— அழகு குணசீலன் —
தி. லஜபதிராய் தமிழ்நாட்டின் மானிடவியல் ஆய்வாளரும், மூத்த சட்டத்தரணியும் ஆவார். சமூகங்களின் வரலாறு, முரண்பாடுகள் தொடர்பான ஆய்வுகளில் இந்தியாவிலும், இந்தியாவுக்கு வெளியிலும் நன்கு அறியப்பட்டவர். இலங்கையின் இனப்பிரச்சினை- அதனூடான சாத்வீக, ஆயுதப்போராட்டம், 30 ஆண்டுகால யுத்தம், தீர்க்க தரிசனம் அற்ற அரசியல் முடிவுகள், அதன் விளைவுகள் என இவற்றை மானிடவியல் நோக்கில் ஆய்வுசெய்து எழுதியுள்ள மானிடவியல் வரலாற்று ஆய்வுநூல் ‘வேடர் நாட்டில் சிங்கங்களும் புலிகளும்.’
இந்த நூலில் பேசப்படுகின்ற விடயங்கள் குறித்து அவருடனான நேர்காணல் ஒன்றில் ‘ தமிழ் TRIBES’ தளத்தில் கூறிய கருத்துக்கள். செவ்விகண்டவர் எழுப்பிய கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும், மேலும் மேலதிக தகவல்களுடன் விரிவான விளக்கங்களை ,விபரங்களை அப்பேட்டியில் காணவும், கேட்கவும் முடிந்தது. ‘அரங்கம்’ வாசகர்களுக்காக நூலாசிரியர்- ஆய்வாளர் தி.லஜபதிராயின் கருத்துக்களை தொகுத்து தருகிறது மௌன உடைவுகள்.
நேர்காணலுக்கு செல்வதற்கு முன்னர் ‘வேடர் நாட்டில் சிங்கங்களும் புலிகளும் ‘ நூலாசிரியர் நேர்காணலில் கோடிட்டுக் காட்டியுள்ள முக்கிய அம்சங்களின் சாராம்சங்கள் இவை.
1. இலங்கையின் தமிழர்பிச்சினையில் பேசப்படுகின்ற விடயங்கள் மலையயக, கிழக்கு, யாழ்ப்பாண மூன்று தமிழ் சமூகங்களுக்கும் பொதுவானவையா?
2. விடுதலைப்புலிகள் அமைப்பில் கிழக்கிற்கு போதுமான பிரதிநிதித்துவம் இல்லை என்கிறார் கருணா. அதை கிழக்கு அங்கீகரிக்கிறது. அதன் காரணமாக பிராபாகரனின் கொடும்பாவி அங்கு எரிக்கப்படுகிறது.
3. தரப்படுத்தல் பற்றி நெடுமாறன், கொளத்தூர் மணி, கோவை ராமக்கிருஷ்ணன், சு.ப.வி, ஜெகத்கஸ்பார் ஆகியோருடன் பேசினேன். சு.ப.விக்கு மட்டுமே தரப்படுத்தல் தற்போது இலங்கையில் இல்லை என்பது தெரிந்திருந்தது. அங்கு இருப்பது ஒருவகை இடஒதுக்கீட்டு முறை என்பதை சு.ப.வி. ஏற்றுக்கொள்கிறார்.
4. தமிழர்களோ, சிங்களவர்களோ தாங்கள் தான் இலங்கையின் முதற்குடி என்று உரிமை கோருவது தப்பு.
5. இலங்கையில் புத்த கோயில் உள்ள இடங்களில் கண்ணகிகோயில் இருக்கிறது.
6. அநாகரிக தர்மபால, ஆறுமுகநாவலர், விவேகானந்தர் எல்லோரும் அவரவர் மதம் சார்ந்து பணியாற்றினர்.
7.அல்பிரட். துரையப்பா தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்காக குரல் கொடுத்தவர்.
இவ்வாறு இலங்கையின் சுதந்திரத்திற்கு முன்னரானதும், பின்னரானதுமான பல சமூக கட்டமைப்பை, அரசியல் அணுகுமுறைகளை பக்கச்சார்பற்று கேள்விக்குட்படுத்தி, அதற்கான பதிலையும் தேடுகிறது ‘வேடர் நாட்டில் சிங்கங்களும் புலிகளும் ‘.
இனி நாம் நேர்காணலுக்குள் புகுந்தால்………..!
*கேள்வி: 2009 இல் இலங்கையில் போர் முடிந்துவிட்டது. அப்படியிருக்க 2003 இல் இந்த நூல் வெளிவரக்காரணம் என்ன?
ஆசிரியர்: இதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம். ஒன்று இலங்கை அரசியல், இந்தியாவோடு நெருக்கமான தொடர்புடையது. குறிப்பாக தமிழீழம் கேட்கும் அரசியலும் தமிழ்நாட்டு அரசியலும் தொடர்புபுடையவை. சீமான் அரசியலும் அதனோடு தொடர்புடையது.
இரண்டாவது காரணம்: தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகளுக்கு இலங்கை சமூகங்களின் உண்மைநிலை தெரியாது. தரப்படுத்தல் தொடர்பாக நிறைய தவறுதலான புரிதல்கள் இருக்கு. இன்றும் அந்த முறை இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். இந்த நூலுக்காக நெடுமாறன், கொளத்தூர் மணி,கோவை ராமக்கிருஷ்ணன், ,சு.ப.வி, ஜெயத்கஸ்பார் ஆகியோரோடு பேசினேன் . சு.ப.வி.க்கு மட்டுமே தரப்படுத்தல் முறை இப்போது இல்லை என்பதும், தற்போது அங்கு இருப்பது ஓரளவுக்கு தமிழ்நாட்டு இட ஒதுக்கீட்டு முறையை ஒத்தது என்பதும் தெரிந்திருந்தது. மற்றையவர்கள் இப்போதும் இலங்கையில் தரப்படுத்தல் இருப்பதாக தப்பாக நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.
* கேள்வி: சிங்கள பேரினவாதத் தவறை முதன்மைப்படுத்தாது, விடுதலைப்புலிகள் மீதான குற்றச்சாட்டை முதன்மைப்படுத்துவது உங்கள் நோக்கமா?
ஆசிரியர்: தமிழர்கள் தான் தப்பு செய்தார்கள் என்று நான் சொல்லவில்லை. ‘இன்னா நாற்பது -இனியவை நாற்பது’ இரண்டும் புத்தகத்தில் இருக்கு. ஆனால் விடுதலைப்புலிகள் பக்கத்தில் இனியவை நாற்பது அதிகம் இல்லை. விடுதலைப்புலிகள் மட்டும் தவறு என்று நான் சொல்லவில்லை.போராட்டத்திற்கு சிங்கள பேரினவாதம் காரணமாக இருந்தது.
‘ROAD TO NANDIKADAL’ என்ற நூலில் கமல் குணரெட்ண முப்பதாண்டு போருக்கு சிங்களம் மட்டும் சட்டம் முக்கிய காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். அது போல் தரப்படுத்தல் இன்னொரு காரணமாக இருந்தது. தமிழ்- சிங்கள சமூகங்களுக்கு இடையே நிறைய ஒற்றுமைகளும், சில வேறுபாடுகளும் உண்டு.
சிங்கள சமூகத்தில் .பல்வேறுபட்ட சாதிகள் இருக்கு. கொய்கமா (வேளாளர் சமூகம்) துரவா (கள் இறக்குவோர் சமூகம்), கரவா (மீனவர் சமூகம்). இவை முன்னேற்றம் அடைந்தவை. பின்தங்கியுள்ள சமூகங்கள் உண்டு. இவர்களை விளிம்பில் இருந்து மையத்திற்கு கொண்டு வருவதற்காக அரசாங்கத்தால் சில திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.
இலங்கையில் கல்வி, வேலைவாய்ப்புக்காக அரசாங்கத்தில் தங்கியிருக்கவேண்டியுள்ளது. ஆரம்பக்கல்வி முதல் உயர்கல்வி நிலையங்கள் வரை அரசாங்கமே நடாத்துகிறது. இதனால் இந்தியாவோடு ஒப்பிடமுடியாது. தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் பொதுவான பிரச்சினைகள் இருக்கு. இதனால் வடக்கை போன்று, தெற்கில் ஜே.வி.பி. கிளர்ச்சி ஏற்பட்டது.
விடுதலைப்புலிகள் இராணுவரீதியாக வலிமை பெற்ற போது சமஷ்டி நோக்கி முன்னேறி இருக்கவேண்டும். இது ஒரு முரண்பாடு. சமஷ்டி குறித்து அன்ரன் பாலசிங்கம் சின்ன சமிக்ஞை கொடுத்த போது அவர் புலிகள் அமைப்பில் இருந்து ஒதுக்கப்பட்டார்.
* கேள்வி: மானிடவியல் கண்ணோட்டத்தில் இந்த நூலைத் தொடங்குகிறீர்கள். இதன்படி தமிழ்நாட்டு அரசியல் இன முரண்பாடு உண்டா?
ஆசிரியர்: பழ.நெடுமாறன், பாவை.சந்திரன், போன்றவர்களும் பிரபாகரன் பற்றிய நூலைவெளியிட்ட கிழக்குபதிப்பகத்தாரும் ‘ மற்றும் ஏராளமான நூல்களும் ‘சிங்கள காடையர்கள் ‘ என்றே பேசுகின்றனர்/பேசுகின்றன. இது ‘பொறுக்கி’ என்பது போன்றது. சிங்கள ஆரியர்கள் என்றும் பலர் பயன்படுத்துவர். ‘இலங்கையில் சிங்களவர்கள் ‘ என்ற நூலை எழுதிய பேராசிரியர்கள் சண்முகலிங்கம், பக்தவசலபாரதி ஆகிய இருவரும் இதுபற்றி குறிப்பிட்டுள்ளனர். மாறாக இப்படி எழுதுபவர்களும், பேசுபவர்களும் இலங்கைக்கு போகாதவர்கள்.
* கேள்வி:இலங்கைக்கு போகாதவர்கள் என்று சொல்வதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்?
ஆசிரியர்: இலங்கை முழுக்க புத்த கோயில்கள் உள்ள இடங்களில் கண்ணகி வழிபாடு -பத்தினி வழிபாடு இருக்கு. கிழக்கில் பாணமையில் தமிழர்கள், சிங்களவர்கள் இணைந்து கண்ணகி வழிபாடு செய்கிறார்கள். புத்தர் கோயிலில் முருகன், கண்ணகி,காளி சிலைகளையோ, படங்களையோ காணமுடிகிறது.
கரவா சமூகத்தில் தமிழ்-சிங்கள வேறுபாடு குறைவு. மேற்கு கரையில் தமிழ்பேசுகின்ற சிங்கள மீனவர்கள் இருக்கிறார்கள். ‘UNDER THE BO TREE’ என்ற நூலில் அதன் ஆசிரியரான துருக்கி அறிஞர் வடக்கு கிழக்கில் உள்ள திருமண முறை பற்றி எழுதியுள்ளார். தமிழர்களிடையே சாதி வெறி இருக்கிறது. உண்மையைச் சொல்லவேண்டும். தமிழர்கள் என்பதால் சாதி வெறியற்றவர்கள் என்று சொல்ல முடியாது.
“சிங்களவர்களிடம் சாதிப்பிரிவு இருந்தாலும் தமிழர்கள் மாதிரி இறுக்கமாக இல்லை என்கிறீர்களா?” என்ற நேர்காண்பவரின் குறுக்கீட்டுக்கு “தமிழர்கள் மாதிரி வெறியாக இல்லை ” என்கிறார் ஆசிரியர்.
சிங்களவர் மத்தியில் சாதிப்படிமுறைகள் இருக்கு. ஆனால் அது வெறியாக இல்லை. சாதி மாறிக்கல்யாணம் கட்டியதற்காக கௌரவக்கொலைகள் நடக்கவில்லை. கரவா நிக்காய போன்ற சாதியடிப்படையிலான துறவு மடங்கள் இருக்கு. அதேபோல் ரமண நிக்காய போன்ற சாதியற்ற துறவு மடங்களும் இருக்கு .
கொய்கமா சமூகம் தான் ஆட்சி அதிகாரம் கொண்டது. ஆனால் சிங்கள சமூகத்தில் ஏற்பட்ட ஒரு சுழற்சி பிரேமதாசாவை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தியது. இந்த மாற்றம் வடக்கில் நடக்கவில்லை. புலிகள் சாதியை அழித்துவிட்டார்கள் என்ற தவறான பேச்சு இங்கு இருக்கு.
இதனால் தான் நேரடியாகப் போய்ப்பார்த்தால் தான் இவற்றை புரிந்து கொள்ள முடியும் என்கிறேன். இவற்றை நாம் Under the Carpet க்குள் போட்டு மறைக்க முடியாது.
* கேள்வி: வேடர்களோடு சிங்களவர்கள் கலந்துள்ளார்கள் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்……..?
ஆசிரியர்: ஆம் . அங்கு சமத்துவம் இருக்கிறது. சனாதனம் இல்லை. இதனால் வேடர்களோடு சிங்களவர்கள் கலந்துள்ளனர். தமிழர்கள் மத்தியில் இது நடக்கவில்லை. சிங்களவர்கள் சமத்துவ கண்ணோட்டத்தில் பார்தததை தமிழர்கள் சனாதனக்கண்ணோட்டத்தில் பார்த்தனர்.
* கேள்வி: அநகாரிக தர்மபாலவை ஒரு முற்போக்கு துறவியாக காட்ட முற்படுகிறீர்கள்….? ஆனால் அநகாரிக தர்மபால மலையக, முஸ்லீம்,கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக செயற்பட்டவர்தானே?
ஆசிரியர்: இது ஆறுமுகநாவலரோடு ஒப்பிடுகின்ற ஒரு விடயம். ஆறுமுக நாவலர் பள்ளிக்கூடங்களில் சாதியடிப்படையை ஆதரித்தார். அநகாரிக தர்மபாலவை விடவும் வடக்கே உள்ள சாதித்தமிழர்கள் தான் மலையகத்தமிழர்களை ‘கூலித்தொழிலாளர்கள்’ என மிக மோசமாக கூறினர். அநகாரிக தர்மபாலவின் வைத்திய நிலையங்களில் எல்லோருக்கும் வைத்தியம் செய்யப்பட்டது.
அநகாரிக தர்மபால இந்தியாவில் அதிக காலம் வாழ்ந்தார். அவர் பௌத்தமத கருத்துக்களை எடுத்துக்கொண்டார். புத்தர் நிர்வாணா அடைந்த இடம் பீகாரில் உள்ளது. அது இந்து மடமாக இருந்தது. அந்த இடத்திற்காக போராடியவர் அநகாரிக தர்மபால. அவரை முழுக்க முழுக்க இனவாதியாகச் சொல்ல முடியாது. இது இரு கோடுகள் தத்துவம். ஆறுமுக நாவலருடன் ஒப்பிடும்போது அநகாரிக தர்மபாலவின் கோடு பெரிதாக உள்ளது.
அமெரிக்காவில் சகோதரிகளே, சகோதரர்களே என்று பேசிய விவேகானந்தர் நாடார்களை கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை. ஆனால் இருவரும் நண்பர்கள். இருவரும் அவரவர் மதம் சார்ந்து மக்களை முன்னேற்ற விரும்பினர்.
*கேள்வி: உங்களது நூலில் எல்லா இடங்களிலும் தமிழர்கள், சைவம் என்று தொடர்புபடுத்துகிறீர்கள் இல்லையா?
ஆசிரியர்: நூலில் எந்த இடத்திலும் யார் முந்தி வந்தார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியாது. இலங்கையில் பழங்குடி மக்கள் வேடர்கள் இருந்தார்கள். இந்தியாவிலும் அந்தமான் -நிக்கோபார் தீவுகளில் உள்ள ஆபிரிக்க இனம்தான் பூர்விகம். ஆரியரும், திராவிடரும் பூர்வீகக்குடிகள் அல்ல. பீகாரில் இந்துக்கோயிலில் ஒரு நாளைக்கு பதினைந்து ஆடுகள் பலிகொடுக்கப்பட்டன.
இலங்கையில் வேடர்கள் பேசிய மொழி தமிழும் அல்ல. சிங்களமும் அல்ல. வேடர்கள் சிங்களவர்களோடு கலக்கிறார்கள். கொய்கமா உயர்சாதியினருக்கும் வேடர்களுக்கும் இடையே திருமண உறவு இருக்கு.
இவர்கள் கொய்கமா உயர்சாதியின் ஒரு சமூகமாக கருதப்படுகிறார்கள். கிழக்கில் ஒரு சில இடங்களில் தமிழ்பேசும் வேடர் குடிகள் உண்டு. ஆனால் கலப்பு ஏற்படவில்லை.
*கேள்வி: அது வேடர்களுக்கான நாடு அங்கு தமிழர்களும், சிங்களவர்களும் குடியேறினார்களா?
ஆசிரியர்: அப்படியல்ல. எல்லா நாடுகளும் குடியேறிய நாடுகள் தான்.அதனால் தமிழர்கள் முதல், சிங்களவர்கள் முதல் என்பதும் தப்பு. மகாவம்சம், இராமாயணக் கதைகளை கூறி ஒரு நாடு இன்னாருடையது என்று கூறமுடியாது. விஜயனின் வழித்தோன்றல்கள் என்பதும், இராவணன் வழித்தோன்றல்கள் என்பதும் தப்பு.
* கேள்வி: மலையகத்தமிழர்களை யாழ்ப்பாணத்தமிழர்கள் கேவலமாகப்பார்தத்ததாக சொல்கிறீர்கள். ஈழத்துக் காந்தி என அழைக்கப்பட்ட தந்தைசெல்வா மலையக தமிழர்களின் வாக்குரிமைக்கு குரல்கொடுத்தவர். நீங்கள் அவரை தோட்ட முதலாளி என சிறுமைப்படுத்துகிறீர்களே?
ஆசிரியர்: கோயில் பிரவேசத்தடையில் அவர் தலையிடவில்லை. நான் கிறிஸ்த்தவன் தலையிட மாட்டேன் என ஒதுங்கி விட்டார். நாம் எல்லோரும் தமிழர்கள் என்று அவர் சொல்லவில்லை. ஆனால் அவரை விடவும் சிறந்த தலைவர் இல்லை. வேளாள கிறிஸ்த்தவர்கள் இன்றும் உயர்சாதியினராகவே கருதப்படுகின்றனர்.
தந்தை செல்வா இரண்டு ஒப்பந்தங்களை இலங்கை அரச தலைவர்களோடு செய்தார். முதலாவது ஒப்பந்தம் மலையகத்தமிழர் பற்றி பேசுகிறது. இரண்டாவது ஒப்பந்தத்தில் மலையகத்தமிழர் பற்றி எதுவும் இல்லை.
தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் நாம் ஒரு கண்ணாடியை போட்டுக்கொண்டே இலங்கையைப் பார்க்கிறோம். யாழ்ப்பாணத்தார் என்ன சொல்கிறார்களோ அதுதான் இலங்கை நிலையாகிறது. இது தவறு.யாழ்ப்பாண இலங்கைத்தமிழர்களின் அணுகுமுறை பற்றி சரவணன் ‘கள்ளத்தோணி’ என்ற நூலில் எழுதியுள்ளார். வாமதேவனும் எழுதியுள்ளார்.
மொழி, சமயம், கல்வி, வேலைவாய்ப்பு இவைதான் முக்கியமான நான்கு பிரச்சினைகள். தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே மொழிதான் பிரச்சினை. மற்றயவை இருதரப்பினருக்கும் பொதுவானவை. பொதுவான பிரச்சினைகளை தமிழர்களுக்கு மட்டுமானதாக காட்டுவது தப்பு.
அதேவேளை இந்த பிரச்சினைகள் -கேள்விகள் மூன்று தமிழ் சமூகங்களுக்கும் பொதுவானவையாக இல்லை.
மலையகத் தமிழர்கள் ஒரு பல்கலைக்கழகம் கேட்கிறார்கள். இந்திய அரசோ, தமிழ் நாடோ அவர்களுக்கு உதவுவதாக இருந்தால் அவர்களுக்கு ஒரு பல்கலைக்கழகம் அமைத்துக் கொடுக்க வேண்டும். மலையகத்தில் கல்வி, வேலைவாய்ப்பு பிரச்சினைகள் உண்டு. இலங்கையுடனான சாஸ்திரி, இந்திரா காந்தி ஒப்பந்தங்கள் காரணமாக இந்தியாவுக்கு வந்தவர்கள் பதினைந்து ஆண்டுகளில் மருத்துவர்கள், பொறியியலாளர்கள், வழக்கறிஞர்களாக உயர்கல்வி பெற்று முன்னேறியுள்ளனர். ஆனால் 150 ஆண்டுகளாக உள்ள மலையகத் தமிழர்களில் எந்த முன்னேற்றமும் இல்லை.
கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்கள் உள்ளன. திருகோணமலையில் மூன்று சமூகத்தினரும் சம அளவு உள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்கள் பெரும்பான்மையினர். அம்பாறை மாவட்டத்தில் முஸ்லீம்கள் பெரும்பான்மை. கிழக்கை வடக்கோடு இணைக்கக்கேட்டால் இல்லை என்று சொல்வார்கள். மட்டக்களப்பு தமிழர்களும் விரும்பமாட்டார்கள்.
“TO END A CIVIL WAR’ என்ற நூலில் கருணா பிரிந்தபோது பிரபாகரனின் கொடும்பாவி எரிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எரிக்சொல்கைம், மற்றும் தூதுவர்களின் அனுபவங்கள், கருத்துக்களை கேட்டு MARK SALTER எழுதப்பட்டுள்ள நூல் இது. அந்த புத்தகத்தில் வடக்கு, கிழக்கு பிரச்சினை இருப்பதாக குறிப்பிடப்பட்டிருப்பதுடன், கிழக்கிற்கு போதுமான பிரதிநிதித்துவம் இல்லை என்று தான் கருணா பிரிந்தார் என்றும், அதை கிழக்கு அங்கீகரித்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மைகள் கசக்கும் அதனால்தான் இன்னா நாற்பது. உண்மைகள் கசக்கின்றன என்பதற்காக சீனி முலாம் பூசி இனியவை நாற்பதாக்க முடியுமா என்ன……? இருபது அத்தியாயங்களை கொணண்டுள்ள இந்நூலை வாசிப்பவர்களுக்கு எழுகின்ற இனியவைக்கும், இன்னாவைக்கும் ‘வேடர் நாட்டில் சிங்கங்களும் புலிகளும்’ நூலாசிரியர் தி. லஜபதிராயின் இந்த நேர்காணல் பதிலைத் தருகிறது.
குறிப்பு: 2023 , செப்டம்பரில் வெளிவந்துள்ள ‘ வேடர் நாட்டில் சிங்கங்களும் புலிகளும் ‘ எழும்பூர், சென்னை நீலம் பப்ளிகேஷன்ஸ் வெளியீடு.