சம்மாந்(ன்)துறை -வீர(ர்)முனை: பல நூற்றாண்டுகள் உறவும் சில பத்தாண்டுகள் பகையும். (பகுதி 4)

சம்மாந்(ன்)துறை -வீர(ர்)முனை: பல நூற்றாண்டுகள் உறவும் சில பத்தாண்டுகள் பகையும். (பகுதி 4)

 — அழகு குணசீலன் —

இத்தொடர் பேசுகின்ற நிலப்பரப்பில் சாதியக்கட்டமைப்பு  இருந்தும் அது  யாழ்குடாநாட்டுடன்  பார்க்கையில் ஒப்பிட்டளவில் மிகவும் தளர்ந்ததாக இருந்துள்ளது. இதற்கு இங்கு நிலவிய சமூகங்களுக்கு இடையிலான திறந்த மத, கலாச்சார உறவு காரணமாக இருக்கலாம். அன்று முதல் இங்கு பல்கலாச்சார பன்மைத்துவ சமூக உறவு பலமானதாக இருந்துள்ளது. கிறிஸ்தவம், இஸ்லாம் என்பனவற்றின் சமூக ஊடுருவல் இதை இன்னும் தளர்த்தியிருக்க வாய்ப்புண்டு. 

கோவில்பிரவேசம், கல்விக்கான தடைகள், கிணற்றில் நீர் எடுப்பதற்கான சமூக அநீதியை ஊக்குவிக்கின்ற தடைகளை ஆதாரப்படுத்த முடியவில்லை. அதற்காக சிறு சலசலப்பு, சச்சரவுகள் இடம்பெறவில்லை என்று அர்த்தம் கொள்ளத்தேவையில்லை. 

சமூகத்தில் வசதிகள் சமமாக பங்கிடப்படாமைக்கு நிலவுடமையை அடிப்படையாகக்கொண்ட பொருளாதார கட்டமைப்பு இருந்துள்ளது. இதனூடான பொருளாதார சுரண்டல், தங்கியிருத்தல், வேளாண்மை சமூகத்தில் இருந்த உட்கட்டுமான போடியார் முதல் வேளாண்மைக்காரன், முல்லைக்காரன் பிரிவுகளும், நிர்வாக ரீதியான, வன்னியனார், உடையார், விதானையார்,  வண்ணக்கர், மரைக்காயர், வட்டவிதானையார், தோம்புதர் போன்றவையைக் குறிப்பிடமுடியும்.

சீர்பாதகுலம் வரலாறு பேசுகின்ற செப்பேடு சாசனம் ஒன்றில் நிலப்பங்கீடு/ஒதுக்கீடு பற்றி அறிய முடிகிறது.

            ” கிண்ணறையம் வெளி கீற்றுத் துண்டு 

               மல்வத்தை. வெளி மல்வத்தைக்குளம்

                 தரவை முன்மாரி சரிசமமாகிவிடும் 

                  கரந்தை முன்மாரி கன சிறு நிலங்கள் 

                 நரசிங்க  னென நற்பெயர் பெறும் 

                 வரல்  சிங்கனுமே மானிய மாக 

                  சாசன  மெழுதி  சகலருக்கு  மீந்தான் “.

இந்த சாசனம் இன்றைய சம்மாந்துறை/ வீரமுனைப் பிரதேசத்தில் இன்றும் உள்ள கிராமங்கள், வயல்கள், குடியேற்றங்களை தெட்டத்தெளிவாக வெளிப்படுத்துவதாக உள்ளது.

பண்டைய குடியேற்றங்கள் கோயில்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருந்ததையும்  இலங்கையின் மேற்கு கரையிலும் தமிழர் குடியேற்றங்கள் இருந்ததை பேராசிரியர் சி. மௌனகுரு தனது “ஈழத்து தமிழ் நாடக அரங்கு” என்ற ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழர் ஒரு காலத்தில் சிறப்பாக வாழ்ந்த இன்னுமோர் பகுதியான சிலாபம், நீர்கொழும்பு  தொடக்கம் புத்தளம் வரையுள்ள நிலப்பகுதி பழங்காலத்தில் தமிழரான இந்துக்கள் வாழ்ந்த பகுதியாக இருந்தது. கோயில்களை மையமாகக் கொண்ட நிலமானிய அமைப்புமுறை நிலவிய அக்காலத்தில் இப்பகுதியில் வாழ்ந்த மக்களின் மையப்பகுதியாக முனீஸ்வரம் கோயில் அமைந்திருந்தது. 1613 ம் ஆண்டு போர்த்துக்கேயர் அமைத்த தோம்பில் இக்கிராமங்களின் பெயர்களை கொடுத்துள்ளனர். இத் தோம்பில் 64 கிராமங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது “

இன்றைய இப்பிரதேசத்தை நாம் உற்று நோக்கினால் தமிழர்கள், கிறிஸ்த்தவர்கள், முஸ்லீம்கள் நிறைந்த ஒரு பல்லின, பல்கலாச்சார, பன்மைத்துவ சமூகக்கட்டமைப்பே அங்கு இருக்கிறது. இது இந்த மூன்று மதம்சார் சமூகங்களுக்கிடையே கிழக்கில் நிலவுகின்ற அன்னியோன்னிய வாழ்வியலை ஒத்ததாக இருப்பதை கண்டு கொள்ளாமல் விடமுடியாது.

மட்டக்களப்பு மாநில மக்களின் பொருளாதார வாழ்வியல் தமிழ் -முஸ்லீம் சமூகங்களுக்கு இடையே பின்னிப்பிணைந்த ஒன்று. வியாபாரத்தை அடிப்படையாகக்கொண்ட பட்டாணியர்களுக்கும், பாரசீகர் களுக்கும் மற்றும் வேளாண்மையை பிரதானமாக கொண்ட தமிழர்களுக்கும் இடையிலான பலமான பொருளாதார உறவு. இந்த உறவில் மட்டக்களப்பு உப்பேரி குறிப்பாக புளியந்தீவு முதல் சம்மான் துறை வரையான  நீர்வழிப்போக்குவரத்தில் முக்கிய பங்கை வகித்திருக்கிறது. 

இது மட்டக்களப்பு மாநில வடக்கு – தெற்கு நீள்வெட்டுமுகம் என்றால்  கிழக்கு -மேற்காக படுவான் எழுவான் கரைகளை இணைக்கின்ற வாவித்துறைகளை குறுக்கு வெட்டு முகங்களாக கொள்ளமுடியும். வலைப்பின்னல் நீர்வழிப்போக்குவரத்தாக வாவிக்கரை போக்குவரத்து வாவிக்கு குறுக்காகவும், நெடுக்காகவும் இடம்பெற்றுள்ளதை பல்வேறு ஆய்வுத்தரவுகளும் உறுதி செய்கின்றன. இது பண்டைய காலம்முதல் இருந்துள்ளது.

இன்றைய மட்டக்களப்பு பெரியதுறை தொடக்கம் படுவான், எழுவான் கரைகளில் அமைந்துள்ள பலதுறைகளும், ஊர்ப்பெயர்களும் இதனை உறுதிசெய்கின்றன. வலைகட்டிய இறவு துறை, கன்னன்குடாத்துறை, மண்முனைத்துறை, அம்பிளாந்துறை, களுதாவளைத்துறை, பட்டிருப்புதுறை, குறுமண்வெளித்துறை, நீலாவணைத்துறை, கிட்டங்கித்துறை போன்றவை இவற்றில் முக்கியமானவை. மட்டக்களப்பு தமிழகம் வரலாற்று ஆய்வு நூலின் தகவல்களின் படி இத்துறை முகங்களூடாக மேற்கில் இருந்து செந்நெல், தேன், காட்டு மரங்கள், காய்கறிகள், கிழங்குகள், விறகு முதலியன மறு கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மட்டக்களப்பு வாவி ஒரு காலத்தே கிட்டங்கிதுறைக்கு அப்பால் நீண்டு கிடந்ததென்றும், அதன் தென்கோடியிலேயே சம்மாந்துறை துறைமுகம் அமைந்து பெரிய வியாபாரத்தலமாக விளங்கியது என்றும் ஆய்வாளர் பண்டிதர் வி.சி.கந்தையா குறிப்பிட்டுள்ளார். 

இந்திய வியாபாரிகளால் கொண்டு வரப்பட்ட ‘சம்மான்’ எனும் வள்ளங்கள் கரைதட்டிய துறையே சம்மாந் (ன்) துறையாயிற்று என்று கூறப்படுகிறது.  இப்பகுதியின் உற்பத்திப்பொருட்கள் குறிப்பாக நெல் சேகரிப்பு களஞ்சியங்களே கிட்டங்கிகள்.( நெற்கிடங்குகள்/நெற்குதங்கள்.) இப்பகுதி கண்டி இராச்சியத்தின் நெற்களஞ்சியமாக விளங்கியது என்ற வரலாறும் உண்டு. மட்டக்களப்பு நகரத்திற்கும் கிட்டங்கிக்கும் இடையே ஆங்கிலேயர் காலத்தில் மோட்டார் வள்ளப்போக்குவரத்து தொடர்பு இருந்ததாகவும் மட்டக்களப்பு தமிழகம் கூறுகிறது. பிற்காலத்தில் இக்கரையில் அமைந்துள்ள சவளக்கடை தென்கிழக்காசியாவில் குறிப்பிடக்கூடிய அரிசி ஆலையாக இருந்தமை இந்த வரலாற்றுக்கு மேலும் வலுவூட்டுவதாக உள்ளது.

இன்னும் வரும்……!