— இரண்டாம் விசுவாமித்திரன் —
தமிழ் இலக்கிய நெடுநிலத்தில் எஸ்.பொ. எனப் பலராலும் அறியப்பட்ட எஸ்.பொன்னுத்துரை சிறுகதை, நாவல், நாடகம், நனவிடை தோய்தல், அரசியல், திறன்நோக்கு, வரலாறு, மொழிபெயர்ப்பு என்று பல துறைகளிலும் தனது எழுத்தூழியத்தினால் சிகரம் தொட்டவர். தமிழ் இலக்கிய விஞ்ஞானியாக கருதப்பட வேண்டியவர். அவர் நம்மை விட்டுப் பிரிந்து பத்து வருடங்கள் கழிந்து விட்டன. இன்று அவரின் 92வது பிறந்த தினம் (24.05.2024) ஆகும்.
வடமொழியில் வத்ஸாயநர் என்ற தத்துவஞானி எழுதிய காமசூத்திரம் என்ற நூலை எஸ்பொ தமிழ்படுத்தி வத்ஸாயநரின் காமசூத்திரம் என்ற பெயரில் ஒரு நூல் தந்தார். அந்நூல் பற்றிய சில குறிப்புகளை இக்கட்டுரை பேச எத்தனிக்கின்றது.
எஸ்பொ இருட்டுறைந்த முடுக்குகளிலிருந்து கண்டெடுத்த பிரச்சினைகளை எழுத்தில் கொண்டு வந்த அதேநேரம் பாலியல் உந்துதல்களையும் பின்னமளவில் குழைத்து தந்தார். இன்ப நுகர்ச்சியன்றி மனிதாபிமானம் மற்றும் அறிவியல் சார்ந்த பாலியல் அவரது படைப்புகளி;ன் மையமாக இருந்தது. அதற்கான சாட்சிகளில் ஒன்றாகவே அவர் தமிழில் தந்த வத்ஸாயநரின் காமசூத்திரம் அமைகிறது.
வத்ஸாயநர் ஒரு இந்திய தத்துவஞானி. அவர் வாழ்ந்த காலம்பற்றி தெளிவான பதிவுகள் இல்லை. எனினும் கி.பி.முதலாம் நூற்றாண்டிற்கும் கி.பி ஆறாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர் என உறுதியாகியுள்ளது.
நம்மவர்கள் ஒளித்து மறைத்து வாசித்த கொக்கோகம் புத்தகங்களைத் தந்த கொக்கோக முனிவரின் காலத்துக்கு முன்னரே வத்ஸாயநர் எழுதிய காமசூத்திரம் வடமொழியில் உலா வந்தது. கி.பி 4ம் நூற்றாண்டு என்ற தகவலும் உண்டு. வத்ஸாயநரின் மேற்படி வடமொழி நூல் வெளிவந்த பின்னரே காமம் என்கிற மன்மதக் கலை அறிவியல் அந்தஸ்தைப் பெற்றது
கணவன் மனைவி ஆகியோருக்கிடையிலான உடல் ஈர்ப்பின் போதான காதல், காமம் எனவாகும் விஞ்ஞான உளவியலை உள்ளடக்கமாகக் கொண்டு இரு பாகங்களாக வத்ஸாயநர் அதனை எழுதினார்.
மேற்படி நூலின் மெய்ப்பொருளை விஞ்ஞான ரீதியாக விளங்கி, சரிகண்ட சேர் ரிச்சட் பேட்டன் மற்றும் ஆபட்ஹோனட் ஆகியோர் அதனை வடமொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தனர். இந்த ஆங்கில நூலிலுள்ள சுவாரஸ்யமான பகுதிகளையே எஸ்பொ 2011 இல் கவிதை வடிவில் வத்ஸாயநரின் காமசூத்திரம் என்ற பெயரில் தமிழுக்குக் கொண்டு வந்தார். 100 பக்கங்களில் 13 அத்தியாயங்கள்.
உரிய வயது வந்தும் தனது மகள் பூப்படைய மாட்டாள் என்று ஜாதகம் சொன்னதை நம்பி ஒரு தந்தை கவலைப்படுகிறார். அதனை மொட்டு என்ற கதையில் அறிமுகம் செய்து இப்பிரச்சினைக்குத் தீர்வாக ஆணினச் சேர்க்கையில் நாட்டம் கொண்ட ஒருவனை மகளுக்குத் திருமணம் செய்து வைக்கும் தந்தையின் முடிவை பரிந்து பேசுகிறார். இங்கு மனிதாபமானமே அவரில் ஊற்றெடுக்கின்றது. அதுபோலவே கணவன் மனைவி இல்லற வாழ்வியலில் பிரச்சினைகளின் அடிப்படையாக அமையும் செயல்வினைகளை ஒழுங்குற அமைப்பதன் அவசியத்தை வத்ஸாயநர் எழுதிய காமசூத்திரம் பேசியதால் அதன் பயன் கருதிய எஸ்பொ தமிழில் அதனை மொழிபெயர்த்தார்.
எஸ்பொவின் வத்ஸாயநரின் காமசூத்திரம் என்ற நூல் எழுந்த பின்னணி இதுதான்.
1970 களில் எஸ்.பொன்னுத்துரை நாடகம் மற்றும் கவிதைகளை எழுதுவதற்கு தூக்கலான முன்னுரிமை கொடுத்து ஆக்கப் பணிகளில் ஈடுபட்டு வந்தவர். மனிதாபிமானப் பாலியலை எழுத்துக்குள் கொண்டு வரவேண்டுமென வாழ்ந்த அவருக்கு பாலியல் சார்ந்த விஞ்ஞான அறிவூட்டலைச் செய்யும் நூலொன்றை எழுதும் எண்ணம் உதித்தது.
வத்ஸாயநர் எழுதிய காமசூத்திர நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பைக் கையிலெடுத்தார். கவிதை வடிவில் கைப்பிரதி தயாரித்தார். பின்னர் என்ன நடந்தது ?
எஸ்பொவின் எழுத்தில் அதனை வாசியுங்கள்..
‘அந்தக் காலத்தில் என் இலக்கியச் செயற்பாடுகள் குறித்து இலக்கிய முனிவர் ஏ.ஜே.கனகரத்னவுடன் நிறையவே கலந்துரையாடுவேன். என் மொழி பெயர்ப்பை அவருக்கு வாசித்துக் காட்டினேன். அவர் ரசித்தார். ‘மச்சான் இப்பவே உனக்கு இந்திரிய எழுத்தாளன் என்ற பட்டம் உண்டு. இப்ப நீ இதனைப் பிரசுரித்தால் இதுதான் சாட்டு என்று உன்னைச் சிலுவையில் அறைந்து கொன்று போடுவாங்கள். என்று தடுத்தார். இதனால் இந்தப் பிரதியும் ஊறுகாய் போடப்பட்டது’
ஊறுகாய் போட்ட அந்தப் பிரதிக்கு என்ன நடந்தது?.
மட்;டக்களப்பு சூறாவளியில்(1978) அவர் தொலைத்த ஆவணங்களில் அதுவுமொன்றாயிற்று. நீண்ட காலத்தின் பின்னர் ஏதோவொரு வழியில் மீண்டும் அது அவருக்குக் கிடைத்தது. அதன் பலனே தமிழில் வத்ஸாயநரின் காமசூத்திரம் நூலாகக் கனிந்து நமது கைகளில் கிடைத்தது.
இந்நூல்பற்றி அதன் முன்னீட்டின் இறுதிப் பந்தியில் ‘காமசூத்திரத்தின் பெருமையைப் பரப்புதல் அல்ல என் நோக்கம். அதனை மறைத்து வைத்தல் அறிவு மோசடியின் பாற்படும் என்பது என் கருத்து. மானிட வாழ்வியல் பற்றிய என் தேடல் எப்பொழுதும் பரந்துபட்டதாகவே இருந்தது என்பதற்கும் இதுவே சான்று. கருத்து முழுவதற்கும் வத்ஸாயநரே பொறுப்பு. தமிழ் கவிதை வடிவத்துக்கு மட்டுமே நான் பொறுப்பு’ என்று எஸ்பொ பதிவு செய்துள்ளார்
நமது சுவைப்புக்காக காம சூத்திரத்தின் சில கவிதைகள் இவை
முதலாவது கவிதை
ஆயகலைகள் அறுபத்து நான்கொடு
அர்த்தம் தர்க்கம் மனுஸ்மிருதியெனும்
தூயகலைகள் கற்றலும் பயில்தலும்
தகைமை சேர்க்கும் அறிவுடமை
நேயமுட னிவற்றைக் கற்கும் காலையே
நிகரற்ற இன்னுமொரு கலையாம் ஆண்பெண்
காயங்கள் கலவியிற் சுகித்திடு மின்பக்
காமசூத்திரம் கற்றலும் கடனே.
நூலின் நோக்கத்தையும் எஸ்.பொன்னுத்துரையின் பாலியல் அணுகுமுறையையும் வாயிலில் தோரணம் போட்டுத் தொங்குகிறது
இம்மொழிபெயர்ப்புக் கவிதை.
நூலின் நடுவிலே தவிர்க்கப்பட வேண்டிய பெண்கள் என்ற கவிதை கிடந்தது.
பெருநோய்க்காரி பைத்தியமானவள்
நெருங்கிய உறவினள் உறவின் மனையின்
அருமைப் பெண்டிர் அனைத்தும் துறந்த
பெருமைத் துறவியர் பெண்சிநேகிதர்
சிறுமைகளற்ற நண்பணின் சீர்மனைவி – மற்றும்
நிறத்துள் அதிவெள்ளை அட்டைக் கறுப்பி
ஒரு சாதியி னின்று ஒதுக்கப்பட்டவள்
அரசன் மனைவி அந்தணர் மனையாள்
வெறுக்கும் துர்நாற்றம் உடையபெண் – இவரெலாம்
விருப்புடன் கலவி யின்பந் துய்க்க
மறுக்கப்படுதலும் வெறுக்கப்படுதலும்
சிறப்பெனப்படுமே சிறுமையுமிலமே
நூலின் இறுதிக் கவிதை இது.
இனிது இனிது காதல் இனிது
அதனிலும் இனிது கலவி செய்தல்
மனதும் உடலும் மகிழ்தல் பொருட்டு
மண்விண் மறந்து ஆண்பெண் இருவரும்
உனது எனது எனும் சுயநல(ம்) ம(அ)றுத்து
ஈருடல் முழுமையும் ஒன்றெனவாகிக்
கனதியற்றுக் காமக் கடலில்
குதித்து மயங்கிக் களித்தல் இனிது.
பாலியல் என்பதே பாவம் என்ற நிலையைப் போக்கி தனது எழுத்துக்களாலும் குறிப்புகளாலும் அதனைச் சுற்றியிருந்த பிசுறுகளை நீக்கி அதற்கு அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுக்க எஸ்பொன்னுத்துரை முயன்றார். ஆனால் புலமைத் திமிர் கொண்டவர்களும் அவர்களைச் சூழ இருந்த சீடர்களும் எஸ்.பொ.வி.ன் எழுத்துக்களைத் தீட்டு நோக்கில் பார்த்தார்களே தவிர மனிதாபிமானப் பாலியல் என்னும் செவ்வியல் கருத்தையே அவர் உரத்துப் பேசினார் என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை.
பாலியல் கல்வியைப் பாடசாலைக் கலைத் திட்டத்தில் அறிமுகம் செய்யலாமா என்று விவாதம் செய்வதும் பெண்களுக்கு சுகாதாரத் துவாய்களை இலவசமாக வழங்குவோம் என்று தேர்தல் மேடைகளில் வாக்குறுதி வழங்குவதுமான இன்றைய காலகட்டத்தின் நிகழ்வுகள் நீண்ட காலங்களுக்கு முன்னரே எஸ்.பொ. ஒளிவு மறைவின்றிப் பேசிய மனிதாபிமான மற்றும் அறிவியல் சார்ந்த பாலியல் முன்வைப்புகள் சரியானதே என்பதை சந்தேகமற ருசுப்படுத்துகின்றது எஸ்பொ தந்த வத்ஸாயநரின் காமசூத்திரம்.