(‘அரங்கம்’ அரசியல் பத்தித்தொடர்)
— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன —
1949 இல் இலங்கைத் தமிழரசுக் கட்சி தோற்றம் பெற்ற பின்னர் வடக்குக் கிழக்குத் தமிழர்கள் தமிழரசுக் கட்சியின் பின்னால் பெருவாரியாக அணி திரண்டார்கள் என்பது உண்மைதான். அதற்கு அக்கட்சி முன்வைத்த தமிழர் தாயகம் – இறைமை – சுய நிர்ணய உரிமைக் கருத்தியல்களும் அக்கட்சி நடத்திய மொழியுரிமைப் போராட்டமும் அக்கட்சி ஊட்டிய இனவுணர்வும் ஊக்கியாக அமைந்தன.
ஆனால், அக்கட்சி அக்கட்சியின் ஸ்தாபகத் தலைவரான எஸ்.ஜே.வி செல்வநாயகம் எந்தத் தமிழ்க் காங்கிரசிலிருந்து விலகி அல்லது விலக்கப்பட்டு வெளியேறி வந்தாரோ அந்தக் கட்சியை ‘பரமஎதிரி’யாகக் கருதிக் கொண்டுதான் அரசியல் செய்தது. அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியினரை மட்டுமல்ல அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் அல்லாத ஆனால் தமிழரசுக் கட்சியின் அரசியல் செயல்பாடுகளின் மீது ஆரோக்கிய விமர்சனங்களை முன்வைத்தவர்களையும் – தமிழரசுக் கட்சியில் இருந்துகொண்டே தமிழரசுக் கட்சி மீது விமர்சனங்களை முன் வைத்தவர்களையும் தவறுகளைச் சுட்டிக் காட்டியவர்களையும் தமிழரசுக் கட்சியைக் கருத்தியல் ரீதியாக அரசியல் சித்தாந்த ரீதியாக எதிர்த்த இடதுசாரிகளையும் மாற்றுக் கருத்தாளர்களையும் – அவ்வப்போது அரசாங்கக் கட்சிகளுடன் இணைந்து நின்று மக்களுக்கு அபிவிருத்திகளைப் பெற்றுக் கொடுத்தவர்களையும் என்று அனைவரையும் ‘துரோகி’ எனும் ஒரே தராசில் வைத்துப் பார்த்தது. இந்தப் பார்வைக் கோளாறு பல ஆளுமைகளைப் பலியெடுத்தது மட்டுமல்ல (இந்தப் பலியெடுப்பு 1974 இல் அல்பிரட் துரையப்பாவின் படுகொலையுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது) தமிழர்களைச் சமூக பொருளாதார ரீதியாகப் பலவீனமடையவும் வைத்தது. தமிழர்களின் தந்திரோபாய அரசியற் செயற்பாடுகளுக்குத் தடையாகவுமிருந்தது. செயற்பாட்டு அரசியலைப் புறம் தள்ளியது.
இத்தகைய பார்வைக் கோளாறு ஏனைய சிறுபான்மைத் தேசிய இனங்களாகக் கருதப்படும் இலங்கை முஸ்லிம்கள் மற்றும் மலையகத் தமிழர்களிடம் இல்லாமல் அல்லது ஒப்பீட்டளவில் குறைவாக இருந்ததனால் அவ்விரு சமூகங்களும் பல குறிப்பிடத்தக்க சமூக பொருளாதார அரசியல் அடைவுகளைக் கண்டிருக்கின்றன/கண்டு கொண்டிருக்கின்றன என்பது நிதர்சனம்.
பின்னர், 1972ல் தமிழரசுக் கட்சியும் தமிழ்க் காங்கிரஸும் இணைந்து தமிழர் கூட்டணியாகிப் பின் 1976 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியாகியபோதும் தமிழர் தரப்பு அரசியலில் இந்தப் பார்வைக் கோளாறு தொடர்ந்திருந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியை விமர்சித்தவர்களையும் அரசாங்கத்துடன் ஒத்துழைத்தவர்களையும் ‘துரோகி’களாகவே தமிழர் விடுதலைக் கூட்டணி கருதியது.
தொடர்ந்து ஆயுதமேந்திய நடவடிக்கைகள் தமிழ் மக்களிடையே ஆரம்பமாகி வளர்ச்சி பெற்று அதன் உச்சக்கட்டமாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அதிகாரத்தையும் இராணுவ மேலாண்மையையும் பெற்றதும் அவ்வியக்கம்மீது விமர்சனம் வைத்தவர்களையும் – இடதுசாரிகளையும் – மாற்றுச் சிந்தனையாளர்களையும் – ஏனைய சகோதரப் போராளி இயக்கங்களையும் – மிதவாத அரசியல் தலைவர்களையும் – அரசாங்க ஆதரவாளர்களையும் ‘துரோ’கிகளாகப் பார்த்தது மட்டுமல்ல அவர்களையெல்லாம் தேடித்தேடி ஈவிரக்கமின்றிக் கொன்றொழித்தது. இது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரிடமிருந்த பார்வைக் கோளாறு மட்டுமல்ல பயங்கரமான எதிர்மறை உளவியலுமாகும். இந்தப் பார்வைக் கோளாறும் எதிர்மறை உளவியலும்தான் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களுக்குப் பேரழிவைத் தந்தது. அந்தப் பார்வைக் கோளாறு காரணமாகப் பிரபாகரனிடமிருந்த ஆற்றல் அத்தனையும் அவம் போயின.
ஒற்றுமை அணி என்று கூறிக்கொண்டு 2001 இல் புலிகள் இயக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியிருந்தபோதிலும் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ‘புளொட்’ ஆரம்பத்தில் இணைத்துக் கொள்ளப்படவில்லை என்பதும் இப்பார்வைக் கோளாற்றுப் பலவீனம்தான்) புலிகளைத் தமிழ் மக்களின் ஏகப்பிரதி நிதிகளாக ஏற்றுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வெளியே கருத்தியல் ரீதியாக – சித்தாந்த ரீதியாகச் செயற்பட்டுக்கொண்டிருந்த ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளையெல்லாம் துரோகிகளாகத்தான் பார்த்தது. அதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிலொன்றாக இருந்த போதிலும் அதன் தலைமைக் கட்சியாக விளங்கிய தமிழரசுக் கட்சி மிகவும் மோசமான பார்வைக் கோளாறுடன்தான் செயற்பட்டது. பங்காளிக் கட்சிகளைக்கூட அது பகைவர்களாகவே கருதிச் செயற்பட்டது. இந்தப் பார்வைக் கோளாற்றுத் தொடர்ச்சி இன்னும்தான் நீடிக்கிறது புலிகள் துப்பாக்கியால் சாதித்ததைத் தமிழரசுக் கட்சி வாக்குகளைக் காட்டி வெற்று வார்த்தை வேட்டுக்களை உதிர்த்துச் சாதித்தது. கருவிகள்தான் வேறுபட்டனவே தவிர மனப்பாங்கு ஒன்றுதான்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை முன்னெடுப்பவர்களும் அதற்கு ஆதரவானவர்களும் அதற்கு உடன்பாடில்லாதவர்களையெல்லாம் தமிழ்த் தேசியத்துக்கு எதிரானவர்களென்றும் தமிழர்களின் ஐக்கியத்தை விரும்பாதவர்களென்றும் தமிழ் மக்கள் மத்தியில் புதியதோர் அரசியல் விழிப்புணர்வு ஏற்படுவதை அனுமதிக்காதவர்களென்றும் தமிழர்களின் வாக்குகளை இன்னாருக்குப் பெற்றுக் கொடுக்க முயல்பவர்களென்றும் சாயம் பூசி ‘துரோகி’களாகக் கற்பிதம் பண்ணித்தான் கருத்துக்களை முன்வைக்கின்றனர். ஏதோ தமிழ்த் தேசியத்தை அவர்கள் மட்டுமே ஆயுள் குத்தகை எடுத்த மாதிரி.
இந்தப் பார்வைக் கோளாறு இவர்களிடமும் இருப்பதற்குக் காரணம் இவர்களில் பெரும்பாலானவர்கள் கடந்த காலங்களில் புலிகளாக இருந்தவர்கள் அல்லது புலிகளைத் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக ஏற்றுப் புலிகளின் முகவர்களாகச் செயற்பட்டவர்கள் அல்லது செயற்படுபவர்கள் அல்லது புலிகளைக் கண்ணை மூடிக் கொண்டு ஆதரித்தவர்கள் அல்லது பிரபாகரனைத் தனிநபர் வழிபாடு (Hero Worship) செய்தவர்கள். இந்தப் பார்வைக் கோளாறு இப்போதாவது தமிழர் தரப்பு அரசியலில் களையப்பட வேண்டும். இப்ப பண்பு மாற்றமே – பார்வை மாற்றமே முதலில் தேவை. அதன் பின்னரே மற்றவை.
கருத்து முரண்பாடுகளைப் பகை முரண்பாடுகளாகப் பார்க்கின்ற மனப்பாங்குமாறி கருத்துக்களை ஆரோக்கியமான அறிவுபூர்வமான கருத்துக்களால் எதிர்கொள்கின்ற பண்பு தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் முதலில் வளர்த்தெடுக்கப்படல் அவசியம்.
கருத்து முரண்பாடுகளை ‘வேட்டு’க்களால் தீர்த்து வைத்த காலம் முடிந்து விட்டது.