இரா.சம்பந்தர் : தமிழர் தேசியத்துக்கு   நிகராக சிங்கள தேசியத்தை நேசித்தவர்…! (மௌன உடைவுகள்- 95)

இரா.சம்பந்தர் : தமிழர் தேசியத்துக்கு   நிகராக சிங்கள தேசியத்தை நேசித்தவர்…! (மௌன உடைவுகள்- 95)

— அழகு குணசீலன் —

சிங்கள, தமிழ்த்தேசிய இனவாத அரசியல் வரலாற்றை திரும்பிப்பார்த்தால் ஒரு தேசியம் மறு தேசியத்தை அங்கீகரிக்காத போக்கே அவற்றின் வரலாறாகிறது. தோலை உரித்து செருப்பு தைப்பதுமுதல், எல்லாளன் இறைச்சிக்கடை வரையான இனவாத கருத்துக்கள் இந்த வரலாற்றின் பதிவுகள்.

இலங்கையின் சிறுபான்மையினரின் பாராளுமன்ற அரசியல் வரலாற்றில் அரை நூற்றாண்டுக்கும் மேலான அரசியல் அனுபவமும், முதிர்ச்சியும், முதுமையும், 32 ஆண்டுகால பாராளுமன்ற அரசியல் நெளிவு சுளிவுகளையும் அறிந்தவர் மறைந்த இரா.சம்பந்தர்.

முள்ளிவாய்க்காலுக்கு முன்னரும், பின்னரும் தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியலை தமிழீழ விடுதலைப் புலிகளோடு இணைந்தும் , தனித்தும் சுமக்கவேண்டிய பொறுப்பு அவருக்கு இருந்தது.

இந்த பொறுப்பை தமிழ்மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதான தலைமைத்துவமாக சரியாகச்செய்தாரா? இல்லையா? என்ற விமர்சனம் அவர்மீது இருக்கிறது. குறிப்பாக இந்த விமர்சனங்களை நிர்ணயிப்பது அரசியல் சூழலும், சந்தர்ப்பங்களுமாகவே அமைகிறது. சம்பந்தரின் அரசியலை அலதானித்தால் 2009 க்கு முன், 2009க்கு பின் என்று நோக்கினாலே புரிந்து கொள்ள முடியும்.

 இலங்கையிலும், புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் உள்ள தமிழ்த்தேசிய தீவிர போக்காளர்கள் -மிதவாதிகள், தமிழ்த்தேசிய பரப்பில் செயற்படும் வேறுகட்சிகள், தமிழர்தரப்பு மாற்று கட்சிகள், பெரும்பான்மை தேசியக் கட்சிகள், சக சிறுபான்மையினர் கட்சிகள் போன்றவற்றின் நோக்குகளில் இருந்து இந்த விமர்சனங்கள் எழுகின்றன. சம்பந்தரின் அரசியலில் முன்னுக்கு பின் முரணான சில செயற்பாடுகளையும், கருத்துக்களையும் கூட நாம் அவதானிக்க முடிகிறது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவராக புலிகளால் நியமிக்கப்பட்டவர் இவர், புலிகளின் முழுக்கட்டுப்பாட்டிலும், கண்காணிப்பிலுமே அரசியல் செய்ய வேண்டியிருந்தது என்பது ஒளிவு மறைவற்ற ஒன்று. அப்போது ரி.என்.ஏ. தலைமைத்துவம் அவரிடம் இருந்தாலும் சம்பந்தரின் கைகளும், வாய்களும் கட்டப்பட்டிருந்தன.

 பல நேர்காணல்களில் அவர் இதை மறுத்திருந்தபோதும் அல்லது அதை பகுதியளவில் தவிர்க்க முடியாததாக ஏற்றுக்கொண்ட போதும் உண்மைநிலை அதுதான். கட்சியின் சக பாராளுமன்ற உறுப்பினர்களை புலிகள் கொலைசெய்த நிலையில் வீண்வம்பில் மாட்டிக்கொள்ள அவர் விரும்பவில்லை. இந்த இடத்தில் ஆனந்தசங்கரியின் தலைமைத்துவத்துடன் ஒப்பிடுகையில் சம்பந்தரின் தலைமைத்துவம் புலிகளுக்கு எதிராக மிகவும் பலவீனமானது.

ஆனால் 2009 க்கு பின்னர் ரி.என்.ஏ. தலைவராக சிங்கள தேசியத்தோடு இயலுமானவரை ஒத்ததுப்போய்-விட்டுக்கொடுத்து தமிழர்தரப்பு இலக்கை எட்ட அவர் முயற்சித்துள்ளார். இந்த அணுகுமுறை சம்பந்தரை சிங்கள அரசியலில், முற்போக்கு, மாற்று சக்திகள் மத்தியில் உயர்த்தி இருக்கிறது.

2009 க்கு பின்னரான அவரின் எந்த அறிக்கையிலும், பேச்சிலும் ‘ஒன்றிணைந்த – பிரிக்கப்படாத -பிரிக்கமுடியாத என்ற ‘ஒற்றையாட்சி’ வார்த்தைகளை திரும்பத்திரும்பப் பயன்படுத்தி ஒரு வகையில் பிரிவினையை நிராகரிக்கின்ற செய்தியை தென்னிலங்கைக்கு வழங்கி சிங்கள தரப்பு அச்சத்தை போக்க அவர் முயற்சித்தார். அதில் அவர் வெற்றி கண்டாரா? இல்லையா? என்பது வேறு கேள்வி. தமிழ் தரப்பு நம்பிக்கையீனம் போல் சிங்களத்தரப்பில் உள்ள நம்பிக்கையீனத்தை முழுமையாக போக்க அவரால் முடியவில்லை. இதற்கு சிங்கள, தமிழ் கடும்போக்காளர்கள் சம்பந்தருக்கு குறுக்கே நின்றார்கள்.

சிங்கள தேசத்திற்கு இரா.சம்பந்தன் நீட்டிய மற்றொரு நேசக்கரம் இது. யுத்தம் முடிவடைந்ததும் சம்பந்தன் தலைமையில் தமிழில் தேசியகீதம் பாடப்பட்டு, சிங்கக்கொடி ஏற்றப்பட்டதே அந்த நேசக்கரம். இது தமிழ்த்தேசிய கடும் போக்காளர்களால் பெரிதும் கண்டிக்கப்பட்டது. தேசியக்கட்சிகளுடன் இணைந்து செயற்படும் தமிழ்கட்சிகள் இதுவரை தமிழ்த்தேசியம் இவர்கள் மீது வீசிய கற்களை திருப்பி வீசினார்கள்.

வடக்கு மாகாண சபை முதல்வராக முன்னாள் நீதியரசர் சி.வி. விக்கினேஸ்வரனை களம் இறக்குவதன் மூலம் ஒரு  ‘பொதுவேட்பாளராக’ கடும்போக்கு தமிழ்த்தேசிய சக்திகளிடம் இருந்து படிப்படியாக வெளியே வர சம்பந்தர் விரும்பினார். ஆனால் விக்கினேஸ்வரனிடம் சம்பந்தர் எதிர்பார்த்த அரசியல் இருக்கவில்லை. விக்கினேஸ்வரன் தனது தவறான தேர்வு என்பதை அவருக்கு பின்னரே வெளிச்சளானது. இது விடயத்திலும் சம்பந்தரின் தலைமைத்துவம், தீர்மானம் எடுக்கும் ஆளுமை, தீர்க்கதரிசனம் குறித்து கடுமையான விமர்சனங்களை அவர் கட்சிக்குள் சந்திக்க வேண்டி இருந்தது.

தென்னிலங்கைக்கு சம்பந்தர் வழங்கிய இன்னொரு செய்தி விக்கினேஸ்வரனின் பதவியேற்பு நிகழ்வை யாழ்ப்பாணத்தில் நடத்தாது கொழும்பில் ஜனாதிபதி மாளிகையில் செய்தது. கொழும்போடு தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண -ஒத்துழைக்க தயாராக இருக்கிறேன் என்பதே அது.

இந்த அரசியல் அணுகுமுறையின் தந்திரோபாயமாகவே நல்லாட்சிக்கான ஆதரவையும் பார்க்க வேண்டியதாகிறது. 1965 க்கு பின்னர் வெளியில் இருந்து அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குகின்ற இந்த அணுகுமுறையில் சம்பந்தர் தோற்றுப் போனார்.  நல்லாட்சி தன்னை ஏமாற்றி விட்டதை அவரே பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார். 

மற்றையது பிராந்திய அடிப்படையில் கிழக்கில் தமிழ்-முஸ்லீம் நல்லுறக்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை நிபந்தனையற்று வழங்க முன்வந்தார். முஸ்லீம் காங்கிரஸ் சம்பந்தரை ஏமாற்றியது , அவர் கொண்டிருந்த நம்பிக்கையை அவர்கள்  துஷ்பிரயோகம் செய்தார்கள்.. சம்பந்தர் எதிர்பார்த்த நல்லுறவுக்கு பதிலாக தமிழ்-முஸ்லீம் உறவு இடைவெளி மேலும் அதிகரித்தது.

இந்த இடத்தில் சம்பந்தர் மரணித்த 30.06.2024 ஞாயிற்றுக்கிழமை வீரகேசரி ஞாயிறு பத்திரிகையில் வெளியான கிழக்கு மாகாண- அம்பாறை  மாவட்ட மனக்குமுறல் ஒன்றை சம்பந்தரின் அரசியல் அணுகுமுறைக்கு கிடைத்த தோல்விக்கு சான்றாக காட்டமுடியும். காரைதீவு முன்னாள் பிரதேச சபை தவிசாளர் நடராசா ஜீவராசா கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் விடுத்துள்ள கோரிக்கை இது.

” தமிழ்த்தேசிய பரப்பிலுள்ள அரசியல்வாதிகள் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தை விளம்பரப் பொருளாகவும், வியாபாரப் பண்டமாகவும்  வைத்திருக்க விரும்புகின்றனரே தவிர இவ்விவகாரத்திற்கு தீர்வுகாண்பதிலும், அதற்கான சந்தர்ப்பங்களின் போதும் நழுவல் போக்கை கடைப்பிடித்து வருகின்றனர். கல்முனைத் தமிழ் மக்கள் கடந்த 35 வருடங்களாக பல்வேறு போராட்டங்களை நடாத்தி வந்துள்ளனர்.”  

“குறைந்த பிரதிநிதிகளைக் கொண்ட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபையில் தமது கட்சி சார்ந்த ஒருவரை முதலமைச்சராக்கி அழகு பார்த்தபோது அதிக பிரதிநிதிகளைக் கொண்டிருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அவர்களுக்கு பேராதரவு அளித்தது. அப்போது கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்திற்கு தீர்வைக்கண்டிருக்கலாம். “

” நல்லாட்சி அரசாங்கத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தலைமையில் ஆதரவு வழங்கிய போது இவ்விடயத்தினை இலகுவாக தீர்த்து வைத்திருக்கலாம். இதனைவிடுத்து யாசகனின் காலில் உள்ள புண் போன்று இந்த விடயம் இருந்தால் தமக்கு அரசியல் வியாபாரம் செய்யமுடியும் என்ற நிலையில் அரசியல்வாதிகள் விலகி வருகின்றனர்.”  இவ்வாறு ஆளுநருக்கான அந்தக்கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பந்தர் சிங்கள, முஸ்லீம் தரப்புக்களுக்கு  நீட்டிய நேசக்கரத்தை அவை பயன்படுத்திக்கொண்டனவே அன்றி தமிழ்மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கவில்லை. பொதுவாக சம்பந்தர் வடக்கு, கிழக்கு மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சினைகளில் அக்கறை காட்டவில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு.

இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் நல்லாட்சிக்காலத்தில் சம்பந்தர் தேசிய விவகாரங்களில் கவனம் செலுத்தவில்லை என்றும், தானும் ஒரு ஆளும்கட்சி உறுப்பினராகவே செயற்பட்டார் என்ற சர்வதேச விமர்சனங்களும் சம்பந்தர் மீது உண்டு.

அது போன்று எதிர்க்கட்சிகளுடன் இணைந்து நல்லாட்சியை வீழ்த்தும் பலம் ரி.என்.ஏ.க்கு இருந்தது. இனப்பிரச்சினைக்கான தீர்வை இருதரப்புக்கும் அழுத்தமாக அன்றைய அரசியல்சூழலை பயன்படுத்லியிருக்க முடியும் அதை அவர் செய்யவில்லை. இதனால்தான் நான்கு ஆண்டுகள் காத்திருந்து தமிழ்மக்கள் கணக்குத்தீர்த்தார்கள். மறுவார்த்தையில் தேசிய, மாற்று அரசியல் பிரதிநிதிகளை தெரிவு செய்தார்கள்.

சம்பந்தரின் மீள் பாராளுமன்ற பிரவேசம் ஒரு விபத்து. புலிகள் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.தங்கத்துரையை கொலை செய்ததால் அந்த வெற்றிடத்திற்கு அவர் கட்சியால் நியமிக்கப்பட்டார். சம்பந்தர் தன்னை ஒரு இன, மத சமநிலை சார்ந்த நவீன அரசியல் சிந்தனையாளராக காட்டிக்கோண்டபோதும் , அந்த அரசியல் ஊடாக அவர் தனிநபர் சார்ந்த நன்மைகளை அடைந்தாரேயன்றி தமிழ்மக்கள் சார்ந்து கூட்டு நன்மையை அடையவில்லை.

இலங்கை பாராளுமன்றத்தில் 2020 முதல் 20.06.2024 வரையான அமர்வு நாட்கள் 332. இதில் 42 நாட்களே அவர் பாராளுமன்றத்தில் சமூகமளித்திருந்தார். கடைசியாக அவர் பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டது 2024 . பெப்ரவரி, எட்டாம் திகதி. அதற்குப்பின்னர் அவர் செல்லவில்லை. கலந்து கொண்ட நாட்களில் கூட பாராளுமன்ற குழுவின் தலைவராக காத்திரமான குறிப்பிடக்கூடிய உரை எதையும் நிகழ்தவில்லை என்ற விமர்சனம் அவர் மீது உள்ளது.

சம்பந்தரின் அரசாங்க வாசஸ்தலவிவகாரம் ஊழல், அரச சொத்துக்களை வீண்விரயம் செய்தல் என்பனவற்றிற்கு எதிரான செயற்பாட்டாளர்களால் கண்டிக்கப்படுகிறது. பாராளுமன்ற கூட்டங்களில் 13வீதம் மட்டும் சமூகமளித்துவிட்டு வருடம் ஒன்றுக்கு 40 இலட்சம் வருமானத்தை சம்பந்தர் பெற்றதாகவும், அதே போல் அரசாங்க வாசஸ்தலத்தையும் , இரண்டு கார்களையும் அவரின் குடும்பம் பயன்படுத்தும் செலவு பல நூறு ஆயிரங்கள் என்றும் அறிக்கைகள் கூறுகின்றன. 

ஒரு வங்குரோத்து நாட்டில் இதனை எந்த வகையில் அரசியல் நேர்மையாக கொள்ளமுடியும்?

பொதுச்சொத்து துஷ்பிரயோகம், ஊழல்குறித்து கேள்வி எழுப்புவதற்கு அவருக்கும், அவரது கட்சிக்கும் இருக்கின்ற தார்மீக உரிமை என்ன?

இவற்றை மறைப்பதற்காகவே சம்பந்தர் தென்னிலங்கை அரசியலை திருப்திப்படுத்தும் வகையில் செயல்பட்டாரா?  

இதன் ஒரு பகுதிதான் இந்தியப் பிரதமரை டெல்லியில் சந்தித்து பேசுவதை அவர் தவிர்த்துக்கொண்டதா? 

இரா.சம்பந்தர் கண்ட பாராளுமன்ற உறுப்பினராக மரணிப்பது என்ற கனவு நனவாகியிருக்கிறது. 

போருக்குப் பின்னரான கடந்த 15 ஆண்டுகளில் தமிழ்மக்களின் பிரச்சினைகள் எதற்கும் தீர்வு காணப்பட்டதாக இல்லை.

இதற்கு வயோதிபத்தை காரணம் காட்டுவது எந்த வகையில் ஏற்புடையது? இது ஒட்டு மொத்த தமிழ்த்தேசிய அரசியல் பலவீனம்.

சம்பந்தரின் இறப்பு தமிழரசின் உள்வீட்டு மோதலுக்கு மேலும் வலுச்சேர்ப்பதாகவே அமையும். அதில் ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று மரபு ரீதியாக ஒப்பாரி வைக்க எதுவும் இல்லை. அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ்த்தேசிய அரசியலில் ஒத்தோடினார் என்பதைத்தவிர.

அவர் நன்கு வசதியாக வாழ்ந்து, அனுபவித்து 91 வது வயதில் மரணித்திருக்கிறார். இது  இலங்கையில் ஆண்களின் சராசரி இறப்பு வயதில் பல ஆண்டுகள் அதிகமானது. 

இனி எல்லாம் ……..

 ஐயா விட்டுச்சென்ற வைக்கோல் இழுத்த வழி…..!