(அரசியல் – சமூக – வரலாற்று நாவல்)
— செங்கதிரோன் —
நாட்கள் நகர்ந்தன. கனகரட்ணம் ஆபத்தான நிலையைக் கடந்து நாளுக்கு நாள் உடல் தேறி வருவதாகவே செய்திகள் எட்டிக் கொண்டிருந்தன. பொத்துவில் தொகுதி மக்கள் மட்டுமல்ல முழு அம்பாறை மாவட்டத் தமிழர்களும் அச்செய்திகளால் மகிழ்ச்சியடைந்தனர் என்பது அவர்களது உணர்வு வெளிப்பாடுகளிலிருந்து தெரிந்தது.
கனகரட்ணம் ஓரளவு குணமடைந்து கொழும்பு அரச வைத்தியசாலையிலிருந்து மருதானையில் உள்ள ‘சுலைமான்ஸ்’ தனியார் மருத்துவமனைக்கு ஓய்வுக்காகவும் மேலதிக கண்காணிப்புக்காகவும் சிகிச்சைக்காகவும் மாற்றப்பட்ட செய்தி கிடைத்ததும் கோகுலன் கொழும்புக்குப் பயணித்துக் கனகரட்ணத்தைப் பார்க்கும் ஆவலுடன் மருதானை ‘சுலைமான்ஸ்’ மருத்துவமனைக்குச் சென்றான்.
கோகுலன் மருத்துவமனையை அடைந்தபோது மாலை ஆறுமணியிருக்கும். மருத்துவமனையின் வரவேற்புக் கருமபீடத்தில் தொலைபேசியும் கையுமாக வீற்றிருந்த இளம் பெண்பிள்ளையிடம் வந்த விடயத்தைக் கோகுலன் கூறினான். அந்த வரவேற்பாளர்பெண் பக்கத்தில் சீருடையுடன் நின்றிருந்த ‘பொலிஸ்’ காரரொருவரைச் சுட்டிக்காட்டி அவரிடம் அனுப்பி வைத்தாள்.
அப் ‘பொலிஸ்’ காரர் கோகுலனின் அடையாள அட்டையைப் பெற்றுக்கொண்டு தான் திரும்பிவரும்வரை வரவேற்பு மண்டபத்தில் வரிசையாகப் போடப்பட்டிருந்த ‘பிளாஸ்ரிக்’ கதிரைகளிலொன்றில் அமரும்படி சைகை காட்டிவிட்டு, கனகரட்ணத்தைப் பார்ப்பதற்கு அனுமதி கிடைத்தால் இரண்டு நிமிடங்கள்தான் பார்க்கலாம் என்ற நிபந்தனையையும் கூறிவிட்டு உள்ளே சென்றார்.
முடியாட்சிக் காலத்தில் பொதுமகனொருவன் மன்னனிடம் முறைப்பாட்டைச் சேர்ப்பதற்காக அரண்மனையின் வாயில்காப்போனிடம் அதைக் கொடுத்தனுப்பிவிட்டு, உள்ளே சென்ற வாயில்காப்போன் திரும்பி வரும்வரை அவன் வழிமேல் விழிவைத்துக் காத்திருப்பதைப் போலக் கோகுலன் காத்திருந்தான்.
பத்து நிமிடங்கள் கழிந்தபின் திரும்பிவந்த பொலிஸ்காரருடன் இன்னொரு ‘பொலிஸ்’ அதிகாரியும் கூட வந்தார். அவரது சீருடையையும் அச்சீருடையில் பதிக்கப்பெற்றிருந்த இலச்சினைகளையும் அவதானித்தபோது ‘இன்ஸ்பெக்ரர்’ தரத்திலான பொலிஸ் அதிகாரியெனக் கோகுலனுக்குப் புரிந்தது.
கோகுலனின் அடையாள அட்டையைக் கோகுலனிடம் நீட்டி மீளக்கையளித்தவிட்டு ‘பிளீஸ் கம்’ என மரியாதையாக ஆங்கிலத்தில் விளித்து அவனை உள்ளே ஒரு ‘விறாந்தை’ வழியே கூட்டிச்சென்று ஓர் அறையைத் திறந்து உள்ளேவிட்டார்.
அறையினுள்ளே கனகரட்ணம் கட்டிலில் சற்றுச் சாய்ந்து படுத்திருந்தார். பக்கவாட்டில் தலையணைகள் அடைவைக்கப்பட்டிருந்தன. தலைமாட்டில் உயர்ந்த மேசையோன்றில் மருந்துப் ‘புட்டில்’ களும் குளிசைப் பெட்டிகளும் தண்ணீர்ப் போத்தல் மற்றும் சிறுபாத்திரங்கள் மற்றும் கரண்டி போன்ற சிறு உபகரணங்களும் பரப்பி வைக்கப்பட்டிருந்தன.
கோகுலன் அவரது தலைமாட்டுப்; பக்கம் அருகில் சென்றதும் “வா தம்பி! சுகமாயிருக்கிறாயா?”என்றார்.
“நான் உங்களச் சுகம் விசாரிக்க வந்திருக்கிறன். நீங்க நான் சுகமாயிருக்கிறனா எண்டு கேட்கிறீங்களே!” என்றான் கோகுலன் இலேசாகச் சிரித்துக்கொண்டே.
கனகரட்ணமும் பதிலுக்குப் புன்னகைத்துக்கொண்டே அவருக்குப் பாதுகாப்பு உத்தியோகத்தராக அங்கு நின்றிருந்த இன்ஸ்பெக்ரர் தரப் பொலிஸ் அதிகாரியை அருகில் அழைத்து “வந்திருப்பவர் எனது குடும்பத்தில் கடைசித் தம்பி. அவருடன் இரண்டு மணித்தியாலங்கள் நான் பேச வேண்டும். எனது தலைமாட்டில் அவர் இருந்து கதைப்பதற்கு ஒரு கதிரை போடவும். இனி ஒருதரையும் என்னைப் பார்ப்பதற்கு அனுமதிக்க வேண்டாம்.” என ஆங்கிலத்தில் கூறினார்.
நான் தனது தம்பி என்றொரு பொய்யை அவிழ்த்துவிடுகிறாரே! என்று வியப்படைந்த கோகுலன் என்னைத் தன்னோடு நீண்ட நேரம் வைத்திருந்து பேசவேண்டும் என்பதற்காகவே அப்படிச் சொல்கிறார்;போலும் எனப் புரிந்து கொண்டான்.
பொலிஸ் அதிகாரி கதிரையொன்றைக் கொணர்ந்து கனகரட்ணம் படுத்திருந்த கட்டிலின் தலைமாட்டுப் பக்கம் அவர் அருகில் வைத்துவிட்டு, அறைக் கதவையும் சாத்திவிட்டு வெளியே போய்விட்டார். கனகரட்ணத்தின் தம்பி நான் என்பதால் தனியாகப் பேசட்டும் என்று நினைத்திருப்பார் போலும். கதிரையில் அமரும்படி கனகரட்ணம் சைகை காட்டக் கோகுலன் அமர்ந்தான்.
பேச்சை எப்படி ஆரம்பிப்பது என்று கோகுலன் நினைத்தான். அவரும் அப்படித்தான் நினைத்தார் போலும். சில நிமிடங்கள் அமைதியாகக் கழிந்தன.
“தம்பி! ஆட்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள்” என்று அமைதியைக்கலைத்தார் கனகரட்ணம்.
“ஆட்கள் எல்லோரும் உங்கள்மீது அனுதாபமாகத்தான் உள்ளார்கள்” என்றான் கோகுலன்.
தனது பதிலால் அவரது முகத்தில் மெல்லிய முறுவல் பூத்ததைக் கோகுலன் அவதானித்தான். “உனக்கு என்மீது நல்ல ஆத்திரம் இருக்குமே?” என்றார்.
“ஆத்திரம் ஆரம்பத்தில் இருந்தது. இப்போது இல்லை” என்றான் கோகுலன். சற்று உதடுகளைத் திறந்து சிரித்தார்.
“நான் ஏன் அரசாங்கத்தின்ர பக்கம் மாறினன் என்று தெரியுமா?” எனக் கேட்டார்.
‘அதப் புறகு பேசிக்கொள்ளலாம்தானே, முதலில உங்களுக்கு நடந்ததச் சொல்லுங்க” என்றான் கோகுலன்.
“தங்கச்சி சொல்லியிருப்பாவே” என்றார்.
“மேலோட்டமாகச் சொன்னார். நானும் கிண்டிக் கேட்கவில்லை” என்றான் கோகுலன்.
“அப்படியா சொல்லுறன்“ என்றார்.
இடையில் தாதியொருத்தி வந்து சில குளிசைகளை விழுங்க வைத்துவிட்டுப் போனாள்.
“காலம பத்து மணியிருக்கும். தங்கச்சி வீட்டில முன் ‘ஹோலு’ குள்ள நானும் பத்மநாதனும் இராசதுரையும் இருந்து கதைத்துக் கொண்டிருந்தம். தேவநாயகத்தச் சந்திக்க இராசதுரையும் நானும் போக என்னையும் கூட்டிக் கொண்டு இருவரும் சேர்ந்துபோகத்தான் இராசதுரை வந்திருந்தார்.
கொஞ்ச நேரத்தில தங்கச்சி வந்து என்னைச் சந்திக்க இரண்டு பொடியன்கள் வந்திருப்பதாகவும் அவர்கள் வெளியில் வீதியில் காத்திருப்பதாகவும் சொன்னா.
வெளிய வந்த நான் ‘ஆர் தம்பி நீங்கள்’ என்றேன். பதில் ஏதும் சொல்லாமல் ஒரு மடிக்கப்பட்டிருந்த கடிதத்தை நீட்டினார்கள்.
‘வாருங்கள்’ என்று அவர்களிருவரையும் அழைத்துக்கொண்டு வழக்கமாக மக்களைச் சந்திக்கும் பக்கத்திலிருந்த கட்டிடத்தை நோக்கி நடந்தேன்.
நடக்கும்போதே அவர்கள் தந்த கடிதத்தைப் பார்க்கலாம் என்று கடிதத்தைப் பிரித்துக் கவனத்தை அதிலே செலுத்தினேன்.
அப்போது துப்பாக்கி வெடிக்கும் சத்தம் என் அருகில் எழுந்தது.
விபரீதத்தை உணர்ந்த நான் உடனே வீதியில் நிலத்தில் விழுந்து உருளத் தொடங்கினேன்.
அதற்குப் பிறகும் இரண்டு மூன்று தடவைகள் என்னை நோக்கிச் சுட்டார்கள்.
எனது வயிற்றில் சூடு விழுந்ததை உணர்ந்தேன். வயிற்றை அமர்த்திப் பிடித்துக் கொண்டேன். நான் மயங்கியிருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். பிறகு நடந்ததொன்றும் எனக்குத் தெரியாது.
துப்பாக்கிச் சூட்டின் சத்தம் கேட்டு வெளியில் ஓடி வந்து பார்த்த எனது தங்கச்சியும் கணவரும்தான் நான் வீதியில் விழுந்து கிடப்பதைக் கண்டு உடனடியாக அவசரமாக ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருக்கிறார்கள்” என்றார்.
“இராசதுரை எங்க போனவர்” என்றான் கோகுலன்.
தம்பி ‘லோயர்’ நீதிமன்றத்தில குறுக்கு விசாரணை செய்யிற மாதிரி மிகக் கவனமாகத்தான் கேள்விகளக் கேட்கிறா” என்று சொல்லிச் சிரித்தார். சிரித்துக்கொண்டே “அவர் எங்க போனாரென்று தெரியவில்லை என்றுதான் தங்கச்சி ஆட்கள் பேந்து சொன்னவயள்” என்றார்.
“சுட்டாக்களைக் கண்டால் அடையாளம் காட்டுவீங்களா? என்றான் கோகுலன். “கண்டால்தானே தம்பி!” என்றார்.
“வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தவிட்டு ஏன் யாழ்ப்பாணம் போனீங்கள்? என்ற கேள்வியை முன்வைத்தான் கோகுலன்.
‘எனது தனிப்பட்ட அலுவலொன்றாப் போனனான் தம்பி” என்றார்.
“போனா அந்தத் தனிப்பட்ட அலுவல முடிச்சுப் போட்டுப் பொத்துவிலுக்குத் திரும்பியிருக்கலாம்தானே!” என்றான் கோகுலன்.
ஏன்? தம்பி அப்பிடிக் கேட்கிறா?” என்றார்.
‘தினபதி’ப் ‘பேப்பர் ரிப்போட்டரு’க்கு யாழ்ப்பாணத்தில் வைத்துக் கருத்துக் கூறும்போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியலைத் தாக்கிக் கூறியுள்ளீர்கள். ‘தினபதி’ ஆசிரியர் ஆரென்று உங்களுக்குத் தெரியும்தானே. எஸ்.டி.சிவநாயகம் மட்டக்களப்பில தமிழரசுக்கட்சியயும் இராசதுரயயும் வளர்த்துவிட்டதில அவருக்குப் பெரிய பங்குண்டு. புறகு தமிழரசுக்கட்சி அவருக்குச் ‘செனட்டர்’ பதவி குடுக்காம மருதமுனையைச் சேர்ந்த மௌசூர் மௌலானாவுக்குக் குடுத்ததால கோவிச்சுக் கொண்டு தமிழரசுக்கட்சிய விட்டு வெளியேறிப்போய் கொழும்பில் எம்.டி.குணசேனா கொம்பனி நடத்தின ‘தினபதி’ப் பேப்பருக்கு ஆசிரியரா இரிந்து தமிழரசுக்கட்சியையும் தந்தை செல்வநாயகத்தையும் தாக்குத்தாக்கெனத் தாக்கி எழுதினவர். அவருக்கு நீங்க தமிழர்விடுதலைக் கூட்டணியில நின்று வென்று அரசாங்கத்திற்கு மாறினது வாய்க்கு அவல் கிடைச்ச மாதிரி. அதுதான் யாழ்ப்பாணம் போன உங்களிட்ட ‘றிப்போட்டர’ அனுப்பி உங்கட வாய்க்குள்ள கம்போட்டி உங்கட வாயால சொல்லவைச்சுச் செய்தியெடுத்துப் போட்டிருக்கார்” என்றான்; கோகுலன்.
“இந்த உள்வீட்டு அரசியல் எல்லாம் எனக்கு தெரியாது தம்பி” என்றவர் சற்று யோசனைக்குப் பின்னர்,
“தமிழர் விடுதலைக் கூட்டணியில நின்று வென்று எம்..பி.ஆகித் தமிழீழத் தனிநாட்டுக்குக் கிடைச்ச ஆணய மீறி அரசாங்கத்திற்கு மாறினா இயக்கத்துப் பொடியன்களுக்கு என்னில கோபம் வருவது நியாயம்தானே தம்பி. அவர்களில பிழையில்ல. அவங்கட பார்வையில நான் துரோகிதானே தம்பி. உனக்கும்கூட ஆரம்பத்தில என்னில ஆத்திரம்தானே வந்திருக்கு. துரோகியச் சுட்டிருக்காங்க. ஆனா ஆண்டவன் என்னக் காப்பாத்திட்டார். பொத்துவில் தொகுதி மக்களுக்கும் அம்பாறை மாவட்டத் தமிழ் மக்களுக்கும் நான் இன்னும் உயிரோட இரிந்து சேவ செய்யவேணுமென்பது ஆண்டவனின் சித்தம் போலும்” என்று முடித்தார்.
கனகரட்ணம் இவ்வளவையும் கூறக்கேட்ட கோகுலன் என்ன விந்தையான மனிதர் இவர். வித்தியாசமான ஓர் அரசியல்வாதி. தன்னைச் சுட்டவர்கள்மீது ஒரு துளிக் கோபமும் காட்டாது, அவர்கள் சுட்டதை நியாயப்படுத்துகிறார். வெடி வாங்கித் தப்பியபோதும் அதுபற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாமல் தனது எஞ்சிய வாழ்நாள் காலத்தில் மக்களுக்குச் சேவையாற்றவே அவாவி நிற்கிறார் என்று வியந்தான்.
“உங்களுக்கு வாக்களிச்ச பொத்துவில் தொகுதி மக்களோட கலந்து பேசி அவங்கட சம்மதத்தயும் பெற்றுக்கொண்டு அரசாங்கத்திர பக்கம் மாறியிருக்கலாமே. குறைஞ்சபட்சம் அரசியலுக்குள்ள உங்கள இழுத்துவிட்ட என்னிட்ட தானும் ஒரு சொல் சொல்லல்லயே!” என்றான் கோகுலன். “சரி தம்பி அதெல்லாம் நடந்த கத. அதவிடு, உன்னிட்ட சொல்லாதது பிழயென்றால் அதக் குறையா நினையாத. இனி நடக்கப்போவதப் பத்திப் பேசுவம்” என்றவர் நேரத்தை அவதானித்தவிட்டு.
“இரு சாப்பிடுவம்” என்றார். “இல்ல நான் வெளியில போய்ச் சாப்பிடுறன்.நீங்க சாப்பிடுங்க” என்றான் கோகுலன்.
“இல்ல இன்னும் நிறைய உன்னிட்டப் பேசக்கிடக்கு. சாப்பிட்டுச் சாப்பிட்டுப் பேசலாம் இரு” என்றவர், பொலிஸ் அதிகாரியைக்கூப்பிட்டுக் கோகுலனுக்கும் சேர்த்து இரவுச் சாப்பாடு ஒழுங்கு செய்யச் சொன்னார். சாப்பாடு வந்தது. இருவரும் சாப்பிட்டுக்கொண்டே தொடர்ந்து பேசினார்கள்.
நான் எம்.பி யா வந்துடன என்னிட்ட வந்த எல்லோரும் தங்களுக்கு என்று ஏதாவது உதவியோ வேலையோ தொழிலோ கேட்டுத்தான் வந்தாங்க. நீ மட்டும்தான் இதுவரைக்கும் என்னிட்ட எதுவும் உனக்கென்று கேட்டுவரல்ல. ஆனா தஞ்சை நகரிலிருந்து அடிபட்டு வந்த அகதித் தழிழர்களச் சங்கமன்கண்டியில குடியமர்த்தப் படுறபாடு நீ என்னிட்டச் சொல்லாட்டியும் எனக்கு எல்லாம் தெரியும். அரசியலுக்குள்ள என்ன இழுத்து விட்டவன் நீதான். அதனால தொடர்ந்து என்னோட நீ நிற்கவேணும், என்ன தம்பி சொல்லிறா?” என்று பேச்சை நிறுத்திக் கோகுலனை நிமிர்ந்து பார்த்தார். அதற்கு நேரடிப் பதில் எதுவும் சொல்லாத கோகுலன் “நீங்க சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லி முடியுங்க நான் கடசியாக் கதைக்கிறன்” என்றான்.
கனரட்ணம் தொடர்ந்தார், “கூட்டணியிர கொள்கைக்கு நான் மாறு இல்ல. தமிழீழம் ஆருக்குத் தம்பி விருப்பமில்ல. நானும் தமிழன்தான். தமிழீழத்த விரும்பாத எந்தத் தமிழனும் இருக்க மாட்டான். ஆனா, அத வெறுமனே பாராளுமன்றத்தில பேசுவதாலயும் பத்திரிகைக்கு அறிக்கை விடுவதாலயும் கொடி பிடிப்பதாலயும் கோஷம் போடுவதாலயும் மட்டும் அடைய முடியுமா? அதற்கான வழிவகைகளத் தேட வேணும். அதற்கு முதலில தமிழ் மக்கள முன்னேற்றவேணும். பலப்படுத்தவேணும். தயார்ப்படுத்தவேணும்” என்று சொல்லி முடிக்கையில் சாப்பிட்டு முடித்திருந்தார். கோகுலனும் சாப்பிட்டு முடித்திருந்தான்.
“ஓம்! நீங்க சொல்லிற சரிதான். தமிழரசுக் கட்சி ஆரம்பிச்ச காலத்திலிருந்தே எத முதலில செய்யிற எண்டு தெரியாம- தெளிவில்லாம மாடு வாங்க முதல் நெய்க்கு வில பேசிற அரசியலத்தான் நம்மட தமிழ்த் தலைவர்கள் செய்து கொண்டிருக்காங்க” என்று தனது அபிப்பிராயத்தை வெளியிட்டான்.
“சரியாச் சொன்னாய் தம்பி” “ என்று சிரித்தார்.
“கையக் கழுவி விட்டுப் பேசலாம்” என்றார். இருவரும் கைகளைக் கழுவியபின்னர் மீண்டும் பேச்சு ஆரம்பமானது. கனகரட்ணம் தான் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார்.
கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு இங்குள்ள தமிழன் முன்னேறாம இப்படியே இருக்கணும் எண்டுதான் விருப்பம். சாதாரண முஸ்லிம் மக்கள நான் குற சொல்லல்ல. அதுகள் நல்லம். அப்பாவிகள். பாவம். ஆனா முஸ்லீம் அரசியல்வாதிகள் கூட்டணிக்குச் ‘சப்போட்’ பண்ணிற மாதிரிக் காட்டித் தமிழனோடதான் நாங்க நிற்கம் எண்டு சும்மா பம்மாத்துக் காட்டுறானுகள். கூட்டணி பல்லுக் கழட்டின பாம்பு மாதிரி என்று அவனுகளுக்கு நல்லாத் தெரியும். அதனால தமிழ் மக்களுக்குள்ள கூட்டணி செல்வாக்கா இருக்கணும் எண்டு விரும்புறானுகள். அப்பதான் தங்கட காரியத்தக் கொண்டு போகலாம் எண்டு நினைக்கிறானுகள். அவனுகளப் பிழ சொல்லேலா. அரசாங்கத்தோட சேர்ந்து நின்று தன்ர சமூகத்துக்குச் செய்ய வேண்டியதச் செய்யிறாங்கள். நாம மடையனா இருக்கிறதிக்கு அவன் என்ன செய்யிற.
உனக்குத் தெரியும்தானே தம்பி, மஜீத்தோட நான் ஒன்றாக் குடிச்சு ஒன்றாச்சாப்பிட்டு-அப்பிடி நண்பர்களாக இருந்த நாங்கள். அவன் பழைய பொத்துவில் தொகுதியில ‘எலக்சன்’ கேட்கத் தொடங்கிய நாளில இரிந்து அவன் கேட்ட எல்லா ‘எலக்ஸ்சனிலயும்’ அவனுக்குத்தான் நான் ‘சப்போட்’ பண்ணின. என்ர அக்காவின்ர புருஷன் ‘எலக்ஸன்’ கேட்கக்கொள்ளயும் நான் அவருக்குச் ‘சப்போட்’ பண்ணாம ‘மஜீத்” துக்குத்தான் சப்போட் பண்ணின”.
கோகுலன் இடைமறித்து “ஓம்! எனக்கு அது தெரியும். 1960 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த ‘எலக்சன்’ ல சுயேச்சையாக் கேட்டவர். சின்னம் ‘குடை’ என்றான் கோகுலன்.
“எல்லாத்தையும்தான் நீ தெரிஞ்சு வைச்சிரிக்கிறாய்” என்ற கனரட்ணம் பேச்சைத் தொடர்ந்தார்.
“அந்த மஜீத்கூட தமிழ் மக்களுக்கு நான் செய்யப்போற நன்மையான வேலைகள ‘புளக்’ பண்ணிறான். முஸ்லிம் எம்.பி.மாரெல்லாம் அரசாங்கத்தோட சேர்ந்து மந்திரியாயும் வந்து அரசியல் செல்வாக்கோட இரிந்து தன்ர சமூகத்திற்கு வேலை செய்கிறானுகள். ஆனா நம்மட தமிழ் எம்.பி. மார் கொடிபிடிக்கிறதும், கோஷம் போடுறதும்தான் மிச்சம். இருக்கிறதயும் இழக்கிறதுதான தமிழன்ட அரசியல்” என்றார்.
“பட்டுவேட்டிக்குக் கனவு கண்டு இடுப்பில கட்டியிருந்த கச்சையயும் பறி கொடுத்த மாதிரி” என்றான் கோகுலன்.
கனகரட்ணம் விழுந்து விழுந்து சிரித்தார்.
பின் “இந்த முஸ்லிம் அரசியல்வாதிகள மேவி நான் என்ர மக்களுக்குச் சேவை செய்யிற எண்டா அரசாங்கத்தில சேருவதத் தவிர எனக்கு வேறு வழி தெரியல்ல. சும்மா கதிரைக்குப் பாரமா இரிந்து காலத்தக் கழிக்கிறதவிட என்ர பதவிக் காலத்திலயாவது முப்பது வருஷமா எம்.பி. இல்லாமப் பின்னுக்குப் போய் நிற்கிற அம்பாறை மாவட்டத் தமிழ் மக்கள முன்னுக்குக் கொண்டுவரணும் எண்டுதான் அரசாங்கத்தின்ர பக்கம்மாறின நான்” என்று சொல்லிவிட்டுக் கோகுலனின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார்.
கோகுலன் “எனக்கு எல்லாம் விளங்கிது” என்றான்.
சிறு சிரிப்பொன்றைச் சிந்தியவாறு கனகரட்ணம் தொடர்ந்து பேசினார். கோகுலனும் அதிகம் குறுக்கீடு செய்யாது அவர் கூறுவதையெல்லாம் காதில் வாங்கிக் கொண்டான்.
“அரசியல் என்கிறது தந்திரம் நிறைந்தது தம்பி. சிங்களஅரசாங்கங்கள் தமிழர்கள ஏமாத்திது எண்டா அந்த அரசாங்கங்களைத் தந்திரமாகக் கையாளுற அரசியல்தான் எமக்குத் தேவ. தமிழ் அரசியல் தலைவர்களிட்ட அது இல்ல. அதுதான் நம்மட எல்லாப் போராட்டங்களும் சாண் ஏறி முழம் சறுக்கிற மாதிரிப் போயிற்றிருக்கு” என்று நிறுத்தினார். பின்,
“தம்பி நீ என்ன சொல்லிறா?” என்ற கேள்வியைத் தொடுத்தார். “நீங்க சொல்வது நூற்றுக்கு நூறு வீதம் சரி” என்றான் கோகுலன்.
“இப்பதான் தம்பி எனக்குச் சந்தோசம். உன்னப்போல ஆட்களுக்குத்தான் இது விளங்கவேணும். நான் அறிஞ்சவர என்ர காலத்துக்குப் பிறகு அம்பாறை மாவட்டத் தமிழ் மக்களுக்கு அக்கறயோட சேவ செய்யக்கூடிய ஆள் நீ ஒருத்தன்தான் என்றுதான் நான் அடையாளப்படுத்தி வச்சிருக்கன். அதுதான் இவ்வளவு நேரமும் உன்ன இருக்க வச்சுக் கதச்சனான். நான் யூ.என்.பிக் கட்சிக்கு வேல செய்யப் போறல்ல உங்கட கட்சி வேலயயும் இயக்க வேலகளயும் நீ பார். அதில நான் தலையிட்டுக் குழப்பவும் மாட்டன். அதுவும் தமிழனுக்குத் தேவதான். அதேநேரம் அபிவிருத்தியும் தேவதான். அதற்குத்தான் நான் போட்டிருந்த வெள்ளச் சேட்டக் கழட்டிப்போட்டு பச்சக் கலர் சேட்டப் போட்டிருக்கன். அது தெரியாமத்தான் என்னப் பொடியன்கள் சுட்டிருக்காங்கள்.
நான் ஊரிலவந்து யூ.என்.பிக் கிளைகள் ஒண்டும் திறக்கப் போறல்ல. சூடு விழுந்ததால பிரதம மந்திரி மற்றும் மந்திரிமார் உயர் அரசாங்க அதிகாரிகளெல்லாம் என்னில மிகுந்த அனுதாபமாக இரிக்கிறாங்க. அதப் பயன்படுத்தி என்னுடைய மக்களையும் மண்ணையும் அபிவிருத்தி செய்யவேணும். வாழ்க்கையில எனக்கு இப்போதிருக்கிற ஒரேயொரு ஆச அதுதான் தம்பி” என்று நாத்தழுதழுக்கக் கூறிக் கோகுலனின் கரமொன்றினைத் தனது கரமொன்றினால் பற்றிப் பிடித்தார்.
உணர்ச்சி மேலீட்டால் கோகுலனின் கலங்கிய கண்களிலிருந்து கண்ணீர் சுரந்து அவனது கன்னங்களில் வழிந்தது.
(தொடரும் …… அங்கம் – 44)