சம்மாந்(ன்)துறை -வீர(ர்)முனை: பல நூற்றாண்டுகள் உறவும், சில பத்தாண்டுகள் பகையும். (பகுதி:3.)

சம்மாந்(ன்)துறை -வீர(ர்)முனை: பல நூற்றாண்டுகள் உறவும், சில பத்தாண்டுகள் பகையும். (பகுதி:3.)

— அழகு குணசீலன் —

“மட்டக்களப்பு” என்ற பெயருக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் அதன் புவியியல் அமைவிடமே முதன்மைக் காரணமாக கொள்ளப்படுகிறது. ஒட்டு மொத்த உப்பேரி தொட்டுச் செல்லும் முழு நிலப்பரப்பையும் குறிப்பதாக அமைகிறது. இதற்குட்பட்ட கிராமங்கள் குடா, குடி, முனை, வெளி, தீவு, காடு, ஊர், துறை, சேனை….. போன்ற விகுதியை பெயரில் கொண்டுள்ளன. சம்மாந்துறை பிரதேச இராஜதானி “நாடு காடு” என்றும் அழைக்கப்பட்டுள்ளதை ஆய்வுகளில் இருந்து அறியமுடிகிறது.

உப்பேரியின் வடக்கு எல்லையில் அமைந்திருந்த மட்டக்களப்பு தலைநகர், ஒல்லாந்தர் காலத்தில் புளியந்தீவில் கோட்டை அமைக்கப்பட்ட பின்னர் உப்பேரியின் தெற்கிற்கு மாற்றப்பட்டது என்பது மட்டக்களப்பு தமிழக வரலாற்றுப்பதிவு. இது ஒன்றும் புதுமையான ஒன்றல்ல. பண்டைய தலைநகர்கள் முதல் இன்றைய தலைநகர்கள் வரை ஆட்சி, நிர்வாக, அரசியல் மையங்களாக காலங்காலமாக மாற்றப்பட்டு வந்துள்ளன. அது போன்ற ஒரு நிகழ்வே சம்மாந்துறை, புளியந்தீவு என்பனவற்றின் மட்டக்களப்பு பெயர் இழப்பும், பெறுகையுமாக இருக்க வாய்ப்புண்டு. 

இப்பகுதியின் சமூகக்கட்டமைப்பானது ஆரம்பகால குடியேற்ற சமூகங்களான முற்குகர், சீர்பாதர், பட்டாணியரை கொண்டதாக அமைந்துள்ளது. இதனால்தான் வெளியக தாய்வழி சமூகக் கட்டமைப்பும், உள்ளக குடி பிரிவுகளையும் இங்கு காணமுடிகிறது. முஸ்லீம், முற்குகர் சமூகங்களுக்கு இடையிலான கலப்பு திருமணங்கள் பற்றி தமிழர்களான பல்வேறு ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அந்த ஆய்வுகளை உறுதிசெய்வதாக றமீஷ் அப்துல்லாஹ்வின் “கிழக்கிலங்கை கிராமியம்” உள்ளது.

“உண்மையில், குடி முறையின் வரலாற்று பூர்வீகம் இந்துக்களிடத்தில் இருந்து வந்ததுவே. இந்தியாவில் இருந்து வந்த முக்குவர்(முக்குகர்), வெள்ளாளர் (வேளாளர்), சீர்பாதக்காறர்கள், பரவர் (பரதவர்) போன்ற குடிகளும் கோத்திரங்களிலும் இருந்து தான் குடிவழக்குமுறை தோன்றுகின்றது. குறிப்பாக முஸ்லீம்களுக்கும் -முக்குவர்களுக்கும் இடையே இடம்பெற்ற கலப்புத்திருமணமே- இதற்குக் காரணமாகும். இதற்கு இந்துக்களிடத்தில் உள்ள எட்டுக்குடிகள் முஸ்லீம்களிடம் கலந்திருப்பது நல்ல ஆதாரமாகும்”. முஸ்லீம்களிடையே இன்று நிலவுகின்ற  40 குடிகள் றமீஷ் அப்துல்லாஹ்வின் ஆய்வில் பட்டியலிடப்பட்டுள்ளது. இவற்றில் கிழக்கில் தமிழர் மத்தியில் நிலவும் குடிகளும் அவற்றின் வாசமும் உண்டு.

             “சம்மாந்துறையாரே

             சங்ககெட்ட ஊராரே

             வெயிலேறித்  தண்ணிவாக்க –

             ஒங்க வேதமென்ன சிங்களமோ.”   

என்ற நாட்டுப்பாடல் வரிகள் சம்மாந்துறை  அன்றாட வாழ்வியல் மரபு சிங்கள பழக்கவழக்கங்களை ஒட்டியிருக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.

யாழ்ப்பாண சாதியக்கட்டமைப்பில் இருந்து மட்டக்களப்பு சாதியக்கட்டமைப்பு முற்றிலும் மாறுபட்டது. மட்டக்களப்பில் சனாதனம்- வர்ணாச்சிரம் பெரும் செல்வாக்கை செலுத்தி இறுக்கமாக்குவதில் தோல்வியடைந்துள்ளது. வேடர் நாட்டில் சிங்கங்களும் புலிகளும் ஆசிரியர் இதையே குறிப்பிடுகிறார். சாதி மட்டக்களப்பில்  இறுக்கமாக மட்டும் அல்ல வெறியாகவும் இல்லை. 

‘தமிழர் திருமணமரபுகள் மட்டக்களப்பு மாநிலம்’ என்ற கலாநிதி இ. பாலசுந்தரத்தின் ஆய்வுநூலுக்கு  ஈழத்துப் பூரடனார் என்று அழைக்கப்பட்ட கலாநிதி க.த. செலவ்ராஜகோபால் எழுதியுள்ள முன்னுரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“கலியாணம் செய்யும் போது அத்தருணத்தில் குடிமை செய்யும் வண்ணான், நாவிதன், எல்லோரும் கடுக்கண்டவர், வண்ணக்கர் எனும் ஊர்ப்பெரியவர்களும் சமூகமாயிருப்பர். அவ்வாறான திருமணம் பதிவுத்திருமணத்திற்கு சமமானது. தேசவழக்கம்  மரபை ஒல்லாந்தர் தேசவழமை சட்டமாக மாற்றினர். “கசாது” வைத்தல் “தோம்பு” வைத்தல் ஆனது” . என்று குறிப்பிட்டுள்ளார். தேசவழக்க மரபு திருமணத்தில் கடுக்கண்டவர், வண்ணக்கருக்கு சமமான அந்தஸ்த்தில்  கல்யாண சாட்சிகளாக வண்ணார், நாவிதர் இருந்துள்ளனர் என்பது மட்டும் அல்ல இவர்களின் சாட்சியங்கள் இல்லாமலும் தேசவழக்க கலியாணம் ஒன்றை செய்யமுடியாது என்பது சமூகத்தில் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.  முழுவியளத்திற்கே  கெட்ட சகுனமாக கருதப்படுகின்றவர்கள் சாதித்தடிப்பில் மங்களகரமான கல்யாணநிகழ்வில் முன்னிறுத்தப்படுகிறார்கள். இது மட்டக்களப்பு மண்ணைத்தவிர வேறு எங்கு சாத்தியம்? என்று கேட்கத்தோன்றுகிறது 

ஆய்வாளர் வெல்லவூர்க்கோபால் அவரது ‘மட்டக்களப்பு வரலாறு’ என்ற நூலில் “தமிழ்நாட்டின் எந்தப்பகுதியிலும் சீர்பாதர் என்ற ஒரு சமூகத்தினர் அடையாளப்படுத்தப்படவில்லை.” என்று கூறுகிறார். இது சரியான தகவல். ஏனெனில் இதற்கான பதிலை அருள். செல்வநாயகத்தின் சீர்பாலகுலவரலாறு எமக்கு தருகிறது. அரச குலத்தவர், அந்தணர், வேளாளர், வணிகர் ஆகிய மூன்று பிரிவினரையும் சேர்த்து வைத்து ஒரேகுலமாக ‘சீர்பாதகுலம்’ என்று தனது பெயரில் சீர்பாததேவி ஒரு சமூகப்பிரிவை நிறுவினார். இதனால் இந்தியாவில் இது தேடியும் காணமுடியாததுதான்.

இது பற்றிய கொக்கட்டிச்சோலை செப்பேடு சீர்பாதகுல குடிப்பிரிவுகள் பற்றி  இப்படிக்கூறுகிறது.

                                ‘ துரைபேர் வீரகண்டன் சிந்தாத்திரன்

                                     காலதேவன் காங்கேயன் 

                                  நரையாகிவெள்ளாகி முடவனென்னும்

                                           பெண்பழச்சி குடியேழ்காண்

                                    வரையாக இவர்களையும் வகுத்து வைத்து 

                                            மாநிலத்தில் ஒற்றுமையாய் வாழுமென்று

                                      திரையகல் சூழ்புவியரசன் சேர்த்து வைத்து 

                                                சீர்பாதம் என்று செப்பினானே ‘

‘பட்டாணியர் எனப்படுவோர் இஸ்லாம் மதம் தோற்றம்பெறுவதற்கான பாரசீகம், அரேபியாவில் இருந்து வந்தவர்கள். இவர்களின் நோக்கம் வியாபாரம். பட்டாணியர் உருதுமொழி பேசுபவர்களாகவும், அராபியர்கள் அரபுமொழி பேசுபவர்களாகவும் இருந்தனர். இவர்கள் திமிலரை வெளியேற்றி முற்குகரின் ஆதிக்கத்தை பலப்படுத்தினர். முற்குக குலப்பெண்களை மணந்தனர். ஏழாம் நூற்றாண்டை தொடர்ந்து இஸ்லாம் மதம் அரேபியா, பாரசீகத்தில் முதன்மை பெற்றது. அதன் தொடரில் இவர்கள் முஸ்லீம்கள் என்ற மதப்பெயரைப் பெறுகின்றனர். இவர்களின் வரலாறு முற்குகர்களின் எழுச்சிக்கால ஐந்தாம் நூற்றாண்டு வரலாற்று தொடராக அமைகிறது ‘  என்று மட்டக்களப்பு வரலாறு கூறுகிறது.

இன்னும் வரும்……..!