அரசியல் தீர்வை  காணமுடியாமல் இருப்பது கறுப்பு ஜூலையை விட பெரிய வெட்கக்கேடு

அரசியல் தீர்வை  காணமுடியாமல் இருப்பது கறுப்பு ஜூலையை விட பெரிய வெட்கக்கேடு

 — வீரகத்தி தனபாலசிங்கம் —

 முதுபெரும் தமிழ் அரசியல் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் மறைந்த மறுநாள் தமிழ்நாட்டின் இடதுசாரி அரசியல் தலைவர் ஒருவர் தொடர்புகொண்டு இலங்கை தமிழ் அரசியலில் காலஞ்சென்ற தலைவர் வகித்த  குறிப்பிடத்தக்க பாத்திரம் என்னவென்று கேட்டார். 1983 கறுப்பு ஜூலைக்கு பிறகு இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடுவதற்கு வழிவகுத்த பேச்சுவார்த்தைகளில் தலைவர்கள் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் ஆகியோருடன் சேர்ந்து சம்பந்தன் வழங்கிய பங்களிப்புகளை நினைவுபடுத்தி அவருக்கு நான் கூறத் தொடங்கினேன்.

 உடனடியாகவே இடைமறித்த அவர் 1983  ஜூலையில் என்ன நடந்தது என்று கேட்டார். நாடு முழுவதும் தமிழ் மக்களுக்கு எதிராக கொடூரமான இனவன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டதையும் அதுவே பிறகு சுமார் மூன்று தசாப்தகால உள்நாட்டுப்போருக்கு வழிவகுத்தது என்பதையும் அயலில் தமிழ்நாட்டில் இருக்கும் இடதுசாரி அரசியல்வாதி ஒருவர் அறியாதவராக இருக்கிறாரே என்று எனக்கு பெரும் ஏமாற்றமாகப் போய்விட்டது.

நாற்பது வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இடம்பெற்ற நிகழ்வுகளை அறிவதற்கு வாய்ப்பு இருந்திருக்காத வயதைக் கொண்டவரும் அல்ல அவர். தமிழ்நாட்டில் நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக பல  முகாம்களில் இலங்கை தமிழ் அகதிகள் தங்கியிருப்பதற்கான  காரணத்தையாவது இந்த மனிதர் அறிந்திருக்கவில்லையா என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

 சம்பந்தனின் மரணமும் தமிழ்நாட்டு அரசியல்வாதியின் கேள்வியும் கறுப்பு ஜூலையின் 41 வது வருட நிறைவுக்கு மூன்று வாரங்கள் முன்னதாக வந்தது தற்செயலான நிகழ்வு என்றாலும் இலங்கையில் இனங்களுக்கு இடையிலான உறவுகளைப் பொறுத்தவரை ஒரு எல்லைக்கோடாக அமைந்த அந்த இனவன்செயல் பற்றி எழுதுவதற்கு எனக்கு தவிர்க்கமுடியாமல் உந்துதலைக் கொடுத்தது.

பிரபல்யமான  பத்திரிகை ஆசிரியரும் சர்வதேச புகழ்வாய்ந்த அரசியல் ஆய்வாளருமான காலஞ்சென்ற மேர்வின் டி சில்வாவே தனது ‘லங்கா கார்டியன் ‘ சஞ்சிகையில் அந்த கொடுமையான ஜூலையை கறுப்பு ஜூலை (Black July ) என்று முதன்முதலாக வர்ணித்தார். ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போன்று  41 வருடங்களுக்கு முன்னர் இந்த வாரத்தில் இலங்கை முழுவதும் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் நாட்டின் அரசியல் வரலாற்றிலும் சிங்கள பெரும்பான்மைச் சமூகத்துக்கும் பெரிய சிறுபான்மைச் சமூகமான தமிழர்களுக்கும் இடையிலான உறவுகளிலும் ஒரு எல்லைக்கோடாக மாறியது.

ஒரு வாரத்துக்கும் அதிகமாக நீடித்த அந்த வன்முறைகளில் மூவாயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்ட அதேவேளை சொத்துக்கள் அழிவு குறித்து இதுவரையில் உகந்த மதிப்பீடு செய்யப்படவில்லை. ஆயிரக்கணக்கான தமிழர்கள் தங்களது வீடுகளையும் உடைமைகளையும் இழந்தார்கள். சிங்களவர்கள் மத்தியில் சமத்துவமான குடிமக்களாக அமைதியாக வாழக்கூடியதாக இருக்கும் என்ற நம்பிக்கையை தமிழர்கள் இழந்தார்கள்.

ஆயரக்கணக்கில் தமிழர்கள் அகதிகளாக நாட்டிலிருந்து வெளியேறினார்கள். மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு பலர் குடிபெயர்ந்தார்கள். இந்த வெளியேற்றம் காரணமாக ஒரு காலத்தில் உலகம் பூராவும் அலைந்து திரிந்த யூதர்களுக்கு ஒப்பானவர்களாக இலங்கை தமிழர்கள் மாறினார்கள். இறுதியில் இன்று அவர்கள் உலகில் அரசியல் ரீதியில் செல்வாக்குமிக்க புலம்பெயர் சமூகங்களில் ஒரு பிரிவினராக விளங்குகிறார்கள். அவர்களை ‘நவீன யூதர்கள்’ என்று அழைப்பது ஒன்றும் மிகையில்லை.

 ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிட்ட வன்முறை இலங்கை அரசியலின் போக்கையே மாற்றியது. யாழ்ப்பாணத்தின் திருநெல்வேலியில் 1983 ஜூலை 22 ஆம் திகதி இரவு விடுதலை புலிகள் நடத்திய கெரில்லா தாக்குதலில் இலங்கை இராணுவத்தின் ஒரு ரோந்துப்பிரிவைச் சேர்ந்த 13 படையினர் கொல்லப்பட்டார்கள். இந்த சம்பவம் தமிழர்களுக்கு எதிராக  அரசாங்கத்திற்குள் இருந்த இனவெறிச் சக்திகள் ஏற்கெனவே திட்டமிட்டு வைத்திருந்த வன்முறையை கட்டவிழ்த்து விடுவதற்கு வசதியான சாட்டாகப் போய்விட்டது. அரசு இயந்திரம் வெளிப்படையாகவே வன்முறையாளர்களுக்கு உதவியது.

வன்முறைக் கும்பல்களை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. அரச தொலைக்காட்சியில் தோன்றி  வன்முறையை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுப்பதற்கு ஜனாதிபதி ஜெயவர்தனவுக்கு ஒரு வாரகாலம் எடுத்தது. இனவாத அட்டூழியத்தில் முன்னென்றும் இலாலாத அளவுக்கு உயிர்களையும் உடைகைளையும் இழந்து மோசமாகப் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு ஆறுதலாக ஒரு வார்த்தையைக் கூட அவர் தொலைக்காட்சியில் கூறவில்லை. மாறாக, தமிழ் அரசியல் தலைவர்களின் நாட்டுப்பிரிவினைக் கோரிக்கைக்கு எதிரான சிங்கள மக்களின் இயல்பான பிரதிபலிப்பே வன்முறைகள் என்று வெட்கக்கேடான முறையில் ஜெயவர்தன பிரகடனம் செய்தார்.

உயிரழப்புகளுக்கும் சொத்து அழிவுகளுக்கும் அப்பால், வன்முறைகளின் விளைவாக தமிழ் மக்கள் அனுபவித்த வேதனையும்  உணர்வதிர்ச்சியும் அளவிடமுடியாதவையும் சமாளிக்க முடியாதவையுமாகும். சுமார் மூன்று தசாப்த காலமாக நீடித்த உள்நாட்டுப் போரின்போது தமிழ் மக்கள் சந்தித்த உயிரிழப்புகளும் சொத்து அழிவுகளும் கறுப்பு ஜூலை அவலங்களை விடவும் மாபேரளவு அதிகமானவை என்றபோதிலும், ஆயுதமேந்திய தமிழ்த்தீவிரவாத இயக்கங்கள் தோன்றுவதற்கும்  அதையடுத்து இனப்போர் மூளுவதற்கும் வழிவகுத்த காரணத்தால் கறுப்பு ஜூலைக்கு தமிழ் அரசியலின் வரலாற்றில் ஒரு பிரத்தியேகமான எதிர்மறை அடையாளம் இருக்கிறது.

ஜெயவர்தன அரசாங்கம் மாத்திரமல்ல, கறுப்பு ஜூலைக்கு பிறகு பதவிக்கு வந்த மற்றைய சகல அரசாங்கங்களும் கூட  தேசிய இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமான அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பது குறித்து பேசிக்கொண்டே இராணுவத் தீர்வொன்றைக் காண்பதில் உன்னிப்பான அக்கறை காட்டின. வெறுமனே சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காக சகல ஜனாதிபதிகளும் அரசியல் தீர்வைப்பற்றி பேசிக்கொண்டிருந்த போதிலும் அவர்கள் உண்மையில் இராணுவத் தீர்விலேயே அக்கறை காட்டினார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

சிக்கலான நீண்டகால இனப்பிரச்சினைக்கு  நடைமுறைச் சாத்தியமான அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு உதவுவதற்கு பதிலாக,  இந்தியாவும் சர்வதேச சமூகத்தின் ஏனைய வல்லாதிக்க நாடுகளும் அவற்றின் அணுகுமுறைகள் மற்றும் செயற்பாடுகள் மூலமாக இராணுவத் தீர்வை நோக்கிய நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுவதையே உறுதிசெய்தன. இறுதியில் புவிசார் அரசியலில் ஏற்பட்ட பாரிய மாற்றங்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம்  குடிமக்களுக்கு ஏறபடக்கூடிய அவலங்களை பொருட்படுத்தாமல் 2009 மே மாதத்தில் வன்னியில் விடுதலை புலிகளை தோற்கடிப்பதற்கு வசதியாக அமைந்தன.

கறுப்பு ஜூலைக்கு பிறகு 41 வருடங்களும் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து பதினைந்து வருடங்களும் கடந்துவிட்ட பின்புலத்தில்  தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளின் இலட்சணத்தை நோக்கும்போது பெரும் வேதனையாகவும் ஏமாற்றமாகவும் இருக்கிறது. தற்போது ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக மாறிவருகின்ற அரசியல் நிலைவரங்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது  இனப்பிரச்சினை தொடர்பில் நம்பிக்கை தரக்கூடிய நிகழ்வுப்போக்கை எதிர்பார்க்க முடியவில்லை.

கறுப்பு ஜூலைக்கு பிறகு இலங்கை இனநெருக்கடியில் தலையீடு செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்ட எமது பெரிய அயல்நாடான இந்தியா போரில் ஈடுபட்ட தரப்புக்களிடையே மத்தியஸ்தம் வகிப்பதற்கு அதன் நல்லெண்ணத்தை பயன்படுத்த முன்வந்தது. அது தொடர்பிலான நிகழ்வுகளை இன்றைய இளம் சந்ததியினரின் நன்மைக்காக நினைவுபடுத்த வேண்டியது அவசியமாகிறது. இந்தியாவின் தலையீடு இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரு மைல்கல்லாக அமைந்தது. இறுதியில் அது பிரதமர் ராஜீவ் காந்தியும் ஜனாதிபதி ஜெயவர்தனவும் கொழும்பில் 1987 ஜூலை 29 ஆம் திகதி இந்திய —  இலங்கை சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு வழிவகுத்தது.

உடன்படிக்கையை அடுத்து மாகாணசபைகள் முறையை அறிமுகப்படுத்த  இலங்கை அரசியலமைப்புக்கான 13 வது திருத்தம் பாராளுமன்றத்தில் (முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான படுமோசமான எதிர்ப்புக்கு மத்தியில்)  பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த நிகழ்வுகள் 1980 களின் பிற்பகுதியில் இரண்டாவது ஜே.வி.பி. கிளர்ச்சிக்கு ஊக்கமளித்தன.

அந்த காலப்பகுதி இலங்கையின் அண்மைய வரலாற்றில் பயங்கரமான நிகழ்வுகள் நிறைந்த ஒன்றாக இருந்தது. உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட தினம் ஜனாதிபதி மாளிகை முன்பாக அணிவகுப்பு மரியாதையின்போது கடற்படை வீரர் ஒருவர் ராஜீவ் காந்தியை துப்பாக்கி பின்பக்கத்தினால் தாக்கி கொலைசெய்ய முயற்சித்தார் ; 1987 ஆகஸ்ட் 18 ஆம் திகதி பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நடைபெற்ற ஆளும் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்றக்குழு கூட்டத்தில் கிரனேட் வீசி ஜனாதிபதி ஜெயவர்தனவையும் அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களையும் கொலைசெய்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 

இந்த சம்பவங்களும் உடன்படிக்கையை தொடர்ந்து தென்னிலங்கையில் இடம்பெற்ற படுமோசமான வன்முறைகளும் சொத்து அழிப்பும் சிங்கள மக்கள் மத்தியில் ஆழமான எதிர்ப்புணர்வுக்கு சான்றுகளாக அமைந்தன. இனப்பிளவின் இருமருங்கிலும் உடன்படிக்கையை ஆதரித்த பல அரசியல்வாதிகள் தமிழ்த் தீவிரவாதிகளினாலும் தென்னிலங்கை தீவிரவாதிகளினாலும் கொலை செய்யப்பட்டனர்.

ஆனால், அரசியல் அடிப்படையில் நோக்கும்போது உடன்படிக்கை விரும்பத்தக்க பல மாற்றங்களை ஏற்படுத்தியது. ஜனாதிபதி ஜெயவர்தன மிகவும் கடுமையான கருத்துக்களைக் கொண்டிருந்த பல பிரச்சினைகளில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்.

ஆங்கிலத்துக்கு பதிலாக சிங்களத்தையும் தமிழையும் அரசகரும மொழியாக்கவேண்டும் என்று பிரேரணையை எஸ்.டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க 1944 ஆம் ஆண்டில் இரண்டாவது அரசாங்க சபையில் கொண்டு வந்தபோது அதை எதிர்த்து வாக்களித்து சிங்களம் மட்டுமே அரசகரும மொழியாக்கப்படவேண்டும் என்று கோரியவர் ; 1957 பண்டாரநாயக்க —  செல்வநாயகம் உடன்படிக்கைக்கு எதிராக கொழும்பில் இருந்து கண்டிக்கு பாதயாத்திரை மேற்கொண்டு அது கிழித்தெறியப்படுவதற்கு உதவியவர் இப்போது அரசகரும மொழிகள் என்ற அந்தஸ்தை  சிங்களத்துக்கு நிகராக  தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும்  வழங்கும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார்.

தனது சடலத்தின் மேலாக மாத்திரமே வடமாகாணத்தினதும் கிழக்கு மாகாணத்தினதும் இணைப்பு இடம்பெறமுடியும் என்று சூளுரைத்தவர் கிழக்கில் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு என்ற நிபந்தனைக்கு உட்பட்டதாக இணைப்பை அனுமதிக்கும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார்.

அதிகாரப்பரவலாக்கத்தை ஏற்றுக்கொள்ளவேண்டிய  அவசியத்தை ஜெயவர்த்தனவுக்கு உணர்த்தி அவரை நம்பவைப்பதற்கு பெரிய கஷ்டப்பட்டதாக இலங்கை இனநெருக்கடியை கையாளுவதற்கு அனுப்பிவைக்கப்பட்ட முதல் இந்திய தூதுவர் கோபாலசுவாமி பார்த்தசாரதி தன்னிடம் ஒரு தடவை கூறியதாக தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் புகழ்பெற்ற அரசியலமைப்புச் சட்டநிபுணருமான கலாநிதி நீலன் திருச்செல்வம் அந்த நாட்களில் பத்திரிகையில் எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

13 வது திருத்தமும் மாகாணசபைகள் முறையும் 37 வருடங்களாக நடைமுறையில் இருந்துவருகின்ற போதிலும், எமது தேசிய இனப்பிரச்சினை முடிவுக்கு வரவில்லை. 13 வது திருத்தமோ அல்லது மாகாணசபைகள் முறையோ தங்களது பிரச்சினைக்கு நிலையான ஒரு தீர்வாக அமையமுடியாது என்று தமிழர்களும் அவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் முக்கியமான அரசியல் கட்சிகளும் கூறிவருகின்ற அதேவேளை, இந்திய தலையீட்டைத் தொடர்ந்து நிறுவப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காகவே சிங்கள அரசியல் சமுதாயம் மாகாணசபைகள் முறையை இதுவரை பொறுத்துக் கொண்டிருக்கிறது.

மாகாணசபைகளுக்கான அதிகாரங்களை மேம்படுத்துவதற்கோ அல்லது குறைந்தபட்சம் 13 வது திருத்தத்தையாவது முழுமையாக நடைமுறைப்படுத்தவோ இலங்கையை இணங்கவைக்கவோ அல்லது நெருக்குதல் கொடுக்கவோ இந்தியர்களினாலும் தமிழர்களினாலும் முடியவில்லை. 

சமாதான உடன்படிக்கைக்கு பின்னரான அனர்த்தத்தனமான நிகழ்வுகளை தொடர்ந்ததும் தற்போதைய புவிசார் அரசியல் பின்புலத்திலும் இலங்கை இனநெருக்கடியில் இந்தியா அண்மைய எதிர்காலத்தில் உன்னிப்பான அக்கறை காட்டும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. 

ஆனால், தமிழ் அரசியல் கட்சிகள் இலங்கை மீது நெருக்குதலைப் பிரயோகிக்குமாறு இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்த வண்ணமே இருக்கின்றன. 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி மாகாணசபை தேர்தல்களை நடத்துமாறு இடைக்கிடை இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொள்வதுடன் மாத்திரம் இந்தியா இப்போது நிறுத்திக்கொள்கிறது. 

அதேவேளை, கறுப்பு ஜூலைக்கு பிறகு நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமும் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து 15 வருடங்களும் கடந்துவிட்ட போதிலும், இனநெருக்கடி ஏதோ இன்று நேற்று தோன்றியதைப் போன்று பிரதான அரசியல் சக்திகள் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து இன்னமும் விவாதித்துக் கொண்டிருப்பது பெரும் துரதிர்ஷ்டவசமானதாகும். 

 சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளையும் மனக்குறைகளையும் கையாளக்கூடிய  பயனுறுதியுடைய ஒரு அரசியல் தீர்வு இல்லாமல் தேசிய இனப்பிரச்சினை தொடரப்போவதற்கான அறிகுறிகளையே காணக்கூடியதாக இருக்கிறது.

இன்னும் இரு மாதங்களில்  நடைபெறப்போகும் ஜனாதிபதி தேர்தலின் மூன்று  பிரதான  வேட்பாளர்களான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க ஆகியோர் வடக்கிற்கு சென்று 13  வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தப்போவதாக உறுதியளித்திருக்கிறார்கள். ஆனால், மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் குறித்து அவர்கள் அடிக்கடி குழப்பமான கருத்துக்களையே வெளியிடுகிறார்கள்.

எமது அறிவுக்கு எட்டியவரையில், உலகின் வேறு எந்த நாடுமே இலங்கையைப் போன்று  அதன் அரசியலமைப்பில் மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக இருந்துவரும் ஏற்பாடு ஒன்றை நடைமுறைப்படுத்துவதில் குழப்பத்துக்குள்ளாகியதாக  தெரியவில்லை.

மறுபுறத்தில், தமிழ்  கட்சிகள் ஐக்கியப்பட்ட நிலைப்பாடொன்றை முன்வைக்கக்கூடியதாக  அரசியல் விவேகத்தையும்  முதிர்ச்சியையும் வெளிக்காட்டுவதாக இல்லை.

கறுப்பு ஜூலை அனர்த்தங்களுக்காக கடந்த வாரம் பாராளுமன்றத்தில் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தமிழர்களிடம் மன்னிப்புக் கோரினார். இதற்கு முன்னர் ஜனாதிபதியாக இருந்தபோது சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் மன்னிப்புக் கோரினார். வேறு பல  அரசியல்வாதிகளும் கறுப்பு ஜூலைக்காக வெட்கப்படுவதாக கூறியிருக்கிறார்கள். இந்த மன்னிப்புக் கோலல்களினால் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை.

 தென்னிலங்கையில் உள்ள தமிழர்களை துண்டுதுண்டாக வெட்டுவேன் என்று சில மாதங்களுக்கு முன்னர் கிழக்கில் நடுவீதியில் பொலிசார் முன்னிலையில் கூறிய ஒரு விகாராதிபதியும் மறுநாள் மன்னிப்புக் கோரி காணொளியை வெளியிட்டுவிட்டு எதுவும் நடக்காத மாதிரி அமைதியாக இருக்கிறார். 

 இந்த நிலைவரங்கள் எல்லாவற்றையும் அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது   கடந்த கால அனர்த்தங்களில் இருந்து படிப்பினைகளைப் பெற்று தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு அரசியல் வர்க்கம் இன்னமும் கூட தயாரில்லாமல் இருப்பது ஒரு வெட்கக்கேடாகும். இது கறுப்பு ஜூலையை விடவும் பெரிய வெட்கக்கேடு.