— கருணாகரன் —
ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களில் ஒன்றான தமிழீழ இராணுவத்தின் (Tamil Eeelam Army) தலைவர் திரு. தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் (பனாகொடை மகேஸ்வரன் அல்லதுதம்பா என்றுஅழைக்கப்பட்ட தம்பாப்பிள்ளை மகேஸ்வரன்) யாழ்ப்பாணத்தில் மாரடைப்பினால் காலமாகி விட்டார்.
ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஒரு காலகட்ட வரலாற்று நாயகன் மகேஸ்வரன்.
யாழ்ப்பாணம் – புங்குடுதீவைச் சேர்ந்த தம்பாப்பிள்ளை – செங்கமலம் இணையரின் மகனே மகேஸ்வரன். தந்தையார் தம்பாப்பிள்ளை கொழும்பு – மருதானையில் அப்போது பிரபலமாக இருந்த “தவளகிரி” ஹோட்டலின் உரிமையாளராவார்.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் படித்த மகேஸ்வரன், மிகத் திறமையான மாணவராகப் பாடசாலையில் விளங்கினார். திறமைச் சித்தியைப் பெற்ற மகேஸ்வரன், மேற்படிப்புக்காக 1970 களின் நடுப்பகுதியில் லண்டனுக்குச் சென்றார்.
1979 இல் லண்டனில் உயர் கல்வியை (Engineering) இடைநிறுத்தி தேச விடுதலைக்காக தாயகம் நோக்கி திரும்பிய மிகச்சிலரில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தாயத்துக்குத் திரும்பிய மகேஸ்வரன், தமிழர்களுக்காக ஒருவிடுதலைத் தேசம் அமையவேண்டும் என்று விரும்பி, தமிழீழ இராணுவம் என்ற அமைப்பை (Tamil Eelam Army) உருவாக்கிச் செயற்பட்டார். அது அப்பொழுது பிரபலமாக இருந்த இயக்கங்களில் ஒன்றாகும்.
திருகோணமலை மாவட்டத்தின் வங்கிக் கொள்ளை முயற்சி ஒன்றில் குற்றம்சாட்டப்பட்டார் மகேஸ்வரன்.
இதனால் தேடப்பட்ட மகேஸ்வரன் கைது செய்யப்பட்டு, மிகக் கூடிய பாதுகாப்பு ஏற்பாடுகளோடிருந்த பனாகொட இராணுவத் தடுப்பு முகாமில் சிறை வைக்கப்பட்டிருந்தார்.
அப்படிச் சிறைவைக்கப்பட்ட மகேஸ்வரன், அங்கிருந்து தப்பினார். சிறைக் கம்பியை மெதுவாக அறுத்து, அதை வெளியே தெரியாதவாறு சுவிங்கத்தினால் ஒட்டி வைத்த மகேஸ்வரன், சந்தர்ப்பம் பார்த்துத் தப்பிச் சென்றார்.
இது அரசுத் தரப்புக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்திருந்தது.
அதேவேளை இது விடுதலைப் போராளி ஒருவரின் வீரம் நிறைந்த சாகஸச் செயலாக அப்போது தமிழ்ப்பரப்பில் பேசப்பட்டது.
போராளிகளுக்கு பாரிய மிரட்டலாக, கொடூரமான சிறைக்கூடமாகத் திகழ்ந்த பனாகொடை சிறைச்சாலையிலிருந்து சாதுரியமாகத் தப்பித்த சாதனையால், அவர் “பனாகொடை மகேஸ்வரன்” என்று பின்னாளில் போராளிகளாலும் மக்களாலும் பெருமையுடன் அழைக்கப்பட்டு, மக்கள் மத்தியில் பிரபலம் பெற்றார்.
ஆனாலும் தலைமறைவாகக் கொழும்பில் இருந்த வேளையில் கைது செய்யப்பட்ட மகேஸ்வரன் வெலிக்கடைச் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார்.
1983 இல் வெலிக்கடைச் சிறையில் இலங்கை அரசின் அனுசரணையுடன் சிங்களச் சிறைக் கைதிகளான வன்முறையாளர்கள் மேற்கொண்ட காட்டு மிராண்டித்தனமான தாக்குதலை எதிர்த்து நின்று போராடி உயிர் தப்பினார்.
(அந்தக் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நேரிற் கண்ட உளத் தாக்கத்திலிருந்து – உளப் பாதிப்பிலிருந்து இறுதி வரையில் மீள முடியாமலிருந்தார் மகேஸ்வரன். அந்தச் சம்பவத்தைப் பற்றிப் பேசினால் அவர் பதட்டமடைந்து சமனிலை குலையும் நிலையிலிருந்தார்).
வெலிக்கடைச் சிறைச்சாலையிலிருந்து மட்டக்களப்புச் சிறைச் சாலைக்கு ஏனைய தமிழ் அரசியற் கைதிகளோடு மாற்றப்பட்ட மகேஸ்வரன், 1983 செப்ரெம்பரில் மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுப் புகழ் மிக்க மட்டக்களப்புச் சிறையுடைப்பின் மூலம் மறுபடியும் தப்பினார்.
இந்தச் சிறையுடைப்பில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் (முன்னர் ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் இராணுவத்தளபதி) டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் வடக்கு கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள், சின்னவன், புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பரமதேவா, ஆதரவாளர்களான நிர்மலா, நித்தியானந்தன், மருத்துவர் ஜெயகுலராஜா, ஈரோஸ் இயக்கத்தைச் சேர்ந்த அழகிரி மற்றும் காந்தியத்தைச் சேர்ந்த டேவிட் ஐயா உட்படப் பலர் தப்பித்திருந்தனர்.
தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் தப்பியதை அடுத்து தமிழீழ இராணுவத்தின் செயற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இந்தக் காலப்பகுதியில் தமிழீழ இராணுவத்தை மக்கள் மகேஸ்வரனின் தந்தையின் பெயரைச் சுருக்கி “தம்பா இயக்கம்” எனவும் அழைக்கத் தொடங்கினர்.
இதற்கான நிதித் தேவைக்காக காத்தான்குடி வங்கிக் கொள்ளை, தமிழீழ இராணுவத்தினால் நடத்தப்பட்டது.
இதில் ஏறக்குறைய அன்றைய பெறுமதியில் ஆறு கோடி பணமும் நகையும் மகேஸ்வரன் தலைமையிலான தமிழீழ இராணுவத்தினால் கைப்பற்றப்பட்டது.
ஏறக்குறைய இதே காலப்பகுதியில் இயக்கத்தின் வளர்ச்சிக்காக அதிர்ஸ்டலாபச் சீட்டை விற்பனை செய்து நிதிச் சேகரிப்பில் தமிழீழ இராணுவத்தினர் ஈடுபட்டனர். இதற்குரிய முதற்பரிசாக கார் ஒன்று வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
மிகக் கூர்மையான மதிநுட்பம் வாய்ந்த மகேஸ்வரனைப் பலரும் தனி மனித இராணுவமாகவே (One Man Army) கருதினர். பல விதமான அதிரடிச் செயற்பாடுகளால் சாகஸ நாயகனாக விளங்கினார் மகேஸ்வரன். குறிப்பாக ஆளணி குறைவாக இருந்த போராட்ட அமைப்பில் இருந்துகொண்டு அவ்வப்போது அவர் நிகழ்த்திய போராட்டகால நடவடிக்கைகள், ஒரு காலத்திற் பெரும் சாகசங்களாகப் பார்க்கப்பட்டன.
அரசியற் சித்தாந்தத்தின் அடிப்படையில் போராட்ட அமைப்பைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக இராணுவ சாகஸங்களால் அதைக் கட்டியெழுப்ப முற்படுகிறார் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. தமிழீழ இராணுவத்தைப் பற்றிய வரலாற்றின் மதிப்பீடும் ஏறக்குறைய இதுவாகவே இருக்கிறது. ஆனாலும் ஈழப்போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கங்களில் பலவும் விரும்பியோ விரும்பாமலோ பலவும் இராணுவ சாகஸத்திலும் இராணுவ வாதத்திலும் திளைத்தவைதான். விடுதலைப் போராட்டம் என்பது சாகசங்களாலும் ஆயுதப் பிரயோகங்களாலும் இராணுவவாதங்களாலும் மட்டும் வெற்றிகரமாக வளர்ச்சியடைந்து விடுவதில்லை. இதனால்தான் இன்று ஈழப்போராட்டம் எந்த வெற்றியையும் பெற்றுத் தர முடியாமல் போனது மட்டுமல்ல, அடுத்த கட்ட அரசியலைக் கூடத் தீர்மானிக்க முடியாத கையறு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
மேலும் தமிழீழ இராணும் என்ற இந்த இயக்கமானது, 1984 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தாக்குதல் ஒன்றை நடத்தத் திட்டமிட்டிருந்தது. இதற்காக சென்னை மீனம்பாக்க விமான நிலையத்தில் வெடிகுண்டைப் பொருத்தி, கட்டுநாயக்காவில் வெடிக்க வைப்பதற்குத் திட்டமிட்டது.
ஆனாலும் அதற்கு முன்பே அந்தக் குண்டு மீனம்பாக்கம் விமான நிலையத்திலேயே வெடித்து விட்டது. இதன்போது 24 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவம் இலங்கை – இந்தியப் பரப்பில் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருந்தது. முக்கியமாகப் பொது மக்களின் இழப்பும் சிவில் விமான நிலையமொன்றில் மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பும் தமிழீழ இராணுவத்தின் மீது பெரும் குற்றமாக விழுந்தது.
இதனால் மகேஸ்வரன் மீண்டும் தேடப்பட்டு, கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மகேஸ்வரன் தமிழ் நாட்டில் புழல், செங்கல்பட்டு சிறைகளில் ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறைவைக்கப்பட்டிருந்தார். இதன்போது மகேஸ்வரனுக்குப் பல்வேறு தரப்பினரோடும் அறிமுகமும் உறவும் ஏற்பட்டது. இந்தக் காலகட்டத்தில் அவர் பல விதமான நூல்களையும் படிக்கத் தொடங்கினார்.
பின்னர் அங்கிருந்து விடுதலையாகி ஆபிரிக்காவுக்குச் சென்ற மகேஸ்வரன், வேறு சம்பவங்களின் பின்னணியினால் தான்சானியாவில் மீண்டும் சிறைவாசம் புரிய வேண்டியிருந்தது. ஆனாலும் அந்தச் சூழலையும் தன்னுடைய அறிவு மேம்பாட்டுக்கான படித்தலிலேயே கழித்தார்.
இவ்வாறு தன்னுடைய வாழ்க்கையில் மிக நீண்ட காலத்தைச் சிறைகளில் கழித்த மகேஸ்வரன், 2010 இல் இலங்கைக்குத் திரும்பியிருந்தார்.
பல்மொழிகளில் பேசக் கூடிய ஆற்றலைப் பெற்றிருந்த மகேஸ்வரன், உலக அரசியல், பொருளாதார, பண்பாட்டு விடயங்களில் ஆழமான அறிவைக் கொண்டிருந்தார். மிகப் பெரிய தகவற் களஞ்சியம் என்று சொல்லக் கூடிய அளவுக்கு அவருடைய அறிவாற்றல் பின்னாளில் விளங்கியது. ஆனாலும் அதனை ஈழத்தமிழ்ச் சமூகம் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கவில்லை.
அவரும் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருக்க விரும்பினார். ஒளிப்பதிவாளர் அமரதாஸ் குறிப்பிடுவதைப்போல “போராட்டச் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி எளிமையாக வாழ்ந்த மகேஸ்வரன், மாற்றுக்கருத்துகளைக் கொண்டிருப்பவர்களோடும் உரையாடக்கூடிய பக்குவத்தோடிருந்தார். தனது போராட்டகால அனுபவங்களையும் பல்வேறு சிறைகளில் இருந்த அனுபவங்களையும் அவர் விரிவாகப் பதிவுசெய்திருக்க வேண்டும். அது நடக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியது. மிகச்சில சந்தர்ப்பங்களில் உரையாட முடிந்திருந்தாலும் அவரைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை” என்பது வருத்தத்திற்குரியதே.
ஈழவிடுதலை போராட்ட வரலாற்றில் மகேஸ்வரனின் பெயரும் தீவிரமும் முக்கியமானவை. ஆம், ஈழத் தமிழர்களின் One Man Army யை இழந்து விட்டோம்.
ஒரு மூத்த போராளியாக, ஈழவிடுதலைப் போராட்ட இயக்கத் தலைவர்களில் மிஞ்சியிருந்த ஒருவராக இருந்த மகேஸ்வரனும் விடைபெற்று விட்டார். ஈழ விடுதலைப் போராட்ட வரலாறு தன்னுடைய இறுதித் தலைவரையும் இழந்து விட்டது.
இறுதி நாட்களில் மிக எளிமையாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்த மகேஸ்வரன், வாழைகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டிருக்கும் வேளையில் மாரடைப்பினால் இயற்கை எய்தியிருக்கிறார்.
வரலாறுதான் எத்தனை வேடிக்கையானது.
மகேஸ்வரனுக்கு அஞ்சலி.