(அரசியல் – சமூக – வரலாற்று நாவல்)
— செங்கதிரோன் —
தேர்தலில் வென்ற கனகரட்ணம் கொழும்பு சென்று பாராளுமன்றத்தில் தனது பதவிப்பிரமாணத்தை முடித்துக்கொண்டு பொத்துவில் திரும்பியிருந்தார். அவருடைய வெற்றியுடன் இலங்கைப் பாராளுமன்றத்தில் தமிழர் விடுதலைக்கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்றினால் அதிகரித்துப் பதினெட்டானது.
கொழும்பு சென்றிருந்த கனகரெட்ணம் பொத்துவில் திரும்பிவிட்டார் என்ற தகவலறிந்து அவரைச் சந்தித்து மீண்டும் வாழ்த்துக்கூறும் நோக்குடன் தனது உத்தியோகபூர்வக் கடமைகளை முடித்தபின் கோமாரி ‘இரிக்கேசன் குவாட்டஸ்’ சிலிருந்து மாலை 4.00 மணி போல் புறப்பட்டு ‘மோட்டார்சைக்கிளில்’ பொத்துவில் நோக்கிப் போய்கொண்டிருந்தான் கோகுலன்.
அறுபதாம்கட்டையால் போய்க்கொண்டிருக்கும்போது வீதியின் இடது புறத்திலிருந்து திடீரெனச் சற்றும் எதிர்பாராத வகையில் யானையொன்று வீதியில் ஏறியது. தன்னைச் சுதாகரித்துக்கொண்டு யானையில் மோதுப்படாவண்ணம் தந்திரமாக ‘மோட்டார் சைக்கிளை’ வெட்டி எடுத்த கோகுலன் யானையைக் கடந்தபின் ‘சைட்’ கண்ணாடியால் யானையை அவதானித்தான். யானை தன்னைப் பின் தொடர்ந்து துரத்தி வருவதைக் கண்டவன் துணிவை வரவழைத்துக் கொண்டு ‘மோட்டார் சைக்கிளை’ மிக வேகமாகச் செலுத்தினான். வெகுதூரம் சென்றதும் மீண்டும் ‘சைட்’ கண்ணாடியில் பார்வையைச் செலுத்தியபோது தன்னைத் துரத்திவந்து கொண்டிருந்த யானை சடுதியாக நின்று பாதையின் வலப்புறமிருந்த தேக்குமரக் காட்டுக்குள் நுழைந்துசென்று மறைவது தெரிந்தது.
நல்லவேளை ஆபத்திலிருந்து தப்பிவிட்டதாக உணர்ந்தவன் சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு வந்தாறுமூலை மகாவித்தியாலத்தில் தான் மாணவனாக இருந்த காலத்தில் ‘பஸ்’சில் நள்ளிரவில் பயணித்தபோது இதே இடத்தில் வீதியின் நடுவே நின்றிருந்த யானையை நினைத்தான். அன்று கண்ட யானைதான் இந்த யானையாக இருக்குமோ என்றும் எண்ணிக்கொண்டான். இதுபற்றியும் யானையின் ஆயுட்காலம் எத்தனை ஆண்டுகளென்றும் மூத்தோர்களிடம் விசாரித்தறியவும் அவனது மனம் ஆவல்கொண்டது.
பொத்துவிலையடைந்த கோகுலன் பொத்துவில் ‘பஸ்’ நிலையத்தில் ஓரமாக ஜந்தாறு குடும்பங்கள் அநாதரவான நிலையில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் சிறு மூட்டை முடிச்சுகளுடனும் முகங்களில் இனம்புரியாத ஏக்கத்துடனும் நிற்பதைக்கண்டான்.
இனக்கலவரத்தால் பாதிப்புற்றுப் பாதுகாப்புத்தேடி இடம்பெயர்ந்து வந்தவர்களாக இருக்குமோ என அவனது எண்ணம் ஓடிற்று.
மோட்டார் சைக்கிளை நிறுத்திய கோகுலன் அதனை உருட்டிச்சென்று ஒர் ஓரத்தில் பாதுகாப்பாக வைத்து விட்டு அவர்களிடம் சென்று பேச்சுக்கொடுத்தான்.
இலங்கையின் அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள ‘தனமன்வில’ உதவி அரசாங்க அதிபர் பிரிவின் கீழ்த் தஞ்சைநகர் எனும் இடத்தில் நகரசுத்தித் தொழிலில் ஈடுபட்டு வந்த இந்திய வம்சாவளித் தமிழர்கள் அவர்களென்றும் இனக்கலவரத்தின்போது சிங்களக் காடையர் கும்பலொன்றினால் உடைமைகள் யாவும் சேதமாக்கப்பட்டு உயிர்தப்பி வந்தவர்களென்றும் அறியமுடிந்தது. இவ்வாறு பாதிக்கப்பட்ட இன்னும் பல குடும்பங்கள் இடையில் வந்து கொண்டிருக்கின்றன என்றும் அவர்கள் கூறினர்.
எங்கே போவது என்று தெரியாமல் என்ன செய்வதென்றும் தெரியாமல் திக்குத்தெரியாத காட்டில் விடப்பட்டவர்கள்போல் திசை அறியாமல் திண்டாடும் அவர்களைப் பார்க்கக் கோகுலனுக்கு அவர்கள்மீது அனுதாபமும் அதேவேளை இனவாத அரசியல்வாதிகள்மீது ஆத்திரமும் பிறந்தன.
இனக்கலவரத்திற்கு ‘ரிஷிமூல’மான அரசியல்வாதிகள் பாராளுமன்றப் பதவியில் குளிர்காய்ந்து கொண்டிருக்கும்போது ஏதுமறியாத அப்பாவிகள் இப்படி எல்லாவற்றையும் இழந்து தெருவில் வந்து நிற்கின்றார்களேயென்று அவர்கள்மீது இரக்கப்பட்டான். இவர்களுக்குத் தன்னால் ஆனதைச் செய்யவேண்டுமென்று அவனது அடிமனம் சொல்லிற்று.
அவர்கள் கூறியவற்றையெல்லாம் அமைதியாகவும் அனுதாபத்துடனும் காதில் விழுத்திய கோகுலன் இவர்களைப் பொத்துவில் தொகுதியிலே எங்காவது குடியமர்த்த வேண்டுமென்றும் – எம்.பி யாக வந்திருக்கின்ற கனகரட்ணத்தின் அரசியல் அதிகாரத்தையும் செல்வாக்கையும் இதற்குப் பயன்படுத்த வேண்டுமென்றும் திடசங்கற்பம் பூண்டான்.
அகதிகளாக வந்த ஆட்களைவிட்டு அகன்று அருகிலிருந்த கனகரட்ணத்தின் வாசஸ்தலக் காணிக்குள் முன்பக்கக் ‘கேற்’ றினூடாக உள்நுழைந்தான். உள்ளே வீட்டு வாசலில் சனக்கூட்டமாயிருந்தது. எல்லோரும் தமக்குள்ளே ‘எம்.பி ஐயா! எம்.பி ஐயா!’ என்று அவரைப்பற்றி பேசிக்கொள்வது காதில் சத்தமாக விழுந்தது.
கனகரட்ணத்தின் முழுப்பெயர் மயில்வாகனம் கனகரட்ணம். ஆங்கிலத்தில் அது Mylvaganam Canagaretnam என்றுதான் எழுதப்படுவது. அதனால் அவரைப் பொத்துவிலில் M.C – ‘எம்.சி’ ஐயா என்றுதான் எல்லோரும் அழைப்பார்கள். இப்போது ‘எம்.சி’ ஐயா ‘எம்.பி’ (M.P) ஐயாவாக மாறிவிட்டதை எண்ணி இதயத்தில் புன்னகைத்துக் கொண்டான் கோகுலன்.
சனக்கூட்டத்தினுள் கோகுலனைக் கண்ட கனகரட்ணத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் அவரிடம் போய்ச் சொல்லியிருக்க வேண்டும் போலும், சிறிது நேரத்தால் பாதுகாப்பு உத்தியோகத்தர் கோகுலனை நெருங்கி “எம்.பி ஐயா உங்களை உள்ளே கூட்டி வரட்டாம்” என்று சொல்லிக் குருஷேத்திர யுத்த களத்தில் அபிமன்யு சக்கரவியூகத்தை உடைத்துக் கொண்டு உப்புகுந்தது போலச் சனக்கூட்டத்தை உடைத்து வழியெடுத்துக் கோகுலனை உள்ளே அழைத்துப்போனார்.
கனகரட்ணத்தை நேரில் கண்டதும் கரம்குவித்துத் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தான் கோகுலன்.
“உன்னால்தான் தம்பி நான் எம்.பி யா வந்தநான். நான்தான் உனக்குப் பாராட்டும் நன்றியும் சொல்ல வேணும்” என்று அவரைச் சுற்றியிருந்த எல்லோருக்கும் கேட்கும்படியாக உரத்துச் சொல்லிவிட்டுச் சிரித்தார்.
ஆட்களுக்குள்ளே வைத்து அதிகம் அளவளாவ முடியாதென்பதால் “வா! தம்பி சாப்பிட்டு வரலாம்” என்று அவர் அமர்ந்திருந்த சாய்மனைக் கதிரையிலிருந்து சமயோசிதமாக எழுந்து கோகுலனையும் கூட்டிக்கொண்டு சாப்பாட்டறைக்குள் நுழைந்தார்.
இந்நேரம் என்ன சாப்பாடு என்று எண்ணிக்கொண்ட கோகுலன் சாப்பாட்டு அறைக்குள் நுழையும்போதே தனது கைக்கடிகாரத்தைப் பார்த்தான். மணி மாலை 5.00 மணியாகி விட்டிருந்து.
கோகுலனின் முகக்குறிப்பைப் புரிந்து கொண்ட கனகரட்ணம் “இப்பத்தான் மத்தியானச் சாப்பாடு” என்றார். மக்களைச் சந்திப்பது அவர்களுக்குச் சேவையாற்றுவது என்றால் எதிர்காலத்தில் இவரது வாழ்க்கை இப்படித்தான் இருக்கப்போகிறது. நேர காலத்திற்குச் சாப்பிடவும் முடியாது. நித்திரைக்கும் போகமுடியாது என்று எண்ணிக் கொண்டு கோகுலனும் போய்ச் சாப்பாட்டு மேசையில் அவர் அருகில் அமர்ந்தான்.
கோகுலனையும் சாப்பிடச்சொன்னார். கோகுலன் சிரித்துக்கொண்டு “உங்களுக்கு இது மத்தியானச் சாப்பாடு. எனக்கு இனி இராச்சாப்பாடுதான். இன்று பொத்துவிலில் அக்கா வீட்டில்தான் தங்கல்” என்று கூறி இங்கிதமாகச் சாப்பிட மறுத்தான்.
“சரி! சாப்பிட்டுக் கொண்டே பேசலாம்” என்றவர் வேலைக்காரப்பெடியனிடம் தேனீர் கொணரும்படி உத்தரவிட்டார்.
சாப்பிட்டுக்கொண்டே, “என்ன தம்பி வந்த நீ” என்றார் கனகரட்ணம்.
“சாப்பிடுங்க சொல்லிறன்” என்று கூறிக் கனகரட்ணம் சாப்பிடுவதற்குச் சற்று அவகாசம் கொடுத்து அமைதிகாத்தான் கோகுலன். தேனீர்க் கோப்பையைக் கொணர்ந்து மேசையில் வைத்தான் வேலைக்காரப்பெடியன்.
கோப்பையைச் சுட்டிக் “குடி தம்பி” என்றவர், “இங்கிருந்தே கதைக்கலாம்” என்றார். தேனீரைக் குடித்து முடித்த கோகுலன் காலிக்கோப்பையை அருகில் நின்றிருந்த வேலைக்காரப் பொடியனிடம் நீட்டிவிட்டுக் கதைக்கத் தொடங்கினான்.
“வாழ்த்துக்கூறிச் செல்லலாம் என்று மட்டுமே வந்தேன். ஆனால் வழியில் கண்ட காட்சி. உங்களோடு கொஞ்சம் தனியே பேச வேண்டிய தேவையை ஏற்படுத்திவிட்டது” என்றான் கோகுலன்.
“பிரச்சினையில்லை, உனது விடயத்தை முடித்து விட்டுப் பிறகு மற்றவர்களைச் சந்திக்கலாம். சொல்லு” என்றார் சாப்பிட்டுக்கொண்டே.
கோகுலன் பொத்துவில் பஸ்நிலையத்தில் தான் சந்தித்த அகதிக்குடும்பங்களின் நிலையை ஆதியோடந்தமாய் எடுத்துச் சொல்லி அவர்களை எப்படியாவது பொத்துவில் தொகுதியிலே குடியமர்த்தவேண்டும் என்று கூறி முடித்தான்.
நெற்றியை மேலே உயர்த்திச் சிறிது நேரம் யோசித்தார். பின் தனது பாதுகாப்பு உத்தியோகத்தரை அழைத்துக் கோகுலனோடு சென்று பஸ்நிலையத்தில் நிற்கும் அகதிக்குடும்பங்களை அழைத்துப்போய் தனது வளவுக்குள்ளே அமைந்திருக்கும் அரிசி ஆலைக்கட்டிடத்திற்குள் தங்கவிடும்படி பணித்தார்.
கோகுலன் வெளியில் வந்து பஸ்நிலையத்தில் நின்றிருந்த அகதிக் குடும்பங்களைப் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு அடையாளம் காட்டிவிட்டு மீண்டும் போய்க் கனகரட்ணத்தின் முன் சாப்பாட்டு மேசையில் அமர்ந்தான்.
கனகரட்ணம் சாப்பிட்டு முடித்துக் கைகளைக் கழுவிக் கொண்டிருந்தார். “தம்பி! இந்தக் குடும்பங்களை ஒரு கிழமைக்கு எனது ‘மில்’ கட்டிடத்தில் தங்கவைத்துப் பராமரிக்கிறன். அதற்குள்ள இவங்கள அறுபதாம் கட்டையில அல்லது சங்கமன்கண்டியில உள்ள அரச காணிகளில குடியமர்த்தப்பார்” என்றார் கனகரட்ணம்.
“பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இன்னும் பல தஞ்சை நகரிலிருந்து வந்து கொண்டிருக்கிறாங்களாம்” என்றான் கோகுலன்.
“எத்தின குடும்பமெண்டாலும் வரட்டும். நான் அவர்கள ‘மில்’லில வைத்து ஒரு கிழமைக்குப் பராமரிக்கிறன். நீ ஒரு கிழமைக் காலத்திற்குள்ள அக்குடும்பங்கள ஓரிடத்தில குடியமர்த்திர வேலயக் கவனி” என்றார்.
‘சரி’ என்று எழுந்த கோகுலன் “போயிற்று வாறன்” என்று கூறிவிட்டு அவசரமாகச் சாப்பாட்டு அறையை விட்டு வெளியேறினான்.
தஞ்சை நகரிலிருந்து அடிபட்டு வந்த அகதிகளை யானை நடமாட்டமுள்ள அறுபதாம் கட்டையில் குடியேற்றாமல் அவர்களைச் சங்கமன்கண்டியிலே குடியமர்த்தவே கோகுலன் விரும்பினான்.
ஆட்களால் அடிபட்டு வந்தவர்கள் ஆனையால் அடிபட்டுவிடக்கூடாது என்பது கோகுலனின் அக்கறையாகவிருந்தது. மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக அவர்களது எதிர்காலம் ஆகிவிடக்கூடாது என எண்ணினான்.
பொத்துவிலில் கனகரட்ணத்தைச் சந்தித்தபின் பொத்துவிலில் தனது இளையக்கா வீட்டில் அன்றிரவு தங்கிச் செல்ல நினைத்திருந்த கோகுலன் அந்நினைப்பைக் கைவிட்டு உடனே கோமாரி திரும்பி அன்றிரவே ஆள்புலசிவில் பொறியியல் அமைப்பில் தனக்குக்கீழ் வேலைகள் மேற்பார்வையாளராகப் பணிபுரியும் இலட்சுமணன் – யேசுரட்ணம் – பிராங்ளின் ஆகியோரைக் கோமாரிக் ‘குவாட்டஸ்’க்கு அழைத்து ‘மந்திராலோசனை’ நடத்தினான்.
கட்டிவா என்றால் வெட்டிவரக் கூடிய கெட்டித்தனம் மிக்கவர்களாக இவர்கள் இருந்தனர். வேண்டிய கட்டளைகளையும் ஆலோசனைகளையும் அவர்களுக்கு வழங்கினான். அவைகளை அவர்கள் மகிழ்ச்சியோடு தலைமேல் சுமந்தார்கள். இப்படியான விசுவாசமான ஊழியர்கள் தனக்குக்கிடைத்ததை எண்ணிக் கோகுலனும் பெருமிதம் கொண்டான். தாங்கள் செய்யப்போகின்ற காரியங்களுக்குக் கனகரட்ணம் எப்போதும் கவசமாக இருப்பார் என்பதில் கோகுலனுடன் இணைந்து அவர்கள் எல்லோருக்கும் நல்ல நம்பிக்கை இருந்தது.
சங்கமன்கண்டியில் பிரதான வீதியிலிருந்து உமிரிக்கடற்கரைநோக்கிச் செல்லும் வீதிவழியே பிரதான வீதியிலிருந்து உட்புறமாகப் பரந்து கிடந்த பற்றைக்காடுகள் வெட்டப்பட்டுத் துப்பரவு செய்யப்பட்டன. துப்பரவு செய்யப்பட்ட நிலம் எல்லைகள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு காணித்துண்டிலும் ஓலைக்குடிசைகள் கட்டப்பட்டன. பக்கத்திலிருந்த அடர்ந்தகாடுகளிலேயே குடிசைகள் அமைப்பதற்குத் தேவையான கம்புகள் வெட்டப்பட்டன. தேவையான கிடுகுகளைக் கனகரட்ணம் வாங்கித் தந்தார். திட்டமிட்டபடி ஒருவார காலத்திற்குள் பத்து ஓலைக்குடிசைகள் தயாராகின.
தஞ்சை நகரிலிருந்து அகதிகளாக வந்து கனகரட்ணத்தின் ‘மில்’லிலே தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டிருந்த முதல் தொகுதிக் குடும்பங்கள் சங்கமன்கண்டியிலே குடியமர்த்தப்பட்டன.
தொடர்ந்து தஞ்சை நகலிலிருந்து அடுத்தடுத்து வந்த தொகுதிக் குடும்பங்களுக்கும் குடியமர்வதற்குக் காணியும் ஓலைக்குடிசையும் இந்த முறையிலேயே ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன.
அவர்களுக்கு உடன் வாழ்வாதாரங்களை வழங்குவதற்குக் கோகுலனின் பொறுப்பிலிருந்த வேலைத்தலங்களில் அகதிக்குடும்பத்திலிருந்த ஒவ்வொரு ஆணுக்கும் உள்ளுர்த் தொழிலாளர்களை விட முன்னுரிமை கொடுத்து ‘செக்றோலில்’ வேலை கொடுக்கப்பட்டது.
மாதம் முடிந்து சம்பளம் எடுத்துக் கணக்கை இறுக்கும் வகையில் ‘செக்றோலில்’ வேலை செய்த தொழிலாளர்களுக்குச் சாப்பாட்டுக்குத் தேவையான மற்றும் ஏனைய அத்தியாவசிய சாமான்களைக் கடனுக்கு வாங்கக்கூடிய ஏற்பாட்டைப் பொத்துவிலிலுள்ள முத்து மாணிக்கத்தின் கடையில் இலட்சுமணன் மூலம் கோகுலன் ஏற்பாடு செய்து கொடுத்தான்.
ஒருமாத கால இடைவெளிக்குள் தஞ்சை நகரிலிருந்து வந்த சுமார் முப்பது குடும்பங்கள் சங்கமன்கண்டியில் இவ்வாறு குடியமர்த்தப்பட்டன.
அரசகாணியை அடாத்தாக வெட்டிக் குடியேறுவதற்கு அப்போது சட்டரீதியான தடைகள் இருக்கவில்லை. ஆனாலும் அரசகாணிகளை வெட்டுவதற்கு உதவி அரசாங்க அதிபரின் அனுமதி தேவைப்பட்டது. சேனைப்பயிர்ச் செய்கைக்காரர்கள் அவ்வாறுதான் வருடாவருடம் அடாத்தாகக் காடுவெட்டித்தான் பயிர்ச்செய்கை மேற்கொள்வது வழமையென்பதால் தஞ்சைநகர் அகதிகளை இவ்வாறு குடியமர்த்தியது அரச அதிகாரிகளின் கண்களைப் பெரிதாகக் குத்தவில்லை. அப்படி அவர்களின் கண்ணில்பட்டு அவர்களின் தலையீடு ஏற்பட்டாலும்கூட அவர்களிடமிருந்து கோகுலன் குழுவினரைக் காப்பாற்றும் கேடயமாகக் கனகரட்ணம் இருந்தார்.
தஞ்சை நகர் அகதிகள் குடியமர்த்தப்பட்ட காலம் சேனைப்பயிர்ச்செய்கையை ஆரம்பிக்கும் புரட்டாதி – ஐப்பசி மாதங்களாக இருந்ததால் அவர்களை உள்ளூர் வாசிகளைப்போலவே சேனைப்பயிர்ச்செய்கையில் ஈடுபடுத்தக் கோகுலன் திட்டமிட்டான்.
ஒருநாள் கல்முனையிலிருந்து வெஸ்லிக் கல்லூரி அதிபர் யோகம் வேலுப்பிள்ளையும் – டாக்டர் முருகேசபிள்ளையும் தமிழர் விடுதலைக்கூட்டணி முக்கியஸ்தர் வேல்முருகு மாஸ்ரரும் கோகுலனின் கோமாரிக் ‘குவாட்டஸ்’க்கு வந்திறங்கினர்.
யோகம் வேலுப்பிள்ளை வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் கோகுலன் படித்துக் கொண்டிருந்தபோது அங்கு ஆசிரியராகவிருந்தவர். கல்லூரியில் மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாட்டிற்குப் பொறுப்பாக இருந்தவர். மிகவும் கண்டிப்பானவர். யோகம் வேலுப்பிள்ளையைக் கண்டதும் கோகுலன் “வாங்க சேர்!” என்று கூறி வாஞ்சையுடன் வந்தவர்கள் மூவரையும் ‘குவாட்டஸ்’ உள்ளே அழைத்துச் சென்றான்.
யோகம் வேலுப்பிள்ளை எவரென்றாலும் ‘ஐ சே!’ போட்டுத்தான் அழைப்பார்.
யோகம் வேலுப்பிள்ளை கோகுலனைப் பார்த்து ‘ஐ சே! கோகுலன். கனகரட்ணம் எம்.பி.தான் எங்கள உன்னிட்ட அனுப்பி வைச்சார். தஞ்சை நகரிலிருந்து வந்த அகதிக் குடும்பங்கள் உன்ர பொறுப்பிலதானாம் சங்கமன்கண்டியில குடியமர்த்தப்பட்டுள்ளன. அவர்களுக்கு நாங்களும் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றினூடாக உதவ விரும்புறம். பெரியளவு நிதி எங்களிட்ட இல்ல. சிறிய அளவில உதவ முடியும். என்ன உதவிய எங்களிட்டரிந்து எதிர்பார்க்கிறீர் என்று நீதான் ஐ சே! சொல்ல வேணும்’ என்று நிறுத்தினார்.
கோகுலன் சிறிது நேரம் யோசித்துவிட்டுச் “சேர்! இது சேனப் பயிர்ச்செய்கைக் காலம். எல்லா இடமும் காடெல்லாம் வெட்டித் துப்பரவு பண்ணித் தயாரா இரிக்கு. முதல் பருவ மழ கண்டதும் பயிர் நாட்டத் துடங்குவாங்க” என்றான்.
“அதுக்கு நாங்கள் என்ன செய்யவேணும் தம்பி” என்றார் வேல்முருகு மாஸ்ரர்.
டாக்டர் முருகேசபிள்ளை தனது உதட்டோரத்தில் பற்றவைத்த யாழ்ப்பாணச் சுருட்டைக் கவ்விச் சுவைத்தபடி புகைவிட்டுக் கொண்டு அமைதியாக இவர்கள் சம்பாஷிப்பதைக் கேட்டுக்கொண்டிருந்தார்.
“சுமார் முப்பது குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ஒவ்வொரு மண்வெட்டி – கோடாரி – நீளமான காடுவெட்டும் கத்தி – பெரிய வாளி – சின்ன வாளி – குப்பைவாரி – தண்ணீர் சேமித்துவைக்க குடம் – அரிக்கன் லாம்பு – டோர்ச் லைட் ஆகிய உபகரணங்களும் – நிதி வசதியிருந்தால் சமையல் பாத்திரங்களும் மற்றும் நாட்டுவதற்கு விதைப்பருப்புகளும் தேவை” என்றான் கோகுலன்.
“என்னென்ன விதைப்பருப்புகள் தேவை ஜ சே!” என்றார் யோகம் வேலுப்பிள்ளை.
“சோளம் – கச்சான் – மற்ற உப உணவுப் பயிர்ப்பருப்புகள் என்று சேனையில் பயிரிடக்கூடிய பயிர்வகைகள் எதுவென்றாலும் சரி சேர்” என்றான் கோகுலன்.
ஒரு ‘நோட்’ புத்தகத்தில் என்னென்ன தேவை என்பதைக் குறித்துக் கொள்ளும்படி வேல்முருகு மாஸ்ரரிடம் டாக்டர் முருகேசபிள்ளை கூறினார்.
“இல்ல நானே எழுதித்தாறன்” என்று சொன்ன கோகுலன் வெள்ளைத் தாளொன்றில் தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் எழுதிக்கொடுத்தான்.
நன்றி கூறிவிட்டு மூவரும் கல்முனை நோக்கிப் புறப்பட்டனர். புறப்படும்போது டாக்டர் முருகேசபிள்ளை “ஒரு கிழமைக்குள்ள சாமான்கள் எல்லாம் வந்து சேரும் தம்பி” என்றார் கோகுலனைப் பார்த்து.
டாக்டர் முருகேசப்பிள்ளை கூறிச்சென்றபடியே ஒரு கிழமைக்குள் கோகுலன் எழுதிக் கொடுத்த எல்லாச் சாமான்களும் ஒரு சிறிய ‘லாரி’யில் கோமாரிக்கு வந்து சேர்ந்தன.
தஞ்சை நகர் அகதிகள் வந்து தஞ்சமடைந்த சங்கமன்கண்டி நிலத்தில் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காற்று காவி வந்த முதல்பருவ மழை பொழிந்து பூமியிலிருந்து புழுதி மணம் எழுந்து புதுமணம் வீசியது.
அடுத்தநாளே பயிர் விதைகள் நிலத்திலே ஊன்றப்பட்டன. ஒருவாரம் கழிந்திருக்கும். ஊன்றப்பட்ட விதைகள் முளைதள்ளி இலைகள் விட்டு பசுமையின் வரவுக்குக் கட்டியம் கூறின.
குடும்பத்திலுள்ள பெண்கள் தங்கள் பெரும்பாலான நேரத்தைப் பகலில் சேனைப் பயிர்ச்செய்கையில் கழிக்க ஆண்கள் வெளியே கூலித்தொழில்களுக்குப் போய்வந்து கொண்டிருந்தார்கள். அகதிகளாக வந்திறங்கியபோது எதிர்காலம் குறித்து கவலை அப்பியிருந்த அவர்களது முகங்களில் நம்பிக்கை துளிர்விடத் தொடங்கியது. கோகுலனும் அவன் கீழ் பணியாற்றிய வேலைகள் மேற்பார்வையாளர்களான இலட்சுமணன் – யேசுரட்ணம் – பிராங்ளின் ஆகியோர் அடிக்கடி அவர்களிடம் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறியும் நம்பிக்கையூட்டியும் அவர்களது தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்தும் எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களுடன் அன்பாகவும் நடந்து கொண்டார்கள்.
தஞ்சை நகர் இடம்பெயர்ந்து சங்கமன்கண்டியில் வந்து தங்கிவிட்டது எனும் பொருள்படத் தமக்குள் அவர்கள் பேசிக்கொண்டது கோகுலனின் காதிலும் அவ்வப்போது விழுந்தது. கோகுலன் ஆத்ம திருப்பியடைந்தான்.
++++++
காலக்குதிரையிலே அமர்ந்து 1977 ஆம் ஆண்டில் சஞ்சரித்த கோகுலன் சற்று நனவுலகுக்கு மீண்டு சுவரிலிலே மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தைப் பார்த்தான். பின்னேரம் 4.00 மணியாகி விட்டிருந்தது.
1977 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இனக்கலவரத்தை எண்ணியபோது அக்கலவரம் குறித்த விசாரணையை மேற்கொள்ள அப்போதைய ஜே.ஆர். ஜயவர்த்தனா அரசாங்கம் ‘சன்சோனி ஆணைக்குழு’ நியமித்ததையும் – ஈரோஸ் இயக்கத்தைச் சேர்ந்த ‘அருளர்’ என அழைக்கப்பெற்ற அருட்பிரகாசம் எழுதி இலங்கை அரசினால் தடைசெய்யப்பட்ட ‘லங்காராணி’ என்ற நாவலையும் – தமிழ்நாட்டில் உலகத்தமிழர் இளைஞர் பேரவைத் தலைவரான ஜனார்த்தன் எழுதி இயக்கிச் சென்னையில் மேடையேற்றிய ‘மீண்டும் இலங்கை எரிகிறது’ எனும் நாடகத்தையும் அதே தலைப்பிலான நூலையும் தன் எண்ணத்தில் கொணர்ந்தான் கோகுலன். அத்துடன் மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்கள் எழுதிப் பாகம் பாகமாக வெளியிட்ட ‘ஆவணி அமளி’ எனும் நூலும் அவன் எண்ணத்தில் எழுந்தது.
‘சன்சோனி ஆணைக்குழு’ அறிக்கையும், அருளரின் ‘லங்காராணி’ நாவலும், ஜனார்த்தனனின் ‘மீண்டும் இலங்கை எரிகிறது’ நூலும், மறவன்புலவு சச்சிதானந்தனின் ‘ஆவணி அமளி’ நூலும் 1977 ஆம் ஆண்டு இனக்கலவரம் குறித்த பதிவுகளைத் தேடுபவர்களுக்கு அரிய பல தகவல்களை வழங்கக்கூடிய ஆவணங்களாகும் எனவும் கோகுலன் எண்ணிக் கொண்டான்.
மனைவி கொணர்ந்து நீட்டிய தேனீர்க்கோப்பையை வாங்கிப் பருகிய கோகுலனின் மனக்குரங்கு மீண்டும் பழைய நினைவுகளுக்குத் தாவியது.
.++++.
(தொடரும் …… அங்கம் – 42)