(தமிழ் பொதுவேட்பாளர் விடயத்தில் “இலங்கைவாழ் தமிழர் நலன்விரும்பிகள் அமைப்பு, (WTSL)” எனும் புலம்பெயர் தமிழர் அமைப்பு தமது உலகளாவிய ஒருங்கிணைப்பாளர்களிடையே இடம்பெற்ற தீவிர கருத்தாடலின்
பின் வெளியிட்ட ஊடக அறிக்கை இது.
அவுஸ்திரேலியாவில் இருந்து அதன் சர்வதேச இணைப்பாளர் ராஐ்சிவநாதன், இதனை வெளியிட்டுள்ளார்.)
தமிழ் மக்கள்பொதுச்சபை அங்கத்தவர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் !
அன்பான வணக்கங்கள்.
தமிழ் மக்கள் நலன்சார்ந்து நீங்கள் மேற்கொண்டிருக்கும் அயராத முயற்சிகள் பாராட்டப்படவேண்டியவை. பல்வேறு தரப்புக்களையும் ஒன்றிணைத்து தமிழ்பொதுச்சபையாக செயல்படும்
வகையில் மேற்கொள்ளும் கடின முயற்சிகளுக்கும் அர்பணிப்புகளுக்கும் முதற்கண் எமது
வாழ்த்துக்களைத் தெரிவுத்துக்கொள்கிறோம்.
ஆயினும் இவ் அமைப்பினூடாக வரும் ஐனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் நலனைப் பிரதிபலிக்கத் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்த நீங்கள் முனைவது உண்மையில் தமிழ்
மக்களை மேலும் பலவீனமடையவே செய்யும் என்ற எமது அச்சத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.
வடகிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள் இன்று மிகவும் பலம் குன்றிய நிலையில் இருக்கிறார்கள் என்பதை அனைவரும் அறிவோம். எமது பாரம்பரியபிரதேசங்கள் எங்கும்
பல்வேறுபட்டபேரினவாத ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த எவ்வித பலமும் அற்றவர்களாகிவிட்டோம் என்பதும் உண்மையே. எவ்வளவு கூக்குரல் இடினும் சர்வதேசம் வாளாதிருப்பதே கண்கூடு.
இந்நிலையிலிருந்து மீளவேண்டுமாயின் எமது மக்களின் கரங்களில் ஓரளவுக்கேனும் எமது நிர்வாகப் பராமரிப்பு அதிகாரங்களைப் புத்திசாலித்தனமாக பெற்றுக்கொள்வதினூடாக மட்டுமே சாத்தியமாக்கமுடியும். அனைத்தையும் தொடர்சியாக இழந்தபடி உலக நாடுகள் நாம் இழப்பவற்றை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையில்,செய்யக்கூடிய கருமங்களை உதாசீனம் செய்து இருகைகளையும் துக்கியபடி நிற்பது எவ்வகையிலும் நியாயமாகாது. ஒரு பலனும் விழையாது. எம்மிடம் மிஞ்சி இருக்கும் தனிப் பண்புகளையும்பாரம்பரிய உடைமைகளையும் பாதுகாத்துக்கொள்ள படிப்படியாகவேனும் எமது பிரதேசங்களினதும் மக்களினதும் பராமரிப்பு, முன்னேற்றம், பாதுகாப்பு போன்ற நிர்வாக கட்டமைப்புகளை பெற்றெடுப்பது அவசியமாகிறது.
அதனை இருக்கும் அரசியல் பொருளாதார நிலைமைகளை சாதகமாகப் பயன்படுத்தி எவ்வாறு சிறந்த முறையில் சாத்தியமாக்க முடியும் என்பதே எம்முன் உள்ள பிரதான கடமை.
நாம் இதுவரையும் அடைந்த இழப்புகளுக்கும் துயரங்களுக்கும் சர்வதேச மன்றங்ககளினதும் உலக நாடுகளினதும் பங்களிப்புகளை குறைத்து மதித்துவிடமுடியாது. தொடர்ந்தும் அவர்கள் தங்கள் சொந்த நலன்களுக்காக மேற்கொள்ளும் ராஜதந்திர நடவடிக்கைகளில் மயக்கம் கொண்டிருப்போமாயின் எந்த ஒரு தெய்வத்தின் நிழலும் எம்மீது சாயப்போவதில்லை.
ஈராண்டுகளுக்கு முன்நாட்டின் அனைத்து இனமக்களும் பாரிய பொருளாதார அரசியல் நெருக்கடிகளைச் சந்தித்து இலங்கை வரலாறு காணாத ‘அறகலய’ எனும் பாரிய மக்கள் எழுச்சி நடாத்தி எவரும் எதிர்பாராத அரசியல் மாற்றம் ஒன்றினை ஏற்படுத்திய அனுபவங்களோடு தற்போது இந்த ஜனாதிபதித் தேர்தலில்யாரைத் தெரிவு செய்வது என்ற கேள்விக்கு பதிலைத் தேடிக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் தமிழ் மக்கள் சார்பில் நீங்களும் உங்கள் அனுபவங்களுக்கும் அறிவுக்கும் ஏற்ற வகையில் ஒரு தமிழ்பொதுவேட்பாளரை நிறுத்துவது என்ற முடிவுக்கு வந்துள்ளீர்கள். எமது தேவைகளின் பின்னணியில் இதன் சாதகபாதகங்களை சற்றுவிரிவாக ஆராயுமிடத்து இது தமிழ் மக்களின் நலன்களுக்கு சிறந்த முடிவாக இருக்க முடியாது என நாம் உறுதியாக நம்புகிறோம்.
இப்பாரியமுயற்சிக்குப் பதிலாக வேறு நடைமுறைச்சாத்தியமான அணுகுமுறைகள் பற்றி சிந்திப்பது உங்கள் முயற்சிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் கூடிய விரைந்த பலனைப்பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையுடனேயே எமது கோரிக்கையை பரிசீலிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ்பொதுவேட்பாளர் ஏன் தேவை என்பதற்காக கூறப்படும்காரணங்கள்:
இதுவரை காலமும் ஜனாதிபதித் தேர்தல்களில் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு வாக்களித்து எந்த நன்மையும் அடையவில்லை; உறுதிமொழிகளால் ஏமாற்றப் பட்டிருக்கிறோம். சீர்குலைந்துள்ள தமிழ்மக்களை ஒற்றுமைப்படுத்த முடியும்; தோல்வி மனோநிலையை நீக்கமுடியும். பெரும்பான்மை இன அரசியல் கட்சிகளோடு பேரம்பேசும் வலிமை கூடும்; எமது பலத்தினை பேரின தலைவர்கள் கண்டு கீழிறங்குவார்கள். ஒற்றை ஆட்சிமுறையை மாற்றுவதை நோக்கிய பயணம் வலுப்பெறும்; குறைந்தபட்சம் மேலதிக அதிகாரங்களை மாகாணசபைகளுக்குப் பெற்றுக்கொள்ளமுடியும்.
இவ்வாறு இப்படியும் அப்படியுமாக மேலும் சிலகாரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இன்றைய களநிலமைகளில் இக்காரணிகள் தமிழரின் ஒற்றுமையை, பலத்தினை, வெளிக்கொணருமா, அல்லது எம்பேரம் பேசும் வல்லமையை மேலும் பலவீனப் படுத்துமா என்பது பற்றியதெளிவு அவசியம்.
தற்போது எம் மக்களில் பெரும்பாலானோர் பல்வேறு தமிழ் மற்றும் தேசிய கட்சிகளை ஆதரிப்பதால், தமது உரிமைகள்,சுதந்திரம்,கௌரவம் ஆகியன மறுக்கப்படுகின்றதை அறிந்திருந்தும் ஜனாதிபதித்தேர்தல் என்று வரும்போது பிரதான கட்சிகளுக்கே வாக்களிப்பார்கள். மேலும், தமிழ்பேசும் முஸ்லிம்கள், மலையக மக்கள் மற்றும் கொழும்பைத் தளமாகக்கொண்ட தமிழர்களின் ஆதரவும் இல்லாது வாக்குகளும் வீணடிக்கப்படும் . அவர்களை துரோகிகள் அல்லது துருப்புப்பிடித்த ஆணிகள் எனக்கூறிமேலும் தமிழ் மக்களைப் பிரிப்பது உங்கள் நோக்கத்துக்கு பலனளிக்காது. அவ்வாறு தோல்வியை சந்திக்கும் பட்சத்தில் எமது மக்களின் நியாயமான நீண்டகால இலக்குகள் சுக்குநூறாகும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
தமிழ்பொதுவேட்பாளரை நிறுத்தி அவருக்கு ஆதரவாக மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களும் அவற்றிற்கு பதிலளிக்கும் வகையில் எமது எனைய கட்சிகள் செய்யும் பதில் பிரச்சாரங்களும் எம்மக்களிடையிலான ஐக்கியத்தை மேலும் சீர்குலைக்குமே அன்றி ஒற்றுமையை வலுப்படுத்தாது.
இதனை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி இனவாத அமைப்புகள் மேற்கொள்ளும் பரப்புரைகளால் ஈர்க்கப்படும் பெரும்பான்மை மக்களும் சிங்களபெளத்த அதிகாரங்களை வலுப்படுத்திக் கொள்ளவே ஆர்வம்காட்டுவார்களன்றி, அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதை அங்கீகரிப்பதில் அக்கறை காட்டமாட்டார்கள்.
மேலும், மாகாண சபைகளை இல்லாதொழிக்க நிர்ப்பந்தங்கள் அதிகரிக்கும். தீவிரவாத கருத்துடையோர்களால் வன்முறைகளுக்கு தமிழ் மக்கள் முகம்கொடுக்க நேரிடலாம்.
இராணுவத்தின் பரிசோதனைச்சாவடிகள், அடக்குமுறைகள் அதிகரிக்கப்பட்டு எமது மக்கள் எவ்வித காரணங்களுமின்றி கைதுசெய்யப்பட்டு துன்புறுத்தப்படுவதற்கும் அநேக வாய்ப்புகள் உண்டென்பதையும் மறுக்கமுடியாது. இம்முயற்சியில் தமிழ்பொதுவேட்பாளர் கணிசமான வாக்குகளைப் பெற்றுக்கொண்டாலும் கூட, இத்தகைய சூழ்நிலைமாற்றங்களில் அதனால் எவ்வித நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்?
மாறாக,கூர்மைப்படுத்தப்படும் இனவாத உணர்வுகளால் நாடும் தமிழ் சமூகமும் மேலும் பாதாளத்தை நோக்கி நகருவதுடன், அரசியல் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கக்கூடிய சமூக சூழ்நிலைகள் பலவீனமடையும். நாட்டின் பொருளாதரம் மேலும் சீர்குலையும். அதற்கான காரணிகளாக தமிழ் மக்களே குறிவைக்கப்படுவார்கள். சர்வதேசத்தினதும் இந்தியாவினதும் அதிருப்திக்கே தமிழ் சமூகம் உள்ளாவதுடன் அவர்கள் ஆதரவை இழக்கநேரிடுமே அன்றி ஒத்துழைப்பை வலுப்படுத்தமுடியாது.
நிதானத்துடன் சிந்திக்குமிடத்து தமிழ்பொதுவேட்பாளரினால் பாதகங்களே அதிகம் என்பதையும், இதனால் தமிழ் சமூகமும் மேலும் பிளவடைவதே விளைவாகும் என்பதையும்புரிந்துகொள்ள முடியும்.
மறுபுறத்தில் எமது அபிலாசைகளைப் பெற்றுக்கொள்ள சாத்தியமுள்ள வழிமுறைகளைப் பரிசீலிக்கையில் அதற்கு வேறுபொறிமுறைகளும் உண்டு என்பதை அறியலாம். தத்துவார்த்த ரீதியாக (இலகுவாக உடையக்கூடியதான) அனைத்து முட்டைகளையும் ஒரு கூடையில் மட்டுமே எடுத்துச்செல்லக்கூடாது என்பார்கள். ஒரு பெரியதேரை அனைவரும் ஒரு வடத்தைக் கொண்டிழுப்பதைவிட இரண்டு மூன்று வடங்களில் இழுப்பதே இலகுவானது என்பதும், ஒரு வண்டியை நகர்த்த நான்கு சக்கரங்கள் அதற்குரிய இடங்களில் இருக்கவேண்டும் என்பதும் நாம்அறிந்ததே. இவற்றைப்போன்ற அணுகுமுறைகளாலும் எமக்குச்சாதகமான சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொள்ளமுடியும். அதற்கான சாத்தியங்களையே எமது நாட்டினதும் எம் சமூகத்தினதும் இன்றைய அரசியல் களநிலமைகள் உருவாக்கி வைத்திருக்கிறது.
இலங்கையின் ஜனாதிபதியின் தெரிவு வெறுமனே தமிழ் மக்கள் நலன்சார்ந்தது மட்டும் அல்ல.
அது ஒட்டுமொத்த இலங்கை மக்களின் நலம்சார்ந்தது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இலக்குகள், திறமைகள்,கொள்கைகள் அடிப்படையில் தனது சமூக நலன்களையும், நாட்டின் ஏனைய சமூக நலன்களையும்,உலக ,பிராந்திய நெருக்கடி நிலைமைகளையும் கவனத்திற்கொண்டு, அவரவர் தமது சிந்தனைக்குட்பட்ட வகையில் ஜனாதிபதி ஒருவரைத் தெரிவு செய்வதற்கான ஜனநாயக உரிமையை பயன்படுத்துவதே அனைத்து வாக்காளர்களினதும் கடமையாகும்.
இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் பெருளாதார நெருக்கடிகள்,தேர்தலில் போட்டியிடவிருப்பதாக அறிவித்துள்ள அனைத்து வேட்பாளர்களையும் மாகாணசபைகளை செயற்படக்கூடிய அதிகாரங்களைக் கொண்டுள்ள வகையில் மாற்றுவதற்கு இணக்கப்பாடு தெரிவிக்கும் நிலைமையை ஏற்படுத்தி இருக்கிறது.
‘அறகலய’ போராட்ட அனுபவங்களும், மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றுவரும் மக்கள் தேசிய சக்தியும், நாட்டின்பெருளாதார நெருக்கடிகளுக்கு உதவக்கூடிய வலிமையான புலம்பெயர்ந்த சமூகமுமே இதற்குப்பிரதான காரணிகளாகும். தமிழ்பொதுவேட்பாளர் எண்ணக்கரு இதற்குத்துணைசேர்த்தது என்பதும் மறுப்பதற்கில்லை.
ஆயினும் இன்றைய அரசியல் பொருளாதார சூழ்நிலை இதற்கு முந்தியதேர்தல் காலங்களிலிருந்து முற்றிலும்மாறுபட்டதாகும். எந்தவொருவேட்பாளரும் 50%இற்கு அதிகமான வாக்குகளைப் பெறுவதுமிக அரிதாக உள்ளநிலையில், இதை தமிழ் மக்கள் தமக்கு நன்மை அளிக்கும் வழியில் பயன்படுத்தவேண்டும். மூன்று நான்கு வடங்களாக இணைந்து நின்று அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களையும் சிறுபான்மை இனங்களின் அபிலாசைகளை கவனிக்க வைக்கும் வகையில் செயல்படுவதே எமது மக்களுக்குப்பாதகமான தன்மைகளைத் தணித்து, அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதற்கு வலுச்சேர்க்கும். இதில்நாம் பல்வேறு தளங்களில் நின்றாலும் பொதுவான ஒரு இலக்கைநோக்கிய நகர்வுகளை திறம்பட ஆற்றமுடியும்.
அத்துடன், எமது தெரிவுகள் இந்தியாவின் பாதுகாப்பிற்கு இடையூறில்லாததாக இருக்கும் பொழுது மட்டுமே எமது உரிமைகளை வென்றெடுக்க அவர்களுடைய உதவிகளையும் எதிர்பார்க்க முடியும்.
அத்துடன் தமிழ்பொதுவேட்பாளரின் அரசியல்கோட்பாடு எது என்பது இதுவரை தெளிவாக வரையறுக்கப்படாததும், 2ஆம் 3ஆம் விருப்புவாக்குகள் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற நிலையும், இதுவெற்றி-தோல்விகளுக்கு அப்பாற்பட்டதுபோன்ற கருத்துக்களும்,பொதுமக்கள் தங்கள் பெறுமதிமிக்க வாக்குகள் வீணடிக்கப்படுகிறதா என்ற நியாயமான கேள்வியை எழுப்ப இடமளிக்கிறது. ஒருவேளை 60%வீதம் வாக்குகளைத்தான் பெற்றாலும், அடுத்த நடவடிக்கை என்ன, யார் அரசுக்கும் சர்வதேசத்துக்கும் அழுத்தம்கொடுப்பது, எப்படிக்கொடுப்பது, எவ்வளவு காலத்திற்குக் கொடுப்பது, யாருடன் பேசுவதுபோன்ற திட்டங்கள் ஏதும் இல்லை.
மேலும்,புதிய உலக அரசியல் ஒழுங்கிற்கான (New World Order)திட்டங்களை மெல்லமெல்ல அரசுகள் செயற்படுத்திக்கொண்டிருக்கும் காலம் இது. தமது சொந்த பொருளாதார பிராந்திய நலன்களுக்கே முதலிடம்கொடுக்கும் சர்வதேசம், வரவிருக்கும் ஜனாதிபதியை திருப்திப்படுத்தாமல், எமது உரிமைகளைப் பெற்றுத்தரக்கோரும் ஆணையை எந்தளவு செவிசாய்த்துச் செயற்படும் என்பதும் பெரும் கேள்விக்குறியே. சக்தியற்றவர்களுக்கு எதிராக சர்வதேச சட்டம் சக்திவாய்ந்ததேயன்றி அது அவர்களுக்கு நீதிநியாயங்களைபெற்றுத் தந்ததாக அறிந்ததில்லை.
இவையாவற்றுக்கும்மேலாக,காலம்சென்ற த.தே.கூ. தலைவர் திரு.சம்பந்தனுக்கு 2.7.24. அன்று பாராளுமன்றத்தில் விசேட இரங்கலுரை நிகழ்த்திய ஜனாதிபதி விக்ரமசிங்க,”அதிகாரப் பகிர்வு தொடர்பில் திரு. சம்பந்தன் தனித்துவமான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். இதுவிடயத்தில் மோதிக்கொள்வதற்கு எந்தநியாயமும் இல்லை. அவர் அதற்கானபோதுமான பங்கை செய்துள்ளார். அதனை நிறைவுசெய்வதற்கு இன்னும் சிறிதளவே பங்காற்றவேண்டியுள்ளது.
அதிகாரப் பகிர்வு குறித்த வேலைகளை நாம் நிறைவு செய்வதே அவருக்கு செய்யக்கூடிய மிக உயர்ந்த பங்களிப்பாக இருக்கும்” என்றார்.
இந்நிலையில், உங்கள் செயற்பாடுகள் பல்வேறு கருத்துக்களுடைய தமிழ் மக்களை ஜனநாயக முறையில் ஒன்றித்து அரசியல் தீர்வு மற்றும் அதிகாரப் பரவலாக்கங்கள் பற்றிய அர்த்தமுள்ள முயற்சிகளுக்கு ஊக்கம்கொடுப்பதாயும், சமூகங்களுக்கிடையிலான இன முரண்பாடுகளை கூர்மைப்படுத்தாத வகையிலும் அமையவேண்டும் என்பதே எமது ஆதங்கமாகும்.மேற்படி கருத்துக்களை கவனத்திற்கொண்டு உங்கள் முடிவுகளை நன்கு ஆய்வுசெய்து, உணர்ச்சி அரசியலுக்கு இடம்கொடாது, அறிவின் அடிப்படையில், யதார்த்தரீதியில் பங்காற்ற வேண்டுமெனக்கேட்டுக்கொள்கிறோம்.