இலங்கைத் தமிழ்த் தேசிய இனத்தின் ஒற்றுமை என்பது யாது? (சொல்லித்தான் ஆகவேண்டும்! சொல்-06)

இலங்கைத் தமிழ்த் தேசிய இனத்தின் ஒற்றுமை என்பது யாது? (சொல்லித்தான் ஆகவேண்டும்! சொல்-06)

(‘அரங்கம்’ அரசியல் பத்தித்தொடர்)

    — தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —

 எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ‘தமிழ்ப் பொது வேட்பாளர்’ ஒருவரை நிறுத்த வேண்டும் என்ற விடயத்தை ஆதரிப்பவர்கள் அல்லது அதனை முன்னெடுப்பவர்கள் கூறுகின்ற காரணங்களில் ஒன்று அத்தகைய தமிழ்ப் பொது வேட்பாளருக்குத் தமிழர்கள் பெருவாரியாக வாக்களிப்பதன் மூலம் தமிழ் மக்களின் ஒற்றுமையை உலகுக்கு எடுத்துக்காட்ட முடியும்/வேண்டும் என்பது. இது உண்மையான அர்த்தமுள்ள ஒற்றுமையாக முடியுமா?

 உண்மையில் தமிழ்த் தேசிய இனத்தின் ஒற்றுமை என்பது யாது?

இலங்கைத் தமிழர்களின் அரசியல் பொதுவெளியை ‘தமிழ்த் தேசியப் பரப்பு’- தமிழ்த் தேசியம் அற்ற பரப்பு என வகைப்படுத்தாமல்; தமிழ் அரசியல் கட்சிகளை ‘தமிழ்த் தேசியக் கட்சிகள்’- தமிழ் தேசியம் அற்ற கட்சிகள் என வகைப்படுத்தாமல்; தமிழ் அரசியல் கட்சிகளை எதிர்ப்பு அரசியல் கட்சிகள்- இணக்க அரசியல் கட்சிகள் என வகைப்படுத்தாமல்; தமிழ் பிரஜைகளைத் தியாகிகள்- துரோகிகள் என வகைப்படுத்தாமல் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் இணைந்து தமிழர் தரப்பிற்கான ஒரு ‘பொதுக் கட்டமைப்பை’ உருவாக்குவதாகும். குறைந்தபட்சம் அரசியல் ரீதியாக அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளும் ஒரு பொதுச் சின்னத்தின் கீழ் -ஒரு ஒற்றைப் பொதுவேலைத் திட்டத்தின்கீழ் அதாவது இனப் பிரச்சனைக்கான அரசியல் தீர்வாக பல முன்மொழிவுகளை முன்வைக்காது நடைமுறைச் சாத்தியமான ஒற்றைக் கோரிக்கையின் கீழ் ஒன்றிணைவதுதான் உண்மையான ஒற்றுமையாகும். இத்தகையதொரு ஒற்றுமையைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

 2001 இல் தமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் உண்மையான ஒற்றுமை அணி அல்ல. அது உண்மையிலேயே புலிகளின் அரசியல் தேவைகளுக்காகத் துப்பாக்கி முனையில் உருவாக்கப்பட்ட போலி ஒற்றுமை அணியாகும். அதனால்தான் 2009 மே 18 இன் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிதறுண்டு போயிற்று.

இந்த அனுபவப் பின்னணியில்தான் தமிழ் மக்களின் ஒற்றுமைக்கான பொறிமுறை பற்றிச் சிந்திக்க வேண்டுமே தவிர வெறுமனே ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி அவருக்குத் தமிழ் மக்கள் பெருவாரியாக வாக்களிப்பதன் மூலம் தமிழ் மக்களை ஒற்றுமைப்படுத்தலாம் என எண்ணுவது தவறான அணுகு முறையாகும்.

 உண்மையில் சாதாரண தமிழ் மக்கள் ஒற்றுமையைத்தான் உளமார யாசிக்கிறார்கள். மட்டுமல்ல அவர்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள். தங்களுக்குள்ளே ஒற்றுமை இல்லாமல் இருப்பதும் அதன் மூலம் தமிழ் மக்களின் ஒற்றுமையைச் சிதைப்பதும் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களேயாவர். ஆகவே தலைவர்கள் எனப்படுவோர் திருந்த வேண்டும். ஆனால் அது நடைபெறுவது ‘முயற்கொம்பு’. காரணம் ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் தமக்கான அல்லது அக்கட்சிகளில் உள்ள தனி நபருக்கான நிகழ்ச்சி நிரலை மையமாக வைத்துத்தான் ஒற்றுமை பற்றி ஓதுகிறார்கள். மக்கள் மையச் சிந்தனை இவர்களிடம் இல்லை. கொள்கை அளவிலும் நடைமுறைச் செயற்பாடுகளிலும் தமிழ்த் தேசிய அரசியல் செல்நெறியில் இன்று தேவைப்படுவது ‘பண்பு மாற்றம்’ ஆகும்.

 அப்பண்பு மாற்றத்தை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் ஏற்படுத்த முடியாது.

மேலும், இந்தப் பண்பு மாற்றம் என்பது புலிகளின் நிகழ்ச்சி நிரலின் நீட்சியாகவும் இருக்க முடியாது; இருக்கவும் கூடாது.

 இரண்டாவது உலக மகா யுத்தத்தின் பின்னரும் ஹிட்லரின் ‘நாஜிசம்’ தொடரப்பட்டிருக்குமாயின் ஜேர்மன் நாடு முன்னேறியிருக்க முடியாது; பதிலாக அது உலக நாடுகளால் ஒதுக்கப்பட்டும் வெறுக்கப்பட்டும் பின்னடைவைத்தான் கண்டிருக்கும்.

 அது போலவே, 2009 மே 18 முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னரும் ‘புலியிசம்’ தொடரப்படுமாயின் அல்லது தமிழ்த் தேசிய அரசியலின் செல்நெறி தொடர்ந்தும் புலிகளின் நிகழ்ச்சி நிரலின் நீட்சியாக இருக்குமாயின் இலங்கைத் தமிழ்ச் சமூகம் பின்னடைவையே எதிர்நோக்க வேண்டிவரும். அதுதான் கடந்த பதினைந்து வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது. இதில் இலங்கைத் தமிழ்ச் சமூகம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ‘புத்திமானே பலவான்’.

 ஆனால், இன்று தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுப்பவர்கள் அனைவருமே அல்லது அனைத்து அரசியல் கட்சிகளுமே அல்லது சமூக அமைப்புகள் என்று கருதப்படுபவையுமே புலிகளின் முகவர்களாக அல்லது புலிகளின் பதிலிகளாகத் தம்மை வெளிப்படுத்தியவர்கள் அல்லது அடையாளம் காட்டியவர்களே.

 மட்டுமல்ல, தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தும் விடயத்தை முன்னெடுக்கும் சக்திகளுக்கும் ஜனாதிபதித் தேர்தலைத் தமிழ் மக்கள் பகிஷ்கரிக்கக் கோரும் சக்திகளுக்கும் அடிப்படைக் குணாம்சத்தில் மாற்றமில்லை. அவர்களிடையே இருப்பது தேர்தல்மைய அரசியல் முரண்பாடுகளே தவிர மக்கள் நலன் சார்ந்த தத்துவார்த்த முரண்பாடுகள் அல்ல. இருதரப்பினரிடத்திலும் ‘புலிவாடை’யே வீசுகிறது.

 எனவே, தமிழ் மக்கள் ‘வாக்குப்பெட்டி’ யை மையமாக வைத்து ஒற்றுமைப்படுவது என்பது உண்மையான ஒற்றுமையாகமாட்டாது. பண்பு மாற்ற அரசியலை மையமாக வைத்து நேரடியாகக் கூறப்போனால் ‘புலி நீக்க’ அரசியலை மையமாக வைத்து ஒற்றுமைப்படுதலே இன்றைய தென்னிலங்கை- இந்து சமுத்திரப் பிராந்திய மற்றும் பூகோள அரசியலுக்குப் பொருத்தமானது.