— அழகு குணசீலன் —
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் திருவிழாவுக்கு கொடியேறியிருக்கிறது. செப்டம்பர் 21ம் திகதி தேரோட்டம். மறுநாள் தீர்த்த உற்சவம், திருவேட்டை.
இந்த நிலையில் தமிழ் பொதுவேட்பாளர் பற்றி அதிகம் பேசி, கூடிக்கலைந்தவர்கள் தமிழ்த்தரப்பினர்தான். ஆனாலும் அவர்களால் ஒரு தமிழ்பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சி தோல்வியில் முடிவடைந்திருக்கிறது.
ஏனெனில் தமிழ்மக்களின், பொது அமைப்புக்களின், தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் ஏகோபித்த தேர்வாக இல்லாவிட்டாலும் பெரும்பான்மையோர் தேர்வாக ஒரு பொதுப்பிரஜையை வேட்பாளராக நிறுத்த முடியவில்லை என்பது முதல் தோல்வி.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துதல் என்ற எண்ணக்கருவின்- இலக்குகளின் அடிப்படையில் இது தோல்வியடைந்துள்ளது. இதற்கான பொறுப்பு தமிழ்த்தேசிய பொதுக் கூட்டமைப்பு 14 பிரதிநிதிகளையும் கடந்தது.
1. பொதுவேட்பாளர் ஒருவர் கட்சிகளைக் கடந்த ஒரு பொதுப்பிரஜையாக இருக்கவேண்டும் என்பது ஒரு பொது நிபந்தனை.
2.வடக்கு கிழக்கில் வாழும் தமிழ்மக்களின் வாக்குகள் தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு அளிக்கப்படுவதை தடுத்தல் மற்றோரு இலக்கு.
3. தமிழ்த்தேசிய கட்சிகள் அனைத்தும் இணைந்து ஒரு பொதுவேட்பாளரை நியமித்தல். இது கூட வடக்கு -கிழக்கு தமிழ்க் கட்சிகள் அனைத்தையும் உள்வாங்கியதாக இருந்திருக்கவேண்டும். அப்போது தான் அவர்கள் கூறுகின்ற ஒட்டு மொத்த தமிழ்மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமையும்.
4.வடக்கு -கிழக்கு தமிழ்மக்கள் ஓரணியில் ஒற்றுமையாக தமிழ்த்தேசிய அரசியலில் பயணிக்கிறார்கள் என்பதை காட்டுதல்.
5. இதன் ஊடாக சர்வதேசத்தின் கவனத்தை தமிழ்த்தேசியம் நோக்கி திருப்பி அங்கீகாரத்தை பெறல்.
இவற்றில் முதல் மூன்று இலக்குகளும் எட்டப்படவில்லை. முதல் மூன்றும் அடையப்படவில்லை என்பதன் அடிப்படையில் இறுதி இரண்டு இலக்குகளும் அடைய முடியாதவையாகின்றன. இதனை மதிப்பீடு செய்வதற்கு தேர்தல் முடியும்வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. முதல்கோணல் முற்றும் கோணல்.
தமிழரசுக்கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் இன்னும் பதவிகளில் இருந்து கொண்டு சுயேட்சையாகவும், வேறு சின்னத்திலும் போட்டியிடுவது தமிழ்ப்பொதுவேட்பாளர் கருத்தியலுக்கு முரணானது. இதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொதுவேட்பாளர் நிலையுடன் ஒப்பிடமுடியாது.
வடக்கு -கிழக்கு தமிழ்மக்களின் வாக்குகள் தென்னிலங்கை வேட்பாளருக்கு அளிக்கப்படுவதை தடுத்தல். இன்றைய நிலையில் இது முற்று முழுதாக நடைமுறைச் சாத்தியமும், ஜதார்த்தமும் அற்ற இலக்கு. கடந்த ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தல்களில் இது சாத்தியப்படவில்லை. தமிழ் மக்கள் கடந்த காலங்களில் தென்னிலங்கை கட்சிகளுக்கு அளித்த வாக்குகளின் தொகை தொடர்ச்சியாக அதிகரித்தும், தமிழ்த்தேசிய கட்சிகளுக்கு அளித்த வாக்குகள் தொகை வீழ்ச்சியடைந்தும் வந்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்மக்கள் தமிழ்த்தேசிய கட்சிகளை மட்டும் தங்கள் ஜனநாயக தேர்வாக கொள்ளவில்லை. ஒரு பகுதி மக்கள் வடக்கு -கிழக்கு மாற்று தமிழ்க்கட்சிகளுக்கும், தென்னிலங்கை தேசிய கட்சிகளுக்கும் தனித்தும், கூட்டணியாகவும் வாக்களித்து வந்துள்ளனர். கடந்த 2020 பாராளுமன்ற தேர்தலில் இது மிகத் தெளிவாக வெளிப்பட்டது.
வடக்கு -கிழக்கு தமிழ்மக்களின் ஒற்றுமையை காட்டுதல் என்ற விடயம் சிரிப்புக்கிடமானது. மக்களின் ஒற்றுமையை, ஒற்றுமையற்று பிளவுபட்டு நிற்கின்ற கட்சிகளால் எப்படி ஏற்படுத்த முடியும். தமிழ்க் காங்கிரஸ் ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்க கோருகிறது. தமிழரசுக்கட்சி பொதுவேட்பாளரை நிராகரிக்கிறது.
மற்றைய தமிழ்த்தேசிய கட்சிகளும், கூட்டுக்களும் அணியாக, கட்சியாக பிளவுபட்டு நிற்கின்றன. இந்த நிலையில் எப்படி ஒற்றுமையை காட்டுவது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பையே கட்டிக்காக்க முடியவில்லை, கட்சியை கட்டிக்காக்க முடியவில்லை. தமிழ்மக்களின் ஒற்றுமையை முன்னுதாரணம் இன்றி எப்படி ஏற்படுத்துவது.
தமிழ்த்தேசிய பொதுக்கூட்டமைப்பின் தமிழ்ப்பொதுவேட்பாளர் மேற்குறிப்பிட்ட அனைத்து முரண்பாடுகளுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுத்து பெறுகின்ற வாக்குகள் ஒப்பீட்டளவில் வடக்கு – கிழக்கு தமிழர்களின் வாக்குகளில் எத்தனை வீதமாக இருந்தால் ஒற்றுமையை சர்வதேசத்திற்கு காட்ட உதவும். என்ற கேள்வியை இங்கு எழுப்புவது பொருத்தமானது.
1977 இல் பாராளுமன்ற தேர்தலை சர்வஜன வாக்கெடுப்பாக பிரகடனம் செய்திருந்த போதும், வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு 50 வீதத்திற்கும் குறைந்த வாக்குகளே கிடைத்தன. அதிலும் அம்பாறை, புத்தளம் மாவட்ட முஸ்லீம்களின் வாக்குகளும் உள்ளடக்கப்பட்டே 50 வீதத்தை மயிரிழையில் தாண்டியிருந்தது.
இந்த அடிப்படையில் இன்றைய சூழலில் வடக்கில் ஈ.பி.டி.பி, அங்கஜன் அணி மற்றும் தென்னிலங்கை கட்சிகளும் கணிசமான அளவு வாக்குகளை பெறுவாய்ப்புண்டு. சஜீத், ரணில், அநுரகுமார, நாமல்,…. என்று பங்கு வைக்கப்பட்டபின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளருக்கு இருக்கின்ற மிச்சம் -எச்சம் எவ்வளவு? மறுபக்கத்தில் சிறியளவான மக்கள் தேர்தலை பகிஷ்கரிப்பர். குத்து விளக்கு கூட்டணிக்குள் முரண்பாடு நிலவுகிறது டீல் அரசியலில் கணிசமான வாக்குகளை தமிழ்ப்பொதுவேட்பாளர் இழப்பார். ஆக தேறிய மிச்சம் எவ்வளவு தேறும்?
கிழக்கில் இந்த நிலை வடக்கை விடவும் தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு இன்னும் பலமாகவும், சாதகமாகவும் உள்ளது. சுமந்திரன் அணி தமிழ்ப்பொதுவேட்பாளரை நிராகரிக்கும் நிலையில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பெற்ற வாக்குகளில் அரைவாசியையாவது தமிழ்ப்பொது வேட்பாளர் பெறுவது அரிதிலும் அரிது.
வவுனியா கூட்டத்தில் முகமிழந்து வந்தவர்கள் தேர்தலில் எந்த முகத்தோடு பிரச்சாரம் செய்யமுடியும். சாணக்கியன் -ஜனா மோதல் தமிழ்பொதுவேட்பாளரை பாதிக்கும். அரியநேந்திரனுக்கும் சாணக்கியனுக்கும் இடையிலான தனிப்பட்ட மோதல் மட்டக்களப்பில் வாக்களிப்பில் சரிவை ஏற்படுத்தும். தமிழரசுக்கட்சி என்பது மட்டக்களப்பில் சாணக்கியனை சுற்றியே சுழல்கிறது.
ரி.எம்.வி.பி, தமிழர் முற்போக்கு கட்சி போன்ற ரணில் ஆதரவு அணியும், சஜீத், நாமல், அநுரகுமார ஆதரவு அணிகளும் பெற்றுக்கொண்ட வாக்குகளில் மீதம் உள்ளவை தான் தமிழ்ப்பொது வேட்பாளரின் பங்காக இருக்கும். முஸ்லீம் காங்கிரஸ் பிளவு, மக்கள் காங்கிரஸ் பிளவு, மற்றும் இன்னும் ரணில் பக்கம் பாய பதுங்குகின்ற ஹிஸ்புல்லா, அமீர் அலி போன்றவர்களின் அரசியலும் தமிழ்மக்கள் மத்தியில் தமிழ்ப்பொது வேட்பாளர் காலத்திற்கு ஏற்ற, கிழக்குக்கு பொருத்தமான சரியான தீர்வா? என்ற கேள்வியை எழுப்பும் போது தமிழர் வாக்குகள் தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு அளிக்கப்படுவதில் செல்வாக்கு செலுத்த முடியும். அம்பாறை யிலும், திருகோணமலையிலும் இதை விடவும் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.
ஆக, வடக்கு – கிழக்கில் தமிழ்ப்பொது வேட்பாளர் ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கப்பட்டிருப்பது தமிழ்த்தேசிய அரசியலின் வீழ்ச்சியை பதிவுசெய்வதுடன், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பிராந்திய, தேசிய கட்சிகளின் வளர்ச்சியை எதிர்வு கூறுவதற்கான ஒரு கருத்துக்கணிப்பாக அமையும்.
தமிழரசுக்கட்சியின் பேச்சாளர் ம.சுமந்திரன் சொல்லியிருப்பதுபோல் செப்டம்பர் 20ம் திகதி அவர்கள் கட்சியின் முடிவை அறிவிக்கலாம். ஆனால் மக்கள் அதற்காக காத்திருக்கவில்லை. அவர்கள் தங்கள் வேட்பாளர் யார் என்பதை தீர்மானித்துவிட்டார்கள். தமிழரசுக்கட்சியின் இந்த இழுத்தடிப்பு கூட சுமந்திரன் தனது பொதுவேட்பாளர் நிராகரிப்பு நிலைப்பாட்டை தேர்தலுக்கு பின்னர் நியாயப்படுத்துவதற்கான தந்திரோபாயம்.
சுமந்திரனின் ஒவ்வொரு நகர்வும் தமிழ்ப்பொது வேட்பாளரை செல்லாக்காசாக்கிறது. அதற்கு ஏன் வாக்களிப்பான் என்ற உணர்வை மக்களுக்கு ஏற்படுத்துகிறது. மக்கள் தென்னிலங்கை வேட்பாளரை தேர்வு செய்ய வாய்ப்பளிக்கிறது. தமிழ்ப்பொது வேட்பாளர் தமிழரசுக்கட்சியால் சத்தமின்றி சாகடிக்கப்படுகிறார்.
தமிழ்ப் பொதுவேட்பாளர் காசு கொடுத்து குத்துமாடு வாங்கிய கதையாக முடியப் போகிறது.
.”…சங்காரம் நிஜம் என்று சங்கே முழங்கு…”!