— அழகு குணசீலன் —
இதுவரை நாம் அறிந்து கொண்ட பல்வேறு ஆதாரங்களில் இருந்தும் சம்மாந்துறை – வீரமுனை வரலாற்றை ஓரளவுக்காவது புரிந்து கொள்ள முடிகிறது. மகாவம்சம் கூட கூத்திகன், சேனன் இருவரையும் சேரநாட்டு தளபதிகளாக அடையாளப்படுத்துகிறது. மட்டக்களப்பு மான்மியத்தில் இவர்கள் வங்க குலத்தவர் என அழைக்கப்படுகின்றனர். சேரநாட்டவர்களை வங்ககுலத்தவர் என அழைப்பது வழக்கமாக கொள்ளப்படுகிறது.
சேனன் அனுராதபுரத்தில் ஆட்சியமைக்க கூத்திகன் மட்டக்களப்புக்கு வருகிறான் என்றும் இவனே இன்றைய சம்மாந்துறை சிற்றரசை ஆட்சி செய்தவன் என்பதையும் பல்வேறு மட்டக்களப்பு வரலாற்று ஆய்வுகளும் உறுதி செய்கின்றன. இன்றைய சம்மாந்துறை தான் அன்றைய மட்டக்களப்பு.
மட்டக்களப்பு வாவியின் தென்’முனை’யில் மட்டக்களப்பு அரசின் பாதுகாப்பு காவலரண் அமைக்கப்பட்டு இதில் படைவீரர்கள் கடமையில் அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். இதன்காரணமாக வீரர்முனை என்ற பெயரைப்பெற்றதே இன்றைய வீரமுனை என்ற முடிவுக்கு வர முடிகிறது.
கலிங்க இளவரசி உலகநாச்சி, சீர்பாத இளவரசி சீர்பாததேவி, பட்டாணியர் எல்லோரும் வந்த வள்ளங்கள் ‘சம்மான்’ என்று அழைக்கப்பட்டிருக்கின்றன எனக்கொள்ளமுடியும். வாவியின் தென்முனை முடிவில் (துறை) வள்ளங்கள் தொடர்ந்து பயணிக்க முடியாது கரைதட்டியதால் ‘சம்மான்’ வள்ளங்கள் கரைதட்டியதுறை சம்மான் துறையாயிற்று.
மறுபக்கத்தில் போர்த்துக்கேயரால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் கண்டிஇராட்சியத்தில் அடைக்கலம் புகுந்தபோது மன்னன் சேனரதன் ஆயிரக்கணக்கான முஸ்லீம்களை கி.பி. 1626 இல் தனக்கு மிக நெருக்கமான முற்குக வன்னியர்களின் துணைகொண்டு மட்டக்களப்பில் குடியேற்ற வழிவகுத்தான்.
இது போர்த்துக்கேயர் காலமாக இருந்தபோதும் மதமாற்றம் தொடர்பான மட்டக்களப்பு முற்குக வன்னியர்கள் கடும் எதிர்ப்பைக்காட்டி பலமாக இருந்திருக்கிறார்கள். முஸ்லீம்களின் வெளியேற்றமும் மதமாற்றத்தை அவர்கள் எதிர்த்ததின் ஒரு விளைவு என்பதால் இருசமூகங்களும் இலகுவில் ஒருவரை ஒருவர் அங்கீகரிக்கவும், புரிந்து கொள்ளவும் வாய்ப்பு இருந்திருக்கிறது. மட்டக்களப்பின் வந்தாரைவரவேற்கும் , விருந்தோம்பல் பண்பு இதை இன்னும் இலகுவாக்கியது என்கிறார் பண்டிதர் வி.சி.கந்தையா.
மட்டக்களப்பு தேசத்தில் மதமாற்றத்திற்கு வடக்கில் போன்று சாதிப்புறக்கணிப்பு பிரதான காரணமாக அமையவில்லை. கல்வி, தொழில்வாய்ப்பு என்பனவே காரணமாக இருந்துள்ளன. ஏனெனில் படுவான்கரை,எழுவான்கரை கிராமங்களில் மதம்மாறியவர்கள் நிலவுடமை சமூகக்கட்டமைப்பில் உயர் அந்தஸ்த்தைக்கொண்டிருந்த போடி, உடையார், விதானையார், வன்னியனார் குடும்பங்களை சேர்ந்த சைவசமயத்தவர்களாகவும் இருக்கின்றனர்.
அவர்கள் தங்கள் சுத்த சைவப்பெயர்களோடு கிறிஸ்த்தவ பெயர்களை இரண்டாவது முதல் பெயராக சேர்த்துக்கொண்டனர். உதாரணமாக டானியல் கணபதிப்பிள்ளை சடையப்போடி . மதம் மாறிய முதல் தலைமுறை கிறிஸ்தவ பெயரை பொதுவெளியில் பயன்படுத்தியது குறைவாகவே இருந்துள்ளது. இந்த கிறிஸ்தவப்பெயர்கள் போல் ஆரம்பத்தில் முஸ்லீம் ஆண்களும், பெண்களும் தமிழ்ப்பெயர்களை கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள்.
இது இப்படியிருக்க…………;
இந்த நிலையில் காலத்திற்கு காலம் பல்வேறுபட்ட நிர்வாக -வரி அறவீட்டு பிரிவுகள் மட்டக்களப்பு மாநிலத்தில் ஏற்படுத்தப்பட்டு நிர்வகிக்கப்பட்டுவந்துள்ளன. இவற்றை நிர்வகிப்பவர்கள் நிலமானிய சமூககட்டமைப்பில் நிலவுடமையாளர்களாக -அவர்களின் வழிவந்தவர்களாக இருந்துள்ளனர். இவர்களின் பதவிப் பெயர்களும், அதன்படிநிலை உட்பிரிவுகளும் வேறுபதவிப்பெயர்களால் அடையாளப்படுத்தப்படுவதை ஆய்வுகளில் இருந்து அறியமுடிகிறது.
மட்டக்களப்பு பூர்வீக சரித்திரத்தின் படி மட்டக்களப்பு அரசு ஏழு சிற்றரசுகளாக பிரித்து நிர்வகிக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. 13ம் நூற்றாண்டில் மாகோனால் வன்னியச்சிற்றரசுகள் பிரிக்கப்பட்ட தாக ஆய்வாளர் வெல்லவூர்க்கோபால் தமிழக வன்னியரும், ஈழத்து வன்னியரும் என்ற நூலில் பதிவிடுகின்றார்.
1.நாடுகாட்டுப்பற்று (விந்தனைப்பற்று) .
2.பாணமைப்பற்று
3.அக்கரைப்பற்று
4.சம்மான்துறைப்பற்று
5.கரவாகுப்பற்று
6.மண்முனைப்பற்று
7.கோறளைப்பற்று
ஆனால் பின்னர் கி.பி 14 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மட்டக்களப்பில் நான்கு நிர்வாகப்பிரிவுகள் இருந்ததாக அறியப்படுகிறது.
1. வெருகல் முதல் ஏறாவூர் வரை: மண்முனை வடபிரிவு (கோறளை)
2.ஏறாவூர் தெற்கு எல்லையில் இருந்து கல்லாறு வரை: மண்முனைப்பிரிவு.
3.கல்லாறு தெற்கு எல்லைமுதல் அக்கரைப்பற்று தெற்கு வரை: மட்டக்களப்பு பிரிவு.(சம்மான்துறை)
4. அக்கரைப்பற்று தெற்குமுதல் மாணிக்ககங்கை வரை: உன்னரசுகிரி பிரிவு.
கி.பி. 14 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மட்டக்களப்பு கண்டி இராச்சியத்தின் கீழ் கொண்டு வரப்படுகிறது. அப்போது வேறு வகையாக நிர்வாகப்பிரிவு அமைகிறது. இங்கு மொழிவாரி நிர்வாகத்தையும், குலவாரி நிர்வாகத்தையும் அவதானிக்க முடிகிறது.
1.உன்ரசுகிரிப்பிரிவு : சிங்களப்பிரிவு
2.சம்மாந்துறை(மட்டக்களப்பு) : பணிக்கர்குலபிரிவு.
3.மண்முனைப்பிரிவு : கலிங்ககுலபிரிவு.
4.ஏறாவூர் கோறளைப்பிரிவு: படையாண்டகுலப்பிரிவு .
மட்டக்களப்பின் நிர்வாகப்பிரிவுகளில் உலகநாச்சியின் ‘மண்முனை’ முக்கிய இடத்தை வகிக்கிறது. அதேபோல் சம்மாந்துறை பிரிவில் கூறப்படுகின்ற பணிக்கர்குலம், பணிக்கர்குடி/பணிக்கனார் குடி என்று இன்றும் முற்குகர், முஸ்லீம்கள் இடையே வழக்கில் உள்ளது. இந்த மூன்று குடிகளும் முற்குகர் சமூக உட்கட்டமைப்பில் முக்கிய நிலமானிய பிரிவாக இருப்பதை இன்றும் காணமுடியும் முடியும். மண்முனை, ஏறாவூர் பிரிவுகளில் உலகநாச்சியார்குடி / உலயப்பாகுடி மூன்று குடிகளுள் ஒன்றாக முதன்மை பெற்றிருக்கிறது.
இப்போது நாம் கண்டி இராட்சிய வரலாற்றை நோக்கினால் 1592 இல் விமலதருமனும், 1605 இல் சேனரதனும், 1635 இல் இரண்டாம் இராஜசிங்கனும் கண்டியை ஆளுகின்றனர். இந்த 16ம், 17ம் நூற்றாண்டுகளில் மட்டக்களப்பு தொடர்ச்சியாக முழுமையாக கண்டிராட்சியத்தின் கீழே இருந்துள்ளது. கண்டியரசர்களே மட்டக்களப்பை ஆண்டனர்.
இந்த பிற்காலத்தில் இரு நிர்வாகப்பிரிவுகளாக மட்டக்களப்பு பிரிக்கப்பட்டு இருந்துள்ளது.
1. வெருகல் முதல் கல்லாறு வரையான பிரிவு.
2.பெரிய நீலாவணை முதல் கதிர்காமம் வரையான பிரிவு.
இதற்கு பொறுப்பான நிர்வாகிகள் ‘நிலமை’ என அழைக்கப்பட்டுள்ளனர். நிலமையை பெரியவன்னியர் என்றும், அவரின் உதவியாளரான உபநிலமையை சின்னவன்னியர் அல்லது உடையார் என்றும் மட்டக்களப்பு மக்கள் அழைத்துள்ளனர். இந்த நிலமை என்ற நிர்வாக அதிகாரம் கண்டி தலதாமாளிகை நிர்வாகி ‘தியவர்த்தன நிலமையை’ நினைவூட்டுவதாக இல்லையா…….? இது மட்டக்களப்பு மாநிலம் / சம்மாந்துறை சிற்றரசு கண்டிராட்சியத்திற்கு உட்பட்டது என்பதை மேலும் உறுதி செய்கிறது.
இன்னும் வரும்…..!