நம்பிக்கையை இழந்து செல்லும் தமிழ்ச்சமூகம்

நம்பிக்கையை இழந்து செல்லும் தமிழ்ச்சமூகம்

  — கருணாகரன் —

யுத்தம் முடிந்து 15 ஆண்டுகள் கடந்து விட்டன.  ஈழத் தமிழரின் அரசியல் இன்னும் மூக்குச் சிந்தும் (அழுது புலம்பும்) நிலையிலிருந்து  மீளவில்லை. மட்டுமல்ல, அது உடைந்தும் நலிந்தும் சீர்குலைந்த நிலைக்குள்ளாகி, அதைத் தூக்கி வளர்த்தவர்களையே இன்று துக்கத்துக்குள்ளாக்கியுள்ளது. “பெரிய கூட்டுக்கள் உடைந்து சிறிய கூட்டுக்கள் உருவாக்கியுள்ளன. கட்சிகளுக்குள்ளே உடைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. மக்கள் இயக்கங்கள் தோன்றிப் பின் மறைந்திருக்கின்றன. போரின் பின், யார் உயிருடன் இருக்கிறார்கள்? யாருக்கு அஞ்சலி செய்யலாம்? செய்யக்கூடாது? என்ற விடயத்தில், புலம்பெயர்ந்த தமிழர்கள் மேலும் இரண்டாக உடைந்திருக்கிறார்கள்….”  என இந்தத் துக்கத்தை பத்தியாளர் நிலாந்தனும் வெளிப்படுத்தியிருக்கிறார். நிலாந்தனுக்கு மட்டுமல்ல, பெரும்பாலான தமிழ் மக்களுடைய கூட்டுத் துக்கமும் இதுவேதான்.

இந்தப் பலவீனமான – பரிதாபமான – பாதகமான நிலைமைக்குரிய கூட்டுப் பொறுப்பை, தமிழரின் தீவிர அரசியலைக் கேள்விக்கும் விமர்சனத்துக்கும் ஆய்வுக்கும் இடமின்றித் தொடரும் ஊடகர்கள், புத்திஜீவிகள், பத்தியாளர்கள், அரசியற் தரப்பினர், பல்கலைக்கழக சமூகத்தினர், தமிழ்ச் சிவில் சமூகத்தினர் உட்பட சில மதப் பிரமுகர்கள் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். அவர்களுடைய கூட்டுத் தவறே இந்த நிலைக்குக் காரணமாகும். 

காரணம் எளியதே. 

யுத்தத்திற்குப் பிறகான சூழல் (Post – War period) என்பது முற்றிலும் வேறானது. அது தமிழ்ச் சமூகத்தையும் அதனுடைய அரசியலையும் புத்தாக்கம் செய்ய வேண்டியது. 

1.      அரசியற் சிந்தனை மாற்றத்தின் அடிப்படையில். துரோகி – தியாகி என்று கறுப்பு – வெள்ளையாக அரசியலைச் சுருக்கிப் பார்க்காமல், முடிந்த அளவுக்கு அனைத்துத் தரப்புகளோடும் ஒருங்கிணைப்பை மேற்கொள்வதற்கு முயற்சித்திருக்க வேண்டும். தமிழ்ச் சமூகத்தை ஒருங்கிணைத்துத் திரட்டி, அரசியல், பொருளாதார, அறிவியல் ரீதியாகப் பெரும் அணியாக்கியிருக்க வேண்டும். இதில் புலம்பெயர் மக்களையும் உள்வாங்கிருக்க முடியும். இதில் உள்ள சிக்கலான அக – புற நெருக்கடிகளைப் புரிந்து கொண்டு அவற்றைக் கையாளக் கூடிய எந்தத் தலைமையும் மேலெழவில்லை. அதனால் இவை எல்லாம் அப்படி நிகழவில்லை. 

அரசாங்கத்தோடு இணைந்து நிற்கின்ற தரப்புகளும்  தமிழ்த்தேசியத் தரப்புகளும் எப்படி ஒருங்கிணைந்து செயற்பட முடியும்? என்ற கேள்வி எழலாம். இதற்குச் சிறந்த பதில், இந்த இரண்டு தரப்புகளும் இவை இரண்டுக்கும் அப்பாலான சமூக விடுதலையுடன் கூடிய இனவிடுதலையை முன்னிறுத்தும் தரப்புகளைக் கூட தம்முடன் இணைத்துக் கொள்வதற்கு முயற்சிக்கவில்லை என்பதாகும். காரணம், இந்த இரண்டு தரப்பும் தேர்தல் அரசியலில் மட்டும் மையங் கொண்டிருந்ததேயாகும். அதற்கு அப்பால், விடுதலை அரசியலை இவை முன்னிறுத்திச் சிந்தித்திருந்தால், அதைப் பலப்படுத்தும் மூலோபாயம், தந்திரோபாயம், வேலைத்திட்டம் என்ற அடிப்படையிலேயே செயற்பட முயன்றிருக்கும். 

ஆகவே இதில் பெரும் தவறு நிகழ்ந்தது. இதைச் சுட்டிக்காட்டி, புத்தாக்க அரசியலை மேற்கொள்வதற்குரிய அழுத்தத்தைக் கொடுப்பதில் தமிழ்ச் சிவில் அமைப்புகளும் புத்திஜீவிகளும் பத்தியாளர்களும் பல்கலைக்கழக சமூகத்தினரும் தவறி விட்டனர்.  பதிலாக இதைச் சுட்டிக்காட்டிய தரப்பினரை விலக்கம் செய்வதிலேயே இந்தத் தரப்பினர் குறியாக இருந்தனர். இன்னும் அப்படித்தான் உள்ளனர். கெட்டாலும் பரவாயில்லை, எந்தப் புத்திமதியையும் கேட்க மாட்டோம் என்ற பிடிவாதமும் அறியாமையும் இவர்களைச் சூழ்ந்துள்ளது. 

2.      தமிழ்ச் சமூகத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. மீள்குடியேற்றத்தையும் புனரமைப்பையும் அரசாங்கமே தனித்து மேற்கொண்டது. அதற்கான செயலணியைக் கூட யுத்தப் பாதிப்பு நடந்த வடக்குக் கிழக்கில் செயற்படுத்தவில்லை. யாரும் இதில் இடையீட்டைச் செய்யவில்லை. இதில் தமிழ்ப் புத்திஜீவிகளும் துறைசார் வல்லுனர்களும் பெரும் தவறிழைத்தனர். இதைப்பற்றி இந்தக் கட்டுரையாளர் மட்டுமே பல தடவை சுட்டிக்காட்டியிருந்தார் மேலும் சிலரும் பேசியுள்ளனர். தமிழ் அரசியற் கட்சிகள், அவற்றின் தலைவர்கள் (அரச ஆதரவு – எதிர்ப்பு இருதரப்பும்தான்) எவையும் இதைப்பற்றிச் சிந்தித்ததில்லை. இதனால் தமிழ்ச்சமூகம் பொருளாதார ரீதியாகம் சமூக நிலையிலும் நலிவடைந்து கொண்டே செல்கிறது. குறிப்பிடத்தக்க அளவுக்குப் புதிய தொழில்துறைகள் எதுவும் 15 ஆண்டுகளில் வடக்குக் கிழக்கில் உருவாக்கப்படவில்லை. இப்போது இந்தப் பிராந்தியத்திலுள்ள தமிழர்களுக்கான ஒரே தெரிவு நாட்டை விட்டு வெளியேறுதல். அல்லது அரச தொழில் வாய்ப்புகளில் சரணடைதல் மட்டுமே.

3.      தமிழ்ச்சமூகத்தின் அக – புற முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்வதில் நேர்மையான வழிமுறைகளை தமிழ்த்தேசியச் சக்திகள் எவையும் உரிய முறையில் கவனப்படுத்திச் செயற்படவில்லை. இதனால் இதை வேறு தரப்புகள் தமக்கிசைவாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. இதைக்குறித்த சமூகவியல், பொருளியல் ஆய்வுகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை. இதில் குறைந்த பட்சம் தமிழ்ப்பிரதேசங்களில் உள்ள பல்கலைக்கழகங்களாவது பங்களித்திருக்க முடியும். சற்று முயற்சித்திருந்தால், இலங்கையில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இதைக்குறித்த ஒரு கவனத்தை உண்டாக்கி, ஒட்டு மொத்தமாக அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு ஆய்வுகளைச் செய்திருக்க முடியும். அப்படிச் செய்திருந்தால், கள நிலையை பொதுவெளியில் சரியாக முன்வைத்திருக்க முடியும். அது செய்யப்படவே இல்லை. 

4.      வடக்குக் கிழக்குத் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான உறவைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள் பலமான முறையில் மேற்கொள்ளப்படவில்லை. ஏன், சம்பிரதாயமாகக் கூட அது நிகழவில்லை. இன்னும் கடந்த காலத் தவறுகள், பிரச்சினைகளுக்கு ஒருவரையொருவர் குற்றம் சாட்டும் பகைமை நிலையே நீடிக்கிறது. அத்துடன் இன்னொரு தமிழ்  பேசும் சமூகத்தினரான மலையக மக்களுடனான அரசியல் உறவையும் வளர்க்கவில்லை. இதனால்தான் தற்போது தமிழ்ப் பொது வேட்பாளர் நிலைப்பாட்டைத் தனியே வடக்குக் கிழக்குத் தமிழ்ச் சமூகத்துக்குள் மட்டும் மட்டுறுத்திப் பார்க்கும் அவலம் நேர்ந்திருக்காது. இதிற்கூட இன்னும் நெருக்கடியே உண்டு. தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் மட்டுமல்ல, எத்தகைய அரசியல் நிலைப்பாட்டையும் ஒரு முகப்பட்டு எடுப்பதற்கு தமிழ்த்தேசியக் கட்சிகளிடத்தில் கூட ஒருங்கிணைவும் புரிந்துணர்வும் இல்லை. இந்தப் பலவீனத்தைப் புரிந்து கொள்வதில் கூட இன்னும் அரசியற் கட்சிகள், அவற்றின் தலைமைகள் உள்ளிட்ட தமிழ்ச்சக்திகள் எவையும் உருப்படவில்லை. 

5.      எதிர்ப்பு அரசியல் – இணக்க அரசியல் இரண்டுக்கும் இடையிலான அர்த்தப்பாடுகளில் உள்ள குழப்பமாகும். உண்மையில் தமிழ்த் தரப்பு இவை இரண்டையும் அதன் சரியான பொருளில் இங்கே மேற்கொள்ளவில்லை. இங்கே எதிர்ப்பு அரசியல் என்பது, செயற்தன்மையற்ற தனியே வாய்ச் சவாடல் அரசியலாகவும் இணக்க அரசியலானது, சரணடைவு அரசியலாகவுமே சுருங்கிப்போயுள்ளது. இவை இரண்டினாலும் எந்தப் பெரும்பயன்களும் மக்களுக்குக் கிடையாது. மட்டுமல்ல, இவை எந்த வகையிலும் ஒடுக்கப்படும் மக்களுடைய விடுதலைக்குரியவை இல்லை. 

இதனால்தான் தமிழ்ச் சமூகம் தமிழ் அரசியற் சக்திகளிடத்திலும் அதை வலியுறுத்துவோரிடத்திலும் நம்பிக்கையற்றிருக்கிறது. எவரிடத்திலும் நம்பிக்கை கொள்ள முடியாது என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கான பொறுப்பையும் இந்தச் சக்திகளே ஏற்க வேண்டும். வெறுமனே புலம்புவதால் பயனில்லை.  

கூடவே பகையை மறப்பதற்கான களமும் காலமும் இதுவாகும். 

எந்த வகையிலும் இலங்கையில் இனிமேல் முரண்பாடுகளை மீளுருவாக்கம் செய்ய முடியாது. அப்படி மீள வளர்த்தால் அதனால் பாதிப்புக்குள்ளானோரே தொடர்ந்தும் பாதிப்பைச் சந்திக்க நேரும். அரசுக்கும் ஆட்சித் தரப்பினருக்கும் அதனால் பெரிய சேதங்கள் ஏதும் ஏற்படாது. அதுதான் இப்பொழுது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. 

இதற்கு நான்கு காரணங்கள் உண்டு. 

1.      பிராந்திய சக்தியான இந்தியா தொடக்கம் அவுஸ்திரேலியா, யப்பான் மற்றும் மேற்கு நாடுகள் அனைத்தும் இலங்கையின் முரண்பாட்டைத் தணிவு நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றே வலியுறுத்தின – இன்னும் அப்படித்தான் சொல்கின்றன. நல்லிணக்கம், பகை மறப்பு, கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில் தீர்வை எட்டுங்கள் என்றே எல்லா நாடுகளும் வலியுறுத்துகின்றன. இதைச் செய்ய வேண்டியது அரசாங்கம் மட்டுமல்ல, நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பும்தான். முக்கியமாகத் தமிழ்த்தரப்புமாகும். ஆனால், இது நிகழவில்லை. இதனால் இந்த நாடுகள் அனைத்தும் இலங்கையின் இனப்பிரச்சினையில் தமது கவனக்குவிப்பை மட்டுப்படுத்தியுள்ளன. அதாவது இது தொடர்பாக  அவை சீரியஸாக இல்லை. எனவே இலங்கை அரசை விடச் சர்வதேச சமூகத்தை நம்பிக் கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகத்துக்கே பாதிப்பும் ஏமாற்றமும் ஏற்படும். 

2.      செயற்பாட்டு அரசியல் இல்லாதொழிந்து விட்டது. இதனால் அரசின் ஒடுக்குமுறையையும் இனவாத நடவடிக்கைகளையும் தடுத்து நிறுத்தும் பலமற்றுப் போனது. ஆகவே அரசின் இனவாதச் செயற்பாடுகளை எந்த வகையிலும் மட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. அரகலய போன்றதொரு மக்கள் போராட்டத்தை (சர்வதேச சமூகத்தின் ஆதரவோடு) மேற்கொள்வற்கு தமிழ்ச்சமூகத்தினால் முடியுமா? முடியாது என்பதே வெளிப்படையான பதில். காரணம், அப்படியான அரசியற் கூருணர்வும் அர்ப்பணிப்பு மனப்பாங்கும் இன்று தமிழர்களிடத்தில் இல்லாதொழிந்துள்ளது. 

3.      பாதிக்கப்பட்ட மக்களையும் பிரதேசங்களையும் மீள்நிலைப்படுத்துவதற்கான பணிகளைச் செய்வதற்கு அரசாங்கம் இடமளிக்கவில்லை என்றொரு புலுடா தொடர்ந்து விடப்படுகிறது. ஆனால், இதைக் கடந்து பலர் தனியாகவும் கூட்டாகவும் பல விதமான பணிகளைச் செய்து கொண்டுதானிருக்கிறார்கள். எந்த அரசியற் கட்சியையும் விடத் தனியாட்களாகவும் அமைப்புகளாகவும் செய்து வரும் பணி பெரிது. இதைச் சிவில் செயற்பாட்டாளர்களும் பல்கலைக்கழக மாணவர் சமூகமும் அரசியற் கட்சிகளும் செய்யாது ஒதுங்கின. இதனால் தாம் கையறு நிலைக்குள்ளாகியுள்ளதாகத் தமிழர்களிற் பெரும்பாலானோர் சிந்திக்கின்றனர். இதை எதிர்கொண்டு எழுவதற்குப் பதிலாக தாம் தப்பித்தால் போதும் என்று விலகிச் செல்கின்றனர். 

4.      தமிழ் மக்கள் சமாதானத்திலும் அமைதித் தீர்விலும் பற்றுக் கொண்டவர்கள். அதையே அவர்கள் நாடுகிறார்கள் என்ற நம்பிக்கை பிற சமூகங்களிடம் வலுப்பெறவில்லை. தாம் சமாதானத்தின் கதவுகளைத் திறந்து வைத்திருக்கிறோம் என்று சத்தியம் செய்தாலும் அதை நம்பக்கூடிய சூழல் இன்னும் பிற சமூகங்களிடம் உருவாகவில்லை. இதைப்பற்றிய மீளாய்வும் கள ஆய்வும் மிக அவசியமானது. சமாதானத்திலும் தீர்விலும் மெய்யாகவே எமக்குப் பற்றிருக்குமானால் இந்த ஆய்வைச் செய்து, அதற்கான பரிகாரமும் காணப்பட வேண்டும். இல்லையெனால் இந்த மாதிரி அணிகள், குழுக்கள், பிரிவுகள் என்றே நிலைமை நீடிக்கும்.