கிணற்றுக்குள் வீழ்ந்த  அரியநேந்திரன் : ஏன் வீழ்ந்தாய்…! விழச்சொன்னார்கள் வீழ்ந்தேன்…!(வெளிச்சம்:001)

கிணற்றுக்குள் வீழ்ந்த  அரியநேந்திரன் : ஏன் வீழ்ந்தாய்…! விழச்சொன்னார்கள் வீழ்ந்தேன்…!(வெளிச்சம்:001)

  — அழகு குணசீலன் —

பாலர் வகுப்பு சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. அப்போது பாடசாலையில் இடைவேளைக்கு பணிசும் (BUNS), பள்ளிமாவு பாலும் கரைத்து தருவார்கள். அந்த பணிஸ் துண்டுக்குள் கள்ளி (காக்துஸ்) முள்ளை மறைத்து வைத்து காகங்களுக்கு போடுவது இடைவேளை விளையாட்டு.  எவ்வளவு கொடிய மன வன்மம். அதை விழுங்கிய காகம் ஒன்று முள்ளுப்பொறுத்து மூச்சடைத்து வீழ்ந்துவிட்டது. இதை அறிந்த ரீச்சர் “ஏண்டா? இந்த பாவத்தைச் செய்தாய் என்று புண்ணியனிடம் கேட்க,  கண்ணன் தான் ரீச்சர் சொன்னவன்” என்றான். 

“டேய் அவன் கிணற்றுக்குள் விழச்சொன்னால் விழுவாயாடா” என்று  ரீச்சர் மாற்றுநொடி போட கண்பிதுங்கி நின்றான் புண்ணியன்.

மட்டக்களப்பு, படுவான்கரை, அம்பிளாந்துறையைச் சேர்ந்த பாக்கிய செல்வம் அரியநேந்திரன் தமிழ்தேசிய பொதுக்கூட்டமைப்பு ஜனாதிபதி வேட்பாளர் என்ற செய்தி அறிந்ததில் இருந்து அந்த காகமும், ரீச்சரின் மாற்றுநொடியும்தான் மனதில் சுழல்கிறது. அதேபோல் தான் 

சிங்கம்  கிணற்றுக்குள் வீழ்ந்த கதையும் பாலர் வகுப்பில் படித்தது தான். ஐந்தறிவு சிங்கம் தன் நிழலைப்பார்த்து எனக்கு எதிராக இன்னொரு சிங்கமா? என்று கிணற்றுக்குள் பாய்ந்த கதை அது. அங்கு கூட்டிக்கொண்டு போய் விட்டது ஒரு முயல். இங்கு தமிழ்த்தேசிய பொதுக் கூட்டமைப்பு கூட்டிக்கொண்டு போய் விட்டிருக்கிறது. இவர் பாய்ந்திருக்கிறார்.

 “தமிழ்த்தேசியத்திற்கான குறியீடாகவே நான் போட்டியிடுகிறேன். நான் வெறும் அடையாளம் மட்டுமே” என்று கூறியுள்ளார் வேட்பாளர். அதேவேளை தந்தை செல்வா, பிரபாகரன், சம்பந்தரை தனது முடிவுக்கு துணைக்கழைக்கிறார்.  இத்தனைக்கும் தந்தை செல்வா காலத்தில்  ஐக்கிய தேசியக் கட்சியின் பரம்பரை ஆதரவாளர் குடும்பம் இவரது குடும்பம்.  தமிழ்த்தேசிய அரசியல் பக்கம்  – வடக்கு நோக்கி தலைவைத்து படுப்பது அபசகுனம்  என்றவர்கள். இப்போது தமிழ்தேசிய பாதுகாவலராக உலா வருகிறார்கள்.

1955 இல் பிறந்த  அரியநேந்திரன் 1985  வரையும் தமிழ்த்தேசிய அரசியல் வாடையைக் கூட அறியாதவர்.  குமரப்பாவின் காலத்தில்  தங்கள் சொத்துப்பத்துக்களை காப்பாற்ற ஏற்பட்ட உறவு  பின்னர் குமரப்பா இவரின்  உறவினர் ஒருவரை காதலித்ததால் நீடித்தது.  கருணாவின் காலத்திலேயே இவருக்கு முக்கியம் வழங்கப்பட்டது. அதற்கு  படுவான்கரையைச் சேர்ந்த  டேவிட், தம்பிராசா, தயாமோகன், துரை, கௌசல்யன் போன்றோர்  ஊரவர்களாகவும்,உறவினர்களாகவும் இருந்ததே காரணம். மட்டக்களப்பில் இருந்த ஊடகம் ஒன்றை திருடிச்சென்று ஊடகவியலாளர் ஆனவர் இவர். கருணா காலத்து தமிழலை பத்திரிகையில் கடமையாற்றியவர். ஊடகம் என்றாலும், அரசியல் என்றாலும் “அதர்மம்”அவருக்கு கைவந்த கலை. இனம் இனத்தை சேரும் என்பதுபோல் வடக்கு பத்தி எழுத்தாளர்கள் பலரும் இவருக்கு முட்டுக் கொடுக்கிறார்கள்.

 இரா.சம்பந்தர் “பொதுவேட்பாளர் முயற்சி முட்டாள்தனமானது” என்று தனது இறுதி நாட்களில் சொன்னதை  அரியநேந்திரன் மறந்திருந்தாலும் தமிழ்மக்கள் மறக்கவில்லை. பிரபாகரனால் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டவர் என்று கூறும் அவர் அல்லது அவரது  வேட்பாளர் ஆதரவாளர்கள் எப்படிக் கொண்டு வரப்பட்டார் என்று கூறுவார்களா? இங்கு தேர்தல் சட்டம்பற்றியல்ல முடியுமானால் சட்டத்திற்கு அப்பாற்பட்டு மனிதநேயம் பற்றி பேசுங்கள்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அமைக்கப்பட்டபின் 2004 இல் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் அரியநேந்திரன் கூட்டமைப்பு பட்டியலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டார். அப்போது  விருப்பத்தேர்வு வாக்கு அடிப்படையில் ஐந்தாவது இடத்தைப் பெற்றிருந்த இவர் தெரிவு செய்யப்படவில்லை.  இதற்கு அவர் புலிகளின் கண்மூடித்தனமான ஆதரவாளர் என்பதும் ஒரு காரணம். தம்பாப்பிள்ளை கனகசபை (களுதாவளை), தங்கேஸ்வரி கதிர்காமர்(கன்னன்குடா), சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி (வாழைச்சேனை), கிங்ஸ்லி இராசநாயகம்(மட்டக்களப்பு) ஆகியோரே தெரிவு செய்யப்பட்டிருந்தனர். புலிகள்  கிங்ஸ்லி இராசநாயகத்தை கடத்திச் சென்று எம்.பி.பதவியை இராஜினாமாச் செய்யுமாறு அச்சுறுத்தினர். அவர் இராஜினாமாச் செய்தார். அந்த இடத்திற்கு அரசியல் நாகரீகம், நேர்மை, அறம் அற்ற வகையில்  புலிகளின் பின்கதவால் நுழைந்தவர் அரியநேந்திரன்.

2004 பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் இரண்டாம் திகதி இடம்பெற்றது. மே,2004 இல் கிங்ஸ்லி இராசநாயகம் பதவியை இராஜினாமா செய்தார். அரியநேந்திரன் மே 18 ம் திகதி பாராளுமன்ற மன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்கிறார். அரியநேந்திரன் முறை தவறான தனது சத்தியபிரமாண திகதியையும்,  ஐந்து ஆண்டுகளுக்கு பின்னரான முள்ளிவாய்க்கால்  2009 மே 18 ஐயும் வாழ்நாளில் மறக்கவே முடியாது. இந்த இரண்டு நிகழ்வுகளினதும் திகதிகள் தற்செயலானவையா?  இராஜினாமாச் செய்தபின்னரும் கிங்ஸ்லி 19 ஒக்டோபர் 2004 இல் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். பிரபாகரனால் அரியநேந்திரன் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டவர் என்று அவருக்கு அறிமுகம் கொடுப்பவர்கள் இந்த வரலாற்றையும் மறைக்காமல் சொல்வதே வடக்கு கிழக்கு -மட்டக்களப்பு மக்களுக்கு செய்யும் நேர்மையான அரசியலாக அமையும்.

அரியநேந்திரன் 1970 களில் சிங்கக் கொடியுடன் திரிந்த காலத்தில், காசி.ஆனந்தனுடன் – இளைஞர் பேரவையுடன் இணைந்து அரசியல் செய்தவர் கிங்ஸ்லி. ஒரு வங்கி முகாமையாளராக பாதுகாப்பு படையினரால் நிறைய கஷ்டங்களை எதிர்நோக்கியவர்.   பொன். வேணுதாஸ், நடேசானந்தம், மண்டூர் மகேந்திரன், நிமலன் சௌந்தரநாயகம், அன்ரன் போன்றவர்களுடன் அரசியலில் ஈடுபட்டவர். பிரபாகரன் -கருணா முண்பாட்டில் கிங்ஸ்லி கருணா ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பார் என்றும், அன்றைய தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் இணைந்து விடுவார் என்ற சந்தேகத்லிலுமே புலிகள் கிங்ஸ்லியை கொலை செய்தார்கள்.  இந்தத் தேர்தலில் மட்டக்களப்பு மக்களின் தேர்வையும், அரியநேத்திரன், ஜோசப் பரராஜசிங்கம் ஆகியோரின் நிராகரிப்பையும்  வன்னிப்புலிகளால்  சகிக்க முடியவில்லை.

பொது வேட்பாளர் ஆலோசனை முட்டாள்தனமானது என்று சொன்னவர் இரா.சம்பந்தர். அவரின் வழியில் வந்ததாக கூறும் அரியநேந்திரன் சம்பந்தருக்கு செய்யும் அஞ்சலியாக இந்த வேட்பாளர் ஏற்பை கொள்ளலாமா?  ம.சுமந்திரன் பல தடவைகள் பொதுவேட்பாளர் முட்டாள் பயல்களின் வேலை என்று சொல்லியிருக்கிறார். யாழ், கொழும்பு ஊடகங்களுக்கு மாறாக அரங்கம் ஊடக பத்திகள் இந்த முயற்சியை  மிகக்கடுமையான விமர்சனங்களால் கேள்விக்குட்படுத்தியுள்ளன. இப்போது அந்த ஒட்டு மொத்த விமர்சனங்களுக்கும், முட்டாள்தனத்திற்கும் உரியவன் நானே என்று உரிமை கோரியிருக்கிறார் அரியநேந்திரன்.

தமிழ்த்தேசிய பொதுக்கூட்டமைப்பபில் ஏழு கட்சிகளும், எண்பதுக்கும்  மேற்பட்ட அமைப்புக்களும் உள்ளன. உடன்பாட்டில் 14 பேர் இவற்றின் சார்பில் ஒப்பமிட்டுள்ளனர். இதில் கட்சிக்கார் ஏழு, அமைப்புக்காரர் ஏழு. தமிழ்த்தேசிய பத்தி எழுத்தாளர்களான சோதிலிங்கம், யசீந்திரா, நிலாந்தன், ஊடகநிறுவனம் ஒன்றின் முக்கியஸ்தர் ஒருவரும் இதில் அடங்கும். 

வேட்பாளர் நியமனம் மட்டக்களப்பில் சில தில்லு முல்லுகளை வெளியே கொண்டு வந்திருக்கிறது. அனாமதேய பெயரில் முகப்புத்தக பதிவுகளை இட்டு வந்த ‘திருட்டு பதிவாளர் களிடையே கள்ளக்கூட்டு கலைந்து விட்டது. ஒருதரப்பை மறு தரப்பு நீக்குவதும், தங்களுக்கும் வேட்பாளர் அரியநேந்திரனுக்கும் தொடர்பு இல்லை என்றும், அவரை குழுவில் இருந்து நீக்கி விட்டோம் என்றும் சமூக ஊடகங்களில் ஊடக அதர்மம் வெளியாகிறது.  

சாணக்கியன் – சரவணபவான்- அரியநேந்திரன் குழுக்களாக மட்டக்களப்பில் ஆளை ஆள் காட்டிக்கொடுக்கிறார்கள்.  நேற்று வரை மூன்றும் ஒரே முகநூல் குழுவாக செயல்பட்டவர்கள். எல்லோர் பற்றியும் அநாகரிகமாகச் சீண்டியவர்கள். இன்று மோதுப்பட்டுக்கொள்கிறார்கள். இனி பூனைக்குட்டிகள் அசிங்கமாக வெளிவரலாம்.

பொது வேட்பாளர் தேர்வில் தெரிவுக்குழுவிலும், வேட்பாளர் அறிவிப்பிலும் முன்வரிசையில் இருந்த ஊடகவியலாளர்களிடம் ஒரே ஒரு கேள்வி ஊடகவியலாளர் என்ற போர்வையில் புலிகள் செய்த அயோக்கியத்தனத்தை அல்லவா நீங்களும் செய்திருக்கிறீர்கள்? இவரை பொதுவேட்பாளராக தெரிவுசெய்து ஊடகத்துறைக்கு மட்டும் அல்ல ஒட்டு மொத்த தமிழ்த்தேசியத்திற்கும் அல்லவா அவமானத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.

ஜனாதிபதி வேட்பாளராக நிமனம் பெறுவதற்கு இரண்டு நிபந்தனைகள் முக்கியம். 

1. வேட்பாளர் கட்சி ஒன்றின் பிரதிநிதியாக கட்சியின் அங்கிகாரத்துடன் கட்சி சின்னத்தில் போட்டியிட வேண்டும் .

2. சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுதல் என்றால் அந்த வேட்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கவேண்டும்.

சரியான, தகுதியான பொதுவேட்பாளர் ஒருவரை கல்விச் சமூகத்தில் இருந்து தேர்வு செய்வதில் தமிழ்தேசிய பொதுக்குழு தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தமிழ்த்தேசிய சாக்கடையில் மூழ்க தாங்கள் தயாராக இல்லை என்று அவர்கள் சறுக்கியிருக்கலாம்.

அதையும் விடுவோம். சிறிகாந்தா, சுரேஷ் பிரேமச்சந்திரன் , சிவாஜிலிங்கம், சிறிநேசன், யோகேஸ்வரன், சந்திரநேரு…. போன்றவர்கள் கட்சியோடும், முன்னாள் எம்.பிக்கள் என்ற தகுதியோடும் இருக்கிறார்கள்.

தமிழ்த்தேசிய பரப்பில் குறிப்பாக வடக்கில் காலுக்குள்ளும், கைக்குள்ளும். இந்த இரு நிபந்தனைகளையும் பூர்த்தி செய்த, செய்யக்கூடிய வேட்பாளர்கள் ஏழு கட்சிகளிலும் இருக்கிறார்கள். பொது அமைப்புக்களிலும்  இருக்கிறார்கள். இந்த நிலையில் அரியநேந்திரன் இந்த சதி வலையில் வீழ்ந்துள்ளார். தமிழரசுக்கட்சியில் அவரின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

எதிர்வரும் நாட்களில் கூட  இருக்கின்ற தமிழரசுக்கட்சியின் மத்திய குழுவில் சிறிதரன் அணியா? சுமந்திரன் அணியா பெரும்பான்மை வகிக்கப்போகின்றன என்பதைப்பொறுத்தே இது தெரியவரும். இப்போதைய நிலையில் அரியநேந்திரன் தமிழரசுக்கட்சியின் கட்டுப்பாட்டை மீறியுள்ளார். கட்சியின் அனுமதியின்றி வேட்பாளராக களமிறங்கி உள்ளார். பெரும்பாலும் தமிழரசுக்கட்சியின் முடிவுக்கு முன்னர்  இந்த முடிவை எடுத்திருப்பதால் தமிழரசில் அவரின் அரசியல் அஸ்த்தமனமாக இது அமையும்.

நுணலும் தன்வாயால் கெடும். எல்லாத்தவளையும் கத்தினாலும் இந்தத் தவளை கிணற்றுக்குள் பாய்ந்து விட்டது. வடக்கு தவளைகள் மட்டும் அல்ல கிழக்கின் மற்றைய தவளைகளும் தப்பிவிட்டன.

இனி என்ன? கிணற்று தவளைக்கு அதுதான் உலகம்- சர்வதேசம்.

கூப்பிட்டு காட்டவேண்டியதுதான்.