— அழகு குணசீலன் —
யாழ்ப்பாணம் கோவில்வீதி முகவரியில் இருந்து வெளிவரும் ஒரு நாளேடு அது. பெயர் காலைமுரசு. யாழ்.மேலாதிக்க, பிரதேசவாத, வடக்குக்கு ஒரு நியாயம்,கிழக்குக்கு ஒரு நியாயம் என, இன நல்லுறவுக்கு எதிரான,ஜனநாயக மறுப்பு கருத்துக்களை’ கக்கி ‘முரசு கொட்டியிருக்கிறது காலைமுரசு . கழுதை தேய்ந்து கட்டெறும்பான தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியலை விமர்சிப்பதாக – புத்திமதி சொல்வதாக எண்ணி கிழக்கிற்காக அழுது புலம்பி இருக்கிறது அதன் ஆசிரியர் தலையங்கம். 22.05.2024 அன்று வெளிவந்த காலைமுரசின் ‘நமது கருத்து’ வகுப்பெடுத்திருப்பது என்ன……?
” ………..வடக்கில் நிலைமை எப்படியும் இருந்து விட்டுப் போகட்டும்.’ மீன்கரைந்தால் சட்டிக்குள் தான் என்பார்கள். வடக்கில் தமிழ் கட்சிகள் பிளவுபட்டு பொதுத்தேர்தலை அணுகினாலும், பிரதிநிதித்துவம் பெரும்பாலும் தமிழ்தரப்புக்குள்தான் பகிரப்படும்’ .
“——— அதுவும் கூட சிலசமயங்களில் யாழ் மாவட்டத்தில் ஏழு ஆசனங்களும் ஒரு கட்சிக்கு தலா ஒன்று என்ற வீதத்தில் பிரிந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. அதுவும் வீடு, குத்துவிளக்கு, சைக்கிள்,வீணை,கை,மான் அத்தோடு ஒன்று சிலநேரம் தொலைபேசி,யானை அல்லது பலரும் இப்போது பேசும் ‘ஈழம் தமிழரசு’ என வாய்ப்புகள் உண்டு.
“……. இந்த சமயத்தில் குடிசார் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என்று தங்களை பெயர்சூட்டிக்கொள்வோரின் பிரதான கடமை தமிழ்த்தேசிய கட்சிகளையும், தரப்புக்களையும் குறைந்த பட்சம் கிழக்கிலாவது ஒன்றிணைத்து பொதுத்தேர்தலை அணுகச் செய்வதற்கான தந்திரமாகத்தான்-தந்திரோயாயமாகத்தான் இருக்க வேண்டும். அதற்குத்தான் அவர்கள் முன்னுரிமை கொடுக்கவேண்டும்…..”.
ஆகா…! அற்புதமான யோசனை வடக்கில் எப்படியும் இருக்கலாமாம். கிழக்கில் அப்படி இருக்கக்கூடாதாம். வடக்கில் ஒன்றுக்கு பத்து கட்சிகள் இருக்கலாம். தமிழ்த்தேசிய கட்சிகள் பிளவுபட்டு பதவிக்காக மல்யுத்தம் செய்யலாம். யாழ்ப்பாண மக்கள் தமிழ்த்தேசிய எதிர்த்தரப்பான இணக்க அரசியலுக்கு வாக்களிக்கலாம், சிங்கள தேசியக்கட்சிகளுக்கு வாக்களிக்கலாம்….. ஆனால் கிழக்கில் மட்டும் அப்படி இருக்கக்கூடாதாம். குடிசார் அமைப்புக்கள் தமிழ்த்தேசிய கட்சிகளையும், தரப்புக்களையும் ஒன்றிணைத்து தேர்தல் களத்திற்கு அனுப்பவேண்டுமாம்.
இதற்கு காலை முரசின் ‘நமதுகருத்து’ சொல்லும் காரணம் மீன் கரைந்தால் யாழ்ப்பாணத்தில் சட்டிக்குள் தானாம்.
ஆக, யாழ்ப்பாண சட்டிக்குள் வீடு, குத்துவிளக்கு, சைக்கிள், வீணை, கை, மான், மற்றும் தொலைபேசி, யானை மீன்களும் கிடக்கலாம். ஆனால் கிழக்கு சட்டிக்குள் அப்படி கிடக்கக்கூடாதாம். அதற்காக சிவில் அமைப்புக்கள் ‘தந்திரமும் நல்ல மந்திரமும் ‘ செய்யவேண்டுமாம். என்னடா இது? குருட்டு நியாயம்! ஓரவஞ்சகம்!
இந்த யாழ். மேலாதிக்க கருத்தியலின் மறுபக்கம் என்ன?
வடக்கில் பொதுத்தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ்த்தேசிய கட்சிகள் ஒற்றுமைப் படவேண்டும் என்பதல்ல. ஏனெனில் யாழ்மேலாதிக்க மனநிலையில் அது சாத்தியமே இல்லை. இது ஒரு நூற்றாண்டை தொடும் வரலாறாகிறது.
தமிழ்த்தேசிய கட்சிகளின் ஒற்றுமையை விடவும் கதிரைக் கணக்குத்தான் அவங்களுக்கு முக்கியம்.
அங்கு வீணை,கை,தொலைபேசி,யானை வென்றாலும் அதாவது மீன் கரைந்தாலும் அது சட்டிக்குள்தானாம். மறுவார்த்தைகளில் சொன்னால் நாங்கள் எந்த கட்சி என்றாலும் யாழ்ப்பாணத்தமிழர் .
நாங்கள் சிங்கள ஆட்சியில் ஆளும் தரப்பில் இருந்தாலும், எதிர்த்தரப்பில் இருந்தாலும் ஒரே சட்டிக்குள் தான் இருக்கிறோம்.
ஆனால் கிழக்கில் அது நடந்து விடக்கூடாது. நடந்தால் எங்கள் மேலாதிக்கத்தின் பிடி கைநழுவி விடும்.விடலாமா? அதற்கே இந்த அறைகூவல்.
இந்த அரசியலை தமிழ்த்தேசிய அரசியல் அதன் ஆரம்பம் முதல் செய்துவருகிறது. கிழக்கில் சட்டிக்குள் மீன்கரைந்தால் அது அடுப்புக்குள் விழுந்துவிடும் என்று கூறி போலி தமிழர் ஒற்றுமையை பேசி, ஆனால் பிரிவினையை வளர்த்த கதையாகவே கிழக்கில் தமிழ்த்தேசிய வரலாறு இருக்கிறது.
வடக்கில் எப்படியும் இருந்து விட்டுபோகட்டுமாம். கிழக்கில் அப்படி இருக்கக்கூடாதாம். அது சரி, கிழக்கில் ஏன் உங்களுக்கு இவ்வளவு அக்கறை.? இருபத்தியிரண்டாக இருந்த கதிரை எண்ணிக்கை ஒற்றைத் தானத்தில் தான் இனி வரப்போகிறது என்று கூறும் நீங்கள் , அதை வடக்கில் ஒற்றுமை பட்டு இரட்டைத்தானமாக்குவது பற்றி ஏன் கதைக்கவில்லை? அது ‘உங்களின் ‘சட்டி என்பதாலா? கிழக்கில் மற்றவர்களின் சட்டிக்குள் எப்படி மேலாதிக்கம் செலுத்தலாம் என்பதுதான் இப்போது உங்களுக்கு இருக்கின்ற கவலை. அதற்காக காக்கா கூட்டுக்குள் முட்டையிடுவதுதான் இப்போது உங்கள் தந்திரோபாயம்.
” ……. நாம் நேரத்துடன் சுதாகரித்து தமிழ்த்தேசிய தரப்புக்கள் எல்லாம் கிழக்கில் ஒன்றுபடுவதை உறுதிப்படுத்தாவிட்டால் அடுத்த பொதுத்தேர்தலில் தமிழ்த்தேசிய தரப்புக்களின் எம்.பிக்கள் எண்ணிக்கை கிழக்கில் -திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் சேர்த்து ஆக ஒன்றே ஒன்றாக குறைந்துவிடும் பேராபத்து உண்டு…..” என்று தொடர்ந்து பேசுகிறது காலை முரசின் ‘நமது கருத்து’ .
வடக்கில் தமிழ்த்தேசிய எம்.பிக்களின் எண்ணிக்கை குறைந்தால், வீணை,கை,தொலைபேசி,யானை என்பன சில எம்.பிக்களை பெற்றுக் கொண்டாலும் அது அவர்களின் சட்டிக்குள் தான் மீன். கிழக்கில் அது நடக்கக் கூடாது அதற்காக தமிழ்த்தேசிய கட்சிகள் ஒன்று படவேண்டுமாம். அதை குடிசார் அமைப்புக்கள் என்ற போர்வையில் ‘சாமிகள்’ கிழக்கில் களமிறங்க வேண்டும் என்று கூறுகிறது காலைமுரசு.
‘நாம்’ என்று நீங்கள் யாரைச்சொல்கிறீர்கள் ?
அந்த வார்த்தை யாரைக்குறிக்கிறது?
யார் அந்த ‘நாம்’.
நிச்சயமாக கிழக்கு மக்களையும் குறித்து இந்த ‘நாம்’ பயன்படுத்தப்படவில்லை என்பது உறுதி. இது வரலாற்று பாடம்.
வடக்கில் தமிழ்த்தேசிய அரசியலுக்கு ஏற்பட்டுவரும் வீழ்ச்சியை – போலி கோஷங்கள் மீது வடக்கு மக்கள் இழந்து வரும் நம்பிக்கையை, வடக்கில் நிவர்த்தி செய்ய இயலாத அரசியல் பலவீனத்தை, தமிழ்த்தேசிய எதிரணியிலும், தேசிய கட்சிகளிலும் மக்கள் அணிதிரள்வதை மறைத்தும், கிழக்கில் சிங்கள, முஸ்லீம் மக்களை தமிழர்களின் எதிரிகளாக காட்டி கிழக்கிற்குரிய சமூக பன்மைத்துவ சகவாழ்வை புலிப்பாணியில் தேர்தல் ஆயுதம் கொண்டு சிதைத்து ,கிழக்கின் சமூக, பொருளாதார,அரசியலை சிதைக்கின்ற யாழ்.மேலாண்மை சிந்தனை அன்றி இது வேறென்ன? அதுவே இந்த ‘நமதுகருத்து ‘, ‘நாம் ‘ சொல்லாடல்களின் அர்த்தம்.
ஒரு ஊடகம் ஒரு இனத்தின் ஐக்கியத்தை தேர்தலை குறியாகக் கொண்டு பேசுவது அந்த ஊடகத்தின் கட்சிசார் -கதிரைசார் அரசியல்.இது மக்கள் சார் அரசியல் அல்ல. அதுவும் தமிழர் தாயகம் என்று கூறிக்கொண்டு வடக்கில் ஒரு அரசியல் நிலைப்பாட்டையும், கிழக்கில் ஒரு அரசியல் நிலைப்பாட்டையும் ஊக்குவிப்பது மேலாதிக்க சுய இலாப அரசியல். ஊடகம் ஒன்று தமிழ்த்தேசிய இனத்தின் ஐக்கியம் ஒன்றை முதன்மைப்படுத்த வேண்டும் என்றால் செய்யவேண்டியது ஒட்டு மொத்த மக்கள் திரட்சியை பிரதேச, மத, கட்சி அரசியலைக்கடந்து கோரவேண்டுமேயன்றி கட்சிகளை ஐக்கியப்படுத்துவதல்ல ஒரு ஊடகத்தின் வேலை.அதை தவிர்த்து ஒரு கட்சியை -ஒரு அரசியலை பலப்படுத்த செய்யும் ஆலோசனை ஒரு இனத்தின், பிரதேசங்களுக்கு இடையிலான ஐக்கியத்திற்கு பதிலாக பிரிவினையை வளர்க்கின்ற ஒரு செயல் மட்டும் அல்ல அரசியலில் ஜனநாயக பன்மைத்துவத்தை மறுதலிப்பதும், சிறிய பிராந்திய கட்சிகளை தள்ளி வைக்கின்றதும், சிறுபான்மையினரின் குரலை நசுக்குகின்ற தந்திரோபாயம்.
‘சட்டி’ கதையின் உண்மையான தாற்பரியம் என்ன? கிழக்கில் முஸ்லீம்கள், சிங்களவர்கள் அதிக பிரதிநிதித்துவத்தை பெற்று விடுவார்கள் என்று காட்டுகின்ற வங்குரோத்து அரசியல் ஒரு பக்கம். யாழ்ப்பாணத்தில் வீணை,கை, தொலைபேசி, யானை எல்லாவற்றையும் கூட ஒரே சட்டிக்குள் பார்க்கின்ற உங்களால் கிழக்கில் -மட்டக்களப்பில் படகு, கப்பல், மரம், மொட்டு, யானை இவற்றை ஏன் ஒரே சட்டிக்குள் பார்க்க முடியவில்லை.வடக்கில் வெவ்வேறு தமிழ்த்தேசிய கட்சிகள், தமிழ்த்தேசிய எதிரணி இணக்க அரசியல் கட்சிகள், தேசிய கட்சிகளின் எம்.பி.க்கள் ஒரு சட்டிக்குள் கரையலாம் ஆனால் கிழக்கில் அது நடக்கக்கூடாது.
தமிழர் அரசியல் வரலாற்றில் கிழக்கில் இருந்து யாராவது வடக்குக்கு வந்து அரசியல் செய்து உங்கள் பிரதிநிதித்துவத்தை ‘அபகரித்த ‘அல்லது அதற்கு முயற்சித்த வரலாறு உண்டா? அதுவல்ல கிழக்கார் மனநிலை. ஆனால் கிழக்கில் அமிர்தலிங்கம்,, மாவை சேனாதிராஜா….என்ற வரலாறு உண்டு. தேசியப்பட்டியல் மல்லுக்கட்டும் இதையே காட்டிநின்றது.
கிழக்கில் தமிழ்த்தேசிய கட்சிகளையும், தரப்புக்களையும் ஒற்றுமைப்படுத்துகின்ற பொறுப்பை குடிசார் அமைப்புக்களிடம் ஒப்படைத்திருக்கிறது காலை முரசின் ‘நமதுகருத்து’. கிழக்கில் தானே ஒற்றுமைப்படுத்த கோரியிருக்கிறீர்கள் ஆக, இந்த கோரிக்கை கிழக்கின் குடிசார் அமைப்புக்களை குறித்து விடப்பட்டதா? அல்லது வடக்கு கிழக்கு குடிசார் அமைப்புக்கள் என்ற பெயரில் கிழக்கில் சில ‘போடுகாய்களை’ கொண்ட குடிசார் அமைப்புக்களை குறித்ததா? இதைக்கேட்க வேண்டியிருக்கிறது.
ஏனெனில் தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்துவதற்கு ஆதரவான குடிசார் அமைப்புக்களின் அமைப்புக்களின் நீண்டபட்டியல் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில் பூதக்கண்ணாடி கொண்டு தேடி மூன்று கிழக்கு அமைப்புக்களை காணமுடிந்தது. அல்லது ஆக, மூன்று கிழக்கு குடிசார் அமைப்புக்கள் தான் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கின்றனவா? அப்படியானால் கிழக்கில் தமிழ்பொதுவேட்பாளர் யோசனை அடிபட்டு விட்டது என்று கொள்ளலாமா?
இதைப்பார்த்த போது மற்றொரு பட்டியல் நினைவுக்கு வந்தது அதுதான் கருணா அம்மான் புலிகளில் இருந்து விலகியபோது வெளியிட்ட வடக்கில் எத்தனை பேர், கிழக்கில் எத்தனை பேர் புலிகள் அமைப்பில் முக்கிய பதவிகளில் இருக்கிறார்கள் என்பது.