— அழகு குணசீலன் —
சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கையின் அரசியல் மெல்ல,மெல்ல இன,மத வாதங்களுக்குள் குறைந்த பட்சம் தேர்தல் காலத்திலாவது சறுக்கி வீழ்ந்திருக்கிறது. அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் இருப்பை தக்க வைத்துக்கொள்ள சமூக பிரிவினைகள், வேற்றுமைகளை மறைமுகமாக பயன்படுத்தி வந்துள்ளனர். என்றாலும் இன்றைய மாவட்ட விகிதாசார தேர்தல் முறையுடன் ஒப்பிடுகையில் அன்றைய தொகுதிவாரி முறையில் இந்தளவுக்கு மிக மோசமானதாக சமூகங்களுக்கு இடையிலான இன மத நல்லுறவு பாதிக்கப்பட்டு இருக்கவில்லை.
உதாரணமாக கல்முனை, நிந்தவூர், பொத்துவில் தேர்தல் தொகுதிகளில் முஸ்லீம் வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு அம்பாறை மாவட்டம் முழுக்க சிதறிக்கிடந்த தமிழ் வாக்காளர்களின் ஆதரவு தேவைப்பட்டது. பொத்துவில் இரட்டை அங்கத்தவர் தொகுதியாக எல்லைகள் மீள் நிர்ணயம் செய்யப்படும் வரை இந்த நிலையே நீடித்தது. இதனால் எம் எஸ்.காரியப்பர், எம்.ஏ.மஜீத், முஸ்தபா போன்றவர்கள் தமிழ் வாக்காளர்களின் ஆதரவைப்பெற்று சுயேட்சையாகவும் தமிழரசுக்கட்சியில் போட்டியிட்டும் வெற்றி பெறக்கூடியதாக இருந்துள்ளது. இத் தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் வாக்குகளாக தமிழர் வாக்குகள் இருந்தன. சமூக முரண்பாடுகள் ஏற்பட்டாலும் உடனடியாக தீர்த்து வைக்கவேண்டிய பொறுப்பு முஸ்லீம், தமிழ் அரசியல்வாதிகளுக்கு இருந்தது.
இந்த நிலை 1989 மாவட்ட விகிதாசார முறையின் கீழ் பழைய கதையானது. இதனால்தான் இன,மத உறவுகளை ஒட்டுப்போட முடியாதவாறு வெடிப்பாக்கி அடையாள அரசியல் நன்மையடைகிறது. பிராந்தியம், கட்சி, கொள்கை என்பனவற்றிற்கு மேலாக இனமும், மதமும் முதன்மை பெறுகின்றன. ஒப்பீட்டளவில் ஹரிஷ் எம்.பியின் வெளிப்படையான “தமிழர் எதிர்ப்பு” அரசியலும், கடந்த தேர்தல் காலத்தில் கருணா பேசிய “முஸ்லீம் எதிர்ப்பு” அரசியலும் இந்த பாணியிலான ஒரே வகையைச் சேர்ந்தவை. முஸ்லீம்,தமிழ் அரசியல்வாதிகள் சகோதரத்துவ இன, மதங்களுக்கு எதிராக அரசியல் செய்வதை நிறுத்தி தங்கள் சமூகம் சார்ந்த எதிர்தரப்பு வேட்பாளருக்கு எதிராக கொள்கை வழியில் ஜனநாயக கட்சி அரசியலை மேற்கொள்ளல் காலத்தின் தேவையாகும்.
ஆரம்பத்தில் அன்றைய மட்டக்களப்பு மாவட்டத்திலும், பின்னர் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் அனேகமான வேட்பாளர்கள் சுயேட்சையாகவே பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். தேர்தலுக்கு தேர்தல் கட்சித்தாவல்களும் இடம்பெற்றுள்ளன. அத்தோடு தேசிய கட்சிகளின் செல்வாக்கு இப்பிராந்தியத்தில் குறைவாகவே இருந்துள்ளது. வடக்கை போன்று அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி இங்கு காலூன்றி இல்லாதபோதும் தேசிய கட்சிகளால் வளர்ச்சி பெறமுடியவில்லை என்பது முக்கியமான ஒரு அவதானிப்பு. அன்று முஸ்லீம்கள் கொழும்பு தலைமைகளில் இருந்தும், தமிழர்கள் யாழ்ப்பாண தலைமைகளில் இருந்தும் விலகியிருந்தார்கள். கிழக்கில் இரு சமூகங்களுக்கும் இடையிலான சமூக, பொருளாதார, அரசியல் உறவு வலிமை பெற்றிருந்தது.
1952 இல் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு தொகுதியில் R.B. கதிர்காமர் ஐக்கிய தேசியக்கட்சியில் வெற்றி பெற்றார். மற்றைய எம்.பிக்களான வி.நல்லையா (கல்குடா), எஸ்.எம்.இராசமாணிக்கம்(பட்டிருப்பு), A.M. மேர்ஷா (கல்முனை), இப்ராஹிம் காஜியார் (பொத்துவில்) அனைவரும் சுயேச்சை வேட்பாளர்களாக வெற்றி பெற்றனர். கல்குடா, மட்டக்களப்பு தொகுதிகளில் தமிழர்கள் முஸ்லீம் வேட்பாளர்களுக்கும், முஸ்லீம்கள் தமிழ் வேட்பாளர்களுக்கும் வாக்களிக்கும் நிலை இருந்தது. 1989 தேர்தல் வரை ஏறக்குறைய இது ஒரு பொதுநிலை என கொள்ளலாம்.
சம்மாந்துறையைச்சேர்ந்த அப்துல் மஜுத் உள்ளூராட்சி சபைக்கு அன்றைய தமிழ் முஸ்லீம் வட்டாரமான வீரமுனை வட்டாரத்தில் இருந்தே தனது அரசியல் பிரவேசத்தை மேற்கொண்டுள்ளார். இதனால் வீரமுனை குறித்து அவருக்கு ஒரு தனி அக்கறை இருந்ததாக கூறப்படுகிறது. சமூக முரண்பாடுகள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் அவர் அதில் தலையிட்டு தீர்த்து வைத்துள்ளார். இன்றைய அரசியல்வாதிகளைப் பொறுத்தமட்டில் இது அவசியமற்றது. முரண்பாடுகள் தீர்க்கப்படாதவரை அவர்கள் இலகுவாக அரசியல் செய்யமுடியும். இதுதான் இன்றைய தேர்தல் முறை.
1954 இல் சித்திரை புத்தாண்டு காலத்தில் சம்மாந்துறை -வீரமுனை கிராமங்களுக்கிடையிலான சண்டை உண்மையில் இருதனிநபர்கள் சார்ந்த விவகாரம். ஆனால் இறுதியில் அது இனமோதலாக மாறியது. 1954 இல் சம்மாந்துறை உள்ளூராட்சி சபையின் தலைவராக இருந்தவர் லத்தீப். உதவிதலைவராக இருந்தவர் மாணிக்கம். இவர்கள் இருவரும் முஸ்லீம்,தமிழ் பிரிவுகளை பிரதிநிதித்துவம் செய்பவர்களாக இருந்தனர். இந்த சூழலில் புத்தாண்டு காலத்தில் மாணிக்கத்திற்கும், சீனித்தம்பி வத்தானுக்கும் இடையேயான தனிப்பட்ட முரண்பாடு சமூகங்களுக்கு இடையிலான முரண்பாடாகியது. இது வீரமுனை மீதான முதலாவது தாக்குதலுக்கு வழிவகுத்தது. இதுவே மாவட்டத்தில் முதல் தமிழ் -முஸ்லீம் இனமோதல் என்று பதிவு செய்யப்படுகிறது.
வீரமுனை கிராமத்தை விட்டு காடுகளுக்குள் ஓடித்தப்பிய மக்கள் அந்தந்த காட்டுப்பகுதிகளிலேயே வாழ்ந்து காலப்போக்கில் அவை கிராமங்களாகின. புதிய நகரம், கண்ணகிபுரம்,, வீரச்சோலை போன்ற இன்னும் பல கிராமங்கள் இவ்வாறு தோற்றம் பெற்றவை. கல்லோயா திட்டத்தின் பின்னர் இவை எல்லைப்புற குடியேற்ற கிராமங்கள் வரையும் விரிவடைந்துள்ளன. அன்றைய கல்முனைத்தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். காரியப்பரே அம்பாறை மாவட்ட தமிழ், முஸ்லீம் மக்களின் பாரம்பரிய காணிகள் இத்திட்டத்தின் மூலம் பறிக்கப்படுவதற்கு காரணமானவர் என்ற இருதரப்பு குற்றச்சாட்டும் அவர்மீது உண்டு. அதேவேளை காரியப்பரின் முயற்சியினால் 110 ஏக்கர்கள் நெற்காணி வீரமுனை கோயிலுக்கு வழங்கப்பட்டதாகவும், அந்தக் காணிகள் இன்னும் கோயிலுக்கே உரித்தானவை என்றும் அறியக் கிடைக்கிறது.
சீனித்தம்பி வத்தான் தமிழரல்ல அவர் ஒரு முஸ்லீம். அன்றைய காலகட்டத்தில் பல முஸ்லிம் பெண்கள், ஆண்களுக்கு தமிழ்ப்பெயர்கள் இருந்துள்ளன. இதில் இன்னும் ஒரு முக்கியம் இவர்கள் இருவரும் அன்றைய வீரமுனையில் ஒரே பாடசாலையில் ஒன்றாக படித்தவர்கள் என்பதாகும். இந்த தீயை அணைப்பதில் அப்துல் மஜீத்தும் , அவரோடு சேர்ந்து சம்மாந்துறை முஸ்லீம்களும் பெரும்பாடுபட்டிருக்கின்றனர். இதற்கு பின்னர் இன உறவில் பாரிய விரிசல்கள் 1990 வரை ஏற்படவில்லை.
1956 இல் இருந்து கிழக்கில் கட்சி ரீதியான அரசியல் முதன்மை பெறுகிறது. செ.இராசதுரை,எம்.எஸ்.காரியப்பர், M .முஸ்தபா ஆகியோர் தமிழரசுகட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர் . சிங்கள மட்டும் சட்டம் கொண்டுவரப்பட்டபோது அதை எதிர்த்து சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்ட ஒரே முஸ்லீம் தலைவராக நிந்தவூர் முஸ்தபா இருந்துள்ளார். இந்த பெரும்பான்மை, சிறுபான்மை இன முரண்பாடு விரிவடைந்த போது 1960 தேர்தலில் பொத்துவில், நிந்தவூர் மஜீத்களும்,காரியப்பரும் சுயேட்சையாகவே போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இது ஒரு வகையில் கொழும்பு,யாழ் தலைமைகளில் இருந்து விலகிநிற்பதை வெளிப்படுத்துகிறது.
அம்பாறை மாவட்ட தொகுதிநிர்ணயத்தின்போது தமிழர்களை எல்லாத்தொகுதிகளுக்குள்ளும் பங்கு போட்டு சிறுபான்மையினராக்கியதில் முஸ்லீம் அரசியல்வாதிகளுக்கு பங்கு இருப்பதாக தமிழ்தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் மறு வளத்தில் அம்பாறை மாவட்டம் முழுக்க செறிவான சனத்தொகையை கொண்ட முஸ்லீம் கிராமங்களுக்கிடையே ஐதாக சனத்தொகையைக்கொண்ட தமிழ் கிராமங்களை ஒன்றிணைத்து ஒரு தொகுதியாக்கல் சாத்தியமற்றது என்ற கருத்தையும் மறுப்பது கஷ்டம். ஆனால் இதற்கான தீர்வு 1977 தேர்தல் முதல் பொத்துவில் இரட்டை தொகுதியாக்கப்பட்டதன் மூலம் காணப்பட்டது. ஆனால் தமிழ்க் கட்சிகளும், தமிழ்மக்களும் 1989 முதலான மாவட்ட தேர்தல் முறையில் திகாமடுல்ல (அம்பாறை) தேர்தல் மாவட்டத்தில் இந்த வாய்ப்பை சரியாகப்பயன்படுத்தினார்களா? என்ற கேள்வி தவிர்க்க முடியாததாக எழுகிறது. 1989 இல் திவ்வியநாதனின் வெற்றி போட்டிதவிர்ப்பு மூலமே சாத்தியமானது. ஈரோஸ் போட்டிதவிர்ப்பை செய்தது. 2020 தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி போட்டித்தவிர்ப்பை மேற்கொண்டது. எனினும் வெற்றி வாய்ப்பு நழுவிப்போனது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் கருணாவின் கடுமையான முஸ்லீம் விரோத பேச்சு முஸ்லீம் சமூகத்தில் ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கருணாவின் தோல்விக்கு முஸ்லீம் சமூக முக்கியஸ்தர்களின் பங்கும் ஓரளவு இருந்துள்ளதாக உள்ளூர் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. தேர்தலுக்கான நிதிஉதவி, வாகன வசதிகள் மட்டும் அன்றி முஸ்லீம் முதலாளிகளிடம் வேலைசெய்யும் தொழிலாளர்கள் கருணாவுக்கு எதிராகவும், தமிழரசுக்கட்சிக்கு ஆதரவாகவும் வாக்களிக்குமாறும் தூண்டப்பட்டுள்ளனர். இந்த டீலை முஸ்லீம் பிரமுகர்களுடன் தமிழரசுக்கட்சியின் முக்கிய தலைவர் ஒருவரும், உள்ளூர் அரசியல்வாதி ஒருவரும் கையாண்டுள்ளனர். முஸ்லீம்காங்கிரசுக்கும், தமிழரசுக்கட்சிக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு இருந்துள்ளது. இந்த கருணாவின் பாணியே ஹரிஷின் இன்றைய பாணியாகவும் உள்ளது.
ஆனால் வீரமுனை தமிழர்கள் கடந்த தேர்தலில் கருணணாவுக்கோ, தமிழரசுக்கட்சிக்கோ அதிகமாக வாக்களிக்கவில்லை. அதேபோல் முஸ்லீம் காங்கிரசுக்கும் வாக்களித்தது குறைவு. ரிஷார்ட் பதியூதீனின் கட்சியைச் சேர்ந்த முஸாரப்புக்கே அதிகமாக வாக்களித்தனர் என்று சம்மாந்துறை உள்ளூர் ஊடகவியலாளர் ஒருவர் கூறினார். சம்மாந்துறை பிரதேச செயலகம் 55 கிராமசேவகர் பிரிவுகளை கொண்டது. இதில் இரு பிரிவுகள் தமிழ்க் கிராமசேவகர் பிரிவுகள்.வீரமுனை பிரதேச சபை வட்டாரம் மூன்று அங்கத்தவர் பிரிவு. இங்கு 4,000 முஸ்லீம் மக்களும்,900 தமிழ் மக்களும் வாழ்கின்றனர். ஒட்டு மொத்த சம்மாந்துறை பிரதேச செயலகப்பிரிவு 40,000 மேற்பட்ட மக்களைக்கொண்டது. அரசியல் பலம் பலவீனங்களுக்கு அப்பால் இந்த இன,மத பரம்பலை கவனத்தில் கொண்டு இனநல்லிணக்கத்தோடு வாழவேண்டிய பொறுப்பு இரு சமூகங்களையும் சார்ந்தது. புரிந்துணர்வும், விட்டுக்கொடுப்பும் இரு சமூகங்களின் நல்லுறவுக்கும் முக்கியமானவை.
இன்னும் வரும்………!