சஜீத்தின் அறைகூவல்: ஒரு கற்பனாவாதம்.!       (மௌன உடைவுகள்-100)

சஜீத்தின் அறைகூவல்: ஒரு கற்பனாவாதம்.! (மௌன உடைவுகள்-100)

— அழகு குணசீலன் —

DEAR SRILANKANS ….. !

” ……..VOTE NOT JUST  FOR COMMUNITY,ETHNOCITY OR BUSINESS INTERESTS BUT FOR THE ENTIRE NATION “.

“………WE MUST ALSO REJECT EMPTY PROMISES FROM THOSE RESPONSIBLE FOR SRILANKA’S DEEPEST CRISIS”.

“……..WE MOVE FORWARD AS ONE PEOPLE “.

2024, 08.07 ம் திகதிய ‘DAILYNEWS’ பத்திரிகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரமதாசாவின் படத்துடன் பிரசுரிக்கப்பட்டுள்ள  உத்தியோகபூர்வ தேர்தல் விளம்பரம் இது. நாட்டு மக்களுக்கு சஜீத் விடுத்துள்ள அறைகூவல். 

இந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அழகான, அர்த்தமுள்ள வார்த்தைகள் எந்தளவுக்கு இலங்கையின் பன்மைச் சமூகங்களின் அல்லது தேசிய இனங்களின் வேற்றுமைகளை – DIVERSITY யை அங்கீகரிக்கின்றன. இந்த தேசத்தின் சிறுபான்மை தேசிய இனங்களின் இருப்பை மறுத்து, மறைத்து ஒருநாடு , ஒரு தேசம், ஒரு மக்கள் என்ற ராஜபகசாக்களின் பௌத்த பேரினவாத கண்ணாடி அணிந்தே சஜீத் பிரேமதாசாவும் இலங்கை சமூகங்களை பார்க்கிறார்.  அவரின் அறைகூவல் கேட்கவும், வாசிக்கவும் அற்புதமான வார்த்தைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது . இனிப்பு முலாம் பூசப்பட்ட இந்த அரசியல் வார்த்தையாடல்கள் சிறுபான்மை தேசிய இனங்களின் இருப்பை மறுதலித்து கடந்த 75 ஆண்டுகால ‘இலங்கைத்தேசியம் ‘ பற்றி பேசுகின்றன.

மரபு ரீதியான இலங்கையின் இடதுசாரி அரசியல் இவ்வாறு தான் எண்ணிக்கையில் சிறுபான்மையினரை 1972 குடியரசு அரசியல் அமைப்பு வரை ஏமாற்றி  இன்றைய நிலைக்கு காரணமானது. அதேவேளை எப்போதுமே முதலாளித்துவ ஐக்கிய தேசியக் கட்சியுடன் சமரசம் செய்து கொள்ள தயாராக இருந்த தமிழ், முஸ்லீம், மலையக மக்களின் கட்சிகள் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு இடதுசாரிகளோடு ஒத்துழைக்காது  பேரினவாத வலதுசாரிகளோடே உறவுகொண்டிருந்தன. இவர்களின் ஒத்துழைப்பு இன்மையால் இடதுசாரிகளாலும் சாதிக்க முடியவில்லை. 

இந்த விளம்பரத்தை படிக்கும் போது சஜீத் எப்போது இடதுசாரி அரசியல்வாதியானார் என்று எண்ணத்தோன்றுகிறது. காலிமுகத்திடல் அரகறலயவும் ஒரு காலத்தில் ‘காடு’ பற்றி பேசியது. காட்டுக்குள் படர்ந்தும், விரிந்தும் கிடக்கின்ற பல்வேறுபட்ட மரங்கள், செடிகொடிகள், தாவரங்கள், புல்பூண்டுகள் பற்றிய ‘BIO DIVERSITY’  உயிரியல் பன்மைத்துவம்  கணக்கில் எடுக்கப்படவில்லை. பன்மைத்துவம் அற்ற ஒரு தேசத்தில் அல்லது  இனம்,மொழி,மதம், கலாச்சாரம், பண்பாடு , மற்றும் விழுமியங்களை அடிப்படை அரசியல் அமைப்பு சட்டங்கள் ஊடாகவும், ஜதார்த்த நடைமுறை ஜனநாயகத்திலும் அங்கீகரித்துள்ள  ஒரு தேசத்தில் விடுக்க வேண்டிய அறைகூவலை கனவுலகில் விண்ணில் இருந்து மண்ணுக்கு விடுக்கப்பட்ட கதையாடலாக இது அமைகிறது.

 சமூக ரீதியான புறக்கணிப்புக்கள், பாரபட்சங்கள் அற்ற  ஒரு நாட்டில் விடுக்கப்படவேண்டிய கோரிக்கை இது. இலங்கையின் சிறுபான்மை தேசிய இனங்களின் உண்மைநிலை தெரியாமல் சஜீத் இதைச் சொல்லவில்லை உண்மையை மூடிமறைத்து, தேசிய இனங்களின் பிரச்சினைகளை குறுக்கி , இலங்கை தேசியம் என்ற போர்வையில் சிங்கள பௌத்த பேரினவாத தேசியத்தை பாதுகாப்பதற்கான அறைகூவல் இது. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் வரலாறும், அதன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிபதியாக சஜீத்தின் தந்தை ரணசிங்க பிரேமதாசாவின் அரசியல் வரலாறும், சஜீத் பிரேமதாசாவின் நல்லாட்சி முதலான கடந்த கால அரசியல் வரலாற்றையும்  அறிந்தவர்களுக்கு  இந்த விளம்பரத்தின் முன்பக்கத்தைவிடவும், பின்பக்கமே முக்கியமானது.

சஜீத் பிரேமதாச பேசுகின்ற ‘ONE PEOPLE ‘ அரசியலுக்கு அடிப்படை அத்திவாரம் முதலில் இடப்பட வேண்டும். அது இன்னும் ஆரம்பிக்கப்படவே இல்லை. இந்த நிலையில் ஒரே மக்களாக அவரால் இலங்கையர்களை எவ்வாறு பார்க்கமுடிகிறது. சமூக, பொருளாதார, அரசியல் சமத்துவம் இன்றி அந்த மக்கள் எவ்வாறு ஒரே மக்களாக முடியும். இதன் அர்த்தம் சிங்கள மக்கள் எல்லா சமூக, பொருளாதார, அரசியல் உரிமைகளையும் பெற்று சுதந்திரமாக வாழ்கிறார்கள் என்பதல்ல. சிறுபான்மை மக்களுடன் ஒப்பிடுகையில் ‘சிங்கள மக்கள்’ என்ற மகுடத்தில் அவர்கள் சில குறைந்த பட்ச உரிமைகளையாவது பெற்றிருக்கிறார்கள். தாங்கள் இலங்கையர் என்ற மனநிலையில் வாழ்கிறார்கள். இந்த நிலை மற்றைய இனங்களுக்கு இல்லாமல் ‘ONE PEOPLE ‘ ஆவது எப்படி?  ஆகக் குறைந்தது சஜீத் பிரேமதாச இந்த இலக்கை நோக்கி இதுவரை பயணித்து கடந்துள்ள அரசியல் பாதை எவ்வளவு தூரம்? அந்த பாதையில் இன்னும் எவ்வளவு தூரம் பயணித்து அவரால் ஒரே மக்கள் – எல்லோரும் இலங்கையர்கள் என்ற இலக்கை அடைய முடியும்?

ஒரே மக்கள் – இலங்கையர்கள் –  இலங்கை தேசியம் என்ற கூட்டுக்குள் வேற்றுமையிலும் ஒன்றுபட்டு நிற்கிறோம் என்று எவ்வாறு அந்த மக்களால் உணர்வு பூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியும். இது சமூகவியல் சார்ந்த உளவியல் ரீதியான மனோநிலை. இது யாரும் ‘நாங்கள் எல்லோரும் ஒன்று’ என்று  சொல்லி அல்லது ஒருவர் மற்றவரைப்பார்த்து சொல்லி  ஏற்படுகின்ற சமத்துவ உணர்வு அல்ல. மாறாக ஒவ்வொரு பிரஷையும் சுயமாக உளரீதியில் உணர்கின்ற சுயநிலை -தன்னிலை சார்ந்தது. அதை அந்தந்த தனிமனிதர்களால் அல்லது சமூகத்தினால் மட்டுமே உணரமுடியுமே அன்றி மாற்று தரப்பினரால் அல்ல. இதனால் சஜீத் பிரேமதாசவின் இந்த கருத்து  உண்மைக்கு புறம்பானதும், அரசியல் அடிப்படை அற்றதும் மட்டும் அன்றி அவர் கூறுவது போல் ‘வெறுமையானது ‘.

இலங்கையும் இந்தியாவும் கிரிக்கெட் ஆடினால்  ஈழத்தமிழர்கள் ஏன் இந்தியா வெற்றி பெறவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்? அல்லது இலங்கை தோல்வியுற்றால் இந்தியா வெற்றி பெற்றால் கொண்டாடுகின்றனர். இலங்கையும் பாகிஸ்தானும் விளையாடினால் அல்லது இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடினால் இலங்கை, இந்திய முஸ்லீம்களில் ஒரு பகுதியினர் ஏன் பாகிஸ்தான் வெற்றிபெறுவதை விரும்புகிறார்கள். நாங்கள் இலங்கையர் ‘ONE PEOPLE’   என்ற உணர்வு உளப்பூர்வமாக ஆட்கொள்வதற்கு மனம் மறுக்கிறது. ஆக, இலங்கையின் சிறுபான்மை தேசிய இனங்கள் தங்களை இலங்கையர்களாக அடையாளப்படுத்த இன்னும் மனநிலையில் தயாரில்லை. இதனால் ‘MACRO ‘ அணுகுமுறையை சிங்கள தேசியமும், ‘MICRO அணுகுமுறையை சிறுபான்மைத்தேசிய இனங்களும் தங்கள் நிலைப்பாடாக கொள்கின்றனர்.

ஒருவகையில்  இனம்,மதம்,மொழி சார்ந்த அடையாள அரசியலை நிராகரித்த அரசியல் சித்தாந்தம் முன்னேற்றகரமானதுதான். ஆனால் பெரும்பான்மை தேசியம். அந்த அடையாளங்களையே முதன்மை படுத்தி அரசியல் செய்து கொண்டு, அந்த அடையாளங்களை நிரந்தரமாக பாதுகாக்கின்ற சட்டங்களையும் வகுத்துக்கொண்டு இன்னும் சொன்னால் அந்த சட்டங்களாலேயே சிறுபான்மை தேசிய இனங்களின் அடையாளங்களை நிராகரித்தும், அவற்றை முதன்மை படுத்த வேண்டாம் ஒரே மக்களாக அணிதிரள்வோம் என்று அறைகூவல் விடுவதும் அரசியலில் எந்தவகையில் நேர்மையானது. நேர்மையான அரசியல் என்பது முதலில் இந்த ஏற்றத்தாழ்வுகளை – அடையாள அரசியல் மூலமான  சமூக அநீதியான பெறுகைகளை – சலுகைகளை, உரிமைகளை அனுபவிப்பதை நிராகரித்து ஒரே மாதிரியான சமத்துவ உரிமைக்கு வழிவகுக்க வேண்டும். இந்த அடிப்படை இல்லாமல் ‘ONE PEOPLE’ என்பது வெறும் நிறந்தீட்டல்.

இலங்கையின் சமகால பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பானவர்களை நிராகரியுங்கள் என்பதும் சஜீத்பிரேமதாச வின் கோரிக்கை. இந்த பொருளாதார நெருக்கடி இரவோடிரவாக ஒரு இரவு படுத்து எழும்ப மறுநாள் விடியற்காலையில் ஏற்பட்ட தல்ல.  முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனவின்  முதலாளித்துவ தாராள திறந்த பொருளாதார கொள்கையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கான பெரும் பொறுப்பு 1977 முதல் 1994 வரையான 17 ஆண்டுகால நீண்டகால ஆட்சியின் விளைவாகவும் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் கடந்த 20 ஆண்டுகளில் மாறிமாறி இந்த நாட்டை ஆட்சி செய்துள்ளனர். இதனால்  இவர்களுக்கும் இந்த பொருளாதார நெருக்கடியில் 50 வீத வகிபாகம் உண்டு. 

ஜே.ஆர், பிரேமதாச உள்ளிட்ட மற்றைய ஜனாதிபதிபதிகளின் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியில் தொடர்ந்த தாராள பொருளாதார கொள்கையில் இருந்து அதற்கு பின்னர் ஆட்சிக்கு வந்த சிறிலங்கா சுதந்திரக்கட்சியை தலைமைத்துவமாகக் கொண்ட  ஆட்சியாளர்களால் வெளியேறுவது அவ்வளவு இலகுவானதாக இருக்கவில்லை. மக்கள் தாராள இறக்குமதி ஊடான நுகர்வு கலாச்சாரத்திற்கு பழக்கப்பட்டிருந்தனர். சர்வதேச பொருளாதார ஒழுங்கில்  1990 களின் ஆரம்பத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன. 1970 களின் இறுதியில் இருந்த பொருளாதார, அரசியல் சூழல் உலகில் இருக்கவில்லை. உலகமயமாக்கம் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் ‘அபிவிருத்தி ‘ மாதிரியாக சர்வதேசத்தினால் அங்கீகரிக்கப்பட்டிருந்தது.  இது நாடுகளுக்கு இடையிலான பொருளாதார போட்டியையும், தங்கியிருத்தலையும் அதிகரித்தது. 

ஆனா எனப்பட்ட சீனா, சோவியத் யூனியன், மற்றும் மற்றைய  சோலிஷ இடதுசாரி அரசுகளின் கட்டுப்பாடான பொருளாதார கொள்கைகள் கேள்விக்குட்படுத்தப்பட்டு சர்வதேச மாற்றங்களுக்கு இசைவாக பயணிக்கவேண்டியிருந்தது.  உலகமயமாக்கல் தென்கிழக்காசியாவில் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து இலங்கை தனித்து ஓடமுடியவில்லை. இதனால்  பூகோள ரீதியான இலங்கைத்தீவு உலக வரைபடத்தில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டு சர்வதேச சமுக, பொருளாதார, அரசியலில் இருந்து  ‘சுவர் ‘ கட்டிக்கொண்டு ஒரு தீவாக விலகி இருக்க முடியவில்லை. கடந்த 47 ஆண்டுகால இலங்கையை திரும்பிப்பார்த்தால் இந்த உண்மை தெளிவாகும்.

இனப்பிரச்சினை  தீர்க்கப்படாததுதான் – யுத்தம் தொடர்ந்தது தான் இலங்கையின் இன்றைய வங்குரோத்து நிலைக்கு காரணம் என்பது சகலதரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற ஒரு முடிந்த முடிவாக முன்வைக்கப்படுகிறது.   இது ஒருபகுதி உண்மை மட்டுமே. அன்றைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா ஜே.வி.யுடன் இணைந்து இந்திய -இலங்கை சமாதான உடன்படிக்கையை எதிர்த்து, புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கி, இந்திய படையை வெளியேற்றியதன் மூலம் இந்த யுத்தம் தொடர்வதற்கும் காரணமாக இருந்தவர். மாகாண சபையைக்கலைத்தவர். இந்த உண்மைகளை விமர்சனத்திற்கு உட்படுத்தாது  பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சாக்கள் மட்டும் தான் முற்றிலும் பொறுப்பு என்று ரணில் விக்கிரமசிங்க,சஜீத்பிரேமதாச, அநுரகுமார திசாநாயக்க, நாமல் ராஜபக்ச என்ற வரிசையில் எந்த ஒரு வேட்பாளரும் தப்பிக்கமுடியாது. இதை ராஜபக்சாக்களின் ஆட்சியில் இடம்பெற்ற அதிகார துஸ்பிரயோகம், நீதி, நிர்வாகத்துறைகள் மீதான தலையீடு, ஊழல், இலஞ்சம், தவறான முகாமைத்துவம், மனித உரிமைகள் மீறல்,  ஜனநாயக மறுப்புக்கள் என்பனவற்றை நியாயப்படுத்துவதாக அமையாது. மற்றைய ஆட்சிகளிலும் இவை இருக்கவில்லை  என்று யாரும் கையைக்கழுவிக்கொள்ளவும் முடியாது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிச் சுமையை இன,மத,மொழி வேறுபாடின்றி ஒரே மக்களாக இலங்கையர்கள் முதுகில்  ஏற்றிவிட்டுள்ள நிலையில் இலங்கையர்கள் ‘ONE PEOPLE ‘ தான். ஆனால் சிறுபான்மை தேசிய இனங்களுக்கான சமத்துவ  அரசியல் உரிமைகள் பகிரப்படாத வரை இலங்கையர் ‘ONE PEOPLE’ என்பது பேரினவாத முதலை சிறுபான்மை தேசிய இனங்களை முழுசாக விழுங்குவதாகும். சஜீத் தனது கண்ணாடி ஊடாக  பொதுவான பொருளாதாரப் பிரச்சினை போன்றே சிறுபான்மை தேசிய இனங்களின் தனித்துவமான உரிமைப்பிரச்சினையையும் சிங்களவர்களுக்குமான பொதுப்பிரச்சினையாகப் பார்க்கிறார். அதனாலேயே இலங்கையர், ஒரே மக்கள் என்ற  கற்பனாவாத கூவல்.