(அரசியல் – சமூக – வரலாற்று நாவல்)
— செங்கதிரோன் —
மறுநாள் காலை ஒன்பது மணிபோல் கோகுலன் கனகரட்ணத்தின் வாசஸ்தலம் சென்றடைந்தபோது அங்கே அவன் எதிர்பார்த்ததுபோலவே டாக்டர் உதுமாலெப்பை தனது மனைவி சகிதம் வந்திருந்தார்.
வீட்டின் உள்ளே அறையொன்றினுள் எல்லோருக்கும் காலை உணவு மேசையில் வைக்கப்பட்டு எல்லோரும் உணவு உண்பதற்காக ஆயத்தமாகிக் கொண்டிருக்கும்போதே கோகுலன் அங்கு போய்ச் சேர்ந்தான். கனகரட்ணம் கோகுலனையும் சாப்பிட அழைக்கக் கோகுலனும் அவர்களோடு இணைந்து சாப்பாட்டு மேசையில் போய் அமர்ந்தான். காலையுணவாக இடியப்பமும் மாசி போட்டிடித்த தேங்காய்ச் சம்பலும் மீன் சொதியும் வாழைப்பழமும் இருந்தன.
சாப்பிட ஆரம்பித்ததும் டாக்டர் உதுமாலெப்பையை நோக்கி கோகுலன் இதுதான் தருணமெனப் பேச்சை ஆரம்பித்தான்.
“டொக்டர் உங்களிட்டதான் கேட்கணுமெண்டிருந்தநான், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் நடவடிக்கைக் குழுவில் நீங்களும் ஒரு உறுப்பினர். மட்டக்களப்புத் தொகுதியில ஏன் ராசதுர, காசி ஆனந்தன் ரெண்டுபேரயும் போட்டிக்கு நிறுத்தினீங்க?” என்று கேள்விக் கணையைத் தொடுத்தான்.
“தம்பி கோகுலன்! அத விபரமாச் சொல்ல வேணும். ராசதுரயப்பத்திக் கன குத்தச்சாட்டெல்லாம் காசி ஆனந்தன் சொன்னவர். கட்சியின் தீர்மானங்களுக்கு மாறாக அவர் மந்திரிமாரப் போய்ச் சந்திக்கிறதயும் மந்திரிமார வரவேற்று அவங்க கலந்து கொள்ற கூட்டத்திலயும் போய் ராசதுர அரசாங்கத்த ஆதரிச்சிப் பேசி வாறதாகவும் தமிழரசிக் கட்சியோட ஒட்டாம நடந்து கொள்றதாகவும் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவக் ‘காவியத் தலைவி’ என்று வர்ணிச்சதாகவும் எண்டு இப்பிடிக் கன குத்தச்சாட்டுகளச் சொல்லி ராசதுர அண்ணனுக்கு வேட்பாளர் நியமனம் வழங்கப்படாதெண்டு வாதிட்டார்”. என்று டாக்டர் உதுமாலெவ்வை கூற,
“அதிலென்ன பிழ டொக்டர். எம்.பி ஆக இரிக்கிற ஒருவர் தன்ர தொகுதி அபிவிருத்தி வேலயளுக்காக மக்களிர பிரச்சனைகளுக்காக மந்திரிமாரயும் பிரதமரயும் சந்திக்கத்தானே வேணும். அது பெரிய பிரச்சன இல்லத்தானே” என்றான் கோகுலன்.
“அது சரிதான் கோகுலன். ஆனா கட்சி எடுக்கிற முடிவுக்கு மாறாக நடக்கிறாரெண்டிறதான் காசி ஆனந்தன்ட குத்தச்சாட்டு. கட்சியெண்டா கட்டுப்பாடு வேணும்தானே, அதத்தான் காசி ஆனந்தன் சுட்டிக் காட்டினவர்” என்றார் டொக்டர் உதுமாலெப்பை.
“இதில நீங்க என்ன சொன்னீங்க” என்று கேட்டான் கோகுலன். கோகுலன் இந்தக் கேள்வியைக் கேட்டதும் வழமைபோல் வாய்விட்டுச் சிரித்த டாக்டர் உதுமாலெப்பை,
“நான் காசி ஆனந்தனப் பார்த்துச் சொன்னன், ராசதுர அண்ணன் சுயநலவாதி என்றீங்க. நீங்க தியாகி, சுயநலக்காரன் விட்டுக்கொடுக்கமாட்டான், தியாகி நீங்கதானே விட்டுக் கொடுக்கணும் எண்டு.” டாக்டர் உதுமாலெப்பை இவ்வாறு கூறக் கேட்டதும் கனகரட்ணம் உட்பட சாப்பாட்டு மேசையில் அமர்ந்திருந்த எல்லோரும் சேர்ந்து சிரித்தார்கள்.
“டொக்டர், நான் ராசதுரைக்காகவும் கதைக்கல்ல.காசி ஆனந்தனுக்காகவும் கதைக்கல்ல. கட்சிக்காகத்தான் கதைக்கன். காசி ஆனந்தன் ராசதுரையில சுமத்தின குத்தச்சாட்டுக்கள கட்சிர மத்திய குழு விசாரிச்சு நடவடிக்க எடுத்திருக்கோணும். குத்தச்சாட்டு உண்மயெண்டு நிரூபிச்சிருந்தா வேட்பாளர் நியமனத்த காசி ஆனந்தனுக்கு மட்டும் குடுத்திருக்கலாம். ராசதுரக்கு வேட்பாளர் நியமனத்த குடுக்காம உட்டிருக்கலாம். மற்றப் பக்கத்தால காசி ஆனந்தன் ராசதுரையில சுமத்தின குத்தச்சாட்டு நிரூபிக்கப்படலெண்டா ராசதுரைக்கு மட்டும் வேட்பாளர் நியமனத்தக் குடுத்துப் போட்டுக் காசிஆனந்தனுக்குக் குடுக்காம உட்டிருக்கலாம்தானே. ரெண்டு பேருக்கும் குடுத்ததுதானே பிழயெண்டிரன்” என்றான் கோகுலன்.
“ஓம் கோகுலன்! நீங்க சொல்லிறது நியாயந்தான். உண்மையில என்ன நடந்ததெண்டா தேர்தல் நடவடிக்கைக் குழுவில இரிந்த பெரும்பாலான உறுப்பினர்கள் மட்டக்களப்புத் தொகுதி வேட்பாளர் நியமனமத்தக் காசி ஆனந்தனுக்குத்தான் குடுக்கோணும் எண்டுதான் முடிவெடுத்தாங்க” என்று கூறிய டாக்டர் உதுமாலெப்பையை இடைமறித்த கோகுலன்.
“அப்பிடியெண்டா அந்த முடிவ நடமுறப்படுத்தியிரிக்கலாம்தானே. அதுதான் முற. பிறகெப்பிடி அந்த முடிவ மாத்தின?”என்றான்.
“அண்ணன் அமிர்தலிங்கம்தான் அந்த முடிவமாத்தி ரெண்டு பேருக்கும் குடுப்பம். மட்டக்களப்பு ரெட்ட அங்கத்தவர் தொகுதிதானே. அதனால ஒருவரத் தமிழர் விடுதலைக் கூட்டணியிலயும் மற்றவரத் தமிழரசுக் கட்சியிலயும் நிறுத்துவம். மட்டக்களப்புத் தொகுதி மக்கள் முடிவெடுக்கட்டும் எண்டு சொல்லித் தேர்தல் நடவடிக்கக் குழுவச் சம்மதிக்க வச்சாரு” என்று தமிழர் விடுதலைக்கூட்டணியின் தேர்தல் நடவடிக்கைக் குழுக்கூட்டத்தில் என்ன நடந்ததென்பதைத் தேங்காய் உடைத்ததுபோலப் ‘பளிச்’சென்று வெளிப்படுத்தினார்.
“ஏன் என்ன காரணம்? என்ற எதிர்க் கேள்வி கோகுலனிடமிருந்து எழுந்தது.
“இதென்ன கோகுலன் உங்கட கேள்வி. செல்வநாயகம் ஐயா தமிழரசிக் கட்சிய ஆரம்பிச்ச காலத்தில இரிந்து மட்டக்களப்பில கட்சிய வேரூண்டி வளத்தவர் ராசதுர அண்ணன். தமிழரசிக்கட்சி ஆரம்பிச்சகாலத்தில மண்டூரில நடத்தின கூட்டத்தில சனமெல்லாம் எதிர்ப்புக்காட்டிக் கூட்டத்துக்கு கல்லெறிஞ்சாங்களாம். அப்பிடியிருந்த மட்டக்களப்பில கட்சிய வளத்தவர் ராசதுர அண்ணன். 1956 ஆம் ஆண்டிலிரிந்து கிட்டத்தட்ட இருபத்தஞ்சி வருசமா எம்.பி.யா இரிந்து ‘முடிசூடா மன்னன்’எண்டும் பேரெடுத்தவர். அப்பிடிப்பட்டவருக்குக் கட்சி வேட்பாளர் நியமனம் குடுக்காட்டி எப்பிடி?”
“மட்டுமில்ல இன்னொரு விசயத்தையும் அமிர்தலிங்கம் சொன்னார், முந்தியே ராசதுரைக்கும் அமிர்தலிங்கத்துக்குமிடையில உறவு நல்லா இல்ல எண்டு கத. ராசதுரைக்கு வேட்பாளர் நியமனம் குடுக்காம உட்டா அமிர்தலிங்கம் வேணுமெண்டுதான் அவருக்கு குடுக்கல்ல எண்டுதான் வெளியில சொல்லுவாங்க. அந்தப் பழி தன்னில வரப்படாதெண்டு சொல்லித்தான் அந்த முடிவ மாத்தினார். போனமுற எழுபதாம் ஆண்டில நடந்த தேர்தலில ரெட்டை அங்கத்தவர் தொகுதியான மட்டக்களப்பில தமிழரசிக் கட்சியில கேட்ட ராசதுரயும் சுயேச்சையாகக் கேட்ட ராஜன் செல்வநாயகமும் ரெண்டுபேரும் வந்ததானே. அதனால தமிழர் விடுதலைக் கூட்டணியில ராசதுரயும் வெண்டு தமிழரசிக்கட்சியில காசி ஆனந்தனும் வெல்லிறதுக்குச் சந்தர்ப்பம் இரிக்கித்தானே. ரெண்டுபேரும் வந்தாலும் வராலாமில்லயா” என்று அமிர்தலிங்கம் சொன்னவைகளை விபரமாக வெளிப்படுத்தினார் டாக்டர் உதுமாலெப்பை.
டாக்டர் உதுமாலெப்பை கூறிய விடயங்களையெல்லாம் கூர்மையாகக் காதில் வாங்கிக் கொண்ட கோகுலன் பின்வரும் விளக்கங்களைக் கொடுத்தான்.
1959 இல் நடைபெற்ற தேர்தல் தொகுதி எல்லைகள் மீள் நிர்ணயம் நடைபெற்றபோது மட்டக்களப்புப் பிதேசத்தில் சிறுபான்மையினராகவிருந்த முஸ்லிம்களுக்கும் ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்கவேண்டுமென்பதற்காகத்தான் மட்டக்களப்பு இரட்டை அங்கத்தவர் தொகுதியாக்கப்பட்டது. 1959 தேர்தல் தொகுதி எல்லைகள் மீள் நிர்ணயத்திற்குப் பின் நடைபெற்ற 1960 மார்ச், 1960 யூலை, 1965 ஆகிய எல்லாத் தேர்தல்களிலுமே முறையே இராசதுரையும், மாக்கான் மாக்காரும் – மீண்டும் இராசதுரையும் மாக்கான் மாக்காரும் -இராசதுரையும் அப்துல் லத்தீப் சின்னலெப்பையும் எனத் தமிழரொருவரும் முஸ்லிமொருவரும் என்றே தெரிவாகி வந்தனர். ஆனால் 1970 ஆம் ஆண்டுத் தேர்தலில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுமே தமிழர்களாகத் தெரிவாகினார்கள். இந்தத்தேர்தலில் தமிழரசுக் கடசியில் போட்டியிட்ட இராசதுரையும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடன் சுயேச்சையாகப் போட்டியிட்ட ராஜன் செல்வநாயகமும் தெரிவாகினார்கள். அதனை வைத்துக் கொண்டுதான் அமிர்தலிங்கம் இந்தத் தேர்தலிலும் தமிழர்விடுதலைக்கூட்டணி வேட்பாளர் இராசதுரை தமிழரசுக்கட்சி வேட்பாளர் காசி ஆனந்தன் இருவரும் முறையே முதலாவது மற்றும் இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குச் சாத்தியமுண்டு என எண்ணியிருப்பார். ஆனால் அது பிழையான எண்ணமாகும். தமிழ்ப் பிரதிநிதியொருவரும் முஸ்லிம் பிரதிநிதியொருவரும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய தொகுதியில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுமே தமிழர்களாக இருப்பதில் நியாயமில்லை. அது அத்தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதியாக உருவாக்கப்பட்டதன் நோக்கத்தையே சிதைத்து விடுவதாகும். முஸ்லிம்களுக்குரிய பிரிநிதித்துவத்தைத் தமிழர்கள் தட்டிப் பறிப்பதாகிவிடும்.
இந்த விளக்கத்தைக் கொடுத்த கோகுலன் டாக்டர். உதுமாலெப்பையிடம் “அப்பிடியெண்டா இந்த ‘எலக்சனி’ல பொத்துவில் தொகுதியில முதலாவது ரெண்டாவது எம்.பி.க்கள் ரெண்டுபேருமே யூ.என்.பில கேட்கிற ஜலால்டீனும் எஸ்.எல்.எப்.பில நிக்கிற முஸ்தபாவும் எண்டு முஸ்லிம்களாக வாறத ஏத்துக் கொள்றீங்களா?” என்று கேட்டான்.
“கோகுலன் நீங்க சொல்லறதில நியாயமிருக்கு. அப்பிடியெண்டா தேர்தல் நடவடிக்கைக் குழு என்ன செய்திரிக்கோணும் எண்டு சொல்லிறீங்க” என்று எதிர்க் கேள்வியை எடுத்து வைத்தார் டாக்டர் உதுமாலெப்பை.
“தேர்தல் நடவடிக்கக் குழு காசி ஆனந்தனுக்குத்தான் மட்டக்களப்புத் தேர்தல் தொகுதி வேட்பாளர் நியமனத்தக் குடுக்கோணுமெண்டு தீர்மானிச்சதாகச் சொல்றீங்க. அப்பிடிய உட்டிருக்கலாம்தானே. அந்த முடிவ ரெண்டுபேருக்கும் குடுக்கோணுமெண்டு மாத்தின பிழதானே”என்றான் கோகுலன்.
“ராசதுர 1956 இல இரிந்து இருபத்தொரு வரிசமாத் தொடந்து எம்.பி.ஆக இரிக்கார். கட்சியிர மூத்த உறப்பினர் மட்டுமில்ல மட்டக்களப்பிலயும் கிழக்குமாகாணத்திலயும் கட்சிய வளத்தவர். அப்பிடிப்பட்டவருக்கு இப்பிடி செய்யலாமா கோகுலன்” என்றார் டாக்டர் உதுமாலெப்பை.
“கட்சியெண்டு வந்தா கட்சிக்குக் கட்டுப்பாடு இருக்கோணும். தனிநபர மையமாக வச்சித் தீர்மானங்கள எடுக்கப்போடா. நான் ராசதுரைக்காகவும் கதைக்கல்ல. காசி ஆனந்தனுக்காகவும் கதைக்கல்ல. கட்சிக்காகத்தான் கதைக்கன். இந்த விசயத்தில கட்சி ஒரு தீர்க்கமான முடிவெடுத்திருக்கோணும். ஆருக்காவது ஒராளுக்குமட்டுந்தான் குடுத்திருக்கோணும் என்றிரதுதான் எண்ட வாதம்” என்று சுருக்கமாகக் கூறிய கோகுலன் கட்சியின் கடந்த காலத்தில் தந்தை செல்வா இருந்தபோது எடுக்கப்பட்ட சில தீர்க்கமான தீர்மானங்களை நினைவுபடுத்தினான்.
1965 இல் தமிழரசுக் கட்சி ஜக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து கூட்டரசாங்கம் அமைத்திருந்த காலத்தில் ‘அடையாள அட்டை மசோதா’ வை அரசாங்கம் கொண்டுவந்தது. தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழு அதனை ஆதரிக்க வேண்டுமென்று தீர்மானித்தது. அப்போது ஊர்காவற்துறைத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினரான தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த வி.நவரெத்தினம் அதனை எதிர்த்தார். வாக்கெடுப்பின்போது தமிழரசுக் கட்சியின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அம் மசோதாவை ஆதரித்து வாக்களித்தபோது கட்சியின் பாராளுமன்றக் குழுவின் தீர்மானத்திற்கெதிராக நவரெத்தினம் எதிர்த்து வாக்களித்தார். கட்சியின் பாராளுமன்றக் குழுவின் தீர்மானத்தை மீறியதற்காக நவரெத்தினம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். தமிழரசுக் கட்சியின் ‘மூளை’ என்று கருதப்பட்ட அவரையே கட்சி நீக்கியது. அவரைக் கட்சி நீக்கியது சரியா? பிழையா? என்பதற்கப்பால் கட்சிக்கு ஒரு கட்டுப்பாடு அவசியம். அது தனி மனிதர்களை அடிப்படையாக வைத்து இருக்கக்கூடாது.
அப்போது எஸ்.டி.சிநாயகம் ‘தினபதி’ பத்திரிகையின் ஆசிரியராகவிருந்தார். முன்பு இராசதுரையுடன் நெருக்கமாகவும் தமிழரசுக் கட்சியின் தீவிர தொண்டராகவும் இருந்தவர். தமிழரசுக் கட்சியுடன் முரண்பட்டுக் கட்சியிலிருந்து விலகிச் சென்று ‘தினபதி’ பத்திரிகையில் தமிழரசுக் கட்சியை எதிர்த்துச் செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டு வந்தார். நவரெத்தினம் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டதை ‘மூளை’ வெளியேறிவிட்டது, எஞ்சியிருப்பது ‘பிண்டம்’ தான் எனச் செய்தியாக்கினார்.
இன்னொரு சம்பவம்
மன்னாரில் தமிழரசுக் கட்சியின் தீவிர தொண்டராகவிருந்தார் வின்சன்ட் என்பவர். தமிழரசுக் கட்சியை விமர்சித்து ‘தினபதி’யில் அறிக்கையொன்றை வெளியிட்டமைக்காக அவரைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டுமென்ற பிரச்சினை எழுந்தது. தான் நல்ல நோக்கத்துடன்தான் அதாவது தமிழரசுக் கட்சியின் தவறைச் சுட்டிக்காட்டித் திருத்தவேண்டுமென்பதற்காகத்தான் அவ்வாறு செய்தேன். பூனை தன் குட்டியை தன் வாயால் கவ்வுவதுபோல என்று விளக்கம் கொடுத்தார். கட்சிக்குள் அதனை செய்திருக்க வேண்டுமே தவிர இப்படி பகிரங்கமாகப் பத்திரிகை அறிக்கை கொடுத்தது பிழையென்று வாதப்பிரதி வாதங்கள் எழுந்தன. இறுதியாகத் தந்தை செல்வா என்ன முடிவைச் சொல்கிறாரோ அதனைத் தான் ஏற்றுக் கொள்வதாகக் கூறினார் வின்சன்ட். இறுதி முடிவு தந்தை செல்வாவிடம் விடப்பட்டது. தந்தை செல்வா தனது வழமையான பாணியில் மெதுவாகவும் அமைதியாகவும் உறுதியாகவும் சொன்னார். வின்சன்ட் கட்சியை விட்டு விலகத்தான் வேண்டும் என்று.
இந்தச் சம்பவங்களை நினைவு படுத்திக் கூறிய கோகுலன், கட்சியின் கட்டுப்பாடு இப்படித்தான் இருக்க வேண்டுமென்றான்.
முடிவில் டாக்டர் உதுமாலெப்பையிடம் “நான் இன்னாருக்குக் குடுத்திரிக்க வேணுமெண்டு சொல்ல வரல்ல. ஆருக்காவது ஒராளுக்குத்தான் வேட்பாளர் நியமனம் குடுத்திரிக்கோணும். இரண்டுபேருக்கும் குடுத்ததுதான் பிழ” என்று மீண்டும் தனது நிலைப்பாட்டை அழுத்தமாகவும் தெளிவாகவும் முன்வைத்தான். டாக்டர் உதுமாலெப்பை பதிலேதும் சொல்லாமல் புன்முறுவலுடன் அமைதி காத்தார்.
குறுகிய அமைதிக்குப் பின் கோகுலன் சொன்னான், “டொக்டர் பிழ முதல்லே நடந்திட்டு. கீரியும் பாம்புமாக இருந்த ஜி ஜி பொன்னம்பலமும் தந்தை செல்வாவும் சேந்து தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற புதுக் கட்சிய உருவாக்கின உடன பழய கட்சிகளான தமிழ்க் காங்கிரசயும் தமிழரசிக் கட்சியயும் கலச்சிரிக்கோணும். கலயாததாலதான் இப்பிடியெல்லாம் நடக்கிது”
வாழைப்பழம் ஒன்றை உரித்துக் கையில் வைத்துக் கொண்டே டாக்டர் உதுமாலெவ்வை கோகுலனைப் பார்த்து “அதெண்டா உண்மதான்” என்று சொல்லிச் சிரித்தார்.
கோகுலனுக்கும் டாக்டர் உதுமாலெப்பைக்குமிடையே நடந்த நீண்ட சம்பாஷணையை அமைதியாக அவதானித்துக் கொண்டே தனது காலைச் சாப்பாட்டை முடித்துக் கொண்ட கனகரட்ணம் டாக்டர் உதுமாலெப்பையின் சிரிப்பைத் தொடர்ந்து,
“மட்டக்களப்புத் தொகுதிப் பிரச்சனய இப்ப கதைச்சு பிரையோசனமில்ல தம்பி. அது நடந்து முடிஞ்சுபோச்சு. பொத்துவில் தொகுதி விசயத்திற்கு வருவம்” என்று சிரித்துக் கொண்டே கூறியபடி கைகளைக் கழுவினார்.
கோகுலனும் டாக்டர் உதுமாலெப்பையும் புன்னகைத்தவாறே அமைதியாகினர்.
காலை உணவின் நிறைவாக எல்லோருக்கும் இஞ்சி போட்ட தேனீர் பரிமாறப்பட்டது.
தேனீரைச் சுவைத்துப் பருகிவிட்டு எல்லோரும் எழுந்து வீட்டின் வெளி விறாந்தையில் வந்தமர்ந்தனர்.
கனகரட்ணம் தனது சாய்மனைக் கதிரையின் கைகளை முன்பக்கம் நீளமாகத் திருப்பி அவற்றின் மேல் கால்களை நீட்டி வைத்துக் கொண்டு கதிரையில் சாய்ந்தார். அன்று தேர்தல் பிரச்சார வேலைகளுக்கு எங்கும் வெளிக்கிடாமல் ஓய்வெடுத்து ஆதரவாளர்களை வீட்டில் சந்திப்பதே அன்றைய நிகழ்ச்சி நிரலாக இருந்தது. டாக்டர் உதுமாலெப்பையும் மனைவியும் விடைபெற்று வெளியேறினர்.
(தொடரும்……….. அங்கம்-37)