(அரசியல் – சமூக – வரலாற்று நாவல்)
— செங்கதிரோன் —
தேர்தல் நெருங்க நெருங்கப் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கிற்று. பொத்துவிலிருந்த கனகரட்ணத்தின் வாசஸ்தலம் பல ஊர்களிருந்தும் இரவு பகலாக ஆதரவாளர்கள் கூட்டம் கூட்டமாக வருவதும் போவதுமாய் பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்துத் “தீப்பள்ளயம்” போலக் காட்சிதரத் தொடங்கிற்று.
பொத்துவில் தொகுதியில் கனகரட்ணத்தின் வெற்றிக்காக நெம்புகோலாக நின்று சுழன்ற கோகுலன் நேரம் கிடைத்தபோதெல்லாம் கல்முனைத் தொகுதிக்கும் சம்மாந்துறைத் தொகுதிக்கும் சென்று அத்தொகுதிகளில் ‘முஸ்லிம் ஜக்கிய முன்னனி’ சார்பில் தமிழர் ;விடுதலைக் கூட்டணயின் ‘உதய சூரியன்’ சின்னத்தில் போட்டியிடும் முறையே சட்டத்தரணி சம்சுதீனுக்கும் சட்டத்தரணி காசிம்முக்கும் ஆதரவாகத் தேர்தல் பிரச்சார வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான்.
21.07.1977 அன்று நாடளாவிய ரீதியில் நடைபெறவிருந்த இலங்கையின் எட்டாவது பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியிருந்தன.
அன்று நள்ளிரவு 12.00 மணியுடன் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் எல்லாம் நிறுத்தப்பட வேண்டும். அதற்குப் பின்னர் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படலாகாது என்பது தேர்தல் விதி.
தேர்தல் பிரச்சாரத்தின் கடைசிப் பொதுக் கூட்டம் பொத்துவிலில் நடைபெறவேண்டுமென்பதே கோகுலனின் திட்டமாயிருந்தது.
பொத்துவில் பஸ் நிலையத்தின் அருகில் அமைந்திருந்தது கனகரட்ணத்தின் வாசஸ்தலம். அதனோடிணைந்ததாக இடது பக்கம் கனகரட்ணத்திற்குச் சொந்தமான கடைத்தொகுதியும் வலதுபுறமாகக் கனகரட்ணத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையமும் இருந்தன.
எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முன்னேயுள்ள முன்றலின் ஓர் அந்தத்தில் கூட்டமேடை அமைக்கப்பட்டிருந்தது. அழகாக அலங்கரிக்கப்பட்ட மேடையின் இருபுறத்திலும் நிலத்தில் நடப்பட்டிருந்த உயரமான கம்பங்களின் உச்சியில் ‘உதயசூரியன்’ கொடிகள் கூட்டத்திற்கு வரும்படி ஆட்களை கைகாட்டி அழைப்பது போலக்காற்றில் அசைந்து கொண்டிருந்தன. மேடையின் முன்னே கனகரட்ணத்திற்குச் சொந்தமான கடைத்தொகுதியின் முன்றலில் தரையில் நாற்காலிகள் வரிசையாகப் போடப்பட்டிருந்தன. முன்வரிசையில் பொத்துவில் ஊரின் முக்கியமான பிரமுகர்கள் முஸ்லிம்களும் தமிழர்களும் குறைந்தளவில் சிங்களவர்களும்; அமர்ந்திருக்கப் பின்னால் அடுத்தடுத்த வரிசைகளில் சனங்கள் இருக்கைகளில் அமர்ந்திருந்தார்கள்.
மேடையில், நடுநாயமாகக் கனகரட்ணம் வெள்ளைவேட்டி ‘நெஸனல்’ உடன் கம்பீரமாய் அமர்ந்திருந்தார். அவரின் இருமருங்கிலும் பக்கவாட்டில் ஏனைய பேச்சாளர்களும் இந்து – இஸ்லாம் – கிறிஸ்தவ -பௌத்த குருமார் நால்வரும் அமர்ந்திருந்தனர். மேடை நன்கு ஒளிபாய்ச்சப்பட்டிருந்தது. மாலை 6.00 மணிக்குக் கூட்டம் ஆரம்பமாவதாக ஏற்பாடு.
மேடையின் முன்பக்கத்தின் வலதுபக்க மூலையில் ஒலிவாங்கி ஆளுயர மட்டத்தில் வெள்ளிக் கம்பமொன்றில் பொருத்தப்பட்டிருந்தது.
மதகுருமார்களினால் நிகழ்த்தப்பெற்ற இறைவணக்கங்களைத் தொடர்ந்து ஏனைய பேச்சாளர்களும் பேசி முடித்ததும் நிறைவாகக் கனகரட்ணம் உரையாற்ற எழுந்தார். கூட்டமேடைக்குப் பின்னால் சற்றுத்தூரத்தில் சனநடமாட்டமற்ற பகுதியிலிருந்து சண்டமாருதமாகச் ‘சீனவெடி’க் கட்டுக்களின் ஒலியும் ஒளியும் வானில் எழுந்தன. பலநிற பலவடிவ வாணங்களும் வானத்தைக் கிழித்து உயரப் பறந்து வேடிக்கை காட்டி விழுந்தன.
சத்தங்கள் ஓய்ந்ததும் கனகரட்ணம் ஒலிவாங்கி முன் வந்து நின்றார். சனங்களின் கரகோஷம் கனகரட்ணத்தின் தேர்தல் வெற்றிக்குக் கட்டியம் கூறிற்று.
இறுதிக் கூட்டம் அதுவும் கனகரட்ணம் வதியும் பொத்துவில் ஊரில்; என்ன பேசப்போகிறாரோ என்ற எண்ணத்திலும் எதிர்பார்ப்பிலும் ஒரு ஓரமாக மேடைக்கு அருகில் வசதியாக இடம்பிடித்து நின்றிருந்தான் கோகுலன்.
கனகரட்ணத்தின் உரையின் சாராம்சம் இதுதான்.
‘எனது நேசத்திற்கும் பாசத்துக்குமுரிய மக்களே!
மேடையில் அமர்ந்திருக்கும் வணக்கத்திற்குரிய மதகுருமார்களுக்கும் பேச்சாளர்களுக்கும் இங்கே மேடைக்கு முன்னால் முன்வரிசையில் அமர்ந்திருக்கும் ஊர்ப் பெரியவர்களுக்கும் இங்க கூடியிருக்கும் பொத்துவில் ஊர்மக்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள்.
நான் தேர்தலில் போட்டியிடுவது உங்கள் எல்லோருக்கும் தெரியும். நான் பொத்துவில் மயில்வாகனம் ஓவசியரின் மகன் என்பதும் உங்கள் எல்லோருக்கும் தெரியும். என்னைப் பற்றி நானே உங்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டிய அவசியமில்லை.
பொத்துவில் இரட்டை அங்கத்தவர்கள் தொகுதி என்பதால் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை நீங்கள் தெரிவு செய்யவேண்டும். அதற்காக உங்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு வாக்குகள் உண்டு.
நான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிடுகிறேன். தமிழ் மக்கள் அனைவரும் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்வார்கள். அந்த வெற்றியில் பொத்துவிலிலுள்ள எனது முஸ்லிம் சகோதர சகோரிகளும் பங்கேற்க வேண்டுமென்று நான் ஆசைப்படுகிறேன். முஸ்லிம் சகோதர சகோதரிகளே! ஐக்கியதேசியக் கட்சிக்கு வாக்களிக்க விரும்புவர்கள் உங்களுக்குரிய இரு வாக்குகளிலொன்றை ஜக்கியதேசியக் கட்சிக்கும் மற்றதை எனக்கும் அளியுங்கள்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வாக்களிக்க விரும்புவர்கள் ஒன்றை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் மற்றதை எனக்கும் அளியுங்கள். கட்சிகளைப் பாராது ஊரவனுக்கு வாக்களிக்க விரும்புவர்களும் இருப்பீர்கள். இத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடுகின்ற ஆஸாத் மௌலானாவும் பொத்துவில் ஊர்தான். நானும் பொத்துவிலான்தான். நாங்கள் இருவருமே ஊரவன்கள். ஒருவாக்கை ஆஸாத் மௌலானாவுக்கும் மற்றதை எனக்கும் போடுங்கள்.
கனகரட்ணம் எவருமே எதிர்பார்க்காதபடி இப்படி எளிமையாகவும் – இரத்தினச் சுருக்கமாகவும் – எந்த நபரையும் எந்தக் கட்சியையும் தாக்காமலும் – மிகநுட்பமாகவும் – சுவாரஷ்யமாகவும் பேசியதைக் கேட்ட வாக்காளர்களின் கைதட்டல் வானைப் பிளந்தது.
கோகுலன் கூட்டம் முடிந்து வெகுநேரம் விழித்திருந்து தேர்தல் பணியாளர்கள் மற்றும் வாக்குச் சாவடிகளில் கட்சியின் சார்பில் பிரசன்னமாகியிருக்கவேண்டிய தேர்தல் முகவர்கள் மற்றும் தேர்தல் தினத்தன்று வாக்கெண்ணும் நிலையத்து வாக்கெண்ணும் முகவர்களையெல்லாம் ஏற்பாடு செய்துவிட்டுக் கனகரட்ணத்துடன் கனநேரம் கதைத்திருந்துவிட்டு பொத்துவில் வட்டிவெளியிலுள்ள தனது இளையக்காவின் வீட்டுக்குச் சென்று உணவருந்திவிட்டு கனகரட்ணத்தின் வெற்றி நிச்சயம் என அவன் நம்பியதால் நிம்மதியாக நித்திரைக்குப் போனான்.
அடுத்தநாள் தேர்தல் கடமைக்காக அரசாங்க ஊழியனான கோகுலன் அம்பாறைக்குச் செல்ல வேண்டியிருந்தது.
தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலமாக இயங்கிய அம்பாறைக் கச்சேரி தேர்தல் நடைபெறுவதற்குரிய ஏற்பாடுகள் அனைத்தையும் பூர்த்தி செய்திருந்தது. கோகுலன் தேர்தல் கடமைகள் சம்பந்தமாக அம்பாறையில் நிற்கும்போதுதான் அந்த அதிர்ச்சியான செய்தி வந்தது.
பொத்துவில் – மொனறாகல பிரதான வீதியில் லகுகல ஊர் தாண்டி வரும் வளைவில் சுயேச்சை வேட்பாளரான அக்கறைப்பற்றைச் சேர்ந்த சரணபால பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாதனால் அவர் உயிரிழந்தார். அதனால் 21.07.1977 அன்று இலங்கையில் நாடளாவிய ரீதியில் அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறப் பொத்துவில் தொகுதியில் மட்டும் அப்போது அமுலிலிருந்த தேர்தல் விதிகளுக்கமைய பிறிதொருதினத்திற்குப் பிற்போடப்பட்டது.
. . .
1977 ஆம் ஆண்டின் பாராளுமன்றப் பொதுத் தேர்தல் முடிவுகள் நாடளாவிய ரீதியில் ஐக்கிய தேசியக்கட்சியை வெற்றிபெறச் செய்து அதன் தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்தனாவைப் பிரதமராக்கியது. இலங்கைப் பாராளுமன்றத்தில் ஆறில் ஐந்து பங்கு பெரும்பான்மையுடன் அவர் அரியணை ஏறினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆக எட்டு ஆசனங்களையே பெற்று படுதோல்வியைத் தழுவியது. தமிழர் விடுதலைக்கூட்டணி வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து மொத்தம் பதினேழு (பொத்துவில் தொகுதி தவிர்ந்த) ஆசனங்களைப் பெற்று இலங்கை அரசியல் வரலாற்றில் முதல்தடவையாக எதிர்பாராத வகையில் தமிழர் ஒருவர் – தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அமிர்தலிங்கம் – எதிர்க் கட்சித் தலைவரானார். தமிழர்விடுதலைக் கூட்டணியின் ‘உதய சூரியன்’ சின்னத்தில் முஸ்லிம் ஐக்கிய முன்னணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கல்முனை, சம்மாந்துறை, சேருவில், புத்தளம் ஆகிய நான்கு தொகுதிகளிலுமே தோல்வியுற்றார்கள். பெரும்பான்மையான முஸ்லிம்கள் தமிழீழக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லையென்பதை அது எடுத்துக்காட்டிற்று. தமிழர் விடுதலைக் கூட்டணி கல்முனையில் வைத்து நிந்தவூரைச் சேர்ந்த பஸீல் ஏ.மஜீத் தலைமையிலான முஸ்லிம் ஐக்கிய முன்னணியுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் பலமிழந்து போயிற்று.
முஸ்லிம் ஜக்கிய முன்னனி சார்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் நடவடிக்கைக் குழுவில் இடம்பெற்று, தேர்தல் பிரச்சாரகாலத்தில் “அண்ணன் அமிர்தலிங்கம் தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டால்கூட நான் அதை எதிர்காலத்தில் தலைமையேற்று முன்கொண்டு செல்வேன்” என்று முழங்கிய அஸ்ரப் தேர்தல் முடிவுகளின் பின்னர் தமிழர் விடுதலைக்கூட்டணி தனது தமிழீழத் தனிநாட்டுக் கோரிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று அறிக்கையிட்டார். அதற்குத் தமிழீழக் கோரிக்கையை மறுபரிசீலனை செய்யச் சொல்லி கேட்பதற்கு அஸ்ரப் யார்? எனக் கேட்டு கண்டன அறிக்கையொன்றினைக் கல்முனையைச் சேர்ந்த தமிழர் விடுதலைக் கூட்டணணியின் தீவிர செயற்பாட்டளரான பன்னீர்ச்செல்வம் எனும் இளைஞன் வெளியிட்டுப் பதில் தந்தான்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அமிர்தலிங்கம் அவர்கள் இலங்கைப் பாராளுமன்றத்தில் 1977 ஆகஸ்ட் 4 ஆம் நாள் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்றார்.
1977 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புற்று நோய்ப் பிரிவொன்றை ஏற்படுத்துவதற்காக நிதி திரட்டும் பொருட்டு களியாட்ட விழா- ‘கார்னிவல்’ – ஆகஸ்ட 12 ஆம்,13 ஆம் திகதிகளில் சென்ற் பற்றிக்ஸ் கல்லூரியில் நடைபெற்றது. சீருடையில்லாமல் வந்த யாழ்ப்பாணப் பொலிஸ்நிலையப் பொலிஸார் சிலர் நுழைவுச் சீட்டில்லாமல் களியாட்ட விழாவில் உள்நுழைய முயற்சித்தபோது அவர்களுக்கும் ஏற்பாட்டாளர்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலில் சாதாரண உடையிலிருந்த பொலிஸார் இருவருக்குக் காயங்கள் ஏற்பட்டன.
அதற்குப் பழிவாங்கும் படலமாக ஆகஸ்ட் 14 முதல் யாழ்நகரில் பொலிஸாரினால் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அப்பாவிப் பொதுமக்கள் வீதிகளில் எழுந்தமானமாகத் தாக்கப்பட்டார்கள். வீதிகளில் சென்ற – நின்ற வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டன. மின்விளக்குகள் உடைக்கப்பட்டன. யாழ்ப்பாண நவீன சந்தை தீவைக்கப்பட்டது. முழு யாழ்நகரமும் எரியூட்டப்பட்டது. யாழ்ப்பாணத்தில் தலைதூக்கிய கலவரம் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் தலைவிரித்தாடியது. நாடளாவியரீதியில் இனக் கலவரம் மூண்டது. தமிழ்மக்கள் தென்னிலங்கையில் தேடித்தேடித் தாக்கப்பட்டார்கள். அவர்களது உடமைகள் சேதமாக்கப்பட்டன. உயிரிழப்புக்களும் ஏற்பட்டன.
கலவரம் நடந்து கொண்டிருக்கையில் இலங்கைப் பிரதமர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா பாராளுமன்றத்தில் தமிழர்விடுதலைக் கூட்டணித் தலைவர்களைப் பார்த்துப் “போரா? சமாதானமா? என்று கேட்டுப் “போர் என்றால் போர்,சமாதானமென்றால் சமாதானம்” என்று சர்வசாதாரணமாகக் கூறினார். பிரதமரின் பேச்சு ‘எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது’ போலானது. கொழும்பில் தமிழர்கள் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தனர்.
அரச அனுசரணையுடன்தான் இக்கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டதாகவே செய்திகள் வெளிவந்தன. வடக்கு கிழக்கு தமிழர்கள் பெரும்பான்மையாகத் தமிழர்விடுதலைக்கூட்டணிக்கு வாக்களித்து தமிழீழத்தனிநாடமைக்க ஆணை வழங்கியமையையும் இலங்கை அரசியல் வரலாற்றில் முதன்முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக வந்ததையும் பௌத்த சிங்களப் பேரினவாத சக்திகளாலும் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய அரசாங்கத்தினாலும் சீரணித்துக் கொள்ள முடியாததே இக்கலவரம் வெடித்துக் கிளம்பிமைக்குக் காரணமாகுமெனக் கருதப்பட்டது.
யாழ் நகரில் நடந்த களியாட்ட விழாவில் நடந்த பொலிஸார்-பொதுமக்கள் மோதல் இக்கலவரத்துக்குத் “தீ மூட்டும் தீக்குச்சி” யானது. அதனை இனவாதச் சக்திகளும் இனவாத அரசாங்கமும் தங்கள் இலக்குகளையடையப் பயன்படுத்திக் கொண்டன. அப்பாவித் தமிழர்களே பாதிக்கப்பட்டார்கள், பலியானார்கள்.
1977 ஆம் ஆண்டுப் பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான ஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாஷைகள் இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து நிராகரிக்கப்பட்ட காரணத்தால்தான் அவர்கள் தனிநாடு கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்பது நியாயமானது என ஏற்றுக் கொண்டிருந்தது. ஐக்கியதேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தால் சர்வகட்சி மாநாட்டின்மூலம் இனைப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் எனவும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தது.
1977 ஆவணி அமளி இவற்றையெல்லாம் பொய்யாக்கியது. ஐக்கியதேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனக் கூற்றுக்கள் தமிழர்களின் வாக்குகளைப் பெறுவதற்கான வலைவீச்சு என்பது தமிழர்களால் உணரப்பட்டது. சிங்களத் தலைவர்களாலும் அரசியல் கட்சிகளினாலும் அதன் தலைமைகளினாலும் தமிழர்பிரச்சனை சம்பந்தமாக வழங்கப்பெறும் வாக்குறுதிகள் யாவும் ஏட்டளவில்தான் – வாயளவில்தான் என்பது இலங்கையின் அரசியல் வரலாற்றில் மீண்டுமொரு முறை எண்பிக்கப்பட்டது. பிரதமர் ஜே.ஆரின் ‘போரா? சமாதானமா? என்ற கேள்வி பொறுப்புமிக்க பிரதமர் ஒருவரின் கூற்றாகத் தென்படவில்லை.இந்தச் சூழ்நிலைக்கு மத்தியில்தான் சுயேச்சை வேட்பாளர் ‘சரணபால’ வின் விபத்துமரணம் காரணமாகப் பிற்போடப் பெற்ற பொத்துவில் தொகுதிக்கான இடைத்தேர்தல் 12.09.1997 அன்று நடைபெற்றது.
இத்தேர்தலில் பொத்துவில் தொகுதியின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினராக 30345 வாக்குகளைப் பெற்ற ஐக்கியதேசியக் கட்சி வேட்பாளர் எம்.ஏ.எம். ஜலால்டீனும் இரண்டாவது உறுப்பினராக 23990 வாக்குகளைப் பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர் எம்.கனகரெட்ணமும் தெரிவாகினர். மூன்றாவதாக வந்த சுதந்திரக்கட்சி வேட்பாளர் எம்.எம்.முஸ்தபாவை விடக் கனகரட்ணம் 1612 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுத்தான் தனது வெற்றியை நிலைநாட்டினார். சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட என்.தருமலிங்கம் 7644 வாக்குகளைப் பெற்றிருந்தார். கோகுலன் அம்பாறைக் கச்சேரியில் அமைந்த வாக்கெண்ணும் நிலையத்தில் கனகரட்ணத்தின் சார்பில் வாக்கெண்ணும் முகவராகவும் கடமையேற்றிருந்தான்.
கோகுலன் கணிப்பீடு செய்திருந்ததைப்போல அரும்பொருட்டான வெற்றியாகவே கனகரட்ணத்தின் வெற்றி அமைந்தது. கனகரட்ணம் வெற்றியீட்;டியதால் சுதந்திர இலங்கையில் முதன்முதலாகப் பொத்துவில் தொகுதிமூலம் அம்பாறை மாவட்டத் தமிழர்களுக்குத் தமிழர் பிரதிநிதித்துவம் கிடைத்தது.
வெற்றிச் செய்தியுடன் அம்பாறையிலிருந்து காரைதீவில் வந்திறங்கிய கனகரட்ணத்தைக் காரைதீவு மக்கள் காரைதீவுச் சந்தியில் வைத்து மாலைகளை அவர் கழுத்தில் முகம் மறையுமளவுக்கு அணிவித்து ஊருக்குள் அழைத்துச் சென்றார்கள். தொடர்ந்து அடுத்தடுத்த நாட்கள் அக்கரைப்பற்று – திருக்கோவில்-பொத்துவில் எங்கணும் கனகரட்ணத்தின் தேர்தல் வெற்றி அயோத்தி மாநகரில் இராமனுக்குப் பட்டாபிஷேகம் நடந்தது போன்ற பெருவிழாவாக மக்களால் மகிழ்ச்சியாகக் கொண்டாடப் பெற்றது. மக்கள் ஆர்த்தனர். களித்தனர்: ஆடிப்பாடினர். கனகரட்ணம் ஊர்ஊராய் நடந்து மக்கள் அளித்த வரவேற்பில் களைப்படைந்தார். களிப்பும் அடைந்தார்.
இரண்டு மூன்;று மாதங்களுக்கும் மேலாக ஓய்வு ஒழிச்சலின்றி ஓடித்திரிந்த கோகுலன் தனது கடமையை வெற்றியாக நிறைவேற்றிய திருப்பதியுடன் கல்முனை சென்று தாயோரோடு தங்கி இரண்டு மூன்று நாள்கள் ஓய்வெடுத்துக்கொண்டான்.
(தொடரும் …… அங்கம் – 41)