(அமரர்கள் சாம் தம்பிமுத்து – கலா மாணிக்கம் ஆகியோரின் 34ஆவது நினைவேந்தல் நிகழ்வு 16.05.2024 அன்று புளியந்தீவு, மட்டக்களப்பு வில்லியம் ஓல்ட் மண்டபத்தில் நடைபெற்றபோது செங்கதிரோன் தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் ஆற்றிய நினைவேந்தல் உரை இது.)
— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —
தற்போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கின்றவரும் என்னால் அன்போடு ‘அருண்’ என விளிக்கப்பெறுபவருமான தம்பி அருண்மொழிவர்மன் தம்பிமுத்து (அருண்மொழிவர்மன் வேல்கரதீசன் மாணிக்கம் தம்பிமுத்து) ஏற்பாடு செய்திருக்கும் அவரது தாய் தந்தையர்களுக்கான அமரர்கள் அண்ணன் சாம் தம்பிமுத்து மற்றும் அக்கா கலா மாணிக்கம் ஆகியோரின் 34ஆவது நினைவேந்தல் நிகழ்வு இது.
இந்த மண்ணுக்காகவும் இம்மண்ணின் மக்களுக்காகவும் தம்மை ஒறுத்தும் ஓடியாடியும் உழைத்தமைக்காக உயிர்ப்பலியெடுக்கப்பட்ட இத்தம்பதியினரை இம் மண்ணிலே நினைவுகூர்ந்து நிகழ்வொன்றை நடாத்துவதற்கு 1990 ஆம் ஆண்டு அவர்கள் மரித்து 34 வருடங்கள் கழிந்துதான் ஒரு ஜனநாயக இடைவெளி இம்மண்ணில் ஏற்பட்டிருக்கிறதா? என்ற கேள்வியை எழுப்புகிறபோது நெஞ்சம் நெருடுகிறது. நெருஞ்சி முள்ளாகக் குத்துகிறது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவரும் தந்தை செல்வா எனத் தனது தனயன்களால் அழைக்கப்பெற்றவருமான எஸ் ஜே வி செல்வநாயகம் அவர்களால் 1949 இல் தோற்றுவிக்கப்பட்ட தமிழரசுக் கட்சியால் தமிழர் தாயகம் – இறைமை-சுய நிர்ணய உரிமை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பெற்று முன்னெடுக்கப்பெற்ற தமிழ்த் தேசிய அரசியல் பின்னாளில் பிரபாகரனின் கைகளுக்கு மாறித் ‘தமிழ்ப் பாசிச’ மாகப் பிறழ்வடைந்து அறவிழுமியங்களையும் அரசியல் சித்தாந்தங்களையும் புறந்தள்ளிய ஆபத்தான ஆயுதக் கலாசாரமாக உருவெடுத்தபோது – தடம் பதித்த தமிழ்த் தேசியம் தடம் புரண்ட போது – அந்த விபத்துக்குப் பலியான எத்தனையோ ஆளுமைகளுள் சாம் தம்பிமுத்து மற்றும் கலா மாணிக்கமும் அடங்குவர். இந்த அவலத்தை எண்ணி மனம் இன்றும்தான்-இன்னும்தான் ஏங்கி அழுகிறது. எழுதிச் செல்லும் விதியின் கை இலங்கைத் தமிழ்ச் சமூகத்தை இன்னும் என்ன செய்யக் காத்திருக்கிறதோ தெரியவில்லை என்ற அங்கலாய்ப்புடனேயே எனது நினைவேந்தல் உரையை நிகழ்த்த ஆரம்பிக்கின்றேன்.
மட்டக்களப்பிலே பிரபல்யம் பெற்ற குடும்பத்திலே மூன்று பிரபல்யமான சகோதரர்கள் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் தம்பிமுத்து எனும் குடும்பப் பெயர்களிலேயே அழைக்கப்பட்டனர். ஒருவர் ஜே. ஆர். தம்பிமுத்து-மற்றவர் எஸ் .ஆர். தம்பிமுத்து-மூன்றாமவர் இ ஆர் தம்பிமுத்து.
எஸ். ஆர். தம்பிமுத்துவின் மகன் இ. எல். தம்பிமுத்து. திராவிடர்களுடைய வரலாறு – கலாசாரம் பற்றி முதன்முதலாக அதுவும் ஆங்கில மொழியில் நூல் எழுதி வெளியிட்டவர்தான் இந்த இ. எல். தம்பிமுத்து. இந்நூல் 1946 இல் வெளிவந்தது. இந்த இ. எல். தம்பிமுத்துவின் மகன் சாம் தம்பிமுத்து. சாம் தம்பிமுத்துவின் மகன் அருண் தம்பிமுத்து.
மேற்கூறிய மூன்று சகோதரர்களில் இ. ஆர். தம்பிமுத்து Legislative Council என ஆங்கிலத்திலும் சட்ட நிரூபண சபை எனத் தமிழிலும் அழைக்கப்பட்ட சபையில் 1921-1924 காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்தவர். அப்போது முழுக் கிழக்கு மாகாணமும் ஒரேதேர்தல் தொகுதியாகவிருந்தது.
பின்னர், 1923 இலே தேர்தல் தொகுதி எல்லைகள் மீள் நிர்ணயம் நடைபெற்ற போது முழுக் கிழக்கு மாகாணத் தொகுதியும் மட்டக்களப்பு இறைவரி மாவட்டம் மற்றும் திருகோணமலை இறைவரி மாவட்டம் என இரு தேர்தல் தொகுதிகள் ஆகின. இதில் அப்போதைய மட்டக்களப்பு தேர்தல் தொகுதியை 1924 இல் இருந்து 1931 வரை சட்ட நிரூபண சபையில் இ. ஆர். தம்பிமுத்துவே பிரதிநிதித்துவம் செய்தார்.
பின்னர், டொனமூர் ஆணைக் குழுவின் சிபாரிசுக்கமைய சட்ட நிரூபண சபையானது State Council என ஆங்கிலத்திலும் சட்டசபை எனத் தமிழிலும் அழைக்கப்பட்ட சபையாக 1931-ல் இருந்து 1947 வரை விளங்கியது. சட்டசபைக் காலத்தில் முழுக் கிழக்கு மாகாணமும் மட்டக்களப்பு வடக்கு (இது திருகோணமலை- மட்டக்களப்பு தொகுதி எனப் பெயரிடப்பெற்றது) மற்றும் மட்டக்களப்பு தெற்கு என இரு தேர்தல் தொகுதிகளாக வகுக்கப்பட்டன. கல்லடிப் பாலத்திலிருந்து தெற்கே குமுக்கன் ஆறு வரையும் மட்டக்களப்பு தெற்குத் தொகுதியாகவும் கல்லடிப் பாலத்திற்குத் வடக்கே வெருகல் ஆற்றையும் கடந்து திருகோணமலை மாவட்டத்தையும் உள்ளடக்கி கொக்கிளாய் வரை மட்டக்களப்பு வடக்குத் தொகுதியாகவும் அதாவது திருகோணமலை-மட்டக்களப்பு என பெயரிடப்பெற்ற தொகுதியாகவும் விளங்கின.
டொனமூர் ஆணைக் குழுவின் சிபாசின் கீழமைந்த சட்டசபைக்கான மட்டக்களப்புத் தெற்குத் தொகுதிக்கான முதலாவது தேர்தல் 20.06.1931 இல் நடைபெற்றபோது இ. ஆர். தம்பிமுத்துவும் போட்டியிட்டார். ஆனால் துரதிஷ்டவசமாக அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எச். எம். மாக்கான் மாக்காரிடம் 2637 வாக்குகளால் தோல்வியடைந்தார்.
ஜே. ஆர். தம்பிமுத்துவின் மகனான ஏ. ஆர். தம்பிமுத்து என்பவர் 22.02.1936 இல் நடைபெற்ற மட்டக்களப்பு வடக்குத் தொகுதி (திருகோணமலை-மட்டக்களப்பு தொகுதி) க்கான சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றார்.
பின்னர், இவர் பதவியிழக்க நேரிட்டதால் 1945 இல் நடைபெற்ற இடைத் தேர்தலிலேயே ‘நல்லையா மாஸ்டர்’ என அழைக்கப்பட்ட வல்லிபுரம் நல்லையா அவர்கள் சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பெற்றார்.
இ. ஆர். தம்பிமுத்து அவர்களின் முதலாவது மனைவியான திருமதி லோரா செட்டி (இவர் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட செட்டி வம்சத்தை சேர்ந்தவர்) தம்பிமுத்துதான் இலங்கையில் பெண்களுக்கு வாக்குரிமை கோரி முதன்முதல் குரலெழுப்பியவர். 1928 இல் டொனமூர் ஆணைக் குழுவின்முன் ‘பெண்கள் வாக்குரிமைச் சபை’ எனும் அமைப்பின் சார்பில் திருமதி சில்வா என்பவருடன் இணைந்து சாட்சியமளித்தபோது இக்கோரிக்கையை அவர் முன் வைத்தார். இந்த விடயத்தைக் கலாநிதி சு. சிவரெத்தினம் அவர்கள் ‘அரங்கம்’ மின்னிதழில் எழுதிய ‘அடையாள அரசியலில் இலங்கை’ என்னும் தொடர் கட்டுரையில் பதிவு செய்துள்ளார். இம் முற்போக்கான கோரிக்கையை இலங்கையின் அரசியல் பொதுவெளியில் முதன்முதலாக முன் வைத்ததன் மூலம் மட்டக்களப்பு மண்ணுக்குப் பெருமையையும் பெற்றுத் தந்தார்.
மேலும், பெண்கள் வாக்குரிமையையும் உள்ளடக்கிய டொனமூர் ஆணைக்குழுச் சீர்திருத்த மசோதா சட்ட நிரூபண சபையில் சமர்ப்பிக்கப்பட்ட வேளை அது ஒரு மேலதிக வாக்கினாலே சட்டமாக நிறைவேற்றப் பெற்றது. அந்த ஒரு மேலதிக வாக்கை அளித்தவராக இ. ஆர். தம்பிமுத்துவே கருதப்படுகிறார். இத்தகவலையும் கலாநிதி சு. சிவரத்தினம் அவர்கள் தனது மேற்படி கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.
இ. ஆர். தம்பிமுத்துவின் இரண்டாவது மனைவியான தங்கரட்ணத்தின் மகளான தங்கப்பொன் வள்ளித்தங்கத்துக்கு 12 பிள்ளைகள். இவர்களில் கடைசி இரண்டு ஆண்கள் முறையே வாசுதேவா மற்றும் பரமதேவா. 24.08.1984 அன்று களுவாஞ்சிக்குடிப் பொலிஸ் நிலையத் தாக்குதலின்போது களச் சாவடைந்த புலி உறுப்பினரான பரமதேவாவினதும் மற்றும் ‘புளொட்’ இயக்கத்தின் முக்கியஸ்தராக விளங்கிப் பின்னர் இந்திய இலங்கை சமாதான ஒப்பந்த காலத்தில் 27.09.1987 அன்று மட்டக்களப்பு கிரானில் வைத்துப் புலிகள் இயக்கத்தினரால் ஏனைய சிலருடன் சேர்த்துக் கொல்லப்பட்ட வாசுதேவாவினதும் தாயார்தான் வள்ளித்தங்கம். தம்பி எந்தப் புலி இயக்கத்தில் போராளியாகவிருந்து களப்பலியானாரோ அந்தப் புலி இயக்கத்தினரே அவரது சகோதரரைப் ‘புளொட்’ இயக்கப் போராளி என்பதற்காகக் கொலை செய்தார்கள், இப்படிப்பட்ட சகோதர இயக்கப் படுகொலைகளும் இயக்க முரண்பாடுகளுமே-இவற்றின் தொடர்ச்சியே தமிழ்ச் சமூகத்தை முள்ளிவாய்க்கால்வரை அழைத்துச் சென்று பேரழிவை ஏற்படுத்திற்று என்பதையும் இத்தருணத்தில் வேதனையுடன் நினைத்துப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை. இந்த நினைவுகள் ஏற்படுத்தும் அக வலியால் நெஞ்சம் விம்மி ஊமையாய் அழுகிறது.
இவ்வாறு தம்பிமுத்து குடும்பம் இலங்கையின் அரசியலோடும் ஈழ விடுதலைப் போராட்டத்தோடும் இறுக்கமாய் இணைந்ததொன்றாகும். ‘செனட்டர் மாணிக்கம்’ என அழைக்கப்பெற்ற முத்தையா மாணிக்கம் என முழுப் பெயரைக் கொண்ட கிழக்கின் மிகப்பெரிய ஆளுமையின் மகள்தான் செல்வி கலா மாணிக்கம். இவர்களுடைய வீட்டிலே கால் படாத தமிழ் அரசியல் தலைவர்கள் இல்லையெனும் அளவுக்குக் கிழக்கிலங்கையினதும் ஒட்டுமொத்த இலங்கைத் தமிழ்ச் சமூகத்தினதும் அரசியல் வரலாற்றுடன் பின்னிப்பிணைந்த பிரபல்யமான குடும்பம் கலா மாணிக்கத்தினுடையது.
சாம் தம்பிமுத்து-கலா மாணிக்கம் தம்பதியினரைப் போலவே அரசியல் காரணங்களுக்காகப் புலிகளின் குண்டுத் தாக்குதலுக்குக் கொழும்பில் வைத்து 29.07.1999 அன்று தனது உயிரைக் காவு கொடுத்தவர் நீலன் திருச்செல்வம். நீலன் திருச்செல்வத்தின் தந்தையான மு . திருச்செல்வம் கியூ.சி. உம் செனட்டர் மாணிக்கமும் 1960களில் சமகாலத்தில் தமிழரசுக் கட்சியின் சார்பில் இலங்கையின் செனட் சபை உறுப்பினர்களாகப் பதவி வகித்தவர்கள்.
தமிழரசுக் கட்சியில் தோய்ந்த குடும்பம் கலா மாணிக்கத்தினுடையது. கலா மாணிக்கம் அவர்கள் பாவாடை தாவணியில் இளம் சிறுமியாக இருந்த காலத்திலிருந்தே தமிழரசுக் கட்சியின் அரசியல் மேடைகளிலே அச்சமின்றிக் கர்ச்சித்த வீராங்கனை.
1961இல் தமிழரசுக் கட்சி நீதிமன்ற மொழி விவகாரத்தை முன்வைத்து வடக்குக் கிழக்கு மாகாணங்களில் கச்சேரி வாயில்களை மறித்துச் சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தி அரச நிர்வாகத்தை வடக்குக் கிழக்கில் இரு மாதங்கள் ஸ்தம்பிக்கச் செய்த அறப்போராட்டத்தின்போது ஒருநாள் மட்டக்களப்பில் தனது தோளில் கை வைத்துத் தள்ளிய உயர் பொலீஸ் அதிகாரியை “Hands Off” – கையை எடு-என்று கர்ச்சித்து அப்பொலிஸ் அதிகாரியைத் திகிலடையச் செய்த துணிச்சலான பெண்தான் கலா மணிக்கம்.
அவருடைய கணவர் சாம் தம்பிமுத்து 1952 ல் தமிழரசுக் கட்சியில் இணைந்தார். 1956இல் இலங்கையின் பழைய பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியின் முன்பு காலிமுகத்திடலில் தனிச் சிங்களச் சட்ட மசோதாவை எதிர்த்துத் தமிழரசுக் கட்சி நடாத்திய அறப்போராட்டத்தில் இருபத்தி நான்கு வயது இளைஞனாகக் கலந்து கொண்டவர். அப்போது அவர் சட்டக் கல்லூரி மாணவனாக இருந்தார். இவரும் கலா மாணிக்கம் போலவே இள வயதிலிருந்தே தமிழரசுக் கட்சி அரசியலில் தீவிரமாகத் தொண்டாற்றியவர்.
தமிழரசுக் கட்சியானது ஈழத் தமிழர் பிரச்சனையை இந்தியத் தமிழ்நாட்டு-அப்போது ‘மெட்ராஸ்’ என அழைக்கப்பட்ட சென்னை-அரசியல் தலைவர்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களின் ஆதரவைத் திரட்டுவதற்காக இருவரைச் சென்னைக்கு 1950 களின் இறுதியில் அனுப்பியது. அந்த இருவரில் ஒருவர் இளஞ் சட்டத்தரணியான சாம் தம்பிமுத்து மற்றவர் களுதாவளையைச் சேர்ந்த அமரர் இரா. பத்மநாதன். பணி முடிந்து சாம் தம்பிமுத்து நாடு திரும்ப இரா. பத்மநாதன் அவர்கள் சென்னையிலேயே தங்கிவிட்டார். பின்னாளில் அவர் நாடு திரும்பியது வேறு கதை. தமிழரசுக் கட்சியின் அரசியலோடும் மட்டக்களப்பில் இராசதுரையின் அரசியற் செயற்பாடுகளோடும் இவர்கள் இருவருமே பின்னிப் பிணைந்தவர்கள்.
தமிழரசுக் கட்சியின் ஆறாவது தேசிய மாநாடு 25.05.1958 இல் வவுனியாவில் நடைபெற்றது. மாநாடு ஆரம்பிப்பதற்கு இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பே தமிழ் சிங்கள இனக் கலவரத்திற்கான மேகங்கள் கருக்கட்டத் தொடங்கிவிட்டன. நுவரெலியாவைச் சேர்ந்த செனிவிரட்ண என்ற சிங்களவர் (அவர் நுவரெலியா மேயராகவிருந்தவர்) கல்குடாவில் தமிழர்களால் கொல்லப்பட்டார் என்ற பொய்யான வதந்தியால் கருக்கட்டிய இக்கலவரம் பொலனறுவையிலும் கல்லோயாச் சந்தியிலும் வைத்து மட்டக்களப்பிலிருந்து புகையிரதத்தில் பயணம் செய்த தமிழர்களைச் சிங்களக் காடையர் கும்பல் வழிமறித்துத் தாக்கியதில் ஆரம்பமாயிற்று.
அதனால், செனட்டர் மாணிக்கத்தின் குடும்பம் பொலனறுவை வழியாக வவுனியா மாநாட்டுக்குச் செல்ல முடியாத நிலை. மாணிக்கமும் அவரது அணியினரும் காரில் மகாஓயா வழியாகப் பதுளை சென்று அங்கிருந்து வவுனியா மாநாட்டுக்குப் போய்ச் சேர்ந்தனர். மாநாடு முடிவடையும் தறுவாயில் கலவரம் நாடு முழுவதிலும் பரவிவிட்டிருந்தது. தரைப் பாதையால் மட்டக்களப்பை வந்தடைய மார்க்கமில்லை. அதன் காரணமாகப் படகொன்றில் கடல் வழியாக மாணிக்கம் அவரது மகள் கலா மாணிக்கம் – இரா பத்மநாதன் – சாம் தம்பிமுத்து ஆகியோருடன் அமிர்தலிங்கமும் பயணித்து மட்டக்களப்பை வந்தடைந்தனர். மட்டக்களப்பின் களநிலை அறிந்து பிரதமர் எஸ் டபிள்யூ ஆர் டி பண்டாரநாயக்காவிடம் எடுத்துச் சொல்வதற்காகவே அமர்தலிங்கம் படகில் இவர்களுடன் பயணித்து மட்டக்களப்பிற்கு வந்தார். இப் படகுப் பயணத்தின்போதுதான் சாம் தம்பிமுத்துவுக்கும் கலா மாணிக்கத்துக்குமிடையில் காதல் அரும்பிற்று.
இக்கதைகளையெல்லாம் எனக்கு நேரடியாகச் சொன்னவர் அமரர் இரா. பத்மநாதனே என்பதையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் வட்டுக்கோட்டை மாநாட்டில் 1976 இல் தமிழீழத் தனிநாட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே 1950 இன் இறுதிப் பகுதிகளிலேயே தனி நாட்டுச் சிந்தனையை முன் வைத்தவர் அடங்காத் தமிழன் என அழைக்கப்பெற்ற யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தைச் சேர்ந்த சி. சுந்தரலிங்கம் ஆவார். அவர் 1960 இல் ‘ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி’ எனும் அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தார்.
தமிழரசுக் கட்சியின் மிதவாத அரசியல் போக்குடன் முரண்பட்ட செனட்டர் மாணிக்கம் அவர்கள் ‘ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி’ யில் இணைந்து அக்கட்சியின் சார்பில் 18.02.1968 அன்று நடைபெற்ற கல்முனைத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழரசுக் கட்சியை எதிர்த்து வேட்பாளராகக் களம் இறங்கியதையும் வரலாறு பதிவுசெய்து வைத்துள்ளது. தமிழரசுக் கட்சியும் தமிழ்க் காங்கிரஸும் பிரதமர் டட்லி சேனநாயக்கா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கூட்டரசாங்கம் அமைத்திருந்த காலமிது. செனட்டர் திருசெல்வம் தமிழரசுக் கட்சியின் சார்பில் ஸ்தலஸ்தாபன அமைச்சராகப் பதவியிலிருந்த காலம். உள்ளூராட்சி அமைச்சு அப்போது ஸ்தலஸ்தாபன அமைச்சு என்றே அழைக்கப்பட்டது.
அமைச்சர் திருச்செல்வம் அன்று நினைத்திருந்தால் அன்றிருந்த கல்முனைப் பட்டின சபையைக் கல்முனைத் தமிழர்களின் கோரிக்கையை ஏற்று வர்த்தமானி அறிவித்தலொன்றின் மூலம் இரண்டாகப் பிரித்திருக்கமுடியும். அப்படிப் பிரித்திருந்தால் இன்று கல்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரச்சினை வந்திருக்கவே மாட்டாது. இதனை நினைவேந்தல் நிகழ்வான இச்சந்தர்ப்பத்தில் விவரிப்பதற்கு நான் விரும்பவில்லை. விரிவஞ்சியும் இந் நிகழ்வின் நோக்கத்துடன் அதன் பொருத்தப்பாடின்மை கருதியும் அது பற்றி விவரிப்பதை விட்டு விடுகிறேன்.
சத்தியசீலன் தலைமையிலான தமிழ் மாணவர் பேரவையாக இருக்கட்டும் அல்லது புஷ்பராசா தலைமையில் இயங்கிய தமிழ் இளைஞர் பேரவையாக இருக்கட்டும் அல்லது மாவை சேனாதிராசாவின் தலைமையில் இயங்கிய தமிழரசு வாலிப முன்னணியாக இருக்கட்டும் அல்லது பின்னாளில் தோன்றிய ஆயுதம் ஏந்திய போராளி இயக்கங்களாக இருக்கட்டும் அவற்றின் உறுப்பினர்கள் அனைவரினதும் அடைக்கலக் கூடமாகவே சாம் தம்பிமுத்து கலா மாணிக்கம் தம்பதியினரின் மட்டக்களப்பு வாவிக்கரை வீடு விளங்கிற்று. எல்லோரையும் அணைத்து ஆதரவு தந்து அடைக்கலம் தந்து விருந்தோம்பியும் மகிழ்கின்ற குடும்பமாக இக் குடும்பம் விளங்கிற்று ‘அடையா நெடுங்க கதவு’ என்று இலக்கியங்களில் சொல்லப்படுவது போல்தான் இவர்களது வாவிக்கரை வீடு விளங்கிற்று. தந்தை செல்வநாயகம் உட்பட தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் அனைவருமே இவ்வீட்டில் கால் பதித்தவர்களே. தமிழ்த் தேசிய அரசியலின் வரலாறெனினும் சரி ஆயுதமேந்திய ஈழ விடுதலைப் போராட்ட வரலாறெனினும் சரி சாம் தம்பிமுத்து – கலாமாணிக்கம் தம்பதியினரின் வாவிக்கரை வீட்டில் நடந்த நிகழ்வுகளை விட்டுவிட்டு எழுதப்பட முடியாத அளவுக்கு இவர்களின் வாழ்க்கை தமிழ்த் தேசிய அரசியலோடு ஒன்றித்தது ஆகும். அருண் தம்பிமுத்துவின் குடும்பம் தமிழர்களின் சமூக மற்றும் அரசியல் வரலாற்றில் ஆழ வேரூன்றிய பாரிய ஆல விருட்சமாகும்.
என்னைப் பொறுத்தவரை எனது பதினெட்டாவது வயதில் அதாவது 1968 இலே தமிழரசுக் கட்சியின் உறுப்பினராக இணைந்து கொண்டவன். என் நினைவு சரியானதெனில் 1972 இலிருந்து இக்குடும்பத்துடன் ஊடாடும் வாய்ப்பைப் பெற்றேன்.
1970 இல் ஆட்சிக்கு வந்த பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம் புதிய குடியரசு அரசியலமைப்பை நிறைவேற்றும் முஸ்தீபுகளை மேற்கொண்டிருந்த நேரத்தில் வல்வெட்டித்துறையிலே வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் தலைவர் ஞானமூர்த்தி அவர்களின் இல்லத்தில்தான் தமிழர்களின் ஒற்றுமை அணியான ‘தமிழர் ஐக்கிய முன்னணி’ – Tamil United front உருவானது. அரசியலில் கீரியும் பாம்புமாகவிருந்த அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் ஜி ஜி பொன்னம்பலமும் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ் ஜே வி செல்வநாயகமும் இணைந்து கொண்டார்கள். இதன்பின் தமிழர் ஐக்கிய முன்னணியின் விசேட மாநாடொன்று 1972 இல் திருகோணமலை முற்றவெளியில் நடைபெற்றது. அப்போது திருகோணமலைத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக நேமிநாதனும் மூதூர் இரட்டை அங்கத்தவர் தொகுதியின் இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினராகத் தங்கத்துரையும் இருந்தார்கள். அப்போது இரா சம்பந்தன் தமிழரசுக் கட்சியிலோ அல்லது தமிழர் ஐக்கிய முன்னணியிலோ இணைந்திருக்கவில்லை. 1975 இல்தான் இரா சம்பந்தன் தமிழரசுக் கட்சியில் இணைந்தார்.
இந்தத் திருகோணமலை மாநாட்டிற்கு மட்டக்களப்பிலிருந்து சாம் தம்பிமுத்து – கலா மாணிக்கம் மற்றும் ஜோசப்பரராசசிங்கம் – சுகுணம் தம்பதியினருடன் நானும் புகையிரதத்தில் பயணித்து மாநாட்டில் பங்குபற்றிவிட்டு மீண்டும் புகையிரதத்திலேயே திரும்பினோம். அப்போதுதான் இவர்களுடன் எனக்கு நெருங்கிய ஊடாட்டமும் உறவும் பரிச்சயமும் ஏற்பட்டது. அந்த நினைவு இப்போது நெஞ்சம் முழுவதும் வியாபித்து எழுகிறது.
எனது சொந்த மாவட்டம் அம்பாறை ஆகும். அம்பாறை மாவட்டத்திற்குத் தந்தை செல்வா மற்றும் அமிர்தலிங்கம் ஆட்களுடனும் அல்லது இராசதுரையுடனும் கட்சி நடவடிக்கைகளுக்காகவோ-பாதயாத்திரை மற்றும் கிராம யாத்திரைகளின் போதோ இவர்கள் வருகைதரும்போது நானும் அவர்களுடன் இணைந்து செயல்பட்டது மறக்க முடியாத நினைவுகள் ஆகும்.
1983 இன் பின்னர் அம்பாறை மாவட்டத்திலே நடந்த மனித உரிமை மீறல்கள் அப்பாவி மக்கள் படுகொலைகளை வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகளாகவும் கட்டுரைகளாகவும் வரப்பண்ணியதில் சாம் தம்பிமுத்துவுக்குப் பெரும் பங்குண்டு. உதாரணமாக ‘உடும்பன்குளம்’ படுகொலையைச் சொல்லலாம். இதனால் அவருக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தலும்கூட இருந்தது. ஆனால், அவர் அவற்றையெல்லாம் அசட்டை செய்து துணிச்சலுடன் மக்கள் பணியில்தான் தீவிரம் காட்டி ஓயாது உழைத்தார். அவரைப்போன்றுதான் அவரது மனைவி கலாமாணிக்கமும்.
1987இல் கைச்சாத்திடப்பெற்ற இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தை இவர் ஆதரித்தார். அதன் அமுலாக்கத்திற்குப் பங்களித்தார். அப்போதிருந்த அரசியல் மற்றும் இராணுவச் சூழ்நிலையில் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவியபோதிலும் இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்திற்கு அனுசரணையாக விளங்கக்கூடிய ஒரு பாராளுமன்ற அணி பாராளுமன்றத்தில் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்ட போது இலங்கையில் முதலாவது விகிதாசார தேர்தல் முறையிலான பாராளுமன்றப் பொதுத் தேர்தலான 1989இல் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எஃப்), தமிழீழ விடுதலைக் கழகம், (ரெலோ), ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ என் டி எல் எஃ), தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியன இணைந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டபோது மட்டக்களப்பு மாவட்டத்தில் ஈபிஆர்எஃல் சார்பு வேட்பாளராகப் போட்டியிட்டுப் பாராளுமன்ற உறுப்பினராக வெற்றியீட்டினார்.
இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தையும் இந்தியாவையும் அனுசரித்துப் போனமைக்காகத் தமிழர் விடுதலைக் கூட்டணிச் செயலாளர் நாயகமான அமிர்தலிங்கம் 1989இல் கொழும்பில் வைத்துக் கொல்லப்பட்டார். அதே காரணத்திற்காகவே சாம் தம்பிமுத்து மற்றும் கலா மாணிக்கம் இருவரும் 1990 இல் தங்கள் உயிர்களைப் பலி கொடுத்தார்கள். அமிர்தலிங்கத்தை யார் கொன்றார்களோ அவர்களே இவர்களையும் கொன்றார்கள் என்பது இரகசியமானதல்ல. அது எல்லோருக்கும் தெரியும். மட்டுமல்ல, மட்டக்களப்பு வாவிக்கரை இல்லத்தில் இரண்டு தடவைகள் அவர் மீதான கொலை முயற்சியில் சாம் தம்பி முத்து உயிர் தப்பியிருந்தார். இந்த இரண்டு கொலை முயற்சிச் சம்பவங்களிலும் ஈடுபட்ட நபர்களை திருமதி கலா மாணிக்கம் அவர்கள் அடையாளம் கண்டிருந்தார். மூன்றாவது தடவைதான் 1990 இல் கொழும்பில் நடந்த கோரம்.
அரசியலிலே மூன்று வகை அரசியல் உண்டு. ஒன்று தனிநபர் அரசியல். Politics for the Individual. எந்தக் கட்சியில் நின்றால் வெல்லலாம் என்று பார்த்து அவ்வாறு செயற்பட்டுத் தன்னை வளர்த்துக் கொள்ளுகிற அரசியல். மற்றது கட்சி அரசியல். Politics for the party. ஒரு கட்சியில் இணைந்து தான் சார்ந்த கட்சியை வளர்ப்பதின் மூலம் ஏனைய கட்சிகளுடன் பகை முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டு தான் சார்ந்த கட்சியை மட்டுமே உயர்த்திப் பிடித்து அதனூடாகத் தன்னையும் உயர்த்திக் கொள்ளுகிற அரசியல். மூன்றாவது மக்களுக்கான அரசியல். Politics for the People. அது தனிநபர் மற்றும் கட்சி நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல் அவற்றிற்குமப்பால் மக்களின் நன்மைகளுக்காகவே உழைக்கின்ற தன்னலமற்ற அரசியல். உண்மையிலேயே அரசியல் என்பது முழுக்க முழுக்க மக்களுக்கானது. இத்தகைய ஒரு அரசியலைத்தான் சாம் தம்பிமுத்து கலா மாணிக்கம் குடும்பம் முன்னெடுத்தது. அதற்காகவே தம் உயிரையும் பலி கொடுத்தார்கள். எந்தத் தமிழ்த் தேசியத்திற்காக இவர்கள் பாடுபட்டு உழைத்தார்களோ அந்தத் தமிழ்த் தேசியத்தை உச்சரித்தவர்களின் துப்பாக்கிகள்தான் இவர்களது உயிர்களையும் காவுகொண்டது என்பது கறைபடிந்த வரலாறாகும்.
சாம் தம்பிமுத்து உட்பட அன்றைய தமிழரசுக் கட்சித் தலைவர்களும் பின்னால் வந்த தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களும் மக்களுக்கான தாம் எதிர்பார்த்த அரசியல் இலக்குகளை அடைய முடியாமல் போயிருக்கலாம். ஆனால், அவர்களது பலம் பலவீனங்களுக்கும் அப்பால் அவர்கள் மீது முன் வைக்கப்பட்ட அரசியல் விமர்சனங்களுக்கும் அப்பால் அவர்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் துணிவாகவும் வெளிப்படைத் தன்மையோடும் ஊழல் மோசடியற்றும் இயங்கினார்கள். அவர்களுக்கென்று ஒர் அரசியல் பின்னணி – போராட்டப் பின்னணி – சமூகப் பின்னணி இருந்தது. அவற்றின் நீட்சியாகத்தான் அவர்கள் தேர்தலில் போட்டியிட்டார்களே தவிர இன்றுள்ள தமிழ்த் தேசியம் பேசும் அரசியல்வாதிகளைப் போல் திடீரென்று தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டுமே கட்சியில் இணைந்தவர்கள் அல்ல. 1952 இல் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்ட சாம் தம்பிமுத்து அவர்கள் முப்பத்தியேழு ஆண்டுகளின் பின்புதான் 1989இல் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். கலா மாணிக்கம் தன் கணவரின் அரசியல் மற்றும் சமூகச் செயற்பாடுகளுக்குக் கை கொடுக்கும் ஒருவராக விளங்கினாரே தவிர தேர்தல் அரசியலில் ஒரு போதும் இறங்கியவர் அல்ல.
ஆனால், இன்று பெரும்பாலானவர்கள் நேற்றுப் பெய்த மழைக்கு இன்று முளைத்த காளான்கள் போன்றும் வெள்ளகாலத்தில் அடிபட்டுவரும் ஏறுகெழுத்திகள் போன்றும் வெல்லுகிற குதிரையைப் பார்த்துக் பணம் கட்டுகிற சூதாட்ட மனப்போக்குடைய போலிகள்தான் தமிழ்த் தேசியம் எனும் பெயர்ப் பலகையை மாட்டிக் கொண்டு தமிழ்த் தேசியவாதிகளாகத் தம்மை அழைத்துக்கொண்டு அல்லது குறி சுட்டுக்கொண்டு தேர்தலில் போட்டியிட வருகிறார்கள். ‘குறட்டை’ கள் எல்லாம் ‘வரால்’ களாகிக் குதிக்கின்ற காட்சிகள்தான் இன்று தமிழ்த் தேசிய அரசியல் குளத்தில் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.
இன்று கிழக்கிலங்கை மண் அமரர்கள் இ. ஆர். தம்பிமுத்து, நல்லையா மாஸ்டர், செனட்டர் மாணிக்கம், சாம் தம்பிமுத்து, மூதூர் தங்கத்துரை, பொத்துவில் கனகரெட்ணம், பட்டிருப்புத் தொகுதி இராச மாணிக்கம் மற்றும் கணேசலிங்கம் கல்குடா கே டபிள்யு தேவநாயகம், மட்டக்களப்பு ஜோசப் பரராசசிங்கம் போன்ற அரசியல் தலைவர்கள் மீண்டும் உதிக்க மாட்டார்களா என ஏங்கித் தவிக்கிறது.
இந்தக் கட்டத்தில் சாம் தம்பிமுத்து கலா மாணிக்கம் போன்ற ஆளுமைகளை எண்ணி மனம் பெருமிதம் கொள்கிறது. அவர்களைப் போன்றவர்களின் தொண்டையும் துணிகரமான செயற்பாடுகளையும் மக்களுக்கான தன்னலமற்ற சேவையையும்தான் இந்த மண் வேண்டிநிற்கிறது.
இத்தகைய பெற்றோர்களின் ஏக புதல்வனான அருண் தம்பிமுத்து அவர்கள் தனது பெற்றோர் மறைந்து 34 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர்களது நினைவேந்தல் நிகழ்வினை ஏற்பாடு செய்திருப்பது தனது பெற்றோரை மட்டுமல்ல இந்த மண்ணையும் மக்களையும்கூட மகத்துவப்படுத்துவதாகும். ஏனெனில் தம்பிமுத்துவின் குடும்பமும் மாணிக்கம் அவர்களின் குடும்பமும் இந்த மண்ணின் அரசியல் வரலாற்றோடும் வளர்ச்சியோடும் ஒன்றித்து வாழ்ந்த குடும்பங்களாகும்.
எனது நினைவேந்தல் உரையின் நிறைவாக என்னுடையதும் அருண் தம்பிமுத்துவினுடையதும் ஒரு அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொண்டு விடைபெறலாமென எண்ணுகிறேன். அந்த அனுபவம் இதுதான். சுருக்கமாகச் சொல்லவே விரும்புகிறேன்.
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முன்னாள் செயலாளர் நாயகமான தோழர் பத்மநாபாவும் அவருடன் சக பன்னிரெண்டு தோழர்களும் சென்னை சூளைமேட்டில் வைத்து 19.06.1990 அன்று கொல்லப்பட்டமை அனைவரும் அறிந்த விடயம்தான்.
அன்றைய தினம் நானும் அருண் தம்பிமுத்துவும் சம்பவம் நடந்த இடத்தில் பிரசன்னமாகியிருந்தோம். அருண் தம்பிமுத்து அப்போது பதினைந்து வயதுச் சிறுவன். அந்த வருடம் மே மாதம் மரணித்த தனது பெற்றோரின் சாம்பல் கரைப்பதற்காகத் தனது அம்மம்மா திருமதி செனட்டர் மாணிக்கம் சகிதம் சென்னை வந்து சென்னை மந்தைவெளியில் இரா சம்பந்தன் வீட்டில் தங்கியிருந்தார்கள்.
அன்றைய தினம் தோழர் பத்மநாபா டில்லியிலிருந்து சென்னை வந்திருந்தார். இலங்கையிலிருந்து யோகசங்கரி பா.உ. உட்பட இன்னும் பலர் சென்னை வந்திருந்தனர். அப்போது சென்னையில் நின்றிருந்த நான் தோழர் பத்மநாபாவையும் இலங்கையிலிருந்து வந்திருந்த ஏனைய தோழர்களையும் சந்திப்பதற்காகச் சம்பவம் நடந்த தோழர் பத்மநாபா குடியிருந்த சூளைமேட்டு வீட்டுக்குச் சென்றிருந்தேன்.
இலங்கையிலிருந்து வந்திருந்த தோழர்களுள் தம்பிலுவிலைச் சேர்ந்தவரும் அப்போதைய வடக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினருமாகிய ‘பாட்டு ரவி’ என அழைக்கப்பெறும் பத்மநாதனும் வந்திருந்தார். அவர் என்னைக் கண்டதும் சாம்பல் கரைப்பதற்காக அருண் தம்பிமுத்துவும் திருமதி செனட்டர் மாணிக்கமும் சென்னை வந்து இரா சம்பந்தன் வீட்டில் தங்கியிருக்கும் செய்தியை எனக்குச் சொல்லி அவர்களை நான் சென்று சந்திப்பதற்கு அங்கு நின்றிருந்த அருண் தம்பிமுத்துவை என்னைச் சம்பந்தரின் வீட்டிற்குக் கூட்டிச் செல்ல ஒழுங்கு செய்து முச்சக்கர வண்டி ஒன்றைப் பிடித்துச் செல்லுமாறு எனக்குப் பணமும் தந்து ஏற்பாடு செய்தார்.
நானும் அவர் சொன்னபடி அருண்தம்பிமுத்துவையும் அவருடன் நின்றிருந்த இன்னொரு மட்டக்களப்புச் சிறுவனையும் கூட்டிக்கொண்டு முச்சக்கர வண்டியில் இரா சம்பந்தன் வீடு சென்று திருமதி செனட்டர் மாணிக்கத்தைச் சந்தித்துவிட்டுத் திரும்பி வந்தபோது இந்தப் பயங்கரமான படுகொலைச் சம்பவம் நடந்தேறிவிட்டிருந்தது. எனக்குப் பணம் தந்து இரா சம்பந்தனின் வீட்டுக்குத் திருமதி செனட்டர் மாணிக்கத்தைச் சந்திப்பதற்காக அருண்தம்பிமுத்துவுடன் என்னை அனுப்பி வைத்த பத்மநாதனும் படுகொலை செய்யப்பட்டவர்களும் ஒருவர்.
அன்று மாலை நாம் அந்த இடத்தைவிட்டு அகன்று சுமார் அரை மணித்தியாலத்தால் அந்தப் பயங்கரம் நிகழ்ந்ததாகப் பின்னர் அறிந்தோம். அன்று நானும் அருண் தம்பிமுத்துவும் அந்த இடத்தை விட்டு அகலாது அங்கு நின்றிருந்தால் நானோ அல்லது அருண் தம்பிமுத்துவோ அல்லது இருவருமோ உயிரிழந்திருப்போம். ஏனெனில் அந்த வீட்டிலிருந்த எவருமே உயிர் தப்பவில்லை. அப்படி நடந்திருந்தால் இந்த நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்ய அருண் தம்பிமுத்துவும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றுவதற்கும் இந்த அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதற்கும் நானும் உயிருடன் இருந்திருக்கமாட்டோம். அந்த வகையில் எம்மைக் காப்பாற்றிய இறைவனுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.