பொது பெண் வேட்பாளர் தேவை..!                  வடக்கில் தொலைத்ததை கிழக்கில் தேடுதல்…..! (மௌன உடைவுகள் 90)

பொது பெண் வேட்பாளர் தேவை..! வடக்கில் தொலைத்ததை கிழக்கில் தேடுதல்…..! (மௌன உடைவுகள் 90)

  — அழகு குணசீலன் —

தமிழ்த்தேசிய அரசியல் “பொதுவேட்பாளர்” விடயத்தில் செய்வதறியாது திக்கு முக்கு ஆடுகிறது. யாரோ ஒருவர் பொதுவேட்பாளர் எண்ணத்தை வெளியிட சிவசேனை மறவன்புலவு சச்சிதானந்தன் மனோகணேசனை பிரேரித்தார். ஆமோதிக்க ஆளில்லை. விடுவாரா விக்கினேஸ்வரன்? வேலன்சாமியின் பெயரை முன்மொழிந்தார். அதற்கும் சாதகமான ரியாக்ஷன் இல்லை. ரிலக்ஷ் ….ரிலக்ஷ்…. என்று கூறி மாதக்கணக்காக கூடுவதும் கலைவதும், அறிக்கைவிடுவதும், பத்தி எழுதுவதும், மாறிமாறி ஊடகச்சந்திப்பும் தொடர்கிறது. உருப்படியாக ஒன்றும் இல்லை.

இந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கு பயணம் யாழ்ப்பாணம்,, வன்னி  தேர்தல் மாவட்டங்களை ஒரு உசுப்பு உசுப்பி விட்டிருக்கிறது.  அதுவும்  அந்த மே மாதத்தில் .தமிழ்த்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ரணிலின் மேடைகளில் முண்டியடித்து இடம்பிடித்து ‘பாராட்டுமாலைகளை’  ஆளுக்காள் போட்டி போட்டு போட்டிருக்கிறார்கள். வடக்கு தமிழ்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ம.சுமந்திரன், த.சித்தார்த்தன், அ.செல்வம், விநோதரலிங்கம் ஆகியோர் போட்ட வார்த்தை மாலைகள் இவை. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,காதர் மஸ்தான், திலீபன் போட்டமாலைகளே தோற்றுப்போகும் அளவுக்கு தமிழ்த்தேசிய வார்த்தை மாலைகளால்  திணறிப்போனார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

வடக்கில் நிலைமை தமிழ்தேசிய அரசியலின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை யாழ்ப்பாணம், கொழும்பு பத்திரிகைகளின் செய்திகளும், கருத்துக்களும், பத்தி எழுத்துக்களும் வெளிப்படுத்தி நிற்கின்றன. விக்கினேஸ்வரனை குசேலம் விசாரிக்க. வீடுதேடிச்சென்ற ஜனாதிபதி ரணில் அவரது பாணியில் சவால் விட்டிருக்கிறார் (?). 

அதுதான் “தமிழ்ப்பொதுவேட்பாளர் ஒருவரை உங்களால் நிறுத்த முடியாது” என்று ரணில் சொன்ன செய்தி. ஒட்டுமொத்த தமிழ்த்தேசிய அரசியலை கடந்த 50 ஆண்டுகளாக கரைத்துக் குடித்த ஜோதிடர் ரணிலின் அனுபவம் கொடுத்த நம்பிக்கை இது. பொதுவேட்பாளர் ஆதரவாளர்களுக்கு வெட்கம் ஒருபக்கம்,ரோஷம் மறுபக்கம் தலை நிமிர முடியாத நிலை.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஒரு கருத்தை வெளியிட்டால் அந்த கருத்தின் ‘முன்பக்கம்’  பல அரசியல் ஆய்வாளர்களுக்கு முக்கியமானது. ஆனால் மௌன உடைவுகளுக்கு அதன் ‘பின்பக்கமே’  முக்கியம். சுமந்திரனின் கருத்து  தொடர்பான, அரசியல் ஆய்வுக்கான நிஜங்களை  அந்த மறுபக்கத்தில் தான் தேடவேண்டும். 2005 ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மக்கள் விட்ட தவறை, ஜனாதிபதி வேட்பாளர்களுள் ஒருவராக எதிர்பார்க்கப்படும் ரணிலுக்கு முன்னால் சுமந்திரன் பகிரங்கமாக சுட்டிக்காட்டவேண்டியதேவை என்ன? 

சுமந்திரனின் கருத்துக்கு பின்னால் எதிர்காலம் குறித்த சில உண்மைகள் மறைந்துள்ளன. அதில் முக்கியமானது பொதுவேட்பாளர் நிராகரிப்பும், தென்னிலங்கை ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பது என்ற ‘ மணியோசையும்’ ஆகும். இதற்கு சுமந்திரன் எய்துள்ள/ எய்யவுள்ள இறுதி அம்புகளுள் ஒன்று ‘பொதுவிவாதம்’ . இந்த விவாத மன்றத்தில் சுமந்திரன் அணியே வெல்லும். இது கடந்த தமிழரசுக்கூட்டத்தில் வெளிப்ட்ட  ஒன்று. இறுதியில் பொது வேட்பாளர் ஆதரவு சிறிதரனும், அரியநேந்திரனும்  கூட்டக்குறிப்பில் தங்கள் பெயரைக்குறிப்பிட கோரிக்கை விட வேண்டியதாயிற்று. சுமந்திரனின் நிலைப்பாட்டை நன்குணர்ந்த பொது வேட்பாளருக்கு கருக்கூட்டிய தமிழ்த்தேசிய பத்தி எழுத்தாளர்கள் எல்லாம் இப்போதே ஓடி ஒழிக்கத் தொடங்கிவிட்டனர். யூன் ஒன்பது பொதுவிவாத மேடை மெல்ல மெல்ல சுமந்திரனின் தனிமேடையாகிறது.

 இந்த நிலையில் வடக்கில் அடிபட்டுப்போகும் பொதுவேட்பாளர் கருத்தியலை கிழக்கில் தேடும் முயற்சியே யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் நீண்ட ‘கசட்’ அறிவித்தல். அந்த அறிவிப்பின் தாற்பரியம் வடக்கில் ஏற்பட்டுள்ள தமிழ்த்தேசிய ‘கிடங்கை’ கிழக்கை கொண்டு நிரப்புவது. விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாமல் இருக்க கிழக்கு தேவைப்படுகிறது. கிழக்கில் இருந்து ஒரு பெண் பொதுவேட்பாளர் தேவை என்று வெற்றிடத்திற்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அவர் ‘டம்மியாக’ இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும் என்ற அறிவித்தலும் கூடவே வரலாம்.

அண்மையில் புலம்பெயர் ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற பொதுவேட்பாளர் தொடர்பான கருத்து பரிமாற்றம் ஒன்றில் இடம்பெற்ற கேள்வியும் அதற்கு அளிக்கப்பட்ட பதிலும் இங்கு பதிவிடப்படுகிறது.

ஊடகக்கேள்வி : தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான அவசியம் என்ன?

தமிழ்த்தேசிய வாதி பதில் : “யாழ்பாணத்தில் அங்கயன், டக்ளஸ், மட்டக்களப்பில் பிள்ளையான் போன்றோர் அதிக மக்களின் வாக்குகளைப்பெறுவது தமிழ்த்தேசியத்திற்கு பெரிதும் ஆபத்தான விடயம்”.  

  இந்த பதில் நடுக்கக்காய்சல், வயிற்றோட்டம் அறிகுறி. இந்த நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியே யாழ்.பல்கலைக்கழக மாணவர் அறிக்கை. அந்த அறிக்கை தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியலின் கடந்த பதினைந்து ஆண்டுகாலத்தை சுயவிமர்சனம் செய்வது போல்  ஆரம்பிக்கிறதேயன்றி, அவர்களால்  வழமையான அந்த அரசியலில் இருந்து வெளிவர முடியவில்லை.  இதனையே அறிக்கையின் மற்றைய உள்ளடக்கங்கள் பேசுகின்றன. அவை அனைத்தும் தமிழ்த்தேசிய  அரசியல் குணாம்சங்களை பிரதிபலிப்பவை.

“தேர்தல் பகிஷ்கரிப்பும், பொதுவேட்பாளரை நிறுத்துவதும்  ஒரே கருத்தியலின் இரு வேறுபட்ட பிரயோக வடிவங்கள்” என்று கூறுகிறது யாழ்.பல்கலை மாணவர் அமைப்பு. அப்படி என்றால் இறுதியில்”ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்” என்பதுதானே அர்த்தம். அந்த அறிக்கையில் பொதுவேட்பாளருக்கான வாக்குக்கணக்கும் கணிப்பிடப்பட்டுள்ளது. பொது வேட்பாளர் பெறும் வாக்குகளும், அழிக்கப்படாத (பகிஷ்கரித்த, மற்றும் போடப்படாத)  வாக்குகளும் சிங்கள பௌத்த பெருந்தேசியவாத முகவர்களை நிராகரிக்கும் வாக்குகளாம். பல்கலைக்கழகம் ஒன்றில் இருந்து இப்படி ஒரு ‘முட்டைக்கணக்கை ‘ மக்கள் எதிர்பார்க்கவில்லை.

பல்கலைக்கழக மாணவர் அமைப்பு அறிக்கை வெளிவருவதற்கு முன்னர் ஈழநாடு பத்திரிகையில் 31.05.24 அன்று வெளிவந்த ஜனாதிபதி தேர்தல் பகிஷ்கரிப்பு பற்றிய குறிப்பே அவர்களின் தப்புக்கணக்குக்கு பதிலாக அமைகிறது. ஈழநாடு பேசுவது இதுதான்…….

“கடந்த மூன்று ஜனாதிபதி தேர்தல்களின் போதும், தமிழ்க் காங்கிரஸ் பகிஷ்கரிப்புக் கோரிக்கையையே உயர்த்திப்பிடித்தது. ஆனால் தமிழ்மக்கள் அதனை ஒரு விடயமாக கண்டு கொள்ளவில்லை. பொதுவாக ஒரு குறிப்பிட்டளவான மக்கள் வாக்களிப்பில் பங்குபற்றுவதில்லை. இதற்கு பல காரணங்கள் உண்டு. அரசியல் வாதிகள் மீதான வெறுப்பு, சோம்பேறித்தனம், உடல் உபாதைகள் இப்படி பல காரணங்களால் மக்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ள மாட்டார்கள். அவ்வாறானவர்களை எல்லாம் தங்களின் வேண்டுகோளுக்கு இணங்க பகிஷ்கரித்ததாக காண்பிக்கலாம் என்பத தான் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை. இது அடிப்படையில் ஒரு அரசியல் இயலாமை” என்று குறிப்பிடுகிறது ஈழநாடு. ஆக, தமிழ்க் காங்கிரஸின் ‘குதிரைக்கணக்கும் ‘ , ‘முட்டைக்கணக்கும்’ ஒன்று தான்.

இப்படி கள்ளக்கணக்கு போட்டு பொதுவேட்பாளருக்கு அளிக்கப்பட்ட,  அளிக்கப்படாத ஒட்டு மொத்த வாக்குகளை தென்னிலங்கை வேட்பாளருக்கு எதிரானது என்று காட்டியும் மற்றும் கிழக்கில் ஒரு வேட்பாளர் அதுவும் பெண்வேட்பாளர் என்று படம்காட்டி வடக்கில் தமிழ்த்தேசிய அரசியலுக்கு அவர்களாலேயே வெட்டப்பட்ட ‘கிடங்கை’ நிரப்ப மேற்கொள்ளும் தந்திரோபாயமாகவே மாணவர் அமைப்பு அறிக்கை உள்ளடக்கம் உள்ளது. 

இதில் இன்னும் வேடிக்கை என்னவெனில் வடக்கு கிழக்கின் கிழக்கு, தென்கிழக்கு பல்கலைக்கழகங்களை தவிர்த்தும், திருகோணமலை வளாகத்தை தவிர்த்தும் தனித்து தீர்மானம் எடுத்து ஊடகங்களுக்கு வெளிப்படுத்திய பின்னர் அதற்கு அடுத்தடுத்த நாட்களில் கிழக்கு பல்கலைக்கழகத்தையும்  இணைத்துக்கொண்டு அறிக்கை விட்டிருப்பது. 

தமிழ்த்தேசிய  அரசியல் பயணத்தில் சந்ததிகள் மாறினாலும் எந்த அடிப்படையில் எந்த மாற்றமும் இல்லை. அது கட்சிக்காரியாலயத்தில் எடுக்கப்பட்டாலும், பல்கலைக்கழகத்தில் எடுக்கப்பட்டாலும்  ஒரே அணுகுமுறைதான். தீர்மானம் எடுப்பது வடக்கில் அதை நடைமுறைப்படுத்துவது கிழக்கில். அது தான் கிழக்கில் இருந்து ஒரு பெண் பொதுவேட்பாளர் கோஷம். வடக்கில் ஒற்றுமையாக ஒரு பொதுவேட்பாளரை அடையாளம் காண  அந்த குணாம்சம் தடையாக இருக்கிறது. அந்த இயலாமையை மறைக்க கிழக்கை முதன்மை படுத்துவதுபோன்ற – பெண்களை முதன்மை படுத்துவது போன்ற ஒரு பாசாங்கு. வடக்கில் பிசு பிசுத்துப் போகும் தமிழ்ப்பொதுவேட்பாளர் யோசனைக்கு கிழக்கில் ஒரு டம்மி இழிச்சவாயை தேடுகிறது வடக்கு ….! 

கிடைக்காமலா போகும்?  என்று  இங்கு கேட்கவில்லை. ஏனெனில் தமிழ்ப்பொது பொதுவேட்பாளர் வெறும் ‘மண்குதிரை ‘.  அது தமிழ்த்தேசிய எதிரலையில் தொடர்ந்தும் கரைந்துகொண்டிருக்கிறது. இறுதியில் தென்னிலங்கை தேசியத்துள் முழுமையாக கரைந்துவிடும்.