெளியே தெரியவந்தன. பொதுவேட்பாளராக அரியநேத்திரன் களமிறங்கியதை விரும்பாத “மட்டக்களப்பு ரகசியங்களின்” ஏனைய பங்காளர்கள் இந்த உண்மையைப் போட்டுடைத்துள்ளனர்.
இதை மறுத்துரைக்க முடியாத நிலையில் உள்ளார் திரு. அரியநேத்திரன். அரியநேத்திரனின் வயது, தகுதி, பொறுப்பு என எதற்கும் தகுதியில்லாத வேலை அதுவாகும்.
அப்படியான ஒருவரை தமிழரசுக் கட்சி மத்திய குழுவில் வைத்திருந்ததற்காக வெட்கப்பட வேண்டும். அதையும் விட அவரைப் பொது வேட்பாளராகக் களமிறக்கிய பொதுக்கட்டமைப்பினரும் அதற்குள்ளிருக்கும் மூத்த கட்சிகளும் கூடத் தலைகுனிய வேண்டும்.
மொத்தத்தில் சிறுபிள்ளை விளையாட்டாகத் தொடங்கிய தமிழ்ப்பொது வேட்பாளர், பெருந்தீமைகளை உருவாக்கப்போகிறது.
1980 களில் விடுதலை இயக்கங்கள், மக்களுடைய நம்பிக்கைக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் மாறாக பொறுப்பற்ற தனமாகச் செயற்பட்டன. இதைக்குறித்து அப்போது எழுத்தாளர் செங்கை ஆழியான், “இந்த நாடு உருப்படாது” என்றொரு நாவலையும் “சிறுபிள்ளை வேணாண்மை”, “குளவிக்கூட்டைக் கலைக்காதீர்கள்” என இரண்டு சிறுகதைகளையும் எழுதினார்.
அந்தக் கதைகள் மிகச்சரியான கணிப்பீட்டையும் மிகக் கூடிய உண்மையையும் எடுத்துரைத்திருந்தன.
ஆனால், அதை அன்று பலரும் ஏற்கவில்லை. எள்ளி நகைத்தனர். இறுதியில் செங்கை ஆழியான் சொன்னதே நடந்தது.
அதையொத்த காட்சிகளே இப்பொழுது நடந்து கொண்டிருக்கின்றன.
ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் வரலாறு நகரவில்லை. தேங்கிக் கிடக்கிறது.