— வீரகத்தி தனபாலசிங்கம் —
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்று சரியாக இரு வருடங்கள் நிறைவடைகின்றன. ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு இளம் பாராளுமன்ற உறுப்பினராக கம்பஹா மாவட்டத்தின் பியகம தொகுதியில் இருந்து தெரிவாகி சரியாக 45 வருடங்கள் நிறைவடைந்த தினத்திலேயே அவர் தன்னிடமிருந்து கால்நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக நழுவிக்கொண்டிருந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை அடைந்தார். அது தற்செயலானதாக இருந்தாலும் கவனத்தை ஈர்த்த ஒரு அம்சம்.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் மிகவும் நீண்டகாலம் எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்ததை விக்கிரமசிங்க நிச்சயமாக ஒரு பெருமையாக கருதியிருக்கமாட்டார். அவரைப் போன்று அந்த கட்சியின் தலைவர் பதவியை வேறு எந்த அரசியல்வாதியும் நீண்டகாலம் வகித்ததும் இல்லை.
சுமார் 40 சதவீதமாக இருந்த கட்சியின் வாக்கு வங்கி விக்கிரசிங்கவின் சுமார் மூன்று தசாப்தகால தலைமைத்துவத்துக்கு பிறகு கடந்த பாராளுமன்ற தேர்தலில் இரண்டு சதவீதமாக குறைவடைந்தது. ஐ.தே.க. வில் இருந்து பாராளுமன்றத்துக்கு ஒரு உறுப்பினர் கூட தெரிவாகாத பரிதாப நிலலையை நாமெல்லோரும் கண்டோம். அந்த வரலாற்றுத் தோல்விக்கு பிறகு ஐ.தே.க.வை கலைத்துவிடலாமா என்று விக்கிரமசிங்க சிந்தித்ததாக நவீன் திசாநாயக்க ஒரு தடவை கூறியது நன்றாக நினைவிருக்கிறது.
நாடளாவிய ரீதியில் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் அடிப்படையில் கிடைத்த ஒரேயொரு தேசியப்பட்டியல் ஆசனத்தைப் பயன்படுத்தி அதுவும் பத்து மாதங்கள் கழித்து மீண்டும் பாராளுமன்றத்துக்குள் பிரவேசித்த விக்கிரமசிங்க அதே பாராளுமன்றம் ஒரு வருடத்திற்கு பிறகு தன்னை ஜனாதிபதியாக தெரிவுசெய்யும் என்று கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்..
அதேவேளை, அவரைத் தவிர வேறு எவரும் தனது கட்சியின் ஒற்றைப் பாராளுமன்ற உறுப்பினராக சபையில் இருந்துகொண்டு ஜனாதிபதியாக தெரிவாகியிருக்கவும் முடியாது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி கோட்டாபயவின் அழைப்பை ஏற்று விக்கிரமசிங்கவுக்கு முன்னதாக பிரதமராக பதவியேற்றிருந்தாலும் கூட, பிறகு அவரை பாராளுமன்றம் ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கு ராஜபக்சாக்கள் தங்கள் ஆதரவை வழங்கியிருப்பார்கள் என்று கூறமுடியாது.
ராஜபக்சாக்களை விக்கிரமசிங்க பாதுகாக்கிறாரோ இல்லையோ, அவரின் தலைமையில் ஒரு அரசாங்கம் தங்களை வேட்டையாடாது என்ற நம்பிக்கை அவர்களுக்கு நிச்சயமாக இருக்கிறது. தற்போதுகூட எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அவரை ஆதரிக்கும் தெரிவை இன்னமும் ராஜபக்சாக்கள் கைவிடவில்லை. அது தங்களுக்கு பாதுகாப்பான தெரிவு என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
எந்த தேர்தலையும் எந்த நேரத்திலும் எதிர்நோக்கத் தயார் என்றும் தங்களது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே மீண்டும் வெற்றிபெறும் என்றும் என்னதான் ராஜபக்சாக்கள் மார்தட்டிப் பேசினாலும், ‘அறகலய’ கிளர்ச்சிக்கு பின்னரான அரசியல் நிலைவரத்தில் மக்கள் மத்தியில் தங்களுக்கு இருக்கும் ஆதரவை மதிப்பிட முடியாத அளவுக்கு அவர்கள் அரசியல் அனுபவம் இல்லாதவர்கள் இல்லை. மக்கள் மத்தியில் ஒரு விதமான உளவியல் குழப்பத்தை ஏற்படுத்துவதே ராஜபக்சாக்கள் அவ்வாறு பேசுவதன் நோக்கமாக இருக்கலாம்.
தங்கள் கட்சியினால் தேர்தல்களில் வெற்றிபெற முடியும் என்றால் எதற்காக அவர்கள் ஒரு ராஜபக்சவை ஜனாதிபதி தேர்தலில் களமிறக்க விருப்பமில்லாமல் தனவந்தர் தம்மிக்க பெரேரா போன்றவர்களை முன்னிறுத்துகிறார்கள்? மக்கள் கிளர்ச்சிக்கு பிறகு தங்களது வாக்கு வங்கி எத்தகைய நிலையில் இருக்கிறது என்று பரீட்சித்துப் பார்ப்பதற்கு ராஜபக்சாக்களுக்கு தங்கள் குடும்ப உறுப்பினரைத் தவிர, வேறு ஒருவர் தேவைப்படுகிறார்.
பொதுஜன பெரமுன ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறக்கூடிய ஒரு பொதுவேட்பாளரை நிறுத்தும் என்று அதன் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த வாரம் கூறியிருந்தார். தற்போது பொதுவேட்பாளர் என்பதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விட்டது. விக்கிரமசிங்கவும் தன்னை பொது வேட்பாளர் என்கிறார்? தமிழர் தரப்பிலும் ஒரு பொது வேட்பாளர் குறித்து நீண்டநாட்களாக பேசப்பட்டுவருகிறது.
தங்களின் ஆதரவு இல்லாமல் எந்த வேட்பாளரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறமுடியாது என்றும் ராஜபக்சாக்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.
ராஜபக்சாக்களை பொறுத்தவரை ஒன்றில் அவர்கள் ஆட்சிக்கு மீண்டும் வரவேண்டும் அல்லது கடந்த கால தவறுகளுக்காக தங்களைப் பொறுப்புக்கூற வைப்பதில் அக்கறை காட்டாதவர்கள் ஆட்சிக்கு வருவதை உறுதிசெய்ய வேண்டும். அதை அடிப்படையாகக் கொண்டே அவர்களின் வியூகங்கள் அமைகின்றன..
ஜனாதிபதி தேர்தலில் தங்களது கட்சியின் வேட்பாளரை நிறுத்தப்போவதாக ராஜபக்சாக்கள் அச்சுறுத்துவது தங்களது ஆதரவை நாடுகின்ற தரப்பிடமிருந்து தங்களின் நலன்களை உறுதிப்படுத்தக்கூடியதாக சாத்தியமானளவுக்கு அரசியல் பேரத்தைப் பேசுவதற்காகவேயாகும். இது விடயத்தில் ஜனாதிபதி விக்கிரமசிங்கவை தங்களுக்கு சாதகமான முறையில் மடக்குவது மிகவும் கஷ்டம் என்பதையும் அவர்கள் அறிவார்கள்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றால் தங்களுக்கு ஒரளவு அனுகூலமான சூழ்நிலை உருவாகலாம் என்று நினைத்த ராஜபக்சாக்கள், அது தொடர்பில் ஜனாதிபதி மீது பிரயோகித்த நெருக்குதல்கள் பயனளிக்கவில்லை. விக்கிரமசிங்கவைப் பெ்றுத்தவரை, அவரது கட்சியின் தற்போதைய மிகவும் பலவீனமான நிலையில் பாராளுமன்ற தேர்தலை பற்றி நினைத்துப் பார்க்கவே முடியாது.
ஜனாதிபதி தேர்தலில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றால் மாத்திரமே ஐ.தே.க. மீட்சிபெறுவது குறித்து நம்பிக்கைகொள்ள முடியும். தனது கட்சியை மீளக்கட்டியெழுப்புவதில் உள்ள பிரச்சினைகளை விக்கிரமசிங்க நன்கு அறிவார். அதனால் தான் அவர் ஜனாதிபதி தேர்தலில் தனது கட்சியுடன் தன்னை அடையாளப்படுத்தாமல் சுயாதீனமான பொதுவேட்பாளராக போட்டியிடுவது குறித்து பேசுகிறார்.
இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் கட்சித்தலைவர் ஒருவர் தனது கட்சியிடமிருந்து தன்னை தூரவிலக்கிக்கொண்டு மற்றைய கட்சிகளைச் சேர்ந்தவர்களுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கு திட்டம் தீட்டுவது இதுவே முதற்தடவையாகும்.
அத்தகைய கூட்டணி ஒன்றை அமைக்கும் முயற்சியை ராஜபக்சாக்களின் கட்சியைச் சேர்ந்த சிலரைப் பயன்படுத்தி கடந்த வருடமே விக்கிரமசிங்க தொடங்கிய போதிலும் இதுவரையில் அதில் குறிப்பிடத்தக்க வெற்றியைக் காணமுடியவில்லை. ஆனால், பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த சில அமைச்சர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவாக ஒரிரு பொதுக் கூட்டங்களை அண்மைக்காலத்தில் ஏற்பாடு செய்தார்கள். விக்கிரமசிங்கவை தவிர வேறு எந்த தலைவராலும் இலங்கையை அதன் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்கமுடியாது என்றும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக்கூடிய தகுதியுடன் பொதுஜன பெரமுனவில் எவரும் இல்லை என்றும் அவர்கள் பகிரங்கமாக பேசுகிறார்கள்.
இந்த மாத இறுதியில் ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டவுடன் அதில் போட்டியிடப்போகும் தனது தீர்மானத்தை விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என்றும் அதையடுத்து அவரை ஆதரிக்கப் போகும் ‘மெகா கூட்டணி ‘ உருவெடுக்கும் என்று கூறப்படுகிறது.
பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த அரசியல்வாதிகள் அந்த கூட்டணியில் கணிசமான எண்ணிக்கையில் சேருவார்களாக இருந்தால் ராஜபக்சாக்கள் பெரும் நெருக்கடியை எதிர்நோக்குவர். விக்கிரமசிங்கவுக்கு ஆதரவை வழங்குவதற்கு அவருடன் பேரம் பேசமுடியாத நிலை ராஜபக்சாக்களுக்கு ஏற்படலாம்.
தேர்தல் அறிவிப்பு வெளியானதும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் தன்னுடன் வந்து இணைவார்கள் என்றும் ஜனாதிபதி எதிர்பார்க்கிறார். ஐக்கிய மக்கள் சக்தியுடன் தற்போது இருக்கும் சில தமிழ், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் தேர்தலில் எத்தகைய முடிவை எடுப்பது என்று தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள் .
அடுத்த பாராளுமன்ற தேர்தலில் தங்களது வாய்ப்புகள் குறித்து அவர்கள் கரிசனை கொண்டிருப்பதே அந்த தடுமாற்றத்துக்கு காரணம். விக்கிரமசிங்க தேர்தலில் வெற்றிபெற்றாலும் கூட மிகவும் பலவீனமான நிலையில் இருக்கும் அவரது கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு தங்களது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றிக்கொள்ளமுடியுமா என்ற சந்தேகம் அவர்களுக்கு இருக்கிறது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்படுகின்ற பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மாத்திரமே தனது சாதனையாக விக்கிரமசிங்க முன்வைக்கிறார். கடந்த இரு வருடங்களில் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட சில சட்டங்கள் காரணமாக ஒரு லிபரல் ஜனநாயகவாதி என்று தனக்கு இருந்த படிமத்தையும் அவர் இழந்துவிட்டார்.
அவரைத் தவிர வேறு எவராவது ஜனாதிபதியாக வந்தால் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தடம்புரண்டு மீண்டும் பாரிய நெருக்கடி தோன்றும் என்று அவரைச் சார்ந்தவர்கள் ஒரு ‘மிரட்டல் பிரசாரத்தை’ முன்னெடுக்கிறார்கள். இலங்கையின் வேறு எந்த அரசியல் தலைவருக்கும் இல்லாத சர்வதேச மதிப்பு விக்கிரமசிங்கவுக்கு இருக்கிறது என்றும் அவர்கள் அயராது கூறிக்கொண்டிருக்கிறார்கள்.
ஜனாதிபதியும் அமைச்சர்களும் கூறுகின்றவற்றுக்கு புறம்பாக பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் இருக்கின்றன. இரு வருடங்களுக்கு முன்னரான நிலைவரத்தில் இருந்து வேறுபட்டதாக ‘ வழமை நிலையின் சாயல் ‘ ஒன்று காணப்படுகின்ற போதிலும், அதிகப் பெரும்பான்மையான சாதாரண மக்களைப் பொறுத்தவரை வாழ்க்கைச் செலவு சமாளிக்க முடியாததாகவே தொடர்ந்தும் இருக்கிறது.
இத்தகைய பின்புலத்தில் சில தினங்களுக்கு முன்னர் இலங்கையின் முன்னணி அரசியல் ஆய்வாளர்களில் ஒருவரான பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட ‘ஜனாதிபதி தேர்தலுக்கு முந்திய இலங்கை அரசியல் ; நிச்சயமற்றநிலை அல்லது குழப்பநிலை’ என்ற தலைப்பில் நீண்டதொரு கட்டுரையில் கூறியிருக்கும் முக்கியமான ஒரு கருத்தை இங்கு நினைவுபடுத்துவது மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.
“அக்டோபருக்கு பிறகு இலங்கையை ஆட்சி செய்யப்போவது யார்?’ என்ற கேள்வி மூன்று காரணங்களுக்காக மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
” முதலாவதாக, பாரம்பரிய அரசியல் அதிகார வர்க்கத்தின் ஆட்சிக்கு பதிலாக கூடுதலான அளவுக்கு ஜனநாயக ரீதியானதும் பொறுப்புக் கூறக்கூடியதுமான அரசாங்கம் ஒன்றை வேண்டிநின்ற 2022 அறகலய மக்கள் கிளர்ச்சிக்கு பிறகு இடம்பெறப்போகும் முதல் தேர்தல் இதுவாகும்.
“இரண்டாவதாக, அதிகப்பெரும்பான்மையான மக்கள் மீது சுமத்தப்படுகின்ற முன்னென்றுமில்லாத வகையிலான துன்பங்களைப் பற்றிய பிரக்ஞை எதுவுமின்றி, சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புடனான பொருளாதார மறுசீரமைப்புச் செயற்திட்டத்தை கடந்த வருடம் தொடக்கம் நடைமுறைப்படுத்திவரும் தற்போதைய அரசாங்கம் தொடர்பில் தங்கள் தீர்ப்பை இலங்கை வாக்காளர்கள் கூறுவதற்கு தேர்தல் வாய்ப்பளிக்கிறது.
மூன்றாவதாக, நாட்டின் புதிய ஆட்சியாளர்களாக மாற்று அரசியல் தலைமைத்துவம் ஒன்று மேலெழுவதற்கு வழிவகுக்கக்கூடிய ஒரு புதிய கட்டத்தை இலங்கை அரசியல் எட்டியிருக்கிறதா என்பதை இந்த தேர்தலின் முடிவுகள் வெளிக்காட்டும்.”