இலங்கையில் நிகழ வேண்டியது

இலங்கையில் நிகழ வேண்டியது

— கருணாகரன் —

அரசியலில் பிரதானமாக இரண்டு வகை உண்டு. ஒன்று, சமூக மீட்புக்கான அரசியல். இதனை மக்கள் நலன் அரசியல் என்பர். மக்களுடைய நலனுக்காகத் தம்மையும் தமது கட்சி அல்லது இயக்கத்தையும் அர்ப்பணித்துச் செயற்படுவது. இதில் மக்களும் அவர்களுடைய நலன்களும் தேவைகளுமே முதன்மைப்பட்டிருக்கும். இதனுடைய உச்சமாக மக்களுக்கெனத்  தம்மையும் தம்முடைய உயிரையும் அர்ப்பணித்துச் செயற்படுவதாகவே விடுதலைப்போராட்ட அரசியல் இருந்தது.

இந்த அரசியல் தோற்றுப் பின்னடைந்தாலும் மக்கள் இந்த அரசியலை முன்னெடுத்தோரை மறப்பதில்லை. தங்களுடைய மனதில் அதற்கான – அவர்களுக்கான இடத்தைக் கொண்டிருப்பர்.

இரண்டாவது, தங்களுடைய நலன்களுக்காக மக்களை முன்னிறுத்திச் செய்யப்படும் அரசியல். இதையே இப்பொழுது பெரும்பாலான கட்சிகளும் தலைமைகளும் செய்து கொண்டிருக்கின்றன. மக்களுக்காகத் தியாகம் செய்வதற்கும் மக்களுக்காகச் செயற்படுவதற்கும் பதிலாக மக்கள் தமக்காகத் தியாகம் செய்ய வேண்டும், தங்களுடைய நிலைப்பாடுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கருதிச் செயற்படுவது.

இதனால் கட்சிகளும் தலைமைகளும் வளர்ந்து கொண்டும் வாழ்ந்து கொண்டும் இருக்கும் நிலை தொடருமே தவிர, மக்களும் – சமூகமும் வளர்ச்சியடைவதில்லை. பதிலாக மக்களின் (சமூகத்தின்) நிலை மேலும் மேலும் மோசமடையும்.

முதலாவதில் மக்களின் மீதான அதிகாரம் செலுத்தும் போக்குக் குறைவாக உள்ளது. இரண்டாவதில் மக்களின் மீது அதிகாரம் செலுத்தும் போக்கு தூக்கலாகக் காணப்படுகிறது. அதாவது, தாம் தீர்மானிப்பதை, தாம் விரும்புவதை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாடிருக்கும்.

இத்தகைய அதிகாரப் போக்கும் மக்கள் நலனை விட்டுக் கட்சி நலன், தமது நலன் எனச்  செயற்படும் தன்மையும் ஒரு கட்டத்தில் மக்களின் மனதில் வெறுப்பை ஏற்படுத்துவதுண்டு. இதுவே இப்போதைய நிலையாகும்.

தற்போதுள்ள தமிழ் அரசியற் சக்திகளிலும் தலைமைகளிலும் நம்பிக்கையிழந்து அவற்றை ஒதுக்குவதற்கு மக்கள் வந்திருப்பது மேற்படி காரணங்களினாலேயே. தமிழர்களிடத்தில் மட்டுமல்ல, இலங்கைத் தீவிலுள்ள அனைத்துச் சமூகங்களிடத்திலும் இந்த நிலையே ஏற்பட்டுள்ளது. இதனால்தான் அரகலய எழுச்சி அந்தளவுக்கு வெற்றியைக் கொடுத்தது. ஆட்சியாளர்களின் மீது மக்கள் வெறுப்படைந்ததன் அடையாளமே அது.

காரணம், மக்களுக்கு அப்பாலான, மக்கள் விரோத அரசியலை இந்தத் தரப்புகள் செய்ய முற்பட்டதேயாகும். இதனால் இலங்கைச் சமூகங்கள் அத்தனையும் இன்று நெருக்கடிகளைச் சந்தித்துள்ளன. இந்த நெருக்கடிகள் இரண்டு வகையானவை. ஒன்று தனித்தனியான நெருக்கடி. மற்றது கூட்டு நெருக்கடி.

இன நெருக்கடி, இன ஒடுக்குமுறை போன்றவற்றைத் தனித்தனியாகவும் பொருளாதார நெருக்கடி, அந்திய ஆக்கிரமிப்புப் போன்றவற்றை கூட்டாகவும் சந்தித்து நிற்கின்றன.

இதைச் சுருக்கிச் சொல்வதானால், கடந்த 75 ஆண்டுகளிலும் தலைமைகளும் அவற்றின் தரப்புகளும் (கட்சிகளும்) வெற்றியடைந்திருக்கின்றனவே தவிர, மக்கள் வெற்றியடையவில்லை. ஒரு உதாரணத்துக்குத் தமிழரின் அரசியலை நோக்கலாம். தமிழ் மக்கள் எப்போதும் – எத்தகைய இடரின்போதும் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டுக்கு ஆதரவாகவே நின்றுள்ளனர். அது யுத்த காலமாயினும் சரி, யுத்தத்துக்கு முந்திய காலத்திலும்சரி, யுத்தத்திற்குப் பிந்திய சூழலிலும் சரி தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுத்த தலைமைகளையும் தரப்புகளையுமே (கட்சிகளையும் இயக்கங்களையும்) ஆதரித்துள்ளனர். அவற்றையே வெற்றியடைய வைத்துள்ளனர்.

இப்படியெல்லாம் ஓர்மமாக நின்ற மக்களுக்கு இந்தத் தலைமைகளால்  விளைந்த நன்மைகள் என்ன? மக்களுடைய எந்தப் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட்டன? பதிலாக மேலும் மேலும் பலநூறு பிரச்சினைகள் பெருகியே உள்ளன. இப்பொழுது மாடு மேய்ப்பதற்கான மேய்ச்சற்தரைகளுக்குக் கூடப் பிரச்சினை என்ற அளவுக்கு நிலைமை வந்துள்ளது.

இதைத் திசை திருப்பும் விதமாக அவை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமாக அரச எதிர்ப்பையும் இனவெறுப்பையும் முன்னிறுத்துகின்றன. அரச எதிர்ப்பை அர்த்தபூர்வமாகச் செய்தால், அரசினால் வாலாட்ட முடியுமா? அதற்குத் தம்மை அர்ப்பணித்துக் களத்தில் இறங்கிச் செயற்பட வேண்டும். போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இதற்கு எந்தத் தரப்பும் எந்தத் தலைமையும் தயாரில்லை. இதனால் அரச எதிர்ப்பை முன்னிறுத்தித் தம்முடைய அரசியல் வரட்சியையும் பலவீனத்தையும் மறைத்துக் கொள்ள முற்படுகின்றன.

இதிற் கூட கள்ளத்தனமும் மோசடிகளும் உண்டு. பிறரைக் குற்றம்சாட்டி தாம் தப்பித்துக் கொள்வதற்காக உள் முரண்பாடுகளைக் காரணம் காட்டி, அவற்றைப் பெருப்பித்து ஒவ்வொரு அணியும் தம்மைச் சுத்தப்படுத்திக் கொள்ள முன்னிற்கின்றன. இதன் விளைவே தமிழ்த்தேசியத் தரப்புகள் இன்று பல துண்டுகளாக – அணிகளாக உடைந்து தனித்தனியாக நிற்பதாகும். அப்படியென்றால், எந்த அணி உண்மையில் தூய்மையானது – சரியானது – வீரியமானது – மக்களுக்கான விடுதலையைப் பெற்றுக் கொடுக்கக் கூடியது? என்ற கேள்வி எழுகிறது அல்லவா!

இதேநிலைதான் சிங்களத் தரப்பிலும் முஸ்லிம்களிடத்திலும் உண்டு. ஐ.தே.க – சிறிலங்கா சுதந்திரக் கட்சி என இரண்டு பெருந்தரப்புகளாக இருந்த சிங்களக் கட்சிகள் இன்று உடைந்து பல அணிகளாகப் பெருகியுள்ளன. ஐ.தே.க உடைந்து, ஐக்கிய மக்கள் சக்தி (சஜித் பிரேமதாச தரப்பு), ஐ.தே.க என இரண்டு பிரிவுகளாக உள்ளது. இதை விட சிறு சிறு குழுக்களும் அணிகளும் தனித்தனியாக உள்ளன.

மறுவளத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உடைந்து பொது ஜனபெரமுன (ராஜபக்ஸவினரின் தரப்பு) – சிறிலங்கா சுதந்திரக் கட்சி என மாறியிருக்கிறது. இந்த இரண்டு தரப்புகளிலிருந்து வெளியேறி வேறு சில அணிகளும் குழுக்களுமாக தனித்தனியாக உள்ளன.

இப்படிச் சிதறுண்டிருக்கும் அனைத்துத் தரப்பும் ஒரே விதமாகவே உள்ளன. இவற்றுக்கிடையில் எந்தப் பெரிய வித்தியாசங்களையும் காண முடியாது. ஆனால், ஒன்றையொன்று குற்றம்சாட்டிக் கொள்கிறது. மற்றவர்களை விடத் தாம் சுத்தவாளிகள் என்றே ஒவ்வொரு தரப்பும் சொல்லிக் கொள்கின்றன.

மலையகக் கட்சிகளிடத்திலும் முஸ்லிம் கட்சிகளிலும் இதுதான் நிலைமை. இன்னும் ஆயிரத்தி எழுநூறு ரூபாய் சம்பளத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முடியாத நிலையில்தான் மலையகக் கட்சிகள் இருக்கின்றன. அங்கே பல தலைமுறைகளாக வாழ்கின்ற மக்களுக்கு ஒரு துண்டு நிலத்தைப் பெற முடியாமல்தான் அத்தனை கட்சிகளும் பிரகடனங்களைச் செய்கின்றன. அவ்வறே, முஸ்லிம்களின் பதட்டத்தைத் தணிக்குக் கூடிய அளவுக்கு ஒரு முஸ்லிம் கட்சியும் இன்றில்லை.

ஆக மொத்தத்தில் தமிழ், சிங்கள, மலையக, முஸ்லிம் கட்சிகளும் தலைமைகளும் மக்களைத் தோற்கடித்தே தம்மை வளர்த்திருக்கின்றன – நிலை நிறுத்தியுள்ளன. மக்களை எந்த நிலையிலும் இவை மீட்கவோ மேலுயர்த்தவோ இல்லை. இதனால் மக்கள் தொடர்ந்தும் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். அதுவும் அந்தந்தச் சமூகத்தின் தலைமைகளால்.

மக்கள்  வெற்றியடைந்திருந்தால் நாடு வளர்ச்சியடைந்திருக்கும். மக்களின் வெற்றியே நாட்டின் வெற்றியாக அமைவதாகும். உலகம் முழுவதும் வரலாறு முழுவதும் நிகழும் உண்மை இது.

இலங்கையில் மக்களைத் தோற்கடிக்கும் அரசியற் கலாச்சாரம் வளர்ச்சியடைந்ததால் நாடு தோற்றுப்போய் பின்னடைந்திருக்கிறது. இன்று நாட்டை மீட்பதற்காக உலகின் கால்களில் கடன் கேட்டு மண்டியிடுகிறார்கள்.  இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு சீனா, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசுகள் நாட்டின் வளங்களையும் நிலத்தையும் ஆக்கிரமித்து, அபகரிக்க முற்படுகின்றன. இது பேரபாய நிலையாகும்.

இந்தச் சந்தர்ப்பத்திற்தான் நாட்டின் மீதும் மக்களின் மீதும் பற்றுள்ளோர் தீவிரமாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டியது அவசியமாகிறது. இதில் நாட்டிலுள்ளோரும் நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்தோரும் பங்களிக்க வேண்டும். படித்தோரும் வசதியுள்ளோரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.

முதலில் மக்கள் விரோதச் சிந்தனையுடைய அரசியலாளர்களிடம் கேள்வி எழுப்ப வேண்டும். அவர்கள் மாற்றத்துக்குள்ளாகக் கூடிய அளவுக்கு நெருக்கடிகளையும் நிர்ப்பந்தங்களையும் கொடுக்கலாம். அப்படிச் செய்யும்போது அவர்கள் மாற்றத்துக்குள்ளாக நல்ல வழிக்கு வருவர். அல்லது மக்கள் நலனை முன்னிறுத்திச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் தரப்புகளை அடையாளம் கண்டு அவற்றை முன்னுக்குக் கொண்டு வர வேண்டும். அவை சிறிய தரப்புகளாக இருக்கலாம். மக்களின் ஆதரவு அவற்றுக்குக் கிடைக்குமானால் அவை பெருச் சக்திகளாக உருவெடுக்கும். அப்படி நிகழும்போது ஒரு மாற்று அரசியற் கலாசாரமும் மாற்றுச் சூழலும் உருவாகும்.

உதாரணமாக, அடுத்து வரவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைவதற்காக சஜித், ரணில், அநுர என ஒவ்வொரு தரப்பும் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒத்துழைப்பதாகச் சொல்கின்றன. இதற்குக் காரணம், இந்தத் தடவை வழமைக்கு மாறாக மும்முனைப்போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாகும். அப்படியான ஒரு நிர்ப்பந்தம் வரும்போது தவிர்க்க முடியாமல் தீர்வைப் பற்றிப் பேசுவதற்காகக் படியிறங்கி வருகிறார்கள். இதை வாய்ப்பாக எடுத்து, உடனடியாகவே – தேர்தலுக்கு முன்பே அதிகாரப்பகிர்வுக்கு முயற்சிக்க வேண்டும். அதற்கான நிர்ப்பந்தத்தை அளிக்க வேண்டும். அப்படிச் செய்தால் தவிர்க்க முடியாமல் ஏதோ ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலை இந்தத் தரப்புகளுக்கு ஏற்படும்.

இதைப்போல நாட்டின்  பொருளாதார மேம்பாட்டை எட்டுவதற்கான செயற்றிட்டங்களை முன்வையுங்கள் என போட்டியாளர்களிடத்திலும் ஆட்சியாளர்களிடத்திலும் மக்கள் கேட்க வேண்டும். மக்கள் சார்பாக ஊடகங்களும் மக்கள் அமைப்புகளும் மதத்  தலைவர்களும் புத்திஜீவிகளும் கேள்வி எழுப்ப வேண்டும். ஏறக்குறைய அரவலயவைப்போல எழுச்சிகரமான ஒரு நிர்ப்பந்தக் கட்டமைப்பே இலங்கையில் மாற்றங்களை நிகழ்த்த வல்லது.

அத்தகைய எழுச்சியை அது கொண்டிராது விட்டாலும் அத்தகைய அறிவும் உணர்திறனும் கொண்ட மக்கள் கட்டமைப்பு கிராமங்கள், பிரதேசங்கள் தோறும் உருவாகினால் – உருவாக்கப்பட்டால் நிச்சயமாக மாற்றத்துக்கான அரசியல் நிகழும். அல்லது அரசியல் மாற்றம் நிச்சயமாக நிகழும்.

இப்படித்தான் மாற்றங்களை நிகழ்த்துவதற்கு உழைக்க வேண்டியுள்ளது.

விடுதலையைக் காண வேண்டுமானால் அதற்காக நாம் கடுமையாகப் போராட வேண்டும். மாற்றங்களை நிகழ்த்த வேண்டுமானால் அதற்காகக் கடுமையாக உழைக்க வேண்டும். இதையே எதிர்பார்த்து நிற்கிறது இலங்கை.