— அழகு குணசீலன் —
சண்டை!
***********
இரா.சம்பந்தர் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மட்டும் அல்ல தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கும், பாராளுமன்ற குழுவுக்கும் தலைவராக இருந்தவர். இதனால் அவரது மரணம் பதவி அரசியலில் ஒரே கல்லில் மூன்று மாங்காய்களை வீழ்த்தியிருக்கிறது. இதில் ஒன்றை ‘வெம்பல் ‘ என்று விட்டாலும், மற்றைய இரண்டையும் விடமுடியாது. அதில் ஒன்று திருகோணமலை எம்.பி.பதவி. இதில் முடிவெடுப்பவர் தேர்தல் ஆணையாளர். அதையும் விட்டால் இருக்கிற இறுதி மாங்காய் முருகனுக்கா? பிள்ளையாருக்கா? இதற்குத்தான் சண்டை.
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தேர்தல் சட்டத்தின் படி சம்பந்தருக்கு அடுத்து அதிக வாக்குகளை பெற்ற வேட்பாளர் குகதாசன் தேர்தல் ஆணையாளரால் நியமிக்கப்படுபவார். இதில் சட்டம் சண்டைக்கு இடமளிக்காது. கோடேறி கொம்பு முறிக்க வேண்டிய தேவையும் இல்லை.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற கூட்டு ரெலோ, புளட் வெளியேற்றத்துடன் இல்லாமல் போய் விட்டது. இரா.சம்பந்தர் சாகும்வரை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவராக அப்பதவிப் பெயரால் அழைக்கப்பட்டாலும் அது இல்லாத ஒன்றுக்கான பதவி. ஐயா அதை உயிருடன் இருக்கும் போதே உத்தியோகபூர்வமாக – கௌரவமாக துறந்திருக்கவேண்டும். அதை அவர் செய்யவில்லை. எம்.பி.பதவியைத்துறக்க சொன்னவர்கள் கூட இதைத்துறக்கச் சொல்லவில்லை. இதுதான் ‘வெம்பல் ‘ மாங்காய்.
அடுத்த மாங்காய் பாராளுமன்ற குழுத்தலைவர் பதவி. இதற்கே ‘அடிபிடி’ நடக்கிறது.
ஈழநாடு (07.07.2024) ஆசிரியர் தலையங்கத்தின்படி : சம்பந்தனின் மறைவைத் தொடர்ந்து திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படவுள்ள குகதாசனை கூட்டமைப்பின் தலைவராக நியமிக்கப்போவதாக குறிப்பிட்டிருக்கிறாராம் மாவை சேனாதிராஜா. மாவை தமிழரசுக்கட்சியின் தலைவர் தெரிவில் இடம்பெற்ற அரசியல் விபத்தினால் இன்னும் தலைவராகத் தொடர்பவர்.
இங்கு இரு கேள்விகள் எழுகின்றன. ஒன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்று ஒன்று உள்ளதா? இல்லை, என்றால் இல்லாததற்கு ஏன், எதற்கு தலைவர்? ஆம் , என்றால் அதை எப்படி மாவையர் தெரிவு செய்யமுடியும்?. கூட்டமைப்பிலுள்ள மற்றைய கட்சிகளும் இணைந்து அல்லவா தெரிவு செய்யவேண்டும். அல்லது தமிழரசுக்கட்சிதான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற நிலைப்பாட்டில் மாவை இருக்கிறாரா?
சட்டரீதியாக பாராளுமன்ற தெரிவுக்குழு தமிழரசுக்கட்சிக்கு உரியதேயன்றி தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு உரியதல்ல. ஏனெனில் தமிழரசுக்கட்சியின் வீட்டு சின்னத்தில் வெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான குழுவே அது. இதற்கு தமிழரசுக்கட்சி/ தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சார்பில் சம்பந்தனே இறக்கும் வரை தலைவராக இருந்தார்? முடிவுகளில் சுமந்திரனின் செல்வாக்கு இருந்தது பரம ரகசியம்.
இந்த நிலையில் ஈழநாடு மாவை சேனாதிராஜாவின் முதுமையை, அமெரிக்க பைடனின் முதுமையுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளது. மாவை சேனாதிராஜா இங்கு பாராளுமன்ற குழுத்தலைவர் என்பதையே வயதுக்கோளாறினால் கூட்டமைப்பு தலைவர் என்று குறிப்பிட்டிருக்கிறார் என்று ஈழநாடு எண்ணுகிறது. இதனால்தான் தமிழரசுகட்சிக்கு ஒரு ஆலோசனையையும் அது பதிவிட்டுள்ளது.
ஆலோசனை இதுதான்: “குகதாசன் அரசியலில் பாலர். அப்படி என்றால் அதற்கு பொருத்தமான, 1989 முதல் நீண்ட கால பாராளுமன்ற அனுபவம் கொண்டவர் மட்டக்களப்பு எம்.பி.ஜனா – கோவிந்தன் கருணாகரன் என்பது ஈழநாட்டின் முன்மொழிவு. குகதாசனா? ஜனாவா? என்பதல்ல பிரச்சினை. மாவையும்,ஈழநாடும் அவசரப்பட்டு சவம் எடுக்கும் முன்னர் ஏன் சவப்பெட்டி அரசியல் செய்கிறார்கள் என்பதும், அதற்கு பின்னால் ஒழிந்துள்ள அரசியல் என்ன? என்பதும் தான் இன்றைய கேள்வி.
இந்த செய்தியை படிப்பவர்களுக்கு கிழக்கு மாகாணத்தில் கொண்ட அக்கறையினால் இதைச் செய்கிறார்கள் என்று எண்ணத்தோன்றும். ஏனெனில் குகதாசனோ (திருகோணமலை), ஜனாவோ ( மட்டக்களப்பு) கிழக்கு மாகாணத்தவர்கள் என்று நினைக்க இடமுண்டு. அதுவல்ல விடயம். சுமந்திரன் பாராளுமன்ற குழுத்தலைவர் ஆகிவிடக்கூடாது என்பதற்காகவே இவர்கள் ஆடறுக்கும் முன் ‘அதை’ அறுக்கிறார்கள்.
உண்மையில் தமிழரசுக்கட்சியின் தலைவராக மாவை சேனாதிராஜா ஆலோசனை சொல்லலாமேயன்றி முடிவு செய்யமுடியாது. அதே நிலைதான் கட்சித்தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் தருமலிங்கம் ஆகியோரின் நிலையும். மீண்டும் சேர்ந்து இயங்க விரும்பினாலும் ஆலோசனையோடு மட்டும் நின்று விடும்.
தமிழரசுக்கட்சியின் ( வீட்டு சின்னம்) 10 எம்.பி.க்களுமே முடிவு எடுக்க வேண்டியவர்கள். ரெலோ, புளட்டோடு முரண்பாடுகள் வரும்போது சுமந்திரன், சாணக்கியன் எம்.பிக்கள் கூறுகின்ற ஒருவிடயம் “நாங்கள் தான் பெரும்பான்மை”. ஆக ஜதார்த்தமாக நோக்கினால் அடுத்த பாராளுமன்ற குழுத்தலைவர் மதியாபரணம் சுமந்திரன் என்பது பெரும்பாலும் உறுதியாகிறது இல்லையா?
இதை தமிழ் பொதுவேட்பாளர் விடயத்தில் எதிர் நிலைப்பாட்டை கொண்டுள்ள சுமந்திரனுக்கு அடிக்க குகதாசன், ஜனா என்ற பொல்லுகளை பயன்படுத்த முனைகிறார்கள் மாவையும், ஈழநாடும். அவர்களுக்கு சண்டைக்கு ஆள்தேவை அதை கிழக்கில் தேடுவதுதானே வரலாறு. தமிழரசுக்கட்சி தலைவர், செயலாளர் பதவிகளுக்கு போட்டியிட்ட மட்டக்களப்பு முன்னாள் பா.உ.க்கள் யோகேஸ்வரன், சிறி நேசன் ஆகியோருக்கு ஏற்பட்ட நிலை யாருக்கு தெரியாது.?
சஜீத் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டில் இருந்து விலகி நின்கின்ற சரத்பொன்சேகாவுக்கு சஜீத் அணி பாராளுமன்றத்தில் பேசுவதற்கு கூட நேரம் ஒதுக்குகிறார்கள் இல்லை. இந்த நிலையில் நிரந்தரமாக (?) பிரிந்து , புதிய கூட்டணி அமைத்து, பொது வேட்பாளரை ஆதரித்து, தனித்து இயங்குகின்ற ரெலோவுக்கு அல்லது புளட்டுக்கு பாராளுமன்ற குழுத்தலைவர் வழங்கப்படவேண்டும் என்ற யோசனை தெருத்தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் யோசனை.
பாராளுமன்ற குழுத்தலைவர் பதவி என்பது பாராளுமன்ற விவகாரங்களில் பொறுப்பு வாய்ந்தது. ஒரு பக்கத்தில் சபாநாயகர் அலுவலகம், சக பாராளுமன்ற குழுத்தலைமைகள், எதிர்க்கட்சி, ஆளும்கட்சி என்பனவற்றுடன் தொடர்புகளை பேணவேண்டியது. மறுபக்கத்தில் பாராளுமன்ற செயலாளர் அலுவலகத்துடன் தொடர்புகளை பேணவேண்டியது. விவாதங்களுக்கான நேர ஒதுக்கீடு, உறுப்பினர்களுக்கு கட்சிக்குள் அவர்களின் துறை சார்ந்து பகிர்ந்து அளிக்கப்படவேண்டிய பொறுப்பை கொண்டது. விவாதக் குறுக்கீடுகளின்போது சக உறுப்பினருக்காக பேசவேண்டிய தேவை கொண்டது. குறிப்பிட்ட சட்டமூலங்களை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? நடுநிலையா? வெளிநடப்பா? என தீர்மானிக்க வேண்டிய பொறுப்பை கொண்டது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் கட்சியின் நிலைப்பாடு குறித்து தெளிவான அறிக்கையிடவேண்டிய கடப்பாட்டை கொண்டது. வெளிநாட்டு இராஜதந்திரிகளோடான உறவைக்கொண்டது.
இவற்றை இரா.சம்பந்தன் தனது கடந்த பாராளுமன்ற காலத்தில் சரியாகச் செய்யவில்லை என்ற விமர்சனம் அவர் மீது உள்ளது. இதனால்தான் சுமந்திரன் சம்பந்தரின் ‘கோளையாவாக ‘ செயற்பட நேரிட்டது. கிடைத்துள்ள வாய்ப்பை பயன்படுத்தி விமர்சனங்களுக்கு பரிகாரம் தேடாமல், சுமந்திரன் கடும்போக்கு தமிழ்த்தேசிய வாதத்திற்கு எதிரானவர் என்பதால், புலிகளை விமர்சனம் செய்பவர் என்பதால், கொழும்போடு உறவுகளைக்கொண்டவர் என்பதால் அவருக்கு அந்த பதவி கிடைப்பதை குழப்ப முயற்சி செய்வது சரியானதா? இதன்மூலம் பொதுவேட்பாளர் ஆதரவு அணி அடையவிரும்பும் தமிழ்த்தேசிய இலக்கு என்ன? இது கட்சித்தலைவர் பதவி அல்ல. பாராளுமன்ற குழுத்தலைவர் பதவி. இன்னும் சொன்னால் 6வது திருத்தம், பயங்கரவாதத்தடைச்சட்டம், ஒன்றுபட்ட இலங்கையின் இறையாமை என்பனவற்றை ஏற்றுக்கொண்டு சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட பதவி.
தமிழ்த்தேசிய அரசியலில் காய்கள் எப்படி நகர்த்தப்பட்டாலும் விரும்பியோ-விரும்பாமலோ , சரியோ – பிழையோ, தமிழ்த்தேசிய இணக்க அரசியலை கொழும்போடு இணைந்து முன்னெடுக்க , சுமந்திரன் மீதான சகல விமர்சனங்களுக்கும் அப்பால் இன்றைய அரசியலில் சுமந்திரனே தேவைப்படுகிறார். அதில் ஒன்றுதான் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற குழுத்தலைவர் பதவி.
இன்றைய நிலையில் இந்த பதவியை ‘சுத்துமாத்துக்களோடு’ என்றாலும் ஓரளவுக்காவது செயற்பாட்டு அரசியலாக செய்யக்கூடிய எவரும் தமிழரசு எம்.பி.க்களில் இல்லை. வயதும், பாராளுமன்றத்தில் இருந்த காலமும் இதை தீர்மானிக்க முடியாது. அப்படியானால் சம்பந்தர் இதுவரை பாராளுமன்ற குழுத்தலைவராக சாதித்தவை எவை? இந்த பாரம்பரியம் தமிழ்த்தேசிய அரசியலின் சாபக்கேடு. இன்னும் சத்தியப்பிரமாணமே செய்யாத குகதாசனுக்கு இயலுமானால் சுமந்திரனுக்கு ஏன் இயலாது என்று கேட்பது நியாயம் தானே?
தமிழரசுக்கட்சியின் தலைவர்பதவி தொடர்பாக சிறிதரனுக்கும்,சுமந்திரனுக்கும் இடையே ஒரு இணக்கம் ஏற்பட்டு, பதவிகளை இருவரும் பங்கு போடுகின்ற நிலை வந்தாலும் கூட உண்மையில் இருபதவிகளிலும் தீர்மானம் எடுக்கின்ற, ஆளுமை மிக்க ஒருவராக சுமந்திரனே செயற்படவேண்டியிருக்கும். சிறிதரன் ‘இறப்பர் முத்திரை’ மட்டுமே.
இனியாவது பாராளுமன்றத்தில் நாயும், பூனையும், புலியும் மற்றும் இராமனும், இராவணனும், ஏன்? தேவாரமும், திருப்புகழும் பேசுபொருளாகவும், பல்லவர் கால பாடல்களாக ஒலிக்கின்ற அரசியலுக்கு மாற்று வடிவம் கொடுக்கப்படவேண்டும். இனிவரும் காலங்களில் தமிழரசு -தமிழ்த்தேசியம் இதை செய்யவில்லை என்றால்…
மெல்லத்தமிழரசு இனி…. என்று அவர்களே பாடவேண்டி வரும்…!