— வீரகத்தி தனபாலசிங்கம் —
இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் இந்த தடவையே மிகவும் அதிக எண்ணிக்கையில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
இதுகாலவரையில் ஜனாதிபதி தேர்தல் பிரதான இரு அரசியல் கட்சிகளின் அல்லது அவற்றின் தலைமையிலான கூட்டணிகளின் வேட்பாளர்களுக்கு இடையிலான நேரடிப் போட்டியாகவே இருந்து வந்தது. ஆனால் இந்த தடவை ஜனாதிபதி
ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான மும்முனைப் போட்டியாகவே தேர்தல் அமையப்போகிறது.
இறுதி நேரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வனும் ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் வாரிசுவுமான நாமல் ராஜபக்ச களத்தில் இறக்கப்பட்டிருப்பதை அடுத்து மும்முனைப் போட்டி என்ற தோற்றப்பாட்டில் மாற்றம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்குமா என்ற கேள்வியுடன் சில அரசியல் அவதானிகள் குழப்பகரமான கருத்துக்களை வெளியிடுகிறார்கள்.
அதேவேளை நாமல் ராஜபக்சவையும் மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித்
ஜயவீரவையும் சேர்த்து ஐந்து பிரதான வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டியாக ஜனாதிபதி தேர்தலை சில ஊடகங்கள் காண்பிக்க முயற்சிக்கின்றன.
விக்கிரமசிங்கவும் பிரேமதாசவும் பெருவாரியான கட்சிகள், குழுக்களுடன் சேர்ந்து கூட்டணிகளை அமைக்கிறார்கள். ராஜபக்சாக்களை கைவிட்டு வருபவர்கள் இருவருடனும் இணைகிறார்கள். சில கட்சிகளின் தலைவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு மாறாக அவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொந்தத்தில் முடிவுகளை எடுத்து வெவ்வேறு அணிகளில் தங்களை இணைத்துக்கொள்கிறார்கள். கட்சித் தாவல்கள் தீவிரமடைந்திருக்கின்றன. எவர் எந்தப் பக்கம் நிற்கிறார் என்று குழப்பமாக இருக்கிறது. இந்த இலட்சணத்தில் புதிய அரசியல் கலாசாரம், முறைமை மாற்றம் பற்றியும் வாய்கூசாமல் பேச்சு.
இந்த தடவை ஜனாதிபதி தேர்தல் முற்றிலும் வேறுபட்ட ஒரு அரசியல் சூழ்நிலையில் இடம்பெறுகிறது. இரு வருடங்களுக்கு முன்னர் ராஜபக்சாக்களின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட படுமோசமான பொருளாதார நெருக்கடி இலங்கையின் வரலாற்றில் முன்னென்றும் இல்லாத வகையிலான பிரமாண்டமான மக்கள் கிளர்ச்சியை மூளவைத்தது. ராஜபக்சாக்களை அதிகாரத்தில் இருந்து விரட்டிய அந்த கிளர்ச்சிக்கு பிறகு முதற் தடவையாக தங்களது வாக்குரிமையை பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பம் இலங்கை வாக்காளர்களுக்கு கிடைத்திருக்கிறது. கிளர்ச்சியின் விளைவாக நாட்டு மக்களின் அரசியல் சிந்தனையில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டிருக்குமானால் அதை இந்த தேர்தல் நிச்சயம் பிரதிபலிப்பதாக அமையவேண்டும்.
முன்னைய ஜனாதிபதி தேர்தல்களைப் போலன்றி இந்தத் தடவை பிரசாரங்கள் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு முறைப்படி அறிவிப்பதற்கு பல மாதங்களுக்கு முன்னதாகவே தொடங்கி விட்டன. சஜித் பிரேமதாசவும் அநுரா குமாரவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக கடந்த வருடமே அறிவித்து தங்கள் பிரசாரங்களை முன்னெடுக்கத் தொடங்கினார்கள்.
ஆனால், ஜனாதிபதி விக்கிரமசிங்கவை பொறுத்தவரை தேர்தலில் போட்டியிடப் போவதாக கடந்தமாத பிற்பகுதியிலேயே அறிவித்தார். அவரது ஐக்கிய தேசிய கட்சி பலவீனமடைந்திருப்பதால் தன்னை தேர்தலில் ஆதரிக்கக்கூடிய கூட்டணி ஒன்றை உருவாக்குவதில் அவர் கவனம் செலுத்த வேண்டியிருந்தது.
தனது கட்சியின் சார்பிலான வேட்பாளராக அன்றி பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து பிரிந்து வந்திருப்பவர்களை உள்ளடக்கிய ஒரு விசித்திரமான கதம்பக் கூட்டணி ஒன்றின் ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளராக அவர் போட்டியிடுகிறார். 32 அரசியல் கட்சிகள் குழுக்களை உள்ளடக்கிய கூட்டணி ஒன்று தொடர்பான உடன்படிக்கை கடந்த வெள்ளிக்கிழமை கைச்சாத்திடப்பட்டது. இலங்கையின் பிரதான அரசியல் கட்சி ஒன்றின் தலைவர் தேசியத் தேர்தல் ஒன்றில் சுயேச்சையாக போட்டியிடுவது இதுவே முதற்தடவையாகும்.
பொதுஜன பெரமுனவின் சார்பில் தனியான வேட்பாளரை களமிறக்குவதற்கு ராஜபக்சாக்கள் தீர்மானித்ததை அடுத்து அவர்களைக் கைவிட்டு அந்த கட்சியின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் பக்கத்துக்கு வந்து விட்டார்கள். அதனால் ஜனாதிபதி மகிழ்ச்சி அடைந்தாலும், அவர்கள் ஒவ்வொருவரும் தனக்கு கொண்டுவரக்கூடிய வாக்குகளின் எண்ணிக்கையைப் பற்றி உண்மையில் அவர் சிந்தித்துப் பார்க்க வேண்டியது அவசியம்.
தங்கள் தொகுதிகளில் மக்கள் மத்தியில் ஜனாதிபதிக்கு ஆதரவு அதிகரித்துவருவதன் காரணமாகவே அந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜபக்சாக்களை கைவிட்டு அவரை ஆதரிக்க முண்டியடிக்கிறார்கள் என்று சில அவதானிகள் கூறுகிறார்கள். ராஜபக்சாக்களின் அதிவிசுவாசிகளாக இருந்த அரசியல்வாதிகள் கூட தங்களது ஆதரவாளர்களின் வேண்டுகோளின் பிரகாரமே விக்கிரமசிங்கவை ஆதரிப்பதற்கு தாஙகள் தீர்மானித்ததாக பகிரங்கமாகக் கூறுகிறார்கள்.
ஜனாதிபதி தனது பிரசாரத்தை முற்றிலும் வித்தியாசமான ஒரு தந்திரோபாயத்துடன முன்னெடுப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. தன்னை அல்ல தேசத்தையே முன்னிலைப்படுத்தி மக்கள் மத்தியில் பிரசாரம் செய்யப்போவதாக அவர் பிரகடனம் செய்திருக்கிறார்.
எவரையும் எதிர்த்து தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் மற்றைய வேட்பாளர்களைப் போலன்றி தனது எதிர்காலத்துக்காக அல்ல நாட்டின் எதிர்காலத்துக்காகவே போட்டியிடுவதாகவும் கூறும் அவர் தேர்தலில் வெற்றிபெற்றால் சகல கட்சிகளுடனும் சேர்ந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் அறிவித்திருக்கிறார்.
“என்னுடன் இணைந்து பணியாற்ற முன்வருமாறு பிரேமதாசவுக்கும் அநுரா குமாரவுக்கும் முன்னரும் நான் அழைப்பு விடுத்தேன். ஆனால் அவர்கள் அதை நிராகரித்துவிட்டார்கள். அதற்காக அவர்கள் இப்போது கவலைப்படக்கூடும். அடுத்த தடவை அவர்களை எந்த ஆட்சேபனையும் இல்லாமல் அரசாங்கத்திற்குள் கொண்டுவருவேன். அவர்களுக்கு மாத்திரமல்ல, பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான நாமல் ராஜபக்சவுக்கும் அழைப்பு விடுக்கிறேன்” என்று கடந்த வாரம் பத்திரிகை ஆசிரியர்களையும் ஊடக நிறுவனங்களின் தலைவர்களையும் சந்தித்தபோது ஜனாதிபதி கூறினார்.
தேர்தல் பிரசார மேடைகளில் பெரும்பாலும் அவர் எந்த வேட்பாளரையும் தாக்கிப் பேசப்போவதில்லை என்பது நிச்சயம் என்று தெரிகிறது. இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுத்து அபிவிருத்தியை நோக்கி வழிநடத்துவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையே ஒரேயொரு மார்க்கம் என்று கூறும் அவர் அந்த உடன்படிக்கையின் பிரகாரம் தனது தலைமையிலான அரசாங்கம் கடந்த இரு வருடங்களாக முன்னெடுத்துவரும் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளைத் தொடருவதற்கு தனக்கு அடுத்த ஐந்து வருடங்களுக்கு ஆணை தருமாறு மக்களை கேட்கிறார்.
மற்றைய பிரதான வேட்பாளர்களும் கூட சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை எதிர்க்கவில்லை என்பதையும் சில திருத்தங்களுடன் அதையே தொடரப் போவதாகக் கூறுவதையும் ஜனாதிபதி சுட்டிக் காட்டுகிறார். புதிய வாக்குறுதிகளை அவர் வழங்கவில்லை. தற்போது செல்லும் பாதையில் தொடர்ந்து பயணிப்பதற்கே அவர் மக்களின் ஆணையைக் கோருகிறார். அத்துடன் கடந்த காலத்தைப் போன்று கட்சி அரசியல் செய்வதில் நாட்டம் காட்டாமல் சகல கட்சிகளும் ஆதரிக்கக்கூடிய ஒரு சுயேச்சை வேட்பாளராகவே தன்னை முன்னிறுத்தியிருக்கும் விக்கிரமசிங்க கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட புதிய ஒரு ‘அவதாரமாக’ தன்னைக் காட்சிப்படுத்துகிறார்.
ஆழமான கட்சி அரசியல் போட்டாபோட்டிகள் நிறைந்த அரசியல் கலாசாரத்தைக் கொண்ட இலங்கைச் சமுதாயத்தில் ஜனாதிபதியின் தற்போதைய அணுகுமுறை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் மக்கள் மத்தியில் அதற்கு எந்தளவுக்கு வரவேற்பு இருக்கும் என்பதும் முக்கியமான கேள்விகள்.
கடந்த வியாழக்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் தங்களது நியமனப்பத்திரங்களை கையளித்த பிறகு மூன்று பிரதான வேட்பாளர்களும் ஆதரவாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துக்களை வெளியிட்டார்கள்.
“இலங்கை மக்களுக்கு பிரகாசமான ஒரு எதிர்காலத்தை உருவாக்குவதற்காகவே நான் மக்களின் ஆணையை நாடி நிற்கிறேன். நாம் நாட்டைப் பொறுப்பேற்று உறுதிப்பாட்டைக் கொண்டுவந்தோம். உங்களுக்கு இப்போது உணவு, எரிபொருள் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்கள் எல்லாம் கிடைக்கின்றன. இது ஒரு தொடக்கம் மாத்திரமே. உறுதிப்பாடுடைய ஒரு தேசமாக இலங்கையை மாற்றுவதற்கு பெருமளவு பணிகளை செய்ய வேண்டியிருக்கிறது. நாம் ஆட்சிப்பொறுப்பை ஏற்று சட்டம் ஒழுங்கை நிவைநாட்டியிருக்காவிட்டால் பங்களாதேஷின் கதி இலங்கைக்கு ஏற்பட்டிருக்கும். அதனால் இந்த பணிகளை நிறைவேற்றுவதற்கு எனக்கு ஒரு ஆணையைத் தருமாறு மக்களிடம் வேண்டுகிறேன்.
“நெருக்கடியான காலப்பகுதியில் நாட்டைப் பொறுப்பேற்குமாறு கேட்கப்பட்டபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பயந்து ஓடினார்கள். அத்தகைய ஆட்களிடம் நாட்டைக் கையளிக்கப் போகின்றீர்களா இல்லையா என்பதை தீர்மானியுங்கள்” என்று ஜனாதிபதி கூறினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தனது தந்தையார் பாணியில் பொதுமக்கள் யுகம் ஒன்றைக் கொண்டு வரப்போவதாக சூளுரைத்தார்.
“பொதுமக்களின் யுகம் ஒன்றை உருவாக்குவதாக நான் உறுதியளிக்கிறேன். அபிவிருத்தியின் பயன்களை நாட்டில் வாழும் ஒவ்வொருவரும் அனுபவிக்கக்கூடிய சூழ்நிலையை நான் உருவாக்குவேன். எனக்கு ஆதரவாக அணிதிரளுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்” என்று அவர் கூறினார்.
மக்களுக்கு மாற்றம் ஒன்று அவசியமாகத் தேவைப்படுகிறது என்று கூறிய தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார தங்களது முகாம் மாத்திரமே அத்தகைய மாற்றத்தை கொண்டுவரக்கூடிய வல்லமையைக் கொண்டது என்று குறிப்பிட்டார்.
“கடந்த காலத்தில் பெருமளவு தேர்தல்கள் நடத்தப்பட்ட போதிலும் கூட வருடக்கணக்காக மககள் சொல்லொணா இடர்பாடுகளை அனுபவித்தார்கள். இந்த தேர்தலில் எங்களால் வெற்றிபெற முடியும். துன்பங்களை அனுபவிக்கும் நிலவரம் மாறவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். நாட்டையும் மக்களையும் இடர்பாடுகளில் இருந்து மீட்டெடுக்கக்கூடியதாக இந்த தேர்தலை எம்மால் மாற்றமுடியும். அதை எமது முகாமினால் மாத்திரமே சாதிக்கமுடியும் ” என்று அவர் கூறினார்.
நாமல் ராஜபக்சவை பொறுத்தவரை தனது அரசியல் எதிர்காலத்தை மனதிற்கொண்டு பொதுஜன பெரமுனவை மீளக்கட்டியெழுப்பும் ஒரு முயற்சியாகவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். மக்கள் கிளர்ச்சியின் விளைவாக ராஜபக்ச குடும்பம் ஆட்சியதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டதற்கு பிறகு அந்த குடும்பத்தின் முக்கிய உறுப்பினர் ஒருவர் தேர்தல் களத்தில் இறங்கியிருக்கிறார் என்பதே நாமல் ராஜபக்சவின் பிரவேசத்தைப் பொறுத்தவரை குறிப்பிடத்தக்க முக்கிய அம்சமாகும்.
ராஜபக்ச குடும்பத்தின் எந்தவொரு உறுப்பினரும் இந்த தடவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. ஜனாதிபதி விக்கிரமசிங்கவை ஆதரிப்பதே அவர்களுக்கு இருக்கக்கூடிய சிறந்த தெரிவு என்று ஒரு கட்டத்தில் பரவலாக நம்பப்பட்டது. ஆனால் தங்களது எதிர்கால அரசியல் வாய்ப்புக்களை உறுதிசெய்யும் நோக்கில் அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அல்லது நிபந்தனைகளுக்கு இணங்குவதற்கு ஜனாதிபதி திட்டவட்டமாக மறுத்துவிட்டதை அடுத்து பொதுஜன பெரமுனவின் சார்பில் தனியான வேட்பாளரை நிறுத்தும் முடிவுக்கு அவர்கள் வந்தார்கள்.
விக்கிரமசிங்கவுடன் முரண்படுவதற்கு முன்னதாகவே தங்களது கட்சியின் சார்பில் நிறுத்தப்படக்கூடிய வேட்பாளராக தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை முன்னிறுத்தியதன் மூலம் ஜனாதிபதியை பயமுறுத்தும் பாணியில் ராஜபக்சாக்கள் நடந்துகொண்டார்கள். தங்களுக்கு மக்கள் மத்தியில் தற்போது இருக்கின்ற செல்வாக்கை பரீட்சித்துப் பார்ப்பதற்கான ஒரு உரைகல்லாக தம்மிக்கவையும் அவரது பணத்தையும் பயன்படுத்தும் ராஜபக்சாக்களின் பிரயத்தனம் இறுதியில் பயனளிக்கவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று அவர் கடைசி நிமிடத்தில் அறிவித்தார். அதனால் வேறு வழியின்றி நாமல் ராஜபக்சவை களமிறக்க வேண்டிய நிர்ப்பந்தம் ராஜபக்சாக்களுக்கு ஏற்பட்டது.
தேர்தலில் போட்டியிடாவிட்டால் பொதுஜன பெரமுனவின் வாக்கு வங்கி சிதறடிக்கப்பட்டுவிடும் என்றும் அதனால் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் அஞ்சிய ராஜபக்சாக்கள் கட்சியைப் பாதுகாப்பதற்காக நாமல் ராஜபக்சவை போட்டியிட வைத்திருக்கிறார்கள். ஆனால் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு மக்கள் வாக்களிக்கப் போகிறார்களா அல்லது பொதுஜன பெரமுனவை பாதுகாக்க வாக்களிக்கப் போகிறார்களா? போரை முடிவுக்கு கொண்டு வந்தமைக்காக தங்களது தவறுகளைப் பொருட்படுத்தாமல் சிங்கள மக்கள் என்றென்றைக்கும் தங்களுக்கு விசுவாசமானவர்களாக இருக்கவேண்டும் என்ற விபரீதமான எண்ணம் ராஜபக்சாக்களிடம் நிலைகொண்டிருக்கிறது.
அதேவேளை, சாத்தியமானளவுக்கு கூடுதல்பட்ச வாக்குகளைப் பெறுவதற்காக ராஜபக்சாக்கள் சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் உரிமைகளுக்கும் அபிலாசைகளுக்கும் எதிராக பெரும்பான்மையினவாத அணிதிரட்டலை மீண்டும் செய்வதில் நாட்டம் காட்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மூன்று பிரதான வேட்பாளர்களும் தேர்தல் நோக்கங்களுக்காக என்றாலும், சிறுபான்மைச் சமூகங்களுக்கு நேசக்கரத்தை நீட்டுவதால் ராஜபக்சாக்களின் முயற்சிகள் சிங்கள மக்கள் மத்தியில் இந்த தடவை பெரிதாக எடுபடுவதற்கு வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது.
எதிர்காலத்தில் நாட்டுக்கு தலைமை தாங்கும் குறிக்கோளைக் கொண்ட இளம் அரசியல் தலைவரான நாமல் ராஜபக்ச தனது குடும்பத்தின் மூத்தவர்களைப் போலன்றி இனவாதமற்ற அரசியல் பாதையை தெரிவுசெய்தால் ஆரோக்கியமானதாக இருக்கும். அவ்வாறு தன்னை மாற்றிக் கொள்வதற்கு முன்வருவாரா? குறைந்த பட்சம் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆரோக்கியமான ஒரு நிலைப்பாட்டை தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அறிவிப்பதன் மூலம் இனங்களுக்கு இடையிலான உறவுகள் தொடர்பான தனது சிந்தனையை அவர் வெளிக்காட்ட முடியும்.
ஜனாதிபதி தேர்தலில் 23 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும் 16 சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச போன்ற முன்னணி அரசியல்வாதிகளும் அவர்களில் அடங்குவர். ஜனாதிபதியாக தெரிவாவதற்கு அல்லாமல் வேறு நோக்கங்களுக்காகவே அவர்கள் போட்டியிடுகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. பெருவாரியான சுயேச்சை வேட்பாளர்களைப் பொறுத்தவரையிலும் கூட நிலைமை அதுவே.
‘அறகலய’ மக்கள் கிளர்ச்சியில் முன்னரங்கத்தில் நின்ற செயற்பாட்டாளர்களால் ஒரு பிரிவினரால் அமைக்கப்பட்ட ‘மக்கள் போராட்டக் கூட்டணி ‘ என்ற இயக்கத்தின் சார்பில் நுவான் போபகே
என்ற சட்டத்தரணி தேர்தலில் போட்டியிடுவதும் கவனிக்கத்தக்கது.
வழமையாக ஜனாதிபதி தேர்தல்களில் முக்கியத்துவம் பெற்றுவந்த சில அடிப்படைப் பிரச்சினைகள் இந்த தடவை பிரதான வேட்பாளர்களின் கவனத்தைப் பெறுவது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. குறிப்பாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கவேண்டும் என்ற நீண்டகாலக் கோரிக்கைக்கு அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் இடம் கிடைக்குமா என்று தெரியவில்லை. தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வைப் பொறுத்தவரை 13 வது திருத்தத்தின் நடைமுறைப்படுத்தல் தொடர்பில் பொலிஸ், காணி போன்ற முக்கிய அதிகாரங்கள் குறித்து தெளிவற்ற நிலைப்பாடுகளுடன் கூடிய அறிவிப்புக்களை தவிர வேறு எதையும் பிரதான வேட்பாளர்களின் விஞ்ஞாபனங்களில் எதிர்பார்க்க முடியாது.
இலங்கை தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டு சமஷ்டி அடிப்படையில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்கு தயாராக இருப்பதாக தென்னிலங்கையின் எந்த வேட்பாளராவது உறுதியளித்தால் அவரை ஆதரிப்பது குறித்து பரிசீலிக்க முடியும் என்று கூறும் அரசியல்வாதிகளும் வடக்கில் இருக்கிறார்கள். இன்றைய அரசியல் நிலைவரங்கள் குறித்த அவர்களது புரிதலின் இலட்சணம் அது.
இது இவ்வாறிருக்க, தமிழ்ப் பொது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு என்ற புதிய அமைப்பினால் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார்.
தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பு ஆரம்பத்தில் இருந்தே தமிழ்ப்பொது வேட்பாளராக நியமிக்கப்படக்கூடியவருக்கு இருக்கவேண்டியவை என்று வரையறுத்த தகுதிகள் சகலவற்றுக்கும் முரணாக அரியநேத்திரனின் நியமனம் இடம்பெற்றது.
அரியநேத்திரன் தமிழ்த் தேசிய அரசியல் அபிலாசைகளின் ஒரு குறியீடே தவிர வேறு ஒன்றுமில்லை என்று அவரை நியமித்தவர்கள் கூறுகிறார்கள். அவரும் தனது குறியீட்டுக் கடமை தேர்தல் தினத்துடன் முடிந்துவிடும் என்று கூறுகிறார். அதனால் அவரைப் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை. அவரை நிறுத்தியவர்கள் தேர்தல் பிரசாரங்களை எவ்வாறு முன்னெடுக்கப்போகிறார்கள்? தேரதலுக்கு பிறகு என்ன செய்யப் போகிறார்கள்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
(ஈழநாடு )