— அழகு குணசீலன் —
கடந்த வாரங்களில் சமூக ஊடகங்களை நிறைத்திருந்த செய்திகள் கஞ்சியும், ஐஸ்கிறீமும். இந்த இரு உணவுகளும் இந்தளவுக்கு பேசுபொருளானதற்கான காரணம் வியப்பல்ல. இரண்டுக்கும் பின்னால் உள்ள கட்சி அரசியல். இரு தேசியங்களின் முரண்பாட்டு நிலை.
கஞ்சி : வயிற்று பசிக்கு -பட்டினிக்கு பசியாற உதவுவது.
ஐஸ்கிறீம் : மூக்கு முட்ட உண்டபின் இறுதியாக சுவையாற உதவுவது.
விடுதலைப்புலிகளின் தற்கொலைக் குண்டுதாரிகள் கூட இறுதியில் ஐஸ்கிறீம் சுவைத்து கொலைக்களத்திற்கு ஆசீர்வதித்து அனுப்பப்பட்டார்கள் என்று பெருமைப்பட்ட தமிழ்ச்சமூகம், இன்று இறுதிப்போர்க்கால கொலைக்களத்தில் – மரணத்தை எண்ணிய நாட்களை சிரட்டையில் கஞ்சி அருந்தி இரைமீட்கிறது.
வெசாக் ஒரு பௌத்த மத பண்டிகை. கௌதம புத்தரின் பிறப்பையும், போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்ற வாழ்வையும், அனைத்தையும் துறந்த நிர்வாணா நிலையையும் பௌத்தர்கள் கொண்டாடும் நாள். வருடாவருடம் வைகாசிப் பூரணையில் நினைவுகூரும் நாள்.இந்த நாளில் ‘பத்தினிதெய்யோ’ என்று சிங்கள மக்களால் அழைக்கப்படும் கண்ணகி அம்மன் சடங்கு சிறப்பாக கிழக்கின் தமிழ்க்கிராமங்கள் தோறும் கொண்டாடப்படுவதும் வழக்கம்.
முள்ளிவாய்க்கால் நினைவு தினம் போர்க்கால மரணங்களையும், போர் இன்னல்களையும் நினைவுகூரும் ஒரு துக்கதினம். கிழக்கில் சிறுதெய்வ வருடாந்த சடங்குகளில் வீடுவீடாகச் சென்று “மடிப்பிச்சை” எடுத்து ஊர் மக்களின் பங்களிப்புடன் சாமிக்கு படையல் செய்வது வழக்கம் . முள்ளிவாய்க்கால் நினைவு நாள் அதே பாணியில் வீடுவீடாக சென்று மக்கள் இயன்ற பங்களிப்பை -அரிசியை சேகரித்து கஞ்சிகாய்ச்சி பகிர்ந்து உண்டு அனுஷ்டிக்கும் துக்கதினமாக அனுட்டிக்கப்பட்டுவருகிறது.
இனம்,மதம்,மொழியால், கலாச்சார பண்பாட்டு,பழக்கவழக்கங்களால் வேறுபட்ட தமிழ், சிங்கள சமூகங்களால் கடைப்பிடிக்கப்படும் இந்த பாரம்பரியத்தில் ஒரு சமூகம் மற்றொன்றுடன் முரண்படுவதற்கு என்ன இருக்கிறது? தேடினால் இருப்பதெல்லாம் ஒன்றுதான்.அதுதான் அரசியல் ரீதியில் இருதரப்பும் இவற்றை முரணாக நோக்குவது. இந்த நிலையானது ஒட்டு மொத்த இரு சமூகங்களையும் எதிர் -எதிர் நிலையில் கொண்டு நிறுத்துவதுடன் விதண்டா விவாதங்களையும், வீணான முரண்பாட்டையும் வளர்த்துவிடுகிறது.
போரில் மரணித்தவர்களை நினைவுகூருவதற்குமான உரிமை இந்த உலகில் அனைவருக்கும் உரித்தானது. ஆனால் அதை சிறிலங்கா படையினர் ஏன் தடையுத்தரவுகளூடாக தடுக்கிறார்கள் என்பதுதான் விந்தை. கடந்த பதினைந்து ஆண்டுகளாக மே மாதத்தில் கேட்டுக்கேட்டு, பார்துத்ப்பார்த்து புளித்துப்போன ஒரு பழக்க தோஷமாக இந்த தடையுத்தரவும், தடைசெய்வதும் வரலாகிறது. இறுதியில் படையினரால் நினைவுகூரலை முற்றாக தடுத்து நிறுத்தவும் முடியவில்லை, மக்களும் அனைத்து அரச வன்முறைகளுக்கு மத்தியிலும் நினைவுகூராமலும் விடவில்லை.
அப்படி இருக்கையில் வருடா வருடம் இந்த ‘வீதிநாடகம்’ யாருக்காக? நீதிமன்றங்களும் பொலிஸாரின் ஆதாரமற்ற வழமையான சந்தேகங்களின் அடிப்படையில் ஒன்றுக்கு பத்து தடையுத்தரவுகளை வருடந்தோறும் வழங்கிவருகின்றன. இந்த உத்தரவுகளால் நீதிமன்றமோ,பொலிசாரோ தங்கள் சட்டரீதியான இலக்கை அடைந்ததாக இல்லை. மாறாக சமூகங்களுக்கு இடையே முரண்பாடுகளையும், சந்தேகங்களையும் ,வன்முறைகளையும் வளர்த்து விடுவதாகவே அமைகிறது.
நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கிறோம் என்று கூறிக்கொண்டு சட்டம் ஒழுங்கு சிதைக்கப்படுகிறது. வீதியோர சிற்றுண்டி கடைகளில், மற்றும் உணவு விடுதிகளில், பள்ளிப்பிள்ளைகளின் பாடசாலை உணவில் எல்லாம் ‘சுகாதாரம் ‘ முழுமையாக பேணப்படுகிறதா? இராணுவ முகாம்கள், பொலிஸ் உணவு விடுதிகளில் உணவு நஞ்சடைதல் எத்தனை தடவைகள் இடம்பெற்றுள்ளது. இதற்காக கைது செய்யப்பட்டு வழக்குத்தொடரப்பட்ட பொறுப்பானவர்கள், சமையல்காரர்கள் எத்தனை பேர்? சுகாதாரம் என்பது சுற்றாடல் சார்ந்தது. குறைந்தளவான சுகாதார வசதிகளுடன் வாழும் கிராமிய மக்களின் உடல்நிலை இயற்கையாகவே நோய் எதிர்ப்புச்சக்திக்கு இயல்பாக்கம் அடைந்து விடுகிறது என்பது பல ஆய்வுகள் கூறும் முடிவு.
அதேவேளை முள்ளிவாய்க்கால் கஞ்சி தொடர்பாக ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் ஒரே கருத்தில் இல்லை. கடந்த பதினைந்து ஆண்டுகளாக மே 12 ம் திகதி முதல் 18 ம்திகதி வரை இடம்பெறுகின்ற இந்த நிகழ்வை ஒரு பிரிவினர் முள்ளிவாய்க்கால் நினைவாக நினைவுகூரும் வேளை, இன்னொரு பிரிவினர் தேங்காய் சிரட்டையில் கஞ்சி பரிமாறுவதை ஒரு ‘கையேந்தும்’ நிலையாக கருதுகின்றனர். விடுதலைப்புலிகள் தங்களின் சொந்த மக்களை தாங்கள் நடாத்திய போரினால் சிரட்டை ஏந்தும் நிலைக்கு தள்ளிவிட்டார்கள் என்ற கருத்தை கொண்டுள்ளனர். இந்த யுத்தத்தின் பங்காளிகளான இருதரப்பும் இதற்கு பொறுப்புக்கூறவேண்டியவர்கள் என்பது இவர்களின் கருத்து. புலிகள் மக்களை மரணதண்டனை வழங்கி அச்சுறுத்தாது, நேர காலத்திற்கு சுதந்திரமாக வெளியேற அனுமதித்திருந்தால் படுமோசமான இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்ற வாதத்திலும் உண்மையில்லாமல் இல்லை.
இது கஞ்சிக்கதை என்றால், ஐஸ்கிறீம் கதை அதுவேறு. எல்லா மதங்களிலுமே தானம் வழங்குதல் மரபு. மதங்கள் எப்போதும் அதை வலியுறுத்தினாலும் அனேகமாக வருடாந்த கோயில் உற்சவ, மற்றும் விசேட கொண்டாட்டகாலங்களில் இது முக்கியம் பெறுகிறது. இவ்வாண்டு வழமைக்கு மாறாக வெசாக் காலத்தில் ஐஸ்கிறீம் நாடுமுழுவதும் பரவலாகவும் ,இலவசமாகவும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு கடுமையான வெப்பக்காலநிலை ஒரு காரணமாக இருக்கலாம்.
சிங்கள படைத்தரப்பு கஞ்சிக்கு எதிர்ப்பு காட்டுகின்றனர் என்பதற்காக தமிழர்களும் ஐஸ்கிறீம் எதிர்ப்பை காட்டவேண்டுமா? விரும்பாதவர்கள் ஐஸ்கிறீம் வரிசையில் அணிவகுக்கவேண்டியதில்லை. அவர்களை யாரும் கட்டாயப்படுத்தவும் இல்லை. அப்படி இருக்க இலவசமாக ஐஸ்கிறீம் வாங்கி சாப்பிட்ட தமிழர்கள் சமூக ஊடகங்களில் மிகமோசமான உளவியல் , வார்த்தை வன்முறைக்கு உள்ளானார்கள். இதை சாமானிய மனிதர்கள் பதிவிடவில்லை . குறிப்பிடத்தக்க தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள் பதிவிட்டுள்ளனர்/பகிர்ந்துள்ளனர். இலவசமாக கிடைக்கின்ற ஐஸ்கிறீமை விட ‘பீயைத்தின்னலாம் ‘ என்ற ஒரு பதிவை மட்டக்களப்பு அரசியல்வாதி ஒருவர் பகிர்ந்து இருந்தார்.
இலவசம்! என்ற வார்தைக்குப்பின்னால் ஒரு பொருளாதாரக்கோட்பாட்டு வாழ்வியல் இருக்கிறது.ஒரு பொருளாதார விலங்கு என்ற வகையில் ஒரு மனிதனின் சாதாரண செயற்பாடு இது. வெசாக்கில் ஐஸ்கிறீம் நுகர்ந்தவர்களை இந்த வகையில் எந்த வகையிலும் குற்றம் சொல்ல முடியாது. அப்படி என்றால் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் இலவசமாகத்தானே வழங்கப்பட்டது. மக்கள் கூட்டம் கூட்டமாக வாங்கி நுகர்ந்தார்கள். கஞ்சியை விலைக்கு வாங்கவேண்டும் என்றால் இவர்களில் எத்தனை பேர் விலை கொடுக்க தயாராய் இருந்திருப்பார்கள். பொருளாதார வாழ்வியல் இன,மத,மொழிகளை கடந்தது. எது எங்கு மலிவானதோ அல்லது இலவசமானதோ அதை,அங்கே மக்கள் நுகர்வார்கள். இந்த பகுத்தறிவை தவிர்த்து தனியே ஐஸ்கிறீம் உண்டவர்களை மட்டும் இன,மத வெறுப்புடன் நோக்குபவர்களில் எத்தனை பேர் அரசாங்கத்தினால் வழங்கப்படும் இலவசங்களை கௌரவமாக பெற்றுக்கொள்வதை தவிர்க்க தயாராய் இருக்கிறார்கள்?
பன்மைத்துவ சமூகக்கட்டமைப்பை கொண்ட மட்டக்களப்பு நகரில் வெசாக் கொண்டாட்டம் நீண்ட கால வரலாற்றை கொண்டது. சகல இன,மதங்களை சேர்ந்தவர்களும் பௌர்ணமி நிலவில் மட்டக்களப்பின் வாவிக்கரையை சூழ வலம்வரும் காலம். மட்டக்களப்பு பன்சால – லங்கா பேக்கரி , சின்ன ஆஸ்பத்திரி சந்தி,பொலிஸ்நிலையவளாகம், சிறைச்சாலை வளாகம், ஆஸ்பத்திரியடி, முன்னொரு காலத்தில் மாந்தீவு வைத்தியசாலையிலும் பின்னர் இருதயபுரம் பகுதியிலும் வெசாக் அலங்காரங்கள், வெசாக் வெளிச்சக்கூடுகள் , மாலைநேர கடைத்தெருக்களை கண்டு கழிக்க,பொழுது போக்க மட்டக்களப்பு நகர் மக்கள் கூடுவதுவழக்கம். பன்சாலைக்கு சென்று வழிபாட்டில் ஈடுபடுபவர்களில் மாற்று இன, மதத்தினரும் இருப்பது வழக்கம். இந்தத்தடவை ஒரு வித்தியாசம் , அதுதான் இலவச ஐஸ்கிறீம். இது மேலும் ஒரு கவர்ச்சியை இளையோர், சிறார்கள், குடும்பங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.
மட்டக்களப்பு விகாரபதி தொடர்பாக பலதரப்பட்ட விமர்சனங்கள் இருந்தாலும் அவற்றையும் மீறி பௌத்தத்தையும்,அதன் கொள்கைகளையும், வெசாக் பண்டிகையையும் மதிப்பளித்து செயற்படவேண்டியது மனித நாகரிகம். மாற்று மத நிகழ்வுகளை கௌரவித்தது செயற்படுவதும் , அங்கீகரிப்பதும் கூட தமிழ்த்தேசிய அரசியலின் ஒரு பண்பு வெளிப்பாடாக அமையவேண்டுமேயன்றி, இன,மத நல்லிணக்கத்திற்கு குறுக்கே தடையாக அமையக்கூடாது. சிறிலங்கா பொலிசார் ஒரு கூலிப்படையாக முள்ளிவாய்க்கால் நினைவுகூரும் நிகழ்வை – கஞ்சிவழங்கலை மறுக்கிறார்கள் என்பதற்காக , அதற்கு எதிராக சாதாரண மக்களாகிய நாமும் அநாகரிகமாக செயற்பட வேண்டியதில்லை. இதனால் பொலிஸாரின் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதாக கொள்ள வேண்டியதில்லை.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும்,வெசாக் பண்டிகையையும் ஆண்டில் ஒருதடவை வரும் போகும். ஆனால் யுத்தத்தின் வடுக்களை – ஆறாக்காயங்களை சகல இன மக்களும் வாழ்நாள் முழுவதும் சுமக்கிறார்கள் . அது போன்றே சகல மத நிகழ்வுகளும் மக்கள் வாழ்வியலில் பின்னிப் பிணைந்தவை. இவற்றிற்கே முக்கியத்துவம் அளிக்கப் பட வேண்டும்.
இறந்த காலம் நினைவு கூரப்படவேண்டும் என்பதில் இருகருத்துக்களுக்கு இடமில்லை. போரால் சிதைக்கப்பட்ட இன,மத நல்லிணக்கம் புரிந்துணர்வுடன், ஒருதரப்பை மறு தரப்பு அங்கீகரிப்பதன் ஊடாக கட்டியெழுப்பப்படவேண்டும் என்பதையும் மறுப்பதற்கில்லை.
இந்த சமூகங்களுக்கு இடையிலான பரஸ்பர அங்கீகாரத்தின் அடையாளமாக கஞ்சியும்,ஐஸ்கிறீமும் அமைய வேண்டும். அதுவே இருண்ட இறந்த காலத்தில் இருந்து , வெளிச்சத்திற்கு வருவதற்காக இறந்த காலத்தில் இருந்து நாம் கற்றுக் கொள்கின்ற நிகழ்கால, எதிர்கால பாடமாகும்.