— அழகு குணசீலன் —
1954 இல் தனிநபர் முரண்பாட்டினால் எரிந்த வீரமுனையில் இருந்து அகதிகளாக வெளியேறிய மக்கள் சம்மாந்துறை -நாடுகாடு அயல்பகுதிகளில் குடியேறிய அந்த தற்காலிக வாழ்விடங்கள் காலப்போக்கில் நிரந்தர மரபுவழி கிராமங்களாக மாறியிருந்தன.
இந்த நிலையை அடைய 35 ஆண்டுகள் ஆகியது. இந்த நிலையில் தான் 1990 கலவரத்தில் வீரமுனை மீண்டும் எரிந்தது. அதுவும் இப்போது 34 ஆண்டுகளாகிறது. நினைவுகூரப்படுகிறது.மொத்தத்தில் 70 ஆண்டுகளாக இந்த பகையுணர்வு தொடர்கிறது. இதற்கு வீரமுனை வரவேற்பு வளைவு அமைவிட விவகாரம் ஒரு குறியீடு.
ஈழப்போராட்டத்தின் பெயரில் தமிழ் ஆயுதக்குழுக்களால் முஸ்லீம் சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளும், முஸ்லீம் சமூகத்தை தற்காத்துக்கொள்ளல் என்ற நிலைப்பாட்டில் அரச படையினருக்கு உடந்தையாக செயற்பட்ட முஸ்லீம் ஆயுதக்குழுக்களினதும் எதிரெதிர் பழிவாங்கல் வன்முறை கலாச்சாரமும் இந்த இரண்டாவது வன்முறை வரலாற்றை பதிவு செய்கின்றன.
1990 யூன் 18 ல் வீரமுனையில் தொடங்கி 1990 ஆகஸ்ட் 12ல் துறைநீலாவணை வரை பரவியது இந்த இனவாத நெருப்பு. இதற்கிடையில் தமிழீழ விடுதலைப் புலிகள் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் வார்ப்பதுபோல் 1990 ஒக்டோபரில் பரம்பரையாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த 14,000 முஸ்லீம் குடும்பங்களை 24 மணிநேரத்தில் இரவோடிரவாக உடுத்த உடையோடு வெளியேற்றினார்கள். அப்போது அதற்கு புலிகள் சொன்ன காரணம் “கிழக்கில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற வன்முறையினால் யாழ்ப்பாண மக்கள் பொறுமையிழந்தால் முஸ்லீம்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை தவிர்ப்பதற்கான ஒரு தற்காப்பு நடவடிக்கையே இந்த வெளியேற்றம்” என்பதாகும். இங்கு எல்லோரும் எழுப்புகின்ற ஒரே கேள்வி புலிகளின் கட்டுப்பாட்டை மீறி யாழ்ப்பாணத்தில் முஸ்லீம் களுக்கு எதிரான ஒரு வன்முறை சாத்தியமா? என்பதாகும்.
“யாழ்ப்பாணம் அவர்களின் சொந்த நிலம். துரதிர்ஷ்டவசமாக கடினமான சூழ்நிலைகள் இந்த முஸ்லீம் மக்களை அகதிகளாக்கியுள்ளது. இது நடந்ததற்காக நாங்கள் மிகவும் வருந்துகிறோம் “. 1994 இல் பி.பி.சி.க்கு வழங்கிய பேட்டி ஒன்றில் வேலுப்பிள்ளை பிரபாகரன் இப்படிக் கூறினார்.
“கடந்த காலத்தில் நடந்ததை மறக்க வேண்டும். அவர்களுடன் பேசத் தயாராக இருக்கிறோம். நான் அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்” முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ஹக்கிம் உடனான பேச்சுவார்த்தை காலத்தில் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் இப்படிச் சொன்னார்.
“கடந்த காலத்தை மறக்காமல், மன்னிக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் “. அன்டன் பாலசிங்கத்திற்கு ஹக்கீம் அளித்த பதில் இது.
இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய பேசுபொருள் வடக்கில் இருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டது தான். புலிகள் மன்னிப்பு கேட்டார்கள். முஸ்லீம் காங்கிரஸ் தலைமை மன்னித்தது. ஆனால் கிழக்கில் தமிழ் – முஸ்லீம் இன உறவில் விரிசலை ஏற்படுத்துவதில் புலிகள் உள்ளிட்ட மற்றைய தமிழ் ஆயுத குழுக்களும், முஸ்லீம் ஆயுதக்குழுக்களும் பின்னணியில் இருந்த போதும் இதுபற்றி பேசப்படவில்லை. வீரமுனை சம்பவத்திலும் இரண்டு தரப்பு ஆயுதக்குழுக்களும் சம்பந்தப்பட்டுள்ளபோதும் அதற்காக யாரும் மன்னிப்பு கேட்கவும் இல்லை. யாரும் மன்னிக்கவும் இல்லை. இருதரப்பு அரசியலிலும் மக்கள் அனாதரவாக விடப்பட்டுள்ளனர்.
உள்ளூர் தகவல்களின் படி புலிகளின் உள்ளூர்ப் பொறுப்பாளராக இருந்த தமிழர் எப்போதும் சம்மாந்துறை முஸ்லிம்கள் மீது அதிகாரம் செலுத்துகின்ற ஒருவராக இருந்துள்ளார். இருதரப்பு “பிரமுகர்கள்” இவரை தங்கள் சொந்த தேவைகளுக்கு தாராளமாக பயன்படுத்தி உள்ளனர். இந்திய படையின் வெளியேற்றத்தின் பின் புலிகளின் மீள்வருகை ஏற்படுத்தக்கூடிய “அடக்குமுறை அதிகாரம்” குறித்து சம்மாந்துறை முஸ்லிம்களுக்கு ஒரு அச்சம் இருந்துள்ளது.
அதேவேளை இந்தியப் படையின் நிழலில் செயற்பட்ட ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் குழுவினரும் இந்திய படையினரின் முஸ்லீம் விரோத போக்கை தமக்கு சாதகமாக பயன்படுத்தி முஸ்லீம்களோடு முரண்பாட்டை வளர்த்துள்ளனர். இந்த நிலையில் இவர்களுக்கு பதிலளிக்க முஸ்லீம் இளைஞர்கள் ஊர்காவல் படையில் இணைந்து இந்திய படையின் துணைக்குழுக்கள் போன்று தாங்களும் இலங்கை படையின் துணைக்குழுவாக செயற்பட்டனர். விளைவு வீரமுனை கொலைக்களமானது. வீரமுனை மக்கள் புலிகள் பலமாக இருந்தபோது புலிகள் பக்கமும், இந்திய படை காலத்தில் மாற்று அமைப்புக்கள் பலமாக இருந்தபோது அவர்கள் பக்கமும் நின்றனர்.
அரசியல்வாதிகள் தங்கள் தங்கள் நலன்களை பேணிக்கொள்வதற்காக இரண்டு சமூகங்களையும் பிரித்து வைத்துள்ளனர். மொத்தத்தில் இரு சமூகங்களிலும் வறுமை அதிகரித்திருக்கிறது. வாழ்க்கைத்தரம் குறைவடைந்துள்ளது. சமூகச்செயற்பாட்டாளர் ஒருவருடன் பேசிய போது 40 முதல் 50 வரையான தமிழ் கைம்பெண்கள் சம்மாந்துறையில் வீட்டுவேலைக்காக வந்து போகின்றனர். 200 முதல் 300 வறியவர்கள் பிச்சை எடுப்பதற்காக ஏறாவூர், வாழைச்சேனை பகுதிகளில் இருந்து வருகின்றனர். இந்த சீத்துவத்தில் தமிழர், முஸ்லீம் என்று அடிபடவேண்டுமா? என்று கேட்டார் அவர்.
இன்னொன்றையும் சொன்னார் யுத்தத்தின் பின்னர் கட்டி எழுப்பப்பட்டுள்ள கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்களில் இந்த பிரதேசத்தில் எவ்வளவு பணம் செலவிடப்பட்டுள்ளது என்று கேட்டவர் மற்றைய மதங்களை உதாரணம் காட்டுவதை தவிர்த்து இம்முறை
ஹஹ்ஜி யாத்திரைக்கு 300 பேர்வரை சென்றிருக்கிறார்கள் என்றும். ஒருவருக்குரிய செலவு இருபத்தைந்து இலட்சம் (300 x25 இலட்சம்) , மேலும் கைச்செலவுக்கான காசு 1 இலட்சம் என்றாலும் கணக்கை பாருங்களேன் என்றார். இதை எல்லாம் கடவுள் கேட்டாரா? இந்த தொகையில் ஒரு துளியையாவது இந்த வறியவர்களுக்கு செலவு செய்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும். இதைத்தானே எல்லா மதங்களும் சொல்லுகின்றன என்று ஆதங்கப்பட்டார்.
இந்து, கிறிஸ்த்தவ கோயில்களிலும் இதுதானே நிலை. இந்துக் கோயில்கள், தேவாலயங்களுக்கு முன்னால் பிச்சை எடுப்மவர்களின் வரிசை நீண்டுகொண்டு போகிறது. இன்னும்… இன்னும் .. கடவுளின் பெயரால் இந்த நிலைதான் தொடர்கிறது. கோயில்களில் உள்ள சொத்துக்களில் ஒரு சிறு பகுதியை சமூக மேம்பாட்டுக்கு பயன்படுத்தினால் என்ன? இனமத நல்லுறவு நோக்கிலும் இதைச் செய்யமுடியும்.
இப்படி உண்டியலில் சேர்த்து, சேர்த்து, இறுதியில் கோயில் சண்டை தானே அன்றி, சமூகத்திற்கு மிஞ்சுவது இன, மத காழ்ப்புணர்ச்சியும், வெறுப்பும், மோதலும் தான்.
இன்னும் வரும்……!