(‘அரங்கம்’ அரசியல் பத்தித்தொடர்.)
—தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —
இலங்கையின் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ‘தமிழ்ப் பொது வேட்பாளர்’ ஒருவரை நிறுத்துவதை ஆதரித்துச் செயற்படுகின்ற தமிழர் தரப்பினர் கூறுகின்ற காரணங்கள் என்னவென்றால் தமிழ்ப் பொது வேட்பாளர் தமிழர்களை ஐக்கியப்படுத்துவார். தமிழர்களை ஒரு தேசமாகத் திரளவைப்பார் என்பதாகும். இவை வெறுமனே எடுகோள்களாகவே இருக்கும். இன்றைய களநிலையில் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் பிள்ளையார் பிடிக்கப் போய்க் குரங்கைப் பிடித்த கதையாகவே முடியும். தமிழ் மக்கள் ஐக்கியப்படுவதற்கும் தமிழர்கள் ஒரு தேசமாகத் திரள்வதற்கும் இந்தப் பொது வேட்பாளருக்கும் சம்பந்தமேயில்லை. ஜனாதிபதித் தேர்தல் நடைபெறாத ஏனைய சந்தர்ப்பங்களில் தமிழ் மக்கள் ஐக்கியப்படமாட்டார்கள்? ஒரு தேசமாகத் திரளமாட்டார்களா?
தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை ஆதரிப்போர் கூறுவது என்னவெனில் இத்தேர்தலை இலங்கைக்கான ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் தேர்தல் என்பதை நிராகரித்துச் சிங்கள அரசியல் தலைமைகள் மீது நம்பிக்கையிழந்துவிட்ட உணர்வுகளைத் தமிழர் வெளிப்படுத்துவதற்கான ஓர் வாக்கெடுப்பாக இதனைப் பயன்படுத்தப் போகிறார்களாம்.
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலை நிராகரிப்பது என்கின்ற வார்த்தைப் பிரயோகமே அதனைப் பகிஷ்கரிப்பதற்குச் சமமாகும். இந்த நிராகரிப்பும் பகிஷ்கரிப்பும் தமிழ் மக்களைத் தேசிய நீரோட்டத்திலிருந்து அந்நியப்படுத்தி ஓரம் கட்டவைத்துவிடும். இது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் இலங்கைத் தேசிய அரசியலிலிருந்து இலங்கைத் தமிழர்கள் ஓரங்கட்டப்படுவார்களாயின் காலவரையில் அந்நிலைமை பிராந்திய அரசியல் மற்றும் பூகோள அரசியல் நீரோட்டத்திலிருந்தும் தமிழ் மக்கள் அந்நியப்படுவதற்கும் ஓரம் கட்டப்படுவதற்கும் வழிவகுக்கும்.
அன்றியும் கடந்த எழுபத்தைந்து வருட காலம் பயணித்த அரசியல் தடத்திலிருந்து மாற வேண்டிய சந்தியில் தமிழ் மக்கள் வந்து நிற்கின்றனர். அந்த மாற்றத்திற்குத் தமிழ்ப் பொது வேட்பாளர் உதவப் போவதில்லை.
சேர் பொன்னம்பலம் ராமநாதன் மற்றும் அருணாசலம் சகோதரர்கள் காலத்திலிருந்து ஜி. ஜி. பொன்னம்பலம் காலம்வரை நடைபெற்ற அரசியல் சீர்திருத்தக் கோரிக்கைகளுக்கூடான முதற்கட்ட அரசியலுக்கும் – பின் தமிழரசுக் கட்சியினாலும் தொடர்ந்து முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணியாலும் முன்னெடுக்கப்பட்ட அறப்போராட்ட அரசியலுக்கும் இறுதிக் கட்டமாகத் தமிழீழ விடுதலைப் புலிகளால் ஏகபோகமாக முன்னெடுக்கப்பட்ட (ஆயுதப் போராட்ட) அரசியலுக்கும் யுத்தம் முடிவுக்குவந்த 2009 இன் பின்னர் இன்றுவரை முன்னெடுக்கப்படும் இராஜதந்திர (?) அரசியலுக்கும் கருத்தியல்ரீதியாகச் – சித்தாந்தரீதியாக அடிப்படைக் குணாம்சத்தில் மாற்றமேயில்லை. குறிப்பாகத் தமிழரசுக் கட்சியினாலும் பின்னர் முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணியாலும் கடைப்பிடிக்கப்பட்ட (அறப்போராட்ட) அரசியலுக்கும் பின் இவர்களிடமிருந்து கைமாறித் தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடரப்பட்ட (ஆயுதப் போராட்ட) அரசியலுக்கும் இடையே அடிப்படைக் குணாம்சங்களில் மாற்றமில்லை. கருவிகள்தான் மாறினவே தவிர கருத்தியல் மாறவில்லை. முன்னையதில் கருவி வாக்கு; பின்னையதில் கருவி துப்பாக்கி. (அதாவது முன்னையதில் வோட்டு பின்னையதில் வேட்டு.) இரண்டுமே ஒட்டுமொத்த மக்கள் நலன் சாராதவை.
அறப்போராட்ட அரசியல் காலத்தில் யாழ்குடா நாட்டுக்குள் அடங்கியிருந்த மேட்டுக்குடிக் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினதும் பின் ஆயுதப் போராட்ட அரசியல் காலத்தில் ஒரு குறிப்பிட்ட ஆயுதக் குழுவினதும் நலன்கள் சார்ந்தவையாக மட்டுமே நடைமுறையில் இருந்தன. அதனால்தான் அவை தோல்வியில் முடிந்தன. மட்டுமல்ல மக்களுக்குத் தொடர் அழிவுகளையும் தந்தன. இந்த அனுபவம்தான் தமிழ் மக்களின் அரசியலில் மாற்றம் தேவைப்படுவதற்கான காரணியாகும். ஆனால் தமிழ் மக்கள் இதனை இன்னும் முற்றாக உணர்ந்தபாடில்லை.
தென்னிலங்கை அரசியலில் ஏற்பட்டுவரும் அண்மைக்கால மாற்றங்கள் குறித்துக்கூடத் தமிழர்கள் பிரக்ஞையற்றிருக்கிறார்கள்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து கிளைவிட்ட பொதுஜன பெரமுனை 2018 உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தலிலும் 2019 ஜனாதிபதித் தேர்தலிலும் தொடர்ந்துவந்த 2020 பாராளுமன்றப் பொதுத் தேர்தலிலும் அமோக வெற்றிகளையீட்டியது. இந்த வெற்றிகளை அள்ளிக் கொடுத்த சிங்களச் சமூகமே 2019ல் ஜனாதிபதியாகத் தெரிவாகித் தன்னைச் சிங்கள மக்களின் பாதுகாவலனாக மார்பு தட்டிப் பிரகடனப்படுத்திய கோட்டபாய ராஜபக்சவைப் பதவியைத் துறந்து ஓட வைத்தது.
சுதந்திர இலங்கையின் முதல் பிரதமரால் தோற்றுவிக்கப்பெற்ற பெருமையைக் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியை 2020 பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் மண் கவ்வவைத்து அக்கட்சிக்கு ஒரேயொரு பாராளுமன்ற ஆசனத்தை வழங்கிவைத்த சிங்களச் சமூகமே கோட்டபாய ராஜபக்சவின் பதவி துறப்பைத் தொடர்ந்து பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் அதே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை 2022 இல் ஜனாதிபதியாக்கியது.
இலங்கை அரசியலில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கீரியும் பாம்பும் போன்றவை. ஆனால் இன்று எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகக் களமிறங்கவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பதற்குக் கட்சி பேதங்களை மறந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானம் எடுத்துள்ளது.
எந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து கிளைவிட்டதோ அந்த சுதந்திரக் கட்சியுடன் முரண்பட்ட அரசியல் நிலைப்பாட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிற்கிறது. எதிர்காலத்தில் இதிலும் மாற்றம் வரமாட்டா என்பதற்கில்லை.
2005இல் முதன்முதலாக ஜனாதிபதியாகித் தோற்கடிக்கப்பட முடியாதவரென்ற பிம்பத்தை 2009இல் யுத்த வெற்றிமூலம் ஏற்படுத்தி மகிழ்ந்த ராஜபக்சவை 2015 ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுறச்செய்து மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கியதுகூட தென்னிலங்கை அரசியலில் ஏற்பட்ட ஒரு கட்டத்து மாற்றம் எனலாம்.
சரியா? பிழையா? என்பதற்கும் அப்பால் அந்த மாற்றங்களின் விளைவுகள் என்ன என்பதற்கும் அப்பால் தென்னிலங்கை அரசியலில் அண்மைக்காலமாக இவ்வாறான மாற்றங்கள் தேவைகருதி நிகழ்ந்து வருவதை அவதானிக்கலாம்.
ஆனால் தமிழர்களுடைய அரசியலில் அதாவது வட கிழக்கு மாகாணத் தமிழர்களுடைய அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் இல்லை. மாற்றங்களை நோக்கி மக்கள் துணியவும் இல்லை. 1950 களிலிருந்த அதே சொல்லாடல்களுடனும்-வீரவசனங்களுடனும்- வாய்ச்சவடால்கள்டனும்-கோசங்களுடனும்-ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஆரவாரங்களுடனும் ‘வைக்கோல் இழுத்த வழிப்பாட்டிலேயே’ அதாவது மரபு வழி அரசியல் பாதையிலேயே தமிழர் அரசியல் சாண் ஏறி முழம் சறுக்கும் வகையில் போய்க் கொண்டிருக்கிறது. நவீன அரசியல் கூறுகளையும் அணுகுமுறைகளையும் தமிழர் தரப்பு அரசியல் உள்வாங்கவில்லை. தமிழ்த் தலைவர்களுக்கும் மாற்றம் அவசியமாகப்படவில்லை.
மக்கள் நலன் சார்ந்த மாற்றங்களைவிட மக்களின் வாக்குகளே தலைவர்களுக்குத் தேவை. இன்று தமிழ் மக்களிடையே தலைவர்களாக வலம் வருபவர்கள் இந்த மாற்றத்தைக் கொண்டுவரமாட்டார்கள். மக்கள்தான் புதிய தலைவர்களை அடையாளம்கண்டு மாற்றத்திற்கு வழி சமைக்க வேண்டும்.
தேசிய (தென்னிலங்கை)-பிராந்திய மற்றும் பூகோள அரசியல் நீரோட்டத்துடன் பயணித்துத் தேவைகளை (அபிவிருத்தியையும் அதிகாரப்பகிர்வையும் ஒரு சேர) வென்றெடுக்கின்ற அரசியல் மாற்றமே தமிழர்களுக்கு இன்று தேவை.
இத்தகைய மாற்றத்திற்குத் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் தடையை ஏற்படுத்துமே தவிர நன்மையெதையும் ஏற்படுத்தப்போவதில்லை. யானை தன் தலையில் தன் கையாலேயே மண்ணையள்ளிப்போட்ட கதையாகவே முடியும். எனவே தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை இலங்கைத் தமிழ்ச் சமூகம் முற்றாக நிராகரிப்பதுதான் மாற்றத்திற்கான வழியைத் திறக்கும்.