— கருணாகரன் —
தமிழர்களுடைய எதிர்ப்பு அரசியலின் காலம் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியோடு – 2009 உடன் – முடிந்து விட்டது. தமிழரசுக் கட்சியே எதிர்ப்பரசியலைத் தொடக்கி வைத்தது. தான் தொடக்கி வைத்த எதிர்ப்பரசியலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடியாமல் அது திணறியது. அதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றவர்கள், அடுத்த தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள். அதாவது விடுதலை இயக்கங்கள். அதனுடைய உச்சம் விடுதலைப்புலிகள் ஆகும்.
எதிர்ப்பரசியலைப் பல பரிமாணங்களில் விடுதலைப்புலிகள் மேற்கொண்டனர். அரசைத் திணற வைக்கும் அளவுக்கு அதிருந்தது. தமக்கான கட்டுப்பாட்டுப் பிரதேசம், அதற்கான ஆட்சிக் கட்டமைப்பு, அதற்குரிய படைத்துறைகள், அரசை நிலைகுலைய வைக்கும் பல்திறன் தாக்குதல்கள் – விரிந்த போர், அதற்குள்ளும் மக்களைத் தம் வசமாக வைத்திருக்கும் அரசியல் உத்திகள் என இது விரிந்திருந்தது. இது பற்றிய விமர்சனங்கள், மாற்று அபிப்பிராயங்கள் இருந்தாலும் எதிர்ப்பரசியலில் புலிகளின் இடம் முக்கியமானது.
2009 இல் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதோடு இவை அனைத்தும் முடிவுக்கு வந்தன.
ஆனால், இனப்பிரச்சினையின் – இன ஒடுக்குமுறையின் – அனைத்துப் பிரயோக நிலையும் அப்படியேதானுள்ளது. இப்போது கூட ஆயுதப் போராட்டமொன்றைச் செய்வதற்கான அத்தனை நியாயங்களும் உண்டு. அதைத் தொடரக் கூடிய அளவுக்கு பயிற்சி பெற்றவர்களும் தாராளமாக உள்ளனர். சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோநோகராதலிங்கம், சுகு ஸ்ரீதரன், துரைரத்தினம், சித்தார்த்தன், முருகேசு சந்திரகுமார், நடராஜா கமலாகரன் போன்ற தலைவர்களிலிருந்து இந்தக் கட்டுரையாளர் உள்பட பல பத்தியாளர்கள், ஆயிரக்கணக்கான போராளிகள் வரை அதற்கான அனுபவத் தகுதியோடுள்ளனர்.
ஆனால், கள யதார்த்தம்?
இதுதான் ஊன்றிக் கவனிக்க வேண்டியது.
ஆகவே எதிர்ப்பரசியலை மேற்கொள்வதாக இருந்தால், அது புலிகளை விடப் பன்மடங்கு வீரியமுள்ளதாகவும் பல பரிமாணத்தைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
அதைச் செய்வதற்கு யாருண்டு? எந்தத் தரப்பு உள்ளது?
எதிர்ப்பரசியல் என்பது ஆயுதப் போராட்டத்தின் வழியாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. மக்களை அணிதிரட்டிச் செய்யலாம் என்று சிலர் சொல்லக் கூடும்.
ஆம், குறைந்த பட்சம் அரகலயவைப் போலாவது மேற்கொள்ளலாம். அதாவது மக்கள் இயக்கங்களாகவோ மக்களின் அணிதிரளல்களாகவோ எழுச்சியடைந்து ஆட்சித் தரப்பை அசைப்பதாக இருக்க வேண்டும்.
அதைச் செய்ய முடியாமலிருப்பது ஏன்?
அப்படி எதுவும் நிகழவில்லையே.
அதற்கான சூழலும் ஏது நிலைகளும் தமிழ்ச் சூழலில் தாராளமாக இருந்தன. இருக்கின்றன. இதைப் புரிந்து கொண்டு, மக்கள் இயக்கத்தைக் கட்டுவதற்கும் மக்களை அணி திரட்டுவதற்கும் எந்தத் தமிழ்த் தலைவர்களும் முயற்சிக்கவில்லை. (திரட்டப்பட்ட – திட்டமிடப்பட்ட போராட்டங்கள் எல்லாமே பிசுபிசுத்துப் போனதாகத்தான் இருந்தன).
அதற்குப் பெரும் அர்ப்பணிப்பைச் செய்ய வேண்டும். அதற்கும் அவர்கள் தயாரில்லை. உண்மையான நிலைமை என்னவென்றால், இதற்கான ஆளுமைகள் இன்று இல்லாமற் போய் விட்டன. அல்லது தமது ஆளுமையையும் ஆற்றலையும் இவர்கள் வெளிப்படுத்தத் தவறி விட்டனர்.
இன்றுள்ள அரசியற் கட்சிகளைச் சற்று ஆழ்ந்து நோக்கினால் ஒரு உண்மை தெளிவாகப் புலப்படும். எஸ்.ஜே.வி. செல்வநாயத்தைச் சொல்லியே தமிழரசுக் கட்சி இன்னும் உயிர் வாழ்கிறது. அப்படித்தான் பத்மநாபாவைச் சொல்லி ஈ.பி.ஆர்.எல்.எவ்வும் சிறி சபாரத்தினத்தைச் சொல்லி ரெலோவும் உமா மகேஸ்வரனை வைத்து புளொட்டும் செயற்படுகின்றன. இப்படித்தான் பிரபாகரனை (புலிகளை) வைத்துப் பல தரப்புகளும் பிழைத்துக் கொள்கின்றன. எவையும் தமது தொடக்க நிலைத் தலைவர்களைக் கடந்து, புத்தடையாளமாக எழுச்சியடையவில்லை.
தாம் ஒரு பேராளுமை என்ற உணர்வோடு எழுந்து ஒரு மக்கள் இயக்கத்தைக் கட்டவோ, மக்களை எழுச்சியடைய வைக்கவோ, புதிய அரசியலை முன்மொழிந்து அதை முன்னெடுக்கவோ முடியாமலே பலரும் உள்ளனர்.
இன்னொரு நிலையில் சொல்வதானால், பேரிழப்புகளையும் பெரும் தியாகங்களையும் செய்த மக்களின் முன்னால், இந்தத் தலைவர்கள் எதையும் செய்ய முடியாதவர்களாக – எதையும் செய்வதற்குத் தயாரில்லாதவர்களாகச் சிறுத்துள்ளனர்.
இதனால்தான் இவர்களில் பலரும் தமது மெய்யான விருப்புக்கும் அரசியல் நிலைப்பாட்டுக்கும் அப்பால், புலிகளின் நிழலில் தமது அரசியலைச் செய்கின்றனர். சரி பிழைகளுக்கு அப்பால், புலிகள் மேற்கொண்ட அர்ப்பணிப்பு அவர்கள் மீதான மதிப்பை இன்னும் பெரும்பாலான தமிழ் மக்களிடம் வைத்திருக்கிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ளவே ஒவ்வொரு தரப்பும் முயற்சிக்கிறது.
இதற்கப்பால், தமது சிந்தனையின் வீரியத்திலும் செயற்பாட்டுப் பெறுமதியிலும் சுயமாக நிற்க முடியாமலே அனைத்துத் தரப்பும் உள்ளன.
தமது சிறுமைகளையும் இயலாமைகளையும் மறைத்துக் கொள்வதற்காக இவர்கள் மேற்கொள்ளும் உத்திகள் அல்லது உபாயங்களே –
1. சர்வதேச சமூகத்துக்கு எமது (தமிழ் மக்களின்) ஒற்றுமையைக் காட்ட வேண்டும். தமிழ் மக்கள் தேசமாகத் திரண்டு நிற்க வேண்டும் (கட்சிகளாகிய – தலைவர்களாகிய நீங்களே ஒன்றாகத் திரண்டு நிற்கக் கூடிய நிலையில் இல்லை. ஆனால், மக்கள் ஒன்றாகத் திரண்டு நிற்க வேண்டுமாம்).
2. இலங்கை அரசுடன் எந்த நிலையிலும் சமரசத்துக்கோ விட்டுக் கொடுப்புக்கோ செல்ல முடியாது. அரசையும் அதை ஆதரிக்கின்ற சிங்கள மக்களையும் தொடர்ந்து எதிர்க்க வேண்டும். (ஆனால் இவர்கள் அவ்வப்போது அரசோடும் ஆட்சித் தரப்புகளோடும் சிங்கத் தலைமைகளோடும் தேவைக்கேற்ப விட்டுக் கொடுப்புகள், கூட்டுச் சேர்க்கைகள், டீல்களை வைத்துக் கொள்வார்கள்). தாம் மட்டும் எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னுக்கு நிற்க மாட்டார்கள்.
3. பிராந்திய சக்தியாகிய இந்தியாவின் வழிகாட்டலின்படியே நாம் செயற்பட வேண்டும் (இதில் ஏகப்பட்ட குழப்பங்கள். இந்தியாவை நம்ப முடியாது என்று சிலரும் இந்தியாதான் தமிழருக்கு ஆதரவாக இருக்கும் எனச் சிலரும் உள்ளனர்)
4. அரசாங்கமும் சிங்களத் தரப்புமே பொறுப்புக் கூறல், நீதியை வழங்குதல், தீர்வை முன்வைத்தல், பரிகாரம் காணுதல் போன்றவற்றுக்கு முழுப்பொறுப்பு. (தமக்கு – தமிழ்த்தரப்புக்கு – இதில் எந்தப் பொறுப்பும் இல்லை எனச் செயற்படுதல்). ஆட்சி அதிகாரத்தைக் கொண்டுள்ள தரப்பு என்ற வகையில் அரசுக்கு கூடுதல் பொறுப்புண்டு. அதற்காக நமக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்று சொல்லித் தப்பி விட முடியாது.
போன்றனவாகும்.
இந்தக் கோரிக்கைகள் பலவும் அடிப்படையில் நியாயமானவையே.
ஆனால், இதைச் செய்வதற்கு (செயற்படுத்துவதற்கு) உரிய அழுத்தத்தைக் கொடுப்பதற்கு எத்தகைய பொறிமுறைகள் தமிழ்த்தரப்பில் உருவாக்கப்பட்டன? மேற்கொள்ளப்பட்டன?
பாராளுமன்ற உரைகள், ஊடக அறிக்கைகள், அவ்வப்போது நடத்தப்படுகின்ற ஊடகச் சந்திப்புகள், அங்கங்கே நடக்கின்ற சிறிய அளவிலான சில மணி நேரப்போராட்டங்களுக்கு அப்பால் எந்தப் பெரிய அரசியல் நடவடிக்கையும் எந்தத் தரப்பினாலும் மேற்கொள்ளப்படவில்லை.
வெளிச் சக்திகளை (பிராந்தியச் சக்தியான இந்தியாவையும் சர்வதேச சமூகத்தையும்) தமிழ் மக்களுடைய (தமிழ் பேசும் மக்களுடைய) அரசியல் நியாயத்தின் பக்கம் நிற்க வைப்பதற்கான அக – புறச் சூழலைக் கூட உருவாக்கவில்லை. இதற்கான இராசதந்திரப் பொறிமுறையோ, அதைச் செயற்படுத்தக் கூடிய அணியோ, கவனத்திற்குரிய ஆளுமையோ உருவாகவும் இல்லை.
பதிலாக வெறும் கட்டாந்தரையாகவே தமிழர்களின் எதிர்ப்பரசியற் களம் கடந்த 15 ஆண்டுகளாக இருக்கிறது. இந்தக் கட்டாந்தரையில் எத்தகைய நன்மையான பயிர்கள் வளர முடியும்?
இதற்கு அப்பால் 1980 களில் இருந்ததைப்போல, தமிழ் – சிங்கள முரண்பாட்டை (பகையை) வளர்ப்பதற்கும் ஆயுதப் பயிற்சியைத் தருவதற்கும் இந்தியா உட்பட எந்தத் தரப்பும் தற்போது தயாரில்லை. மட்டுமல்ல, பிரிவினையை ஊக்கப்படுத்தவும் எந்த நாடும் முன்வரவில்லை.
ஆக எதிர்ப்பரசியல் என்பது செயற்பாட்டு வடிவத்தில் தமிழ்ச்சமூகத்திடம் முழுதாக இல்லாதொழிந்து விட்டது.
இதைப் புரிந்து கொள்ளாமல், அல்லது மக்களை ஏமாற்றுவதற்காக அரசின் குற்றங்களையும் தவறுகளையும் ஒடுக்குமுறைகளையும் பற்றி சும்மா பேசிக் கொண்டிருப்பதும் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருப்பதும் தொலைக்காட்சி உரையாடல்களில் ஆக்ரோமாகப் பேசுவதும் எதிர்ப்பு அரசியல் அல்ல.
அது வெறுமனே ஒரு ஒரு தலைப்பட்டசமான ஊடகப் பணி – ஒற்றைப்படைத்தன்மையான (கறுப்பு – வெள்ளை) அரசியல் விமர்சனம் மட்டுமே.
அதற்கு அப்பால், அதற்கு எந்த வகையான அரசியற் பெறுமானமும் இல்லை. மக்கள் விழித்துக் கொண்டால், அதற்குப் பலமும் கிடையாது.
அரசியற் பெறுமானம் என்பது, முன்னெடுக்கப்படும் அரசியல் உண்டாக்கும் நல்விளைவுகளாகும்.
இதை (இந்த உண்மையை – இந்த யதார்த்தத்தை) ப் புரிந்து கொண்டு, 2009 க்குப் பிறகு போருக்குப் பிந்திய அரசியலை தமிழர்கள் மேற்கொண்டிருக்க வேண்டும்.
முதற்கட்டுரையிற் குறிப்பிட்டதைப்போல அப்படி ஒரு முன்னெடுப்பைச் செய்திருந்தால், இன்று தமிழர்கள் இருந்திருக்கக் கூடிய சூழல் வேறாக இருந்திருக்கும். அதாவது இப்படிக் கையறு நிலையில் நின்று புலம்பும் துயர நிலையைச் சந்தித்திருக்க வேண்டியதில்லை.
என்பதால் எந்த நிலையிலும் பகையை முடிவுக்குக் கொண்டு வந்து, ஒரு தீர்வை எட்டவே வேண்டும் என்பதே நம்முன்னே உள்ள ஒரே தெரிவாக உள்ளது.
அதைத் தவிர வேறு தெரிவுகளுண்டா?
அப்படியென்றால் அது என்ன? எப்படியானது? என்று எதிர்ப்பரசியலை முன்மொழிவோர் சொல்ல வேண்டும்.
மக்கள் தேசமாகத் திரண்டு என்ன செய்வது? அதனுடைய அடுத்த கட்டம் என்ன? என்று அவர்கள் தெளிவாக்க வேண்டும்.