பனாகொடயும் – படுவான்கரையும்: பொன்னார் மேனியனுக்கு புலித்தோலா…!       (மௌன உடைவுகள்-98)

பனாகொடயும் – படுவான்கரையும்: பொன்னார் மேனியனுக்கு புலித்தோலா…!  (மௌன உடைவுகள்-98)

   — அழகு குணசீலன் —

சாகசவாதி, திரில் மன்னன், ஆயுதங்களை பூசித்தகுண்டுதாரி என்ற விமர்சனங்கள் ஒருபுறத்திலும்,  அவர் ஒரு ஆளுமையா? புரட்சிகர தலைமைத்துவமா?   தோழரா….?  இவருக்கு வீரவணக்கமா? என்று இன்னொரு புறத்திலும், ஆளுமையும், தலைமைத்துவமும், இராணுவ திட்டமிடலும், வெடிகுண்டு புலமையும் இதுவரை சாதித்தது என்ன என்று  மற்றொரு பக்கத்திலும், எல்லாவற்றிலும்  மோசமாக  மகேஸ்வரனின் பூதவுடலை புலிக்கொடி கொண்டு  போர்த்தும்  பாணியில் சிலர் புலிகளின் ஆயுத அரசியலை நியாயப்படுத்த வலிந்து தம்பாவின் சாவை பயன்படுத்துகின்றனர்  என்ற மறு நிலையிலும் அவரின் மரணம் நோக்கப்படுகின்றது.

ஈழவிடுதலைப்போராட்ட அமைப்புக்களில்  ஒன்றான தமிழீழ இராணுவம் (TAMIL EELAM ARMY) என்ற அமைப்பை ஆரம்பித்து அதற்கு தலைமைதாங்கியவர்.  ஒரு காலத்தில் யாழ். கோட்டையை சுற்றிவளைத்திருந்த அமைப்புக்களுள் இதுவும் ஒன்று. ஈழப்போராட்ட வரலாற்றில் 6வது அமைப்பாக TEA வை வரிசைப்படுத்த முடியும். திருகோணமலை புல்மோட்டை  வங்கி கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்டு பனாகொட  சிறையில் இருந்து தப்பியதால் பனாகொட மகேஸ்வரன் ஆனார்  புங்குடுதீவு தம்பாப்பிள்ளை மகேஸ்வரன்.

சிறையில் இருப்பதை “கம்பி எண்ணுதல்” என்பார்கள். ஆனால் மகேஸ்வரனோ கம்பியை எண்ணவில்லை அறுத்தவர். இதனால்  தந்தையார் தம்பாப்பிள்ளையின் பெயரை விடவும் பனாகொட மகேஸ்வரன் என்ற பெயரால் உலகில் அறியப்பட்டவர். இயக்க மட்டத்தில் அனேகமாக “தம்பா” என்று அழைக்கப்பட்டவர். தலைவராக, தளபதியாக, தோழராக எல்லாம் அவர் அழைக்கப்பட்டதாக இல்லை. அவரின் அமைப்பைச்சேர்ந்த போராளிகள்  அவரை  ‘அண்ணாச்சி’ என்றே  அழைப்பதே வழக்கம். அண்ணன்,அண்ணர், அண்ணே என்ற வழக்கிற்கு மாறாக “அண்ணாச்சி” மட்டக்களப்பில் பயன்படுத்தப்படுகின்ற சகோதர பாசத்தின் வெளிப்பாடு.

ஈழவிடுதலைப்போராட்ட இராணுவ அமைப்பொன்றின் வடக்கு தலைமைத்துவம் ஒன்று மட்டக்களப்பாரை நம்பி, படுவான்கரையில் கால்பதித்து குறிப்பிட்ட காலம் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டது என்பது புது வரலாறு. அதை எழுதியவர் பனாகொட மகேஸ்வரன். அவர் பாயில் ஒட்டவில்லை படுவான்கரை மண்ணில் – மக்கள் மனதில் ஒட்டியவர். மாற்று இயக்கங்களில் இருந்து மட்டக்களப்பில் – படுவான்கரையில் பாயில் ஒட்டியவர்கள் இருக்கிறார்கள் பனாகொட அதற்கு விதிவிலக்கானவர்.

பனாகொட முகாமில் இருந்து தப்பிய தம்பாவை இலங்கை அரசாங்கம் மீண்டும் கைதுசெய்து வெலிக்கடை சிறையில் அடைத்திருந்தது. 1983 இனக்கலவர  காலத்தில் யூலை 25, 27 ம் திகதிகளில் தமிழ் அரசியல்கைதிகள் மீது வெலிக்கடை சிறையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் குட்டி மணி, ஜெகன், தங்கத்துரை உள்ளிட்ட 53 பேர் சக சிறைக்கைதிகளாலும், சிறை அதிகாரிகளாலும்,வெளியில் இருந்து கொண்டு வரப்பட்ட குண்டர்களாலும் கொலை செய்யப்பட்டனர்.  இவர்களை எதிர்த்து  ஒரே  செல்லில் அடைக்கப்பட்டிருந்த  தம்பாவும், டக்ளஸ் தேவானந்தாவும்  இறுதி மூச்சு வரை போராடித் தப்பியவர்கள்.

 தனது  சக நண்பர்களிடம்  தம்பா இப்படிக் கூறியிருக்கிறார் . ” நான் அம்மாவை கனவு கண்டேன். அவர் என்னைப்பார்த்து பயப்படாதே உனக்கு எதுவும் நடக்காது” என்று கூறினார். கனவின் மறுநாள் காலை ஒரு சிறையதிகாரி வந்து இதுவரை தனியாக அடைக்கப்பட்டிருந்த அவரை டக்ளஸ் தேவானந்தா இருந்த செல்லில்  விட்டு பூட்டியிருக்கிறார். “இருவரும் சேர்ந்து இருந்ததால்தான் தையரியமாக எங்களால்  இராணுவம் பாதுகாப்புக்கு வரும் வரை குண்டர்களை எதிர்த்து தாக்குப்பிடிக்கக்கூடியதாக இருந்தது”. இந்தச் சூழலில் தான் பாதுகாப்பு காரணங்களுக்காக வெலிக்கடை சிறையில் இருந்த அரசியல் கைதிகளை அரசாங்கம் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றியது. அதில் வந்த கைதிகளில் ஒருவர் தம்பா. மீண்டும் கைதிகளை கொழும்புக்கு கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியான போது  இது நடந்தது.

1983 செப்டம்பர் 23 ம்திகதி மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து கைதிகளில் ஒரு பகுதியினர் தப்பினர். இது மட்டக்களப்பு சிறையுடைப்பு என்று கூறப்பட்டாலும் அது சிறையுடைப்பல்ல. கடமையில் இருந்த சிறைக்காவலரின்  ஒத்துழைப்போடு சிறைக்கதவை திறந்து கைதிகள் இரவோடிரவாக வெளியேறினர். வெளியேறியவர்கள் பாதுகாப்பாக வாவியை கடந்து படுவான்கரைக்கு கொண்டு வரப்பட்டனர். இப்போது தான் பனாகொட மகேஸ்வரனின் பாதங்கள் படுவான்கரை மண்ணில் பதிந்தன.  இந்த  உறவு ஈழப்போராட்ட வரலாற்றில்  பனாகொட மகேஸ்வரனுக்கும் படுவான்கரை இளைஞர்களுக்கும் இடையே ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது. இந்த ஈர்ப்பு காரணமாகவோ என்னவோ படுவான்கரையை குறிப்பிட்ட காலம் தளமாகக் கொண்டு செயற்பட அவர் தீர்மானித்தார். 

மட்டக்களப்பு சிறையில் இருந்து தப்பிய 41 பேரில் அன்றைய ஈ.பி.ஆர்.எல்.எப். – மக்கள் படை இராணுவத்தளபதி டக்ளஸ் தேவானந்தா, யாழ் .பல்கலைக்கழக விரிவுரையாளர் மு.நித்தியானந்தன், காந்தியம் டேவிட் ஐயா, டாக்டர் ஜெயகுலராசா,  இராஜசுந்தரம், பரமதேவா உள்ளிட்ட பலர் முக்கியமானவர்கள். சிறை திறந்து தப்பிய பின்னர் அது ‘உடைப்பு ‘ என்று புளட், ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்புக்கள் உரிமைகோரி ஆளுக்காள் அடிபட்டுக்கொண்டன. இதில் ஈரோஸ் அமைப்பின் உதவியும் இருந்தது. உண்மையில் அன்றைய சூழலில் இயக்க வேலிகளுக்கு அப்பால் ஒரு சில இயக்க உறுப்பினர்கள், பல போராட்ட ஆதரவாளர்கள், பொது மக்கள் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட ஒரு கூட்டு முயற்சியே இது. ஆனாலும் சிறையில் பெண்கள் பகுதியில் அடைக்கப்பட்டிருந்த யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் நிர்மலா திட்டமிட்டபடி வெளியேற முடியவில்லை. இதனால் பின்னர் மீண்டும் ஒரு சிறை திறப்பு 1984 இல் இடம் பெற்றது. அதில் நிர்மலா வெளியே எடுக்கப்பட்டார். இதில் பரமதேவா, பிரான்ஸ்சிஸ், ரவி(பாலு) முக்கிய பங்காற்றியிருந்தனர். இது புலிகளின் தனியான நடவடிக்கை.

சிறையில் இருந்து வெளியே வந்தவர்கள் வாவியைக்கடந்து உழவு இயந்திரங்கள், மோட்டார் சைக்கிள்களில் ஏற்றப்பட்டு பனையறுப்பான், சில்லிக்கொடியாறு, நெடுஞ்சேனைப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு ,பின்னர் பாதுகாப்பாக வெவ்வேறு வழிகளில் வடக்குக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நடவடிக்கைகளில் உதவிய படுவான்கரை இளைஞர்களுக்கும் தம்பாப்பிள்ளைக்கும் இடையிலான உறவு மற்றைய இயக்கங்களை விடவும் நீடித்தது. விளைவு: காத்தான்குடி மக்கள் வங்கி கொள்ளை, மீனம்பாக்கம் குண்டு வெடிப்பு, மட்டக்களப்பு -படுவான்கரையில் ‘களையெடுத்தல்’ என்ற பெயரில் இடம்பெற்ற சில தனிநபர் பயங்கரவாத தண்டனைகள் என்று நீடித்தது.

இவற்றில் முக்கியமாக பங்கேற்று இருந்தவர்களுள் கரவெட்டி அப்புச்சி வரதன்,  கதிரேசன், காளி, தவம், தம்பிராசா போன்றவர்கள் முக்கிய மானவர்கள். பின்னால் உள்ள மூன்று பெயர்களும் மட்டக்களப்பு -படுவான்கரையைச் சேர்ந்தவர்கள். அப்போது காத்தான்குடி மக்கள் வங்கியின் முகாமையாளராக இருந்தவர் நாவற்குடா சுந்தரமூர்த்தி. மிகவும் திட்டமிடப்பட்ட வகையில், இரத்தம் சிந்தாமல் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய வங்கிக்கொளை இது. நீர்வேலி, நிக்கவரெட்டிய, திருக்கோயில், செங்கலடி, புல்மோட்டை வங்கிக்கொள்ளைகளை விடவும் காத்தான்குடி மிகப்பெரியது. அன்றைய மதிப்பீட்டில் ஆறு கோடிக்கும் அதிகமான பெறுதியை தங்கமாகவும், பணமாகவும் கொண்டிருந்தது.

 தம்பாவின் மரணம் சமூக ஊடகங்களில் எழுப்பியுள்ள ஒரு கேள்வி இந்தப்பணத்திற்கும், தங்கத்திற்கும் என்ன நடந்தது? என்பதாகும். நியாயமான கேள்வி தான். ஒரு பகுதி போராட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டாலும், மறுபகுதியை பலரும் தமதாக்கி கொண்டனர். பல தனிநபர்களின் வீடுகளில் இவை வடக்கிலும், கிழக்கிலும் மறைத்து வைக்கப்பட்டன. பின்னர் அவர்கள் அதை திருப்பிக்கொடுக்கவில்லை. தமிழீழ இராணுவத்திற்கும் இவர்களுக்கும் முரண்பாடுகள் வளர்ந்தபோது இவர்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ள மாற்று இயக்கங்களில் சேர்ந்து தப்பிக்கொண்டனர்.

 மக்களின் சொத்து அவர்களுக்கும் இல்லாமல், இயக்கத்திற்கும் பயன்படாமல் சில்லறையாக சிதறிப் போனது கவலைக்குரியது. சிறிய இயக்கமான தமிழீழ இராணுவத்திற்கும், தலைமைக்கும் பெருந்தொகையை பாதுகாக்க முடியவில்லை.  பெரிய இயக்கங்களும் இவர்களை மோப்பம் பிடிக்க தொடங்கின. விரலுக்கேற்ற வீக்கமாக அது அமையவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் தங்களைப்பாதுகாக்க முயன்றார்களேயன்றி  பணத்தை பாதுகாக்க முடியவில்லை.

மேலும் புலிகள் பனாகொட மகேஸ்வரனின் தமிழீழ இராணுவத்தையும் விட்டு வைக்காது தடைசெய்து ஒட்டு மொத்த தமிழ்த்தேசிய விடுதலையை குத்தகைக்கு எடுத்து, ஏகபோகமாக்கியபோது, அதில் இருந்த சில போராளிகள்  ஏற்கனவே  சிறு குழுவாக செயற்பட்ட ‘தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை (TMPP) என்ற பெயரில் இயங்கிய அமைப்பிலும், வெவ்வேறு அமைப்புக்களிலும்  இணைந்து கொண்டனர். கிழக்கில் படுவான்கரையைத் தளமாகக் கொண்டு  இயங்கிய தமிழ்மக்கள் பாதுகாப்பு பேரவையும் புலிகளின் அச்சுறுத்தலால் தொடர்ந்தும் செயற்படவில்லை. 

அன்றைய தகவல்களின் படி இவர்களுக்கு இந்திய நக்சலைட் அமைப்பினருடன் தொடர்பு இருந்ததாகவும், சீனச்சார்பு  கொள்கை கொண்ட இவர்கள் கொழும்பில் சண்முதாசனுடன் உறவில் இருந்ததையும் அறிய முடிந்தது. இதை விடவும் புலிகளுக்கு வேறு என்ன காரணம் வேண்டிக் கிடக்கிறது. 

தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீதான கண்ணி வெடித்தாக்குதல், சென்ட்ரல் காம்ப் (CENTRAL CAMP) பொலிஸ் நிலைய தாக்குதல்களை வெற்றி கரமாக நடாத்தியிருந்ததும் புலிகளின் கண்களைக்குத்தியிருந்தது.

1984 ஆகஸ்ட் 2ம் திகதி இடம்பெற்ற மீனம்பாக்கம் விமான நிலைய குண்டு வெடிப்பு ஒரு விபத்து. கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடிப்பதற்கான நேரம் கணிக்கக்கப்பட்டிருந்த போதும் மீனம்பாக்கத்தில் இடம்பெற்ற நடைமுறைச் சிக்கல்களால் அந்த விபத்து நடந்தது. இதில் 33 பேர் உயிரிழந்து, 27 பேர் படுகாயமடைந்தனர். இதில் மத்திய கிழக்கில் இருந்து வந்து கொழும்புக்கு செல்வதற்கான விமானத்திற்கு காத்திருந்த இலங்கையர்களும் அடங்கும்.

 மக்களுக்கு ஏற்படக்கூடிய உயிரிழப்பை தடுப்பதற்காக பனாகொட எடுத்த ஆநாமதேய தொலைபேசி அழைப்புகளை இந்திய விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அலட்சியம் செய்ததால் இது நடந்தது. தம்பா கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.  அவரோடு மீனம்பாக்கத்தில் சம்பந்தப்பட்ட படுவான்கரை இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். அதிலிருந்து விடுதலையாகி ஆபிரிக்க நாடான தன்சானியாவுக்கு சென்ற அவரை, தகவல்களை அறிந்து கொண்ட அரசாங்கம் அங்கும் சிறைக்குள் தள்ளியது. இவ்வாறு தனது வாழ்நாளில் பெரும் பகுதியை சிறையில் கழித்தவர் தம்பா.

பனாகொட மகேஸ்வரனின் தலைமைத்துவம் பற்றிய ஒரு மதிப்பீட்டை நாம் செய்வதானால் அவர் திடீர் இராணுவ நடவடிக்கைகளில், மற்றைய அமைப்புக்களை விடவும் சற்று வித்தியாசமாக திட்டமிடும் ஒருவராக இருந்துள்ளார். அதேவேளை இராணுவ இலக்கு மட்டும் அன்றி சிறிலங்கா அரச இயந்திரத்தின் பொருளாதார இலக்குகளை தகர்ப்பதிலுமான தண்டவாள பயணத்தில்  அவரது போராட்ட செயற்பாடுகள் சமாந்தரமாக இருந்துள்ளன. வங்கிக்கொள்ளைகள், ஏற்றுமதி செய்யப்படும் தேயிலையில் சயனைட் கலக்கப்பட்டுள்ளது என்ற பிரச்சாரம், உல்லாசப் பிரயாணத்துறையை இலக்காக கொண்ட விமானநிலைய தாக்குதல் திட்டங்களை குறிப்பிட முடியும்.

மறுபக்கத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதிலும் அவரது திட்டமிடல் செயற்பாடுகள் அமைந்துள்ளன. தமிழீழ இராணுவம் குறைந்தளவான தாக்குதல்களை மேற்கொண்டபோதும் மக்கள் உயிரிழப்பு  இல்லை என்றே சொல்லலாம். உயிர் இழப்புகள் என்பவை தனிநபர் கொலைகளாக உள்ளன. மட்டக்களப்பு -அம்பாறை-பொலநறுவை  சிங்கள எல்லைக்கிராமங்களில் இவர்கள் செயற்பட்ட போதும், முஸ்லீம் கிராமங்களில்  செயற்பட்ட போதும் மக்கள் மீதான வன்முறையில் ஈடுபடவில்லை. மாற்று இயக்கங்களோடு ஒரு உறவை புரிந்துணர்வுடன் பின் பற்றும் ஒரு அமைப்பாக அவரின் அமைப்பு இருந்துள்ளது. முரண்பாடுகளை தவிர்ப்பதற்காக புலிகளால் தடைசெய்யப்பட்டபோது அவர்கள் வெளிப்படையாக எதிர்க்கவில்லை. பலம் பலவீனம் அறிந்து போராளிகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஒரு தலைமைத்துவத்திற்குரியது. அதையே அவர் செய்தார். இது புலிகளின் தடையை அவர் ஏற்றுக்கொண்டார் என்று அர்த்தப்படாது. அர்த்தப்படுத்துவது அபர்த்தம்.

இதனால்தானோ என்னவோ ஈ.பி.டி.பி. யின் கட்சி மாநாட்டில் உரையாற்றும் போது வெளிப்படையாக “பிரபாகரனின் மோட்டு நடவடிக்கைகளால் இந்தப்போராட்டம் தோற்றது” என்று தம்பா ஆத்திரமாகவும், காத்திரமாகவும் கூறியிருக்கிறார். அவர் பயன்படுத்தி உள்ள வார்த்தை  மாற்று இயக்கத்தலைமை  ஒன்று குறித்த நேர்மையான நாகரிக அரசியல் விமர்சனத்திற்கு உரியதல்ல என்றாலும் இந்த போராட்டத்தின் தோல்வியில் உள்ள ஆத்திரத்தின் வெளிப்பாடாக அது உள்ளது.  மக்களின் குரலாகவும் தொனிக்கிறது. தன்சானியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட அவரை டக்ளஸ் தேவானந்தாவே விமான நிலையத்தில் வரவேற்று அழைத்துச்சென்றிருந்தார். சிறிதுகாலம் ஈ.பி.டி.பி. யுடன் இணைந்து செயற்பட்டும் உள்ளார். 

இப்போது தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் இறந்த பின்னர் யார் தமிழீழ இராணுவத்தை தடைசெய்தார்களோ அவர்களே அவர் பற்றி புகழ்பாடுவது மட்டும் அன்றி அவரின் திறமைகளையும், செயற்பாடுகளையும் தங்கள் இயக்கத்லினதும், தலைமைத்துவத்தினதும்  செயற்பாட்டுடன் ஒப்பிட்டு அந்த குணாம்சங்களுக்கு உரிமைகோரும் பதிவுகளை இடுகின்றனர். தம்பாவின் இராணுவ நடவடிக்கைகளை தங்களுக்கு ஏற்ப திரிவுபடுத்தி வலிந்து செயற்கையாக தங்கள் அமைப்பின் செயற்பாடுகளை புகுத்தி எழுதுகின்றனர். தம்பா சில  இராணுவ நடவடிக்கைகளில் புலிகளின் குணாம்சம் கொண்டவராக இருந்திருப்பினும் பல விடயங்களில்  முரண்பாடுகளை கொண்டவராகவே இருந்துள்ளார். இதற்கு அவரின் கடந்த கால அணுகுமுறைகள் சாட்சி.

தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் என்ற தலைமை இயற்கை மரணத்தை தழுவிய இறுதித் தலைமை. மற்றைய நான்கு அமைப்புக்களையும், தலைமைகளையும் அழித்து தானும் வன்முறையில் அழிந்த போன ஒன்றின் வரலாற்றில் இருந்து இது மாறுபட்டது.

இந்த நிலையில் தம்பாவுக்கு செய்யும் அஞ்சலி   நிச்சயமாக சிலர் எழுவது போன்று அவரின் பூதவுடலுக்கு புலிக்கொடி போர்ப்பதாக அமையாது. தம்பாவை தம்பாவாக, பனாகொடயாக, மகேஸ்வரனாக, தம்பாப்பிள்ளையாக……ஏன் அண்ணாச்சியாக அவரின் தனித்துவத்துடன் வழியனுப்புவோம்.

அதுவே அவருக்கான அஞ்சலி!