— அழகு குணசீலன் —
இந்திய பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் கொழும்புக்கு விஜயம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். வஞ்சகம் அற்ற வகையில் சகல ஊடகங்களிலும் முக்கிய தலைப்புச் செய்தியும் அவர்தான், கொட்டை எழுத்துச் செய்தியும் அவர்தான்.
யார் இந்த அஜித் டோவால்?
அவரின் கொழும்பு விஜயத்தின் பின் பக்கம் என்ன?
இறைமையுள்ள நாடொன்றின் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள இன்றைய நிலையில், அயல் பிராந்திய வல்லரசு நாட்டின் பிரதிநிதி என்ற வகையில் அவரது பயணம் எந்தளவுக்கு முக்கியத்துவமானது?
அவர் தென்னிலங்கை முன்னணி வேட்பாளர்களையும், வடக்கு தமிழ் அரசியல் தலைமைகளையும், மலையக தமிழ் அரசியல் தலைமைகளையும் சந்திக்க வேண்டிய தேவை என்ன?
தமிழ்த்தேசிய பொதுக்கூட்டமைப்பின் பொதுவேட்பாளரை அஜித் டோவால் சந்திக்காதது ஏன்?
இந்த கேள்விகள் அனைத்தும் அந்த கொட்டை எழுத்து -தலைப்புச் செய்திகளுக்கு பின்னால் எழுப்பப்படவேண்டியவை.
இந்தியா 1947 இல் சுதந்திரம் பெற்ற போது இவருக்கு இரண்டு வயது. 1945 இல் பிறந்த அஜித் டோவாலுக்கு தற்போது வயது 79. தோற்றத்தில் இன்னும் இளமையானவர். கடந்த பத்து ஆண்டுகளாக 2014 முதல் இந்திய பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருப்பவர். அதற்கு முன்னர் இந்திய புலனாய்வு அமைப்பான ரோவின் பணிப்பாளராகவும் பணியாற்றினார். தென்கிழக்காசிய பாதுகாப்பு பரப்பில் நன்கு அறியப்பட்டவரும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அதிஉச்ச நம்பிக்கைக்கும் உரியவரும்.
அஜித் டோவாலின் கொழும்பு விஜயத்தின் முன்பக்கம் COLOMBO SECURITY CONCLAVE (CSC) அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள மாநாட்டிற்கான சில ஏற்பாடுகளை செய்வதும், அங்கத்துவ நாடுகளுடனான ஒப்பந்தம் ஒன்றில் ஒப்பம் இடுவதுமாகும். இந்த அமைப்பில் இந்தியா, இலங்கை, மாலைதீவு, மொரீசியஸ், வங்காள தேசம் என்பன உள்ளன. சீசெல்சு(SEYCHELLES) பார்வையாளர் அந்தஸ்த்தில் உள்ளது. இந்த அமைப்பிற்கு தலைமை இந்தியா. தலைமையகம் கொழும்பு.
இந்த பிராந்திய பாதுகாப்பு அமைப்பின் நோக்கம் இந்து சமுத்திர பிராந்தியத்தில் பாதுகாப்பையும், ஸ்த்திரத்தன்மையையும் பேணல். இன்னும் கொஞ்சம் வெளிச்சம் போட்டு காட்டுவதென்றால் இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் சீனாவின் தலையீட்டை -செல்வாக்கை கட்டுப்படுத்தல். அடுத்தது அமெரிக்காவை தூரத்தில் வைத்தல்.
டோவாலின் வருகையின் பின்பக்கம் இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் களத்தை நோட்டம் விடுவது. மோப்பம் பிடிப்பது. செப்டம்பர் 21ம்திகதி தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்கள் இருக்கின்ற நிலையில் இந்த பின்பக்கம் முக்கியத்துவம் வாய்ந்தது.
“இம்முறை நீங்கள் யாரை ஆதரிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை . நீங்கள் அனைவரும் ஒன்று பட்டு ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்” தன்னை இந்திய இல்லத்தில் சந்தித்த தமிழ்த்தேசிய எம்.பி.கள் நால்வருக்கு அவர் சொன்ன வார்த்தைகள் இவை. அஜித் டோவாலின் இந்த வாக்கியத்தில் உள்ள “இம்முறை” என்பது எமக்கு சொல்வது கடந்த முறைகளில் அவர் யாரை ஆதரிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் என்பதே.
மறுபக்கத்தில் இதன் அர்த்தம் அவர் இம்முறை யாரையும் ஆதரிக்க சொல்லவில்லை என்றும் யாரும் சத்தியம் செய்யமுடியாது. ஏனெனில் கொழும்பு சந்திப்பில் ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிப்பவர்கள், பொதுவேட்பாளர் ஆதரவாளர்கள், தென்னிலங்கை வேட்பாளரை ஆதரிப்போர் எல்லாம் ஒன்றாக இருக்கும் போது “இன்னாரை ஆதரியுங்கள்” என்று சொல்வதற்கு டோவால் அரசியல், இராஜதந்திர, புலனாய்வு பாலர் வகுப்பில் படிப்பவர் அல்லவே. அவர் எப்படி சொல்ல வேண்டுமோ அப்படித்தான் சொல்லியிருக்கிறார்.
வடக்கு தமிழ்த்தேசிய பாராளுமன்ற கட்சிகளின் பிரதிநிதிகளாக மாவை சேனாதிராஜா, சி.வி.விக்னேஸ்வரன், த.சித்தார்த்தன், எம்.சுமந்திரன், சி. சிறிதரன், அ.செல்வம், செ.கஜேந்திரன் ஆகியோர் சந்திப்புக்கு அழைக்கப்பட்டிருந்தனர். முதலில் பெயர் குறிப்பிட்ட மூன்று தலைவர்களும் சந்திப்பிற்கு வரவில்லை. சிறிதரன், சுமந்திரன், செல்வம், கஜேந்திரன் ஆகியோரே அஜித் டோவாலை சந்தித்துள்ளனர்.
சிறிதரன் லண்டன் செல்லும் பயணத்தில் அவசர,அவசரமாக ‘சுடுகுது மடியப்பிடி’ என்ற நிலையில் சிங்கள தலைமைகளால் ஏமாற்றப்பட்ட ‘விரக்தியில்’ தமிழ்ப்பொதுவேட்பாளரை நிறுத்தியிருக்கிறோம் என்று நின்ற நிலையில் தன்பாட்டுக்கு சொல்லி விட்டு பத்து நிமிடங்களில் பதறியடித்து பயணணத்திற்காக வெளியேறி இருக்கிறார்.
செல்வத்தார் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ரெலோவின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாகவும் பேசவில்லை, எதிராகவும் பேசவில்லையாம். இந்திய அதிகாரிகளுக்கு முன்னால் மிக பயபக்தியுடன் நடந்து கொண்டார் என்கிறார்கள். கஜேந்திரன் ஜனாதிபதி வேட்பாளர்கள் எவரும் ‘சமஷ்டி’ தீர்வை பகிரங்கமாக முன்வைத்தால் மட்டுமே அவருக்கு வாக்களிப்பது குறித்து பரிசீலிப்போம். இல்லையேல் பகிஷ்கரிப்பு பகிஷ்கரிப்புத்தான் என்று ‘கறந்தபால் முலைக்கேறாது’ என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
இனி சுமந்திரன். தனது வழக்கமான பாணியில் மூன்று வேட்பாளர்களது நிலைப்பாடுகளையும் தமிழரசு பரிசீலிக்கிறது என்றும், பொருத்தமான ஒருவரை தெரிவு செய்து அவரை ஆதரிக்குமாறு மக்களைக்கோருவோம் என்றும் சொல்லியிருக்கிறார். அத்தோடு தமிழ்ப்பொதுவேட்பாளருக்கு எதிராக கட்சி விளக்கம் கோரியிருப்பதையும் அவர் அஜித் டோவாலுக்கு நினைவுபடுத்த தவறவில்லை. அப்போது அஜித் டோவாலின் அகம் முகத்தில் தெரிந்திருக்கிறது. அது சரியான நிலைப்பாடு என்பதுதான் அவரின் நிலைப்பாடாம்.
இந்த சந்திப்பின் போது சிறிதரனின் ‘விரக்தி’ மற்றும் கஜேந்திரனின் ‘சமஷ்டி’ என்ற வார்த்தைகளை கேட்டபோது அஜித் டோவால் கொடுப்புக்குள் சிரித்தாராம். இவர்களை திருத்த முடியாது என்று நினைத்தாரோ? அல்லது இவர்களுக்கு சுமந்திரன் சொல்லும் “மு…’ வார்த்தை பொருத்தமானதுதான் என்று நினைத்தாரோ தெரியவில்லை.
ஏனெனில் கட்சிகளாகப் பிரிந்து, கட்சிக்குள் பிரிந்து, வடக்கு,கிழக்காக பிரிந்து, மாவட்டமாக பிரிந்துதான் பொது வேட்பாளருக்கு பந்தல் போடுகிறார்கள். இது சிரிக்கவேண்டிய விடயம்தானே.
இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையும் என்பதை நோட்டம் விடுவது இம்முறை இந்தியாவுக்கும் கஷ்டமாகத்தான் இருக்கிறது. அதனால்தான் தமிழ்த்தரப்பை ஒரு வழிக்கு கொண்டு வந்தால் ஓரளவுக்கு எதிர்வு கூறலாம் என்று இந்தியா கருதுகிறது. சீனாவை தேர்தல் காலத்தில் தள்ளி வைப்பது இலகுவானது. ஏனெனில் சீனா இவ்வாறான விடயங்களை உள்நாட்டு விவகாரம் என்று சற்று தூரத்தில் நின்றே அவதானிப்பது வழக்கம். சீனாவை பொறுத்தமட்டில் யார் வென்றாலும் அதன் முதலீட்டு முயற்சிகள் முக்கியமானவை. அதை தேர்தல் முடிந்ததும் அது பார்த்துக்கொள்ளும்.
இந்தியாவுக்கு இருக்கின்ற பிரச்சினை சீனாவை மட்டும் அல்ல ஒரே நேரத்தில் அமெரிக்காவையும் தூரத்தில் நிறுத்தவேண்டும். தான் இலங்கையை நெருங்க வேண்டும்.
ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞானத்தில் கூறப்பட்டுள்ள ‘தேரவாத பொருளாதாரம்’ பற்றி பிரதமர் தினேஷ் குணவர்தன அஜீத் டோவாலிடம் இது இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரான இந்தியாவின் பொருளாதார முறைமை என்று சிலாகித்து பேசியிருக்கிறார். அநுரகுமாரவின் தேர்தல் விஞ்ஞாபனம் இந்தியாவுக்கு ஆதரவாக பேசுகிறது. இவர்கள் நாங்கள் உங்கள் ஆட்கள்தான் என்று காட்ட முண்டியடிக்கிறார்கள்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாலம் அமைப்பதில் கத்தோலிக்க கர்தினால், அஸ்கிரிய, மல்வத்தை பீட தலைமைகள் என்பனவற்றுக்கு உடன்பாடில்லை. இது விடயத்தில் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முழுமையான உடன்பாடில்லை என்று தெரிகிறது. விக்கிரமசிங்கவை அமெரிக்காவும், ஐரோப்பாவும், சர்வதேச நிதி நிறுவனங்களும் விரும்புகின்றன. ரணில் சொல்வதுபோல் ஒரு தொடர்ச்சியை அவர்களும் விரும்புகிறார்கள்.
தமிழ் பொதுவேட்பாளரை இந்தியா விரும்பவில்லை. இது தமிழர் வாக்குகளை சிதறடிக்கின்ற, இனப்பிரச்சினைக்கான தீர்வு ஒன்றை எட்டும் முயற்சியை பாதிக்கும் என்று நம்புகின்றது. அநுரகுமாரவுக்கு தமிழ்மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதை இந்தியா நன்கறியும். இதனால் இந்த வாக்குகள் சஜீத்பிரேமதாசவுக்கு அளிக்கப்படுவதை அது விரும்புகிறது. அஜீத் டோவால் தமிழ்ப்பொதுவேட்பாளரை சந்திக்க ஆர்வம் காட்டாதது அவரை ஒரு வேட்பாளராகவே கருத்தில் கொள்ளவில்லை என்றே கருதவேண்டி உள்ளது.
இந்த பின்னணிகளை கூட்டிக்கழித்து பார்த்தால் தமிழ்ப் பொதுவேட்பாளர் வாபஸ் பெறப்பட்டால் அந்த வாக்குகளை சஜீத்திற்கு கிடைக்கக்கூடியதாக செய்யலாம் என்று இந்தியா கணக்குப்போடுகிறது. தமிழ் பொது வேட்பாளர் பிரிக்கப்போவது சஜீத்தின் வாக்குகள் என்பது தெளிவானது. அதனால்தான் முஸ்லீம் கட்சிதலைமைகள் சுமந்திரன் பாணியில் தமிழ் பொதுவேட்பாளர் குறித்து கருத்து கூறுகின்றன. பொது வேட்பாளரை கொழும்புக்கு கொண்டு வரவேண்டாம் என்று மனோகணேசன் சொன்னதன் பின்னணியும் இதுதான்.
ரணில் விக்கிரமசிங்க ஒப்பீட்டளவில் அநுரகுமார, சஜீத் பிரேமதாசவை விடவும் சர்வதேச தொடர்புகளைக் கொண்டவர். சர்வதேச அரசியல், பொருளாதார சூழலை விளங்கிக்கொண்டவர். ஆனால் அவரை தங்கள் விருப்பத்திற்கு கையாள்வது கஷ்டம். என்றாலும் சர்வதேச நாணய நிதியம் ஊடாக அவரை கணுவில் கட்டலாம் என்று மேற்குலகம் நினைக்கிறது. அனுபவம், ஆளுமை, கல்வி அறிவு, சர்வதேச உறவு, துணிச்சல் போன்ற பலவற்றில் சஜீத்தும், அநுரவும் பின்னுக்கு நிற்கிறார்கள். ரணில் தனக்கு பிடிக்காத ஒன்றை யார் என்றும் பார்க்காமல் முகத்தில் அறைந்தாற் போல் நேரடியாக சொல்லக் கூடியவர்.
ஜனாதிபதி பதவி ஏற்ற பின்னர் சந்திப்பு ஒன்றில் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவரை ‘போய் ஆபிரகாம் லிங்கனை படித்து விட்டு வாருங்கள்’ என்று சொன்னவர். ‘ஜேர்மனி அலை’ ஊடகவியலாளரிடம் ‘நாங்கள் இரண்டாம் தரமக்கள் இல்லை’ என்று முகத்தில் அறைந்தவர். என்றாலும் அமெரிக்காவுக்கு வேறு மாற்று இல்லாமல் இருக்கிறது. இந்தியா இவரை தங்களுக்கு ஏற்ப வளைப்பது கஷ்டம் என்று நினைக்கிறது. ஏனெனில் ஒரே நேரத்தில் அமெரிக்காவையும், சீனாவையும் சமாளிக்கும் வல்லமை ரணிலுக்கு உண்டு.
இதற்கிடையில் இன்னும் பல கட்சிமாற்றங்களும், மேடையேற்றங்களும் நிகழ வாய்ப்புள்ளது. சிவப்பு சட்டைக்காரர்கள் வன்முறைக்கு திட்டமிட்டுள்ளதாக விமல்வீரவன்ச கூறியிருக்கிறார். இன, மத கலவரங்கள் குறித்தும் எதிர்வு கூறல்களும், எச்சரிக்கைகளும் உண்டு. தேர்தல் வெற்றி தந்திரோபாயங்களில் காலம் நெருங்க, நெருங்க காட்சிகள் மாறலாம்.
தமிழ்ப் பொதுவேட்பாளர் வாபஸ்பெறப்பட்டு சஜீத் பிரேமதாசவுக்கு வாக்களிக்குமாறு அழுத்தம் ஒன்றை பிரயோகித்து தமிழர்கள் கேட்கப்படலாம்.
ரணிலையும் சஜீத்தையும் இணைக்கும் முயற்சி இன்னும் நடந்துகொண்டு இருக்க, சஜீத் அணியில் இருந்து மேலும் தாவல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
ரணிலும், நாமலும் ஒரு உடன்பாட்டிற்கு வரமாட்டார்கள் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை.
எல்லோராலும் தனித்து விடப்பட்டு தனித்து ஓடும் வேட்பாளராக அநுரகுமாரவே இருக்கப் போகிறார்.
ஜனாதிபதியாவதற்கு அன்றி வாக்குபிரிப்பாளரர்களாக களமிறக்கப்பட்ட பலரும் கடைசி நேரத்தில் வாபஸ்பெற்று தங்கள் ஆதரவை வேறு வேட்பாளர்களுக்கு அளிக்குமாறு கேட்கலாம்.
இந்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில்,
பலரும் பேசியும்,எழுதியும் வருவது போல் 2ம்,3ம் தெரிவு வாக்குகள் அளிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிக,மிகக் குறைவு. அவ்வாறு அளிக்கப்பட்டால் கழிவு வாக்குகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஒரு கட்சியில் ஒருவர் போட்டியிடும் போது கொள்கைக்கும், ஆளுக்குமான ஒரு வாக்கே சனியான தேர்வு. மாறாக வேற்று கட்சியின் வேட்பாளருக்கும் வாக்களிப்பது அரசியலில் அர்த்தமற்றதும், கட்சிகளின் தனித்துவ கொள்கைகளை மறுதலிப்பதுமாகும்.
உண்மையில் ஒரே கட்சியில், ஒரே கொள்கையில் ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடும்போதே அவர்களுக்குள் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்வது சரியானதாக அமையும். பாராளுமன்ற தேர்தலில் கூட இலங்கையில் இந்த விருப்பதேர்வு பெரிதும் பின்பற்றப்படுவதில்லை. இதனால் தான் பல்வேறு நாடுகளில் குறிப்பிட்ட அளவு வாக்குகளை பெறும் வேட்பாளர்களுக்கு இடையே மட்டும் இரண்டாவது தேர்தல் இடம்பெறுகிறது.
இலங்கையின் இந்த ஜனாதிபதி தேர்தலில் வெல்லப்போவது அல்லது தோற்கப்போவது வேட்பாளர்களல்ல அவர்களுக்கு பின்னால் உள்ள வல்லரசுகளே. இதனையே அஜித் டோல்வாலின் கொட்டை எழுத்துச்செய்திகளுக்ககு பின்னால் தேடவேண்டி உள்ளது.