அரசியல் வியாபாரம்: வெறும் போத்தலுக்கு புது லேபல்…..!                 (மௌன உடைவுகள்-95)

அரசியல் வியாபாரம்: வெறும் போத்தலுக்கு புது லேபல்…..! (மௌன உடைவுகள்-95)

 — அழகு குணசீலன் —

வியாபாரம் இலாபகரமாக ஓடவேண்டுமென்றால் பழைய பண்டத்தை விற்பனைசெய்யமுடியாது. நுகர்வோர் சலிப்படைந்துவிடுவார்கள். உற்பத்தியாளர்களும், இடைத்தரகர்களும், வியாபாரிகளும் நட்டமடையும் அளவுக்கு வியாபாரம் பாதிக்கப்படும்.ஆக, வியாபாரத்தை தூக்கி நிமிர்த்த  புது யுக்திகளை,தந்திரோபாயங்களை ஏதாவது ஒரு வழியில் தேடியாகவேண்டும். இதையே 83 குடிசார் அமைப்புக்களும்,7 கட்சிகளும் சேர்ந்து ‘தமிழ் தேசிய பேரவை’ என்று வெறும் போத்தலுக்கு லேபல் ஒட்டியிருக்கிறார்கள்.

 எண்ணிக்கையில்தான் 90 அன்றி மக்கள் ஆதரவவில் அல்ல.போத்தலை வாங்கி திறந்து பார்த்தால்தான் தாங்கள் வாங்கியது வெறும்போத்தல் என்று மக்களுக்கு -நுகர்வோருக்கு தெரியவரும். மக்களை ஏமாற்றும் அரசியல் வியாபாரம். கட்சிகள் ஏழு , மக்கள் ஆதரவு எத்தனை வீதம்?

தமிழ்த்தேசிய அரசியல்வரலாற்றில் இந்த பிஸ்னஸ் ஒன்றும் புதிதல்ல. ஜீ.ஜீ.பொன்னம்பலம், எஸ்.ஜே.வி.செல்வநாயகம் காலத்து பழையசரக்கு பிஸ்னஸ் தான். தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல் காலத்துக்கு காலம் கதிரை எண்ணிக்கையில் ஏற்படுகின்ற வீழ்ச்சியை தடுக்க, மக்களை ஏமாற்ற ஒட்டுகின்ற புது லேபல் இது. இந்த லேபலில் கம்பனியின் பெயரும், விபரமும் காலத்துக்கு காலம் மாறும். இது வரலாறு.

1970 தேர்தலில் தமிழரசுக்கட்சியின் தலைவர், செயலாளர், பொருளாளர் மூவரும் தோற்கடிக்கப்பட்டார்கள். அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் முக்கிய தலைவர்கள் தோல்வியடைந்தார்கள். இதனால் புது லேபல் ஒட்டவேண்டிய தேவை ஏற்பட்டது. கம்பனி தமிழர்கூட்டணி –  தமிழர் விடுதலைக் கூட்டணி, லேபல் உள்ளடக்கம் தனித்தமிழ் ஈழம். 1977 தேர்தலுக்கு   தமிழீழ சமதர்ம அரசை நிறுவுகின்ற சர்வஜன வாக்கெடுப்பு லேபல் ஒட்டப்பட்டது. கல்குடாதொகுதியைத் தவிர்த்து அனைத்து முகவர்களும் வெற்றி பெற்றார்கள்.

 ஆயதப்போராட்டத்தினாலும், 1983 கலவரத்தினாலும் வியாபாரம் நட்டத்தில் ஓட, கடையை மூடி இந்தியாவுக்கு ஓடி, 1987இல்  இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தம் போட்ட பிச்சையில் திரும்பி வந்து வியாபாரத்தை கண்ணை மூக்கைப்பார்த்து ஆரம்பிக்க முயற்சிக்கையில் புலிகள் விட்டு வைக்கவில்லை. ஒன்றுக்குப் பின் ஒருவராக போட்டுவிட்டார்கள். விட்டு வைத்தால் தங்களின் வியாபாரம் சரிவராது என்ற கவலை புலிகளுக்கு.

புலிகள் தங்கள் போத்தலில் கம்பனி புலி என்றும், லேபலில் ஏகபோகம் என்றும் ஒட்டி வியாபாரம் செய்தனர். சர்வதேச  தடை, விமர்சனங்கள், அழுத்தங்கள் காரணமாக லேபலை சற்று மாற்ற வேண்டி ஏற்பட்டது. நேரடியாக கம்பனி புலி என்று போடாமல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்று போட்டு  தமிழரசுக்கட்சியை முன்னால் விட்டு பின்னால் நின்று பிஸ்னஸை செய்தார்கள்.

முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் சிறிது காலம் காணாமல் போனோர், சர்வதேச விசாரணை, போர்க்குற்ற விசாரணை,  ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடர் என்று லேபல் வியாபாரம்  ஓரளவு ஓடினாலும் நின்று பிடிக்க முடியவில்லை.   தமிழ்த்தேசியகம்பனி என்பதற்காக மக்கள் வெறும் போத்தலை எத்தனை காலத்திற்கு வாங்குவார்கள் ?

2005 இல் இருந்து கதிரைக்கணக்கு குறைந்து கொண்டுவந்ததது. தேவை மீண்டும் ஒரு புது லேபல். மாதக்கணக்காக கூடிக், கலைந்து, மல்லுக்கட்டி, ஆளையாள் கொம்பிக் கூத்தாடி  புது லேபல் இணக்கம் பிறந்திருக்கிறது.  ‘தமிழ் தேசிய பேரவை’ போத்தலுக்குள் உருப்படியாக ஒன்றும் இல்லை .லேபல்  உள்ளடக்க விபரம் பொது வேட்பாளர் என்கிறது.

இன்றைய நிலையில் வடக்கு, கிழக்கில் தமிழ்த்தேசிய அரசியலில் பெரும் சரிவு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு தமிழ்த்தேசிய எதிர்ப்பு அரசியல் மட்டும் காரணமல்ல. அதைவிடவும் பாரிய சேதாரத்தை ஏற்படுத்தியிருப்பது கம்பனியின் பங்குதார முதலாளிகள், உள்வீட்டு முதலீட்டாளர்களுக்கு இடையிலான சண்டை. 

ஒருயொரு  கட்சி கூட்டமைப்பு என்ற லேபலில் அதாவது பங்குதாரர்கள் கம்பனியாக எப்படி லேபல் ஒட்டமுடியும்? பிரிந்த பங்குதாரர்கள் புது லேபல் ஒட்டியிருக்கிறார்கள். முந்தி பிரிந்தவர்கள், பிந்தி பிரிந்தவர்கள் எல்லாம் கம்பனியின் பெயரை மட்டும் மாற்றி லேபல் ஒட்டியிருக்கிறார்கள்தான். ஆனால் போத்தல் எல்லாக்கம்பனியிலும் வெற்றுப்போத்தலாகத்லான் உள்ளது.

இதனால் தான் ஏகபோகம் தகர்ந்து இப்போது ஏழு கம்பனிகள் புதிய கம்பனியில் இணைந்துள்ளன.

இந்த நிலையில் கிழக்கு மாகாணத்தில் மட்டும் அல்ல வடக்கிலும் வியாபாரம் களைகட்டவில்லை. தேசிய, பிராந்திய மாற்றுக் கட்சிகளின் பிஸ்னஸ் அந்தளவுக்கு நட்டத்தில்  ஓடவில்லை. முதலையாவது காப்பாற்ற முடியும் நிலையில் இருக்கின்றன. முதலுக்கு நட்டம்வராது என்று அவர்கள் நம்புகிறார்கள். மாற்று கம்பெனிகள் லேபலில் குறைபாடுகள் உள்ளபோதும்  கொஞ்சமாவது ஏதாவது இருக்கிறது. ஆகக்குறைந்தது 75 ஆண்டுகளாக அவர்கள் எங்களை ஏமாற்றவில்லை. அவர்கள் பிஸ்னஸ்க்கு புதியவர்கள் என்று கூறுகிறார்கள் மக்கள்.

 ஏமாற்றப்பட்டு, ஏமாற்றப்பட்டு ஒரு எல்லைக்கு வந்துவிட்டனர் மக்கள். குறிப்பாக திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில்  இந்த ஏமாற்றம் மக்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சம்பந்தரின் மரணமும், குகதாசனின் வரவும் இதில் மாற்றங்களை ஏற்படுத்தப் போவதில்லை. குகதாசன் ஏற்கனவே சுமந்திரனின் இடது கையாக அடையாளப்படுத்தப்பட்டவர். வலதுகையாகத் தொடர்பவர் சாணக்கியன். சம்பந்தர் மறைவு தமிழரசில் சுமந்திரனின் கையை ஓங்கச்செய்துள்ளது. மட்டக்களப்பு முன்னாள் எம்.பிக்களுக்கு  மங்கு சனி ஆரம்பித்திருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் நடந்த பொதுவேட்பாளர் கலந்துரையாடல் ஒன்றில் தமிழ்த்தேசிய கட்சிகளின் ஒற்றுமையின் அவசியம் முக்கிய பேசுபொருளாக இருந்துள்ளது. எல்லாவற்றையும் கேட்டு விட்டு வெளியே வந்த சுமந்திரன்  “தந்தை செல்வா தமிழ்க் காங்கிரஸில் இருந்து தனியாகப் பிரிந்து வந்தார். மக்கள் அவரை அங்கீரித்தார்கள்.  எல்லாவற்றையும் மக்களே தீர்மானிப்பர்”. என்று தன்னைச் சூழ நின்றவர்களிடம் சொன்னாராம். இதற்கு அர்த்தம் கற்பிக்கவேண்டிய அவசியம் இல்லை.

அமெரிக்க தூதரகத்தில் நடந்த விருந்தொன்றில் எல்லோரும் ‘ஒற்றுமையாக’ கலந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது பொதுவேட்பாளர் விடயம் என்னமாதிரி? என்று விடைபெற முன்னுக்கு நின்றவர்களிடம் கேட்டிருக்கிறார் அமெரிக்க தூதர். பின்னால் நின்ற சுமந்திரன் பாய்ந்து விழுந்து இவர்கள் ‘மடைப்பயல்கள்’  ‘SILLY PEOPLE’   அது ஒன்றும் சரிவராது என்று சொன்னாராம். அவர்களுக்கு சுமந்திரன் சொன்னதன் அர்த்தம் புரியவில்லை என்று கதை.

தமிழ்மக்கள் பேரவையில் இணையாமல், பொதுவேட்பாளர் கருத்தில் உடன்படாமல், தமிழரசுக்கட்சியின் தலைவராக சுமந்திரன் தெரிவு செய்யப்பட்டால் தமிழ்த்தேசிய அரசியல் வரலாற்றில் அது ஒரு திருப்புமுனையாக அமையும். 

‘தமிழ் தேசிய பேரவை’ ஜனாதிபதி தேர்தலை முன்னிறுத்தினாலும், உண்மையான முகம் அதுவல்ல. பாராளுமன்ற தேர்தலே உண்மை முகம். இதில் தமிழ் தேசிய பேரவை பொது அமைப்புகள் வேட்பாளர் பட்டியலில் பங்கு கேட்கும். அப்போது கட்சிகளின் நிலவரம் என்னவாகும்? இதில் வெல்லப்போவது தமிழரசு சுமந்திரனா? அல்லது தமிழ்த்தேசிய பேரவையா?

தந்தை செல்வா தமிழ்மக்களை கடவுளின் கையில் ஒப்படைத்தார். சம்பந்தர் சுமந்திரனின் கையில் ஒப்படைத்தாரா? இதுவே இன்றைய கேள்வி !.