EPRLF: கற்றுக் கொள்ளவும் பெற்றுக் கொள்ளவும்

EPRLF: கற்றுக் கொள்ளவும் பெற்றுக் கொள்ளவும்

  — கருணாகரன் —

சாகஸப்பயணம்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகளையும் அவற்றின் வேட்பாளர்களையும் விட உச்சப் பரபரப்பில்  (கிறுகிறுப்பில்) ஈடுபட்டிருப்பது தமிழ்த்தரப்பேயாகும். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தேர்தலைப் புறக்கணிக்கும்படி தன்னுடைய பரப்புரையை ஆரம்பித்து விட்டது. இதற்கான தலைமையில் துண்டுப் பிரசுரங்களை அதனுடைய செயலாளர் செல்வராஜா கஜேந்திரனின் அணி விநியோகிக்கத் தொடங்கி விட்டது.

இதற்கு மாறாகத் தமிழ்ப்பொது வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்ற முன்மொழிவைச் செய்த EPRLF, பசி தூக்கமெல்லாவற்றையும் தூக்கியெறிந்து விட்டுத் தானெடுத்த தடியை எப்படியாவது நட்டு விட வேண்டும் என்று தவித்துக் கொண்டிருக்கிறது. இந்த விடயம் அதற்கொரு மானப்பிரச்சினையாகவும் வாழ்வா சாவா என்ற சவாலான கட்டத்தையும் எட்டியுள்ளது. இதற்காக அது சில தமிழ்அரசியற் பத்தியாளர்களோடும் யாழ்ப்பாணத்தில் இயங்கும் ‘டான்’ ஊடகக்குழுமத்தோடும் இணைந்து செயற்படுகிறது.

‘டான்’ குழுமமும் சில அரசியற் பத்தியாளர்களும் அவர்களோடிணைந்த ‘சிவில்’ பிரமுகர்கள் சிலரும் தமிழ்ப்பொது வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டவர்கள். அவ்வப்போது எதையாவது சொல்லி, மக்களின் கவனத்தைத் தங்களின் பக்கமாகத் திருப்பி வைத்திருக்க வேண்டும் என்பதே இவர்களுடைய நோக்கம். ஆனால், இதற்கு அரசியற் கட்சிகளின் ஆதரவு தேவை. என்பதால் இரு தரப்பும் இணைந்து இந்தச் சாகஸப் பயணத்தை ஆரம்பித்துள்ளன.

வரலாற்றின் நகைப்பு

அவசியம் கருதி, இந்த இரண்டு தரப்புகளைப் பற்றியும் சில விடயங்களைச் சொல்வது இங்கே அவசியமாகும். மேற்படி பத்தியாளர்களும் சிவில் பிரமுகர்கள் சிலரும் இணைந்து ‘தமிழ் மக்கள் பேரவை’ என்ற அமைப்பை  2015 இல் உருவாக்கினார்கள். அதைத் தங்களால் தனியே இயக்க முடியாதென்று அரசியற் தரப்பினராகிய விக்னேஸ்வரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பேராசிரியர் சிற்றம்பலம், புளொட் அமைப்பின் சிவநேசன் போன்றோருடன் நல்லை ஆதீன முதல்வர், கிறிஸ்தவ மத குருமார்கள் மற்றும் சிவில் அமைப்புக்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் என பலதரப்பட்டவர்களையும் இணைத்தனர்.

பேரவையை உருவாக்கியதற்கான காரணம், “தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளுக்கு அரசியல் எல்லையைக் கடந்த நிலையில், ஒட்டுமொத்த தமிழினத்தின் பிரதிபலிப்பை நிர்ணயம் செய்கின்ற ஒரு பொது முடிவின் அடிப்படையில் தீர்வு காண்பதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது” என்று கூறப்பட்டது.

சில மாதங்கள் வலுஉற்சாகமாகச் செயற்பட்ட தமிழ் மக்கள் பேரவை, எழுக தமிழ் என்றொரு எழுச்சியையும் அதையொட்டியொரு பிரகடனத்தையும் வெளியிட்டது. அதையடுத்து நல்லாட்சிக் காலத்தில் அரசியற் தீர்வொன்றுக்கான முன்மொழிவையும் தயாரித்தது. அதோடு பேரவையின் பணிகள் யாவும் இனிதே நிறைவடைந்தன.

பேரவையின் தேசியப் பணியினால் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்து விட்டன எனத் தமிழ் மக்களும் நிம்மதிப் பெருமூச்சு விடத் தொடங்கினர்(?).

அதற்கப்பால் பேரவையினால் சிறுதுரும்பைக் கூடத் தமிழ்ப்பரப்பில் நகர்த்த முடியவில்லை. ஏனெனில் அதொரு செயற்றிறன் கொண்டோரின் அமைப்பல்ல. பதிலாக வாரவிடுமுறை நாட்களிலும் மாலைத் தேநீர்ப்பொழுதிலும் கூடிப் பேசுவோரின் கற்பனைக் குழுவாகவே இருந்தது. இதைப்பற்றிய விமர்சனங்களைப் பேரவையின் உருவாக்கத்தில் இணைந்து செயற்பட்டவர்களே சலிப்போடும் கோபத்தோடும் பின்னாளில் வெளிப்படுத்தினார்கள்.

அங்கே (பேரவையில்) தோற்றுப்போனவர்கள் இங்கே (பொதுவேட்பாளர் விடயத்துக்காக) புது வேட்டியுடன் களமிறங்கியுள்ளனர். (இந்த அணியில் இதுவரையில் பெண்கள் எவரும் காணப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது) ஊன்றிக் கவனியுங்கள், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியைத் தவிர, அன்றைய பேரவையில் சவாரி  செய்தவர்களே பெரும்பாலும் பொதுவேட்பாளர் விடயத்திலும் பெரும் புரட்சியாளர்களாகக் களமிறங்கியுள்ளனர்.

பேரவையின் செயற்பாட்டில் நம்பிக்கையீனமிருந்தாலும் அதற்கொரு ஆதரவுத்தளம் இருப்பதாகக் கருதிக் கொண்டு ரெலோ, புளொட் போன்றவை தயக்கத்தோடு அதில் பாதிப்பங்கேற்பைச் செய்ய முற்பட்டன. அப்படியான ஒரு நிலையே இப்போதும் ரெலோவுக்கும் புளொட்டுக்கும் ஏற்பட்டுள்ளது. சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட தரப்பினருக்கு பொதுவேட்பாளர் விடயத்தில் உடன்பாடில்லை. ஆனாலும் வெளியே அதற்கொரு ஆதரவுண்டு எனக் கருதித் தலையாட்டியுள்ளனர்.

சிலிர்ப்பு அரசியல் (Trill Politics)

ஜனாதிபதித் தேர்தல்களின்போது பின்கதவு வழியாக  டீல்களைச் செய்வதே தமிழ்த்தேசியத் தரப்பின் வழமையாகும். 2005 க்குப் பின்னிருந்து இதுதான் நடந்தும் வந்திருக்கிறது. இதற்கான பேரவாய்ப்பு இப்போது EPRLF க்கு இல்லை. ஏனைய தமிழ்த்தேசியக் கட்சிகளைப் போல EPRLF க்குப்  பாராளுமன்றத்திலும் இடமில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து  வெளியேறிய பிறகு உருவாக்கப்பட்ட கூட்டணியில் EPRLF நிறுத்திய விக்னேஸ்வரனும் EPRLF ஐக் காய் வெட்டிச் சென்று விட்டார். (அதற்கு முன்பே EPRLF ஐப் பயன்படுத்தி விட்டுச் சென்றவர்கள்  சிவஞானம் சிறிதரன், சிவமோகன் என ஒரு அணியுண்டு).

ஆகவே பலவீனப்பட்டுத் தனித்து நிற்கும் EPRLF க்கு ஒரு அரசியல் அடையாளம் தேவை. அதோடு EPRLF ஐத் தவிர்த்துப் பேரங்களில் ஈடுபடும் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட ஏனைய தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கு ஒரு நெருக்கடியைக் கொடுக்க வேண்டும். அவற்றின் பேர வாய்ப்பை இல்லாதொழிக்க வேண்டும் என்று EPRLF சிந்திக்கிறது.

அதற்காக அது எடுத்ததே இந்தப் Political Stunt. தன்னையொரு தீர்மானிக்கும் சக்தியாக (Decisive power) அது காட்ட முற்படுகிறது.

ஆனால், துயரமென்னவென்றால் இந்த விளையாட்டின் மூலமாக அது விபரீத முடிவுக்கு தன்னைப் பலிகொடுக்கப் போகிறது. ஏனெனில், பொதுவேட்பாளர் என்ற நிலைப்பாடானது, தமிழ் மக்களுக்கு இன்னொரு தற்கொலைச் செயலாகும். EPRLF க்கும் அப்படித்தான். சிலவேளை பொதுவேட்பாளருக்கு கணிசமான அளவில் வாக்குகள் கிடைத்தாலும் அதனால் நற்பயனேதும் தமிழ் மக்களுக்குக் கிட்டாது. ஏனென்றால் கடந்த காலங்களில் ஆயுதப்போராட்டத்திலும் சரி தேர்தல் அரசியலிலும் சரி இதைப்போல தற்காலிக எழுச்சிகள், வெற்றிகள் கிடைத்ததுண்டு. அவை ஒன்றும் தமிழ் மக்களுடைய துயரைப் போக்கவும் இல்லை. அரசியற் தீர்வைத் தரவும் இல்லை. நிரந்தர வெற்றியை ஈட்டவும் இல்லை. அதில் அரசியற் கட்சிகளும் தலைமைகளும் மட்டுமே சுகம் கண்டன.

மற்றும்படி சோடாக் காஸைப்போல அவ்வப்போது ஒரு சிலிர்ப்பைத் தருவதோடு அடங்கி விடுவனவாகவே இருந்தன. இதனால்தான் இந்த அரசியலைச் ‘சுய இன்ப அரசியல்’ எனக் கூற வேண்டியுள்ளது. சிலருடைய  சுய திருப்திக்கானது மட்டுமே தவிர, சமூகப் பயனுக்கானதல்ல.

தற்கொலை அரசியல்

பொதுவேட்பாளர் தீர்மானம் ஏன் EPRLF க்கும் தமிழ் மக்களுக்கும் தற்கொலையில் முடியும் என்றால், அடிப்படையில் இதொரு தற்கொலை அரசியல் தெரிவாகும். காலமாற்றம், நிலை மாற்றம் எதையும் கணக்கிற் கொள்ளாமல் மேற்கொள்ளப்படும் பொருத்தமற்ற செயற்பாடு.

அதாவது பிழையாகக் கணக்கைச் செய்தால் பிழையாகத்தானே  விடை கிடைக்கும். ஏற்கனவே தமிழ்த்தரப்புகள் கடந்த 70 ஆண்டுகளாகவே மேற்கொண்டுவரும் தோல்வி அரசியலின் தொடர்ச்சி இது. ஆகவே நீண்ட கால அடிப்படையில் தமிழர்களுக்கு மேலும் நெருக்கடிகளே நீளும்.

அரசியற் தற்கொலைகளில் திளைப்பதுவே தமிழ்ச்சமூகத்தின் அரசியல் விதியாகி விட்டது. இதில் சிறப்புத் தேர்ச்சியடைந்து இப்பொழுது தற்கொலை அரசியலில் கால் வைத்துள்ளது.

இது புத்தாக்க அரசியலுக்கு எதிரானது; மாறானது.

பொதுவேட்பாளருக்கான ஆதரவு?

1. பொதுவேட்பாளரை நிறுத்துவதற்கான ஆதரவை இந்தியா வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ சொன்னதாகத் தகவல்களில்லை. இதுவரையில் கிடைக்கப்பெற்ற தூதரக வட்டாரத் தகவல்களின்படி எதற்காக இந்த விசப்பரீட்சையில் தமிழ்த்தரப்பு ஈடுபடுகிறது? என்ற கேள்வியுடனேயே இந்தியா இருப்பதாகத் தெரிகிறது. இது குறித்து EPRLF க்குள் உள்விவாதங்கள் கூட நடந்தன. இழுபறிகளுக்குப் பின்னரே திரு. சுரேஸ் பிரேமச்சந்திரனின் நிலைப்பாட்டை ஏனையோர் தயக்கத்தோடு ஏற்றனர்.

2. சர்வதேச மட்டத்திலும் பொதுவேட்பாளரை நிறுத்துவதற்கான ஆதரவு திருப்தியளிக்கக்கூடிய அளவில் இல்லை. இடைநிலைமட்டத்திலான சில வெளிநாட்டு அமைப்புகளின் ஆதரவும் தனிப்பட்ட தூண்டல்களுமே இதுவரையிற் கிடைத்துள்ளன. அதுவும் சிவில் பிரமுகர்களுக்கே.

3.  இலங்கையில் இனிமேல் துருவப்படுத்தப்படும் அரசியல் (Polarized politics) வெற்றியளிக்காது. துருவ அரசியல் (Polar politics) ருசியாக, போதையாக இருக்குமே தவிர, அதனால் நாட்டுக்கோ தமிழ்ச்சமூகத்துக்கோ சத்து ஊறாது. அதனால் எந்தப் பயனும் கிடையாது. ஏனென்றால், எதிர்ப்பு அரசியலின் யுகம் முடிந்து விட்டது (The era of protest politics is over). ஆனால், போராட்ட அரசியல், புரட்சிகர அரசியல் (Struggle – Revolutionary Politics) முடியவில்லை.  அது நிலைமாறு காலத் தன்மையோடு படிப்பினைகளின் அடிப்படையில் தொடரும் –  தொடரப்பட வேண்டும்.

எதிர்ப்பு அரசியலின் காலம் முடிந்து விட்டது என்றால்,

“அடுத்தது சரணடைவு அரசியலா?” என்று யாரும் அவசரப்பட்டுக் குறுக்கே பாய்ந்து கேட்கக் கூடும். அப்படியல்ல.  மக்கள் போராட்டங்களின் வழியான எதிர்ப்பு அரசியல் (The protest politics) வேறு. கட்சிகள் செய்யும் பிரகடன அரசியல் (Declaratory politics) வேறு. மேலும் சற்று விளக்கமாகச் சொன்னால், தேவைப்படும் அளவுக்கான எதிர் அரசியலை (Counter politics) கைக் கொள்ளலாம். அதுவே நியாயத்தன்மையையும் வெற்றியையும் கொடுக்கும்.

“அந்த அளவு என்ன?”  என்று அடுத்த கேள்வியை அதே அவசரத்தோடு சிலர் எழுப்பக்கூடும்.  கறிக்கு உப்புத் தேவை. ஆனால், உப்பிலேயே கறி வைக்க முடியாது என்று அவர்களுக்குச் சொல்வதைத் தவிர வேறெதையும் சொல்வதற்கில்லை.

இந்தத் தந்திரோபாய மாற்றம் ஏன் தேவைப்படுகிறது என்றால், இனவாதப் பொறிக்குள் தொடர்ந்தும் தள்ளவே, அதைத் தமது வெற்றிக்கான ஒரு இலகுவான முதலீடாக்குவதற்கே சிங்களப் பேரினவாதிகளும் அரசும் தொடர்ந்து முயற்சிக்கின்றன. இந்த வகையில்தான் இப்பொழுது தமிழ்ப்பிரதேசங்களில் தொல்பொருட் திணைக்களம் பௌத்த அடையாளங்களை நிறுவ முற்படுகிறது. விஹாரைகள் கட்டப்படுகின்றன. இப்படியே அவர்கள் புதிது புதிதாக இனவாத அடிப்படையைத்தூண்டி, எதிர்ப்பு அரசியல் என்ற நெருப்புக் குழிக்குள் நம்மைத் தள்ளி விடவே முயற்சிக்கின்றனர். இது சிங்களத்தரப்புக்கு வழமையான, வாய்ப்பான, சுலபமான ஒரு பொறிமுறையாக உள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர்களாகக் களமிறங்கவுள்ளோரும் இந்தத் தந்திரோபாயத்தையே கொள்கிறார்கள். இதற்குள் சிக்காமல், நாம் மாற்று வழியில் பதிற்பொறியை முன்வைப்பதுவே புதிய அரசியலாகும். அதையே காலம் வற்புறுத்துகிறது. அவர்கள் நம்முடைய கழுத்துக்குச் சுருக்குத் தடத்தை மாட்டுவதற்கு முற்பட்டால், அதில் சிக்காமல் தப்பித்துக் கொள்வது, அந்தச் சுருக்கை அவர்களுக்கே மாட்டிவிடுவது. அதாவது எதிர்ப்பொறியை நாம் வேறு விதமாக உருவாக்குவது.

 ஆனால், தமிழ்ச் சூழல் இன்னும் காலத்தின் கோரிக்கையைக் கணக்கிற் கொள்ளவில்லை. புதிய தந்திரோபாயங்களைக் குறித்துச் சிந்திப்பதைக் காணோம். காலமாற்றத்தைப் புரிந்து கொள்ளத் தவறி, தம்மைப் புதிய தளத்துக்கு நகர்த்திக் கொள்ள மறுத்து, கடந்தகாலத்தில் உறைந்ததாகவே  (Nostalgist) உள்ளது. வழமையைப்போல தேர்தல்களில் வெற்றியைச் சில வேளை பெறக் கூடும். அதுவும் நீண்ட காலத்துக்கல்ல. மற்றும்படி நாட்டுக்கோ தமிழ் மக்கள் உட்பட இலங்கைச் சமூகங்களுக்கோ எந்த நன்மையும் விளையாது. பதிலாகப் பாதிப்புகளே அதிகமாக ஏற்படும்.

EPRLF வின் சவால்!

ஏற்கனவே தொடர்ச்சியாகப் பின்னடைவுகளைச் சந்தித்து நிற்கும் EPRLF, தன்னை விசப் பரீட்சையில் பலியிடாமல் நிதானமாகச் செயற்பட்டு முன் செல்ல வேண்டும். EPRLF இன் இயல்புப்படி அது ஒருபோதுமே இவ்வாறான ஒரு அசட்டுத்தனமான – தவறான  தீர்மானத்தை எடுப்பதற்கான வாய்ப்பே இல்லை. பத்மநாபாவின் வழி வந்த EPRLF இன் தன்மையே வேறு. அது பன்முக அடிப்படையில் சிந்திக்கும் பண்பைக் கொண்டது. அதிதீவிர (Extreme) நிலைப்பாட்டைக் கொள்வதில்லை. விமர்சனம், சுயவிமர்சனம் என்ற அடிப்படையில் விடயங்களையும் செயல்களின் விளைவுகளையும் மதிப்பிடுவது. மாற்றுக்  கருத்தாளர்களையும் விமர்சனங்களை முன்வைப்போரையும் எதிரிகளாகப் பார்ப்பதோ விலக்கி வைப்பதோ இல்லை. பதிலாக அவர்களை நேச சக்திகளாக அரவணைத்துக் கொள்வது. அரசியலை மக்களுக்கானதாக – மக்களின் விடுதலைக்காக மேற்கொள்ள வேண்டும் என்று கருதிச் செயற்படுவது. விடுதலை அரசியலுக்கான பண்புடன் ஜனநாயக அடிப்படைகளைப் பேண முயற்சிப்பது. ஒருபோதும் எதையும் கறுப்பு – வெள்ளையாகச் சிந்திப்பதில்லை. அப்படி எதையும் எடுத்துக் கொள்வதுமில்லை. அது வரலாற்றில் எதிர்கொண்ட சவால்கள் அதனுடைய இந்தத் தன்மைகளாலேயே!

கற்றுக் கொள்ளவும் பெற்றுக் கொள்ளவும்

இன்றைய EPRLF இவற்றிலிருந்து மீறி – மாறி – விட்டது. இப்பொழுது அது, அறிவுபூர்வமாக எதையும் சிந்திப்பதை விடுத்து உணர்ச்சித் தளத்தில்  அதிதீவிர நிலைப்பாட்டில் சிக்கியுள்ளது. அது தொடர்ந்து சந்திக்கும் தோல்வியும் அதனுடைய அடையாளமே இழந்து போவதும் இதனால்தான். 

இதைப்பற்றி EPRLF முக்கியஸ்தர்களுடன் பேசியபோது, “அது இயக்கக் காலம். விடுதலைப் போராட்ட அரசியல் – புரட்சிகர அரசியற்சூழலாகும். அதைப் பற்றி இனியும் சிந்திக்க முடியாது. இது கட்சி அரசியற் காலம். இங்கே தேர்தல் அரசியலே நடக்கிறது. அதற்கு ஏற்றமாதிரியே நாம் செயற்பட வேண்டும்” என்றனர். “அப்படியென்றால், ஈழமக்கள் புரட்சிகர முன்னணி என்ற பெயர் எதற்கு?” என்று கேட்டேன். “தமிழரசுக் கட்சி (Feredal Party) என்ற பெயரில் இயங்கியதைப்போல, பேரளவில்தான் புரட்சியா?” என்றபோது, ஆளையாள் பார்த்துத் தலையைக் கவிழ்த்துக் கொண்டனர்.

பிரச்சினை என்னவென்றால், அது தன்னுடைய கடந்த காலத் தவறுகள், ஏற்பட்டிருக்கும் அரசியற் பின்னடைவுகள் அனைத்தையும் சீர்ப்படுத்திக் கொள்வதற்கு (புனிதப்படுத்திக் கொள்வதற்கு) இந்த அதிதீவிர நிலைப்பாடும் தூய தமிழ்த்தேசியமும் அவசியம் எனக் கருதுகிறது. இதனால்தான் அது சிறிதரன், சிவமோகன், விக்னேஸ்வரன், ஐங்கரநேசன் எனத் தீவிர நிலைப்பாடுடையோரை – புலிகளின் அரசியலுக்கு நெருக்கமாகக் காட்டியோரைத் தன்னுடன் அணைத்துக் கொண்டது. இவர்களின் மூலமாகத் தனக்கொரு புதிய முகத்தை – புதிய தோற்றத்தை உண்டாக்கி விடலாம் எனக் கருதியது. ஆனால், நடந்ததோ வேறு.

EPRLF வின் வழியாக அரசியற் படியேறியவர்கள் தொடர்ந்தும் தம்மை EPRLF வின் ஆட்களாக வைத்துக் கொள்ளாமல், தாவிப் பாய்ந்து விட்டனர். ஆகவே தன்னுடைய முயற்சிகளில் தோல்வியையும் ஏமாற்றத்தையும் சந்தித்த EPRLF க்கு அடுத்த கட்டம் என்ன என்ற தீராத குழப்பம். அதைச் சரிப்படுத்திக் கொள்ள அது முயற்சிக்கும்போது கிடைத்ததே இந்தப் பொது வேட்பாளர் என்ற கருவூலம்.

இன்றைய EPRLF  அப்படித்தான் சிந்திக்கும். ஏனென்றால், இது 2002 இல் விடுதலைப்புலிகளுடன் சமரசம் செய்து கொண்ட, அவர்களுக்குக் கட்டுப்பட்ட  EPRLF. ஆனால், புலிகளைப்போலக் களச் செயற்பாட்டைக் கொண்டதல்ல. அர்ப்பணிப்பு அரசியலை மேற்கொள்ளத் துணிந்ததல்ல. ஏன் தன்னுடைய அடையாளமாக இருந்த பன்மைத்துவச் செயற்பாட்டுப் பாரம்பரியத்தைக் கூடக் கொண்டதுமல்ல. ஆக இரண்டும் கெட்டான் நிலையிலிருக்கும் இன்றைய EPRLF, தானொரு புதிய சக்தி எனக் காட்டிக் கொள்ள முற்படுகிறது. குறிப்பாகத் தமிழரசுக் கட்சியை விடத் தான் ஒரு முக்கியமான தரப்பு – சக்தி என.

ஏற்கனவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய EPRLF, ரெலோ, புளொட் ஆகியவற்றை இணைத்துப் புதிய கூட்டாகியுள்ளது (DTNA) ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை (DTNA) உருவாக்கிய EPRLF, அதற்குள் தானே முதன்மைப் பாத்திரத்தை – தீர்மானிக்கும் தகுதியை – எடுத்துக் கொள்வதற்கு முயற்சிக்கிறது. அடுத்த தேர்தலில் தன்னுடைய வெற்றியையும் இருப்பையும் தக்க வைத்துக் கொள்வதற்கான வியூகங்கள் இவை.

ஒரு அரசியற் கட்சி, அதுவும் தேர்தலை மையப்படுத்திச் சிந்திக்கும் கட்சி என்ற வகையில் EPRLF வின் சிந்தனையையும் இத்தகைய அணுகுமுறைகளையும் நாம் புரிந்து கொள்ள முடியும். ஆனால், விடுதலை இயக்கப்பாராம்பரியத்திலிருந்து (விடுதலைப் போராட்டப் பாரம்பரியத்திலிருந்து) வந்த EPRLF, மக்கள் அரசியலை, மக்கள் நலனை விட்டு, முற்றாகத் தள்ளி நிற்பதே கேள்விக்குரியது. மட்டுமல்ல, விஞ்ஞான பூர்வமாகச் சிந்திப்பதை விட்டு விட்டு உணர்ச்சிகரமாக அது தன்னுடைய அரசியலை மேற்கொள்ள முயற்சிப்பது அதிர்ச்சியளிக்கிறது. மக்கள் விரோதச் சக்தியாகியதை ஏற்றுக் கொள்ள முடியாமலுள்ளது.

தற்போதுள்ள தமிழ்த்தேசிய அரசியற் தலைவர்களில் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு ஆயுதப்போராட்ட அரசியல்,தேர்தல் வழியான அரசியல் இரண்டிலும் நீண்ட அனுபவம் உண்டு. சரிகளையும் தவறுகளையும் புரிந்து கொள்ளக் கூடியவர். விடயங்களை ஆழமாகப் பார்க்கக்கூடியவரும் கூட. அரசியல் உரையாடல்களில், விடயங்களை ஆழமாகவும் நறுக்கெனவும் பேச வல்லர். இந்திய மத்திய அரசுத்தரப்பு, தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள், இலங்கையில் உள்ள பல்வேறு தரப்புத் தலைவர்கள், வெளிநாட்டுப் பிரதானிகள் எனப் பல தரப்போடும் அரசியல் ரீதியான ஊடாட்ட உறவும் அறிமுகமும் உண்டு. இப்படியான சிறப்புத் தகுதிகள் எல்லாம் இருந்தாலும் அவரிடமுள்ள பிரச்சினை, அவர் தான் உள்ளுர நம்புகின்ற அரசியலை விட, தான் தொடர முயற்சிக்கின்ற அரசியலுக்குமிடையில் தத்தளிப்பதேயாகும். நிச்சயமாக அவருக்குத் தெரியும், தமிழர்களுடைய அரசியல் வழிமுறை தற்போது தொடரும் எதிர்ப்பு அரசியலில் இல்லை என. அதை விட்டால் தன்னை (EPRLF ஐ) மக்கள் ஒதுக்கி விடுவார்கள் என்று கருதுகிறார். அச்சமடைகிறார். இது தேவையற்ற அச்சம். காலாவதியான ஒன்றையிட்டுக் கவலைப்படுவதற்கு என்ன உண்டு. உண்மையில் நிகழ்காலத்துக்கான – எதிர்காலத்துக்கான அரசியலைச் செய்யவில்லை என்றே அச்சமடைய வேண்டும். கவலைப்பட வேண்டும்.

அடுத்தது, அவரிடமிருக்கும் உணர்ச்சி வசப்பட்ட நிலை. எதையும் சந்தேகத்தோடு நோக்க முற்படுவது. எதிர்நிலையாக எண்ணுவது. எங்கும் கருத்தாதிக்கம் செய்ய முயற்சிப்பது. இது  அவருடன் நெருக்கமாகப் பழகுவோர் அனைவருக்கும் தெரியும். பரஸ்பரத்தன்மைக்கும் இணக்கத்துக்கும் பல தரப்புகளுடனான கூட்டுப் பயணத்திற்கும் இது பயன்தராது. தலைமைத்துவம் என்பது பிறரைக் கவர்ந்திழுக்கக் கூடிய ஈர்ப்பு விசைக் குணவியல்புகளைக் கொண்டிருக்க வேண்டும். அண்மைய உதாரணங்கள், தமிழக முதல்வர் ஸ்டாலினும், இந்தியா கூட்டணியின் தலைவருமான ராகுல் காந்தி.

எல்லாவற்றுக்கும் அப்பால் கடந்த காலப் புதைகுழியிலிருந்து நிகழ்காலப் பரப்பிற்கு தமிழ் அரசியலைச் சுரேஸ் பிரேமச்சந்திரன் மீட்டுக் கொண்டு வர வேண்டும். சமகால அரசியல் என்பது சமகாலத்துக்குரியதாக இருக்க வேண்டுமே தவிர, தற்போது மேற்கொள்ளப்படும் கடந்த கால அரசியல் அல்ல. அப்படியாக இருந்தால் அது தற்போது (சமகாலத்தில்) மேற்கொள்ளப்படும் கடந்த கால அரசியலேயாகும். அதை ஆவிகளின் அரசியல் என்றே கூற முடியும். அப்படித்தான் உலகமும் கருதும்.

இன்று நாம் நம்மை ஒரு முழுமையான ஜனநாயக அரசியற் தரப்பினர் என்று நிரூபிக்க வேண்டும். அதேவேளை நவீனத்துவவாதிகளாகவும்.  நவீனத்துக்குரிய அடிப்படைகளான ஜனநாயகம் (Democrasy) , பன்மைத்துவம் (Plarasim) நவீனத்துவம் (Modernity) போன்றவற்றைக் கொண்டிருப்போராகவும். அதுவே உலக அங்கீகாரத்துக்குரியது. அவற்றை உள்ளடக்கியதாகவே தமிழ் அரசியலை முன்னெடுக்க வேண்டும்.

நாம் கற்றுக் கொள்ளவும் பெற்றுக் கொள்ளவும் ஏராளம் உண்டு.

00