சம்மாந்(ன்)துறை -வீர(ர்)முனை: பல நூற்றாண்டுகள் உறவும் -சில பத்தாண்டுகள் பகையும்..! (பகுதி:7.)

சம்மாந்(ன்)துறை -வீர(ர்)முனை: பல நூற்றாண்டுகள் உறவும் -சில பத்தாண்டுகள் பகையும்..! (பகுதி:7.)

— அழகு குணசீலன் —

இந்த தொடரில் நாம் இதுவரை செலுத்தியுள்ள பார்வையானது பண்டைய ஈழம் மற்றும் காலனித்துவ கால ஆட்சி நிர்வாக,சமூக, பொருளாதார கட்டமைப்பு சார்ந்தது. ஐரோப்பியர் வருகைக்கு முதலான வரலாறானது முழுக்க முழுக்க “கதைகளை” ஆதாரமாகக் கொண்டு கட்டப்பட்டு இருப்பதை காணமுடியும். இந்த இதிகாச கதைகளும், அரசர்களின்-அரசிகளின் காதலும், போரும்,  வீரமும், நிலவுடைமையை மையமாகக்கொண்ட  அதிகார வர்க்கத்தினை பிரதிபலிப்பவை. சாமானிய மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் வாழ்வியல் சடங்குகள், சம்பிரதாயங்கள், மரபுகள் கொண்ட சாதாரண  வாழ்க்கை அங்கு பேசப்படுவதில்லை.

உலக வரலாறானது அதிகாரவர்க்கத்தினால் நிர்ணயிக்கப் படுவதாக – எழுதப்படுவதாக  இருப்பதை இன்றைய 21ம் நூற்றாண்டிலும் நாம் காணக்கூடியதாக உள்ளது.  

ஈராக்கில் அணுவாயுதம் தேடிய கதையும், லிபியாவில் பயங்கரவாதத்தை தேடிய கதையும், பாலஸ்தீன, உக்ரைன் யுத்தங்களும்  ஒட்டு மொத்தத்தில் ஒரே கதையேயே எமக்கு திரும்பத்திரும்ப சொல்லுகின்றன. இந்தியாவின் அயோத்தியின் பாபர்மசூதியும், இராமர் கோயிலும் இதிலிருந்து வேறுபட்ட வரலாற்று குணாம்சங்களை கொண்டவை அல்ல. இன்னும் சொன்னால் அதிகாரம் வரலாற்றை  எழுதுகிறது, தமக்கு சாதகமாக திரிபுபடுத்துகிறது, தன்னைத் தக்கவைத்துக்கொள்வதற்கு என்னவெல்லாம் செய்கிறது என்பதை எமது கண்முன்னால் கடந்த முப்பதாண்டு கால யுத்தத்தில் கண்டு கழித்தவர்கள் -கடந்து வந்தவர்கள் நாம். இவற்றின் தொடர்ச்சிகளை வெறும் முரண்பாடுகளாக மக்கள் சுமக்கிறார்கள். சம்மாந்துறையும்,வீரமுனையும் இதற்கு விதிவிலக்கல்ல.

பொய்யும், புரளியும் நிறைந்த, உண்மைகள் மூடி மறைக்கப்பட்ட, திரிவுபடுத்தப்பட்ட, தனிநபர் வழிபாடு சார்ந்த, தேசபக்தி வரலாறு ஒன்றே கடந்த முப்பதாண்டுகளில்  எழுதப்பட்டுள்ளது. இதற்கு ஆயுத அதிகாரம் துணைபோனது. போர்க்கால கலை, இலக்கியங்கள் என்பவற்றை மறுவாசிப்பு செய்யும் எந்த ஒரு ஆய்வாளரும் இந்த அதிகார பக்தியை அறிந்து கொள்ள முடியும். மாற்றுக் கருத்துக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது  வாய்ப்பூட்டு போட்டு, அதிகாரம் தன்நிலை சார்ந்ததாக அந்த வரலாறு கட்டமைக்கப்பட்டுள்ளது. வரலாறு அதிகாரவர்க்கத்தின் கட்டமைப்பு என்பதற்கு கண்கண்ட சாட்சியாக  இது அமைகிறது. மக்களின் கண்களைத்திறக்கவும், சமூகங்களுக்கு இடையிலான உறவை வளர்க்கவும் அது தவறியது.

ஆகக் குறைந்தது கடந்த அரை நூற்றாண்டில் அரபுலகில் வளர்ந்து வரும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தையும், இந்தியாவில்  எழுகின்ற இந்துத்துவ அடிப்படைவாதம், மேற்குலகின் நவ காலனித்துவ உள்நுழைவு என்பனவற்றை எல்லாம் நாம் புறம் தள்ள முடியாது. இவை எல்லாம் எங்கள் வீட்டுத்திண்ணை வரை வந்தபின் கண்டும் காணாமல் கடந்து செல்லவும் முடியாது. இந்த அடிப்படையில் இருந்து நோக்காமல் சம்மாந்துறை – வீரமுனை, தமிழ் – முஸ்லீம் சமூகங்களுகிடையான உறவையும், பகைமையையும் பேசமுடியாது, புரிந்து கொள்ளவும் முடியாது.

கிழக்கிற்கு -அம்பாறை மாவட்டத்திற்கு பாகிஸ்தான் தூதுவர் வந்தால் அடுத்துவருபவராக இந்திய தூதுவர் இருக்கிறார். இந்தியத்தூதுவர் வந்ததை அறிந்தால் அடுத்து அமெரிக்க தூதுவர் வருகிறார். அமெரிக்காவந்துவிட்டது, தான் மட்டும் ஏன் விட்டுவைக்க என்று சீனா பிரசன்னமாகிறது. இப்படியான ஒரு சர்வதேச வலையில் நாம் சிக்கியுள்ளோம். இந்த வலையில் இருந்து விடுபட வேடனின் வலையைத்தூக்கிய புறாக்கள் போன்று கிழக்கின் பல்மைத்துவ சமூகங்கள் ஒன்றுபட வேண்டும். ஆனால் அரசியல் -தேர்தல் அரசியல்-கட்சிஅரசியல்  அதற்கு தடையாக இருக்கிறது. இருக்கிற எள்ளளவு உறவையும் இல்லாமல் செய்து விடுகிறது.

 எனவே பண்டைய வரலாற்றை ஒரு பக்கம் வைத்து விட்டு, நவீன சமூக, பொருளாதார, அரசியல் போக்கையும், மக்களின் வாழ்வியலிலும், அதிகார வர்க்கத்தின் தலைமைத்துவத்திலும் சமகாலத்தில் ஏற்பட்டு வருகின்ற ஜதார்த்தங்கள் எமக்கு முக்கியமானவை. இதுவரை நாம்  படித்த கல்வெட்டு, செப்பேடு, ஏடு முதலான வரலாற்று “கதைகள்” ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் -வட்டத்திற்குள் மட்டுமே எமக்கு உதவ முடியும். அதுவும் அவற்றை நாம் அப்படியே உள்வாங்காது, அந்த ஆவணங்கள் பேசுகின்றவற்றை மறுவாசிப்பு செய்வதிலேயே மானிடவியல் வரலாற்று விழுமியங்களை அடையாளம் காணமுடியும்.

 2024 ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் மட்டக்களப்பில் வெளியிடப்படவுள்ள வரலாற்று -மானிடவியல் ஆய்வான மட்டக்களப்பு வரலாறு பற்றிய நூல் மட்டக்களப்பின் வரலாற்றை  சமூக மானிடவியல் விஞ்ஞானம் சார்ந்து பேசுகின்ற  ஒரு  நூலாகவும், காலத்தால் பிந்திய இளம் படைப்பாகவும் அமையும் என்று நம்பப்படுகிறது. மட்டக்களப்பு மான்மியம் முதல் மட்டக்களப்பு வரலாறு ஒரு அறிமுகம் வரையான இதுவரை மட்டக்களப்பு வரலாற்றை பேசிய நூல்களில் இருந்து வேறுபட்டதளத்தில்  அதாவது இதிகாச கதைகளாலும், கேள்விவழிக் கதைகளாலும் இந்த மண்ணில் விதைக்கப்பட்டுள்ள  கருத்துக்களில் இருந்து விடுபட இந்த மானிடவியல் ஆய்வு எம்மை வழிநடத்தும் என்று நம்புவோம். இதன் மூலம் இன,மத முரண்பாடுகளை,  இந்த தொடர் பத்திபேசுகின்ற சம்மாந்துறை -வீரமுனை முரண்பாட்டை இதனூடாக நோக்கமுடியும், பேசமுடியும். அதுவை 21ம் நூற்றாண்டிற்கான சமூக, பொருளாதார, அரசியல் பார்வையாக அமைய முடியும். இது பற்றி மற்றோரு பதிவில் தனியாகப் பார்க்கலாம்.

சம்மாந்துறை -வீரமுனை வரவேற்பு வளைவு விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. கல்முனை தமிழ் பிரதேச செயலக சர்ச்சையும் நீதிமன்றத்தில். இந்த விவகாரங்கள் நீதிமன்றத்திற்கு தீர்வுக்காக -தீர்ப்புக்காக மட்டும் வரவில்லை. ஒரு வகையில் தீர்வை இழுத்தடிப்பதற்கான ஒரு வழிமுறையாக அரசியல் இதனை கையாளுகிறது. “தடையுத்தரவு”  ஒரு அரசியல் வன்முறையாகிவிட்டது. இதுவரை  சமூகங்களுக்கு இடையில் வளர்ந்த முரண்பாடு கல்முனைக்குடி பற்றிய நிஷாம் காரியப்பரின்  “அந்த கல்முனைக்குடி நாட்கள்….” என்ற கவிதை நூல் மூலம் முஸ்லீம்களுக்கிடையே ஒரு பிளவை ஏற்படுத்தியுள்ளது. எந்த மண் பற்றி  காரியப்பர் பேசுகிறாரோ அந்த மண்ணில் அது இன்னும் வெளியிடப்படவில்லை. இதற்கு காரணம் அரசியல் அன்றி வேறென்ன….?

பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஷ் அவர்களும், பள்ளிவாசல்கள் நிர்வாகமும் கூறுகின்ற காரணங்கள் அங்கு தொக்கி நிற்கின்ற இனமுரண்பாட்டை மூடிமறைக்க முடியாத நிலையை வெளிப்படுத்தியுள்ளன. கல்முனை தமிழ் பிரதேச சபை விவகாரத்திற்கு தமிழ்தரப்பு முன்வைக்கின்ற காரணத்திற்கு இந்த கவிதை நூல் வலுச்சேர்த்துவிடும் என்று கல்முனை அரசியல் பேசுகிறது. கல்முனை குடியில் பிறந்து -வளர்ந்து ஒரு அரசியல் பாரம்பரியத்தில் அதாவது ஒரு காலத்தில் தமிழ் முஸ்லீம் சமூகங்களுக்கு மத்தியில் ‘ஒன்றடிமன்றடியாக’ வாழ்ந்த -வாழும் காரியப்பர் பரம்பரைக்கு இது தெரியாமலா நிஷாம் காரியப்பர் அந்த நூலுக்கு “அந்த கல்முனைக்குடி நாட்கள்….என பெயரிட்டார். 

நிஷாம் காரியப்பரின் அந்த நாள் நினைவுகள் கல்முனைக்குடி புழுதி அழைந்த மண்விளையாட்டு நினைவுகள் என்றால், அதை கல்முனை நினைவுகள் என்று  பெயர்மாற்றம் செய்யுங்கள் என்று கோருவது எந்தவகையில் நியாயம்? கல்முனைக்குடியை மறைத்து – மறந்து கல்முனை தான் எங்கள் பூர்வீக பூமி என்று காட்ட முற்படும் அரசியலாக இது அமைகிறது. அது மட்டுமின்றி இந்நூல் பிறந்த மண்ணில் அவருக்கான அனுபவங்களை பேசுவது. இங்கு கல்முனைக்குடிக்கு பதிலாக கல்முனையை தத்தெடுக்க கோருவதில் உள்ள அரசியல், இலக்கிய நியாயம் என்ன?

கல்முனை தமிழ் பிரதேச செயலக விவகாரம் தொடர்பாக  ஆய்வாளர் செங்கதிரோன் த. கோபாலகிருஷ்ணன் எழுதியுள்ள பல பத்திகளில் எது கல்முனைக்குடி? எது கல்முனை? என்று விரிவாக ஆராய்ந்துள்ளார். அவற்றின்  எல்லைகளை கோடிட்டுக்காட்டியுள்ளார். இங்கு இரு விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவையாக உள்ளன. ஒன்று, காலப்போக்கிலான சனத்தொகை வளர்ச்சி -பரம்பலில் ஏற்படுகின்ற மாற்றம். இது கிராமங்களின் எல்லைகளை முன்னுக்கும் பின்னுக்கும், பக்கங்களுக்கும் நகர்த்தும்- விரிவுபடுத்தும் என்பது ஜதார்த்தம்.  கல்முனைக்குடி கல்முனையாகவோ, கல்முனை கல்முனைக்குடியாகவோ மாற்றமுடியாது/ மாறமுடியாது என்பது. கிராமங்களின் பெயர்மாற்றங்கள், எல்லை நிர்ணயங்கள் தொடர்பாக செய்யப்படவேண்டிய நீதி, நிர்வாக வழிமுறை ஒன்று இருக்கின்றது.

அடுத்தது கல்முனைக்குடியின் கடந்த காலத்தை பேசுகின்ற இந்தக் கவிதை நூல் ஒரு இலக்கியமாக விமர்சிக்கப்பட வேண்டியதே அன்றி சமகால பிரதேச அரசியலுக்குள் இழுக்கப்பட்டு இன, மத முரண்பாடுகளை வளர்ப்பதாக, அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்தப்படுவதாக அமையக்கூடாது. இலக்கியத்தின் இலக்கு முரண்பாடுகளை வளர்ப்பதா…? தணிப்பதா….? நல்ல வேளை இந்த நூல் வெளியீட்டுக்கு யாரும் நீதிமன்றத்தில் தடையுத்தரவு கோரவில்லை. 

சுதந்திரத்திற்கு பின்னரான கிழக்குமாகாண அரசியல் கிழக்கில் தமிழ், முஸ்லீம் சமூகங்களுக்கு இடையிலான இன நல்லுறவு, புரிந்துணர்வில் பெரும் படு குழியைத்தோண்டி  இருக்கிறது. அதற்குள் சமூகங்கள் வீழ்ந்து கிடக்கின்றன. குறிப்பாக எம்.எஸ். காரியப்பர், எஸ்.எம். இராசமாணிக்கம் போன்ற அரசியல் தலைமைகளும் இதற்கு காரணமாக அமைந்துள்ளனர். அம்பாறை -மட்டக்களப்பு மாவட்ட பாரம்பரிய எல்லை கிராமங்கள் கல்முனை, பட்டிருப்பு தொகுதிகளுக்கு இடையே பங்கிடப்பட்ட அரசியல் பின்னணியும், தொகுதி நிர்ணய  சுயநலம் சார்ந்த சிபார்சுகளும் இதற்கு காரணம்.  அதேவேளை அப்துல் மஜீத்தின் அரசியல் தலைமைத்துவத்தில்  வேற்றுமையிலும் ஒற்றுமை கண்ட வீரமுனையும், சம்மாந்துறையும் அதைத்தொடரமுடியாமல் போனதற்கான காரணங்கள் என்ன?  

இன்னும் வரும்………!