பாவம் தமிழ் மக்கள்!

பாவம் தமிழ் மக்கள்!

— கருணாகரன் —

“தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தைச் சற்றுக் கிண்டலாக நீங்கள் எழுதி வருகிறீர்கள். அதைப் படிக்கும்போது மனதுக்குக் கொஞ்சம் கஸ்ரமாக உள்ளது. அதுவும் நீங்கள் அப்படி எழுதுகிறீர்கள் எனும்போது இன்னும் வருத்தமாக இருக்கிறது.

தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது ஒரு தரப்பினரின்

அரசியல் நிலைப்பாடல்லவா! அதைச் சொல்வதற்கு அவர்களுக்கு ஜனநாயக உரிமை உண்டு. அது தொடர்பாக உங்களுக்கு மறு பார்வைகள் இருந்தால், அதை அதற்குரிய ஜனநாயகப் பண்போடு முன்வைக்கலாம்.

விவாதிக்கலாம். அதுதானே நியாயம். அவ்வாறான விவாதத்துக்குரிய கருத்துகளையும் நியாயங்களையும்

எதிர்பார்க்கிறேன்.

அதை விடுத்து, பொதுவேட்பாளர் என்ற நிலைப்பாட்டையும் அதை முன்னெடுப்போரையும் கிண்டலடித்து எழுதுகிறீர்கள். அது கவலையளிக்கிறது. 

பொதுவாக நீங்கள் எதையும், எவரையும் மதிப்பிறக்கம்

செய்யும் உள்நோக்கத்தோடு செயற்படுகின்றவரில்லை. ஆனால், இந்த விடயத்தில் உங்களுடைய எழுத்தும்

தொனியும் மாறியிருப்பது ஏன்?…

இதைப்பற்றிச் சொல்ல முடியுமா?” என்று வாட்ஸப்பில்

ஒரு நண்பர் தகவல் அனுப்பிக் கேட்டிருந்தார். 

என்மீது அப்படியொரு (நல்ல) அபிப்பிராயம் அவரிடமிருப்பதையிட்டு

அவருக்கு நன்றி சொன்னேன். கூடவே அவர் சுட்டிக்காட்ட விரும்பிய முறைமைக்காகவும். 

மிகச் சிறந்த முறையில் தன்னுடைய அபிப்பிராயத்தை

உரியவாறு – பொறுப்போடும் நட்புக்குரிய பண்போடும் தெரிவித்திருந்தமைக்கு அவருக்கு மீண்டும்

நன்றி. இந்தப் பண்பை நாம் முன்மாதிரியாகப் பின்பற்ற வேண்டும். 

என்பதால் அவருடைய ஒப்புதலோடு பின்வரும் விடயங்களைப்

பொது வெளியின்  (அவருடைய பெயரை மட்டும் குறிப்பிடாமல்)

கவனத்திற்காக எழுதுகிறேன். 

அரசியல் கொள்கைகளும் நிலைப்பாடுகளும் பலவகையானவை.

ஜனநாயகச் சூழலில் இது இயல்பானதும் அங்கீகரிக்கப்பட வேண்டிதுமாகும். அதற்கப்பால் மனித வாழ்க்கையில், மானுட இருப்பில், விருப்பில் இப்படிப் பல்விருப்பங்களும் பல்நிலைச் சிந்தனைகளும்

நிலைப்பாடுகளும் இருக்கும். அது இயல்பும் வழமையுமாகும். அதுதான் நியாமும் அழகும் கூட.

இதை அங்கீகரிக்க வேண்டும் என்பதே நமது நியாயமும். 

ஆகவே தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை ஒரு தரப்பின்

அரசியல் நிலைப்பாடு, உபாய முயற்சி என ஏற்றுக் கொள்கிறேன். 

ஆனால், “அதுதான் சரியானது. அற்புதமானது. அதைத்தான் தமிழ்ச்சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அல்லது தமிழ்ச்சமூகத்தை அதை நோக்கிக் குவிக்க வேண்டும். அதற்கு மாற்றான அபிப்பிராயத்தை – நிலைப்பாட்டைக் கொண்டோரெல்லாம் சூதானவர்கள், இனவிரோதிகள், தமிழர்களின் ஐக்கியத்துக்கும் விடுதலைக்கும் எதிரானோர்,  விடுதலை மறுப்பாளர்கள் எனச் சித்திரிக்க முற்படுவதுதான் பிரச்சினைக்குரியதாகிறது. அதாவது இனத்துரோகிகள் என்றவாறாக. 

இது வழமையைப் போல கறுப்பு வெள்ளை அரசியற் சிந்தனைக்குள்ளிருந்து

சிந்திக்கும் – செயற்படும் போக்காகும். 

ஜனநாயகத்தைப்பற்றிப் போதிப்போரும் நவீன அரசியலைப்பற்றிப் பேசுவோரும் அதற்கு மாறாக இப்படி கறுப்பு – வெள்ளை என குறுகிக் கிடப்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இதில் சில முற்போக்காளர்களும் பன்மைத்துவத்தைப் பற்றிப் பேசுவோரும் அடக்கம். அவர்களுடைய தடுமாற்றத்தைப் புரிந்து கொள்ள முடியாமலிருக்கிறது.


கறுப்பு – வெள்ளைச் சிந்தனையினால் பாதிக்கப்பட்ட

– அதற்குப் பெரிய விலைகளைக் கொடுத்த E.P.R.L.F, PLOT, T.E.L.O போன்றவையே இந்தச் சிந்தனைக்கு

அடிமைப்பட்டிருப்பதுதான் இங்கே துயரத்துக்குரியது.

என்பதால்தான் சில முறைகளில் சில விடயங்களைச் சொல்ல முற்பட்டேன். அது சூழலின் தன்மை, அதன் அவசியம் கருதியது. ஒரு கேலிச்சித்திரத்துக்கு (Caricature) அல்லது காட்டூனுக்கு (Cartoon)  உள்ள பண்பையும் வலிமையையும் ஒத்தது. இன்னும் சொல்லப்போனால் அங்கத எழுத்து அல்லது அதொரு satiriar column எனலாம். அதை அந்த அடிப்படையில்தான் புரிந்து கொள்வது முக்கியம். அதாவது காட்டூனை ரசிப்பது, ஏற்பது என்ற மாதிரி. 

எனவே இதில் ஜனநாயக மாண்பை மீறாமல், அந்தப் பண்பைக் கடைப்பிடிக்க முயன்றுள்ளேன். என்னுடய பார்வைகளையும் நியாயங்கள், நிலைப்பாட்டையும் தெளிவாகக் கூறி வந்திருக்கிறேன். 

இனி – 


1. தமிழ்ப்பொது வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும்

என்பதற்குச் சொல்லப்படும் நியாயங்கள் மிகப் பலவீனமானவை. 40 ஆண்டுகளாகச் சொல்லப்பட்டு

வரும் பழைய, தோற்றுப்போன கருத்துகள். புதிதாகச் சிந்திக்க முடியாத, புதிய அரசியற் சூழலை

விளங்கிக் கொள்ள முடியாத, புதிதாக அரசியலை முன்னெடுக்க இயலாத,  தோல்வியிலிருந்து விடுபட முடியாததன் வெளிப்பாடு.

அந்த இயலாமையை மறைப்பதற்குப் பூசப்படும் சலிப்பான வார்த்தைகள். இதைப்பற்றி விரிவாக

– விளக்கமாக எழுதியுள்ளேன். பிறரும் எழுதியுள்ளனர்.

2. அதற்கான முயற்சிகள். 

தமிழ்ப்பொதுவேட்பாளர் (இப்படி எழுதும்போதே ஏனோ சிரிப்பும் சலிப்பும்தான் வருகிறது – மன்னித்துக் கொள்ளுங்கள்) ஒருவரை நிறுத்துவதற்கு அரசியல் ரீதியாகவும் ஆளுமை ரீதியாகவும் (ஆள் ஒருவரைத் தேடிப் பிடிப்பதற்கே படுகின்ற அல்லற்பாடுகள்) எடுக்கப்படும் முயற்சிகள் கூட சிறுபிள்ளைத் தனமானவை.

இத்தனை ஆண்டுகால போராட்ட அரசியல், அதற்கான உழைப்பு,

தியாகம், கற்றுக் கொண்ட படிப்பினைகள் போன்றவற்றிலிருந்து நாம் பெற்றதென்ன? எத்தனை அரசியல்

ஆளுமைகளையும் தளபதிகளையும் செயற்பாட்டாளர்களையும் கண்டிருந்தோம். 

இன்று?

மெய்யானோரும் சரியாகச் சிந்திப்போரும் உண்மையாகவே மாற்றத்துக்காக உழைப்போரும் ஓரங்கட்டப்பட்டு, நடிகர்கள் அரங்கேற்றப்பட்டுள்ளனர். அப்படியென்றால், இப்படித்தான் கிலிசை கேடாக நிலைமை இருக்கும்.

இப்படி நாறிப்போயிருக்கும் பலவீனத்தை மக்களுக்கும் (மேலும் மக்களுக்கு நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளே நடக்கின்றன) அரசுக்கும் இந்தியா உட்பட சர்வதேச சமூகத்துக்கும் காட்ட வேண்டுமா?

நாம் பலவீனப்பட்ட நிலையில் இருக்கலாம். அதற்காக

நம்முடைய வறுமையை வெளியே சொல்லித்தான் ஆக வேண்டுமா? உங்கள் வீட்டிலிருக்கும் அல்லது

உங்கள் குடும்பத்துக்குள்ளிருக்கும் பலவீனமான விடயங்களைப் பகிரங்கப்படுத்துவதை விரும்புவீர்களா?

அதையெல்லாம் குடும்பக் கௌரவம், சுயமரியாதை எனக் கவனமாக மறைத்துக் கொள்வீர்கள். சமூகப்

பலவீனத்தைத் தக்கமின்றிப் பறை சாற்றுவீர்கள்.

உண்மையில் இந்தக் குறைபாட்டை உணர்ந்து நாம் அதிலிருந்து மீண்டெழ வேண்டுமே தவிர, அதை எதிர்த்தரப்புப் பயன்படுத்துமளவுக்கு வாய்ப்பளிக்கவோ  அனுமதிக்கவோ கூடாதல்லவா!

செயற்பாட்டு அனுபவமில்லாதவர்களின் வேலை அல்லது

முயற்சிகள் இப்படித்தானிருக்கும். கள அனுபவமற்றவையாக. 


3. தமிழ்ப்பொது வேட்பாளரரை நிறுத்த வேண்டும் என

நிற்போர். 

இவர்கள் ஒரு முகப்பட்ட சிந்தனைக் குழாத்தினரல்ல. ஒத்த நிலைப்பாட்டைக் கொண்டோரும் அல்ல. தவிர்க்க முடியாமல் நெல்லிக்காய்களை ஒன்றாகச் சேர்த்ததைப்போல இவர்களை ஓரணியில் சேர்த்தது யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டியங்கும் ஊடக நிறுவனமொன்றின் இயக்குநர். இன்னொருவர் ஈ.பி.ஆர்.எல்.எவ் வின் தலைவர் திரு. சுரேஸ் பிரேமச்சந்திரன். இதற்கு இணை நின்றவர்கள் பத்தியெழுத்தாளர்கள் இருவர். ஏனையோர் இதில் விரும்பியும் விரும்பாமலும் உள்ளடக்கப்பட்டவர்கள். 

‘உள்ளடக்கப்பட்டவர்கள்’ என்று அழுத்தம் கொடுப்பதற்குக் காரணம், அவர்கள் தனிப்பட்ட உரையாடல்களில் தமது  விருப்பம் வேறு. தவிர்க்க முடியாமல் நாம் இந்த நிலைப்பாட்டுக்கு சம்மதித்திருக்கிறோம் என்று தொடர்ந்து கூறுவதாகும். அப்படிக் கூறுவது அவர்களுக்கும் அவர்களுடைய அரசியலுக்கும் அழகல்ல. அது அரசியல் செயற்பாட்டுக்கு நல்லதுமல்ல. இருந்தும் அப்படித்தான் அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். 

இன்னொரு தரப்பினரோ இந்தப் பொது வேட்பாளருக்கு மக்களிடம் ஆதரவு கிட்டவில்லை என்றால்…? தம்முடைய அரசியல் எதிர்காலம் என்ன என்ற கேள்வியும் உண்டு. குறிப்பாக ரெலோ, புளொட் ஆகியவற்றுக்கு. ஏனைய சில்லறைத்தரப்புகளுக்கு எல்லாம் ஒன்றுதான். வென்றாலென்ன? தோற்றாலென்ன? ஏதோ நமக்கும் வடையும் தேநீரும் கிடைக்கிறது. அந்தளவே போதும் என்ற நிலைப்பாட்டோடிருக்கிறார்கள். 

ஆனால், ஈ.பி.ஆர்.எல்.எவ்வுக்கு இந்தப்பிரச்சினை இல்லை. அது ஏற்கனவே மிகச் சிக்கலான நிலையில்தான் உள்ளது. அது முன்னிலை பெறுவதற்கான ஆயிரம் கதவுகளையும் தானாகவே அடைத்துச் சாத்திக் கொண்டு பிடிவாதமாக இருட்டறைக்குள் தியானம் செய்கிறது. ஆகவே அதற்கு வாழ்வும் சாவும் ஒன்றுதான்.  வென்றால் இன்னொரு சுற்று ஓடலாம். இல்லையென்றாலும் ஏதோ அவ்வப்போது அரங்கில் நாமும் இருக்கிறோம் என்று காட்டிக் கொள்ளலாம். அவ்வளவுதான்.

சிவில் குழுவினர் (Civil society representatives) என்று தம்மை அடையாளப்படுத்துவோர் ஏனைய தரப்புகளை மறைமுகமாக ஆயுததாரிகள் (Armed parties) அல்லது துணை ஆயுதக்குழுவினர் (paramilitaries) என்ற பழைய மனப்பதிவோடு அல்லது அத்தகைய ஒரு உள்ளுணர்வோடு – விலக்கத்தோடுதான் காரியங்களைச் செய்து கொண்டிருக்கின்றனர். 

அவர்களுக்குள் தாம் கலந்து விடக் கூடாது என்ற எச்சரிக்கையை அவர்களிடம் அவதானிக்க முடிகிறது.  இதனால் சற்று விலகி நின்று கொண்டே, “தமிழ்ச்சமூகத்தின் எதிர்காலத்துக்காக சேர்ந்து வேலை செய்கிறோம். கலந்து கொள்ளவும் கரைந்து போகவும் மாட்டோம்” என்று செயற்பாடுகளால் காட்டுகின்றனர். சிவில் தரப்பும் கட்சிகளும் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை கூட அந்த அடிப்படையிலானதுதான். (பாவம் விக்னேஸ்வரன்).

ஆக இப்படியான சூழலில் எப்படி இவற்றைக் குறித்துப் பேசாமலிருக்க முடியும்? அந்தளவுக்குத் தமிழ்ச் சமூகம் மொண்ணையில்லைத்தானே!

பொய்களையும் மாயைகளையும் களைய வேண்டியது, இனங்காட்ட வேண்டியது, அதை உணர்ந்தறிந்தவரின் கடமை. அதைச் செய்ய முயற்சிக்கிறேன். அவ்வளவுதான். 

பாவம் தமிழ் மக்கள்.